கண்ணீர் மொக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 7,714 
 
 

இரண்டு நாட்களாக அண்ணன் கந்தசாமி தன்னுடன் பேசாதது பெரும் வேதனையாயிருந்தது முருகேஸ்வரிக்கு.

‘அப்படியென்ன…ஊரு உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான் செஞ்சிட்டேன்?…ஒருத்தரை மனசுக்குப் பிடிச்சிருந்திச்சு…அவரே புருஷனாக் கெடச்சா வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாயிருக்கும்னு தோணிச்சு…அதை அப்படியே எந்தவித ஒளிவு மறைவுமில்லாம அண்ணன்கிட்ட வெளிப்படையாச் சொன்னேன்…அது தப்பா?…மத்தவங்க மாதிரி ஒளிஞ்சு மறைஞ்சு காதல் பண்ணிக்கிட்டு…சினிமா…பார்க்குன்னா சுத்தினேன்?’

தனக்குத்தானே முணுமுணுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த தங்கையைத் திரும்பிப் பார்த்த கந்தசாமி அவளின் உள் மன வேதனையைப் புரிந்து கொணடவனாய் எழுந்து அவளை நெருங்கி அவள் தோளைத் தொட்டு ‘சாப்பிட்டியா முருகு?’ கேட்டான்.

அவள் இட, வலமாயத் தலையாட்ட,

‘ஏன்?’

‘நீ சாப்பிடலையல்ல?…அதான்’

‘ஓ…’என்றவன் ‘சரி வா…ரெண்டு பேருமே சேர்ந்து சாப்பிடுவோம்’

இரண்டு நாட்களாக அந்த வீட்டினுள் அமர்த்தலாய் உட்கார்ந்து கொண்டிருந்த இறுக்கம் அந்த நிமிடமே காணாமல் போய் பழைய சந்தோஷம் திரும்ப வந்து குடியேறியது.

அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் நிதானமாய்த் தலையைத் தூக்கி தணிவான குரலில் சொன்னான்.

‘முருகு…நான்தான் படிக்கற காலத்துல ஒழுங்காப் படிக்காம, இப்படி ஒரு ஆட்டோ டிரைவராகி அம்பதுக்கும் நூறுக்கும் லோ…லோ…ன்னு சவாரி அடிச்சுக்கிட்டிருக்கேன்!……உன்னைய ராணி மாதிரி வெச்சுக் காப்பாத்தணும்னு ஆசையிருக்கு…ஆனா வருமானம் அதுக்குத் தோதா இல்லையேம்மா’

‘ப்ச்…இப்ப சாப்பிடும் போது எதுக்குண்ணா இந்தப் பேச்சு,…சாப்பாட்டைப் பாத்து சாப்பிடுண்ணா…’

‘இல்ல முருகு…அதனாலதான்… உன்னைய ஒரு படிச்ச…ஆபீஸர் உத்தியோகம் பார்க்கற…கை நெறைய சம்பாதிக்கற…நல்ல மாப்பிள்ளைக்குக் கட்டிக் குடுக்கணும்னு பிரியப்படறேன்… .ஆனா…நீ…போயும்….போயும்… ஒரு ஓட்டல் சமையல்கட்டுல எடுபிடி வேலை பார்க்கற ஆளைப் பிடிச்சிருக்கு…கட்டிக்கறேன்கறியெ…எப்படிம்மா?’

அண்ணனின் அந்தக் கனிவான பேச்சையும் அதில் பொதிந்திருந்த ஆழமான…உண்மையான பாசத்தையும் புரிந்து கொண்ட முருகேஸ்வரி ‘அண்ணா…என்னோட மனசுல பட்டதை நான் மறைக்காம ஒரு உரிமையோட சொன்னேன்…அவ்வளவுதான்…அதுக்காக எந்தச் சூழ்நிலையிலும் …உன் பேச்சை மீறவோ…உன்னை வற்புறுத்தவோ மாட்டேன்’ வெகு நாசூக்காக பதிலளித்தாள் அவள்.

‘இருந்தாலும் நீ வாய் விட்டுக் கேட்டுட்டே…அதான்…தர்ம சங்கடமாயிருக்கு’

‘அய்யய்ய…இதுக்காக நீ இவ்வளவு வருத்தப் பட வேண்டியதேயில்லை….மறந்துடு…நான் கேட்டதையே சுத்தமா மறந்துடு…அதே மாதிரி நானும் மறந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு ‘விருட்’டென அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

மறுநாள் காலை பதினோரு மணியிருக்கும்.

நேற்றைய நிகழ்வுகளை அசை போட்டவாறே ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்த கந்தசாமி பின் சீட்டில் அமர்ந்து வரும் அந்த இரண்டு நபர்களின் உரையாடலில் அந்தப் பெயர் அடிக்கடி வந்து வந்து போக யோசித்தான். ‘மு…ர….ளி’…..முருகேஸ்வரி சொன்ன ஆளோட பேரும் இதுதானே?’

‘நானும் அந்த முரளிப்பயலை இழுத்துப் போட ஒரு தடவ…ரெண்டு தடவ இல்லை…பல தடவ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்…ம்ஹூம்…முடியவே மாட்டேங்குதுப்பா’ வழுக்கைத் தலை மனிதர் சொல்ல,

‘காசைக் கொஞ்சம் தாராளமா வீசிப் பார்க்க வேண்டியதுதானே?’

‘அட..நீ வேறப்பா…நானும் ஏகத்துக்கு ஆசை காட்டிப் பார்த்திட்டேன்…பயல் காசு…பணத்துக்கெல்லாம மசியற ஆளில்லை…நேத்திக்குக் கூட அந்த ‘ப்ளு ஸ்டார் ஹோட்டல்’ போய் அந்த முரளிப்பயல் கிட்டப் பேசிட்டுத்தான் வர்றேன்…பச்…பிரயோஜனமில்லே’

நிச்சயம் அவர்கள் பேச்சில இடம் பெறும் அந்த முரளி தன் தங்கையின் மனம் கவர்ந்த அதே முரளியாகத்தான் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கந்தசாமி மெல்ல விசாரித்தான்.

‘சார்…நீங்க அதிகப் பிரசங்கித்தனம்னு நெனைக்கலேன்னா நான் ஒண்ணு கேட்கலாமா?’

‘என்னப்பா?…என்ன கேட்கப் போறே நீ?’

‘நீங்க…இப்ப பேசிட்டிருந்தது….அந்த ப்ளு ஸ்டார் ஹோட்டல் கிச்சன்ல வேலை பாரக்கற முரளியைப் பற்றித்தானே?’

‘அட…உனக்கும தெரியுமா அவனை?’

‘ம்ம்ம்…தெரியம்….ஆனா…அவ்வளவா பழக்கமில்லை…ஏன் சார் உங்களுக்கு அவனோட ஏதாச்சும் பிரச்சினையா?’

‘பிரச்சினையெல்லாம் ஒண்ணுமில்லை….பயல் ரொம்ப நல்ல பயல்தான்…வேலைல அசகாய சூரன்’

‘அப்படி என்ன சார் வேலை அங்க?’

‘வேலை என்னவோ காய்கறி நறுக்கற வேலைதான்…ஆனா…அதை அவன் செய்யற விதமிருக்கே….அப்பப்பா….அற்புதம்’

கல…கல…வெனச் சிரித்த கந்தசாமி ‘காய் நறுக்கற வேலைல என்ன சார் அற்புதம் இருந்துடப் போவது?’

‘ம்…ம்…ம்…அப்படிச் சொல்லிடாதப்பா…ராத்திரி பத்து மணிக்குத்தான் அவனொட டியூட்டி ஆரம்பம்…சரியாப் பத்து மணிக்கு வருவான்…விடியறதுக்குள்ளாற நூறு கிலோ வெங்காயம்…நூறு கிலோ தக்காளி…அப்புறம்…அறுபது…எழுபது கிலோ காய்கறிகள் எல்லாத்தையும் வெகு வேகத்துல…துளிக்கூட வேஸ்ட் ஆகாம…கச்சிதமா வெட்டி விடியறதுக்கு முன்னாடி சமையல்காரங்களுக்குக் குடுத்துட்டு…அவன் பாட்டுக்குப் போயிட்டே இருப்பான்… இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா…உதவிக்குக் கூட ஆளுங்களை வெச்சுக்க மாட்டான்…ஒண்டி ஆளாவே ஜமாயச்சிடுவான்…அதிலும் அவன் காய் நறுக்கற நேர்த்தியையும…அழகையும் பார்க்கணுமே’ வழுக்கைத் தலைக்காரர் மானாவாரியாய்ப் புகழ்ந்து கொண்டே போக,

சட்டென்று இடையில் புகுந்தார் அந்த இன்னொருவர் ‘ஆமாம் தம்பி..இதுவே வேற ஆளாயிருந்தா கூட மூணு பேர்த்த உதவிக்கு வெச்சுக்கிட்டு …அவங்களுக்கும் சேர்த்து கூலி வாங்கிக்குவாங்க…சொல்லப் போனா மூணு ஆள் வேலைய அவன் ஒரே ஆள் பார்க்கறான்’

கேட்கக் கேட்க பிரமிப்பாயிருந்தது கந்தசாமிக்கு.

‘அப்புறம்…இதுல இன்னொன்னும் இருக்கு தம்பி….இதெல்லாம் ராத்திரி நேரத்துல நடக்கற வேலையானதினால…நாம் இருந்து நேரடியாப் பாக்க முடியாது…அதனாலேயே சில ஆளுங்க என்ன பண்ணுவாங்கன்னா…வெட்டக் குடுக்கற காய்கறில பாதிய ஆட்டையப் போட்டுடுவாங்க…ஆனா..இந்த முரளி மட்டும் அப்படியில்லை…நாணயஸ்தன்…திருட்டு பெரட்டு எதுவும் கெடையாது……இந்த மாதிரி ஆளுங்க கெடைக்கறதே கஷ்டம்…அதனாலதான் அவனை எப்படியாவது எங்க ஹோட்டலுக்கு தள்ளிட்டுப் போய்டலாம்னு நானும் ஆறுமாசமா வலைய வீசறேன்…சிக்க மாட்டேங்குறான்’

கந்தசாமிக்கு பேச்சே எழவில்லை.

‘ஹூம்.. நாங்க மட்டுமில்லை..எங்க மாதிரி பல ஹோட்டல்காரங்க அவனுக்காக முயற்சி பண்ணிட்டிருக்காங்க…கூலி கூட இப்பக் கெடைக்கறத விட மூணு மடங்கு அதிகம் தர்றதுக்குக் காத்திட்டிருக்காங்க…ம்ஹூம்…யாராலும் அவனைக் கவிழ்க்கவே முடியலை…பணத்தாசை சுத்தமா இல்லாதவன்.’

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட ஆட்டோவை நிறுத்தி அவர்களை இறக்கி விட்டான் கந்தசாமி.

போகிற போக்கில் அந்த வழுக்கைத் தலை மனிதர் ‘ஏதோ…இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு இருக்கறதினாலதான் தம்பி நாட்டுல அப்பப்ப இந்தக் கலி காலத்துல கூடக் கொஞ்சம் மழையும் வந்திட்டிருக்கு’ என்று சொல்லி விட்டுச் செல்ல,

ஆட்டோவை நேரே வீட்டிற்கு ஓட்டினான் கந்தசாமி.

‘என்னண்ணே…இன்னிக்கு இவ்வளவு சீக்கிரத்துல மதிய சாப்பாட்டுக்கு வந்திட்டே,’ முருகேஸ்வரி வியப்புடன் கேட்டாள்.

‘முருகு…நீ ஆசைப்பட்ட அந்த முரளியையே உனக்குக் கட்டி வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்’

அண்ணனின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் புரியாத முருகேஸ்வரி மலங்க மலங்க விழித்தபடி நிற்க, விழியோரம் பூத்த கண்ணீர் மொக்கு அவள் சார்பில் ‘நன்றி அண்ணா’ என்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *