இளிச்ச வாய் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 7,391 
 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

இப்படியே எவ்வளவு நேரத்துக்கு அழுவது? நிறுத்திவிட்டு நெல்லிக்காய் சாப்பிடலாம் என்றால் அப்பா கூப்பிட்டுவிடுவார். ஒன்று சிட்டையை சமன்பட வைக்கவேண்டும். இல்லை அப்பாவுக்கு சமன்படாமல் இருக்கவேண்டும். அல்லது சிட்டை செய்யதேவையில்லாத இடமாய் பார்த்து இடம்பெயரவேண்டும். அண்ணா இப்படித்தான் வெளிநாடு போனார். தானும் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் கீழே கோழிக்கூடு வாசல் வழியாக கிடு கிடு வென்று வெள்ளைநிற கழுத்துவெட்டி கோழி வெளியே போனது. இது முட்டை இடும் நேரம் ஆச்சே, உள்ளே கடகத்து உமிக்குள் இருக்காமல் எங்கே வெளியே போகிறது? என்று கூர்ந்து பார்த்த சிவகாமி துணுக்குற்றாள். அழுகையை மறந்து கண்களை கசக்கி திரும்பவும் பார்த்தாள். அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கழுத்து வெட்டியையே பார்த்தாள். என்ர கடவுளே.

கழுத்துவெட்டி ஒரு காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணியபடி ஒற்றைக்காலில் கெந்தி கெந்தி போய்க்கொண்டிருந்தது.

ஒரு கோழி, காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணுமா? என்ற விஷயம் சிவகாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. பற்றாக்குறைக்கு கோழி எதையோ பேசிக்கொண்டிருந்தது போலவும் தோன்றியது. மீண்டும் காதுகளை தீட்டி கூர்ந்து கேட்டாள். “நேரம் போச்சு நேரம் போச்சு …சொர்க்கவாசல் மூடப்போறாங்கள்” என்று கோழி முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி செட்டைக்குள் இருந்து எதையோ எடுத்து நேரம் வேறு பார்த்தது. அட ஹான்ட்போன்.

சிவகாமி சத்தம்போடாமல் நெல்லிமரத்திலிருந்து நைசாக இறங்கி கோழியை பின் தொடர்ந்தாள். கோழி இவள் பின் தொடர்வதை கவனிக்கவில்லை. அதன் கவனம் முட்டையை பாலன்ஸாக வைத்திருப்பதிலும், அடிக்கடி அதை தூக்கி எறிந்துவிட்டு விழுகின்ற காப்பில் ஹான்ட்போனை எடுத்து நேரத்தை செக் பண்ணுவதிலும் இருந்தது. கோழி இப்போது முன்வீட்டு புரோக்டர் வளவு வேலிக்குள்ளால் நுழைந்து உள்ளே இருந்த பற்றைக்குள் புகுந்தது. தயங்கிய சிவகாமி, அக்கம் பக்கம் திரும்பிப்பார்த்துவிட்டு தானும் தாமதிக்காமல் பற்றைக்குள் புகுந்தாள். மறுகணமே.

அம்மா என்று அலறியபடி அதளபாதாளத்துக்குள் விழ ஆரம்பித்தாள்.

ஒன்று அவள் மெதுவாக விழுந்திருக்கவேண்டும். இல்லை பாதாளம் மிகவும் ஆழமானதாக இருந்திருக்கவேண்டும். சிவகாமி நீண்ட நேரம் விழுந்துகொண்டிருந்தாள். அலுப்படித்தது. திரும்பிப்போகலாமா என்றால் எப்படிப்போவது? விழுந்துகொண்டிருக்கும்போது எழ முடியாது. “நாலு தர ஆறு பதின்மூண்டு அல்லோ .. ச்சிக்.. இருவத்துனாலு எண்டு போட்டதால தான் சிட்டை சமப்படேல்ல”, சிவகாமிக்கு பளிச்சென்று மூளைக்குள் உதித்தது. அப்பாவிடம் போகவேண்டும் என்று ஆர்வம் வந்தது. உடனடியாக போகவேண்டும். “நாலாறு பதின்மூன்று கண்டுபிடிச்சிட்டன்” என்று சொல்லவேண்டும். எப்படி திரும்புவது? எங்கே அந்த கழுத்துவெட்டி? யோசித்துக்கொண்டிருக்கும்போதே படீரென்று ஒரு பற்றைக்கு மேலே வந்துவிழுந்தாள் சிவகாமி. தடுமாறியபடி எழுந்துநின்றால் அங்கே இன்னொரு “அட” காத்திருந்தது.

சிவகாமி நின்றுகொண்டிருந்தது ஒரு அறை. அறையில் ஒரு பக்கம் ஒரு குட்டி கதவு. ஐஞ்சு இஞ்சி உயரத்தில் குட்டி கதவு. என்னடா இது? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் எதிர்ப்பக்கத்தில் ஒரு தண்ணீர்குடம் தெரிந்தது. குடத்தின் மேலே ஒரு பேணி. “இந்த தண்ணியை குடி” சுவரில் எழுதியிருந்தது. விழுந்த களை. வேறு வேலையும் அங்கே இல்லை என்பதால் சிவகாமி தண்ணீரை குடிக்கலாமா என்று யோசித்தாள். தயங்கினாள். அவசரப்படக்கூடாது என்று நினைத்தவள் குடத்தை மெதுவாக தூக்கி இந்தப்பக்கம் வைத்தாள். இப்போது குடத்து பக்க சுவரில் “இந்த தண்ணியை குடி” என்ற வாசகம் இல்லை. சிவகாமிக்கு பதட்டமாக இருந்தது. குடத்தை சுற்றி சுற்றி வந்தாள். ம்ஹூம் “சிறுவர்கள் குடிக்ககூடாது” என்று எங்கேயும் குடத்தில் எழுதியில்லை. அப்படி ஏதாவது எங்கேயும் எழுதியிருந்தால் அதை குடிக்ககூடாது, நஞ்சு என்று சுகாதார பாட சேர் சொல்லியிருந்தார். நல்லவேளை அப்படி எதுவும் எழுதியில்லை, இதை குடிக்கலாம் என்று நினைத்தாள். பேணியால் தண்ணியை மொண்டு குடித்தாள். டேஸ்ட்டாக இருந்தது. சர்ரென்று ஏதோ இறங்கியது போல ஒரு பிரமை. திரும்ப இன்னொரு பேணி. இன்னொரு பேணி… என்ன ஆச்சர்யம்?

சிவகாமி கொஞ்சம் கொஞ்சமாக குள்ளமாக தொடங்கினாள்.

குள்ளமாகிக்கொண்டே இருந்தாள். குள்ளமாக குள்ளமாக அவளுக்கு சந்தோசம். நல்லா குட்டையானல் இந்த கதவுக்குள்ளால் போகலாமே என்று நினைத்தாள். அது தான் நடந்தது. ஐஞ்சு இஞ்சி சைஸ் வந்திருப்பாள். இதற்கு மேலும் குறையவேண்டி வருமோ என்று கொஞ்சநேரம் வெயிட் பண்ணிபார்த்தாள். ம்கூம் இங்கே தான் சிட்டை சமப்படும் லிமிட் போல. அதற்கு மேல் குறையவில்லை. கதவைத்திறந்துகொண்டே வெளியே வந்தாள். அங்கேயும் இன்னொரு “அட” காத்திருந்தது.

சொர்க்கம். சொர்க்கமாக இருக்கலாம். சொர்க்கம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். அம்மாவுக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. சிவகாமி சிட்டை சமப்பட்ட விஷயத்தை மறந்துவிட்டாள். இரண்டு அடி எடுத்துவைக்க அம்மாவுக்கு சொல்ல தேவையில்லை என்று நினைத்தாள். அடுத்த இரண்டு அடியில் சொல்லதேவையில்லை என்று நினைத்ததையே மறந்துவிட்டாள். துள்ளிக்கொண்டே எழுந்தமாற்றுக்கு போக தொடங்கினாள். திடீரென்று அந்த கழுத்துவெட்டி கோழி பாதைக்கு குறுக்கே பாய்ந்து பூங்கன்றுகளுக்குள் ஓடி மறைந்தது. இம்முறை அதன் இரண்டு கால்களிலும் இரண்டு முட்டைகள் இருந்தன. சிவகாமி அதை கணக்கெடுக்கவில்லை. நடந்துகொண்டிருந்தாள். சுற்றி சுற்றி பார்க்க அந்த இடமே கொஞ்ச நாளைக்கு முதல் கொழும்பில தியேட்டரில பார்த்த அவதார் படத்து பண்டோரா கிரகம் போல இருந்தது. நிஜ த்ரீடி. சந்தோஷமாக தொட்டாசிணுங்கி இலைகளை தொட்டு தொட்டு ரசித்தபடி போகும்போது தான், குரல் கேட்டது.

“யாரு நீ?”

காடா பேசுகிறது? இவ்வளவு சின்னவயசுப்பெண்ணோடு காடு பேச காரணமில்லை! சுற்றும் முற்றும்பார்த்தாள். “இந்தா, இந்த வேப்பமரத்தில இருக்கிறன்” என்ற குரல் திசையில் திரும்பினால் ஒரு பூனை. கொப்பில் இருந்தபடி இளித்துக்கொண்டு இருந்தது. கட்டக்கறுப்பு பூனை, இரண்டு பற்கள் மட்டும் வெளியே தெரியே, அதன் சிரிப்பில் கொஞ்சம் நரி தெரிந்தது.

“நரி மாதிரி சிரிக்கிற பூனையை இண்டைக்கு தான் பார்க்கிறன்”

“நரி சிரிச்சு பார்த்திருக்கிறியா?”

“இல்ல .. ஆனா இங்கிலீஷ் படிப்பிக்க வாற கஜன் சேர் இப்பிடி தான் சிரிப்பார்”

“நக்கல் .. நீ யாரு எண்டு சொல்லு”

“அது குழப்பமா இருக்கு .. காலமை நான் கொஞ்சம் பெரிய பிள்ள … சிட்டை சமப்படேல்ல எண்டு அப்பா மொக்கு பிள்ளை எண்டவர். ஆனா கழுத்துவெட்டியோட விழேக்க நாலாறு பதின்மூன்று எண்டு கண்டுபிடிச்சிட்டன், அப்ப விழுந்த நேரம் நான் கெட்டிக்கார பிள்ளை ஆயிட்டன் தானே.. ஆனா அந்த தண்ணியை குடிச்சதால இப்ப குள்ளமாகி நிக்கிறன். கடைசி ஒரு மணித்தியாலத்திலேயே நான் இவ்வளவு மாறீட்டன் … நான் யாரு?”

“நான் .யாரு. கேட்டியே ..அந்த நான் .. நீ .. அதை சொல்லு .. நீ யாரு”

“சொல்ல ஏலாது .. ஏனென்டா இப்ப நான் நானில்லை”

“நானில்லைக்கு முதல் இருந்த நான் .. அந்த நானை தான் யாரு எண்டு கேட்கிறன்”

இதற்கு அப்பாவின் குட்டு பரவாயில்லை என்று தோன்றியது. இந்த பூனையை சமாளிக்க ஒரே வழி, திருப்பி கேட்பது தான்.

“ஏய் பூனை நீ யாரு என்று சொல்லு முதலில”

“ஏன் சொல்லோணும்?”

இப்போது பூனை மேல் கோபம் வந்தது. என்ன சேட்டையா விடுறார்? சிவாகாமி திரும்பி,

“அதானே ஏன் சொல்லோணும் .. சொல்லாத”

என்று முணுமுணுத்தபடியே நடக்க தொடங்கியவள், ஏதோ ஒரு உள்ளுணர்வு வந்தவளாய் திரும்பிப்பார்த்தாள். பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். இந்த பூனை நான் பார்க்கும்போது தான் இளிக்கிறதா? இல்லை நான் பார்க்காதபோதும் இளிக்கிறதா? சிவகாமிக்கு அதை அறியவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சடக்கென்று திரும்பினாள். இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். ஒரு பாட்டை ஹம் பண்ணியவள் பூனை எதிர்ப்பார்க்காத சமயம் பார்த்து மீண்டும் திரும்பினாள். அதே இளிப்பு. நான் பார்க்காதபோதும் இந்த பூனை இளிக்கிறதா என்று எப்படி கண்டுபிடிக்க? சர்ரென்று திரும்பினாள். ம்ஹூம். அதே இளிப்பு. கோபம் கோபமாக வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இளிப்பு பிரகாசமாக இருந்தது போல. இல்லை இல்லை கொஞ்சநேரத்துக்கு முதல் கருப்பாக இருந்த பூனை இப்போது செம்படை நிறமாக மாறியிருந்தது. இது ஆச்சர்யபூனை என்று தெரிந்தது. கொஞ்சம் புத்திசாலியும் கூட. கெட்டித்தனமாக வேறு குழப்புகிறது. கண்டபாட்டுக்கு அலையாமல் எங்கே போகவேண்டும் என்று இதனிடமே கேட்கலாம் என்று தோன்றியது.

“ஏய் பூனை .. நான் இப்ப ..”

“ஆ .. அந்த நான் யாரு எண்டு சொல்லு”

“ஏன் சொல்லோணும்?”

பூனையில் விளையாட்டை பூனைக்கே காட்டினாள் சிவகாமி.

“மெய் தான் … என்ன விஷயம் சொல்லு சிவகாமி!”

“வந்து .. நான் இப்ப எந்த பாதையால போகோணும் எண்டு சொல்லுறியா ப்ளீஸ்?”

“அது நீ எங்க போறதெண்டதில தங்கியிருக்கு”

“எல்லாமே ஒகே .. எங்க எண்டாலும் ஒகே”

“அப்பிடி எண்டா எந்த பாதைல போனாலும் ஒகே”

இந்த பூனை கொஞ்சம் சேட்டை விடுவது போன்று சிவகாமிக்கு தெரிந்தது. கேள்வியை மாற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தாள்.

“இந்த ஊரில எப்பிடிப்பட்ட ஆக்கள் இருக்கிறினம்?”

“இந்தா .. இந்த கிழக்கு திசை பக்கம் போனா சபாநாயகத்தாரிண்ட வீடு வரும், மேற்கே போனி எண்டால் சிவலிங்கத்தார் இருப்பார்.. விட்டிட்டு வடக்க போனா இரண்டு பேர்ல ஒருத்தர் இருப்பார் .. எந்த திசையிலயும் போலாம் .. ஆனா எல்லாருமே யாழ்ப்பாணத்தான் தான் .. பயங்கர கெட்டவங்கள்”

“ம்ம்ம் .. கெட்டவங்கள் எனக்கு வேண்டாம் .. நான் சின்ன பிள்ளை .. நல்லவங்கள் ஒருத்தருமே இல்லையா?”

“சான்சே இல்லை .. இங்க எல்லாருமே கெட்டவங்கள் .. சிவலிங்கம், சபாநாயகம், காசிப்பிள்ளை .. பயங்கர ஆட்கள் .. நானும் கெட்டவன் .. நீயும் தான்”

“நான் கெட்டவள் எண்டு உனக்கெப்படி தெரியும்?”

“இல்லாட்டி இங்க வந்திருக்க மாட்டாய்”

“உன்னையும் கெட்டவன் எண்டு நீயே ஏன் சொல்லுறாய்?”

“என்னை கெட்டவன் என்று சொல்லுற அளவுக்கு இங்க வேற ஒருத்தனும் நல்லவன் கிடையாது .. அதால நானே சொல்லுறேன்”

சிவகாமி இப்போது மீண்டும் பூனையை பார்த்தாள். பூனை இளித்துக்கொண்டிருந்தது. கறுப்பாக இருந்த பூனை, செம்படையாக மாறி இப்போது அதுவும் இல்லாமல் இருப்பது இப்போது தான் சிவகாமிக்கு புரிந்தது. அட பூனை நிறம் மாறவில்லை. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெள்ளை, வெள்ளை அருகி அருகி அற்றுப்போய், என்னது இது? யாரிந்த பூனை? பூனை மறைந்து மறைந்து மறைந்து, அதன் இளிப்பு மட்டும் தனியே தெரிய ஆரம்பிக்க “இளிக்காத பூனையை பார்த்திருக்கிறன்… ஆனா பூனையே இல்லாத இளிப்பை இப்பதான் பார்க்கிறன்” என்று சிவகாமி மனதுக்குள் நினைத்தபடி தெற்கு திசையில் நடக்கப்போனவள், ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, ஒரு பாட்டை ஹம் பண்ணியபடியே சடக்கென்று திரும்பிப்பார்த்தாள்.

“மறைந்த பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது”.

****

Alice in Wonderland

எங்கள் ஊரில் சிறுவர் புத்தகங்கள் என்றால் அரசன் நகர்வலம் வருவான், இல்லை முனிவர் சீடர்களோடு ஆறு கடப்பார். மூன்று கோடாலிகளை ஒரு தேவதை எடுத்துவந்து விறகுவெட்டிக்கு காட்டி பிரகாஸ்ராஜ் மாதிரி கேள்வி கேட்கும். அதற்குமேல் அம்மியும் நகராது. கதையின் ஆதாரமான செய்திகள் நல்லவனாய் இரு, பொய் சொல்லாதே வகையறாக்களாக இருக்கும். இதற்குள் கணிதமும், லொஜிக்கும் எப்போதாவது மகாபாரத கிளைக்கதைகளில் யாராவது பிரசங்கங்களில் சொன்னால் தான் உண்டு. அம்புலிமாமா சுத்தம்!

அதற்கு காரணம் இருக்கிறது. இங்கே சிறுவர் இலக்கியம் எழுதுபவர்கள் யார் என்றால் தமிழாசிரியர்கள். யாரு தமிழாசிரியர்கள்? எங்கள் காசிநாதன், கந்தசாமி, பொன்னுச்சாமி போன்ற ஆசிரியர்கள். “குற்றியலுகரம் எனப்படுவது” தொடங்கி “வாங்குவளை காட்டிடை” வாசித்து கூடவே பொருளையும் வாசித்து விளக்கும் ஆசிரியர்கள். அவர்கள் எழுதும் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்களும் வளர்ந்து ரமணிச்சந்திரன், லஷ்மி என்று முன்னேறி அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன், சுஜாதா வாசித்தாலும் வாழ்க்கைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த அம்புலிமாமாக்கள் ஏதாவது செய்திருக்குமா என்றால்? சட்டியில போட்டா தானே அகப்பைல வரும்?

Alice in Wonderland புத்தகத்தை எழுதியது ஒரு சுப்பனோ குப்பனோ கிடையாது. சார்ல்ஸ் டோட்ஜ்சன் ஒரு கணிதமேதை. தன் கணித திறமையை சகட்டு மேனிக்கு புத்தகத்தில் பாவித்திருப்பார். அது சிறுவர்களுக்கு விளங்குமா? என்று கேட்டால் இல்லை விளங்காது தான். அதற்காக தான் அந்த சுவாரசிய பாஃண்ட்ஸி. ஐஞ்சு வயசில் வாசிக்கும்போது கதையை தெரிந்து வை. பத்துவயதில் வாசிக்கும்போது சில விஷயங்கள் ஏன் வருகின்றன என்று ஆச்சர்யப்படு. இருபது வயதில் காரணங்களை தேடு. முப்பது வயதில் அதிலிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று எடுத்துகொள். இது தான் சார்ல்ஸ் இந்த கதையை வடிவமைத்தவிதம். எங்கள் கோளாறு என்னவென்றால் ஐந்து வயதுக்கு பிறகு நாங்கள் Alice In Wonderland ஐ வாசிக்கவேயில்லை!12976444-alice-in-wonderland-and-cheshire-cat-on-mushroom

முப்பது வயதில்(டேய் டேய் .. ஒகே ஒகே..) Alice In Wonderland ஐ படலையில் எழுதும்போது எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை மட்டும் எடுத்து அடித்தாட முயன்றிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தால் Modula N எல்லாம் எழுதியிருக்கலாம். இப்போது ஆர்வம் அங்கே இல்லை. அது வேறு எங்கோ. அதனால் தான் நோன்-யூகிலிடியன் கணிதம் சிவகாமி கதையில் வருகிறது. அதென்ன நான்-யூகிலிடியன்?

– 09-05-2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *