‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது… ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை – இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டு கொண்டே வருகிறது. இன்று – நேற்று – நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனை தானே. நான் என்ற ஒரு கருத்து, அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின் என்று நாமாக வக்கணையிட்டுப் போட்டுக் கொண்ட வரிகள்… இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்… நான் என நினைத்த – நினைக்கும் – நினைக்கப் போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்… கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் கட்டும் மணற் சிற்றில்தானே இந்த நாகரிகம்… மகா காலம் என்ற சிலந்தியின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவ நதியின் ஓரத்தில் கட்டி வைத்த மணற்சிற்றில்… என்ன அழகான கற்பனை’ என்று உச்சிப் போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்.
துவர்த்து முண்டில் அவர் கட்டியிருந்த ஒற்றைப் பிரி முண்டாசுக்குத் தப்பிய சிகைத் தலையில் வெயில் தாக்கியது. குனிந்து குந்தியிருந்த பனைநிழல் வாக்கில் வெயில் சற்றும்படாதபடி ஒரு பக்கமாக நகர்ந்தார். முள்ளும் முனையுமாக நின்ற ஊவாஞ்செடி, கருவேலங்கன்று பெருந்துடையில் குத்தியது. மறுபுறமாக விலகிக் கொண்டார். குனிந்து கவனித்துக் கொண்டிருந்தவருக்கு நினைவு பிரபஞ்ச யாத்திரை செய்ததென்றாலும், மலத்தில் மாண்ட குடல் புழு கண்ணில் விழுந்தது. ‘மலப்பிறவி… பல ஜன்மம் பல மரணம்’. சீச்சீ…, மனம் குமட்ட வேறு ஒரு பனை மூட்டினடியில் போய் அமர்ந்தார். அது விடலிப் பனை. சற்றுத் தாழ்வாக இருந்ததனால் நிழலும் சுமாராக இருந்தது. முன் குத்தலும் இல்லை. ஆனால் சரல் குத்தியது.
மனமோ ‘பிறவா நெறி’ காட்டாமல் மீண்டும் மீண்டும் மலப்புழு மாதிரி உடற் கூறின் விளைவாக எழுந்த அவசங்களின் பால் விழுந்து குமைந்தது. மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக் கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத் தானா… நான் பிறப்பதற்கு முன்… என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞை உண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப் பற்றியுள்ள சூழ்நிலைக்குத் தான் பிரக்ஞையுண்டா?
‘இந்தப் பனை, இந்தப் பனை விடலியெல்லாம் என் பிரக்ஞைக்குள் பட்டது. இது முளைத்தது எனக்குத் தெரியும். இது முளைப்பதற்கு முன் இந்தக் கட்டாந்தரை, இந்த நிழல் கூட அற்று இருந்தது தெரியும். முந்திய ஆடிக் காற்றில் விழுந்ததே அந்தப் பனை – அது எங்கு நின்றது என்று கூட நிதானிக்க முடியாமல் வரட்டுக் கட்டான் தரையாகத்தான் கிடக்கிறது… நான் பிறப்பதற்கு முன்பு… பரமசிவம் பிள்ளை என்ற ஒருவன் விருப்பு வெறுப்பு, ஆசை துயரம், கவலை பொறுப்பு முதலியவற்றுடன் கூடிய ஒரு ஜந்து; வாழையடி வாழையாக வரும் விளையாட்டின் வித்தைகளை வாலாயமாகக் கற்று, அதற்கு இசைந்தோ இசையாமலோ விளையாடி… பிறகு பரமசிவம் என்ற பெயர் மட்டும் போகுமிடத்துக்கு வழி வைத்துவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டோ அல்லது புது வழியிலோ போய்விடும் ஒரு தோற்றம்… ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா? நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்?… வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது. வருகிறது ஒரு யோனித் துவாரம், போகிறது மற்றொரு யோனித் துவாரம்… பிரகிருதி என்ற அன்னையிடந்தானா? அல்லது கருவூரிலிருந்து கருவூருக்குச் செல்லும் பாதை தான் மனித வாழ்வா? முடிவில்லா வித்தையா? முறையில்லாத் தந்திரமா…?’
கைலாசபுரத்து ஆற்றங்கரை பனைமூட்டடியிலே உட்கார்ந்த பரமசிவம் பிள்ளையின் மனம் ‘தான்’ இல்லாத ஒரு காலத்தைச் சற்று சிரமத்துடன் கற்பனை பண்ணத் தொடங்கியது.
1
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் கைலாசபுரத்திலும் சூரியோதயம் சூரியாஸ்தமனம் தெரிந்துகொண்டுதானிருந்தது. அப்பொழுது ஆற்றங்கரைக்கு வரும் பாதையில் அத்தனைக் காரைக் கட்டிடங்கள் கிடையாது. புழுதி கிடையாது. சுகமான மருத மர நிழல் உண்டு. மாடு படுத்திருக்கும். மனித நாகரிகமே அந்தப் பிராந்தியத்தில் அப்பொழுது உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருந்த மாதிரிதான் தென்பட்டது. ஆனால் இயக்கம் இருந்துகொண்டுதானிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர்த்தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது திங்கட்கிழமை என்று நாம் சொல்லும்படியாகிவிட்ட ஒரு தன்மை போல, நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான். அது அப்படியே உட்கார்ந்து கொண்டே இருந்தால், இப்பொழுது காரைக் கட்டிடங்கள் எப்படி முளைத்திருக்கும்? மருத மரத்து நிழல் இன்னும் இருந்து கொண்டிருக்குமே! அப்பொழுது காற்றடித்தது; மழை பெய்தது; நதியில் வெள்ளம் வந்தது. பனை மரங்கள் சாய்ந்தன; விறகாயின… விட்டமாயின. விடலிகள் முளைத்தன. சூரியாஸ்தமனம்… சூரியோதயம்… ஆற்றங்கரைப் படிக்கல்லில் அழகியநம்பியா பிள்ளை வேட்டி துவைப்பார்… உட்கார்ந்திருந்து அழுக்குத் தேய்ப்பார். ஆற்றில் மூழ்கிக் குளிப்பார். நின்று திருநீறு அணிவார். அனுஷ்டானாதிகள் செய்வார். படிமீது மருத நிழல்கள் கவிந்திருக்கும். ஆனால் இப்போது படிக்கல் சரிந்துவிட்டது. பாதை உண்டு. மணலிலும் தெற்றுக்குத்தாக நிற்கும் படிகளை மறைத்தும் தண்ணீர் ஓடும். இப்போது மருத மரம் இல்லை. வெயில் உண்டு. கல் வழுக்கும்.
அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால், கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது… அதிலே விளைந்த அனந்த கோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று. நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று, தவளையாயிற்று, வாலிழந்தது, குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று… சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது…
கைலாசபுரத்திலே மரங்கள் மொக்கு விட்டன. பூ மலர்ந்தது. தேன் வண்டுகள் வரத்துப் போக்கு வைத்துக் கொண்டன. மரமும் சூலுற்றது… பிஞ்சுற்றது…
கருவூருக்கு வடக்கே உதரபுரியிலேயிருந்து ஹுங்காரம் போன்ற அலறல் பிறந்தது. வேதனையிலே குரல் பிறந்தது. கைக்கட்டை விரல்களை உள்மடக்கிப் பிடித்துக்கொண்டு தலை குப்புற வந்து விழுந்தது ஒரு பிண்டம் – ஒரு ஜன்மம். பிரக்ஞை வந்தது. காட்டுமலம் போயிற்று. ஜன்மம் வீறிட்டது. கைகளையும் கால்களையும் சுண்டி உதறிக் கொண்டு அழுதது. கருவூர்க் கயிற்றைக் கத்தரித்து விட்டார்கள். தனி ஜன்மமாயிற்று. தனித்தன்மை பெற்றது. முலை சுவைத்தது… உறங்கியது… அழுதது… முலை சுவைத்தது…
கைலாசபுரத்திலே மரங்கள் காய்த்தன. கொத்துக் கொத்தாக, பச்சைப் பச்சையாகக் காய்த்துத் தொங்கின. மரத்தையே தரையில் இழுத்துக் கிடத்திவிடும் போலிருந்தது அந்த வருஷத்துக் காய்ப்பு.
2
நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகியநம்பியா பிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.
“அப்பா யாரு?” என்று கேட்கிறார் அழகியநம்பியா பிள்ளை.
குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.
“முட்டாப்பயலே; நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம்… பரமசிவம் பிள்ளை!” என்றார் அழகியநம்பியா பிள்ளை.
“அப்பா யாரு?” என்றார் அழகியநம்பியா பிள்ளை.
குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.
“பரமசிவம் யாரு?” என்று கேட்டார் அழகியநம்பியா பிள்ளை.
“நான்” எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.
“போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!” எனக் குழந்தையை மெய்ம்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.
குழந்தையும் பரமசிவமாகி நான் – நீ – அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது. அம்மா – அப்பா – தெரு – ஊர் எனப் பரிசய விலாசம் படிப்படியாக வளர்ந்தது. வாத்தியார், பிரம்படி, பிறகு கல்வி, சில்லறை அறிவு, பிரம்புக் கொட்டடியிலும் மற்றப்படி இனிக்கின்ற, அவசியமான, பிரியமான ஞானச் சரக்குகளை வேற்று அங்காடிகளிலும் பரமசிவம் பெற்றார். சீனி இனிக்கும் – நெருப்புச் சுடும் – அப்பா கோபிப்பார் – கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற நேர் அனுபவ, அனுபவ சூன்யக் கருத்துக்களை எல்லாம் நான், என்னுடைய என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் கட்டிடம் அமைக்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் – பரமசிவம் – அடி – உதை – பலம் – பலீன் சடுகுடு முதலிய பாதைகளில் செல்ல, கிழமைகள் என்ற கால அமைதி தாராளமாக வசதி செய்து கொடுத்தது.
அழகியநம்பியா பிள்ளையின் வேலைகளை மேற்கொள்ளும் காலம் வந்தது. பரமசிவம், பரமசிவம் பிள்ளையானார். உடல் வாட்ட சாட்டமாக அமைந்தது. உடம்பில் வலு, நெஞ்சில் உரம், மனசில் நம்பிக்கை, தைரியம். வீட்டிலே சமைத்துப் போட… பிறகு வம்ச விருத்திக் களமாக்கிக் கொள்ள யுவதி… உச்வாச நிச்வாசத்தை விட என்ன சுகம்… போகம் – உடலில் உள்ள வலு வீரியமாகப் பெருக்கெடுத்து ஜீவ தாதுக்களை அள்ளி விசிறியது. இப்பொழுது கிழமைக்கும் வாரத்துக்கும் மாதத்துக்கும் ஓடும் வேகந்தான் என்ன. கஷ்டம் – வருத்தம் – கசப்பு – ஏமாற்றம் கடன் வாங்கி அதற்குள் ஐந்து வருஷங்களா?… என்ன ஓட்டமாக ஓடுகிறது. மணல் கூண்டு கடிகையில் கடைசி மணல் பொதி விரைந்து ஓடி வருவது மாதிரி என்ன வேகம்… நிஜமாக, திங்களும் செவ்வாய்களும் இப்போதுதான் இவ்வளவு வேகமாக ஓடுகின்றனவா… அல்லது நான் தான் ஓடுகிறேனா… நான் யார்… இந்த உடம்பா… தூங்கும்பொழுது, பிறக்கு முன் இந்த நான் எங்கிருந்தது… இந்த நான் தான் ஓடுகிறதா, நாள் தான் ஓடுகிறதா… பெட்டியடிக் கணக்கு… இடுப்பொடிக்கும் உழைப்பு, குனிந்து குனிந்து, இன்னொருவன் பணமூட்டைக்கு தலையை அண்டை கொடுத்து கழுத்தே சுளுக்கிக் கொண்டதே. முதுகிலே கூன் விழுந்துவிட்டது. பிறனுக்கு நலம் பார்த்து நாலு காசு சேர்த்து வைத்துக் கண்ணிலும் வெள்ளெழுத்து. வீட்டிலே பூனை படுத்திருக்கும்… பொய்மை நடமாடும்… வறுமையும் ஆங்கே பெற்றெடுத்த பிள்ளையுடன் வட்டமிட்டுக் கைகோர்த்து விளையாடும். மனையாளுக்கு கண்ணிலே இருந்த அழகு – ஆளைத் தூண்டிலிட்டு இழுக்கும் அழகு எங்கே போயிற்று? கையில் ஏன் இந்த வறட்சி? வயலோ ஒத்தி. வீடோ படிப்படியாக மூலப் பிரகிருதியோடு லயமாகிவிட யோக சாதனம் செய்கிறது. விட்டமற்றுப் போனால் வீடும் வெளியாகும்… அப்பொழுது அழகியநம்பியா பிள்ளை எங்கே, அவர் மகன் பரமசிவம் எங்கே… எல்லாம் பரம ஒடுக்கத்திலே மறைந்து விடும். எத்தனை துன்பம் – எத்தனை நம்பிக்கைக்காக எத்தனை ஏமாற்று… எத்தனை கடவுள்கள்… வாய்க்கு ருசி கொடுக்க ஒரு கடவுள்… வயலுக்கு நீர் பாய்ச்ச ஒரு கடவுள்… வியாச்சியம் ஜயிக்க… சோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து, நிசமாக உண்மையில் பக்தியாய்க் கும்பிட. எத்தனையடா எத்தனை… நான் தோன்றிய பின் எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள்… எனக்கே இத்தனை என்றால் என்னைப் போன்ற அனந்த கோடி உயிர் – உடம்புகள் கொண்ட ஜீவநதியில் எத்தனை… ஆற்று மணலைக் கூட எண்ணி விடலாம்… இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா… ‘நான்’ மடிந்து விடுகிறதா… அப்பொழுது ஒருவேளை அவர்களும் இந்த நானோடு போய் விடக்கூடும்… இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு. அவர்கள் தான் மனம் என்ற ஒன்று கால வெள்ளத்துக்கு அருகே அண்டி விளையாடும் மணல் வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள் – பரமசிவம், பரமசிவம் உனக்கு ஏதுக்கடா இந்தச் சள்ளை! அதோ, காலடியில் பாம்புடா, பாம்பு…
கயிற்றரவு!
3
காலம் ஒரு கயிற்றரவு?
பரமசிவம் பிள்ளையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரையில் கிடத்தி விட்டார்கள். பாம்பு கடித்தால் பிழைக்க முடியுமா? போகிற வழிக்கும் புண்ணியம் சேர்க்கத் தலைமாட்டில் உட்கார்ந்து யாரோ தேவாரம் படித்தார்கள். பரமசிவம் பிள்ளை ஏறிட்டுப் பார்த்து சிரமத்துடன், ‘தூரத்தில் இருந்து படித்தால் கேட்பதற்குச் சுகமாக இருக்கும்… பக்கத்திலிருந்தால் காதில் வண்டு குடைகிற மாதிரி தொந்தரவாக இருக்கிறது’ என்றார்…
கண்ணை முழுவதும் திறக்காமலும் முழுவதும் மூடாமலும் அரைக்கண் போட்டபடி உலகைப் பார்ப்பதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் இருந்தது. நிம்மதி இருக்கிறது. தூரத்திலே தேவாரம் தண்ணீரடியில் முங்கி உட்கார்ந்திருக்கும்போது கேட்கும் தூரத்து ரீங்காரம் மாதிரி சுகமாக இருக்கிறது. அதோ தெரிகிறது என் புஸ்தகம்… என்னுடைய கால் கட்டைவிரல்தான்… இனி எத்தனை நேரம் எனக்கு இது தெரிந்துகொண்டிருக்கும்… ஸ்மரணையில் கால் இருக்கிறமாதிரி தெரியவில்லையே. கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? ஸ்மரணைக்குப் புலனாக வேண்டாமா? கால் கட்டைவிரல் ரொம்ப தூரத்திலிருக்கிறதோ… இரண்டு மைல் தூரத்தில் சீ… எட்டு மைலாவது இருக்க வேண்டும். அதோ அந்தப் புஸ்தகம் இப்பொழுது அதுவும் தூரத்தில் தெரிகிறதே… அதில் என்ன எழுதி வைத்திருந்தேன்… கணக்கா… சுவடியா… அழகிய நம்பியைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டும்… எது இருந்தால் என்ன?… நாம் செத்துப் போனால் இந்தக் கால் கட்டை விரல் சாம்பலாகத்தானே… அது எவ்வளவு நேரம் எனக்குத் தெரியப் போகிறதோ… கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துக்கொண்டே இருப்போமா… அதுவும் சுகமாகத்தானிருக்கிறது… உறக்கம் வருகிறதோ… அசதியாக வருகிறதே நிம்மதியாகக் கண்ணை மூடினால்… அப்பா என்ன சுகம்… மூச்சு நின்றது… கைக்கட்டை விரல்கள் உள்வாங்கின… காட்டு மலம் வந்தது… நான் கழன்றது… ஸ்மரணை சுழன்றது… உயிர் – ஆமாம் – உயிரும் அகன்றது… அன்று கருவூரிலே உருவற்று நிலைத்த பிண்டம் இன்று உருவுடன் வதங்கிக் கிடந்தது.
சுழி
சாம்பல் காற்றோடு போச்சு; பெயர் பெயரோடு போச்சு… மனித மனம் இம்மாதிரி அனந்த கோடிக் கூடுகளைக் கட்டிக்கட்டி விளையாடியது… கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது, பழுத்தது… ஆற்றில் தண்ணீர். தண்ணீர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஓடியது. கள்ளிப்பட்டியானால் என்ன, கைலாசபுரமானால் என்ன? காலவெள்ளம் தேக்கமற்று ஓடிக் கொண்டே இருந்தது… அதிலே வரையில்லை வரம்பில்லை… கோடுகூடத் தெரியவில்லை… கருவூரிலானால் என்ன? காட்டூரிலானால் என்ன? சமாதியோ… பிரக்ஞையோ எதுவானால் என்ன?…
நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு – திங்கள் – செவ்வாய் – நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!
பரமசிவம் பிள்ளை எங்கே?
– 1945, காதம்பரி ஏப்ரல் 1948, புதிய ஒளி, முதற் பதிப்பு: டிசம்பர் 1953, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.