கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,195 
 

ஜாதகம் பார்க்கப் போன இடத்தில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன்.

அவளும் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறாள் என்று நினைத்தேன். “அம்மா கல்யாணி! சித்த அந்தப் பொஸ்தகத்த எடுத்துக் குடும்மா” என்று ஜோஸ்யர் சீதாராமன் சொல்லவும் “இதோ வர்றேம்பா” என்று அவள் பதில் சொன்னாள்.

‘ஜோஸ்யரின் பெண்ணா? வாவ்… காதலுக்குத்தான் கண்ணில்லை என்று நினைத்தேன். கடவுளுக்கும் இல்லை போலிருக்கு. இவள் மாதிரி ஒரு அழகி பிறக்க வேண்டிய வீடா இது? அநியாயம்’ என்று மனது சொன்னது.

கல்யாணி! ராகத்தைப் போலவே கவர்ச்சியாக இருந்தாள். இப்படி ஒரு ரோஜா வர்ணம் கலந்த வெண்மை கஷ்மீரிகளிடம் தான் பார்க்க முடியும். பேபி பிங்க் கலரில் ஒரு பொம்மை மாதிரி இருந்தாள். தீர்க்கமான அங்கங்கள். எல்லாமே அளவெடுத்து செய்தது போல இருந்தன. நடுத்தர குடும்பத்துப் பெண்களைப் போலவே ஆடை உடுத்தியிருந்தாள். இம்மியளவு கூட தேகம் பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாதென்பதில் அவளுக்கிருந்த உறுதியை அவள் ஆடைகள் சொல்லின.

ஆனால் காமத்துக்கும் காதலுக்கும் முகமும் கண்களும் இதழ்களும் போதுமே!
ப்பா! என்ன கண்கள்! பார்த்த மாத்திரத்திலேயே இதயத்தைக் கீறிக் கிழிக்கும் போல இருந்தது. உதடுகள் உடம்புக்குத் தீ வைத்தன. நான் எந்த வகையிலாவது கல்யாணியை அடைவது என்று தீர்மானித்து விட்டேன்.

நான்? சென்னையின் பிரபல பில்டர் ஈஸ்வரன். என்னைத் தெரியாது என்றால் நீங்கள் ‘பவர் வட்டத்துக்குள்’ இல்லை என்று அர்த்தம். ஐம்பது வயதில் இப்படி ஒரு க்யாதி ஸம்பாதித்த வெகு சிலர்களில் நானும் ஒருவன் அழகான மனைவி, இரண்டு குழந்தைகள், கார் பங்களா என்ற வசதியான வாழ்க்கை. இருந்தாலும் மிதமிஞ்சிய பணம் தரும் அத்தனை பலவீனங்களும் எனக்கு இருந்தன.

வயதான விஸ்கி இளம் பெண் சீட்டாட்டம் என்று ஸகலமும் ப்ரியம். இப்படி இருந்த என் வாழ்வில் ஒரு குறை. என் மகன். ஸம்பாதித்த பிறகு எனக்கு வந்த சில பழக்கங்கள் அவனுக்கு அதற்க்கு முன்னாலேயே வந்து விட்டன. அவன் உருப்படுவானா என்ற என் நெடுநாளைய சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தான் கூடுவாஞ்சேரி ஜோஸ்ரிடம் விஜயம்.

இந்த சீதாராமன் ஜோஸ்யர் மட்டுமல்ல; ஒரு புகழ் பெற்ற மாந்த்ரீகரும் கூட என்று என் மனைவி வேதாவின் அண்ணன் ராதாகிருஷ்ணன் கொடுத்திருந்த சர்டிபிகேட் தான் நான் இவரிடம் வந்த முக்கிய காரணம். கல்யாணி கொடுத்த அந்தப் புக்கைச் சற்று நேரம் புரட்டிய சீதாராமன் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

“ இவன் பணத்துக்காக சொல்றான்னு நெனைக்காதீங்கோ ஈஸ்வரன்வாள்! உங்க பையன் ஜாதகப்படி அவன் வாழ்க்கைல நிறைய சிக்கல்கள் இருக்கு. இப்ப நீங்க பார்க்கறது ஒரு ஆரம்பம்தான். இனிமே போகப்போக அவனோட நடவடிக்கை மோசமாத் தான் போகும். அவனால உங்க மன நிம்மதியும் கெடும். சில சமயங்கள்ல, குறிப்பா அவனோட ஸ்கூல் வட்டாரத்துல, நீங்க அவமானப்படவும் நேரிடலாம்”

நான் எதுவும் சொல்ல வாயெடுப்பதற்கு முன்னால் என் மனைவி முந்திக் கொண்டாள். “ மாமா! நீங்க சொல்றதக் கேட்டா நேக்கு வயத்தக் கலக்கறது. ஐயோ! இந்த ஆண்டவன் இப்படியா சோதிக்கணும் எங்கள? இதுக்கு வேற வழியே இல்லையா?”

“இருக்கு மாமி. ஒரு ஹோமம் பண்ணினாக்க சரியாகும். அதோட நீங்க ஒரு மண்டலம் விரதமிருந்து, பக்கத்துல ஏதும் கோவில் இருந்தா அங்க தீபம் ஏத்தி வழிபாடு செய்யணும். குறிப்பா இந்த நாள்ல ஆத்துல வெங்காயம் பூண்டு கூட சேத்தப்படாது. வேற சேர்க்கையும் கூடாது. புரிஞ்சுதா? நீங்க சரின்னு சொன்னா வர்ற வெள்ளிக்கெழமை ஹோமம் வச்சுக்கலாம். நானே பண்ணித் தர்றேன். எனக்குப் புரோஹிதமும் தெரியும்” என்றார்.

“அதுக்கென்ன மாமா, பேஷா பண்ணி வைங்கோ. எங்களுக்கும் அலைச்சல் மிச்சம். எவ்ளோ ஆகும்னு சொன்னா நாங்க தந்துர்றோம். நீங்களே எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்கோ”

“ நான் ஹோமத்துக்கு வேண்டப்பட்டதை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு என் பொண்ணுகிட்ட குடுத்து அனுப்பறேன். நீங்க பணத்தை அவ கிட்டேயே குடுத்துடுங்கோ” என்று சீதாராமன் சொன்னது பாதி தான் காதில் விழுந்தது. ‘கல்யாணி என் வீட்டுக்கு வர்ற போறாளா? வாவ்! பழம் நழுவிப் பால்ல விழப்போறதா? இத விடவும் வேற நல்ல சான்ஸ் கிடைக்காது.’ என்று என் மனம் அசை போட ஆரம்பித்துவிட்டது.

“அப்ப நாங்க கிளம்பறோம் மாமா. இந்தாங்கோ எங்க ஆத்து அட்ரஸ். நாளைக்கு உங்க பொண்ண எதிர்பார்த்திண்டு இருப்போம்” என்று அவரிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டையும் அட்ரஸ் எழுதிய காகிதத்தையும் தந்தாள். அந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது

“அப்பா நான் காலேஜ் கெளம்பறேன்.” என்று பாடியபடியே கல்யாணி வந்தாள். அவள் தோள்களில் ஒரு பேக்.

“எங்கம்மா ஒன் காலேஜ்?” என்று கேட்டாள் என் மனைவி. மவுன்ட் ரோடில் உள்ள ஒரு பிரபல காலேஜ் பெயர் சொன்னாள் கல்யாணி.

“ஒண்ணு பண்ணு. நீ எங்களோட கெளம்பி வா. எங்க ஆத்தைக் காட்டிடறேன். அப்புறம் ட்ரைவர் உன்ன காலேஜுல டிராப் செஞ்சுடுவான். சரியா?”

சரியென்று தலையாட்டிய கல்யாணி காரில் முன்பக்கம் உட்காரப் போனாள்.

“எங்களோடயே உக்காரு கல்யாணி. பெரிய கார்தானே? எடமிருக்கு” என்ற என் மனைவிக்கு நான் மானஸீகமாக நன்றி சொன்னேன். அவ்வளவு பெரிய காரை வாங்கியதற்கு அன்றைக்குத் தான் மகிழ்ந்தேன். என் மனைவி நடுவில் உட்கார நான் ஒரு ஓரமும் கல்யாணி ஒரு ஓரமும் உட்கார்ந்தோம். கூடுவாஞ்சேரியில் இருந்து எப்படியும் ஒருமணி நேரப் பிரயாணம். என் மனம் குதூகலித்தது.

காரை நிறைத்தது கல்யாணியின் வாசனை. முதன்முறையாய், நக்கீரனை எரித்த சிவனோடு நான் ஒத்துப்போனேன். இளமையின் வாசம் என் நாசியில் நுழைந்து தொண்டை வழியாக இதயத்தில் ஒரு சூடான அமிலம் போல இறங்கியது. காமத்தில் தகித்துக் கொண்டிருந்த என் தேகம் ‘கல்யாணி..கல்யாணி;;’ என்று அரற்றியது போலக் கேட்டது.

என் செய்கையின் பின் விளைவு பற்றி யோசிக்காமல் நான் என் வலது கையைத் தூக்கி சீட்டின் பின் பக்கம் போட்டேன். என் மனைவியைத் தாண்டி கல்யாணியின் கழுத்து முதுகுவரை கை போனது. சினிமாக்களைப் போலவே டிரைவர் அந்த சமயத்தில் ஒரு ப்ரேக் போட்டான். சற்றே முன்பக்கம் மூவரும் சரிந்தோம். என் கைகள் கல்யாணியின் முதுகுப் பிரதேசத்தை அளவெடுத்தது.

“சாரி’ என்றேன். “இட்ஸ் ஓகே அங்கிள்” என்றாள் அவள். என் மனைவி இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கப்புறமும் நான் என் கையை பின் சீட்டில் இருந்து எடுக்கவில்லை என்பதை கல்யாணி ஓரக் கண்ணால் கவனித்து விட்டாள் என்பது எனக்கு ஒரு இரண்டு நிமிடத்தில் புரிந்தது. தகிக்கும் உடம்போடு வெளியே பார்த்துக் கொண்டு வந்த என் வலது கையில் மீண்டும் ஒரு பஞ்சுப்பொதி ஒற்றியது. திரும்பிப் பார்த்தேன்.

என் கையில் அவள் முதுகு படும்படியாக கல்யாணி சௌகர்யமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்க்காவிட்டாலும் அவள் இதழ்களில் ஒரு புன்னகை இழையோடியதை நான் பார்த்து விட்டேன்.

ஒரு பிரமிப்பு என்னைச் சூழ்ந்தது. இது சாத்தியமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது என் சந்தேகத்தைப் போக்கும் படியாக சட்டென்றுத் திரும்பி கல்யாணி என்னைப் பார்த்தாள்.

எனக்கு மயக்கம் வராத குறைதான். என்ன பார்வை! ஆயிரமாயிரம் சேதி சொல்லியது. என் அதிர்ஷ்டத்தை வியந்து கொண்டேன். இல்லை என் பணமாக கூட இருக்கலாம். பணக்காரனாயிருப்பதும் ஒரு சௌகர்யம்தான். அப்புறம் சட்டென்று பார்வை திருப்பி நேரே பார்க்க ஆரம்பித்து விட்டாள். நானும் என் கையை இழுத்துக் கொண்டேன்.

ஒரு அரைமணியில் நான் மைலாப்பூர் வந்தோம். கல்யாணிக்கு என் வீட்டைக் காண்பித்தோம். “காப்பி டீ எதுவும் குடிக்கறயாம்மா?” என்று அன்புடன் விசாரித்த என் மனைவியிடம் “வேண்டாம் ஆண்டி” என்றாள்.

“ஏன்னா! ட்ரைவர் கிட்ட சொல்லிடுங்கோ. இவள டிராப் பண்ணச் சொல்லி”

“வேண்டாம் வேதா! எனக்கு நம்ம சந்தானம் ஆடிட்டர் கிட்ட ஒரு வேலை இருக்கு. எப்படியும் ஸ்பென்சர் கிட்டப் போகணும். இவள நானே டிராப் பண்ணிடறேன்”

“சரின்னா”

“போகலாமா கல்யாணி” என்று கேட்டபடியே அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் குறும்பு கொப்பளித்தது. (அதில் காமமும் கலந்திருந்தது என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.)

இந்த தடவை காரில் முன்சீட்டில் அமர்ந்தாள். சற்று தள்ளி ஜன்னலோரம். கார் வீட்டை விட்டு வெளியே வந்ததும் என் பக்கமாக நகர்ந்து அமர்ந்தாள்.

“சாரி” என்றேன்.

“எதுக்காம்” என்றாள் வெடுக்கென்று. “என்னத் தொட்டதுக்கா இல்லை இப்பத் தொடப்போறதுக்காக?”

நான் அவளைப் பார்த்தேன்.

“ ஒடனே நான் விற்பனைக்குன்னு நெனைக்காதீங்கோ! உங்களைப் பார்த்ததும் உங்க வசதியைப் பார்த்ததும் எனக்குள்ள ஏதோ மாத்தம்.”

“நான் ஒண்ணுமே நெனைக்கல. என்னோட அதிர்ஷ்டம். அவ்ளோதான். எங்க போலாம்? காலேஜுக்கா? இல்லை வேற எங்கயாவதா?”

“இன்னைக்குக் காலேஜ் தான். நாளைக்கு லிஸ்ட் எடுத்துண்டு ஆத்துக்கு வருவேன் இல்ல? அப்ப சொல்றேன். எங்க போலாம்னு. இல்லை வேண்டாம்னு நான் முடிவு எடுத்தாலும் கோவம் கூடாது. சரியா?” என்று படபடத்தாள்.

“இட்ஸ் ஓகே. ஐ அண்டர்ஸ்டாண்ட்”

அப்புறம் அவளை விட்டுவிட்டு நிஜமாகவே சந்தானத்தைப் பார்க்கபோனேன். (அலிபை வேணுமில்லையா?)

அப்புறம் அந்த நாள் எப்படிக் கழிச்சேன்னு எனக்கேத் தெரியல. மறுநாள் எப்ப விடியும் எப்ப கல்யாணி வருவான்னு மனதுக்குள் ஒரு போராட்டம். சரியாக எட்டு மணிக்கு கல்யாணி வந்தாள்.

நன்றாக உடுத்தி பளிச்சென்று இருந்தாள். என் மனைவியிடம் “ஆண்டி, இந்தாங்க லிஸ்ட்” என்றாள். என்னிடம் “ஹல்லோ அங்கிள்” என்றாள்.

ஒரு காப்பி குடித்தாள். “சரி கிளம்பறேன்” என்று சொன்ன போது, “ஏன்னா, ட்ரைவர் இன்னைக்கு லீவு. நீங்க சித்த விட்டுட்டு வாங்கோ” என்றாள் வேதா.

கல்யாணி இதழில் ஒரு பெரிய புன்னகை.

மீண்டும் கல்யாணியுடன் கார் பயணம். அவள் காலேஜ் நோக்கி வண்டியைத் திருப்ப எத்தனித்தபோது, “ மகாபலிபுரம் போயிட்டு சாயந்தரத்துக்குள்ள போயிற முடியுமா?” என்று கேட்டாள் கல்யாணி.

எனக்குச் சிலிர்த்தது. அவளை இடை பற்றி என்னிடம் இழுத்தேன். ஒரு மெல்லிய துணியைப் போல என் மீது படர்ந்தாள்.

அப்புறம் நாங்கள் மகாபலிபுரம் போனதோ அங்கே நடந்ததோ ரொம்ப பர்ஸனல். நீங்கள் கேட்க விரும்ப மாட்டீர்கள் என்று தெரியும். சாயங்காலம் அவளை அவள் வீடு அருகே டிராப் செய்து விட்டு என் வீட்டுக்கு வந்தபோது மணி மாலை ஏழு.

அப்புறம் இரண்டு நாளில் அந்த ஹோமமும் நடந்தது. சீதாராமன்தான் செய்து வைத்தார். நன்றாக நடந்த அந்த ஹோமத்தின் முடிவில் சம்பாவனை தரும்போது, என்ன நினைத்தேனோ ஒரு ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றைத் தட்டில் வைத்தேன். சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தார் சீதாராமன். அவர் கண்களில் என்ன உணர்ச்சி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. கல்யாணி கல்யாணத்துக்கு உபயோகமா இருக்கும்” என்று சொன்னார்.

“பரவாயில்லை சீதாராமன்! அந்த சந்தர்ப்பத்துல இன்னும் செய்யலாம்” என்றேன்.

பிறகு அவர் வேதாவிடம் அந்த விரதம் பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதற்குள் ஒரு போன் வரவே நான் வெளியே சென்று விட்டேன்.

நாட்கள் பறந்தன. நான் கிட்டத்தட்ட கல்யாணியை மறந்தே போனேன். அப்புறம் ஒரு இரண்டு வாரங்கள் கழித்து அந்த மாற்றங்கள் ஆரம்பித்தன.

ஒரு நாள் காலை எழுந்து கண்ணாடியைப் பார்த்தேன். கன்னம் சற்று வாடினாற்போல தெரிந்தது. உடலில் ஒரு வித சோர்வு. அப்படியும் அன்று க்ளையன்ட் மீட்டிங் இருந்ததால் சென்று விட்டேன். மாலையில் சோர்வு அதிகமாக என் குடும்ப டாக்டரிடம் சென்றேன். என்னைப் பார்த்த அவர் மலைத்துப் போனார்.

“என்ன ஈஸ்வரன்! எனி ப்ராப்ளம்? இப்படி எளச்சுப் போயிட்டீங்க? வாங்க வெயிட் பார்க்கலாம்” என்றார்.

வெயிட் பார்த்ததில் ஒரு ஐந்து கிலோ இறங்கியிருந்தது தெரிய வந்தது. டாக்டர் நிறைய டெஸ்ட் எழுதிக் கொடுத்தார். மருந்துகளும் கொடுத்தார். வீட்டுக்கு வந்து வேதாவிடம் சொன்னேன்.

“ஒண்ணும் இருக்காதுன்னா. எல்லாம் திருஷ்டி தான். சரியா போயிடும். ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்கோ வீட்டுல. ஆபீஸ் போக வேண்டாம்” என்றாள்.

அவள் சொன்னதுதான் சரியென்று பட்டது எனக்கும். கண் மூடித் தூங்கிப் போனேன். மறுநாள் சோர்வு இன்னும் அதிகமாயிருந்தது. மருந்து சாப்பிட்டும் பலனில்லை. சாப்பாடு சாப்பிடவே பிடிக்கவில்லை. நாள் முழுக்கத் தூங்கியபடியே இருந்தேன். அப்புறம் இரண்டொரு நாட்கள் அது போலவே இருந்ததால் எனக்குக் நாள் கிழமை நேரம் மறந்தது. எப்போது முழிக்கிறேன் எப்போது தூங்குகிறேன் என்பதே புரியாமல் போச்சு.

அப்படித் திடீரென்று முழித்த ஒரு வேளையில் தான் கல்யாணியிடமிருந்து போன் வந்தது, வேதா அங்கே இல்லை. மிகவும் சிரமப்பட்டு எடுத்து “ஹல்லோ” என்றேன்.

“அங்கிள்! நான் கல்யாணி!”

“சொல்லும்மா. ஹௌ ஆர் யூ? எனக்கு உடம்பே சரியில்லை”

“அது தெரிஞ்சுதான் கால் செஞ்சேன். அன்னிக்கு நீங்க என்ன டிராப் பண்ணினத அப்பா பாத்துட்டார். செமக்கோவம். இந்த ஹோமம் முடியட்டும் ஒன்ன கவனிச்சுக்கறேன்னு சொன்னார். அப்புறம் ஹோமம் நடந்த அன்னிக்கு வீட்டுக்கு வந்து நீங்க தந்த அம்பதாயிரத்த என் மொகத்துல விட்டு எறிஞ்சார். “ ஒனக்கு அவன் தந்த வெல” என்று பைத்தியம் மாதிரி சிரித்தார். “கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தருவானாம். இருந்தாத்தானே தருவான்னு சொல்லி சிரிச்சார்.

எனக்குப் புரியல அப்ப. அப்புறம் நேத்து உங்க மனைவிகிட்டேருந்து ஒரு போன் வந்தது. அப்பத்தான் அவர் செஞ்ச வேலை எனக்குத் தெரிஞ்சுது. நம்ம விஷயம் உங்க மனைவிக்கும் தெரியும். அப்பா சொல்லிட்டார். உங்க பெட்ரூம் கண்ணாடி பின்னால ஒரு மந்திரிச்ச தாயத்து வைக்கச் சொல்லி உங்க மனைவிகிட்ட கொடுத்திருக்கார். அதுனால தான் உங்க உடம்புக்கு இந்த பேர் தெரியாத வியாதி. நீங்க அத எடுத்துப் போட்டுடுங்கோ. இல்லேனா செத்துடுவேள்” என்று சொன்ன கல்யாணியின் வார்த்தைகள் கேட்டு எனக்குள் ஒரு பீதி பரவியது.

“சரி, நான் அப்படியேச் செய்யறேன். அப்புறம் போன் பண்ணறேன்” என்று சொல்லி காலைக் கட் செய்துவிட்டு எழுந்து நிற்க முயற்ச்சித்தேன். அசதி சோர்வு ரொம்பவுமே அதிகமாயிருந்தது. எப்படியோ சமாளித்து கண்ணாடி அருகே சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி. கண்ணாடியில் தெரிந்த ஈஸ்வரனைப் பார்த்து. ஒரு எலும்புக்கூடுக்கு தோல் போர்த்தி விட்ட மாதிரி இருந்தேன்.

உள்ளுக்குள் ஒரு கோவம். கையை கண்ணாடிக்குப் பின்னால் செலுத்தி அந்த தாயத்தை எடுத்தேன். அதைத் தூக்கி ஜன்னல் வழியாக எறிய முன்னேறியபோது தான் கண்ணாடியில் என் மனைவி வேதா தெரிந்தாள்.

கையில் ஒரு இரும்புக் கழியுடன்.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *