கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 11,274 
 
 

மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால் பெரும் சிரமத்திற்க்கு மத்தியில் கட்டிக் கொடுத்த வீட்டிலிருந்து அரைமைல் தூரத்தில் தான் அவன் வேலை செய்யும் நீதிமன்றம் இருந்தது தினமும் சைக்கிளில் தான் போய் வருவான் சிங்களம் படித்திருந்ததால் தான் அவனுக்கு இந்த நீதித்துறை வேலை அதிலே நீதி தெரிந்த ஒரு கெளரபுருஷனாக எடுபட்டு வேலை செய்தாலும் இல்லற குடும்ப உறவுகளில் எடுபடாமல் திரிந்து போன ஒரு நிழல் மனிதன் தான் அவன் மாலதி பெயருக்குத் தான் அவன் மனைவி அவளை மனசளவில் நெருங்கி வர முடியாமல் போன அவளோடு ஒட்ட மறுக்கிற காழ்ப்புணர்ச்சி கொண்டு எதிர்மறையாக அவன் செயல்படும் நடத்தைக் கோளாறுகள் இரத்த உரித்தான அவனின் சொந்த உறவு மனிதர்களைப் பொறுத்த வரை தலை தூக்காமல் அவர்களுக்கு அவன் நல்லவனாக விளங்குவது என்ன நியாமென்று மாலதிக்குப் பிடிபடாமல் அப்படியான ஒரு குடும்ப சாக்கடையில் சிக்கிச் சோரம் போன மனோ நிலையில் தான் குடும்பதைக் கட்டிக் காக்க வேண்டிய பெரிய அளவிலான தார்மீகப் பொறுப்பை அவள் சுமக்க நேர்ந்தது

அவன் எடுக்கிற சம்பளமும் சரியாக அவள் கைக்கு வருவதில்லை அவன் எவ்வளவு எடுக்கிறானென்பது கூட அவளுக்குத் தெரியாது மனம் திறந்து அதைப் பற்றி அவளிடம் வெளிப்படையாகப் பேசுமளவுக்கு உண்மை பேசமுடியாமல் எதிர்மறைக் குணங்களுடன் அவன் அவள் மீது கொண்ட உறவு கறை குடித்துக் கிடக்கும் நிலையில் அவனால் வருகின்ற அத்தகைய கொடிய சவால்களுக்கு முகம் கொடுத்து மனம் வருந்திச் சிலுவை சுமக்க நேர்ந்தாலும் தடம் புரண்டு போகாத கர்மயோக வாழ்க்கையைப் பொறுத்த வரை அவள் ஓர் ஒளிக் கிரீடம் தரித்த தேவதை தான் என்பது அவன் கண்களுக்குப் பிடிபடாத மறை பொருள் காவியமாக இருள் அப்பிக் கிடப்பதை அறியாமலே தான் அவனின் இவ்வாறான நடத்தைக் கோளாறுகள்

அதிலிருந்து மீண்டு வரவே முடியாத சோகச் சிறை தான் இப்போது அவளின் வாழ்க்கை என்ற இந்த எரிகளம் கானலாய் எரிக்கும் அதன் தீக்குளிக்கும் சுவாலைகள் நடுவே தான் மனசளவில் தினமும் எரிந்து கருகிப் போய் வாழ நேர்ந்தாலும் , தான் பெற்றுப் போட்ட பிள்ளைகளின் பொருட்டு மீண்டும் புதிதாய் பிறந்த ஒரு கர்மயோகியாய் அகத்தில் விழித்து அவள் சவால்களை எதிர் கொண்டு நிமிர்ந்து நின்று காரிய சாதனை புரியும் போதெல்லாம் வாழ்க்கையில் இடறுகின்ற சகதி குடித்து அவளை மனம் வருந்த வைக்கிற சங்கதிகளெல்லாம் வெறும் கனவு போல அவளுக்கு மறந்து போகும். அவை கனவாக நிழல் தட்டித் தோன்றினாலும் அவற்றினூடாக வேதசாரமான வாழ்வின் கறை படியாத உண்மைகளைக் கண்டறிந்து விட்ட ஆன்மீக லயிப்போடு தான் எப்போதும் அவளின் தளர்ந்து போகாத இருப்பு நிலை அதற்கே குறி வைத்துத் தாக்குகிற மாதிரித் தான் எப்போதும் அவனின் துருவமாகப் போய் விட்ட எதிர்மாறான சிந்தனை போக்கு

அவனின் இந்தச் சிந்தனைத் தடங்களின் வழியே தான் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் தளைகள்,தனது சுயமான ஆளுகையின் நிஜத் தோற்றங்களல்ல என்பதைக் கண் கூடாகவே கண்டு விட்ட மனத் தெளிவை என்றுமே அவள் மறந்து போனதில்லை இவையெல்லாம் தான் கொண்டு வந்த பாவக் கணக்கின் உருப்படாத சங்கதிகள் தானென்பதை அவள் ஒரூ வேதமாகவே கற்று வந்தாள்

அவள் என்ன தான் வேதம் படித்தாலும் நிழல் கூற்றான அனுபவ நெருப்பினுள் தான் எப்போதும் அவள். வீட்டுக் கடமைகளை ஆற்றுவதில் பின் நிற்கிற அவனோடு மோதிக் காரியம் புரிவதே பெரிய சவால் மாதிரி அவளுக்கு வீட்டில் தீப்பற்றி எரிந்தாலும் கண்டு கொள்ள மறுக்கிற வரட்டுப் பிடிவாதம் அவனிடம் .அது ஒரு குரோத வெறி மாதிரி அவனிடம் தலை தூக்கும். வீட்டிலே எப்போதும் பஞ்சப்பாடுதான். வருகிற சம்பளம் அவனுக்கு இரை போடவே பத்தாது . ஆளும் ஆஜானுபாவான் நிறைய உணவு அவன் வயிற்றுக்கே போவதால் குழந்தைகளை அரைப்பட்டினி போட்டெ உயிர் வதை செய்கிற நிலைமை அவளுக்கு

ஒரு தினம் இப்படித் தான் அவன் வேலைக்குப் போகிற போது அவள் கேட்டாள்

“கொஞ்சம் சாமான்கள் வாங்க வேணும் சமைக்கிறதுக்கு அரிசி கூட இல்லை காசு இருந்தால் தந்திட்டுப் போங்கோ’

“என்னட்டை ஏது “என்றபடி நிலத்தில் படுக்கப் போட்ட பாயைக் காலால் மடித்து விட்டபடி அவன் போய் விட்டான் அவன் எதற்காகவும் குனிந்து வளைந்து அவள் பார்த்ததேயில்லை. அதற்கு நீண்டு வளர்ந்த அவன் உடம்பு இடம் கொடாது அதுவல்லை பிரச்சனை இப்போது கைச் செலவுக்குக் காசு வேண்டும் இதற்குக் கூட முகம் கொடுக்க மறுக்கிற அவனின் ஈன புத்திக்கு முன் படி தாண்டிப் போவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு நகைகள் இருந்தாலாவது அடகு வைத்துச் சமாளிக்கலாம். அவற்றையும் அவனின் பிறந்த வீட்டு வறுமைத் தீக்குக் காவு கொடுத்தாயிற்று அவள் அவனின் வீட்டில் இருந்த போது நடந்த கசப்பான அனுபவங்கள் இவை. அதுவும் அவளின் நல் வாழ்வுக்காக அவள் அப்பா கடன் பட்டுச் செய்து கொடுத்த நகைகள் அவை. அதை அவள் தாரை வார்த்த நன்றிக் கடன் கொஞ்சம் கூட இல்லாமல் அவளைத் தோலுரித்துப் பழி வாங்கி வஞ்சம் தீர்ப்பதற்காகவே அவனுக்கு உடந்தையாக அவர்களும் தான் என்று நினைக்கும் போது பாவிகளின் நிழல் பட்டாலே கரை ஒதுங்கிப் போகும் தனக்கு இப்படியொரு தண்டனையா என்று அவள் வருந்தாத நாட்களில்லை

அவனின் உடன் பிறப்புகளுக்கு வாழ்வு கொடுக்கவே அவளுக்கு இப்படி ஒரு மூளி வேஷம் அதைக் கூடக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு அவள் மீது விழுந்த ஊன உலகின் தரம் கெட்ட பார்வை அவளுடைய கையாலகத்தனத்தின் விளைவு தான் அது என்று சமூகம் சார்ந்த மனிதர்கள் புழுதி வாரித் தூற்றிய போதெல்லாம் தன் உண்மை நிலையின் புனிதத்தன்மையை வாய் திறந்து பிரகடனப்படுத்த முடியாமல் தீமைகளுக்கு எதிராக அவள் பூண்ட மெளன கவசம் இன்று வரை தொடர்வது கூட அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் ஒரு கொடிய விளைவு தான்

என்ன மனப் பிளவு நேர்ந்தாலும் ஒன்றில் மட்டும் பெரிய யோக்கியவான் மாதிரி அவன் நடந்து கொள்வதைச் சாட்சி கொண்டு நிரூபிப்பது போல் அன்று வேலைக்கு அங்கிருந்து கிளம்பும் போது வாசலில் தரித்து நின்று அவன் சொன்னது கேட்டது

“நான் போட்டு வாறன்”

அவள் இருக்கிற இருப்பில் இந்த உறவுப் பாசாங்குத் தனம் ஒட்டாத ஒரு நிழல் போல் அவளைக் கருவறுக்கவே இதுவும் என்று பட்டது அவளுக்குத் தெரியும் அந்த உண்மையெல்லாம் அதைப் புறம் தள்ளி மறந்து விட்டு அவன் போன பின் படி தாண்டி வந்து ஒரு தெருக் கதாநாயகியாய் அவள் வேஷம் தரித்து ஆடத் தொடங்கிய போது தான் தெரிந்தது கேவலம் ஒரு பத்து ரூபாய் அதை யாசகம் கேட்டுப் பெறுவதே தீக்குளித்துச் சாகிற மாதிரித் தான்

வெறும் மாயத் தோற்றமான அப்படி ஒரு உலகம். அன்புக்காக அலைகிற அவள் முன் எல்லாமே மாய நிழல் தோற்றம் தான். காசின் அடிப்படையில் அன்பைத் தேடுவது பெரிய முட்டாள்தனமாய் பட்டது காசு என்று வரும் போது அன்பு கூட வரண்டு தான் போகும் தான் அப்படி இல்லாமற் போனது பெரும் மனவருத்ததைத் தந்தது அன்பு ஒன்றுக்காகத் தான் அவள் எல்லாவற்றையும் இழந்தாள் நகைகளைக் கொடுத்ததும் அதற்காகவே இருந்தாலும் இன்று தான் பேணிய அன்பு பொருளிழந்த ஒன்றாய் தன் கண்ணையே குத்தி விட்டமாதிரி அவள் மனதில் உதிரம் கொட்டத் தெருக் கதா நாயகியாய் வலம் வருவதைப் பார்த்தால் பார்த்த கண்களும் எரிந்து தான் போகும்

பாஸ்கரன் மனம் வைத்திருந்தால் இந்தக் கொடிய நிலைமையைத் தடுத்திருக்கலாம். தன் தம்பிகளிடம் கேட்டே அவளைக் காப்பாற்றியிருக்கலாம். அவளைப் பூண்டோடு அழித்து விடவே அவன் புத்தியெல்லாம். எப்படிச் செய்ய மனம் வரும்? அந்தத் தம்பிகளும் அவன் வழியில் தான். அண்ணியின் நகை தின்று வயிறு வளர்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டதென்றே சொல்லி என்ன தான் வெளிச்சம் வந்தாலும் மனம் இருண்டு போய்க் கிடக்கும் அவர்களோடு மோதித் தன் அறிவுக்குப் பங்கம் நேர்வதில் அவளுக்கு உடன்பாடில்லை அப்படி மோதப் போனால் வீண் அழுகை தான் மிஞ்சும்

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு வராமலா போகும் ? வந்தது ஒரு நாள் எண்பத்தெட்டாம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தில் நாடு அழிந்ததோ இல்லையோ அவர்கள் வீடு மட்டும் தீப்பற்றி எரிகிற கணக்கில் அவள் தலையில் விழுந்ததே ஒரு பெரிய இடி அவனுக்கு அப்போது அனுராதபுரத்தில் வேலை முழுச் சிங்கள நகரம் என்பதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு கொஞ்சமும் முன் யோசனையின்றி அவன் அங்கிருந்து வெறும் கையோடு வீடு வந்து சேர்ந்த போது அதற்கு அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இதிலும் அவள் தான் சுமைதாங்கி என்ற நினைவில் அவன் ஏன் கவலைப்படப் போகிறான்? அதற்கு வைத்திய சான்றிதழும் அனுப்பததால் வேலை போனதோடு சம்பளமும் வரவில்லை. அதிலும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் அவனோடு உடல் கலந்து உறவு கொள்ளும் போது இப்படி வருமென்று யார் கண்டார்கள்? அது தெரிந்திருந்தாலும் விலகிப் போகிற நிலைமையா அப்போது. கொடி கட்டிப் பறக்கிற ஆணாதிக்கத்தின் முன் அது எடுபடாத காரணத்தினால் தான் அவளுக்கு இந்தச் சத்திய சோதனை. காசு இருந்த போதே கையறு நிலை அவளை நம்பிப் பணம் கொடுக்காதவர்கள் அவனுக்கு வேலையும் போய் விட்டது என்பதை அறிய நேர்ந்தால் கதவு திறந்து உள்ளே விடாமலே அவளைத் துரத்தி விடவும் கூடும்

அதற்குப் பயந்து முக்காடு போட்டு வீட்டிலே மறைந்து வாழ்கிற நிலைமையா அவளுக்கு? பிள்ளைகள் பசிக்குப் பதில் சொல்லி ஆக வேண்டிய கடமை நிமித்தம் அவள் காசுக்கு அலைந்து தெருச் சுற்றியே களைத்துப் போனாள் காது கழுத்தில் ஒன்றுமில்லாமல் நிர்வாண தீட்சையே அடைந்த கணக்கில் அவள் நிலைமை. அதைப் பெற்றிருந்தால் கூட அவளுக்கு இந்தப் பாசச் சிறையிலிருந்து விடுதலையே கிடைத்திருக்கும் அதுவும் நடக்காமல் பற்றியெரிகிற மனசோடு தான் அவளுக்கு இந்த வாழ்க்கை நிழல் அது நிழல் கூட இல்லை அவளை இரத்தம் கொட்ட வைக்கிற முட் படுக்கை தான் தினமும் அதில் செத்தே உயிர் பிழைத்து வந்தாலும் வீடு ஆட்டம் காணவே செய்தது அது நிற்க வேண்டுமானால் கையில் பணம் வேண்டும் ஒரு நாளா இரண்டு நாளா அவளை நம்பி முழு நாளுக்கும் பிறர் கையிலிருந்து பண மழை கொட்ட

அப்படியொரு தார்மீக சிந்தனையாளர்கள் வலை போட்டுத் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். இது அவள் தன் வாழ்க்கையில் கண்ட மிகப் பெரிய அனுபவ ஞானம். காசு இருந்தால் தான் வாழ்க்கை இதையும் மீறி உறவு கை கொடுக்கும் என்பது கூட அனுபவத்துக்கு ஒத்து வராத கசப்பான உண்மை .

ஒரு நாள் காசுக்காகத் தெருச் சுற்றி அலைந்த களைப்போடு வெறும் கையாக நிழல் மிதித்து வந்த சோகம் கனக்க முன்பே ஆக்கிய சோற்றுக்கு கீரைக் கறி மட்டும் சமைத்து அவள் பிள்ளைகளுக்குப் பரிமாறிய சமயம் அதை உண்ண மனமின்றி ஆவேசமாக எழுந்து நின்று அவளின் இரண்டாவது மகன் சூர்யா கேட்டான் அவன் அப்பா மாதிரி இடறுகின்ற புத்தி மயக்கம் இல்லாதவன் பதினேழு வயதுதானாகிறது படிக்கிற வயது தான் ஒரு கணக்காளனாய் வருவதற்குரிய தீட்சண்யமான புத்திக் கூர்மை கொண்டவன் அவன் அவர்கள் வழிவிட்டால் அவனுக்கு அந்தக் கதவு திறக்கும் புத்தி கெட்ட தந்தையால் அதுவும் போச்சு

“அம்மா இதைத் தின்று ஜீரணிக்க முடியாத கஷ்டம் எனக்கு .இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் அப்பாவைத் தூக்கி ஒரு மூலையிலை போட்டுட்டு நான் எங்களுக்குச் சாப்பாடல்ல முக்கியம் உங்கடை கண்ணீரைத் துடைச்சுக் காட்டுறன் அதுக்கு இப்ப நான் வெளிநாடு போக வேணும் நான் படிச்சுக் கிழிச்சதெல்லாம் போதும்”

“என்ன சொல்கிறான் இவன்/ படிக்காமல் விட்டால் என்ன கதி?அவளுக்கு ஏனோ திடீரென்று ரகுவின் ஞாபகம் வந்தது பாஸ்கரனின் சொந்தத் தம்பி இந்த ரகு அவனும் தான் என்னை விழுங்கிப் படித்தான் அவன் படித்து வந்த அந்தச் சரித்திரம் இப்போது காற்றில் பறக்கிறதே அவன் பெரிய டாக்டர் என்ற பெயர் தான் இப்போது லண்டன்வாசியாக அவன் சுகபோகம் அனுபவித்து வந்தாலும் அவனோடு தொடர்பு விட்டுப் போய் ஒரு யுகமாகிறது அவன் அவர்களைக் கண்டு கொள்வதில்லை ஆகவே படிப்பு முக்கியமில்லை நல்ல மனமிருந்தால் போதும் அவன் மனிதனென்று நம்புவதற்கு அது தான் அடையாளம். இதுவும் நல்ல யோசனைதான் என்று மனதில் படவே கொஞ்சம் தளர்ச்சியோடு கேட்டாள்

“தம்பி உன்னை வெளிநாடு அனுப்பி வைச்சால் எங்கடை கஷ்டமெலாம் தீர்ந்திடும் தான். உனக்குத் தங்கைச்சிகளும் இருக்கு உன்னை அனுப்பினால் இதுகளைக் கரையேற்றலாம். உன்னை அனுப்பக் காசு வேணுமே அவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் எங்கை போறது?

“ஏனம்மா ரகுச் சித்தப்பாவைக் கேட்டுப் பாப்பமே?”

“ நல்லாய்க் கேட்டாய் போ. கொஞ்சம் கூட நன்றி இல்லை அவனுக்கு இப்ப தராதவன் இதுக்குத் தருவனென்று நான் நம்பேலை அதை விடுவம் எதுக்கும் முதலிலை ஓர் ஏஜென்ஸிக்காரனோடு கதைச்சுப் பாப்பம் “

அதற்குப் பிறகு அவன் பள்ளிக்கூடம் போவதும் நின்று விட்டது அவனை வெளிநாடு அனுப்ப வழி தெரியாமல் அவள் மனங்கலங்கி நின்றதே பெரிய சத்தியசோதனை மாதிரி ஊருக்குள்ளேயே ஒரு ஏஜென்ஸிக்காரனை அவள் ஒரு தினம் சந்திக்க நேர்ந்தது அவளுக்கு உறவுக்காரியான ராணியின் கணவர் கனகலிங்கத்தோடு அவளுக்கு முன்பின் பழக்கமில்லை அவரின் முகம் பார்த்து அவள் ஒரு போதும் பேசியறியாள் சூர்யா விஷயமாக வெட்கத்தை விட்டு அவரோடு பேசிய போது ஒரு புதிய நம்பிகை பிறந்தது கொழும்பிலே பிஸினஸ் செய்வதில் பெரும் புள்ளி அவர் அதற்கும் மேலாகப் பணமழை கொட்ட இந்த ஏஜென்ஸி வேலையும் அவருக்குத் துணை போகிறது அவர் சொன்னார்

“ வாற மாதம் கொஞ்சப் பேரை லண்டனுக்கு அனுப்பப் போறன் உங்கடை மகனையும் கூடப் போடலாம் பாஸ்போட் காசு எல்லாம் தயாரா?

‘ஐயா! இனித் தான் எல்லா ஆயதமும் செய்ய வேணும் பாஸ்போட் எடுக்க ஒரு பெடியனைப் பிடிச்சிருக்கிறம் காசு தான் இப்ப பிரச்சனை அதுக்கு எவ்வளவு வேணும்?

“ஒரு தொன்னூறாயிரம் கட்டினால் போதும்”

அதைக் கேட்டு அவளுக்குப் பேச வரவில்லை ஒரு பத்து இருபதுக்கே ஊரெல்லாம் அலைஞ்சு திரிகிற நான் இதுக்கு எங்கே போவேன்? ஒரு வழி புலப்படவே மனம் ஆறி அவள் சொல்வது கேட்டது

“கெதியிலை கொண்டு வந்து கட்டுறன் ஐயா”

இதை வீட்டிற்கு வந்து சூரியாவிடம் சொன்ன போது அவன் நம்பிக்கை இழந்து அவளைக் கேட்டான்

“ஆரிட்டையம்மா கேக்கப் போறியள்? இவ்வளவு பெரிய தொகையை ஆரம்மா தருவினம்”?”

“அச்சுவேலிகுப் போய்க் கேக்கலாமெண்டு இருக்கிறன்”

“அது தான் ஆரிட்டை என்று கேக்கிறன்”

“உனக்குக் காளிதாஸனைத் தெரியுமல்லே பெரியண்ணன்ரை மச்சான் மச்சாளின்ரை தம்பி. யூனியனிலை வேலை பாக்கிறவன் ஒரு முறை அவனிட்டை போய் ஒரு ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி இன்னும் கொடுக்க முடியாமல் வட்டி ஏறிக் கொண்டிருக்கு அவனிட்டை போய்க் கேக்கலாமெணு இருக்கிறன்”

“அம்மா எனக்காக எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு. இதுக்காக நீங்கள் அவ்வளவு தூரம் போவதை நினைச்சால் அப்பா மீது எனக்குக் கோபம் வருகுது அந்தளுக்கென்ன பெத்துப் போட்டு நிம்மதியாய்ப் படுத்துக் கிடக்குது “

“கவலைபடாதே சூர்யா நீ வெளிநாடு போனால் எல்லாம் சரியாய் விடும் “

“அது நடக்க வேணுமே?”

“காளிதாஸன் மனம் வைச்சால் நடக்கும் பாப்பம்”

கண்ணால் கண்டு கொண்டு பார்ப்பதற்கு இது ஒன்றும் காட்சி உலகின் திரை விலகிய உயிர் வழிபாடல்ல அப்படி உயிர் வழிபாடு காண்பதற்கே வாழ்க்கையெல்லாம் என்று நினைத்தால் வாழ்க்கையைத் தேடுகின்ற காசு வழி தானாகவே திறந்து விடாதா? இதெல்லாம் நடக்கிற காரியமா? இருந்தாலும் கேட்டுப் பார்ப்போமே என்றொரு நப்பாசை

இரண்டு பஸ் பிடித்து அவன் வீட்டிற்குப் போக வேண்டும். பிறந்த வீட்டிலே ஒரு காலத்தில் செல்லப் பிள்ளையாக இருந்தவள் அவள். அங்கு வாழ்ந்த போது எப்போதும் சுகமான கார்ப் பயணம் தான் அதற்குத் திருஷ்டி கழிக்கவென்றே அவளுக்குப் பாஸ்கரனோடு இந்தக் கல்யாண விலங்கு அந்த விலங்கின் பயனாகவே உயிர் விட்டுப் போன ஊன் வாழ்க்கையின் சரிவுகள் அவளுக்கு நடுத் தெருவுக்கு வந்து கையேந்திச் சாக வேண்டியிருக்கிறது

இந்தச் சாவைத் தடுத்த நிறுத்த ஒரே வழி சூரியாவின் அன்பு தீர்க்கமன உயிர் வழி ஒன்று தான் அம்மாவின் மீது கறைபடாமல் உயிரொயில் அவளைக் கண் குளிரத் தரிசிக்க வேண்டுமென்பதே அவன் காண விரும்பும் தெய்வீகக் காட்சி உலகம் ஆனால் உலக நடப்பில் அது வெறும் கனவு தான் என்பது பிடிபட வெகு நாள் எடுக்கவில்லை

அச்சுவேலிக்கு அவள் வந்த போது காளிதாஸ் வீட்டில் தான் இருந்தான் அவள் வந்த நேரம் கொளுத்தும் வெய்யில் அதன் சூடு தணிய வெகு நேரம் பிடித்தது அவளைக் கண்டதும் சங்கிலி போட்ட மார்பில் மின்னல் களை தெறிக்க எழுந்து வந்து வரவேற்றான்

“என்ன அன்ரி சுட்டெரிக்கும் வெய்யிலுக்கை வந்திருக்கிறியள் அப்படியென்ன அவசர வேலை?

“வெய்யிலும் மழையும் எனக்கு ஒன்று தான் வீட்டுக் கஷ்டத்தில்லை ஒரு முறை மழை வெள்ளத்திலை அள்ளுப்பட்டுச் சுன்னாகச் சந்தைக்கு நான் பாக்கு விக்கப் போன கதையைச் சொன்னால் உங்களுக்கு ஏதோ கனவில் நடந்த கதை மாதிரித் தோன்றும் இந்தச் சோகத்துக்குப் பரிகாரம் தேடித் தான் இப்ப நான் வந்தது என்று சொன்னால் இது எவ்வளவு தூரத்துக்கு எடுபடும் என்று பிடிபடாத மயக்கச்சுழலில் அகப்பட்டு மூச்சுத் திணறிக் குரல் அடைத்து அவள் சொல்வது கனவில் கேட்கிற குரலாய் பிரமை வெறித்த நிலையில் அவனின் நிழற் கோலம் கண்ணை உறுத்திற்று அந்த நிழல் மறந்து போன நினைவுச் சத்தியத்தின் உயிர்த் துடிப்புடன் அவள் சொன்னாள்“

“என்ரை இரண்டாவது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புகிற விஷயமாய்த் தான் இப்ப நான் வந்தது”

“அதுக்கு நான் என்ன செய்ய வேணும்?

“லண்டனுக்கு அனுப்பக் காசு வேணும்”

“எவ்வளவு கேக்க வாறியள்?

“ஒரு தொன்னூறாயிரம் வேணும்”

“உங்களை நம்பி நான் எப்படிக் கொடுக்கிறது? ஆரும் பொறுப்பு நிண்டால் தாறன் கூட்டி வாங்கோ”

யார் நிற்பினம் இதற்குப் பொறுப்பு? கடைசி முறையாகக் காசு கேட்டல்ல அந்தக் காசுக்குப் பொறுப்பு நிற்க ஆள் தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல், அண்ணனையே கேட்டுப் பார்க்கலாம் என்ற முடிவோடு அவள் வீடு திரும்பினாள்

அவள் வரும் போது வீடு களையிழந்து வெறிச்சோடிக் கிடந்தது பள்ளிக்கூடம் போன பிள்ளைகளில்லாததால் ஆளரவமற்ற சந்தோஷம் ஒழிந்து போன அந்தக் கொடிய தனிமைக்கு ஆளான சோகத்தின் பிரதிபலிப்பாய் சூர்யா மட்டும் அவள் வருகையை எதிர்பார்த்து வாசலில் முகம் இருண்டு போய் நிற்பது தெரிந்தது அவளைக் கண்டதும் அந்த இருளின் கனம் நீங்கிய சந்தோஷ மிதப்போடு காற்றின் ஸ்பரிச வருடலாய் மென்மையய்க் குரல் கனிந்து அவன் கேட்டான்

“அம்மா எல்லாம் சரிதானே?”

“சரி பிழை இப்ப சொல்ல ஏலாது நான் அண்ணனிட்டை போய் வந்த பிறகு தான் எல்லாம் முடிவு சொல்ல ஏலும்”

“என்ன சொல்லுறியளம்மா? அப்ப காளிதாஸ் என்ன சொன்னவன் காசு தாறானோ இல்லையோ முதலிலை அதைச் சொல்லுங்கோ”

“எங்களை நம்பி அவன் தரமாட்டானாம் அப்படித் தாறதெண்டால் பொறுப்பு நிக்க ஆள் கொண்டு வரட்டாம்”

அப்ப அதுக்கும் இனி ஆள் வேட்டை தானா? ஆரைப் பிடிக்கப் போறியள்? சொல்லுங்கோ”

“ஏன் அண்ணனில்லை அது தான் உன்ரை பெரியமாமாவைச் சொல்லுறன் அவர் நிச்சயம் இதுக்குச் சம்மதிப்பார்”

:”எனக்கென்னவோ இது சரி வருமென்று எனக்கு நம்பிக்கையில்லை “

“ஏன் அப்படிச் சொல்லுறாய்?அவர் என்ரை சொந்த அண்ணன் என்ரை கண்ணீரைத் துடைக்கிறதுக்கு இது கூடவா செய்ய மாட்டார்?”

“அம்மா அதுவும் காசு விஷயம் தலையைக் கொடுத்தால் மீள்கிற வழி பற்றித் தான் யோசிப்பினமே தவிர அண்ணனாவது தங்கையாவது எனக்கென்ன போய்க் கேட்டுப் பாருங்கோ அப்ப தான் அவர் ஆர் எண்டது தெரிய வரும்”

அவன் பேச்சைக் கேட்டு அவளுக்கு நம்பிக்கை விட்டுப் போனாலும் காலில் விழுந்தாவது கெஞ்சிப் பார்த்து விடுவோம் என்ற முடிவோடு அன்று மாலையே அண்ணனின் பதிலை எதிர்பார்க்கும் அவசரத்தோடு அவள் வீட்டிற்கு வரும் போது சாமி கும்பிட்டுச் சந்தியாவனம் முடித்து வந்த களையோடு வாசலில் அவர் எதிர்ப்பட்டார் அவர் அவளைப் போல் இல்லை நல்ல வேலை பார்த்துக் கை நிறையச் சம்பளம் எடுத்தது போதாதென்று இப்பவும் பிள்ளைகளால் வருகிற பணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் அதன் முன் அவள் வெறும் துரும்பல்ல அதை விடக் கேவலம் இந்த வேறுபாடுகள் மறந்து விட்ட நிலையில் தான் அவளைப் பற்றிய பிரக்ஞையில் அவர் கண் விழிப்பதென்பது மெய்யாகவே சாத்தியப்படும். இது நடக்காது போனால் அந்த உயிர் வசமான உடன்பிறப்பு நிலையே புனிதமிழந்த சாக்கடை வெள்ளமாக அவளைக் கறை குடிக்க வைக்கும்

அவரைக் கண்டதும் அந்தக் கறை ஞாபகம் மறந்து போன நினைப்போடு அவள் கேட்டாள்

“அண்ணை நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேணும் சூர்யா வெளிநாடு போக ஆசைப்படுறான் குகதாஸிடம் போய்க் காசு கேட்டனான் ஆரும் பொறுப்பு நிண்டால் தாறதாய்ச் சொல்லுறான் இதுக்கு உங்களைத் தான் நம்பி வந்தனான் நிப்பியளே?

அதைக் கேட்டு மூச்சடங்கிப் போன வெறுமையின் நிழல் தோற்றமாக முகம் கறுத்து அவர் மாறிப் போனதே ஒரு காலத் தீட்டு மாதிரி அவள் கண்களை எரித்தது அவளை நேர் கொண்டு பார்க்காமலே தூர வெறித்துப் பார்த்த வண்ணம் அவர் சொல்வதைக் கவனம் சிதறாமல் கிரகித்து உளவாங்கியவாறே அவள் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள். கனவில் கேட்பது போல் அவர் குரல் கேட்டது

“நான் பிச்சைக்கரான் காசுக்குப் பொறுப்பு நிக்கிறதெண்டால் பின்னர் சிக்கலிலை மாட்ட வேண்டி வரும் என்னாலை முடியாது “

காசுக்கு நாய் போல அலைந்து திரியாத நிறைவான வாழ்க்கையின் ஒளி குளிக்கும் அவரே பிச்சைக்காரன் என்றால் அப்ப நான் ஆர் என்று அவள் தனக்குள் கேட்ட கேள்வியின் கனம் அறிய முடியாமல் போன மறு துருவத்தில் அவர் கறை குடித்த நிழல் போல ஊன வாழ்க்கையின் இருள் மூடிய உயிர் இழந்த ஒரு வெறும் மனிதனாய் நின்று கொண்டிருப்பது ஒளி மங்கிய ஒரு காட்சிப் படலமாய் அவள் கண்களை மறைத்தது அதையும் மீறி அடக்க முயன்றும் அடங்காமல் பெருகி வழியும் அவள் கண்ணீர் வெள்ளத்தின் நடுவே அகப்பட்டுக் கரை மறைந்து போகும் கறை கொண்ட ஒரு சிறு துரும்பாக அவரை இனம் கண்ட பெரும் சோகத்தில் மேற் கொண்டு பேச வராமல் முற்றிலும் இருள் விழுங்கி அழிந்து போன வெறும் நடை பிணமாய் வீடு திரும்பும்போது வீடும் இருண்டு கிடக்கும் ஒரு காட்சி அவலம் அவள் கண்களின் ஒளியையே பறிப்பது போல் எதிர்ப்படும் போது தான் தெரிந்தது இது வெறும் பிரமை வெறித்த நிழல் தானென்று பகல் வெளிச்சம் கொண்ட ஒளியின் தடங்களே இருக்கும் போது இருட்டுக் குளித்த மயக்கம் தனக்கு எப்படி வந்தது என்ற அறிவு மயக்கம் தலை தூக்க படி ஏறி நெஞ்சில் கனத்துடன் அவள் உள்ளே வந்த போது சூர்யா எதிர்ப்பட்டான்

“என்னம்மா எல்லாம் சரியே? ஒரு மனிதனிடம் நம்பிக்கை வைத்து மறுபடியும் அதே கேள்வி அவனிடமிருந்து வரும் போது அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவள் குழ்ம்பினாள் நான் ஒரு மனிதனைக் காணவில்லை என் அழுகை வெள்ளம் குளித்துக் கரை ஏற முடியாமல் கறைபட்டுத் திரிந்து போன ஒரு நிழலைத் தான் கண்டேன் என்று சொன்னால் அவன் நம்ப வேண்டுமே வேறு வழியில்லை வாழ்க்கை ஞானமாக நான் கண்டறிந்த உறவு கசப்பான இந்த உண்மை அவனுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று கருதி மனம் உடைந்து போய் அவள் பதில் சொல்வது கேட்டது

“சூர்யா நீ சொன்னது சரி தான் நூற்றுக்கு நூறு உண்மை நான் கண்டு வந்தது மாமாவையல்லை என்னோடு கூடப் பிறந்த உடன்பிறப்பையுமல்ல பணம் விழுங்கியான வெறும் நிழலைத் தான் “

“அப்படியா மாமா சொன்னார்? வெறும் நிழல் என்றா சொன்னார்?

“பணத்துக்காக அவர் போட்ட நிழல் வேஷம் இது பிச்சைக்காரனாம் தான். உறவு மறந்து உயிர் வழிபாடே மறந்து அவர் இதைச் சொன்ன போது அவரிடம் உயிர் ஜடம் மரத்துப் போன கறை குடித்து நிற்கும் வெறும் நிழல் தான் என் கண்களைத் தின்றது காசுக்குப் பிறகு தான் எல்லாம் .இதில் எடுபட்டு உறவு கூடக் காற்றில் பறக்கிற நிலைமை தான் உறவு திரிந்து போனால் உயிர் எங்கை என்ற கேள்வி தான் இப்ப எனக்குள். இந்த உறவு முறையான வாழ்க்கை மயக்கமே இன்றோடு தீர்ந்த மாதிரித் தான் இனிமேல் ஆரையும் நாங்கள் நம்ப வேண்டியதில்லை கடவுளை மட்டும் நம்பினால் போதும் எப்பவோ ஒரு நாளைக்கு எங்களை மூடியிருக்கிற இருள் விலகி ஒளி வருகிற போது இந்த உறவு மாயமே ஒரு கனவென்று நாங்கள் நம்புவோம்”

அவள் சொன்னதைக் கேட்டு உண்மையான வாழ்க்கை ஞானமே கண்டு தேறிய ஒரு முழு மனிதனாய் உயிர் மறந்து போன நிழல்களே ஊடுருவி மறைக்கும் இருள் கறை தின்ற மனித முகமே ஒரு கனவு போல அவனுக்கு மறந்து போனது

என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *