கன்னித்தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 8,035 
 

முதலமைச்சரின் “விருது வழங்கும் விழா” வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணைப் பிளக்க, சக்கர நாற்காலி உருளும் சத்தம் மென்மையாக… முதலமைச்சரை வணங்கி பரிசை பெற்றுக் கொள்கிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்!

இப்படி ஒரு மகளைப் பெற்றதற்கு இவளுடைய அம்மா என்ன தவம் செய்தாரோ…? ஒவ்வொரு பெண்ணும் கவிதாவைப் பார்த்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! “சாதனைப் பெண்மணி” இவர் சாகித்யம் பெற்றவர்! என்று பாராட்டினார்.

பக்கத்திலிருந்த தனது தாயைப் பார்த்த கவிதா அதிர்ந்தாள். “என்ன அம்மா இது! ஏன் அழுகிறாய்?” என்றார்.

“ஒன்றும் இல்லையம்மா. முதல்வர் சொன்னதைக் கேட்டதும் தாங்க முடியாமல் அழுதுவிட்டேன்” என்றார்.

விழா முடிந்து வீட்டிற்கு வந்தாயிற்று. இரவு உணவு முடிந்து அனைவரும் படுத்ததும் கவிதாவின் நினைவுகள் விழித்துக் கொண்டன.

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். இரண்டு அக்கா. இரண்டு தம்பிகள், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்ற பெரிய குடும்பத்தில் அழகான அம்சமான குழந்தையாகவும், செல்லக் குழந்தையாகவும் கவிதா வளர்ந்தாள்.

பதினைந்து வயது வரை சராசரியாகச் சென்று கொண்டிருந்த அவளது வாழ்வில் தந்தையின் மறைவு திடீரென்று ஒரு சோக கீதத்தை உருவாக்கியது. தந்தையிடம் மிகவும் பாசம் இருந்ததால் அவரது பிரிவு அவளை மிகவும் பாதித்தது. மன பாதிப்பு உடலில் நோயை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஜுரம்.

15 நாட்களாகியும் ஜுரம் குறையவில்லை. அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளால் நடக்க முடியாமல் ஆனது. கைகளை அசைக்க முடியவில்லை. சிறிது நாட்களில் இடுப்பிற்கு கீழ் உணர்ச்சியற்றுப் போனது. மருத்துவர்கள் இந்த வியாதியின் பெயரை ஆங்கிலத்தில் அழகாகச் சொன்னார்கள். கடைசிவரை இப்படித்தான் இருக்கும். குணப்படுத்த முடியாது என்றார்கள். குடும்பமே நொறுங்கிப் போய்விட்டது. பல மருத்துமனைகள், பல மருத்துவர்கள் அனைவரும் இதையே மாற்றி மாற்றி உறுதிப்படுத்தினார்கள்.

மான்போல் துள்ளி விளையாடிய கவிதா படுக்கையிலேயே எல்லா நேரமும் கிடந்தாள். பார்த்துப் பார்த்து அவளுக்கு எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் “நம் குழந்தை இப்படியாகிவிட்டதே” என அவள் தாய் உருகினாள்… கூடவே இருந்து அவளது தேவைகளைச் செய்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல ஆர்வம் குறைந்தது. கவிதாவிற்கு பசித்தால்கூட அம்மாவைக் கேட்க தடுமாறும் அளவிற்கு நிலைமை மாறியது. அதிகப் பசியால் தன்னை மறந்து கொடுக்கும் குரலுக்குக் கூட பதிலில்லாது போயிற்று.

பாட்டியும், தாத்தாவும்தான் அவளிடம் பரிவுடன் இருந்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கே சாப்பாடு அரை வயிற்றுக்குதான் கிடைத்தது. அதில் கொஞ்சம் கவிதாவிற்கு ஊட்டி விடுவர். அதையும் அம்மா பார்த்துவிட்டால் அவ்வளவுதான்.

“இது உயிரோட இருந்து என்ன ஆகப்போகிறது? “ஏம்மா இப்படிச் சொல்ற? நம்ம குழந்தை தானே? நடக்க முடியாதவள்! நம்மை விட்டு எங்கு போவாள்…? என்றுக் கேட்க…

அவ்வளவுதான். அம்மா பத்ரகாளியாகிவிட்டாள்.

“இத்தனை பெரிய குடும்பத்தை என் தலையில் கட்டிவிட்டு அவர் நிம்மதியாகப் போய்விட்டார்.! உங்களுக்குப் போடறதே தெண்டச்சோறு! இதில் அவளுக்கு வேறயா…? ரொம்ப ரோசமா இருந்தா தாத்தாவும், பாட்டியும், பேத்தியைத் தூக்கிக் கொண்டு எங்காவது ஒழியுங்கள்” என்று கத்தினாள்.

தாத்தா கண்ணீருடன் பேத்தியைத் தடவிக் கொடுத்தார்.

“கவிதா உனக்கு நான் இருக்கேம்மா! நீ தைரியமாக இரு. கொஞ்சம் கொஞ்சமாக கால்களை அசைத்துப் பார். உன்னால் முடியும்.!” என்று சொல்லியவாறு ஹோமியோபதி டாக்டர் கொடுத்த தைலத்தை கை, கால்களில் மென்மையாக தடவியபடி ஊக்கம் தரும் கதைகளைச் சொல்வார்.

அவரது பரிவும், ஊக்கமும் கவிதாவிற்கு ஒரு வெறியை ஏற்படுத்தின. ஆசிரமம் ஒன்றைய நாடியபோது அதனை நடத்திய அன்னை அகஸ்தா கற்றுக்கொடுத்த பயிற்சியின் விளைவாக கால்களை லேசாக அசைக்க முடிந்தது. தொடர் முயற்சியில் தவழ்ந்து செல்லவும் முடிந்தது.

பாட்டி, தாத்தா கெஞ்சி கேட்டுக்கொண்டதால் தன் இல்லத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்தார். அம்மா அதற்கும் மறுத்தார். “பார்க்கிறவர்கள் என்ன சொல்வார்கள்…? கையாலாகாதவள் என்று என்னையல்லவா ஏசுவார்கள்? இங்கேயே கிடந்து சாகட்டும்” என்று கத்தினாள்.

இப்போது அக்காள், தம்பி, பாட்டி, தாத்தா என குடும்பம் முழுவதும் கவிதாவிற்குப் பரிந்து பேசியதில் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டாள்.

கவிதாவின் விடுதலையும், முன்னேற்றமும் ஒருங்கே ஆரம்பித்தன. தாயின் அன்பு கிடைக்காத கவிதாவிற்கு ஆசிரம அன்னையின் பாசம் திக்குமுக்காட வைத்தது. “என்னை மதர் என்று கூப்பிடாதே! அம்மா என்று கூப்பிடு!” என்றவர் தாயின் பரிவுகளையும், பாசத்தையும் காட்டியதோடு நில்லாமல் படிப்பதற்கும் ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்லாமல் கவைினைப் பொருட்கள் செய்யவும் எம்ப்ராய்டரிங் செய்யவும் கற்றுக் கொடுத்தார்.

கவிதாவும், முழு முயற்சியுடனும் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடனும் அனைத்தையும் கற்றாள். கால்களை சூம்பிப்போகச் செய்த இறைவன் திறமைகளை வாரி வழங்கினான். இறைவனின் கருணை, அன்னையின் அன்பு, கவிதாவின் வெறித்தனமான உழைப்பு ஆகியவை அவரது கைவினைப் பொருட்களில் மின்னியது. பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தது.

இப்போதெல்லாம் நாட்கள் இனிமையாகத் தோன்றியது. எந்த இனிமையும் நிலைப்பதில்லையே! துன்பம் அன்னையின் திடீர் இழப்பில் வந்து நின்றது. கலங்கிப் போனாள் கவிதா. என்ன செய்வது…? புதிதாக வந்த அன்னையின் ஒத்துழைப்பு சரியாகக் கிடைக்காததால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை. தாத்தா, பாட்டி மரணம் என அடிமேல் அடி.

ஆனால் கவிதாவின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. “என்ன செய்யப்போகிறோம்?” என்ற புரியாத நிலையிலும் “எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் தீவிரமாக சிந்தித்தாள்.

அந்த நேரத்தில் இவளைப் போலவே சரிவர நடக்க முடியாத குழந்தைகள் நான்கு பேரை நிர்வாகம், “எங்களால் பார்த்துக் கொள்ள முடியாது!” என வெளியேற்றியது. அவர்கள் எங்குப் போவார்கள்? என்ற கவிதாவின் பரிவு அவளையும் வெளியேறும்படிச் செய்தது. கொஞ்சமும் அவள் யோசிக்கவில்லை.

அவளது கைவினைப் பொருட்களை விற்று அதனை அவள் பெயரில் சேமிப்புத் தொகையாகப் போடச் செய்த அன்னையை மனதிற்குள் வணங்கினாள். அந்தத் தொகையை எடுத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்தாள். அந்த நான்கு குழந்தைகளுடன் அங்கு சென்றாள். அந்தப் பிள்ளைகளுக்கு தன் திறனைக் கற்றுக் கொடுத்தாள்.

கேள்விப்பட்ட மக்களின் ஆதரவுக் கரம் மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட நிலையிலுள்ள குழந்தைகளின் கரமும் இவளை நோக்கி நீண்டன. ஏங்கி வந்த குழந்தைகளைத் தாயன்போடு அணைத்துக் கொண்டாள். இந்த தளிர்க்கரங்கள் உருவாக்கும் எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகள், கூடைகள், பூக்கள் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டன. சர்வதேச சந்தை இவள் பக்கம் திரும்பியது. வெளிநாடுகளில் கவிதாவின் கை வண்ணத்தில் விளைந்த எந்தப் பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கத் தயாராக இருந்தனர்.

தன்னிடம் அடைக்கலமாக வந்த குழந்தைகள் படிப்பதற்கு ஒரு ஆட்டோ வாங்கப் போட்ட மனு முதல்வரை இவரது இ்ல்லத்திற்கு அழைத்து வந்தது. இவரது சேவையில் உள்ளம் மகிழ்ந்த முதல்வர் ஆட்டோ மட்டுல்லாமல் அரசாங்க உதவிப்பணமும் கிடைக்க வழி செய்தார். “சாதனைப் பெண்மணி” என வாயாரப் புகழ்ந்த முதல்வர் “கைவினை நாயகி” என்ற பட்டத்தையும் வழங்கி திக்குமுக்காடச் செய்தார்.

இவளது முன்னேற்றம் தொடங்கிய காலம் தொட்டே, “என் மகளுக்குள் இவ்வளவு திறமையா!” என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக அவளுடைய தாயின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது. “இவள் செத்து விடமாட்டாளா?” என ஏங்கியவள் இப்போது “என்னைப் பெற்றவளே!” என்று பெருமிதம் கொள்கிறாள். அக்கா, தம்பிகளிடம் பேசி கவிதாவிற்காக ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்தாள். உன்னை புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடும்மா! என கண்ணீர்விட்டாள்.

“எனது தாயின் சுடு சொற்கள் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தின. அவர் மட்டும் என்னை மிகவும் நன்றாகப் கவனித்திருந்தால் இன்றும் அதே பாயில் அசையாமல் படுத்திருந்திருப்பேன்! என்னால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது. எனக்கு 40 குழந்தைகள் கிடைத்திருக்க மாட்டார்கள்” திருமணம் என்ற உறவில்லாமலேயே நான் தாயாகிவிட்டேன். அதுவும் ஒன்றல்ல, இண்டல்ல, நாற்பது குழந்தைகள் இந்த பக்கியம் யாருக்கு கிடைக்கும்? என்று மகிழ்ச்சியாய் கண் உறங்கினாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *