கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 6,370 
 
 

காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. சற்று முன் ஒரு தேநீர் பருகத் தோன்றியது. எட்டு ரூபாய் ஆக்கி விட்டார்கள். விலையில்லா அரிசி போல, அடுத்த தேர்தல் வாக்குறுதி யாக, விலையில்லா தேநீர் என்று அருளலாம், பாராளுவோர்.

ஓராண்டு முன்பு, காந்திபுரம் வந்து திரும்ப ஏழு ரூபாய் இருந்தால் போதும். இப்போது தாழ்தள சொகுசுப் பேருந்துக்கு 18 ரூபாய் வேண்டும். அற்புதமோ, சிவனரு ளோ என 114 அல்லது சாதா 95 கிட்டினால் – பெரும்பாலும் கிட்டாது – ஒரு வழிப் பயணம் நான்கு ரூபாயில் ஒதுங்கும். ஆனால், அற்புதமும் சிவனருளும் பெறுவதற்கே ஒரு அந்தஸ்தும் ஜவேஜும் வேண்டும். அவர்கள் நகரப் பேருந்துக்குக் காத்துக்கிடக்க மாட்டார்கள்.

சாதா 95 வந்தது. ஒன்பதுக்குப் பதிலாக நான்கு. ஐந்து ரூபாய் மிச்சம். மனத்துக்குள் ஸ்வஸ்திக் குறியை செந்தூரத்தால் வரைந்து, சுபம்- லாபம் என்று எழுதிக்கொண்டான். பேருந்தின் இடதுபுறம் சன்னலோரம். பயணச் சீட்டு வாங்கி, ஞாபகமாய் மிச்சமும் வாங்கி, எதிர்க் காற்றுடன் இயைந்து பயணம் தொடங்கியபோது, வலது கழுத்தில் ‘சுரீர்’ என்றது. வலியுணர்ந்து இடக்கரம் அனிச்சையாகத் தடவப் புகுமுன், மேலும் காட்டமாய் மற்று மோர் சுரீர்! தோசையைத் திருப்பிப் போட்டது போல… கவனத்தில் கொள் ளுங்கள், திருப்பிப் போடப்பட்டது தோசை; ரோஸ்ட் அல்ல!

விரல்களில் தட்டுப்பட்டதை நசுக் காமல் எடுத்துப் பார்த்ததில், ஒரு பெரிய கட்டெறும்பு. கட்டெறும்பு எனில் கறுப்புத்தான். உங்களுக்கு உருவ அளவு சொல்ல வேண்டுமானால், கிராம்பு அளவு எனலாம். கொஞ்சம் வலிய காரி. விரலிடுக்கில் இருந்து வழுக்கிக் கீழே விழுந்து ஓடியது.

பேருந்தினுள் எலி, அரணை, ஓணான், குட்டிப் பாம்பு என இவையே நடமாடும்; எப்படிக் கட்டெறும்பு?

பேருந்து விட்டு இறங்கி, செல வாதிக்கு ஒதுங்கும்போது, காடாக மண்டிக் கணிசமாகப் பூத்து விரிந்து, கருவண்டுகள் தேனுண்ண மொய்ப்ப, எருக்கலை மூடுகளில் குடும்பம் குடும்ப மாகக் கட்டெறும்புகள் கண்டதுண்டு. காத்து நின்றபோது, காற்றிலாடி நின்ற வேப்ப மரத்தில் இருந்து சட்டையின் தோள் பக்கம் விழுந்திருக்கலாம். அல்லது, மரத்தடியில் ஒதுங்கி நின்ற பேருந்தின் கூரையில் இருந்து ஊர்ந்து இறங்கி இருக்கலாம்.

வழக்கமாக, சொர்க்கத்தில் கட்டெ றும்பு என்றுதானே சொல்வார்கள்! கஸ்தூரிக்கு அந்தப் பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின் மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க் கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா? தற்கால அரசியல்காரர்கள் பூதவுடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு எவ்வகைப் பாவியினம்? ஆனால், அதற்காகச் சொல்லப்பட்ட பழமொழி அல்ல அது. ‘இன்பமான வேளையில் வந்த இடைஞ்சல்’ என்று பொருள். என்ன இன்பமான வேளை என்று கேட்டால், அதற்கெல்லாம் பொருள் எழுதவியலாது.

நல்லவேளை, கட்டெறும்பாகப் போயிற்று என்று எண்ணினான். ஒரு நாள் கடுக்கும்; அவ்வளவே! செந்நிறத்தில் இருக்கும் மொசறு என்றொரு இனம் உண்டு. மாமரம், கொய்யா, புன்னைமரம் என இலைகளை வளைத்துக் கூடு கட்டும். மானிடரைக் கடித்து, புளிப்புச் சுவையில் திரவம் உமிழ்ந்து, கையோடு செத்தும் போகும். மொசறு, கூட்டமாய் கை காலில் படர்ந்து ஏறிக் கடிப்பது, சில மணித் துணிகள் கடுக்கும். பாதி உடல் சிவந்து, மீது உடல் கறுத்து, கறுப்பும் சிவப்புமான ஒரு இனம். கட்டெறும்பின் தரத்தினதுதான் என்றாலும், மூன்று நாட்கள் கடுக்கும். பெயரே கடுத்துவா. சுத்தமான இலக்கணப் பெயர் தெரியவில்லை. கடுத்தவால் என இருக்கலாம் – புலிக்கு கடுவாய் எனப் பெயர் வந்ததுபோல!

நல்ல காலமாக, கட்டெறும்பு கடித்து இதுவரை எவரும் செத்துப்போனதாகத் தெரியவில்லை என்று எண்ணினான். சமீபத்தில் மின்சாரப் பொறி பறந்து, தீப்பிடித்து, மூன்று பெண்கள் மாண்டுபோன பாப்பநாயக்கன் பாளையம் சந்திப்பில் பேருந்து இடப்பக்கமாகத் திரும்பியதும், திடீரென அவனுக்குள் ஒரு கேள்வி பிறந்தது… ‘கட்டெறும்பு என்னத்துக்கு நம்மளைக் கடிக்கணும்?’

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியைக் கட்டெறும்பு கடித்தது. ஆனால், கட்டெறும்பு கடித்தால் பாட்டு வருமா? தமிழ் சினிமாவில் பாம்பு கடித்தாலே பாட்டு வரும். பெரும் பாம்பு கடித்தால் கூத்து வரும். கதாநாயகியின் கட்டெறும்பு காமம் அல்லவா என யோசித்தான்.

‘காமம் கட்டெறும்பா? தேள் அல்லவா? அதுவு மில்லை . தேள் ஒருநாள் கடுக்கும்; காமம் கால மெல்லாம் கடுக்கும் விடமுள்ள நச்சரவம்!’

கண்ணன் பாட்டில் பாரதியார் பாடியது நினைவு வந்தது கஸ்தூரிக்கு. ‘அங்காந்திருக்கும் வாய் தனிலே – கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்’ நினைவு சரஞ்சரமாய்ப் பொரிந்தது. ‘அதிலயும் கட்டெறும்பு ஒண்ணு போதாது. ஆறேழு. சவம் ஒரு கடிக்கே இந்த அரிப்பு. ஆறேழு வாயில், உட்கன்னத்தில், நாக்கில், அடி நாக்கில், தொண்டையில் கடித்தால் எப்படி இருக்கும்? கண்ணனின் தீராத விளையாட்டு இத்தனைக் குரூர மாகவா இருக்கும்? நம்ம கூட்டாளிகள் கண்ண னிடம்தான் பாடம் படிச்சிருப்பார்களோ? கழுதை யின் காதில் கட்டெறும்பைப் பிடித்துவிட்டு, அது ‘காள், காள்’ என்று கத்துவதை வேடிக்கை என்று நினைக்கும் கூட்டம்!

இருக்கையின் கீழே குனிந்து, கீழே விழுந்த கட்டெறும்பு காலில் ஏறுகிறதா என்று கவனித்தான். ‘சவம், கடிக்கக்கூடாத எடத்திலே கடிச்சிருச்சுன்னா ?” என்றொரு கிலி சொல்லி அடித்தது.

என்றாலும், இந்தக் கட்டெறும்புக்குத் தன் மீது என்ன கோபம் என்று எண்ணினான் கஸ்தூரி. ‘நாமென்ன முன்னூறு கோடி பட்ஜெட்டில் கதா நாயகனுக்கு எண்பத்தஞ்சு கோடி கொடுத்து தமிழ்த் திரைக் காவியமா எடுக்கிறோம்?

கட்டெறும்புக்கு உயிருள்ள மனிதர் உணவல்ல. முன் விரோதம் ஏதும் இல்லை . காதலில், ரியல் எஸ்டேட்டில், மாவட்டச் செயலாளர் பதவி வாங்கு வதில் போட்டியல்ல. பெண் தகராறு என எதுவும் இல்லை . ஒருவேளை, தான் ஊர்ந்து செல்லும் யாவற்றையும் கடித்துப் பரிசோதித்துப் பார்க்குமோ? கல்லை, மரத்தை, மானுடன் உள்ளிட்ட விலங்கு களை? சபரி கனிவர்க்கம் கடித்துப் பரிசோதித்து, ராமனுக்காகத் தேடி வைத்தது போன்றா?

கட்டெறும்பை முட்டாள் என்றும் சொல்லிவிடுவதற்கில்லை. ஏழு மலை தாண்டி, பரண்மேல் இருந்தாலும் கருப் பட்டிப் பானையைக் கண்டறிந்துவிடு கிறதே! யாரும் கொண்டுவந்து விடுகிறார் களா என்ன?! அதிலும், கருப்பட்டிப் பானைக்குள் கடியெறும்பு வருவ தில்லை; பிள்ளையார் எறும்பு வருவ தில்லை; மொசறு வருவதில்லை ; கடுத் துவா வருவதில்லை; மொலுமொலு வெனச் சிற்றெறும்பு வருவதில்லை.

கரிய கட்டெறும்பு மாத்திரம் மூளை இல்லாமலா கருப்பட்டி தேடி வருகிறது?

கஸ்தூரி கழுத்தில் கட்டெறும்பின் கடி தடத்தைத் தடவிப் பார்த்தான். கடி தடம் எனில், வேறு பொருளும் உண்டு. கதைப் போக்குக்கு இங்கு அது அநாவசியம். லேசாகக் கழுத்து எரிந்தது. சற்று வீங்கினாற் போலவும் இருந்தது. மூளைக்கு ரத்தம் போகும் நாளத்தில் கட்டெறும்பின் விடம் பாய்ந்திருக்கு மோ எனவும் யோசித்தான். கட்டெ றும்புக்கு விடம் இல்லை என்பதை அறிவான். ஒருவேளை, இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்பட்டிராத விடமுள்ள கட்டெறும்பாக இது இருந்து விட்டால்? ‘வீரம் அன்று, விதி அன்று, பழியன்று, பகையன்று, இம்மண்ணினுக்கு என்னுடல் பாரம் அன்று, பண்பு அழிந்து இது என் செய்தவாறு அரோ’ என்று வாலி ராமனைக் கேட்ட அடுக்குமொழிக் கேள்விகள் நினைவில் பாய்ந்தன. ஆனால், கட்டெறும்பு ராமனோ, கஸ்தூரி வாலியோ இல்லை என்பதும் நினைவு வந்தது.

இப்படித்தான் காரண காரியம் இன்றிக் கடிவாங்கும் வாழ்க்கையாக இருக்கிறது என்று தத்துவப் பாம்பு பிடிக்கப் போனான் கஸ்தூரி. முதற்கடி விழுந்தது, தமிழ்ப் பாட நூலில் இருந்து. அது விஷக்கடியும், தமிழ்க்க டியும்.

பத்தாம் வகுப்பு வாசிக்கும்போது மனப்பாடப் பகுதியாக வந்து விழுந்த அடி… பின்னர் அந்தப் பாடலைப் பல மேடைகளில் கேட்டபோது கை கணக்கில்லாமல் அவனுக்குக் கோவம் வந்திருக்கிறது, இந்தப் பாட்டுத்தானே, நம்மைப் பள்ளியை விட்டு ஓடச் செய்தது என..!

பலராலும் மனப்பாடம் செய்ய முடியாத பாடல் அது. தமிழ் ஐயாவே பார்த்துத்தான் படிப்பார். மேடையில் சொன்னவர்களும் எழுதி வைத்தே வாசித்தார்கள். அதை எழுதிய ‘கவிக் கனகமலை’ தக்காணத்து எழிலனார், ஒருக்கால் மனப்பாடம் செய்திருப் பாரோ?

கஸ்தூரிக்கு இன்றும் மூன்று சந்தே கங்கள் உண்டு. பிற மாணவர் சிலர், எங்ஙனம் உலக்கையை விழுங்குவது போல அந்தப் பாடலை மனனம் செய் தனர்? பாடத்திட்டக் குழு அந்தப் பாடலை மனப்பாடம் செய்வார்களா? அந்தரங்கமான வேளைகளில் – கட்டெ றும்பு கடிக்கக்கூடாத நேரங்களில் – கவிக் கனகமலை தக்காணத்து எழிலனாரைச் செல்லமாக அவர் மனைவி எப்படி அழைப்பார்?

எதுவானால் என்ன? முதலில் வாங் கியது தமிழ்க்கடி எனில், இரண்டாவது பாம்புக்கடி.

‘சனியன் பத்து நாள் முந்தியோ பிந்தியோ கடிச்சிருக்கலாம். கரெக்டா நேரம் பார்த்து, கலியாணத்துக்குத் தலைக்கா நாள் சாயங்காலம், வாசல்லே வாழைக்குலை நாட்ட தோட்டத்திலே போயி வெட்டச்சிலே கடிக்குது. கடிச்ச பாம்பைப் பிடிச்சுப் பாத்தா தெரிஞ் சிடும் அது நல்லதா, விரியனா, கொம் பேறி மூக்கனான்னு. ஆ, ஊன்னு சத்தம் போட்டு, பாம்பைத் தோட் டத்துக்குள்ளே விட்டுட்டானுகோ. பொறவு எங்க போட்டுப் புடிக்க? வில்லுவண்டி கட்டி, சர்க்காரு ஆசுபத் திரிக்கு தூக்கிட்டுப் போயி, அவன் ஒரு ராத்திரி கழியணும்னுட்டான். ஊரெல்லாம் பரபரப்பாகிப் போச்சு… ‘கலியாண மாப்பிள்ளையப் பாம்பு கடிச்சுப் போட்டுதுடோய்..!’ பெற கென்ன? கலியாணம் நின்னது நின்னது தான்! அதோட போச்சா? ஊருப்புறத் திலே சும்மா இருக்குமா வாயி? அவுனுக்கு நாக தோசமாக்கும், என்னைக்கின் னாலும் பாம்பு கடிச்சுத்தான் சாவான்… கௌப்பி விட்டுட்டானுக. சோசியம் பாத்து காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், திருநாகேசுவாம், சோமனூர் வாழைத் தோட்டத்து ஐயன், நகரம்மன் கோயில் வெரதம்… எல்லாம் ஒரு தொகை காலி!

எத்தனை சாதகப் பொருத்தம் பார்த்து, எத்தனை பொண்ணு பார்த் தாச்சு! ஒருத்தன் சொல்லுறான், இவனுக்குப் பொண்ணு குடுக்கதுக்கு பொண்ணை பாம்புப் புத்துக்குள்ளே கைவிடச் சொல்லலாம்னு. எல்லாம் போச்சு! கலியாணம் நின்னுபோன பொண்ணை வேற வெளில கட்டிக் குடுத்து, மகன் இன்ஜினீயரிங் படிக் கான். நாம 95-ஆம் நம்பர் பஸ்ஸிலே ஏறி, கட்டெறும்புக் கடி வாங்குறோம். எல்லாம் நேரம்! |

கஸ்தூரி வீட்டுக்குப் போயி, காலை யில் பொங்கி வைத்த சோறும், புளி கரைச்சுத் தாளித்த ரசமும், கையிலே இருக்கப்பட்ட பக்கோடாவும் தின்று, அடுத்த சோலி பார்க்க வேண்டும்.

‘நம்ம கதை இப்பிடிக் கெடக்கு. பதங்கொலஞ்சு போயி… இதுலே கட்டெறும்பும் கூட நம்மளைக் கடிச்சுப் பாக்கு! காலம் கெடக்கிற கெடப்பு…’ என்று முனகிக்கொண்டான்.

‘கொளத்திலே குளிக்கச்சிலே ஒருவாடு அட்டை கடிச்சிருக்கு. குளுப்பாட்டக் கொண்டுபோன எருமைக்கடா சங்கதிக்குள்ளே அட்டை போயிக் கடிச்சு ரெத்தமா வடிஞ்சதுகூட ஓர்மை இருக்கு. வீட்டிலே எரியப்பட்ட பின்னக்கெண்ணை வெளக்கை அணைச்சுக்கிட்டுப் படுத்தா, கோரம்பாயிலே எங்கேருந்து வருமோ, மூட்டைப் பூச்சி? ராவெல்லாம் கடிச்சு, படைபடையா மேலெல்லாம் தடிச்சு அரிச்சிருக்கு. கொசு, பின்னே நமக்கு இனமானப் பறவை! கடிக்கப்பிடாதுன்னு சொல்ல முடியுமா? மசுக்குட்டி கடிக்காது. ஆனா, அதுக்க ரோமம் பட்டா நாள் பூரா சொறிஞ்சுட்டே கெடக்கலாம்.

ஒருக்கா மோரு வாங்கறதுக்கு, வடக்குத் தெரு பண்ணையாரு வீட்டுக்குப் போனபோது, அவுரு வளக்கப்பட்ட ராஜபாளையம் தொடையிலே பல்லு பதியத் தோண்டி வச்சிற்று. படிப்புரையிலே உக்கார வச்சு, வாழையிலைத் துண்டிலே பழைய சோறும் எருமைத் தயிரும் உப்பும் பச்சமொளகாயும் போட்டுப் பெனஞ்சு சாப்பிடச் சொன்னா அந்த ஆச்சி. சாப்பிட்டுக் கை கழுவுனதும் வலது உள்ளங் கையைக் குவிக்கச் சொல்லி, ஆப்பை நிறைய நல்லெண்ணெய் ஊத்தி, அப்பிடியே குடிக்கச் சொன்னா. நாய்க்கடிக்கு அன்னைக்கு அதாம் மருந்து. பத்தியம்? மூணு நாளைக்குச் சுடுகாட்டுப் பொணம் எரியப்பட்ட மணம் புடிக்கப்பிடாது. வீட்டிலே வளக்கப்பட்ட நாயின்னதுனால ஒண்ணும் செய்யலே! ஆனாலும், கடி தடத்துப் புண்ணு ஆற ஒரு வாரம் ஆச்சு!

பீளமேடு பேருந்து நிறுத்தம் நெருங்கும்போது, நடத்துநருக்கும் பாவப்பட்ட வயசாளிப் பயணிக்கும் வாக்குவாதம். ஒற்றை ரூபாய் சில்லறை பாக்கித் தர்க்கம். “டிக்கெட்டுக்கு நாலு ரூவா அழுதாச்சு. அஞ்சு ரூவா குடுத்தா ஒத்த ரூவா பாக்கி தரமாட்டியா? நாலு ரூவாயும் ஒருத்தன் சில்லறையாட்டா கொண்டாருவான்? இது எவடத்த நாயம்? சம்பளம் பத்தலேன்னா கெவுர்மென்ட்லே கொடி புடிங்கோ, கோசம் போடுங்கோ… இல்லாப் பட்டவானா பொழைச் சான்…”

மூஞ்சியில் விட்டு எறியாத குறையாக, இன்னும் சில மாதங்களில் செல்லாதவையாக ஆகப்போகும் இரண்டு ஐம்பது காசு துட்டுக் களைக் கொடுத்தார் நடத்துநர். அதற்கும் சண்டை போடாமல், பயணி அவசரமாய் இறங்கட்டும் என, ஓட்டுநர் கியர் மாற்றினார்.

‘ஒருக்கா களுத கடிச்சிருக்க வேண்டியது; நல்ல காலம் தப்பிப் பொழச்சேன்’ என்றெண் ணிச் சிரித்துக்கொண்டான் கஸ்தூரி. ‘எல்லாம் பட்டாச்சு, நாப்பத்தஞ்சு வயசுக்குள்ளே!

கொசுக்கடி, மூட்டைக்கடி, தலையிலே புழுக்கடி, அட்டைக்கடி, குண்டியிலே கிரிமிக்கடி, எறும்புக்கடி, நாய்க்கடி, பாம்புக்கடி, தமிழ்க்கடி, புன்னைக்காய் பொறுக்கப் போயி மொசறுக்கடி, உறங்கச்சிலே உப்பு குத்தியிலே எலிக்கடி சண்டை போட்டு சேக்காளியின் கடி… இந்த கட்டெறும்புக் கடி நம்மள என்ன செய்திடும்?’

‘பேய்க்கடி ஒண்ணுதான் பாக்கி’ என்று எண்ணி, சிறியதோர் நகைச்சுவை தனக்குச் சித்தித்ததாக எண்ணிக்கொண்டான் கஸ்தூரி.

சிக்னல் மஞ்சள் பூத்திருந்தாலும், அவிநாசி நெடுஞ்சாலையில் சிக்னலைக் கடந்துவிடலாம் என அதிவிரைவு வேகத்தில் வந்துகொண்டிருந்தது, கருங்கல் கொட்டுப் பாரம் ஏற்றிய லாரி ஒன்று. அதன் பின்னால் ஏதும் தாசில்தார் ஜீட் துரத்தி வருமாக இருக்கும். சட்ட விரோதமாகக் கல்குவாரியில் இருந்து கடத்தி வரும் லாரியை மடக்க அல்லது, ஏதாம் சட்டப் பேரவை உறுப்பினரின் வைப் பாட்டியின் வண்டியாக இருக்கும். அவர்களுக்குச் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து விதிமுறைகள், டிராஃபிக் போலீஸ், சிக்னல், பிற வாகனப் போக்கும் வரத்து எதுவும் பொருட்டே இல்லை.

‘நாள் என் செயும், விதிதான் என் செயும், எனை நம்பி வந்த கோள் என் செயும், கொடுங் கூற்று என் செயும்’ எனும் பாவத்தில், பேயாய் விரைந்து வரும் லாரியைப் பொருட்படுத்தத் தேவை இல்லாமல், சிக்னல் கிடைத்த தைரியத்தில், அவிநாசிச் சாலையில் இருந்து சௌரிபாளையம் போவதற்கு, இடப்பக்கம் இருந்த சந்துச் சாலைக்குத் திரும்ப யத்தனித்தார் 95 பேருந்தின் ஓட்டுநர். திரும்பும் வண்டியின் இடதுவசம், பேய்க்கடி ஒன்றும் காத்திருந்ததை அறியாத கஸ்தூரி சொகுசாகக் கட்டெறும்பின் கடி தடத்தைச் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தான்.

மீதிக் கதை சொல்ல கஸ்தூரி மீள்வானோ அல்லது உடல் நசுங்கித் தலத்திலேயே மாள்வானோ, நமக்கென்ன தெரியும்?

– விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை 2013

Print Friendly, PDF & Email
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன் எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை பிறந்த நாள் : 31 டிசம்பர் 1947 பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம் தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம். தமிழ் நாடு – 629 901. முகவரி : G. Subramaniyam (NanjilNadan) Plot No 26, First Street, VOC Nager,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *