கட்டக் கூடாத கடிகாரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 3,383 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத் தாம் துரம் என்று தட்டினாள். அது வாசலுக்கு மூடியாகவே இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒருவேளை உள்ளே மனிதக் கோளாறோ என்று சந்தேகப்பட்டு, கதவில் பொருந்தியுள்ள லென்ஸ் மாதிரியான வட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு, பின்னர் காலிங் பெல்லையும், கதவையும் அழுத்திப் பிடித்தும், அழுத்தமாய் அடித்தும் அல்லாடிக் கொண்டிருந்தபோது, லட்சுமி மாமி, சத்தம் சங்கமிக்காத குளியலறையில், கணவரின் ஆடைகளையும் தன் துணிமணிகளையும் துவைத்து முடித்துவிட்டு கல்லில் தேய்த்த மஞ்சன்ை முகமெல்லாம் அப்பி, ஷவர்பாத்தைத் திறந்து, மேலுாற்றாய் வந்த நீர்ச் சுருளில், தலையாடிக் கொண்டிருந்தபோது –

பஞ்சாபகேசன், கட்டிலில் உட்கார்ந்தபடியே, ஒரு தொள தொளப் பேண்டைச் சிரமப்பட்டு, உடம்புக்கு மேல் பூட்டிவிட்டு, கொடியில் தொங்கிய ஒரு சிலாக் சட்டையை எடுப்பதற்காக, கட்டில் விளிம்பில் கையூன்றி, பல்லைக் கடித்து, மூச்சையடக்கி, பெரும் பாடுபட்டு, தம் உடம்பைத் தானே துரக்கி நிறுத்தி, சுவரில் கை வைத்தபடி தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார்.

கதவு தட்டப்பட்ட சத்தத்தைப் பார்த்துச் சிறிது நிதானப்பட்டார். பிறகு, அது, மனைவி துணி துவைக்கிற சத்தம் என்று அவராகவே அனுமானித்து, பல்லி மாதிரி, சுவரில் கைகளை அப்பியபடி, கால்களை நகர்த்தப்போனார். அதற்குள் காலிங்பெல் ஒலியும், கதவோசையும் விநோதமான இசையாய் கேட்பதை உள்ளுறப் பருகினார். “யாரோ வந்திருக்கா, அட கடவுளே! எவ்வளவு நேரமாய்க் காத்துண்டு இருக்காளோ?”

பஞ்சாபகேசன், தமக்கே கேட்காத குரலில் பதறியடித்துச் ‘சத்தம் போட்டார்.

“லட்சுமி, யாரோ வந்திருக்கா, பாரேன். யாரோ வெளில காத்துண்டிருக்கா, ஏய் லட்சுமி, லட்சுமீ ஈ.ஈ.ஈ.”

லட்சுமி மாமிக்கு, கணவர் கூப்பிட்டது கேட்கவில்லை. அடுப்பு வேலையை முடித்துவிட்டு, ஆடைகளைத் துவைத்து விட்டு, வேலை முடிந்த திருப்தியில் கசகசவென்றிருந்த உடம்பில், அருவிபோல் தண்ணிர் படும்போது எவ்வளவு சுகம்! எவ்வளவு குளிர்ச்சி காலைதோறும் பாத்திரங்களைக் கழுவும்போதும், வீட்டைக் கூட்டும்போதும், குளிக்கப் போகிறோம், குளிக்கப் போகிறோம்’ என்ற ஆனந்த எதிர்பார்ப்பில் அத்தனை வேலைகளையும் அத்துபடி எய்ச் செய்து பழக்கப்பட்ட மாமிக்கு, வெளியே ஒலித்த சத்தம், குளியலறைக்குள் ஒலித்த நீர்ச்சத்தம்போல் தோன்றியது. போதாக்குறைக்குத் தன் நெடிய கூந்தலைக் காதுகளை மூடும்படி பரப்பிவிட்டு மாமி நீரில் லயித்துக் கொண்டிருந்தாள்.

பஞ்சாபகேசனால் பொறுக்க முடியவில்லை. கொடியில் கிடந்த எலிலாக் சட்டையைக் கைப்பற்றிய கையோடு, சுவரில் கைப்பதித்துத் தத்தித் தத்தி நடந்தார். அங்கும் இங்குமாய் ஆடிய தலையைச் சுவரோடு சேர்த்து அழுத்தியபடியே, மெல்ல மெல்ல கால்களை நகர்த்தி நகர்த்தி, கைகளை ஊன்றி ஊன்றி, வரவேற்பறைக்கு வந்தார். பலமான கதவோசையைக் கேட்டுக் காதுகளைக் குவித்தபடி வந்துட்டேன், வந்துட்டேன் என்று கூவியபடியே நகர்கிறார். வரவேற்பறையிலிருந்து, கதவுக்குப் போவதற்குக் கையூன்றச் கவர் இல்லை. நடந்துதான் போக வேண்டும். அவரைப் பொறுத்த அளவில், அது தலைகீழாக நடப்பது மாதிரி. என்ன செய்யலாம்?

“லட்சுமி. லட்சுமி!”

பதில் இல்லை.

டொக் டொக் டொக்.

கதவுச் சத்தம் வலுத்தது.

‘அய்யய்யோ. எவ்வளவு அவசரமாய் இருந்தால், இவ்வளவு நேரம் பொறுமையாய்க் கதவைத் தட்டுவாளோ?’

பஞ்சாபகேசன், யோசிக்கவில்லை. தம்மால், தனித்து நடக்க முடியாது என்பதும் அப்போது தெரியவில்லை. சுவரில் அப்பிய கரங்களை எடுத்தபடி, கதவை நோக்கி நடந்தார். ஒரே ஒரு தடவைதான் கால்களை மாற்றி வைத்தார். அதற்குள்,”அய்யோ. ஒ, காட்” என்று சொல்லியபடியே மல்லாக்க விழுந்தார்.அவர் விழுந்த வேகத்தில், அவர் கைபட்டு நாற்காலியும் மல்லாந்து சாய்ந்தது. நாற்காலியின் இடுக்குக்குள் கைகளை விட்டபடியே, பஞ்சாபகேசன், கால்களை அந்தரத்தில் துழாவிக் கொண்டிருந்தார்.

பஞ்சாபகேசன் போட்ட சத்தம் சின்னதுதான் என்றாலும், அது ஆன்மாவின் சத்தம் என்று அறிவுறுத்தப் பட்டவள்போல், லட்சுமி மாமி, புடைவையை, உடம்பு எங்கும் தாறுமாறாய்ச் சுற்றியபடியே, கதவை உடைப்பதுபோல் திறந்து, கணவனை அந்தக் கோலத்தில் பார்த்த பிரமிப்பில் நின்றாள். சில விநாடிகளில் பிரமை கலைந்து, அவர் கரங்களை நாற்காலிப் பிடியிலிருந்து விடுவித்து, அவரைத் துரக்கி நிறுத்தி, அருகே கிடந்த சோபாவில் உட்கார்த்தினாள்.

அவர் கையிலும் கால் முட்டிகளிலும் தெரிந்த ரத்தச் சிராய்ப்புக்களைப் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு களிம்பு பாட்டிலை எடுத்தபடியே, “என்ன ஒங்கபாட்டுக்கு இப்டியா நடக்கிறது? நேக்கு ஒரு குரல் கொடுத்தால் என்ன?” என்று செல்லமாய் அதட்டியபடியே, களிம்பை எடுக்கப் பாட்டிலைத் திறக்கப் போனாள்.

வெளியே இருந்து உள்ளே ஊடுருவி வந்த கதவோசை, அவளுக்கு அப்போதைய பதற்றத்தில் கேட்கவில்லை. ஆனால் அவருக்குக் கேட்டது. பல்லைக் கடித்தபடியே கத்தினார்.

“மொதல்ல கதவைத்திற. பாவம், எவ்வளவு நேரமாய் ஒருத்தரைக் காக்க வைக்கறது?”

லட்சுமி மாமி வேண்டாமல் எழுந்து, வெறுப்பாக நடந்து கதைவைத் திறந்தாள். கணவருக்குக் கேட்காத குரலில், “கதவு திறக்காட்டால் போக வேண்டியதுதானே” என்று தட்டும் கரங்களுக்கு வார்த்தைகளால் சூடு போட நினைத்தபடியே கதவை விலக்கினாள். சிரித்தபடியே உள்ளே வந்த மீனாட்சி, சோபாவில் தலைவிரி கோலமாய்க் கிடக்கும் பஞ்சாபகேசனைப் பார்த்துவிட்டு முகத்தை ஆச்சரியமாக்கினாள். பிறகு, “குத்துவிளக்குப் பூஜை சம்பந்தமாக் கேட்டுண்டு போலாம்னு வந்தேன்” என்றாள்.

மாமி பதிலளித்தாள்.

“அதுக்குத்தான் நாள் இருக்கே இப்ப என்ன அவசரம்?”

“இப்பவே பேரைக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணிக்கனுமாம், மாமி. நேக்கு வீட்டுல அவசரம் வேலையை நடுவுல விட்டுட்டு வந்தேன்.”

“கதவைத் திறக்காட்டி போயிட்டு அப்புறமாய் வந்து இருக்கலாமே. உன்னால மாமாக்கு எவ்வளவு கஷ்டம் பார். என்னோட உடம்பையும் பார்.”

புடைவையை ஒழுங்காய் உடுத்தாமல், நீர்சொட்டும் தலையோடு நின்ற மாமியை, மீனாட்சி நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்டு, “சாரி சொல்லப் போனாள். அதற்குள் வேறுவகையான சத்தங்கள் கேட்டன. அவை ஒலித்த திசையையும் அவற்றை ஒலிக்க வைத்த மனிதரையும் மீனாட்சி அதிர்ச்சியோடு பார்த்தாள். மாமி மெளனமாகப் பார்த்தாள்.

பஞ்சாபகேசன், களிம்புப் பாட்டிலை எடுத்து, டைனிங் டேபிளில் எறிந்தார். முன்னால் கிடந்த நாற்காலியைக் காலால் கண்டி விட்டார். கையில் கிடந்த கடிகாரத்தைக் கழற்றி வீசி அடித்தார். பிறகு கால்களைத் தரையில் உதைத்தபடியே, தனது தலையில் தம் கரங்களால் மாறி மாறி அடித்துக் கொண்டார். மாமியைப் பார்த்துப் பல்லைக் கடித்தபடியே பலம் கொண்ட மட்டும் தலையிலடித்துவிட்டு, பிறகு அடித்து முடித்த களைப்பில் ஆவேசம் அடங்காமல் முகத்தைக் கோணல்களாக்கிக் கொண்டிருந்தார்.

மீனாட்சி, இங்கிதம் தெரியாமல் அங்கேயே கேட்டாள்:

“என்ன மாமி இது மாமா இப்படிப் பண்றார்”

“ஒண்ணுமில்ல, ஒன்னைக் காக்க வச்சுட்டேனாம். மாமாக்கு பொறுக்கல்ல.”

“அதுக்காக இப்படியா? எங்காத்துல இப்டி நடந்தால், நான் ஒரு நிமஷம்கூட இங்கு இருக்கமாட்டேன். பெட்டி படுக்கையோட பொறந்தாத்துக்குப் போய்டுவேன்.”

லட்சுமி மாமிக்குக் கோபமும் வந்தது. கூடவே ரோஷமும் வந்தது.

“நோக்கு இப்போ இருபத்தெட்டு வயசு இருக்குமா? கல்யாணம் ஆகி ஆறு வருஷந்தானே இருக்கும் கடைசி வரைக்கும் ஒன் ஆத்துக்காரர் எப்டி இருக்கார்னு பாருடி. இவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கையும், இவர் என்னை வச்சுண்டிருந்த நேர்த்தியும் லோகத்துல யாருக்கும் வராதுடி. ஏதோ இப்போ, அதுவும் ஒனக்காக ஏதோ பண்ணிட்டார்னு ரொம்பத்தான் ஜட்ஜ்மென்ட் கொடுக்கறே.”

“அய்யோ மாமி. என்னைத் தப்பாய் நினைச்சுட்டேள். நான் ஒங்களுக்குத்தான் வக்காலத்து வாங்கறதா நெனச்சுப் பேசிட்டேன். தப்புத்தான், மன்னிச்சுடுங்கோ.”

மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன்னையே மலங்கப் பார்த்த மீனாட்சியைப் பார்க்கப் பார்க்க மாமிக்குக் கண்கள் பனித்தன. “குழந்தையைச் சாபம் போடற மாதிரி வைதுட்டேன். பகவானே! என் வாயில ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளை வைக்கறே?”

மாமி பிராயச்சித்தம் செய்பவள்போல் பேசினாள்.

“ஏண்டி, நழுவப் பார்க்கிறே? ஒங்கிட்டே நேக்கு உரிமை இல்லையா? கிட்டே வா. குங்குமம் வைக்கிறேன். என்னோட பேரையும் ரிஜிஸ்டர் செய்துடு, வாடி,”

மீனாட்சி, தயங்கித் தயங்கி மாமியை நெருங்கினாள். மாமியின் பெருவிரல் அவள் நெற்றிப் பொட்டை வருடியபோது அவள் மெய் சிலிர்த்தாள். “எப்பவும் குங்குமத்தை ஆள்காட்டி விரலால் எடுக்கக்கடிடாது. பெருவிரலால்தான் எடுக்கணும். இதெல்லாம் இந்தக் காலத்துப் பொம்மனாட்டிகளுக்குத் தெரியாது” என்று மாமி திலகமிட்டபடி சொன்ன வார்த்தைகளை மீனாட்சி காதுகளில் பயபக்தியோடு வாங்கிக் கொண்டாள்.

மெளனித்து வெளியேறப்போன மீனாட்சி, லட்சுமி மாமியையும், பஞ்சாபகேச மாமாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பெண் ஆஜானுபாகு என்று மாமியைச் சொல்லலாம். செம்பருத்திப் பூ நிறம். இந்தரை அடிக்கும் மேலான உயரம். இந்த இம்பது வயதிலும் தொந்தி போடாத வயிறு. உடையாத உடம்பு. பாதாதி கேசம் வரை நேர் கோடாய் இருக்கும் மேனி, லேசாக நரையோடிய கூந்தல்.

மஞ்சளும் குங்குமமும் கலந்து மங்களமாய்ப் பொங்கிக் கொண்டிருப்பதுபோன்ற முகம். ஆனால் மாமா, மாமி அளவு உயரந்தான். நிறம்தான். என்றாலும் உள்ளடங்கிய உடம்புகாய்ந்து போய்க் கட்டையாய்ப் போனது போன்ற கால் கைகள். ஆனாலும் கண்ணாடி வழியாகப் பார்க்கும் அந்தக் கண்களிலோ எவரிடமும் காணப்படாததுபோன்ற ஒரு ஜீவ ஒளி. குழந்தைத்தனமும் மேதைத் தனமும் இரண்டறக் கலந்து ஒளிமயமானது போன்ற விழிப்பு.

மீனாட்சி போனதும், லட்சுமி மாமி, நிதானமாக குனிந்து கீழே கிடந்த கடிகாரத்தை எடுத்தபடி கணவனை நோக்கி நடந்தாள். உடனே அவர் குழந்தையைப்போல் தம் கையை நீட்டினார். கடிகாரத்தை அவர் மணிக்கட்டில் கட்டிவிட்டு, டைனிங் டேபிளில் இருந்த கண்ணாடி டம்ளரை உடைத்தாலும், உடையாமல் கிடந்த களிம்புப் பாட்டிலைக் கொண்டு வந்து கணவரின் உராய்ப்புகளுக்குக் களிம்பிட்டாள். பஞ்சாபகேசன் குழந்தைபோல் கேட்டார்:

“லட்சுமி லட்சுமி என்னைத் திட்டேன். திட்டேன். அப்போத்தான் நேக்கு திருப்தி. ரொம்பத்தான் துஷ்டனா நடந்துக்கறேன். டீ..திட்டேன், திட்டேன்”

மாமி ‘திட்டினாள்’.

“ஏன் குழந்தை மாதிரி என்னை இம்சிக்கிறேள்? ஒருத்தி காத்துண்டிருந்தானு இந்தக் கூத்தடிச்சேளே, ஆபீஸ்லே நமக்காக எத்தன பேர் காத்துண்டிருப்பா? சட்டையைப் போடுங்கோ. நான் பத்து நிமிஷத்துலே ரெடியாயிடறேன்.”

பஞ்சாபகேசன், அசல் குழந்தை மாதிரி தலையாட்டியபோது, மாமி அவசர அவசரமாக குளியலறைக்குள் போனாள். பத்து நிமிடத்தில் வெளியே வந்து, தன்னுடைய பட்டுப் புடைவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். சில நகைகளை எடுத்துப் போட்டுக் கொண்டாள். கணவன் முகத்தில் கண்ணாம்புபோல் தெரிந்த பவுடர் துரள்களை முந்தானையால் துடைத்து விட்டாள்.

“அய்யய்யோ. ஏன்னா, ஷர்ட்லே இங்க் போட்டுட்டேனே” என்று சொல்லியபடியே அவரது சட்டைப்பித்தான்களைப் பிரித்து அவரிடமிருந்து அதை அப்புறப் படுத்திவிட்டு, வேறொரு சட்டையை மாட்டிவிட்டாள். பிறகு, ‘உம் புறப்படுங்கோ.” என்றாள்.

லட்சுமியின் தோளில் ஒரு கையைப் போட்டபடி, பஞ்சாபகேசன் நடந்தார். மாமி, தன் வலக்கையை, அவருடைய இடுப்போடு சேர்த்துக் கோர்த்துக் கொண்டாள். அவர் நடக்கிறார் என்றுதான் பேரு, மாமி கிட்டத்தட்ட அவரைத் துரக்கிக் கொண்டே போனாள். பஸ் நிலையத்துக்குப் போகும் வழியில் பார்த்தவர்களை எல்லாம் பார்த்து, “எங்காத்துல இன்னிக்கு ரிட்டயர் ஆகறார், தெரியுமோ. சென்ட் ஆஃப் பார்ட்டிக்காகப் போறோம்” என்றாள்.

பார்த்தவர்களில் பாதிப்பேர் அவளுக்காகவும், மீதிப்பேர் அவருக்காகவும் பரிதாபப்பட்டுக் கொண்டார்கள். ஒரு நாளா இரு நாளா? இந்த அஞ்சு வருஷமா, மாமி காலைல இந்த மாமாவ பஸ் நிலையத்துக்கு இப்படித் துரக்கிண்டு போறதும், அவரோடு ஆபீசுக்குப் போயி, அங்கேயும் ஆபீஸ்வரை துரக்கிண்டு போறதும், அப்புறம் சாயங்காலமாய் பெசன்ட் நகர் பஸ் ஸ்டாண்டுல மூன்று மணியிலேருந்து மாமாவுக்குத் தவம் கிடக்கறதும், எல்லாருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு மழை வந்துவிட்டால், மாமி துடிக்கிற துடிப்பு சொல்லி மாளாது.

ஆட்டோவையோ டாக்சியையோ பிடிச்சிண்டு ஆபீசுக்கு ஒடுவாள். மாமா, மத்தியானம் இரண்டு மணியிலிருந்து எப்ப வேணாலும் ஆபீசிலேருந்து வீட்டுக்குப் பொறப்படலாம். ஆகையால் மாமி மூன்று மணிக்கே பஸ் நிலையத்தில் இருக்கணும். ஒரு அஞ்சு நிமிஷம் தவறிட்டாலும் பஞ்சாபகேசன் கைக்கடிகாரத்தை வீசி எறிவார். தலையையும் வீசி எறிவதுபோல அடிச்சுக்குவார். ஒரு வருஷமா. ரெண்டு வருஷமா. டெல்லியில் இருந்து வந்த நாள் மொதலா இதே கதைதான்.

மாமி, தங்களை அனுதாபத்தோடு பார்த்தவர்களை, அன்பொழுகப் பார்த்தபடியே, கணவனோடு நடந்தாள். “இவங்களுக்குப் பிள்ளையா குட்டியா? எதுக்காக இந்த மாமி இப்படி அவஸ்தப் படனும் ஒரு வேலைக்காரனைப் போட்டால் மாமாவை கூட்டிண்டு போறான். எல்லாம் பணம் போயிடுமோன்னு பயம், மாமி கஞ்சம். மாமா மகா கஞ்சம்” என்று அவ்வப்போது வம்பு பேசும் வாய்கள் இப்போது புன்னகையாய் விரிவதை மாமி பார்த்தாள்.

“வேலைக்காரன்னு சொல்றேள். எங்காத்துக்காரர் அடிக்கடி தடுமாறி விழுறவர். வேலைக்காரன், ஆத்திரத்துலே அவர ரோட்ல தள்ளிட்டுத் தானா விழுந்துட்டார்னு சொல்லிட்டா அப்போ இதே நீங்கதான், மாமிக்கு என்னப்பா வந்தது குத்துக்கல்லு மாறி இருக்கானே? போய்க் கூட்டிண்டு போனா என்னன்னு கேப்பேள். ஆனாலும் நான் ஊர் வாய்க்காக, இவரை இப்படி செமந்துட்டுப் போறதுல இதுல எனக்கும் ஒரு சொகம் இருக்கு. உடம்ப, உடலுறவுக்கு மட்டுமுன்னு நினைக்கிற சின்னஞ் சிறுசுகளா — ஒங்களுக்கு இந்த சொகத்தோட அருமை தெரியாது.”

சாஸ்திரி பவனில், அந்த அலுவலகத்தில் சுமார் நூறு பேர் கட்டியிருந்தார்கள். பஞ்சாபகேசனின் உதவி அதிகாரி விழாவுக்கு வந்த பல்வேறு அதிகாரிகளையும் ஊழியர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். யாருடைய ஒய்வு விழாவுக்கும் இந்த மாதிரி கூட்டம் கிடையாது என்று பேசிக் கொண்டார்கள். பெண்கள் கண்களில் நீர் பொங்கின. ஆண்கள் மனத்தில் ஏதோ ஒருவித அடைப்பு.

மாமியும், மாமாவும், மேடையில் நடு இருக்கைகளில் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். ஒருவர் மாற்றி ஒருவராகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், “மாமா இப்போது ஒரு குழந்தை அவரது மனைவி இப்போது அவருக்கு அன்னை. இவருக்குச் செய்வதுபோன்ற தொண்டை, எந்த அன்னையும் செய்திருப்பது சந்தேகம்’ என்றார். இன்னொருவர், பத்திரிக்கையாசிரியர் “சோ எழுதிய எங்கே பிராமணன் என்ற நாவலைப் படித்தேன். அவர் மட்டும் இந்த பஞ்சாபகேச மாமாவைப் பார்த்திருந்தால், தம் கேள்விக்கு விடை கண்டிருப்பார். மனத்தாலும் எதிரிக்குத் தீங்கு நினைக்காத மா மனிதர் இவர். பகவத் கீதையின்படி ஒரு பிராமணன் வாழ்கிறான் என்றால் அது இந்தப் பிராமணன் தான். பிராமணன் என்ற நினைப்பில்லாத மிக உயரிய பிராமணன் இவர்” என்றார்.

பேச்சாளர்களுக்கு மத்தியில், கணவரோடு மாலையும் கழுத்துமாய் உட்கார்ந்திருந்த லட்சுமி மாமி, வாழ்க்கையின் முன்படிக்கட்டில் நின்றபடி மேல்நோக்கி நடந்தாள். அந்தக் காலத்திலேயே கணக்கில் எம்.ஏ. பட்டம் வாங்கிவிட்டுப் புது தில்லியில் அதிகாரியாகப் பணியாற்றி இவரை முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைப்பிடித்த ரம்ய காட்சி கண் முன்னால் வந்தது.

“மாட்டுப் பொண்ணு அசல் மாடுதான். பஞ்க துரதிருஷ்டக்காரன்” என்று அக்கம் பக்கத்தில் பஞ்சாபியாய்ப் போன பிராமணப் பெண்களும் மற்றவர்களும் நையாண்டி செய்யும்போது, இவள், அவரிடம் அழுவாள். அப்போதெல்லாம், “அடி பைத்தியம். பன்றிகளைக் கண்டால் யானைதான் தானாய் விலகிப் போகணும். ஒருவேளை என்னைக் கல்யாணம் பண்ணிண்டதாலே நீ துரதிருஷ்டகாரியோ என்னவோ? நேக்கு எம்.ஏ.வுல பஸ்ட் கிளாஸ் கிடச்சதைவிட, எடுத்த எடுப்பிலேயே ஜேர்னலிஸ்ட் டைப் உத்தியோகம் கிடைச்சதைவிட நேக்கு நீ கிடைச்சதுதான் சூப்பர் கிளாஸாக்கும்” என்பார்.

மாமி கண்களை துடைத்துக் கொண்டாள்.

“அப்போதெல்லாம் எப்படி இருப்பார் தில்லியில் வின்டர் வரும்போதெல்லாம் டை கட்டி, கோட் போட்டுண்டு வந்தார்னா பார்க்கறதுக்கு எப்படி இருக்கும் இவரோட பார்க்காதா பிக்சர் இல்ல, கேளாத கச்சேரி இல்ல. போகாத இடம் இல்ல. வாங்காத பொருள் இல்ல. பொறந்தாத்துலேருந்து அப்பா, அம்மா இறந்த துக்கம் தாங்காமல் வந்தபோது, அவரை இருபது வருஷமா ஒரு முணுமுணுப்பு இல்லாமப் பேணினவர். என்னோட அக்கா வாழாவெட்டியா வந்தப்போ, அவளுக்குச் சாகறவரைக்கும் இருக்க இடம் கொடுத்தவர். பத்து வருஷத்துக்கு முன்னால வரைக்கும், இரு வார்த்தை கட்ட அதட்டிப் பேசாதவர்.

பகவான் நேக்கு ஒரு குழந்தைதான் கொடுக்கல்ல. இவரையாவது நன்னா வச்கக்கக் கூடாதோ? பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்க்கின்ஷன் நோயோ… பக்கவாதமோன்னு ஏதோ வந்து இவர என்ன பாடு படுத்துது இவர மட்டுமா, இவர வச்சு என்னையும் என்ன பாடு படுத்துது ஒருவேளை, ஒரு காலத்துல அவர் சொன்னமாதிரி நான்தான் துரதிருஷ்டக்காரியோ. இதுவரைக்கும் ஆபீஸ் ஆபீஸ்னு அடிச்சுண்டார். இனிமே வீட்டுக்குள்ள எப்படி இருப்பாரோ? என்னாலதான் எங்கேயாவது நல்லது கெட்டதுக்குப் போக முடியுமா?

லட்சுமி மாமி திடுக்கிட்டாள். கணவர் நடக்க முடியாமலும் அப்படி நடந்தால் கீழே விழுந்து எழ முடியாமலும் இருக்கும் பரிதாப நிலையைப் பெரிதாய் நினைக்காமல், தான் படும் பாட்டைப் பெரிதாய் நினைத்ததில் சிறிதாய்ப்போனவள்போல் கூனிக் குறுகினாள். கூட்டத்தைச் சங்கோஜமாகப் பார்த்துவிட்டுத் தலை கவிழ்ந்தாள்.

பேச்சாளர்கள், புகழாரம் முடிந்தது. மனைவியின் தோளைப் பற்றியபடியே பஞ்சாபகேசன் ஏற்புரைக்கு எழுந்தார். தில்லியில் “ரெஃபரன்ஸ் இந்தியா’ புத்தகத்தைத் தயாரிப்பதிலும் நேருஜியின் சொற்பொழிவை, தமிழாக்கம் செய்வதிலும் தமக்கு ஏற்பட்ட பெருமித உணர்வை நினைத்தார். தம் கட்டுரைகளை மேலதிகாரிகள் தங்கள் பெயரில் பிரசுரித்துச் சபாஷ் வாங்கிக் கொண்டதும், பிறகு உண்மை தெரிந்த தலைமை அதிகாரி, அவர்களை டிரான்ஸ்பர் செய்யப் போனதும், தாம் தலையிட்டு, மேலதிகாரியிடம் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கெஞ்சியதும், மாமாவுக்கு, நினைவுகளாய், நிகழ்ச்சிகளாய் வந்தன.

அதோடு, தம் பேச்சு மிக அருமையாக எடிட் செய்யப் பட்டிருப்பதாகவும், அப்படிச் செய்தவருக்கு தம் நன்றியைத் தெரிவிக்கும்படியும் நேருஜி டிபார்ட்மெண்டுக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. உடனே தலைமை அதிகாரி, தன்னைப் பாராட்டிச் சர்க்குலர் போட்டு, நோட்டீஸ் போர்டில் தொங்க விட்டதும் நினைவுக்கு வந்தது.

அவற்றையெல்லாம் சொல்லத்தான் போனார். ஆனால் அவற்றைவிட, ஒர் உருவம் அவர் கண் முன்னால் தோன்றியது. நினைவுகளின் சுமையில் அதுமட்டும் சுவையாக வந்திருக்க வேண்டும். அவர் எடுத்த எடுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்த சிநேகிதி, தோழி – மனைவி – தாய் – ஆதிபராசக்தி கண் முன்னால் தோன்றி இருக்க வேண்டும்.

கூட்டத்தை எதிர்நோக்கி நின்ற பஞ்சாபகேசனால் பேச முடியவில்லை. லேசாகத் திரும்பினார். மனைவியை விழி ஆடாமல் பார்த்தார். இடுப்பின் இருபக்கமும் கிடந்த கைகளை மெல்லத் தூக்கினார். உயரே உயரே கொண்டு போனார். அவளைப் பார்த்தபடியே கை கூப்பினார்.

லட்சுமி மாமி, “ஏன்னா, ஏன்னா” என்று பதறி எழுந்தபோது, பஞ்சாபகேசன் கும்பிட்ட கரங்களை இறக்காமல், கொட்டும் விழிகளைத் துடைக்காமல், உடலாட, உயிராட நின்றார். பிறகு கூட்டத்தைப் பார்த்து மீண்டும் திரும்பி, “எல்லாத்துக்கும் இந்த உத்தமி. இந்த’ என்றார்.

பஞ்சாபகேசனால் பேச முடியவில்லை. கூட்டத்தினரின் கண்களிலும் ஒட்டு மொத்தமாய் நீர் சுரந்தது. மாமாவை விட்டுவிட்டு, மாமியையே பார்த்தார்கள். ஆண்கள், தத்தம் மனைவியரை ஒப்பிட்டுப் பார்த்தார்கள். பெண்களோ, ‘ు பயத்தோடும் பக்தியோடும் பார்த்தாலும் அந்தப் பார்வைகளுக்குள் தங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்ற அச்ச உணர்வும் மறைந்திருந்தது.

எப்படியோ ஒய்வு விழாவை முடித்துவிட்டு, இருவரும் வீட்டுக்குத் திரும்பும்போது இருட்டிவிட்டது. அலுவலக ஊழியர்கள் இருவர், அவர்களை டாக்சியில் கொண்டுவந்து போட்டுவிட்டு அழுதபடியே போய்விட்டார்கள். இதுவரை அழுதழுது மாமாவுக்குச் சில சின்னச் சின்ன உதவிகளைச் செய்தவர்கள், இப்போது நிஜமாகவே அழுவதைப் பார்த்து விட்டு, மாமி அழுதாள். மாமாவும் அழுதார்.

மறுநாள், காலையில் எழுந்ததும் மாமா காபி சாப்பிட்டபடியே,”வெந்நீர் ரெடியா?” என்றார். உடனே லட்சுமி, “இனிமேல் ஆத்துலதானே இருக்கப் போறேள், சாவகாசமா குளிக்கறதுக்கென்ன?” என்றாள்.

பஞ்சாபகேசன் மாமா, பாதி காபியை நல்லவேளையாக வீசாமல் தள்ளி வைத்தார். மாமி புரிந்து கொண்டாள். “நேக்கு ஒடம்புக்கு முடியல. கழுத்துல கட்டி வந்துருக்கு ஒரே வலி. டாக்டர்ட்டே காட்டலாமுன்னு ஒரு வாரமா நெனைக்கிறேன். அதனால்தான் வெந்நீர் ரெடியாகல. காபியைக் குடிங்கோ” என்றாள்.

அவ்வளவுதான்.

பஞ்சாபகேசன், அருகே இருந்த ரேடியோ பெட்டியைக் காலால் இடறினார். அது பாட்டோடு பாட்டாய்த் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்தது. அதோடு நிற்காமல் தம் பனியனைப் பல்லைக் கடித்தபடியே கிழித்தார். தலையிலும் அடித்துக் கொண்டார். பிறகு, “ஒடம்புக்கு ஒண்னுன்னா டாக்டர்ட்டே போகாம ஏன் இருந்தே. என்னை மட்டுமே கவனிச்சா எப்படி? உன்னைக் கவனிக்க வேண்டாமா? போ, சீக்கிரம் போ” என்று கத்தினார்.

மாமி, கண்களைத் துடைத்துக் கொண்டாள். மாமா கட்டிலில் படுத்தார். மாமி அருகே வந்து “சமர்த்தாய்த் துரங்கணும். நேக்கு டாக்டரப் போய்ப் பார்த்துட்டு வர நேரமானாலும் ஆகலாம்” என்றாள். மாமா குழந்தையைப் போல் தலையை ஆட்டினார். பிறகு கையை நீட்டினார். மாமியை வரும்படி சைகை செய்தார். மாமிதம் அருகே வந்ததும், அவள் கழுத்தைத் தடவி விட்டார்.

லட்சுமி மாமி, வீட்டைப் பூட்டி விட்டு வெளியேறினாள்.

காலையில் போனவள் மாலையில்தான் திரும்ப முடிந்தது. ஆயிரம் பரிசோதனைகள். ஏழெட்டு டாக்டர்கள். இப்போது வந்ததே பெரிய விஷயம்.

கணவர் எப்படி இருக்கிறாரோ என்று படபடப்பில், கதவைத் திறந்தாள். மீண்டும் கதைவை மூடினால் நேரமாகும் என்று பயந்தவள் போல் நடந்தாள். மாமாவைப் பார்க்க காலதாமதம் ஆகும் என்று கருதியவள்போல் அவசரம் அவசரமாகப் படுக்கை அறைக்குள் ஒடினாள். பஞ்சாபகேசன் துரங்கிக் கொண்டுதான் இருந்தார். மேஜையில் இருந்த பிளாஸ்க் காலி யாய் இருந்தது. வாழைப்பழத் தோல்கள்தான் இருந்தன.

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவர் துரங்குவதை அனுமானித்துக் கொண்டாள். திடீரென்று வரவேற்பறையில், “மாமி” என்ற சத்தம், லட்சுமி மாமி வெளியே வந்தாள். மீனாட்சி தன் கணவனுக்காகத் தான் செய்யப்போகும் காரியப் பெருமிதத்தில் பேசினாள். ‘மாமி, ஞாபகம் இருக்கோ. நாளைக்குக் கந்தசாமி கோயில்ல குத்துவிளக்குப் பூஜை பண்றோம். கமங்கலிப் பிராத்தனையும் செய்யறோம். ரெடியா இருங்கோ.”

லட்சுமி மாமி, சலனம் இல்லாத முகத்தோடு பதிலளித்தாள்.

“நான் வரல.”

“ஏன் மாமி.?”

“மாமா இன்னும் ஒரு மாசத்துக்கு மேலேயே உயிரோடு இருப்பார். என்னோட தாலிக்கு ஒண்னும் ஆபத்து வரல்ல.”

“என்ன மாமி கன்னா பின்னான்னு? நீங்க வராம நான் போகல.”

“அசடு. அப்படிப் பேசப்படாது. இங்கே வா. நான் சொல்றத யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்யுடி, நீ மாவிளக்கு எத்திறியோ இல்லியோ. ஒனக்கு ஒரு கொறையும் வராது. உம் கையில அடி”

மீனாட்சி, சத்திய உணர்வில்லாமல், மாமி சொல்லப் போவதைக் கேட்கும் ஆர்வத்தில், அவள் கையில் மாறி மாறி அடித்தாள்.

“யார்கிட்டயும் சொல்லாதடி இப்ப அடயாறிலிருந்துதான் வரேன். கழுத்து வலிக்குதுன்னு, ஃபாமிலி டாக்டர்ட்ட போனால், அவர் இங்க அடயாறுக்கு அனுப்பினார். அங்க கான்சர் இன்ஸ்டிட்யூட்ல டெஸ்ட் பண்ணினால், நேக்கு கழுத்துல கேன்சராண்டி. அட்வான்ஸ்ட் ஸ்டேஜாம். இன்னும் ஒரு மாதத்துல உயிர் போயிடுமாம்.”

மீனாட்சி, மாமியைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளுக்கு ஒரு பிரமை, அந்தரலோகத்தில், மாமி, தான் அல்லாத வேறு யாருடனோ அந்தரங்கமாய்ப் பேசுவதுபோல் கேட்டது. ஆனால் லட்சுமி மாமியின் முகமோ எந்தவிதச் சலனத்தையும் காட்டவில்லை. சாவை ஏற்கனவே சந்தித்ததுபோன்ற கண்கள், அதனுடன் பேசுவது போன்ற வாய். மாமி தரையை நோக்கித் தன்பாட்டுக்குப் பேசுவதுபோல் பேசினாள்.

“நான் சாகறதைப் பத்திப் பயப்படல. ஆனால் கவலைப் படறேன். எனக்குப் பிறகு இவரை யார் பார்த்துப்பா? ஒரு நிமஷங் கூட இவரை யாராலயும் பார்த்துக்க முடியாதே. ஆண்டவா, பகவானே, நான் மனசாலேயும் ஒரு பத்தினின்னா, அவருக்கு எதையும் தாங்கிக்கிற சக்தியைக் கொடு. யாரையும் அண்டாமல் நிற்கற வலுவக் கொடு. பகவானே, ஈஸ்வரா, எம்பெருமானே. மீனாட்சி ஆண்டவன் கைவிட்டாலும் நீ மாமாவைக் கைவிட்டுடாதே. அப்பப்ப அவர பார்த்துக்கோடி”

மீனாட்சி, மாமியின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அங்கிருந்தபடியே கவரில் மாட்டியிருந்த அவர்களது இளவயது போட்டோவைப் பார்த்தாள். மாமி சொன்ன நோய், தனக்கு வந்ததுபோலவும், மாமியிடமே ஆறுதல் தேடுவதுபோலவும் எழுந்து, அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். ஆதிபராசக்தியை அடையாளம் கண்டவள்போல் மாமியைப் பிரமையயோடு பார்த்தாள். பார்த்தபடியே நின்றாள்.

திடீரென்று படுக்கை அறையில் சத்தம் கேட்டது. லட்சுமி மாமி, மீனாட்சியை உதறிவிட்டு உள்ளே ஒடினாள். பஞ்சாபகேசன் தூக்கத்தில், பிளாஸ்கைத் தட்டிவிட்டு, இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். அவரையே பார்த்தபடி அப்படியே நின்றாள் மாமி. பிறகு, அவரது கைக் கடிகாரத்தைக் கழற்றி வைத்தாள். இ

னிமேல் அவர் கை மொட்டையாகவே இருக்கணும். இன்னும் ஒரு மாதத்துக்கு அப்புறம், அவர் கைக் கடிகாரத்தை வீசி எறிந்தால்,’யார் அத எடுத்துக் கொடுப்பா?’.

– தீபாவளி மலர் – 1983

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *