சந்திரன் தன் மகன் பாபுவை அழைத்துக்கொண்டு, அந்த விளையாட்டு அரங்கத்துக்குச் சென்றான். நுழைவாயிலில் இருந்த டிக்கெட் கவுன்ட்டரின் முகப்பில், பெரியவர்களுக்குக் கட்டணம் ஐந்து ரூபாய் என்றும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. சந்திரன் தனக்கும் மகனுக்கும் சேர்த்து, இரண்டு டிக்கெட் கேட்டான்.
டிக்கெட் வழங்குபவர், சந்திரனின் மகனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ”பையனுக்கு என்ன வயசு?” என்று கேட்டார். ”ஏழு” என்றான் சந்திரன்.
”இந்தப் பையனுக்கு ஏழு வயசுன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது. ஐந்துன்னு சொல்லியிருந்தா, உங்களுக்கு மட்டும் ஒரு டிக்கெட்டோட போயிருக்கும்… அஞ்சு ரூபா மிச்சமாயிருக்குமே!” என்று சிரித்தார் டிக்கெட் வழங்குபவர்.
”உண்மைதான்! அஞ்சு ரூபா மிச்சமாயிருக்கும்தான். ஆனா, அற்பம் அஞ்சு ரூபாய்க்காக நம்ம அப்பா பொய் சொல்றாரேனு என் மகன் மனசுல அது கறையா பதிஞ்சுடும். இந்த அஞ்சு ரூபாயை என்னால மறுபடியும் சம்பாதிச்சுக்க முடியும். ஆனா, அவன் மனசுல கறை படிஞ்சுடுச் சுன்னா, அதைக் கடைசி வரைக்கும் எடுக்கவே முடியாம போயிடலாம், இல்லையா?” என்றான் சந்திரன்.
– 30th ஜனவரி 2008