கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 6,334 
 

‘தோரணம் நாட்டி துளாய்மாலை தொங்கவிட்ட பூரணகும்பம் பொலிவாக முன்வைத்து-‘

அந்த திருமணக் காட்சி,கமலினியின் மனக்கண்ணில்,என்றோ நடந்த தனது திருமணம் நடந்த காட்சியாகப் பளிச்சென்று வந்;தபோது, இன்று திருமண கோலத்துடன் அவளது தங்கையின் மகள் கீதாஞ்சலி கமலியின் கால்களைக் கண்ணீரால் நனைப்பது அவளின் இதயத்தில் பனி கொட்டுவது போலிருந்தது.

‘ஆசிர்வாதம் என் கண்மணியே,பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் அம்மா’ கமலினி கீதாஞ்சலியை தன்னுடன் ஆர அணைத்து மனமார வாழ்த்தினாள்.

கீதாஞ்சலி தனது பெரியம்மா கமலினியின்; மனம் கனிந்த ஆசிர்வாத்துடன் திருமண மேடை நோக்கிச் செல்கிறாள். பிரபஞ்ச ஒலிகளின் அத்தனை ஓசைகளுக்கும் இசையமைத்த தாளங்கள்போல் அவளின் மென்னடிகள் கமலியின் அடிமனத்தைத் தடவுகின்றன.

‘எங்களுக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம்’ கமலியின் கணவன் குமரன் மாலை மங்கும் நேரத்தில் ஒருநாள் அவர்கள் இருவரும் காலிமுகக் கடற்கரையில் கால் பதித்த நடந்து கொண்டிருந்தபோது கமலியின் காதுகளில் காதல் பொங்கக்; கிசுகிசுத்தான்.

காதலும்,கனிவும்,இசையுணர்வும் கலந்த அவன் குரல்,அவர்கள் கடற்கரைக்கு வருவதற்குத் தங்கள் வீட்டிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தபோது வீதியை அண்டியிருந்த தமிழர் வீட்டிருந்து அவளுக்குப் பிடித்த வீணையொலியுடன் இணைந்த ஏதோ ஒரு அற்புதமான இசையை ஞாபகப்படுத்தியது.

குமரன்; கேட்ட கேள்விக்குச் சட்டென அவள் பதில் வந்தது,’கீதாஞ்சலி என்று பெயர் வைப்போமா’

கமலினியின் பதில் அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இருவரும் இசையை ரசிப்பவர்கள். ஆந்த அற்புத தேடல்தான் இருவரையும் இணைத்தது. பல வருடங்களுக்கு முன்,கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடந்த அவர்களுக்குத் தெரிந்த ஒரு உறவினரின் பெண்ணின் சங்கீதக் கச்சேரியிற்தான் சந்தித்துக் கொண்டார்கள்.

அப்போது அவர்கள் இருவரும் தூரத்துச் சொந்தக்காரர்கள் என்பது இருவருக்கும் தெரியாது.குமரனின் குடும்பம் அவனின் தந்தையின் உத்தியோகம் காரணமாக நீண்ட காலமாகக் கண்டியில் வசித்து வருபவர்கள. கமலினி குடும்பம் யாழப்பாண செம்மண்ணில்; சிந்தனையைப் பதித்துவாழும் பாரம்பரிய குடும்பத்தினர்.

சங்கீத விழாவில்; சந்தித்துக் கொண்டபோது கமலினி கொழும்பு பல்கலைக்கழகத்தில் டாக்டராகப் படித்துக்கொண்டிருந்தாள்.குமரனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் எஞஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான்.ஆனால் இருவேறு பட்டப்படிப்புக்கள் இருவேறு துறைகள்,வெவ்வேறு இடங்களில், நடந்து கொண்டிருந்தால் அவர்கள் அதுவரை சந்தித்துக்னெகாள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து தற் செயலான சந்திப்புக்கள், தொடர்புகள், ஒருத்தரின் மனநிலையை இன்னொருத்தர் புரிந்து பழகிய பண்பு,இருவரின் கல்விக்கும் இடையூறு வராமல் தங்கள் உணர்வுகளைத் துரத்தில் வைத்துக்கொண்ட தெளிவு என்பன இருவரையும் இணைத்தது.

‘எங்களுக்குக் குழந்தை பிறந்ததும், எங்களுக்கு இருவருக்கும் பிடித்த ஒரு அற்புதமான விடயமான இசைக்கு எங்கள் அஞ்சலியைச் செய்து கொள்வோமா’ அவளின் குரலில் இருந்த வேண்டுதலும் எதிர்பார்ப்பும் அவனைத் திக்கு முக்காடப் பண்ணின.

ஆனால் இன்று? கமலினியின் நினைவு கல்யாண மண்டபத்து நாகஸ்வர,மிருதங்க இசைகளின் ஒலியில் தடை படுகின்றன. தைமாத லண்டன் வெயில் ஜன்னல்வழியாக வந்து மண மண்டபத்தை ஒளி மயமாக்குகிறது.

கல்யாண மேடைக்கு தோழிகள் சகிதம் கீதாஞ்சலி அழைத்து வரப்படுகிறாள்.அவளோடு வாழ்க்கையில் இணையும் ஆங்கிலேய மணமகன் டேவிட் ஹான்ஸன்; எனபவன். பார்ப்பவர்கள் மெச்சும் விதத்தில் கம்பீரமும் கவர்ச்சியுமான் தமிழர் பாரம்பரிய உடையுடன் மேடையில் மணமகள் வரவைப் புன்னகையுடன். பார்த்துக்கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேய, தமிழ் உறவினர்கள் மணமக்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து ஆனந்தத்தில் குதகலிக்கிறார்கள். சாதி.மத.இன பேதமற்று இணைந்த உறவின் குதுகலமது.

மணமக்களின் பெற்றோர்கள் மேடைக்குச் செல்கிறார்கள். ஓரு பக்கம் கீதாஞ்சலியின் பெறு;றோர் செல்வியும் குமரனும் மேடையேறுகிறார்கள். ஒருகாலத்தில் கமலினியின் கணவனாவிருந்த குமரனின் பார்வை திருமண மேடைக்கு முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கமலினியில் சாடையாக முட்டிமோதித் தடுமாறுகின்றன. செல்வியின் தர்ம சங்கட பார்வையும் தன்னில் நனைவதைக் கண்ட கமலினி அன்பான புன்னகையையுடன் தங்கையைப் பார்க்கிறாள்.’எதற்கும் கவலைப்படாதே எல்லாம் நன்றாக நடக்கும்’என்ற பாவனை கமலியின் முகத்தில் தவழ்வது அவளின் தங்கை செல்விக்குத் தெரியும்.

கொழும்பு 1995.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தொடரும் அமைதியின்மை காரணத்தால் பலர் உயிருக்கு அஞ்சி வாழ்ந்த காலமது.அரச பயங்கரம் அத்துடன் தமிழர்கள் குழுக்கள் தங்களுக்குள்; நடக்கும் மோதல்கள் என்று தொடர்ந்த நிகழ்வுகளால், கமலியின் தம்பிகள் இருவரும் ஒரே நாளில் இந்த உலகத்தைவிட்டு மறைந்தபோது துடித்த தனது பெற்றோரையும் தங்கையையும் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த கமலினி அன்புடன் அழைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கமலினி; அப்போது பிரசவ வைத்தியசாலையான காஸில் ஸ்ரீட் வைத்தியசாலையில் வைத்தியராக வேலை செய்துகொண்டிருந்தாள்.திருமணமாகி ஒருவருடமாகியிருந்தது.

அப்போது அவள் தங்கை செல்விக்குப் பதினைந்து வயது. செல்வி யாழ்ப்பாணப் பெண்கள் கல்லூரி ஒன்றில் மிகத் திறமையாகப் படித்துக் கொண்டிருந்தாள்.ஒரு நாளில் இரு தமயன்களையும் இழந்த துயர் தாங்காமல் பித்தம் பிடித்த நிலையில் தவித்து வாழும் பெற்றோர், அவர்களையும் தன்னையும் அன்புடன் அழைத்து வைந்திருந்து பாசத்துடனும்; பார்த்துக் கொள்ளும் கமலினியும் அவள் கணவர் குமரனும், யாழ்ப்பாணத்தில் அவள் அனுபவித்த துயர்களைக் கொஞ்சம் மறக்கப் பண்ணிர்கள்.

கமலினியின்,குடும்பத்துப் பொறுப்புகள் அத்தனையையும் தாங்கவேண்டிய தமயன் லண்டனில் இருந்தான். பெற்றோர்களையம் தங்கையையும் கவனிக்கம் குடும்பப் பொறுப்புக்கள் அத்தனையும் கமலினி கவனமாகப் பார்த்தாள்.அந்த நேரத்தில் அவள் தனக்கென்று ஒருசில மணித்தியாலங்களையாவது ஒதுக்கி வைத்தது குறைவாக இருந்தது.

அதன் விளைவு? இரு தம்பிகளை ஒரேயடியாக இறந்த துன்பத்தின் தாக்கமோ என்னவோ,தாய்தகப்பன், தங்கை வந்த காலகட்டத்தில் கமலினியின் மூன்றுமாதம் கருவிலேயே அழிந்தபோது கமலினியும் குமரனும் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. இருபத்தியாறு வயதான தமக்கையின் துன்பத்தைப் பதினாறு வயதாகிக் கொண்டிருந்த சிறு பெண்மை கண்டு துடித்து விட்டது.

‘ஏன் எங்கள் குடும்பத்தில் ஒரு குறுகியகாலத்துற்குள் இவ்வளவு கொடுமைகள நடக்கின்றன?’

கமலினியால்; புரிந்து கொள்ள முடியவில்லை. இருமகன்களையும் இழந்து வந்து தாய்தகப்பனுக்குத் தனது குழந்தை பிறந்ததும் கொஞ்சம் துயர் குiறுயலாம் என்று கனவு கொண்டிருந்தாள் கமலினி. ஆனால் பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்; என்று பழமொழிபோல் ஒரு சொற்ப காலத்தில் பல விடயங்கள் கமலினியின் வாழ்க்கையைச் சுக்கு நூறாக்கி விட்டது.

தொடர்ந்த துயர்களும்; அதை வாய்விட்டுச் சொல்லி அழமுடியாத சூழ்நிலையும் கமலினியைத்.தவிக்கப் பண்ணியது. போர்க் கால இருள் சாதாரண மக்களின் வாழ்க்கையை அசாதாரரணமாக்கிக் கொண்டிருந்தது.

குழந்தையின் வரiவுக் குமரன் எவ்வளவு எதிர்பார்த்;திருப்பான் என்று கமலினிக்குத் தெரியும்.

அவனை ஏமாற்றி விட்டதான குற்ற உணர்வு ஏனோ வந்தது.

கமலினி,அவளின் உத்தியோக வாழ்க்கையில்,குழந்தை பெறமுதல் கவனிக்கப் படவேண்டிய தாய் தகப்பன் உடல் உள நிலை பற்றி எத்தனை தாய்மாருக்குப் புத்தி சொல்லியிருப்பாள்? ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது’ அப்பாவிப் பெண்போலத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

வழக்கமான மாதவிடாய் வராதபோது அதுபற்றிக் கணவனிடம் சொன்னபோது, அதைத் தொடர்ந்து குழந்தை வந்துவிட்டதா என்று பரிசோதித்து அவள் கர்ப்பம் அடைந்து விட்டாள் என்ற உறுதியானபோது அவன் அவளை ஒரு குழந்தை மாதிரித் தூக்கி முத்தமிட்டான்.

அவள் வயிற்றை அன்புடன் தடவி, ‘அம்மாவையம் உன்னையும் என் இரு கண்கள்மாதிரிக் கவனித்துக் கொள்வேன்’என்று பாசத்துடன் அவள் வயிற்றில் முத்தமிட்டவன் அவன்..

தாயாகப்போவது என்பது ஒரு புனித யாத்திரை என்று அவளுக்குத் தெரியும்.படிப்பு தந்த அறிவு, பல தரப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் அனுபவம் என்பன அவளை மிகவும் துணிவுள்ள தாயாவதற்குத் தயார் படுத்தின. அவள் கோடிக்கணக்கான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஒரு நொடியில் அழிந்தன.
ஓரு காலையில், வேலைக்குச் செல்லப் புறப்பட்டவள்,அடிவயிறு சட்டென்று வலிப்பதையுணர்ந்தாள். அதைத் தொடர்ந்து அவசரமான வைத்திய சேவை என்றெல்லாம் தொடர இடம் வைக்காமல் மூன்று மாதச் சிசு உயிரற்ற ஒரு வெறும் பிண்டமாய் விழுந்த அதிர்வு அவளை நிலை குலையப் பண்ணி விட்டது.

இருமகன்களை ஒரேயடியாக இழந்த தாய் தகப்பன் கொழும்புக்கு வந்து சில மாதங்களில்; கமலினியின் கருச்சிதைவு நடந்தது.தன் வயிற்றில் ஒரு சிசு ஊர்ந்து நெழிந்து தனது இருப்பைத் தாயிடம் தெரியப் படுத்தமுதல் அவளிடமிருந்து அவர்களின் காதற் படைப்பு பிரிந்தது அவளால் தாங்க முடியவில்லை.

‘என்னிடம் உதவி பெறும் எத்தனையோ தாய்மாரின் அன்பான ஆசிர்வாம் எனக்கிருக்கிறது என்று நினைத்தேன், அனால் இன்று, இறைவா என்னை மொட்டை மரமாக்கி விட்டாயே,அப்படி என்ன பாவம் செய்தேன்’ அவள் கதறல் கடவுள் காதில் விழாதா?

வாரக்கணக்காக அவர்கள் வீடு வாய்விட்டுச் சொல்ல முடியாத சோகக் கடலில் தவித்தது.

கர்ப்பம் அழிந்தது ஏன் என்று அவள் எந்த வைத்திய காரணங்களையும் தேடவில்லை.அவள் குடும்பத்தில் இதுவரை யாருக்கும் இப்படி நடந்ததில்லை என்று அவள் அனுபவத்தில் தெரிந்து கொண்டவள்.குமரனின் குடும்ப சரித்திரம் அவளுக்குத் தெரியாது. அதை அவனிடம் கேட்டு அவனை மேலும் கலங்க வைக்க அவள் விரும்பவில்லை

கமலினி; ஒரு வைத்தியர்,தனது உடல் உள நலத்தில் அவளால் முடியுமானவரை அதிக கவனம் செலுத்துபவள். ஆனால் இலங்கையில் தொடரும் போர் என்ற இருள் மேகம்,வாழ்க்கை என்ற வெளிச்சத்தில் எத்தனையோ இன்னல்களைத் தருகிறது.

குடும்பத்தில் நடந்த இடைவிடாத துன்பங்களும் மனஅழுத்தமும் ஒரு காரணமாகவிருக்கலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
ஆடுத்த கர்ப்பத்திற்கு முதல் வைத்திய பரிசோதனை செய்ய மனம் சொல்லியது.

இன்னுமொரு கர்ப்பம்? அவள் ஏங்கினாள்.
‘கண்ணே, அவசரப்படவேண்டாம்’ குமரனின் கனிவு அவளைத் தேற்றியது.

விஞ்ஞான முறையைத் தெரிந்தவள், ஒவ்வொருநாளும் பல தரப்பட்ட பிரச்சினையுள்ள தாய்மாருக்கு வைத்தியம் செய்பவள்.ஆனாலும் ‘கடவுள் விட்ட வழி நடக்கட்டும்’ என்று தனது மனத்தைத் திடமாக்கினாள்.

வைத்தியப் பரிசோதனையில் தனக்கோ அல்லது குமரனுக்கோ ஏதும் பிரச்சினையிருக்கிறது என்ற தெரிந்தால் அதைத் தாங்கும் தைரியம் தனக்கிருக்கிறதா என்ற சந்தேகமா?

பல மாத கால இடை வெளியின்பின்,அடுத்த தரம் அவள் கர்ப்பம் உறுதியானது. ஆனால் அவளம் குமரனும் தாய் தகப்பனுக்குச் சொல்லவில்லை. பிள்ளை துடிக்கத் தொடங்கியதும் சொல்லாம் என்று முடிவு கட்டினார்கள்.

மூன்றாம் மாதம் இனம் தெரியாத பயம் அவளை வாட்டியது.

கொழும்பில் அடிக்கடி பயங்கரவாதச் சட்டத்தின் பெயரால்,தமிழர்கள் வீடுகளி;ல் சோதனையிடப் பட்டன. கமலினியின் இறந்த இரு சகோதரர்களும் போலிசாரின் சந்தேகப் பட்டியலில் இருந்ததால் அவர்கள் வீடு குறி வைக்கப் பட்டிருப்பது தெரியும். வயதுபோன பெற்றோர், வயதுக்கு வந்த இளம் தங்கை,இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கத் தன்னால் முடிந்தவரை பாடுபடும் தனது அன்புக் கணவனின் நிலை என்பன அவளை வருத்தியது.

அவளின் அடிமனத்தில் கிளைவிட்டுப் பரந்து விரிந்த பல தரப் பட்ட பயம்தான் இரண்டாம் கர்ப்பமும் அழிந்து விழக்காரணமா? தனது கருப்பை, மூன்று மாதத்திற்குமேல் ஒரு கருவைத் தாங்கமுடியாத வலிமையற்றதா? அல்லது குமரனின் விந்தணுக்கள் பலமற்றதா? கமலினியின் மனம் சுக்கு நூறாக உடைந்தது. அவள் சிந்தனை தடுமாறி அவள் மிகவும் நொந்து போனாள்.

குமரன் அவளைத் தேற்றத் தொட்டபோது,’ தயவு செய்து என்னைக் கொஞ்ச காலம் வெறுமையாக இருக்க விடுங்கள்’ என்று தேம்பியழதாள்.

அவள் சொன்ன ‘வெறுமையாக’;என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று அவனுக்கு அன்று புரியவில்லை. இன்னோரு சிசுவைத் தாங்கவேண்டிவந்தால் அந்தப் பயத்தை விடுத்து வாழும் ‘வெறுமையை’ பற்றிச் சொல்கிறாள் என்று அவன் மனம் உணர்ந்தபோது அவன் இதயம் வலித்தது.

அவள் அவனின் நெருக்கத்தை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.அதன்பின்,கமலினி வேலை நிமித்தமாகப் பல இரவுகளில் மிகவும் நேரம் கழித்து வருவாள். கொழும்பில் அவசரநிலை காரணமாக கொழும்புக்கு வெளியிலிருந்து வரும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அடிக்கடி லீவு போடுவது நடந்தது. அதனால் சிலவேளை இரவுகளில் வைத்தியசாலையில் அவள் தங்கவேண்டிய நிர்ப்பந்தங்களும் தொடர்ந்தன.

தன்னிடம் கமலினி நெருக்கமற்று வாழ்வதற்கு மேற்பட்டவை ஒரு வெற்றுக் காரணமா என்று அவன் சிந்திப்பது அவனின் போக்கில் தெரிந்தது.கமலினியின் அன்னியமான தாம்பத்திய’ வாழ்க்கையுணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்தது.

ஆனால் அவனில் உள்ள அளப்பரிய காதல் அவளை அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கொண்டிருப்பதை ஒன்றரை வருடத்தின் பின் மிக மிகக் கொடுமையான அனுபவமாக எதிர் கொள்ள வேண்டிவந்தபோது அவள் முற்று முழுதாகத் தன் நிலை மறந்து விட்டாள்.

ஓரு வார விடுமுறையில் அவளின் பெற்றோர்கள், வத்தளை நகரிலுள்ள,தகப்பனின் தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.

குமரன் தனது சினேகிதனைப் பார்க்க அவனின் பிறப்பிடமான கண்டிக்குச் சென்று விட்டான்.

கொழும்பு நகர் ஆறுமணிக்கே, மனித நடமாட்டமற்றுக் கிடந்தது. இன்னுமொரு குண்டு வெடிப்பு.இன்னும் பல திடிர் சோதனைகள்.அவள் பெருமூச்சுடன் வீட்டைத் திறந்தபோது வெறிச் சென்று கிடந்த சூழ்நிலை அவளை வருத்தியது. அம்மா என்று அழைத்து அவளிடம் ஓடிவர ஒரு குழந்தைச் செல்வம் எப்போது கிடைக்கும்? அவள் மனம் எங்கியது

தங்கை செல்வியின் அறை மூடிக் கிடந்தது. பரிட்சைக்குப் படிக்கிறாள் போலும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கமலினி தனது அறையைத் திறக்கும்போது. தங்கையின் அறையிலிருநு;த வந்த விசும்பல் ஒலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால், செல்வியை லண்டனுக்கு அழைக்கக் கமலினியின் தமயன் முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

அதற்காகச் செல்வி கொழும்பிலுள்ள தனியார் ஆங்கிலக் கல்லூரியொன்றில் படித்துக் கொண்டிருக்கிறாள். லண்டனுக்குச் செல்வதற்கு எவ்வளவுதூரம் துடிக்கிறாள் என்பது கமலினிக்குத் தெரியும்.

கமலினியின் வீடு, சட்டென்று இரு மகன்களையும் இழந்த பெற்றோரின் சோகத்திரை படிந்திருந்தது. எப்போதாவது இருந்து கமலினியின் பெற்றோர் தகப்பனின்; தங்கை வீட்டுக்கு வத்தளைக்குச் சென்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கிவிட்டு வருவார்கள்.

போர்க்கால சூழ்நிலையால் கொழும்பிலுள்ள தமிழர்கள்,வெளியே போவதோ அல்லது அவர்கள் வீட்டிற்கு,உற்றார் உறவினர் வருவதோ குறைவாகவிருந்தது. இளம் பருவப் பெண்ணான,செல்விக்குக் கொழும்பில் அவளின் வயதுடைய சினேகிதர்கள் கிடையாது.

சோகமான பெறு;றோரை விட அவளது உலகம் கமலினியையும் குமரனையும் சுற்றி வந்து கொண்டிருந்து. கமலினி தனது சொந்தத் துயரை மறைத்துக் கொண்டு தன்னால் முடிந்தவரை தனது தங்கையைக் கவனித்துக் கொண்டிரந்தாள். ஆனால் ஏன் இன்று தனது கதவைப் பூட்டிக் கொண்டு விசுப்புகிறாள்?

கமலினிக்குப் புரியவில்லை.

தங்கையின் கதவைக் கமலினி தட்டினாள்.பதிலில்லை. செல்வியின் விசும்பல் ஒலியிலிருந்த சோகத் தொனி; கமலியின் இதயத்தைக் குத்திப் பிழந்தது.

‘செல்விக் குட்டி கதவைத் திற ‘ தனது பாசத்தை எல்லாம் குரலிற் திரட்டித் தன் தங்கையிடம் கெஞ்சினாள் ஒரு கொஞ்ச நேரம் கமலினியின் கெஞ்சலும் செல்வியும் விம்மலும்; தொடர்ந் கொண்டேயிருந்தது.

செல்வி கதவைத் திறக்காதற்கான காரணத்தைத் தேடி கமலியின் மனம் அலைபாய்ந்தது. தமக்கையின் முகத்தில் விழிக்காதபடி என்ன குற்றத்தைச் செல்வி செய்திருக்க முடியும்? அல்லது தன்னை லண்டனுக்கு அனுப்பாமல் தங்கள் வீட்டில் வைத்திருப்பதாகச் செல்வி நினைக்கிறாளா?

‘ என் அன்பான செல்விக் குட்டி,எனது பிரச்சினை என்னவாக இருந்தாலும் எங்கள் பெற்றோர் ஆணையாக,உனக்கு என்னால் முடிந்தவரை உதவுவேன், தயவு செய்து கதவைத் திற’ இப்போது கமலினி அழுகையுடன் குரல் கொடுத்தாள்.

சில நிமிடங்களின் பின் செல்வியின் கதவு திறந்தது. உடனடியாகச் செல்வி கமலினியின் காலடியில் விழுந்து கதறி அழுதாள்.அந்தக் கதறலைக் கமலியால் தாங்க முடியவில்லை.

‘என் அருமைத் தங்கையே உனது துன்பத்தை என்னால முடிந்தவரை தீர்;த்து வைப்பேன் இது சத்தியம்’ தங்கையைத் தூக்கியணைத்தபடி கமனிலி அன்புடன் சொன்னாள்.

செல்வி தமக்கையின் முகத்தைப் பார்க்காமல் கமலினியின் வலது கரத்தைத் தனது வயிற்றில் வைத்தபடி,’ என்னை மன்னித்து விடு அக்கா’ என்று குரலடைக்கக் கெஞ்சினாள்.

கமலினிக்கு ஏதோ புரிந்தது. கமலியின் இருதயம் சட்டென்று அடைப்பது போலிருந்து. உலகம் இருண்டது. வாய் உலர்ந்தது. முகம் எரிந்தது.

செல்வியின் நிலை புரிந்தது. பதினேழு வயதுப் பெண்மை எங்கோ தவறிவிழுந்து வயிற்றிப் பாரத்தையும். மனதில் துயரத்தையம், முகத்தில் அவமானத்தையும் தாங்கித் தவிப்பதை மருத்துவரான கமலினியால் உணர முடிந்தது. அவள் இப்படி எத்தனையோ பதினேழுவயது ஏழைப் பெண்கள்,அவர்களை நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு, அல்லது, முட்டாள்த்தனமாக அறிவற்ற வாழ்வியலால் குழந்தையுடன் அவளின் உதவியை நாடுவது அவளுக்குத் தெரியம்.

அப்போது. அவள் காதுகளில்,’ உனக்கு இருகர்ப்பங்கள் தவறிவிட்டன.உனது தங்கை ஒரு உயிரைத் தன்னில் சுமக்கிறாள். அவமானம். மானம், மரியாதைக்கப்பால் அந்த உயிரை உன்னுடையதாக நினைத்துக்; காப்பாற்ற மாட்டாயா’? என்று யாரோ உருக்கமாகக் கேட்போலிருந்து. அந்தக் குரல் அவளின் அடிமனத்தின் சுய குரலாக இருக்கலாம்.

அந்த நிமிடமே,தங்கை சுமக்கும் உயிரைத் தன்னுடைய குழந்தையாக நினைத்து எப்பாடு பட்டாலும் காப்பாற்ற கமலினி; தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

செல்வியைத் தாயாக்கியவன், யார் என்று அவள் கேட்டு செல்வியையும் தன்னையும் குழப்பிக் கொள்ளத் தயாரில்லை. அவள் படிக்குமிடத்தில் எத்தனையோ இளைஞர்கள் படிக்கலாம்.அதில் யாரோ ஒருத்தருடன் அவளுக்குக் காதல் வந்திருக்கலாம். காதலுக்குச் சாதி, மதம், வர்க்கம் என்பன கிடையாது என்பதைக் கமலினிக்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.செல்வியின் குழந்தையைத் தன்னுடையதாகப் பாதுகாக்கக் கமலினி ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த சபதம் கமலினியின் காதுகளில் மிண்டும் ஒலித்தது அவளின் கற்பனையா தெரியாது.

ஆனால் அடுத் நிமிடங்களில் அவளின் சபதத்திற்கு வந்த சவாலை எதிர்நோக்குவதை விடக் கமலினி அந்த இடத்தில் அந்த நிமிடமே இறந்து விடக் கூடியதான செய்தியைச் செல்வி தனது விம்மல்களுக்கும் விசும்பல்களுக்குமிடையில் தமக்கையிடம் மெல்லத் தடக்கி விழும் வார்த்தைகளில் சொல்லி முடித்தாள்.

‘அக்கா.அக்கா’ செல்வி தயங்கினாள்.

‘இந்தக் குழந்தை..’ செல்வி முடிக்க முதல்,கமலினி அவளின் வாயைப் பொத்தினாள்.

‘அவமானத்தை மறைக்கக் குழந்தையை அழித்துவிடலாம் என்பதை இக்கணமே மறந்து விடு. இன்று எங்களைச் சுற்றி வாழவேண்டிய எத்தனையோ மனித உயிர்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற எல்லா உயிரினத்தையும் அழிக்கும் வக்கிர உணர்வுகள் கொலை செய்யப் படுகின்றன. இந்த உயிர் உனது பவுத்திரமான வயிற்றில் தரித்தது. தகப்பன் யாரென்பத முக்கியமல்ல.உனக்கு அந்தத் தகப்பனைத் திருமணம் செய்து வைக்க என் உயிரையும் பணயம் வைத்து உதவுவேன் இது சத்தியம்’ கமலினி தமக்கையின் தலையில் கைவைத்துச சபதம் செய்தாள்.

செல்வி இன்னொருதரம் சட்டென்று தமக்கையின் கால்களில் விழுந்தாள்.அவள் கதறல்க் குரல் கமலினியின் அத்தனை உடற்கலங்களையும் உலுக்கியது.

‘ அக்கா தயவு செய்து என்னையும் இந்தக் கருவையும் அழித்துவிடு. ஏனென்றால், நான்,அன்பு காட்டி அணைத்துக்கொண்ட உனக்குப் பெரிய பாவத்தைச் செய்து விட்டேன். இந்தக் குழந்தையின் தகப்பன் குமரன் அத்தான். அவரை எனது உயிரை விட மேலாக நேசிக்கிறேன்’

செல்வி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லவில்லை.ஒரேயடியாகச் சொன்னாள்.அவளின் வார்த்தைகள் சத்தியமானவை என்பது அவளின் குரலினின் விம்மல்களிடைய அப்பழுக்கற்று ஒலித்தன.
கமலினி இப்போது செல்வியின் நிலைக்குத் தள்ளப் பட்டாள்.அந்த நிமிடமே தனது உயிர் தன்னிடமிருந்து பிரியாதா என்று கதற வேண்டும் போலிருந்தது.

பறக்கும் விமானத்திலிருந்து,யாராலோ தள்ளப் பட்டுக் கீழ் நோக்கி விழுவதுபொல் கமலினி பதறினாள். ஆழ்கடலில் யாரோ அமுக்கி விட்டதாக நடுங்கினாள்.எரியும் நெருப்பில் எழ முடியாதபடி உழல்வதான வேதனை அவளை இறுக்கியது.

அப்போது இரவு ஒன்பது மணியாகவிருக்கலாம். சுற்றாடல் சூழ்நிலை அத்தனையும் நிசப் தமாகவிருந்தது. ஊரடங்கு சட்டம் வெளியில் மட்டும்தானா?

‘என்னைத் தனியாக,வெறுமையாகக் கொஞ்சக் காலம் இருக்க விடுங்கள்’ என்ற கமலினி குமரனிடமிருந்து உடலுறவால் விலகியதன் பலனா இது? அல்லது, யாழ்ப்பாண சுற்றாடலில் அதிகம் பேருடன் பழகாமல், தாய் தந்தையர், தமயன்கள் அன்புக்குள் வாழ்ந்த செல்வி, தமயனின்களின் கொடுமையான மரணத்தின் பின் குமரனின் அன்பு பாசத்தில் தன்னைப் பறிகொடுத்து வளர்ந்த உறவின் பிரதிபலிப்பா இது?

முப்பது வயது குமரன் பதினேழு வயதுப் பெண்ணைக் கெடுத்ததாகக் கமலினி போலிசாரிடம் போவதா?

‘குமரன் அத்தானை எனது உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்னை மன்னித்து விடு’ என்றுதானே செல்வி அழுகிறாள்.

சில மாதங்களாகக் குமரன் தனது வழக்கமான அன்பான பேச்சுக்கள் மூலமாவது கமலினியை அதிகம் நெருங்கவில்லை என்ற உண்மை சட்டென்று கமலினியின் உணர்வில் தட்டியது.

சகோதரிகள் இருவரும் எவ்வளவு நேரம் மவுனமாக இருந்தார்கள் என்பது கமலினிக்குத் தெரியாது.செல்வியிடம் எவ்வளவோ சொல்ல வேண்டும்போன்ற உந்துதல் கமலினியின் உணர்வை வருடியது.

தூரத்தில் எங்கோ ஒருசிறு குழந்தையின் அழகைக் குரல் கேட்டது.கமலினி தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

செல்வியையும் அவளின் கருவையும் காப்பாற்ற எடுத்த சபதம் கமலினியின் நிலைவில் சட்டென்று கிசுகிசுத்தது. தனது கர்ப்பங்கள் கலைந்தது, தனது தங்கை தனது கணவனால் கர்ப்பமானதும் சந்தர்ப்ப சூழ்நிலையா.விதியின் நியதியா?

செல்வியின் வயிற்றில் வளரும் கருவுக்கு எத்தனைமாதம்?

தன்னிடம் வரும் இளம் தாய்களிடம் உத்த்pயோக தோரணையிற் கேட்பதுபோல்,’ எத்தனை மாதம்’ என்று கமலினி செல்வியிடம் கேட்டாள்.

‘இருமாதங்கள் பீரியட் வரவில்லை’

தனக்கு நடந்தது போல் செல்விக்கும் நடக்காமல்,அன்பாரும், அணைப்பாலும் ஆதரவான செயல்களாலும்,செல்வியின்; கர்ப்பத்தைக் காப்பாற்ற கமலினியின் மனம் உறுதி கொண்டது.

அதன் பின் நடந்ததெல்லாம் கனவா?

குமரன் வந்ததும் கமலினி,’என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே’ என்று அழுது புலம்பி ஒரு போராட்டத்தைத் தொடங்கவில்i.அதன் பிரதிபலிப்பு எப்படியாகவிருக்கும் என்ற அவளுக்குத் தெரியும். கமலினி படித்தவள். பண்புள்ளவள். மனித நேயமுள்ளவள் என்பதெல்லாம் குமரனுக்குத் தெரியும்.

ஆனாலும் கமலினியின் மிகவும் கவனமான நடத்தை அவனைத் திடுக்கிடப் பண்ணியதும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.கமலினியின் வாழ்க்கை ஒட்டமுடியாத அளவு தகர்ந்து விட்டது. ஆனால் அவள் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக, அந்தக் குடும்பத்தின் மானம் மரியாதை, தங்கையின் குழந்தை, கணவனின் மனநிலை அத்தனையையும் தெளிவாகத் தெரிந்தவளாக விடயங்களை அணுகுவதைக் கண்டதும் இதுவரை அவனுக்குத் தெரியாத இன்னுமொரு கமலினியை அவன் காணுவதுபோல் அவன் அவளை நோக்குவதையும் அவள் அவதானிக்கத் தவறவில்லை.

அவளின் விருப்பம் என்று அங்கு எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.அலைபாயும் அவன் மனத்தையுணர்ந்து கொண்டு,ஆறுதலாக அவனிடம் மேற் கொண்டு நடக்கவேண்டிய விபரங்களைச் சொன்னாள். நடக்கவேண்டிய விடயம் என்பது,மூவரும்; உடனடியாக வெளிநாடு செல்வதுதான்.

போலிசாரின் கண்காணப்புகளிலிருந்து தப்ப,செல்வியை லண்டனுக்கு அனுப்ப இருப்பதாகக் கமலினி தனது பெற்றோருக்குச் சொன்னாள். அவளின் தந்தையாருக்கு அந்த செய்தி ஆச்சரியமாக இருந்தாலும் தங்கள் வீடு கண்காணிப்பதை அவர் அறிவார். அத்துடன் அவரின் தங்கை அவரைத் தங்களுடன் வந்து வத்தளை நகரில் இருக்கவேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருப்பதும் கமலினிக்குத் தெரியும்.

முதலில், செல்வியை லண்டனுக்கு அனுப்பதாகச் சொல்லிப் பெற்றோரின் மனத்தை ஆழம் பார்த்தவள், ‘ எங்களி வீட்டில் இருக்கும் அத்தனைபேருக்கும் பிரச்சினை வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. முடியுமென்றால் நானும் அவரும் செல்வியுடன் லண்டனுக்குப் போகப் பார்க்கிறோம் எஜேன்சிக்குக் கட்ட எத்தனையோ இலட்சங்கள் வரும். யாழ்ப்பாணத்தில் நீங்கள் எனக்குத் தந்த வீட்டை விற்கலாமா’? கமலினி, தகப்பன் அவளிடம் பல கேள்விகள் கேட்காதவாறு பல விடயங்களை அவரிடம் சொல்லி விட்டாள்.

பணமிருந்தால் பிணத்தையும் பேசவைக்கலாம் என்று கமலினிக்குத் தெரியத் தொடங்கியது. எத்தனையோ கடினமான அனுபவங்களுடன் லண்டன் வந்து சேர்ந்ததும், தனது தமயனிடம், செல்வி ஒரு வாலிபனைக் காதலித்ததாகவும் அவன் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்து விட்டதாகக் கருதுவதாகவும் அவனின் குழந்தை தங்கை செல்வியின் வயிற்றில் வளர்வதாகவும் மெல்லமாகச் சொன்னாள்.

செல்வியின் நன்மை கருதி அவளைத் தன்னுடன் வைத்துக் கொள்வதாகவும் சொன்னதைத் தமயனால் மறுக்க முடியவில்லை. தனக்காகவும் கமலினியின் கணவனுக்காகவும் அவர்களின் தமயனிடம் எத்தனையொ பொய்கள் சொல்லும் தனது தமக்கையை நன்றியுடன் செல்வி கவனிப்பது கமலிக்குத் தெரிந்தது.அதைவிட அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

அவளது தமயன், சந்திரன்; ஒரு முற்போக்கவாதி. ‘செல்விக்கு விரைவில் ஒரு திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டும் பதினேழுவயதில் தனியான தாயாகவிருப்பது மிகவும் கடினமான விடயம்’ என்று தமயன் சொன்னது கமலினிக்குச் சந்தோசமாக இருந்தது. திருமணத்திற்கு முதல் தனது தங்கை தாயாகிவிட்டதை அவன் அவமானம் என்று கருதித் திட்டவில்லை;. போர்க்காலத்தில் மனிதர்கள் அன்பைத்தேடுவது சாதாரண காலத்தைவிட அதிகமாகவிருக்கும் என்பதும், தனது தங்கை ஒரு வாலிபனைக் காதலித்துக் கர்ப்பமானதைப் பற்றியும் பெரிதாக எடுத்து பெண்களின் ஒழுக்கம் பற்றி அவன் சொற்பொழிவு செய்ய வில்லை.

ஆனால் செல்வியின் குழந்தை பெறுவுக்கு முன்சில வாரங்களுக்கு முன் கமலினி சொன்ன விடயம்தான் அவனைத் திக்கு முக்காடப் பண்ணின.

‘செல்வியின் குழந்தை தகப்பனில்லாமல் வாழ்வது பாவம் என்று நீங்கள்தான் பரிதாபப்பட்டீர்கள’

சந்திரன் தனது தங்கை கமலினியை ஏறிட்டுப் பார்த்தான்.லண்டனுக்கு வந்து சில மாதங்களில் தங்கை செல்விக்கு மாம்பிள்ளை பார்த்த விட்டாளா?

‘அண்ணா, எனக்குக் குழந்தை பிறக்காது என்று பல சோதனைகளுக்கும் பிறகு தெரிந்து விட்டது.’ தமயனின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கவனமாக ஏறிட்டுப்பார்த்தாள் கமலினி
தங்கை கமலினி என்ன சொல்ல வருகிறாள் என்பதைத் தமயன் சந்திரன் கிரகிக்கமுதல்,கமலின் ஆறுதலாகச் சொன்ன விடயம் சந்திரனை அதிரப் பண்ணியது.

‘இன்னும் கொஞ்ச நாளில் செல்விக்குக் குழந்தை பிறக்கப்போகிறது. அவள் குழந்தையைத் தாங்கும் அப்பாவாக குமரன் இருக்கவேண்டும் என்ற நான் விரும்புகிறேன.நான் அவருக்க டிவோர்ஸ் கொடுக்கு முடிவு கட்டி விட்டேன்.அவரைச் செல்வியைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்கப் போகிறேன்’ என்றாள் அவள் ஏற்கனவே செல்வியிடமும் குமரனுடனும் பேசிவிட்டுத்தான் தமயனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது.

சந்திரனுக்குக் கோபம் வந்து விட்டது. ‘உனக்கென்ன பைத்தியமா. குமரனுக்கு முப்பது வயதாகிறது. அவளுக்கு அடுத்தமாதம்தான் பதினெட்டு வயதாகப் போகிறது,தனியாக நீ என்னவென்று வாழ்வாய்?’

கமலினி பொறுமையாகத் தமயனை ஏறிட்டுப் பார்த்தாள். காதலுக்கு வயது பெரிதில்லை என்ற சொன்னால் சந்திரன் பல கேள்விகள் கேட்பான் என்ற தெரிந்தும், அவள் சொன்னாள்,’ அண்ணா, எங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பதினொரு வயது வித்தியாசம். அவர்கள் எவ்வளவு அன்புடன் இணைந்து வாழ்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். வயது பெரிய இடைவெளியிருந்ததால் நாங்கள் ஏதும் குறையுள்ள பிள்ளைகளாகப் பிறக்கவில்லையே’

என்ன கொடுமை இது? உனக்குக் குழந்தை வராவிட்டால் ஏன் குமரன் யாரோ ஒருத்தனின் பிள்ளைக்குத் தகப்பனாக..’ அவன் முடிக்கு முதல் அவள் இடை மறித்தாள்.

செல்வியின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தகப்பன் குமரன்; என்ற உண்மையை அவள் யாருக்கும் சொல்லத் தயாரில்லை.

‘அண்ணா நாங்கள் வந்து இறங்கியதும் நீங்கள்தான் அவள் இளம் குழந்தை, கட்டாயம் திருமணம் செயது கொள்ள வேண்டும் என்றீர்கள் முன் பின் தெரியாதவன் தலையில் கட்டவா யோசித்திர்கள்’? அவளது கேள்வி அவனைத் திக்க முக்காடப் பண்ணியது.

‘ஆனால் அவர்கள் உனது திட்டத்திற்குச் சம்மதிக்க வேண்டுமே’ அவன் முணுமுணுத்தான்.

அவனைச் சமாளித்து. செல்வியின் குழந்தை புpறக்கமுதல் தமயன் சந்திரனும் தமக்கை கமலினியின் முன்னால்,குமரன் நிறை மாதக் கர்ப்பவதியான செல்வியின் கழுத்தில் தாலி கட்டினான். அதன்பின் சில வருடங்களில்;,குமரனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும்,கமலினி அமெரிக்காவில் ஒரு வேலையெடுத்துக் கொண்டு லண்டனை விட்டு நகர்ந்து விட்டாள்.

இப்போது,கெட்டிமேளம் கொட்ட கீதாஞ்சலியின் கழுத்தில்அவள் அன்புக்குரிய காதலன் டேவிட் ஹான்ஸன் தாலி கட்டுகிறான். பல வருடங்களுக்கு முன் ஒருநாள்; தனது தங்கை கர்ப்மாகிவிட்டாள் என்று கமலினிக்குச் சொல்லியதும் அன்று கமலினி செல்விக்குச் சொல்ல நினைத்தவையும் இப்போது கமலினிக்கு ஞாபகம் வருகிறது.

‘என் அன்புச்சகோதரியே நீ எனக்குத் துரோகம் செய்தாய் என்று நான் உன்னைக் கேவலமாகப் பேச முடியவில்லை.. எனது தங்கையை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டாயே என்று என ;கணவனிடம் குமுற முடியவில்லை. எனது ஆத்திரத்தின் விளைவு ஐந்து உயிர்களின் விலை என்பதை என்னால் அனுமதிக்க முடியவில்லை.

எங்கள் தகப்பன் நல்லவர் ஆனால் பழமைவாதி, அம்மா சித்தம் குலைந்தவள்.குமரன் குற்று உணர்வால் துடித்தக்கொண்டிருந்தவன். நீ, வயிற்றில் குழந்தையுடன் என்ன செய்வது என்ற கலக்கத்தில் இருந்தவள். நான் நாங்கள் அத்தனை பேரின் மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படவேண்டியிருந்ததை நீ உணரமாட்டாய்.

ஒவ்வொரு நிமிடமும் யாNhர ஒருதாயின்வயிற்றிலிருந்;து ஒரு உயிரை இந்த உலகுக்குக் கவனமாகக் கொண்டுவர என்னால் முடிந்தவரை உழைப்பவள்.அப்படியான நான் எங்கள் வீட்டில் அத்தனை உயிர்களையம் காப்பாற்றும் நிலையில் தள்ளப் பட்டிருந்தேன்.விதி எங்களுடன் விளையாடிவிட்டது. நீ மட்டுமல்ல, குமரனும் தனக்குள் குமைவது எனக்குத் தெரிகிறது. நீங்கள் இருவரும் என்னுடைய அன்பில் திளைத்தவர்கள். இன்றும் உனது கண்கள் வழக்கம்போல் என்னிடம் மன்னிப்புக் கேடகின்றன.எனக்கு, உன்னிடமோ எனது கணவரிடமோ எந்த வன்மமும் கிடையாது. எனது விதி அவ்வளவுதான். அன்புச் சகோதரியோ எங்கள் அருமை மகள் கீதாஞ்சலியின் இனிய எதிர்காலத்திற்குப் பிரார்த்திப்போம்’ கமலினி தன் தங்கைக்கு செல்விக்குத் தனது புன்சிரிப்பால் இத்தனையையும் உணர்த்துவதாக நினைக்கிறாள்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *