கடைக் கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 4,791 
 
 

பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கதிரேசனுடன் வகுப்பில் படித்த பல பையன்கள் அவரவர்களுடைய அப்பாக்களைப் பற்றி எதையாவது சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.

அதயெல்லாம் கேட்கும்போது கதிரேசனுக்கு மனதில் சோகமும் ஒருவித இழப்பு உணர்வும் வந்து கவிந்துகொள்ளும். அவனுடைய அப்பா மச்சக்காளை பற்றியும் அந்த மாதிரியெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி ஒரு விஷயமும் இல்லாமல் போய்விட்ட ஏமாற்றம் அந்த மாதிரி நேரங்களில் கதிரேசனின் மனதில் அதிகமாக வரும்.

அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு எப்படியோ; ஆனால் கதிரேசனைப் பொறுத்தவரை அவனுடைய அப்பா மச்சக்காளையைப்பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு விஷயமும் கிடையாது. மாறாக அப்பாவின் சுபாவங்களும் அவர் செய்த காரியங்களும் அவனுக்கு அப்பாவின் மேல் கோபத்தையும் எரிச்சலையுமே ஏற்படுத்தி இருந்தன. அவற்றில் சிலவற்றை மட்டும் சில மாறுபட்ட கோணங்களில் இருந்து கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்:

கதிரேசனின் ஊர் திம்மராஜபுரம். அது ஒரு வியாபார ஸ்தலம். அந்த ஊரில் எல்லாக் குடும்பங்களிலும் ஆண்கள் பணம் சம்பாரிப்பதற்கு வியாபாரத் துறையில் ஈடுபட்டவர்களாகவே இருந்தார்கள்.

துவரை; உளுந்து; சீரகம்; மிளகாய்வத்தல் கடலை எண்ணை; நல்லெண்ணெய் போன்றவற்றை மொத்தமாகத் தயாரித்து விற்பனை செய்கிற தொழில்களில் அவர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தொழில்களைச் செய்வதற்கான அவர்களின் ஆடம்பரமான கடைகள் எல்லாம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் இருந்த தெற்கு பஜார், வடக்கு பஜார் போன்ற பெரிய வீதிகளில் வரிசையாக இருந்தன.

இந்தக் கடைகளும் அதில் நடக்கும் வியாபாரங்களும் பாளையங்கோட்டைக்காரர்களுக்கு ஒரு பெரிய கெளரவச் சின்னம். காலை பத்துமணி அளவில் முழுக்கை டெர்லின் சட்டையும் பம்பாய் எட்டுமுழ வேட்டியுமாக; கையில் ஒரு சங்கு மார்க் கைக்குட்டையையும் வைத்துக்கொண்டு திம்மராஜபுரத்தின் ஒவ்வொரு வீட்டின் குடும்பத் தலைவர்களும் பஜாரில் இருக்கும் அவரவர்களின் கடைகளுக்குக் கிளம்பிப் போனால் பகல் இரண்டுமணி வாக்கில் ஆளாளுக்கு ஒரு டிவிஎஸ் 50 யில் மதிய உணவிற்காக வீடு திரும்புவார்கள். சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள். மறுபடியும் சாயந்திரம் ஐந்துமணிக்கு கடைக்குப் போனால் ராத்திரி ஒன்பது மணிக்குமேல் வீடு வந்து சேருவார்கள். கடைக்குப் போகாமல் ஒருநாள் கூட அவர்களால் வீட்டில் இருக்க முடியாது. வீட்டில் இருக்கின்ற நேரத்தில்கூட ‘கடைக்குப் போகவேண்டும், கடைக்குப் போகவேண்டும்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். எப்போதும் ‘கடை ஜோலி’ பற்றியேதான் பேசியும் கொண்டிருப்பார்கள்.

பள்ளியில் கதிரேசனுடன் படித்துக்கொண்டிருந்த பையன்களின் அப்பாக்கள் எல்லோருமே இந்த ‘கெளரவமான’ நடைமுறைக்கு உட்பட்டவர்கள்தான். இதற்கு விதிவிலக்காக எந்தப் பையனின் அப்பாவும் கிடையாது. இதில் விதிவிலக்கு இல்லாத வேறு ஒரு முக்கியமான விஷயமும் இருந்தது. பஜார்களில் உள்ள தங்கள் அப்பாக்களின் கடைகளுக்கு ‘முதலாளி வீட்டுப் பிள்ளைகள்’ என்ற ஹோதாவில் கதிரேசனுடன் படித்த பல பையன்களும் அவ்வப்போது ரொம்பப் பெருமிதத்துடன் போய் வருவதுதான் – விதிவிலக்கு இல்லாத முக்கியமான வேறொரு விஷயம்.

பள்ளி இல்லாத விடுமுறை நாட்களில் தங்களின் அப்பாக்களின் கடைகளுக்குப் போய்வருகிற உற்சாகமான வழக்கம் ஒரு பையன் விடாமல் எல்லாப் பையன்களிடத்திலும் இருந்தது. கடைகளுக்கு அப்படிப் போய்வருகிற நேரங்களில், அங்கு பணிபுரியும் பணியாட்களின் அன்பான கவனிப்புகளுக்கும், மரியாதையான விசாரிப்புகளுக்கும் உள்ளாவதில் எல்லாப் பையன்களுக்கும் ஒரு தனி சுகம் இருந்தது.

ஒருமணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் (அதற்குமேல் இருக்க முடியாது, இருந்தால் கடை ஜோலிக்கு இடைஞ்சலாக இருக்கும்) கடையில் இந்த அன்பின் சுகங்களில் திளைத்திருந்தபின்; அப்பாக்கள் இனாம் தருவதுபோல் தருகின்ற காசை வாங்கிக்கொண்டு ‘லாலா கடையில்’ அல்வா, காராசேவு, பக்கோடா, மிக்ஸர் அல்லது பூந்தி என எது ஆசையோ அதை வாங்கி வழியெல்லாம் அதைத் தின்றபடியே பையன்கள் வீடுவந்து சேரும் இந்த மாதரியான ‘கடைக் கதைகளை’ பள்ளியில் படித்த காலத்தில் கதிரேசன் எல்லா வகுப்பிலும் எல்லாப் பையன்களிடமும் எரிச்சல் வருகிற அளவிற்கு திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறான்.

ஆனால் அதேபோல திருப்பி ‘கடைக் கதை’ எதையும் மற்ற பையன்களிடம் சொல்லத்தான் கதிரேசனிடம் கதை கிடையாது. அவனுடைய அப்பா மச்சக்காளைக்கு முதலில் பாளையங்கோட்டை பஜாரில் கதைகள் சொல்லும்படியான கடை கிடையாது. புளி, சீனி, தனியா போன்ற மொத்த வியாபாரமும் அவருக்குக் கிடையாது.

மச்சக்காளை அவருடைய வட்டிக் கடையை அவருடைய வீட்டின் முன்பக்க வராந்தாவிலேயே வைத்துவிட்டிருந்தார். இரண்டு பக்கம் சுவர் இருந்த முன்பக்க வராந்தாவில் ஒருபக்கம் பெரிய ப்ளைவுட் பலகையைப் பொருத்தி அதில் கிடைத்த சரியான வெளிச்சம்கூட இல்லாத சின்ன இடத்தில் வைத்துக்கொண்ட அவருடைய வட்டிக் கடையில் அவரைத் தவிர வேலைக்குப் பணியாட்கள் யாரும் கிடையாது. தரையோடு தரையாக இருக்கும் விலை குறைந்த மரத்தால் ஆன சின்ன மனையில் உட்கார்ந்து; அதற்கு ஏற்றாற்போல உயரம் குறைவாக இருக்கும் மர ‘டெஸ்க்கில்’ இரண்டு கைகளையும் குறுக்காக வைத்தபடி மச்சக்காளை அவரின் வட்டிக் கடையில் இருந்தாரென்றால், அவரிடம் வட்டிக்குப் பணம் கடனாக வாங்க வந்திருக்கும் ஆட்கள் கீழே விரிக்கப் பட்டிருக்கும் ரொம்பப் பழைய காலத்து பிய்ந்து கிழிந்த பாயில்தான் உட்கார வேண்டும்.

இவற்றைத் தவிர மச்சக்காளையின் வட்டிக்கடையில் வேற சின்ன சாமான்கூட இருக்காது. பார்த்தால் கடை மாதிரி தெரியாத இந்தச் சின்ன வட்டிக் கடைக்குள்தான் மச்சக்காளை இருபத்திநான்கு மணி நேரமும் இருப்பார். அதாவது அவரைப் பொறுத்தவரை வட்டிக் கடையில் இருந்தார். கதிரேசனைப் பொறுத்தவரை மச்சக்காளை இருபத்திநான்கு மணி நேரமும் வீட்டில் இருந்து கொண்டிருந்தார். இந்த முதல் காரணத்தாலேயே பாளையங்கோட்டை பஜாரில் கடை வைத்திராத மச்சக்காளையின் ‘வட்டிக் கடையை’ கதிரேசனுக்கு ரொம்பச் சின்ன வயசில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டது. கடையில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு இருபத்திநான்கு மணி நேரமும் வீட்டிலேயே இருந்து கொண்டிருந்ததால் சின்ன வயசில் இருந்தே கதிரேசனுக்கு அப்பா என்ற ஆளையும் பிடிக்காமல் போய்விட்டது.

மற்ற பையன்களின் அப்பாக்கள் எல்லோரையும் போல அவனுடைய அப்பாவும் பஜாரில், மொத்த வியாபாரம் ஒன்றுக்கான கடையை ஏழெட்டு பணியாட்கள் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிற மாதிரி வைத்திருந்தால் கதிரேசனுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். அந்தக் கடைக்கு அவனும் மற்ற எல்லாப் பையன்களையும் போல விடுமுறை நாளின்போது போய் சின்னதாக ஆட்டம் போட்டுவிட்டு வருவான். அதற்கெல்லாம் அவனுக்கு சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டது.

இதில் அவனுக்கு இருந்த இன்னொரு பெரிய வேதனை என்னவென்றால் மச்சக்காளைக்கு அவனுடைய இந்த மனக்கஷ்டம் பற்றி கடுகளவும் தெரியாது என்பதுதான். மனசுக்குள் இருக்கும் இந்தக் கஷ்டங்களை வீட்டில் யாருக்கும் காட்டாமல் மறைத்தே வைத்திருந்த கதிரேசன் எப்போதாவது ஒரு ஜோலியாக பஜார் பக்கம் போக வேண்டிவரும் போது வரிசையாக அங்கு பளிச்சென்று இருக்கும் கடைகளை ஆசையோடு பார்ப்பான்.

கடைகளுக்குள் டெர்லின் சட்டைகளில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் பிற அப்பாக்களை மிகவும் ஆற்றாமையுடன் கவனிப்பான். கதிரேசனுக்கு உடனே தங்கள் வீட்டின் வராந்தாவில் வட்டிக்கடை வைத்திருக்கும் அவனுடைய அப்பாவின் ஞாபகம் வரும். வட்டிக்கடை என்ற பெயரில் இருபத்திநான்கு மணிநேரமும் வீட்டிலேயே இருந்து கொண்டிருந்ததில் பிடிக்காமல் போயிருந்த மச்சக்காளையின் வட்டி வியாபாரத்தையே பிடிக்காமல் போயிருந்த அவனுக்கு, வட்டி வியாபாரம் என்ற பெயரில் அந்த மனிதர் நடந்துகொண்ட பல ஈவு இரக்கம் இல்லாத நடைமுறைகளினால் அவருடைய வட்டி வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறுப்பே ஏற்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *