கண்டேன் ராகவா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 11,326 
 
 

அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று பாயஸமோ, சர்க்கரைப் பொங்கலோ, இல்லை ஏதாவது ஒரு சித்ரான்னமோ படைப்பாள். பயபக்தியாகக் கற்பூர ஆரத்தி வரை காத்திருந்து, பட்டாபிஷேக ராமருக்கு அனந்தராமன் தீபாராதனை காட்டும்போது கன்னத்தில் போட்டுக் கொண்டு, தன் பங்குக்கு ராமகர்ணாம்ருத ஸ்லோகம் எதையாவது சொல்லுவாள்.

இப்போது?

இதெல்லாம் மாறிவிட்டது! தினம் ராமருக்கு வெறும் பால் மட்டும்தான்! இல்லை; இரண்டு காய்ந்த திராட்சைப்பழம் அல்லது கற்கண்டு, அதுவும் இவரே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சில தினங்களுக்கு முன் கற்பூர ஆரத்தி காட்டும்போது கூட, “அம்புஜம், தீபாராதனை பண்றேன்” என்று இவர் கூறிய போதும்… கூவிய போதும்… அம்புஜம் எட்டிப் பார்க்கவில்லை! திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இவர் தினமும் தீபாராதனை செய்வதோடு சரி!

“நீங்களே ஆராதனை எல்லாம் பண்ணுங்கோ. எனக்கு எதுவும் வேண்டாம்! என் மனசுலேயே ஸ்வாமி இருக்கார்!”

அனந்தராமன் பிறகு பேசவில்லை. ஆயிற்று, இன்னும் ஒரு வாரத்தில் பாராயணம் முடித்துப் பட்டாபிஷேகச் சர்க்கம் வாசிக்க வேண்டும். முன்பு பருப்புத் தேங்காய் என்ன, பால் பாயஸம் என்ன? என்று அமர்க்களப்படுத்துவாள் அம்புஜம். யாரையாவது அக்கம் பக்கம் ஒரு சுமங்கலியை அழைத்துத் தன் கூட ஆரத்தி எடுக்கச் செய்வாள். பானகம், நீர்மோர், பாயஸம் என்று தந்து… ஒரு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவாள்!

இப்போது…?

எல்லாமே மாறிவிட்டன! ராம, லக்ஷ்மணர்கள் பாயஸம் பார்த்து எத்தனை நாளாயிற்றோ? இந்த லக்ஷணத்தில் பருப்புத் தேங்காய் என்றால் அம்புஜம் மறுப்புச் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

அம்புஜம் பட்டாபிஷேகத்தின்போது ‘மாமவபட்டாபிராம’ பாடுவாள்.

கணையாழி வாசிக்கும் கட்டத்தில், “கண்டேன் கண்டேன், சீதையைக் கண்டேன் ராகவா!”- என்று ராம நாடகக் கீர்த்தனை பாடுவாள்!

இப்போது இதெல்லாம் விட்டுப் போயிற்று! அம்புஜம் ஏனிப்படி மாறிப் போனாள்? அவளுள் முகிழ்ந்த ஆஸ்தீக அனுபவங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலப்பது புரிந்தது! ஆனாலும் இவரால் என்ன செய்ய முடியும்! அம்புஜத்தின் மாற்றத்துக்குக் காரணம்…?

இருந்தது… பெரிய பதவியிலிருந்து ஒய்வு பெற்றவர்தான் அனந்தராமன். ரிடையர் ஆகும்போது கை நிறையப் பணமும், லாக்கரில் அம்புஜத்தின் நகைகளும் இருந்தன.

ஏதோ ஒரு பழைய வீடு, எலி வளையானாலும் தனி வளை என்பது போல் ஒரு சொந்த வீடு!

அம்புஜத்திற்குத் திடீரென்று ஆசை வந்தது.

“ஏன்னா… ஆபீஸிலே இருந்து வந்த பணத்தையெல்லாம் ஏன் பேங்கிலே போட்டு வைச்சிருக்கேள்? ஏதாவது நல்ல ‘பைனான்ஸ் கம்பெனி’யிலே போடலாமே! நிறைய வட்டி வரும். அந்த வட்டியே நமக்கு மாசச் செலவுக்குப் போதும். பேங்க் வட்டி ரொம்பக் கம்மி இல்லையா?”

“அம்புஜம் வட்டிக்கு ஆசைப்பட்டு அசலை இழந்துடக் கூடாது…”

“ஆமாம்; எப்பவும் உங்களுக்குப் பொழைக்கத் தெரியாது. உங்க ஃப்ரண்ட் செட்டியார் மூணு வட்டி வாங்கறார். ரெண்டு வட்டிக்குக் கடன் வாங்கி மூணு வட்டிக்கு விடறார். இந்த ஒரு ‘பர்சன்டிலேயே’ அவருக்கு மாசாமாசம் ஆயிரக் கணக்கான பணம் வருது. கணக்குக் காட்ட வேண்டாம். ஒரு ப்ரோநோட் தான்! நம்பிக்கை தான்!”

நாளடைவில் அம்புஜத்தின் நச்சரிப்பு அதிகமானது. அப்போதெல்லாம். அம்புஜத்திற்கு நிறைய ஆஸ்தீக உணர்வு இருந்தது. ரிடையர் ஆன பிறகு தான் அனந்தராமன் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார்

‘ரகுவம்சம்’, ‘குமார சம்பவம்’ எல்லாம் படித்து முடித்தபின் ‘சுந்தரகாண்ட’ பாராயணம் பண்ண ஆரம்பித்தார். இப்போதெல்லாம் எல்.பி.யில் சுந்தரகாண்டம் முழு காண்டமும் வந்துவிட்டது. அதைப் போட்டுவிட்டு நாளொன்றுக்கு ஒவ்வொரு சர்க்கமாகக் கூடப் படித்துக் கொண்டு வந்தாலே போதும். உச்சரிப்புப் பிழை இருக்காது.

இவர் இப்படித்தான் கேசட்டுகளை வைத்து ருத்ரம், புருஷ சூக்தம், சமகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று கற்றுக் கொண்டார். அம்புஜமும் தன் பங்குக்கு லலிதா சஹஸ்ரநாமம், லஷ்மி சஹஸ்ரநாமம் என்று கற்றுக் கொண்டாள்.

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது- அந்த ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஊரைவிட்டு ஒடும் வரை!

மாசாமாசம் வீடு தேடி வந்த வட்டி நின்று போனது. சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அம்புஜத்தின் ‘பேங்க் லாக்கர்’ நகைகள் அடமானத்துக்குப் போயின.

அனந்தராமன் ‘ஃபைனான்ஸ்’ கம்பெனி தேடிப் போன போது கம்பெனி பூட்டிக் கிடந்தது. ஆரம்பத்தில் விலாச மாற்றம் என்றார்கள்!

அதன்பின் ஒரு நாள் கம்பெனியைப் போலிஸ் ‘சீல்’ செய்து பூட்டிவிட்டது! கடன்காரர்கள், பங்குதாரர்கள், இன்கம் டாக்ஸ் என்று அத்தனை பேரும் புகார் கொடுத்ததில் கம்பெனிக்கு ‘சீல்’ வைத்து விட்டார்கள்.

போலீஸ் குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் புலன்விசாரணை நடத்துகிறது!

அனந்தராமனும் அம்புஜமும் திகைத்துப் போனார்கள். தினம் தினம் தினசரிகளில் பத்தி பத்தியாகச் செய்திகள்!

பணம் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை! புரோ நோட்டைக் கை நிறைய வைத்துக் கொண்டு என்ன செய்வது?

அப்படியே அவன் கண்டுபிடிக்கப்பட்டு, கேஸ் ஜெயித்தாலும் இத்தனை கடன்காரர்களுக்கு நடுவில் இவர்கள்! ரூபாய்க்குப் பத்து பைசா தேறுமா? எப்போது வசூலாகும்?

ஆடிப்போனாள் அம்புஜம்! தன் பேராசை இப்படிப் பெரும் நஷ்டத்தில் கொண்டு வந்து விட்டதை நினைத்து நினைத்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை!

குறைந்த வட்டியாக இருந்தாலும், ஏதாவது ஒரு மூழ்காத வங்கியில் போட்டிருக்கலாம்! யாருக்காவது குறைந்த வட்டியிலாவது கடன் கொடுத்து உதவி இருக்கலாம்! இப்போது…?

எல்லாம் குறைந்து… லாக்கரில் இருந்த நகை குறைந்து, வங்கியில் மிச்சமிருந்த பணம் குறைந்து… வாழ்க்கையும் குறைந்து கொண்டே வருகிறது!

“அவன் நன்னா இருப்பானா? நாசமாத்தான் போவான்!”

“சாபமிடாதே அம்புஜம்! பூர்வஜன்ம பலன். போன ஜன்மத்திலே இவனுக்கு நாம என்ன கடன் பட்டிருக்கோமோ?”

“இது சுத்தப் பேத்தல். கையாலாகாத்தனம்! கடனைத் திருப்பி வாங்கத் தெரியாத அப்பாவித்தனம்! எல்லாப் பழிகளையும் தன் மேலேயே போட்டுக்கற பட்டிக்காட்டுத்தனம்!”

அம்புஜம் அழுதாள்.

அதன்பிறகுதான் இவள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தெய்வ நம்பிக்கைகளை விட்டுவிட ஆரம்பித்தாள்.

முன்பு எப்போதும் பூஜை அறையில் தென்பட்ட இவள், இப்போது ஹாலில் டி.வி. முன் தென்பட ஆரம்பித்தாள். பக்தி சீரியல் வந்தால் டி.வி.யை ‘ஆப்’ செய்துவிடுவாள்! ஏன்… ஏனிப்படி?

கொள்ளைக்காரனாக இருந்த குலசேகரர், பிறகு ஆழ்வாராகவில்லையா?

வேடன் வால்மீகி மகானாகவில்லையா?

வேட்டுவக் குலத்தில் பிறந்த கண்ணப்பன், கண்ணப்ப நாயனாராகவில்லையா?

ஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம். நீதி ஒன்றுதான் நிச்சயம்.

புலையராகப் பிறந்த நந்தனாருக்கும், குங்கிலிங்க நாயனாருக்கும் அந்த எம்பிரான் சிவன் அருள் பாலிக்கவில்லையா?

க்ஷத்திரிய குலத்தில் பிறந்த விஸ்வாமித்திரர் ‘பிரும்மரிஷி’ பட்டம் பெற்று பிராமணர் ஆகவில்லையா?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தெய்வ நீதி. இதில் அரசன் என்ன? ஆண்டி என்ன? ஆனால் அம்புஜம்? உயர்ந்த குலம் என்று சொல்லப்படுகிற பிரும்ம குலத்தில் பிறந்தும் ஏனிப்படி ராக்ஷஸியாக மாறினாள்? குலத்தால் வருவதல்ல குணம்!

தேவர்கள், அசுரர்கள் என்பதெல்லாம் பிறப்பால் வருவதல்ல. செயல்களால் வருவது!

அம்புஜம் அரக்கியாகி விட்டாள்!

ஆஸ்தீகத்தை மறந்த அந்த ஆண்டவனை நிராகரிக்கிறாள்!

பாவ, புண்ய கர்மாக்களின்படி அவள் விதி முடியும்போது அவளுக்கு விழிப்புணர்ச்சி வரும். சத்தியம் புரியும். ‘சூது கவ்வும், தர்மம் வெல்லும்’ – என்பார்கள்.

அரச போகம் அனுபவிக்க வேண்டிய ஆனானப்பட்ட பாண்டவர்களையே காட்டிற்கு விரட்டியது அந்தச் சூது!

ராமருக்கு வனவாசம் தந்ததும் அதே சூதுதான்!

அது மந்தரையின் சூழ்ச்சியல்ல! விதியின் வினைப்பயன்!

அரண்மனையில் பிறக்க வேண்டிய லவகுசர்களை வால்மிகி ஆசிரமத்திற்கு அனுப்பியதும் அந்த வினைப்பயந்தான்! பக்த ராமதாசர் சிறைத் தண்டனை அனுபவிக்கவில்லையா? அவரை விடுவிக்க நரியைப் பரியாக்கி அந்த எம்பிரான் திருவிளையாடல் புரிந்தான்! வன்னி மரம் சாட்சி சொன்ன புராண வரலாறு இருக்கிறது. இப்போது இந்த அதிசயங்கள் நடைபெறுமா என்ன? எத்தனை எத்தனை உதாரணங்கள்!

ஆனால் எதையும் புரிந்து கொள்ளும், கேட்கும் நிலையில் அம்புஜம் இல்லை!

அவள் தற்சமயம் தெய்வங்களை ஆராதிப்பதைத்தான் நிறுத்தி இருக்கிறாள். கூடிய சீக்கிரம் தெய்வ நிந்தனைக் குற்றமும் புரிவாள். அது அவள் தலையில் எத்தனை பெரிய பாவ மூட்டையை ஏற்றும்? பாவம் செய்யாதே என்று எல்லா மதங்களும் கற்றுத் தருகின்றன. மனிதன் காவல் துறைக்குப் பயந்து பாவம் செய்யப் பயப்படவில்லை. தன் மனசாட்சி, மதம் இதன் அடிப்படையில் தான் பாவம் செய்ய பயப்படுகிறான்! ஆனால் இவற்றைப் புரிந்து கொள்ளும் நிலையில் அம்புஜம் இல்லை!

அனந்தராமன் தனக்குள் கண்ணீர் விட்டார்!

அன்று…

இரவு பன்னிரண்டு மணி இருக்கும். நடு நிசி. ஏதோ சப்தம். அனந்தராமன் எழுந்தார். பழைய வீடு. மேலே மொட்டை மாடி… மாடியில் யாரோ தடதட வென்று ஓடுவதுபோல்…?

திருடனா..?

அனந்தராமன் பயந்தார்.

உறங்கிக் கொண்டிருந்த அம்புஜத்தைத் தட்டி எழுப்பினார். தனிமை மனதுக்கு அவள் விழிப்பு ஒரு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கை.

“அம்புஜம்… அம்புஜம், மொட்டை மாடியிலே என்னவோ… என்னவோ நடமாடற சப்தம்.”

அம்புஜம் ‘சூள்’ கொட்டியபடி திரும்பிப் படுத்தாள்.

“அம்புஜம் எழுந்திறேன்.. லைட்டைப் போட்டுப் பர்க்கலாம்…”

“சும்மாப் படுங்கோ. வேற வேலை இல்லை! திருடன் வந்தா வந்துட்டுப் போகட்டும். இங்கே திருடிண்டு போறத்துக்கு என்ன இருக்கு? நகையா? நட்டா? உசிர் தான் இருக்கு! போற உசிர் ‘பொசுக்கு’ன்னு போயிட்டா நிம்மதி!”

“அம்புஜம் இப்ப இப்பக் கூட ஏனிப்படி வஞ்சமா பேசறே?”

“ஆமாண்ணா… கவலைப்படாம படுத்துக்கங்க… மொட்டை மாடியிலே உங்க ராமரும், லக்ஷ்மணரும் விளையாடிண்டு இருப்பா! வேறு ஒண்ணும் இருக்காது!”

கிண்டல் பேசியபடி திரும்பிப் படுத்தாள் அம்புஜம்.

அனந்தராமன் பேசவில்லை.

திடீரென்று அக்கம் பக்கம் ஏதோ சப்தம். ஓலங்கள்… வீதியில் மனிதர்கள் ஓடும் சப்தம்.

அனந்தராமன் வாசல் விளக்கைப் போட்டுப் பார்த்தார். கூட்டம் கூட்டமாக மக்கள் பேசிக் கொண்டு நின்றார்கள்! ஏன்? என்னவாயிற்று?

சற்று நேரத்தில் போலீஸ் ஜீப்பும், ஆம்புலன்ஸீம் வந்தன.

அம்புஜம் இப்போதும் எழவில்லை!

மறுநாள்…

விடிந்த பிறகு விபரம் முழுமையாகத் தெரிந்தது.

வடக்கே இருந்து வந்த ஏதோ ஒரு கொள்ளைக் கும்பல் இந்த வீதியையே கொள்ளையடித்திருக்கிறது.

தனித்தனியாக இருந்த வீடுகள். கொள்ளைக்காரனுக்கு வசதி! அதில் ஒரு வீட்டில் ஒரு அம்மாள் எதிர்க்க. அவளைக் குத்திப் போட்டுவிட்டுக் கூட்டம் தப்பி இருக்கிறது. அந்த அம்மாள் அலறிய அலறலில் தான் அனைவரும் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.

தினசரிகளில் செய்திகள், பத்தி பத்தியாக…

அனந்தராமனுக்கு ஆச்சர்யம். இந்தத் தெருவையே கொள்ளையடித்தவர்கள், இவர்களின் ஓட்டை வீட்டில் நுழைய எத்தனை நேரமாகும்? ஏன் நுழையவில்லை?

மாடியில் நேற்று இரவு தடதடவென்று ஒடிய சப்தம் திருடர்களின் காலடிச் சப்தம்தானா?

அனந்தராமன் யோசிக்க யோசிக்க போலீஸ் ஜீப் ஒன்று வாசலில் வந்து நின்றது.

அதிலிருந்து எஸ். ஐ. ஒருவர் இறங்கினார்.

முதல் நாள் சம்பவங்களைப் பற்றி விசாரித்தார்.

எத்தனை மணிக்கு சப்தம் கேட்டது என்றெல்லாம் கேட்டார்.

அனந்தராமன் இரவு பன்னிரண்டு மணிக்குத் தன் வீட்டு மொட்டை மாடியில் கேட்ட சப்தத்தைப் பற்றிக் கூறினார்.

“ஒகே ஸார் கோர்ட்டுலே இருந்து சம்மன் வரும். சாட்சி சொல்ல வரணும்…”

“சரி சார்…”

போகும்போது இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.

திருடனைப் புடிச்சிட்டோம். பாவம் அந்த அடிபட்ட அம்மா தான் ஆஸ்பத்திரியிலே ஐ.ஸி.யு.விலே இருக்காங்க. உயிருக்குப் பயமில்லை. நல்ல வேளை ஸார் நீங்க பொழைச்சீங்க…”

அனந்தராமன் பேசாமல் இருந்தார்.

“ஆமாம் சார்… இந்தப் பழங்கால வீட்டுக்கு எதுக்கு வாட்ச்மேன்?”

அனந்தராமன் திகைத்தார்.

“வாட்ச்மேனா? யார் சொன்னாங்க?”

“என்ன ஸார் இது? பிடிபட்ட திருடன் சொன்னானே! ஒரு வாட்ச் மேனுக்கு ரெண்டு பேராமே! அதுவும் வாட்ச் மேன்னா கத்தி, கபடா, துப்பாக்கி இல்லாம புது ஸ்டெயில் வாட்ச் மேனாமே! கையிலே வில்லோட… அம்போட…!”

சிரித்தபடி இன்ஸ்பெக்டர் போய்விட்டார்!

வாட்ச்மேன்! கையில் வில்லோட… அம்போட…

‘மொட்டை மாடியிலே உங்க ராமரும், லஷ்மணரும் விளையாடிண்டு இருப்பா?’ – அம்புஜத்தின் கிண்டல் பேச்சுக்கள்!

என் தெய்வமே! அனந்தராமன் அலறினார்.

ராமா… எனக்காக இந்த ஓட்டை வீட்டைப் பாதுகாக்க நீங்க ரெண்டு பேரும் இரவு பகலாகக் கண் விழித்துக் காவல் காத்தீர்களா என் தெய்வமே” ‘துஞ்சிலன் நயனம்’ என்று கம்பர் வர்ணித்ததைப் போல் எனக்காகக் கண் துஞ்சாமல் காவல் இருந்த என் தெய்வங்களே!

தினம் தினம் ராமாயணம் படித்து உன்னை ஆராதித்த எனக்குக் காட்சி தராமல் அந்தத் திருடர்களுக்குக் காட்சியளித்த என் தெய்வமே! அவர்கள் பெற்ற பேறு எனக்குக் கிடைக்கவில்லையே!

‘ஆனால் கண்டேன் சீதையை’ என்று அனுமன் பாடினான்.

அந்தத் தெய்வ சாக்ஷாத்காரம் ஒரு நொடிக்குள் லயிக்கக் கூடியது. அந்த அற்புதத்தை எனக்கு மறைமுகமாகக் காட்டிய என் வள்ளலே! நான் கண்டேன் ராகவா… கண்டேன்… உன் அன்பைக் கண்டேன்… உன் அருளைத் தரிசித்தேன்.

“உன் லீலைகளை உணர்ந்து கொண்டேன். ஏதாவது தெரிந்ததோ, தெரியாமலோ தப்புச் செய்திருந்தால் எங்களை மன்னித்துவிடு ராமா… ராகவா… எங்களின் அற்ப உயிர்களைக் காக்க ‘பொசுக்’கென்று போய்விடக் கூடிய ஜீவனைக் காக்க நீ.. நீயும் உன் தம்பியும் கையில் வில்லேந்தி…”

“பூஜை அறையில் கண்ணீர் விட்டுக் கதறியழுகிறார் அனந்தராமன். தெய்வ நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் அந்தத் தெய்வீக சக்தி எப்போது நம்மைக் காக்க வேண்டுமோ அப்போது காக்குமே! அதைக் கணிக்க நாம் யார்…”

அனந்தராமனுக்குப் புரிகிறது.

அப்போது…?

“நிகில நிலைய மந்த்ரம்
நித்ய தத்வாக்ய மந்த்ரம்
பவ குல ஹர மந்த்ரம்”

என்று அம்புஜம் பாடும் அந்த ராமகர்ணாம்ருத ஸ்லோகம் அவருக்கு மிக அருகில் கேட்கிறது… திரும்புகிறார்.

கண்களில் நீர் வழிய அம்புஜம் தான் பாடிக் கொண்டிருக்கிறாள்! பூஜை அறை ஓவியத்தில்…?

பருப்புத் தேங்காய், பாயஸ வைபவங்களுக்காக…

அந்தப் பட்டாபிஷேகத் தினத்திற்காகக் காத்திருந்தபடி அந்தப் பட்டாபிராமன் சிரித்தபடி கொலுவீற்றிருக்கிறார்!

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *