கட்டவிழும் கரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,871 
 
 

அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன் கரம் பற்றி வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும் என்ற ஆசை அவன் தாயார் தங்கம்மையின் மனதில் எழுந்து அடங்கியது.

அதற்கு முன்பாகவே அவனது குழந்தைகள் முந்திக்கொண்டு “அப்பா வந்தாச்சு” என்ற ஆனந்தத்தோடு கதவை திறந்து வைத்து அவன் விரல் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்கள்.

அவனது மனைவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு “பிளைட் லேட்டா? “எனக்கேட்டாள்.

“ஆமா ரெண்டு மணி நேரம் லேட்!” என்றபடியே காலில் அணிந்திருந்த ஷாக்சை கழட்ட ஆரம்பித்தான். குழந்தைகளுகு வாங்கி வந்திருந்த சாக்லெட்களைத் தர அவர்கள் இருவரும் இடத்தை காலி செய்துவிட்டு வராந்தாவில் விளையாடப் போனார்கள்.

“யாத்திரையெல்லாம் சுகமா இருந்திச்சா?” தங்கம்மை தனது மகனைப் பார்த்து அன்பொழுகக் கேட்டாள்.

“ம்” என்று முனகிவிட்டு உடை மாற்ற அவன் அறைக்குள் நுழைந்தான். தங்கம்மைக்கு இருப்பு கொள்ளவில்லை, சென்னைக்கு புறப்படும்பொழுதே தான் விரும்பிய பொருளை வாங்கி வரும்படி சொல்லி அனுப்பியிருந்தாள். சரவணன் கட்டாயம் வாங்கி வந்திருப்பான் என்று நம்பினாலும் மனசு குறுகுறுக்க ஆரம்பித்தது. பூட்டியிருந்த சூட்கேசை திரும்பத் திரும்ப பார்த்தாள்.

சரவணன் உடை மாற்றிவிட்டு குளியலறைக்குச் சென்றான். அவனை பின்தொடர்ந்து சென்று கேட்டுவிடலாமா என்று கூட நினைத்தாள். என்ன அவசரம் கொஞ்சம் பொறு, அவன் வாங்கி வந்தால் அவனே தந்து விடுவான் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். ஒருவழியாக அவன் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு டிபன் சாப்பிட அமர்ந்தான்.

” சரவணன் நான் கேட்ட பொருள் வாங்கீட்டு வந்தியா?” பொறுமை தாளாமல் மெல்ல கேட்டாள் தங்கம்மை.

“இல்லம்மா போன வேலையை முடிச்சுட்டு பிளைட் பிடிச்சு திரும்ப வரவே நேரம் பத்தல, அடுத்த தடவ மறக்காம வாங்கிகிட்டு வந்துடுறேன்!” இயல்பாய் சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டு போனவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே நின்றாள். கண்களின் ஓரம் கண்ணீர்த் துளிகள் துளிர்க்க ஆரம்பித்தது.

கடந்த காலமும் அந்த காலம் அவளைப் படுத்திய பாடுகளும் வாழ்வதற்காகவும், தனது மகனை படித்தவனாக்கவும் அவள் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் ஒட்டு மொத்தமாய் அவள் மனத்திரையில் நிழலாடியது.

அது ஒரு மார்கழி மாதம். இருள் கவிந்திருந்த அதிகாலையில் காய்ந்த தென்னைமர ஓலையை தீப்பந்தமாக்கி அதன் வெளிச்சத்தில் அருகிலிருந்த புளியமரத்தில் காற்றில் அசைந்து விழுந்து கிடந்த புளிப்பழங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கினாள் தங்கம்மை.

புளியமரத்தை சுற்றி பலமுறை வந்த பிறகும் ஐந்தாறு புளிப்பழங்களைத்தவிர அதிகமாக ஒன்றும் கிடைக்கவில்லை. கோபம் பொங்கிவர காற்றை சபித்தாள், காற்று அடர்ந்து வீசியிருந்தாலாவது புளியமரத்திலிருந்து புளிப்பழங்கள் விழுந்திருக்கும்.

கையிலிருந்த தீப்பந்தத்தை தரையில் குத்தி அணைத்துவிட்டு குடிசைக்கு வந்து விலகாத இருட்டை வெறித்தாள் அது சூரியனுக்கென்ன தூக்கம் என்று கேட்பது போல் இருந்தது.

இருளை தின்றுவிட்டு சூரியன் வாய் கொப்பளித்ததில் மங்கிய வெளிச்சம் தெறித்திருந்தது. தங்கம்மை பனைஓலை பெட்டியையும் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு மரவள்ளி பிடுங்கியிருந்த நிலத்துக்குச் சென்றாள்.

மரவள்ளி பிடுங்கப்பட்டிருந்த ஒவ்வொரு குழியிலும் மண்வெட்டியால் ஆழமாகத் தோண்டினாள். அறுந்துபோன மரவள்ளிக்கிழங்கின் சிறு துண்டுகளோ, அல்லது மண்ணுக்குள் வெகுதூரம் சென்று வேர்விட்டு நிலத்தின் உரிமையாளரின் பார்வையில் படாமல் போயிருக்கும் மரவள்ளிகிழங்குகளோ பூமியில் புதைந்திருக்கக்கூடும் என்ற எக்கப்பெருமூச்சுடன் குழியை ஆழமாகத் தோண்டினாள்.

சில குழிகளை தோண்டி தோண்டி ஏமாறுவதே மிச்சமாகிப்போனது. அன்று கொண்டு சென்ற அரிப்பெட்டியில் பாதிஅளவு மரவள்ளி கிடைத்தபோது சந்தோஷமாய் வீடு திரும்பினாள்.

தனது ஏழு வயது மகன் சரவணனை குளிக்கவைத்து பள்ளிக்கூடம் போக தயார்படுத்தினாள். அவன் தயாராவதற்க்குள் கொண்டுவந்த துண்டு மரவள்ளியின் தோல் நீக்கி வேக வைத்து காலை டிபனாக அவனிடம் நீட்டிய போது அதை சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்து சாப்பிடாமலேயே பள்ளிக்கூடம் கிளம்ப தயாரானான்.

தங்கம்மைக்கு மனசு கேட்கவில்லை. தனது புடவை முந்தியில் முடிந்து வைத்திருந்த ஐந்து ருபாய் நாணயங்களில் இரண்டை அவனிடம் தந்துவிட்டு “ஹோட்டல்ல தோசை வாங்கி சாப்பிடு!” என்றபோது சரவணன் முகம் மலர்ந்தது பள்ளிக்குப் புறப்பட்டான்.

புளிப்பழங்களின் தோடு உடைத்து விதை விலக்கி உலர்வதற்கென்று பாறை மீது வைத்தாள் தங்கம்மை. அவளது கால்த்தடங்கள் பதியாத புளியமரச் சோலைகளும், மரவள்ளி பிடுங்கப்பட்ட நிலங்களும் இல்லை எனும் அளவுக்கு கால்கள் நன்கு பரிச்சயமாகியிருந்தன.

அவளது கணவன் சின்னதுரை இருக்கும்வரை எந்தவித கவலைகளும் அவளுக்குள் வந்துசேரவில்லை. வட்டிக்கு பணம் கொடுத்து செழித்திருந்தான் அவன். ஒரு காலையும் நண்பகலுமற்ற பொழுதில் வட்டி பணம் வசூலிக்க சென்ற இடத்தில் பணம் கேட்டு தர மறுத்த அறுபத்தி நான்கு வயது பெரியவரின் கழுத்தை கோபத்தில் நெரிக்க, தனது உயிருக்கு பயந்து அருகிலிருந்த பாக்கு வெட்டும் கத்தியால் சின்னதுரையின் மார்பில் குத்த, ரத்த வெள்ளத்தில் சரிந்து அதே இடத்தில் உயிரை விட்டான் சின்னதுரை.

தனது பெட்டிக்கடையை இழுத்து மூடிவிட்டு காவல்நிலையம் சென்றார் பெரியவர். வாட்டசாட்டமாக ஆறடி உயரமிருந்த முப்பது வயது இளைஞனை நடக்ககூட திராணியற்ற பெரியவர் கொலை செய்த விஷயம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினாலும் கைக்குழந்தையுடன் இருந்த தங்கம்மையை இனி யார் காப்பாற்றக்கூடும் என்ற கவலை ஊர் ஜனங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் வரை இருந்தது.

கழுத்தில் கிடந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று குடும்பம் நடத்தியதில் இரண்டு வருடங்கள் நகர்ந்திருந்தன. அதன்பிறகு தினமும் ஆகாரத்திற்கென்று காசு தேடவேண்டும் என்ற எண்ணம் வர புளியமரங்களையும் , துண்டு மரவள்ளிக்கிழங்குகளையும் தேடி தொடர்ந்த அவளது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தன.

எப்பாடுபட்டாவது தனது மகன் சரவணனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவு அவள் உயிரில் கலந்திருந்தது. அரிசி வாங்கி சமைக்க காசு இல்லாத போது மண்ணைத் தோண்டி கிடைத்த மரவள்ளிக்கிழங்கின் துண்டுகள் இருவரின் வயிறுகளை கழுவியது. அவள் வாழ்க்கையில் மரவள்ளிக்கிழங்கு நீங்கா இடத்தைப் பிடித்திருந்தது.

“அத்தை நீங்க கேட்ட மரவள்ளிக் கிழங்கு வாங்கீட்டு வரலையின்னு வருத்தமா இருக்கா? “அவளது மருமகள் கேட்டபோது பழைய நினைவுகளிலிருந்து விலகி நிஜத்துக்கு வந்தாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல, ஊருக்குப் போய் சாப்பிட்டா போச்சு!” தனது உள்ளத்தின் உணர்வுகளை மறைத்துவிட்டு பதிலளித்தாள் தங்கம்மை.

அமெரிக்காவில் என்னதான் விலை உயர்ந்த பொருளை வாங்கி வந்து சமைத்து போட்டாலும் தங்கம்மையின் மனசு அவள் ஊரில் கிடைத்த மரவள்ளிக் கிழங்கின் மீதே படிந்திருந்தது. அது கிடைக்காமல் மனசொடிந்து எத்தனை நாளைக்குத்தான் காலத்தை கடத்துவது என்ற கவலை அவளை சூழ்ந்து கொண்டது.

அன்று உழைத்த உழைப்பும் சரவணனை படிக்க வைக்க பட்ட கஷ்டங்களுக்கும் இன்று நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருந்த போதிலும் உழைத்த கரங்களை கட்டி வைத்துக்கொண்டு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. பேசாமல் ஊருக்குச்சென்று விடுவது என்று தீர்மானமெடுத்தாள்.

யாருமற்றதொரு வீட்டில் தனிமையில் வாழ சரவணன் நிச்சயம் அனுமதிக்கமாட்டான் என்ற போதிலும் தனது முடிவை மாற்றிக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள்.

அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய சரவணனிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது அவள் நினைத்ததுபோலவே மறுத்தான். அவள் அடம் பிடித்ததில் வேறு வழியின்றி சரவணனும் ஒப்புக்கொண்டான் சற்று கோபப்பட்டபடியே.

ஊர் வந்த பிறகு ஒரு விடிகாலைப் பொழுதில் தனது சொந்த நிலத்தை மண்வெட்டியால் வெட்டி மண் மேடு கூட்டி அதில் மரவள்ளிக் கம்புகளை நட்டு தண்ணீர் ஊத்தியபோது கட்டியிருந்த கரங்கள் கட்டவிழ்வது போல உணர்ந்தாள் தங்கம்மை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *