கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 2,121 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஆயிஸா பீவிக்கு நல்ல கட்டு மஸ்தான உடம்பு. அவளுக்கு இருபத்தெட்டு வயசாகிறதென்று யாரும் சொல்லமாட்டார்கள். பெண்களுக்குத் தன் வயசைக் குறைத்துச் சொல்லிக் கொள்வதுதான் வழக்கமாமே. ஆனால் ஆயிஸாவுக்கு ஐந்தாறு வயசைக் குறைத்துத்தான் சொல்ல வேண்டியிருக்கும். 

பதினெட்டு வயசில் அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. அது முதல் இன்று வரையில் அவள் உருவத்திலோ தோற்றத்திலோ மாறுதலே உண்டாகவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவள் அன்று பார்த்த மாதிரியே இன்றும் இருந்தாள். நிறத்தில் ஆயிஸா பாரஸீகத்து ரோஜாவல்ல; அராபியப் பாலையிலே பழுத்த பேரீச்சையின் நிறந்தான். அதாவது மாநிறத்திலும் சற்று மட்டான நிறந்தான். இருந்தாலும் நீண்ட கண்களும் வண்டான விழிகளும் அவளுடைய தளதளப்பான மேனிக்கு அழகு முத்திரை வைத்திருந்தன. தாம்போடு துள்ளி ஓடும் ஆட்டிளங் குட்டியை ஒரு தாவில் லாவிப் பிடித்துவிடுவாள். குட்டிச்சுவர் மேலே ஏறிக் காலை நீட்டிக்கொண்டு படுத்து, சொகுஸாக அசைபோடும் வெள்ளாட்டைக் குண்டுக்கட்டாக அப்படியே தூக்கி வந்துவிடுவாள். ஆட்டுச் சுழிபோல நெற்றியிலே காதோரம் இரண்டு சுருள் வந்து காற்றில் பறந்து ஆடும். சுரைக்கொடி படர்ந்த வீட்டையும் அதன் சாரத்தில் கட்டியிருந்த கடையையும் கீற்று வைத்து மறைத்திருக்கும் பின்புறத்துத் தோட்டத்தையும் மளிகைக் கடைக் கட்டெ -று ம்பைப் போலச் சுற்றிச் சுற்றி வருவாள். சும்மா போவாள். வேலி மறைக்கும் அந்தக் கடையையும் கல்லாப்பெட்டியடியையும் சந்தடி கேட்டால் எட்டிப் பார்ப்பாள். ஏழெட்டு ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கும் கள்ளிப்பெட்டிகளுக்கும் காவலாக ஹனீபா உட்கார்ந்திருப்பான். சில புட்டிகள் அழுக்கடைந்து காலியாகக் கிடைக்கும். சிலவற்றில் சோம்பும் முருங்கைப்பட்டையும் அடைத்திருக்கும். பூண்டும் தனியாவும், பலப்பமும் துவர்பாக்கும், மிளகாயும் புகையிலைத் தழையும் வெங்காயமும் கடையிலிருக்கும் சாமான்கள். பயறும் இருக்கும்; பருப்பும் கொஞ்சம் இருக்கும். எல்லாமே தட்டுமுட்டுக்குத்தான். ஹனீபாகூட அப்படித் தான். புருஷத்துணை இல்லாத ஆயிஸா, ‘சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை’ என்று அவனை அழைத்து வந்து, கடைக்கு என்று விட்டிருந்தாள். 

நோஞ்சல் பூனை போல ஆறு வயசில் வந்த ஹனீபா, இந்த எட்டு வருஷத்தில் கொழுகொழுவென்று வளர்ந்துவிட்டான். ஆயிஸாவுக்கு அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பெருமை; ஆறுதல். ஊட்டி வளர்த்த பெருமை; உள்ளூற அரித்து வந்த உள்ளத்துக்கு மருந்தாக அவன் இருப்பதில் ஆறுதல். 

காதர் பாட்சா மவுத்தானபோதுதான் இந்தப் பையன் அவளிடம் வந்து சேர்ந்தான். அவள் கணவன் முரண்டுத்தனமாகச் சிங்கப்பூருக்குச் சவருபோன மறு வாரமே, கப்பல் ஏறின சேதி கேட்டதுமே, அவள் தந்தை காதர் பாட்சா கண்ணை மூடிவிட்டார். இது எட்டு வருஷத்துக் கதை. இந்த எட்டு வருஷத்தையும் எப்படியோ கழித்துவிட்டாள். இனித்தான் அவளுக்குக் கஷ்டமாக இருக்கும் போலிருந்தது. 

ஹனீபா தன் தாய் வீட்டுக்குப் போகப்போகிறான். தந்தையை இழந்த அவன், தாய்க்குத் துணையாக இருக்க வேண்டியவன். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்குப் பெற்ற தாயைவிட, துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்தது. 

ஹனீபா ஊருக்குப் போகப் பஸ் ஏறினபோதுதான் அவள் துள்ளலுக்கும் சுறுசுறுப்புக்கும் துவட்சி கண்டது. சுற்றி வந்த விழிகளிலே மறைந்து ஒளிந்திருந்த சோகம், கண்ணீராய்த் திரண்டு உருண்டு விழுந் த்து. உடம்பு இளைக்காவிட்டாலும் உருக்குலைந்து போயிருந்த உள்ளம் இந்தப் பிரிவுத் துன்பத்தைத் தாளாமல் சோர்ந்து விழுந்துவிட்டது. ஆயிஸா அன்று கடையை ஹர்த்தால் செய்துவிட்டாள். 

“என்ன பீவி! கடையைக் குடுத்திடப் போறியா?” என்று வாண்டை யார் வீட்டு ஆச்சி வந்து விநயம் இன்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். ஆச்சிக்கு வீட்டிலே வேலையில்லை. சீசனுக்குத் தகுந்த வேலைதான் அவ ளுக்கு. மாதத்துக்கு ரூபாய் மூன்றாவது கொண்டு வந்து கொடுத்தால்தான் மருமகளிடம் அவளுக்கு ஒருவேளைச் சோறாவது உண்டு. அதற்காகச் சாலையிலே திருட்டுப் புளியம்பழம் பொறுக்குவது, மட்டை பொறுக்கு வது, சாணம் தட்டி விற்பது என்று ஏதாவது செய்துகொண்டே இருப் பாள். இப்படியே சிறுவாடு சேர்த்து, மருமகளுக்குத் தெரியாமல் அவள் பணம் பண்ணியிருந்தாள். அலைந்து ஆடித் திரிவது எத்தனை நாள்? ஆயிஸா பீவியின் கடைமேலே அவளுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தது. ஹனீபா ஊருக்குப் போனதில் ஆச்சிக்குப் பேரானந்தமேதான். 

ஆயிஸா எரிச்சலோடு, “தம்பி எப்பப் பஸ் ஏறப்போறான்னு வந்தி களா? காத்துக்கிட்டு இருந்தாப்போல வந்திட்டிகளே?” என்றாள். 

“இல்லே. ஒரு நல்ல வெலையா வச்சுக் குடுத்திடப்போறியோன்னு தருமுத் தேவரு விசாரிச்சுக்கிட்டு இருந்தாரு. அதனாலேதான் நான் கேட்டேன். இல்லாட்டி எனக்கென்ன பைத்தியமா?” என்றாள் ஆச்சி. 

ஆயிஸாவுக்கு அது பொய்யான பேச்சு என்று தெரியும். 

அதனால் அவள் துக்கத்திலும் குறும்பாக. “எம்மாம் பணம் வச்சிருக்கிறிய, ஆச்சி?’ என்று கேட்டாள். 

ஆச்சிக்கு உயிர்நிலை ஒடுங்கிவிட்டது. அவள் பேச்சைச் சட்டெனத் திருப்பி, “முந்தாநாளு வந்துதே. கப்பலு காயிதமா?” என்றாள். 

“ஆமா..மாம்” என்றாள் ஆயிஸா. 

‘அப்துல்லு வறாராமா?” 

“ஆமா ஆச்சி,ஆமா.” 

ஹனீபாவை உடனே அனுப்பச் சொல்லி அவன் தாய் எழுதியிருந்த கடிதந்தான் அது. ஆனால் அக்கப்போர் ஆச்சியின் வாயை அடக்க ஆயிஸா வேண்டுமென்றே மாற்றிச் சொன்னாள். 

“பாத்தியா? கோனாரு வூட்டுக் கோயிந்தி சொல்லிச்சு, ‘இருக்காது’ன்னு. இப்பல்ல புரியுது வெசயம்! இனிமே கடைகண்ணி, பழையபடி கண்ணுராக்கு வேலை.. அப்துலுக்கு, சம்பாரிக்கச் சொல்லியா தரணும்? அடீம்மா! அதன் தம்பி அஜீஸ்ஸுன்னாலும் ஒரு போக்கு. மொத்தனமா இருப்பான். அப்துல்லு காரியக்காரனாச்சே. சவருபோன பணத்தைச் சாக்கிலேதான் கட்டி எடுத்தாருவான்”. 

பணம் என்ற நினைப்பு வந்ததுமே ஆச்சியின் வாய் பிளப்பதை ஆயிஸா பார்த்துக்கொண்டே யிருந்தாள். அந்தப் பொக்கை வாயினுள்ளே, அவளுக்கு ஆச்சியின் பணத்தாசை மட்டும் தெரியவில்லை. வேறு உலகமே தெரிந்தது. அவள் கணவன் அப்துலும் அதனுள் உட்கார்ந்து வாயைப் பிளந்து கொண்டிருந்தான். பணத்தாசை பிடித்துத்தானே குருத்துப்போல ஒருத்தியை வாடி வதங்கப் போட்டுப் போய் விட்டான்? 

ஆயிஸாவுக்கு அந்த ஆச்சியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. “போங்க ஆச்சி, வேலையிருந்தாப் பாருங்க!” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள். அங்கே எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. 

ஆயிஸா தன்னுடைய கயிற்றுக் கட்டிலிலே சாய்ந்து படுத்துக் காண்டாள். காலின் முனையிலே டக்கென்று தலை இடித்துக்கொண்டது. அவ்விதம் இடித்துக்கொண்ட அதிர்ச்சியிலே அவள் நினைவுக் கோட்டை யின் திட்டி வாசல் திறந்துகொண்ட துபோல் இருந்தது. 

இந்தக் கட்டிலில்தான் அவளுக்கு முதல்முதல் ஆண்டவனின் வஞ் சனை வெட்ட வெளிச்சமாயிற்று. 

இந்தக் கட்டிலில்தான் முதல்முதல் அப்துல் வந்து உட்கார்ந்தான். “இல்லை, இல்லை. தவறு, தவறு!” ஆயிஸா பாக்கைக் கடிக்கப் போய் நாக்கைக் கடித்துக்கொண்டுவிட்டாள். 

அப்படித்தானே ஆயிற்று அவள் கதையும்! அப்துல் அவளை நிக்காஹ் செய்துகொண்டானே, அது ஊருக்குத் தெரியும்; உலகுக்குத் தெரியும். ஆனால் எப்படி அது ஆயிற்று? 

ஆயிஸாவுக்கு நாக்கு விண்ணென்று தெறித்தது. அள்ளிக் கொடுக்கும் நாக்கு, பல்லிலே அகப்பட்டுக்கொண்டு விட்டதே! 

அப்துல்லும் அஜீஸும் இரட்டையர்கள் என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அவர்களைப் பிறந்தது முதல் பார்த்து வரும் கிள்ளி மேட்டு மக்களுக்கே தினசரி ஆள்மாறாட்டம் ஏற்படுவதுண்டு. உருவத்தில்தான் அவர்கள் ஒரே அச்சு என்றால் குரல், குணம் ஆகிய எல்லாவற்றிலுமே அவர்கள் ஒரே அச்சுத்தான். தன்மையிலே நுணுக்கமான வேறுபாடு இருக்கலாம். 

கிள்ளிமேட்டு வாசிகள் அப்துல் என்று நினைத்துக்கொண்டு அஜீ ஸுடன் பேசுவார்கள். அஜீஸ் என்று எண்ணி அப்துலிடம் ஏமாறுவார் கள். இது தினசரி நடக்கிற காரியந்தான். 

ஒரு நாழிகை முன்னால் பிறந்த அஜீஸ், தம்பி; சற்றுப் பொறுத்துப் பிறந்த அப்துல், அண்ணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு ஈடு இணையே கிடையாது. 

ஊரிலே அந்த ஒரு வீடுதான் தனிக் குடும்பம். அதுவும் பால்ய வயசிலேயே பெற்றோரை இழந்த அந்த இரட்டையர்களுக்கு அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அந்நிய மதத்தினர் என்ற எண்ணமே என்றும் உதித்ததில்லை. ஊரார் கொண்டாடும் பண்டிகைகளில் அவர் களுக்கும் பங்கு உண்டு. ஊராருக்கெல்லாம் அவர்கள் பண்டிகைகளோடு சரி; ஆனால் இரட்டையர்களுக்குத் தங்களுடைய பங்கு சேர்ந்து இரண்டு பங்குப் பண்டிகைகள். ஊரோடு சேர்ந்து அவர்களும் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புதுக் கைலி வாங்கி உடுத்துக்கொள்வார்கள். புதுத் தொப்பி வாங்கி அணிவார்கள்: 

அப்துல் பண விஷயத்திலே பலே சூரன். அஜீஸ் காரியம் எதையும் கருத்தாகச் செய்து முடிப்பதிலே சூரன். சிறு சிறு குத்தகைகளை யெல் லாம் ஏலம் கேட்டு, எடுத்து நடத்துவது பரம்பரைப் பாத்தியமாய்ச் செய்து வந்த தொழில். ரோட்டுக் குத்தகை, முடைசல் குத்தகை, வாய்க்கால் வெட்டு, சாலைக் குளங்களின் பாசிக் குத்தகை – ஐந்நூறு, ஆயிரம் என்று சிறு சிறு கைமுதல் போட்டுச் சம்பாதிப்பார்கள். சொற்ப நிலமும் உண்டு. 

கிள்ளிமேட்டிலிருந்து கீரங்குடிக்கு நாலு மைல், சாலைக்குக் கப்பி போடும் வேலையை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அண்ணனும் தம்பியும் மாறி மாறி வேலைத் தலையை மேற்பார்வை பார்க்கப் போவார் கள். 

அன்று தம்பிக்காரன் அஜீஸ் போனான். கூலி வேலை செய்பவர் களுக்கு அன்றாடம் கூலி போட்டுவிடுவது வழக்கம். அஜீஸ் மடி’நிறைய அணாச் சில்லறைகளைக் கட்டிக்கொண்டு கீரங்குடிக்கு வந்து சேர்ந்தான். 

காதர் பாட்சாவின் கடை, சாலையை விட்டுச் சற்றுத் தள்ளி இருந் தது. கும்பலாகக் கூடி நின்ற ஆண் பெண்களுக்கெல்லாம் சிரித்த முகம் மாறாமல், சிணுங்கு முகம் காட்டாமல் அஜீஸ் கூலி போட்டு முடித்த அழகே தனி. 

இந்தச் சந்தடியையும் அஜீஸையும் வேலி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தாள் ஆயிஸா. காதருக்குத் தாயில்லா ஒரே பெண் அவள். கோஷா முறை கட்டி வராது அங்கெல்லாம். கிராமத்திலுள்ள மற்றப் பெண்கள் மாதிரித்தான் ஆயிஸாவும். காதர் பாட்சா கல்லாப் பெட்டியில் உட்காராதபோதெல்லாம் ஆயிஸாதான் கடையைப் பார்த் துக்கொள்ள வேண்டும். இல்லையோ, கடை முறுக்கைக் காக்கை கொண்டு போய்விடும். 

ஆயிஸாவுக்கு எல்லாம் நேற்றுப்போல இருந்தது. அஜீஸ் அன்று தலை நிமிர்ந்து பார்த்ததை அவள் நெஞ்சு இன்றுகூட மறக்கவில்லை. அந்தக் கண்கள்தாம் எப்படி அவளைப் பார்த்தன! ஆயிஸா உடலைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எப்படிப் பார்த்தாளோ அவளுக்கே இன்று தெரியாது. இதற்கு முன் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறாளே; நாணம் என்பது நாண்போல் எழுந்து அவள் உள்ளத்தில் எங்கேயோ போய்ப் பாய்ந்தது. அவள் தலையைக் குனிந்து கொண்டு விட்டாள். 

ஆயிஸாவின் தந்தை காதர் பாட்சா அஜீஸின் வயசுக்கு மீறிய சாமர்த்தியத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஆயிஸாவை விட அஜீஸ் மனங் குழம்பிப் பம்பரக் கிறுகிறுப்பிலிருந்து மீண்டு, “காக்கா! கொஞ்சம் தண்ணி வேணுமே! கொண்டாரச் சொல்றியளா?” என்றான். 

காதர் பாட்சா எழுந்திருக்கப் போனார். 

“நீங்க வாணாம், வாப்பா. இதோ வாரேன்” என்று இரண்டு துள்ளலில் ஓடினாள் ஆயிஸா. 

சாலையில் அப்போது பஸ் வந்து நின்றது. பஸ்ஸிலே வழக்கமாய் வருகிற வெற்றிலைக் கட்டு வந்திருந்தது. காதர் பாட்சா கட்டை இறக் கிக்கொண்டு வர எழுந்து சாலையை நோக்கி ஓடினார். போகும்போது, “தம்பி,குந்திருந்து தண்ணி வந்தாக் குடிங்க. இதாலே வந்துட்டேன்” என்று போனார். 

ஆயிஸாவுக்கு வெட்கத்துடன் சிரிப்புப் பொத்துக்கொண்டுதான் வந்தது. அஜீஸ் தண்ணீரைப் பருகாமல் ஆயிஸாவின் கண்ணைப் பருகிக் கொண்டிருந்தான். 

“தாகமிண்டீங்களே!” 

“ஆமா ஆமா, தாகந்தான்!”

“பின்னே, குடிக்கலாமே”. 

அஜீஸ் இரண்டே விழுங்கில் தண்ணீரைக் குடித்துத் தீர்த்தான். நன்றிச் சிரிப்பு ஒன்று சிரித்தான். ஆயிஸா உள்ளே சிட்டாக ஓடி விட்டாள். போன பிறகுதான், ‘போதுமா?’ என்றுகூடக் கேட்காமல் வந்துவிட்டோமே என்று அவளுக்கு இருந்தது. ஆனால் மீண்டும் வந்து கேட்க அவள் கால்கள் சண்டித்தனம் செய்துவிட்டன; இசையவே இல்லை. 

காதர் பாட்சா வந்ததும், “வாரேன் காக்கா! இன்னும் மூணு நாளைக்கு இங்ஙனேதான் வேலை” என்று சொல்லி அஜீஸ் விடை பெற்றுக் கொண்டு போனான். கோணிப் படுதா அசைந்தது. அதில் இருந்த ஓட்டையிலே இரண்டு வண்டுகள் சுழன்றன. 

பொழுதைக் கணக்குப் பண்ணிக் கழித்துக்கொண்டிருந்தாள் ஆயிஸா.கூலிபோடும் மாலை நேரம் மறு நாள் மயங்கி வந்தது. இன்று அஜீஸுக்குப் பதிலாக அப்துல் சில்லறையைக் கட்டிக்கொண்டு வந்தான். ஆனால் ஆயிஸா அவனை அஜீஸாகவே எண்ணிக்கொண்டுவிட்டாள். வருஷ வருஷங்களாய்ப் பார்த்தவர்களே தடுமாறும்போது, அசைப்பில், அரைப் பார்வையில், அந்தப் படபடப்பில் பார்த்த ஆயிஸா…

கிட்டத்தட்ட அஜீஸ் கண்ட நிலையிலேயே அப்துல் இன்று ஆயிஸாவைப் பார்த்தான். ஆயிஸாவின் இளந்கை தெரிந்தும் தெரியாமலும் அரும்பி நிற்பதைக் கண்டு பிரமித்தான். 

வேறு வேலைமேல் போயிருந்த அஜீஸ், ஆயிஸாவின் நினைப்பு வரவே விழுந்தடித்துக்கொண்டு அவளைப் பார்க்க ஓடி வந்தான். ஆனால் பாதி வழியிலேயே அப்துலுடன் அவனும் திரும்ப வேண்டியதாயிற்று. வரும் வழியெல்லாம் இருவர் உள்ளத்திலும் ஆயிஸாவே நிழலாடிக்கொண்டிருந்தாள். மட்டான மா நிறத்தாள்; கட்டுமஸ்தான சரீரத்தாள்; வயசான பருவத்தாள்; வண்டுக் கண்ணினாள்; அவளைப் பற்றித் தனக்குத் தான் தெரியும் என்று ஒவ்வொருவனும் எண்ணிக்கொண்டான். 

கீரங்குடியில் இன்னும் இரண்டு நாள் வேலை இருந்தது. அப்துல் தம்பியைப் பார்த்து, அஜீஸ், “நீ இரண்டு நாளைக்குக் காளவாய் வேலை யைப் பார்த்து முடித்துவிடு. நான் ரோட்டு வேலையைப் பார்க்கிறேன்!” என்று எப்போதும் வேலையைப் பங்கிட்டுக்கொள்வதுபோலச் சாதாரணமாகச் சொன்னான். 

அஜீஸுக்கு மண்டையில் அடித்ததுபோல் இருந்தது. ஆனால் மூன்று முறை வேலையை மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்ல நினைத்தான். மூன்று முறையும் தொண்டையில் ஏதோ அடைத்துக்கொண்டுவிட்டது. சொன்னால் தன் எண்ணம் ஜாடையாகவேனும் வெளிப்பட்டுவிடுமோ என்று சந்தேகம் தட்டியது. ஆயிஸாவின் அந்தக் கண்கள், ஓடி வா. ஓடி வா!” என்று வட்டமடித்தன. எப்படி வர முடியும், அண்ணனை மீறி? 

மறு நாள் அப்துல் சீக்கிரமாகவே கீரங்குடிக்குப் போய்விட்டான். கடை வாசலில் கிடந்த கட்டிலில் போய் உட்கார்ந்தான். கடை மூடிக் கிடந்தது. அப்துலுக்குச் சூழ்நிலை சரியாகப் படவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ஆயிஸா ஆட்டுக் குட்டி ஒன்றை மார்போடு அணைத்துத் தூ க்கிக்கொண்டு வந்தாள். அப்துலைக் கண்டதுமே அவள் கையும் மெய் யும் தம் வசமிழந்தன. தொப்பென்று ஆட்டுக் குட்டியைக் கீழே போட்டு விட்டுத் தலைப்பினால் உடம்பை இழுத்து மூடிக்கொண்டாள். சிரிக்கும் கண்கள் குமிழியிட்டன. 

இவ்வளவு அருகில் நின்று எப்படி அவனைப் பார்க்க முடிந்தது? உயிரை இழுக்கும் அந்தக் கண்கள் எங்கே? ஆயிஸா தடுமாறினாள். 

அப்துல் கூச்சத்துடன், “காக்கா எங்கிட்டுப் போயிக்கிறாக? கடை யைப் பூட்டுப் போட்டிக்கிறாகளே!” என்றான். 

இருதயத்தில் அலை அலையாக மோதும் அந்த இன்னிசைக் குரலா இது? இன்று அந்தப் பார்வை அவளைக் குருடாக அடிக்கவில்லையே!  இன்று அந்த வார்த்தைகள் அவளை ஊமையாக அடிக்கவில்லையே! 

‘ரொம்பத்தான் நோட்டம் பார்த்தால்! இரண்டு நாளுக்குள்ளே வேறே தினுசாக மாறிவிடுவார்களா!’ என்று ஆயிஸா மனத்துக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள். 

“வாப்பா சந்தைக்குப் போயிக்கிறாக! வந்துடுவாக!” என்று ஆயிஸா துள்ளியோடிய ஆட்டுக் குட்டியைத் தூக்கிச் சென்றாள். 

அன்று காதர் பாட்சாவிடம் அவன் தன்னைப்பற்றித்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டான். 

மறு நாள் அவன் வந்தபோதும் அந்தச் செல்ல ஆட்டுக் குட்டி ஆயிஸாவின் பிடிக்கு அகப்படாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்தது. அப்துல் அதை ஓட விடாமல் எதிரே நின்று மறித்துக்கொண்டான். அதைக் குனிந்து பிடிக்க முயன்றபோது மடியில் இருந்த அணாச் சில்லறை யெல்லாம் அவிழ்ந்து இறைந்தன. 

ஆயிஸாவும் அவனும் அவற்றையெல்லாம் பொறுக்கி எடுக்கு முன்னே ஆட்டுக் குட்டி பூவரச மரத்தின்மீது ஏறிவிட்டது “நம்பளை இது ஏமாத்திடிச்சு!” என்று ஆயிஸா குழந்தை போலத் தன்னை மறந்து, கைகொட்டிச் சிரித்தாள்; அப்துலும் கூடவே சிரித்தான். 

அவன் போன பிறகு, அன்றிரவு காதர் பாட்சா ஆயிஸாவைக் கூப் பிட்டு, “கிள்ளிமேட்டுத் தம்பி எப்படிக்கிறாக?” என்று நாத் தழுதழுக்கக் கேட்டார். 

ஆயிஸா தன் முகத்தைக் கைகளால் மூடி மறைத்துக்கொண்டாள். காதர் பாட்சாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. “அடுத்த மாசம் நிக்காஹ் ! தம்பிக்குக் கண்டிராக்டுப் பணம் கைக்கு வந்துடணுமில்லே!” என்றார். 

ஆயிஸா இப்போதும் முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் திரும்பிப் படுத்தாள். 

ஒவ்வொரு நாளும் அப்துல், தம்பியிடம் விஷயத்தைச் சொல்லிவிட நினைத்தான். நேரம் கழித்து இப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் காரணத்தைக் கேட்டால் அவனுக்கு மிகவும் சுலபமாக இருந்திருக்கும். அஜீஸ் சமையல் செய்து வைத்துவிட்டு அண்ணனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். பத்து நாள் ஆனபிறகு அஜீஸ் புகையும் விறகோடு போராடுவதைக் கண்ட அப்துல், “தம்பி, எத்தினி நாளைக்கு இந்த வம்பு? நிக்காஹுக்கு ஏற்பாடு செய்திட்டேன்” என்றான். 

அஜீஸ் அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தான், ‘எப்போது, ஏது’ என்பதுபோல. 

அப்துலுக்கு அதற்குமேல் சொல்ல முடியவில்லை. வெட்கம் வந்து தடுத்தது. அண்ணனும் தம்பியும் கூடிப் பேசி முடிவு கட்டாத காரியம் முதல்முதல் இதுதானே? 

“எந்த ஊரு?” என்றான் அஜீஸ். 

“ரொம்பத் தூரமில்லே, தம்பி. நாலஞ்சு கல்லுக்குள்ளாறதான்! பொண் பேசி முடிவாயிருச்சு. உன்னைக் கூட்டிப் போய்ப் பேசண மிண்டுதான் நெனச்சி. ஆனா நானே போயித்தேன்” 

“நாலஞ்சு மைலுக்குள்ளாறவா?”

“ஆமா தம்பி, கீரங்குடிக் காக்கா காதர் பாட்சா ஈக்கிறாகள்ளே, அதுக மகதான்-“. 

“என்னது, கீரங்குடியா?’” 

அப்துல் தலையை ஆட்டி அதை உறுதிப்படுத்தினான். 

‘கீரங்குடியிலே அந்த ஒரு பொண்ணுதானா? எத்தினியோ பொண்ணு!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அஜீஸ் சமாதானம் கொள்ளப் பார்த்தான். மனசு என்ன என்னவோ எல்லாம் எண்ணித் தவித்தது. அண்ணனிடம் அதற்குமேல் கேட்பது அவன் விவகாரங்களில் தலையிடுவதுபோல்தான் படும். 

அப்துல் பேசத் தொடங்கினான்: 

“தம்பி, நாளைக்குச் சாங்கிசன் ஆன பணத்தைக் கசானாவிலே போய் வாங்கியாந்து, அவுக்கிட்டே பத்து நோட்டிலே ஒரு நோட்டைக் கொடுத்திட்டு வந்திரு. உன்னைக் கொணாந்து கொடுக்கச் சொல்றேன் னிண்டு வந்திக்கிறேன். நீயுந்தான் அவுகளைக் கண்டுக்கிணமில்லே?” 

“ஆவட்டும்” என்று சொல்லிவிட்டு அஜீஸ் தூங்குவதுபோல் பாசாங்கு செய்தான். 

அவன் கீரங்குடிக்குப் பஸ்ஸில் வந்து இறங்கியபோது உச்சி வேளை. கடைவாசலிலே இரண்டு சேரிப் பெண்டிர் ஆயிஸாவுடன் சிரித்துப் பேசிக்கொண் டிருந்தனர். ஒருத்தி சிரிப்புக்கு அடங்காமல் அவிழ்ந்த கொண்டையை அள்ளிச் செருகிக்கொண்டாள். மற்றொருத்தி ஆண் மகன் வருவதை உணர்ந்து ஓரமாக ஒதுங்கிக்கொண்டாள். 

ஆயிஸா அப்போதுதான் அவளை நன்றாக நிமிர்ந்து கண்ணெடுத்துப் பார்த்தாள். ஏதோ மின்சாரம் தீண்டிவிட்டதோ! 

அப்துல்லாவின் தம்பி அஜீஸ் என்பவன் வரப்போகிறான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் அப்துலோடு இரட்டையாகப் பிறந்தவன் என்பது ம் அவளுக்கு நேற்றுத் தெரியும். அப்போதுகூட அவள் அவனைப் பார்த்திருப்பதாகச் சந்தேகப்படவில்லை. பார்த்தால் வித்தி யாசமே தெரியாது என்று அப்துல் நேற்று அவள் தந்தையிடம் சொன்னதை அவள் மறைவில் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் –

ஆயிஸா மயில் தோகையைச் சிலிர்ப்பது போல் சிலுப்பிக்கொண்டு ஸ்பிரிங் மாதிரி துள்ளி எழுந்தாள். அவள் கண்ணிலே ஈட்டி பாய்வது மாதிரி இருந்தது. இந்தக் கண்களுடைய பார்வை எங்கே, அப்துலு டைய பார்வை எங்கே? அந்த வித்தியாசம் அவள் பார்வைக்குத்தான் தெரிந்தது. யாரோ தன்னை வஞ்சித்துவிட்டது போலிருந்தது. 

நடையிலே கிடந்த கட்டிலில் அவனை உட்காரச் சொல்லக்கூட முடியாமல் ஆயிஸா கோணிப் படுதாவினுள் தலையைப் புதைத்துக் கொண்டாள். ‘இந்தக் கண்களுக்கு அல்லவா. என் மனசைப் பறி கொடுத்தேன்; ஆனால்–?’ என்று எண்ணும்போதே கண்ணீர் வடிந்தது. 

அஜீஸ் எப்படிப் பேசினான்! இன்னும் அவனுக்குத் தானும் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்பது தெரியாது. ஒரு சிறு மயிரிழையில் தொங்கிய ரத்தினத்தை மகாசமுத்திரத்தில் நழுவ விட்டுவிட்டோம் என்பது தெரியாது. 

“இந்த ஊரிலே காதர் பாட்சா அப்படீண்டு ஈக்கிறாகளாமில்லே?” 

“ஆமா..”. 

“எங்கிட்டு?” 

“இங்கிட்டுத்தான்…”-ஒரு விம்மல் சத்தம் படுதாவுக்குள்ளிருந்து கேட்டது. 

மின்னலும் இடியும் கண்ணையும் காதையும் பறித்துக்கொண்டு போனதுபோல் அப்படியே விறைத்துப்போய் நின்றான் அஜீஸ். பொட்டையன் பார்வைதான்! செவிடன் காதுதான்! 

“இங்கிட்டா, இங்கிட்டா?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டான். அருகில் கிடந்த கட்டிலில் தொப்பென்று விழுந்துவிட்டான். 

அந்தக் குரலும் பார்வையும்! 

“நீங்களா, நீங்களா… தெரியலியே, தெரியலியே!” ஆயிஸா முகத்தைத் திரையினால் மூடிக்கொண்டு அழுதாள். 

அல்லாவின் ஆணை! 


அப்துலுக்கும் ஆயிஸாவுக்கும் ‘நிக்காஹ்’ நடந்த அன்று அஜீஸ் சிங்கப்பூர் போகும் கப்பலில் ஏறிவிட்டான். இரட்டைப் பறவையிலே ஒரு பறவை பறந்தோடிவிட்டது. அந்த இடத்திலே இந்தப் பேடை வந்து சேர்ந்தது. 

இரவெல்லாம் மோட்டு வளையை வெறித்துப் பார்த்தது; துயிலெல் லாம் பெருமூச்சாக, கப்பலில் போன மச்சானுக்குத் தந்தியாக நீண்டது. பேச்சிலே எதையோ பறி கொடுத்துவிட்ட ஏக்கம்; பார்வையிலே எதையோ பறி கொடுத்துவிட்ட சோகம். அப்துல் பக்கத்திலே அந்தப் பேடை அனலில் இட்ட புழுவாகத் துடித்தது. 

இரண்டு வருஷங்கள் துன்பமாய் நெளிந்தன. அப்துலுக்கும் கசந்து விட்டது. அஜீஸ் காரியத்தைச் செய்து முடிப்பதில் கைகாரன். பண விஷயத்தில் அப்துல் கருத்தானவன். பணத்தாசை தங்கிவிட்டது; அதைச் செய்து முடிக்கும் சக்திதான் பறந்துவிட்டதே! 

எடுத்த குத்தகையெல்லாம் நஷ்டம்; செய்த வேலையெல்லாம் இரட்டிப்பு வேலை. காண்ட்ராக்டு கொடுக்கவே யாரும் முன்வரவில்லை. கையைக் கையைப் பிசைந்துகொண்டு அப்துல் நின்றான். சொற்ப நிலந்தான் மிச்சம். 

அப்துலுக்கு அஜீஸின் ஞாபகம் வந்தது. தனக்குள்ள பங்கை உடனே விற்றான். ஆயிஸாவின் கையிலே ஒரு பகுதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “நானும் சவரு போகப்போகிறேன்” என்றுகிளம்பினான். 

ஆயிஸாவுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. காதர் பாட்சா ஓடி வந்து, எனக்கு ஒரே மக. அதைத் தவிக்க விட்டுட்டுப் போகாதீங்க, தம்பி!” என்று காலைப் பிடித்துக்கொள்ளாத தோஷமாய்க் கதறினார். 

சும்மாண்டு இரிங்க. கப்பலுக்குப் போனவங்க கைநிறையக் கொண்டாந்தாக்கா சரியாப் போயிரும். இங்ஙனே இருந்திக்கிட்டு என்னாண்டு செய்யர்” என்று புறப்பட்டுவிட்டான் அப்துல். 

அதே ஏக்கம். மகளுடைய ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமலே காதர் பாட்சா படுக்கையில் விழுந்து, அதற்குப் பிறகு எழுந்திராமலே இரண்டு வாரத்தில் ‘மவுத்’தாகிவிட்டார். 

ஆயிஸா அன்றுமுதல் தனியானாள். அதற்குப் பிறகுதான் அவள் அத்தை மகன் ஹனீபாவைக் கூத்தாநல்லூரிலிருந்து அழைத்து வந்து வயிறு வளர்க்கக் கடையை நடத்தி வந்தாள். 

எட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அப்துல் போய்த்தான் சேர்ந் தானோ, போகாமலேதான் இருந்தானோ, ஆயிஸாவுக்கு ஒரு வரி எழுத வேண்டுமே! எழுதவே இல்லை. செப்பாலே அடித்த ஒரு காசு அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லை. ஏன் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். மற்றவருக்குத் தெரியாது. 

ஹனீபா வந்ததிலிருந்து அவள் எல்லாவற்றையும் மறந்துவிட நினைத்தாள். அல்லாவின் மீது அசையாத நம்பிக்கையால் ஓரளவு வெற்றியும் கண்டாள். ஹனீபாதான் அவளுக்குத் துணை; ஆறுதல்; அதனால் தான் அவளுக்குப் பெருமை, பற்றுதல் எல்லாம். அவன் வந்தது வேறொரு காரியத்துக்குச் சௌகரியமாக இருந்தது. அவனைப்பற்றி விசாரித்து வருஷத்துக்கு இரண்டு முறையாவது ஊரிலிருந்து ஆயிஸா பீவிக்குக் கடிதம் வரும். 

ஊர்ப் பெண்களுடைய வாயை அடக்க, அவர்களிடையே பெருமை யாக விளங்க அந்தக் கடிதம் அவளுக்கும் பயன்படும். 

“அவுகதான் எழுதிக்கிறாக!” என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள முயலுவாள். என்ன இருந்தாலும் பூரிப்பு வருமா? கீரங்குடிப் பெண்கள், ஆச்சிமார்கள் அவள் எதைச் சொன்னாலும் நம்பத் தயாராக இருந்தார்கள்; நம்புவது போலாவது காட்டிக்கொண்டார்கள். 

இனிமேல் அந்தக் கடிதங்கூட வராதே! 

ஆயிஸா தனியாகப் படுத்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். அவள் மூக்கைச் சிந்திச் சிந்தி எரிச்சல்கூட எடுத்துவிட்டது. 

“பீவி, பீவி!” வெளியிலிருந்து வாண்டையார் வீட்டு ஆச்சியின் குரல் வந்தது. எழுந்து பார்த்தாள். இருள் வந்துவிட்டது. முகத்தைத் தண்ணீரை விட்டுக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். 

“ஏதோ பஸ்ஸு வந்து நிக்கிது, பாரு!” 

வாண்டையார் வீட்டு ஆச்சி சந்தேகப்பட்டுத்தான். கூப்பிட்டாள். கண்டக்டர் பஸ் மீது ஏறினான். புழுதிப் படலத்தைக் கிளப்பிவிட்டு வந்த பஸ் தன்மீதே அது கவிந்து விடுவதைப் பொறுத்துக்கொண்டு நின்றது. 

ஆயிஸாவுக்கு நெஞ்சில் ஏதோ ஊறல் எடுத்தது. இருதயத்தின் ஒரு கோடியிலே பளிச்சென்று ஒரு மின்னல். 

இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் வந்த கோனார் வீட்டுக் கோயிந்தி ஆயிஸாவின் வீட்டு வாசலிலேயே நின்றாள் வேடிக்கை பார்க்க. 

புழுதிப் படலம் பஸ்ஸைத் திரையிட்டு மறைத்தது. ஆயினும் கோயிந்தி சொல்லிவிட்டாள்: “ஒரே பிரம்புப் பெட்டிங்களாக இல்லே வரிசை இறங்கறாப்பலே இறங்குது!” 

“கப்பலுக்குப் போன மனுசன் தாண்டி வர்றாருடியோவ்!” என்று கூவினாள் ஆச்சி.

எத்தனை தினுசான பெட்டிகள்! சாமான்கள்! பாய்கள், தலையணைகள் கூடவா? 

கோயிந்தி, “எப்படித்தான் இத்தினியும் பஸ் கொண்டுச்சு? ஆயிஸா வூடு அடங்காதே?” என்றாள். 

ஆயிஸாவுக்கு மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. பூமி, பஸ், கடை, சாமான்கள், வீடு, ஆச்சி, கோயிந்தி – எல்லாம் ‘கிர் கிர்’ என்று காலோடு தலையாகச் சுற்றின. 

பஸ், ‘புர்’ ரென்று சத்தம் போட்டுக்கொண்டு புறப்பட்டது; ஆச்சி அவசர அவசரமாகச் சாலைக்கு ஓடினாள். 

சில்க் கைலி, சில்க் சட்டை, சில்க் கோட்டு, சில்க் டை, சிங்கப்பூர் ஸில்க் குடை; அழகான தொப்பி, பூட்ஸ், தங்கத்திலே செயின் போட்ட கடிகாரம், பத்து விரலுக்கும் கல் பதித்த மோதிரங்கள், தங்கத்திலே பித்தான்கள், ஊக்குகள் – எல்லாம் தகதகவென்று டால் வீசின. 

வாண்டையார் வீட்டு ஆச்சி பிளந்த வாயுடன், “வாங்க ஐயா. வாங்க! சவரு போய் வாரீங்களா?” என்றாள். 

“காதர் பாட்சா வூடு இது தானே?” 

“ஆமாங்க. தெரிஞ்சுதான் கூப்பிட்டேன். அம்மா, ஆயிஸா! வந்திட்டாக! வந்திட்டாக!” என்று ஆச்சி அங்கிருந்தபடியே கூப்பாடு போட்டாள். “ஏலே, இங்ஙனே வாடா! இந்தச் சாமான் பெட்டியை யெல்லாம் கொண்டுபோய் வையிடா. ஐயா காசு கொடுப்பாக!” என்று மாட்டுக்காரப் பையன் ஒருவனைப் பார்த்துச் சிபாரிசு செய்தாள். 

‘சரக், சரக், சரக், சரக்’ என்று கால் பூட்ஸ் கட்டியங் கூற, காலடிச் சத்தம் வீட்டு நடையேறி அருகில் வந்தது. அத்தர் நெடி அதற்கு முன்னே வந்தது. 

“யாரு வூட்டுலே?” 

“ம்ம்…” முனகல் குரலைத் தவிர வேறு பதில் சத்தம் கேட்கவில்லை. 

“ஒரே இருட்டாக் கெடக்குதே! வூட்டிலே யாருமில்லியா?” 

கோட்டுப் பையில் கைவிட்டு எடுத்து, ‘சக்’கென்று தீக்குச்சி கிழிக்கும் சப்தம் ‘புஸ்’ என்று விரிந்தது. 

விரிந்த இரண்டு விழிகள் எதிரே இரண்டு விழிகளை மட்டும் பார்த்தன. 

ஆயிஸா குச்சி எரியுமட்டும் அந்தக் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். குச்சியைப் பிடித்த கை மீண்டும் ஒரு குச்சியை எடுத்துக் கிழிக்கப் போயிற்று. அவள் அந்தக் கையை அசைய வொட்டாதபடி இறுகப் பற்றிக்கொண்டாள். 

இன்ப வாடை ஒன்று வீசியது. 

“என்னைத் தெரியுதா? நான் யாருண்டு தெரியுமா, பீவி?’ என்று அந்த மின் அலை அவள் இருதயத்திலே பரவிப் பாய்ந்தது; கிசு கிசு வென்று மெல்லக் கேட்டது. 

ஆயிஸாவின் மற்றொரு கை அவன் வாயை வேகமாகப் பொத்தியது. “பேசாதிரிங்களேன், பேசாதிரிங்களேன்!” என்று ஆயிஸா மூச்சு முட்டத் தடுமாறினாள். 

மெளனம்; அமைதி. 

“அண்ணாச்சி ‘மவுத்’தாயிட்டாக, தெரியுமா?” 

“…”

“அவுக இங்கிட்டிருந்து வந்த மறு மாசமே மவுத்தாயிட்டாகளாம். எனக்குப் போன மாசந்தான் சேதி தெரிஞ்சிச்சு, ஆயிஸா…உடனே மறு கப்பல்லே கிளம்பிட்டேன்.” 

“நான் அஜீஸ், ஆயிஸா!” 


பொழுது விடிந்தது. 

கீரங்குடி மக்கள் எல்லாம் அக்கரைச் சீமைக்குப் போய் வந்திருக்கும் அப்துலை வரவேற்று உபசாரம் சொல்லக் கூடினார்கள். 

– அக்டோபர், 1954

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *