கரை தொடா அலைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 5,627 
 

என்னங்க, நாளைக்கு வேளாங்கண்ணி போறதுக்கு ரிசர்வ் பண்ணிட்டிங்களா? இல்லைமா, கார்லயே போகலாம்னு யோசிக்கிறேன், இது பாலு.
அப்படியா, உங்க வசதிப் படி செய்யுங்கள், எனக்கூறி வேறு அலுவலில் மூழ்கினாள். சரஸ்வதி.

பாலு ,சரஸ்வதி தம்பதியரின் வாழ்க்கையில் வேளாங்கண்ணி என்பது ஒரு புண்ணியத்தலம் ஆகிப்போனது 2004 ஏற்பட்ட சுனாமியிலிருந்து.

2004 சுனாமி நாள்..

பலபேரின் வாழ்க்கையில் இயற்கை சதுராடிய நாள், இவர்களும் ,தனது ஐந்து வந்து மகன் அருண், தங்கள் வளர்ப்பு நாய் மணி ஆகியோருடன் வேளாங்கண்ணி பிரார்த்தனையை முடித்துக் கொண்டு காலை கடற்கரை வர, சுனாமியும் சேர்ந்து வர என்னவென்று சுதாரிப்பதற்குள், அலைகள் வந்து இவர்களைத் தாக்க தூக்கி வீசப்பட்டனர் மக்கள் குவியல், குவியலாக….

கரையோரம் இருந்த தொப்பிக் கடை ஒன்றில் இவர்கள் விழ, அங்கே கிடந்த இரு சக்கர வாகனத்தைப் பிடித்துக் கொண்டு தாக்குப் பிடிக்க, யாரோ வந்து கைக் கொடுத்து இவர்களை காப்பற்றினர்.

அருண், அருண்… இவர்கள் தங்கள் மகனை காணமால் கதற.

நீங்க போங்கம்மா, நாங்க தேடுகிறோம் யாரோ கூறியது இவர்கள் காதில் விழவில்லை. என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை.

இயற்கையின் கோரத் தாண்டவத்தை அன்று முதன் முதலாய் பார்க்க வாழ்க்கையே வெறுத்தவர்கள் பலர், தொலைத்தனர் பலர்.
இவர்களும் மகனைத் தெலைத்து விட்டு அரை மனதோடு சர்ச்சுக்குச் திரும்பச் சென்றனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அங்கே விடப் பட்டனர். இவர்கள் அங்கே அருணைத் தேடினார்கள் ,நம்பிக்கையோடு,
விதி விளையாடியது இவர்கள் வாழ்க்கையோடு,

இரண்டு நாட்கள் கரைந்தோட , அருண் கிடைக்காமல் போகவே,
ஊர் திரும்ப மனதில்லாமல் திரும்பினர். மூவர் மட்டும்.

வீடு திரும்பியும் , மனம் திரும்பவே இல்லை. சாப்பிட முடியவில்லை இருவரும், மணியும் வந்ததிலிருந்து சோகமாகவே இருக்க,அருணின் போட்டோவை பார்த்துப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.

அதைக் கண்டு இவர்கள் துக்கம் அதிகமானது. பாலுவுக்கோ சுமரான வருமானம், வாடகை வீடு, ஓட்டல் தொழில், ஆதலால் வேலைப் பளுவில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கினான். சரஸ்வதி நிலைதான் கொடுமை, ஒரே பிள்ளை, மழலையாக பேச ஆரம்பித்த நிலை, போட்டோவைப் பார்த்து ஆறுதலடைவாள், அடிக்கடி சோர்ந்துப் போவாள்.

ஆறுதல் கூறி அடங்குமா பிள்ளையின் சோகம். நெருப்பில் இட்ட புழுவாய் தகித்தார்கள். நாட்கள் நகர்ந்து ஓட…

பாலுவின் வளர்ச்சி நகரில் முக்கியமான இடத்தில் சொந்த வீடு, வாகனம் என வசதி வாய்ப்புகளோடு, இவனின் ஹோட்டலின் கிளைகள் பல திறந்து நகரின் முக்கிய நபராகியிருந்தான்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24 இவர்களின் புனித யாத்திரையாக வேளாங் கண்ணி சென்று மகனுக்கு நினைவேந்தல் செய்து, அன்னதானம் அளிப்பது என அதை வருடம் தவறாமல் செய்து வந்தனர். இந்த வருடமும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

இதுவரை இவர்கள் மட்டுமே போய் வந்தார்கள். கார்லதானே போகிறோம்
இந்த முறை மணியை எங்கும் விடமுடியாது, மணியின் வயதும் கூடி,
அதன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அதை வீட்டில் தனியே விட மனமில்லாமல் இப்பொழுதுதான் கூட அழைத்துப் போகிறார்கள். இதுவரை அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போனது, இவர்களின் துர்பாக்கியம்.

டிசம்பர் 24, 2017.

வேளாங்கண்ணி சுனாமியில் பலியானவர்களின் நினைவுத் தூண் அருகில் இவர்கள் அஞ்சலி செலுத்தியபடி இருக்க, மணியோ தெடர்ந்து கத்திக் கொண்டே இருந்தது. சரஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் கத்திக் கிட்டே இருக்கு எனக் கேட்க, அது கடலைப் பார்த்தலிருந்தே அப்படித்தான் கத்திக் கிட்டே இருக்கான், என்னன்னு தெரியலை,என்றார்.
அதுவும் கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருக்க, இவர்கள் அசந்த நேரத்தில் ஓடிச் சென்று ஒரு இளைஞனைத் தழுவியது,

அவன் அலறியடித்து ஒதுங்க, அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கத்திக்கொண்டே இருந்தது. பாலு அருகே ஓடி வந்து கைச் செயினை பிடித்து ,இழுத்து,

சாரி தம்பி, சாரி. எனக் கூறி திரும்ப எத்தனித்தார்.

அந்த இளைஞன் கையில் ஒரு பனியன் ஒன்று வைத்திருந்தான்.

அதை எங்கோ பார்த்தது போல இருந்தது, பாலுவுக்கு,

மணியும் தொடர்ந்து சத்தம் கொடுத்தப் படி இருக்க சரஸ்வதி அங்கே வந்தாள், அவளும் அந்த இளைஞன் கையில் உள்ள பனியனைப் பார்த்தாள், அவன் முகம் பார்த்தாள், அந்த பனியன் தான் இவர்களின் மகன் சுனாமியில் அடித்துச் சென்ற தினத்தன்று போட்டுக் கொண்டிருந்தான், அதே பனியனுடன் தான் இவர்கள் வீட்டு போட்டோவில் இருப்பான். இதைப் பார்த்துதான் மணி அவனிடம் தாவி தாவி விளையாடியது. எனப் புரிந்து கொண்டார்கள்.

இருவரும் அவனிடம் விசாரித்தனர்.

தம்பி உன் பேர் என்னப்பா? என் பெயர் ஜான். என்றான்.
உங்க அம்மா அப்பா? எனக் கேட்க,
ஊரில் இருக்காங்க,
நீ யாரு கூட வந்தே? என்றார்.

தனியாகத்தான் வந்தேன். ஏன் கேட்கிறிங்க அங்கிள்,? என்றான்.

இல்லை..இந்த டீ சர்ட்டு பார்த்தோம், அதான் கேட்டேன்.

இதுவா என்னோடது தான். சுனாமியிலே நான் மீட்கப் பட்டபோது இதைத்தான் போட்டிருந்தேன்னு அம்மா சொல்லுவாங்க, என்றான். இதை என் அப்பா ஞாபகமாக என் கூடவே வைத்துள்ளேன்.

அம்மா எங்க இருக்காங்க?

திருச்செந்தூரிலே. இருக்காங்க .நான் என்னோட,அப்பாவை இழந்த இடம் இது. வருடா வருடம் நான் இங்கே வந்து அஞ்சலி செலுத்திச் செல்வேன்.

சரஸ்வதிக்கு ஆனந்த அதிர்வு அடைந்தாள், ஆனால் அம்மா எங்கோ இருக்கிறாள் எனச் சொல்கிறானே, எனக் குழம்பினாள்.

உன் கூட யாரும் வரலையா?

இந்த முறை அவங்க வரலை, நான் சென்னை காலேஜ் ஒன்றில் முதலாமாண்டு படிக்கறேன், அங்கிருந்து வந்தேன். இப்போ ஊருக்குத்தான் போகிறேன். எனக் கூறினான்.

இவர்களுக்கு புரிந்தது, இவன் நம் மகன் தான், எப்படியாவது இவன் கூடப் போய் அந்த அம்மாவைப் பார்த்து விபரம் கேட்டு, பெற வேண்டும் ,என நினைத்து அவனிடம், நாங்களும் திருசெந்தூர்தான் போகிறோம் ,வாயேன், எங்களோடு காரில் போகலாம், உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. என்றார் நாசூக்காக,

அவனும் சம்மதித்தான். காரில் பயணித்தார்கள்,

ஐந்து வயது மகன் வளர்ந்து 18 வயது இளம் காளையாக வளர்ந்து இருப்பதைப் பார்த்து பூரித்துக்கொண்டே வந்தாள் சரஸ்வதி, பெற்ற மகன் உயிரோடு உள்ளான் என்ற மகிழ்ச்சியைக் கூட என்னால் வெளிக் காட்ட முடியவில்லையே என வருத்தம் இருவருக்கும்.

இதுதான் சார் என் வீடு, குடிசை வீடுதான், குனிந்து வாங்க,
காபி சாப்பிட்டுவிட்டு போகலாம். கோயில் திறக்க இன்னும் நேரம் இருக்கு, என்றான்.

அம்மா, இவங்கக் கூடத்தான் நான் வந்தேன். எனக் கூறி குளிக்கக் கிளம்பினான்.

அம்மா, ஜான் உங்கள் பிள்ளையா? என நேரடியாக கேட்டார் பாலு.

தயங்காமல் , இல்லைங்க, உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டார்.

இவர்கள் யார் என்பதையும், நடந்ததையும் விவரித்தார்கள். இருவரும் கண்ணீருடன்.

நானும் என் கணவரும் அன்று அங்கு வந்து இருந்தோம்,

மீட்பு பணியில் என் கணவர் ஈடுபட்டு, ஒரு தம்பதியரைக் காப்பாற்றிவிட்டு, அவர்களின் குழந்தையைக் காப்பாற்ற முயலும் போது, அவர் தலை எதிலோ மோதியதில், தன்னுயிர்ப் போகும் நிலையில் என்னிடம் இவனைக் குழந்தையாக ஒப்படைத்து விட்டு உயிரை விட்டார் என் மடியில், எனக்கும் அவர்களைத் தெரியாததால் இவனை அவர்களிடத்தில் சேர்க்க முடியவில்லை அது நாள் முதல் அவனை நான் என் பிள்ளையாகவே வளர்த்து வருகிறேன். இது அனைத்தையும் அவனுக்கு தெரியப் படுத்தி விட்டேன்.
அன்பில் பொய் இருக்கக்கூடாது,பொய் இருந்தால் அது எப்படி அன்பாய் இருக்க முடியும். என கூறி இவர்களை பிரமிக்க வைத்த மேரி.

அன்னை மேரியாக காட்சித் தந்தாள். அவர்களுக்கு குழந்தையை அன்று பறிக்கொடுத்த அந்தப் பெற்றோர் நாங்கள் தானம்மா, என இருவரும் உடைய, அங்கே பாசத்தின் வெளிப் பாடான கண்ணீர் சுனாமி போல எழும்பியது எட்டு விழிகளில்…. மகனும் வெளியே வந்து அழத்தொடங்க, வாரி அனைத்தனர் மூவரும், மணியும் வாலை ஆட்டிக் கொண்டே இவர்களை சுற்றிச் சுற்றி வந்தது. இருவருக்கும் எப்படி கேட்பது என யோசித்த நிலையில், மேரியே பேசினாள், அவன் விருப்பப்பட்டால் நீங்கள் அவனை அழைத்துச் செல்லலாம் என்றாள்..

இதைக் கேட்டு அதிர்ந்த ஜான், அம்மா ,நான் போகலை,என்றான்.

நீ அவங்கக் கூடப் போனா நல்லா படிக்கலாம், வசதியாக வாழலாம், நான் எங்கே போகப் போகிறேன் இந்த ஊரைவிட்டு, வேணுமுன்னா நீ வந்து என்னைப் பாரு என்றாள்,

குழந்தை பிரிந்த துக்கத்தை நாங்க ஏற்கனவே அனுபவிச்சிட்டோம், இப்போ அருண் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சதே எங்களுக்கு பெரிய சந்தோஷம், அவனை கூப்பிட்டுப் போய் உங்களை கஷ்டப்படுத்த நாங்கள் விரும்பலை, அவன் விருப்பபடி இங்கேயே இருக்கட்டும் நாங்கள் கிளம்புறோம்,என்றனர். மேரி ஜானை வாரி அணைத்தாள்.

மணியை அழைத்து வந்ததும் , அது தன் கூர்மையான நுண்ணறிவால் அடையாளம் காட்டி தம் பிள்ளையை நம்மிடம் சேர்த்ததை எண்ணி இவனும் நம் மகன்தான் என நினைத்து ஊருக்கு திரும்பினர்.

Print Friendly, PDF & Email

1 thought on “கரை தொடா அலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *