கதைப் புத்தகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 6,538 
 
 

(இதற்கு முந்தைய ‘பட்டுச்சேலை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

ராஜலக்ஷ்மிக்கு ஏற்பட்டுவிட்ட மிகப்பெரிய காயம், அவளுடைய கணவன் என்ற மனிதனுக்கு அவளின் இளமை பெரிய பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

அவளுக்கு அவரின் முதுமை பிரச்னையாக இல்லை. ஆனால் அவரின் முதுமைக்கு, அவளின் இளமை பிரச்சினையாகி விடும்போது, அவளுக்கும் அவருடைய முதுமை பிரச்சனையாகி விடுகிறது.

இவருக்கு இளமையான பெண் மனைவியாக வரவேண்டும், ஆனால் அவளுடையை இளமை பிறருடைய கண்களுக்கும் தெரியக்கூடாது! பெருமாளே! ராஜலக்ஷ்மி பொருமினாள். கடந்த கால வறுமை போட்டு வைத்திருந்த எத்தனையோ ‘பர்தா’க்களின் போதுகூட அவள் கண் கலங்கியதில்லை. ஆனால் இப்போது பணக்கார முதுமை போடப் பார்க்கிற ‘பர்தா’க்களால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.

பத்து வயது கூடுதலாகத் தெரிகிறாள் என்பதற்காக ராஜலக்ஷ்மியை பட்டுச் சேலையிலும் வாய் நிறைய வெற்றிலையிலும் ஊர் ஊராக சபரிநாதனால் அழைத்துச் சென்றுவிடவும் முடியவில்லை. அவளின் உடம்புக்கு அவரால் பட்டுச்சேலை கட்ட முடிந்தது; அவரின் மனசை எந்தப் பட்டுச் சேலையால் கட்ட? அவரின் அழுக்கு மனம் எந்த ஆடையாலும் மறைக்க முடியாத அம்மணமாகவே காட்சி தந்தது.

பட்டுச் சேலையிலாவது சபரிநாதன் தன்னை வெளியூர்களுக்கு அழைத்துப் போவார் என்று ஆரம்பத்தில் அவளுக்கு சின்னதாக நம்பிக்கை இருந்தது; ஆனால் பாவம், ஸ்ரீவில்லிபுத்தூர் போய் ஆண்டாள் கோயில் பார்த்துவிட்டு வருவோம் என்று அவரிடம் கேட்டுப் பார்த்தாள். முழங்கால் வலியென்று ஒரு பொய்யை சொல்லி சபரிநாதன் தப்பித்துக்கொண்டார். பிறிதொரு சமயம் மதுரை அழகர்கோயிலுக்கு அழைத்தாள். வயிறே சரியில்லை என்று புளுகி சாப்பாட்டைக்கூட சரியாகச் சாப்பிடாமல் நடித்துக் காட்டினார்.

அவருக்கு ரத்தக் கொதிப்பு இருப்பது அவளுக்குத் தெரியாது. அதற்கான மாத்திரைகளை அவர் ரகசியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வயசாகிவிட்டதால் ஏற்படும் பிரச்னை எதுவும் ராஜலக்ஷ்மிக்கு தெரிந்து விடக்கூடாது என்பது சபரிநாதனின் முதல் விருப்பம். அனால் மூட்டு வலியென்று நினைத்த போதெல்லாம் புளுகிக் கொண்டிருக்கிறாரே – அதெல்லாம் வயசானவர்களுக்குத்தான் வரும் என்று தெரியவில்லை அவருக்கு… சரியான திருவாளத்தான்.

அவருடைய முதுமையின் இந்த முரண்பாடுகளையே சகித்துக்கொள்ள முடியாத ராஜலக்ஷ்மியின் மிருதுவான மனசால், பாலுறவு விஷயத்தில் அவரின் தேவையற்ற மூர்க்கத்தனமான முரண்பாடுகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? தேவையற்ற மூர்க்கத்தனத்தை சபரிநாதன் காட்டிக் கொள்வதின் நிஜமான காரணம் ராஜலக்ஷ்மிக்குத் தெரியாது. ஆனால் அது சபரிநாதனுக்குத் தெரியும்.

அவருக்குள்தான் வேதாளம் போல எந்த நேரமும் அந்தக் காரணம் தொங்கிக் கொண்டிருக்கிறதே!? ஆம், அவரால் அந்த வேதாளத்தை விரட்டவே முடியவில்லை – “சின்ன வயசுக்காரியை கல்யாணம் செய்துக்கிறானே, பெண்டாட்டியை அந்த விசயத்ல சமாளிச்சிப்பிடுவானாமா?” என்று என்றைக்கோ ஒரு வம்பு மடத்தில் உட்கார்ந்து முத்தையா வாய்ச் சவடால் அடித்தாரே – அந்தச் சவடால்தான் சபரிநாதனின் மனசில் தொங்கும் வேதாளம்!

கல்யாணமானதும் சபரிநாதன் முதல் தடவையாக பாலுறவிற்காக ராஜலக்ஷ்மியை நெருங்கியபோது அவருடைய மனசிற்குள் இந்த வேதாளம்தான் பூதாகரமாக பூதக்கண்ணாடியின் கீழ் தெரிகிற வஸ்துவாகத் தெரிந்தது! சமாளிக்க முடியாதோ என்ற சந்தேகத்தையும் கொடுத்தது வேதாளம்! சமாளிக்க முடியாமல் போனால் என்ன செய்வதென்ற பயத்தையும் வேதாளம் மனசுக்குள் ஏற்படுத்தியது!

எப்படியும் சமாளித்து விடவேண்டும் என்கிற ஆக்ரோஷமும் கூடவே தோன்றியது. அந்த ஆக்ரோஷம் அவசரத்தையும் கூடவே அழைத்து வந்தது. அவருடைய ஆக்ரோஷமும் அவசரமும் பாலுறவு என்பதையே வலியும் இம்சையும்தான் என்று நினைக்கத் தோன்றி ராஜலக்ஷ்மியை மிரள வைத்துவிட்டது. ஆனால் அவளுடைய வலியையும் பயத்தையும் சபரிநாதன் அவருடைய வெற்றியாகப் பாவித்தார்! அந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள மேலும் ஆக்ரோஷமும் அவசரமும் காட்டினார்.

பல இரவுகள் தொடர்ந்த இந்த கசப்பான அனுபவத்தில், ராஜலக்ஷ்மிக்கு ஆக்ரோஷத்தின் ரகசியம் புலப்பட்டு விட்டது. தாங்க முடியாத இம்சையில் ஒருநாள் அவரிடம் மெல்லிய குரலில், “சுலபமா முடியாம இருக்கிற விஷயத்துக்குப் போய் எதுக்கு இத்தனை கோபமும் பதட்டமும் காட்டணும்?” என்று கேட்டாள்.

ராஜலக்ஷ்மியின் இந்தக் கேள்வியில் பொத்தென்று விழுந்துவிட்டார் சபரிநாதன். அவளிடம் அவர் வாங்கிய முதல் உதை இது! ராஜலக்ஷ்மி என்னமோ உதைக்கவில்லை. ஆனால் சபரிநாதனுக்கு உதைதான் அது! அது அவருடைய வாயை அடைத்து விட்டது. உஷாராகி விட்டார் மனிதர். நிதானமாகச் சிந்தித்து ஆக்ரோஷத்தையும் அவசரத்தையும் குழிதோண்டிப் புதைத்தார். நிதானமாகவும் மென்மையாகவும் நடந்து பார்க்கலாமே என்று நினைத்தார். வீரியம் இல்லாததால் அதுவும் அவரால் இயலவில்லை. முயங்குதலுக்கான முஸ்தீபுகள்; கற்பனையான சுற்று வேலைகள்; கலவி ரசனைகள் எதுவும் அவருடைய சராசரி புத்திக்கு எட்டவில்லை. எனவே அவருக்குள் தொங்கிய வேதாளம் அவரைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தது.

என்னதான் செய்வார் சபரிநாதன்! மரகதத்துடன் நேர்ந்த பாலுறவு அனுபவமெல்லாம் தண்ணீரோடு தண்ணீர் கலந்த இயல்பான விஷயமாக இருந்தது; ஆனால் ராஜலக்ஷ்மியுடன் ஏற்படுகிற பாலுறவு அனுபவம் தண்ணீருடன் எண்ணெய் கலந்த ஒருமிக்காத கடினமான அனுபவமாகவே இருந்தது…!

இதற்கு யாரைப் போய் நொந்து கொள்ள முடியும்? ஆனால் சபரிநாதன் முத்தையாவைப் போட்டே மனதுள் நொந்து கொண்டிருந்தார். எவரிடமாவது வெளியில் சொல்லி ஆறுதல் தேடக்கூடிய சங்கதியா இது?

ஊர் ஊராக சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வங்கள் மறுக்கப்பட்டு விட்டன; மென்மையான மிருதுவான நவீன சேலைகள் கட்ட வேண்டும் என்ற கனவுகள் புறக்கணிக்கப் பட்டன. பாலுறவை நினைத்தாலே அவளின் உணர்வுகள் அதிர வைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டே வந்த சபரிநாதன், அடுத்ததாக கை வைத்தது ராஜலக்ஷ்மியின் கதைகள் வாசிக்கிற ஆர்வத்தில்.

அவர் மூலம் அவள் வங்கி வைத்திருந்த சில கதைப் புத்தகங்களை, படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில், ஒருநாள் சபரிநாதன் ஒவ்வொன்றாக எடுத்து வாசித்துப் பார்த்தார். வாசித்துப் பார்த்ததும் அவர் முகம் அஷ்டகோணலாகியது. எல்லாக் கதைகளுமே இளைஞர்களையும், இளம் பெண்களையும் பற்றிய விஷயங்களாகவே இருந்தன. பெரும்பாலான கதைகளில் விரகதாபம் மேலோங்கியிருந்தது. அதில் ஒருகதை அவருடைய கதையைப் போலவே இருந்தது.

ஒரு சின்ன வயசுப்பெண் கொஞ்சம் வயசானவரை கல்யாணம் செய்து கொள்கிறாள். அவளுக்கு ஒரு இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது! அந்தக் கதையை சபரிநாதன் திருப்பித் திருப்பி நான்கு முறைகள் படித்துப் பார்த்தார். எல்லாமே இளமை பற்றிய சங்கதிகளாகவே இருப்பதால்தான் ராஜலக்ஷ்மி விழுந்து விழுந்து அம்மாதிரி கதைகளைப் படிப்பதாக சபரிநாதன் தீர்மானமே பண்ணிவிட்டார். அவ்வளவுதான்!

அடுத்த முறை அவர் ஜங்க்ஷன் போய் வந்தபோது, வேண்டுமென்றே புத்தகம் எதையும் வாங்காமல் வந்துவிட்டார். அவைகள் விற்றுப் போய்விட்டன என்று வாய்கூசாமல் பொய்யைச் சொன்னார். அடுத்த தடவை ‘புத்தகம் வாங்க மறந்துபோச்சு’ என்று ஏமாற்றினார். கடைசியில் ஒருநாள் சுற்றி வளைத்து நேராக விஷயத்திற்கு வந்துவிட்டார்.

கதைப் புத்தகங்கள் படிப்பதால் கால் துட்டுக்கு பிரயோஜனம் கிடையாது என்றார். ஒரு எழுத்தாளனின் பெயரைச்சொல்லி அவனுக்கு தெருவுக்குத் தெரு வைப்பாட்டி என்று சொல்லி கேவலமாக ஏசித் தள்ளினார். கதைகள் எழுதுகிறவனுக்கு முதலில் ஒழுக்கம் தேவை என்றார். ஒழுக்கம் இல்லாதவனின் எழுத்துக்களைத் தூக்கி குப்பையில் போடவேண்டும் என்று கூச்சல் போட்டார்.

இப்படியொரு புலிவேஷம் போட்டு ஆட்டம் ஆடி ராஜலக்ஷ்மியின் கதைகள் படிக்கிற ஆசைக்கு சபரிநாதன் வேட்டு வைத்துவிட்டார்! இந்த வேட்டு வெடிக்கிற சாக்கில, மரகதம் இந்த மாதிரியான கதைப் புத்தகங்கள் எதையும் தொடக்கூட மாட்டாள் என்கிற வறட்டு வெட்டிப் பீற்றல் வேறு…

அதன்பிறகு, வேறொரு ஆசையை நேரம் காலம் பார்த்து ராஜலக்ஷ்மி வெளியிட்டாள். வசதி இல்லாததால் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்ட ராஜலக்ஷ்மி பிரைவேட்டாக படித்து ப்ளஸ் டூ பரிட்சை எழுதப் போவதாகச் சொன்னாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *