காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின் வேலையாட்கள் பெரிய வாகனங்களோடும், இந்தியத் தொழிலாளிகளுடனும், சீனத்துப் பொறியாளர்களோடும், மலாய்த் தொழிலாளிகளுடனும் ஆங்காங்கே நிலத்தை அகழ்ந்தும், இடித்தும், மரங்களை வெட்டியும் வேலை செய்து கொண்டிருந்தனர். “மீனா…இந்த இடத்துக்குப் புதியதாக இரயில் நிலையம் வரப் போகிறது..அதற்கான துவக்கம்தான் இது. மரீன்பரேட் தொகுதியின் தலைவர் கோசோடோங்கின் முயற்சி இது…மக்களுக்கு நல்லது செய்வதில் முன்னோடி ஆயிற்றே” என்று எனது கணவர் சிதம்பரம் சொன்னார்.
எங்களது “மக்கீனா” எனற குடியிருப்புத் தொகுதி சற்று உள்ளடங்கி இருந்தாலும், வீட்டு பால்கனியிலிருந்து பார்க்கும்போது வெளியே நடப்பது தெரியும். ஆனாலும் வீட்டை விட்டு வெளியே நடைப்பயிற்சிக்குப் போகும்போது மட்டுமே வேலையின் நிலவரம் தெளிவாகத் தென்படும்.
நானும் என் கணவரும் காலை, மாலை என்று இரு வேளைகளிலும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு நடைப்பயிற்சிக்குப் போவது வழக்கம். அதுபோல் ஒரு மாலை வேளை சென்றபோதுதான், அந்தத் தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் எங்களைப் பார்த்து சற்று சிநேகமாகச் சிரித்தார்கள். “என்ன இங்கே வேலையா?” ..எனது அந்த ஆரம்பமே அவர்களுக்கு அவர்களின் வேலைக்கிடையே ஒருவித உற்சாகத்தைத் தந்திருக்கும். “ஆமாம். மேடம், இங்க ஒரு பத்து மாசமாச்சும் எங்களுக்கு வேலை…..அப்புறம் வேற ஆட்கள் வருவாங்க…”…”ஊர்ல எந்தப்பக்கம்?”..”முக்கால மூணு வாசிங்க தஞ்சாவூர் பக்கம் மேடம்…அதோ அங்கிட்டு கல்லடிக்கிட்டு இருக்கான் பாருங்க அவன்தான் மதுரைப் பக்கம்”.
கல்லடித்துக் கொண்டிருந்தவன் சிரிப்போடு எழுந்து வந்தான். “வணக்கம் மேடம்…நம்ம தமிழ் ஆளுங்களப் பாக்கையிலே ஊரு நினைப்பு வந்துருது மேடம்” என்றான். “ஒ! நீங்க மதுரைப் பக்கமா? நானும் மதுரைதான் என்றதும் அவனுக்கு ஏக மகிழ்ச்சி.
“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா மேடம்?”
“ஒ!..வீட்டுப்பக்கம் வாங்க…தண்ணிபாட்டில்தரேன்.”.
.”மேடம்…கொஞ்சம் ஐஸ் தண்ணியாத் தாங்க மேடம்”…..
‘உங்க பேரு என்ன தம்பீ?”…
”சுந்தரம் மேடம்…”
“கல்யாணம் ஆயிருச்சா?”
“இப்பத்தான் ஆறு மாசம் முன்னால ஆச்சு மேடம்….”….ஆறு தண்ணீர் பாட்டில்களை சுந்தரிடம் தந்த போது மிகவும் மகிழ்ந்து போயிருந்தான். “மேடம்…நேத்தைக்கு ஒருத்தங்களை இப்படித்தான் தண்ணி கேட்டோம். ஆனா, அவுங்க உங்க கம்பெனியைக் கேளுங்க அப்பிடீன்னு சொன்னாங்க மேடம்…”….
பாவம். இந்த ஊழியர்கள். வெயில், மழை பாராது உழைப்பவர்களைப் பார்க்கும்போது, எனக்கு மனது அடித்துக் கொள்ளும். நம் நாட்டுத் திறமைசாலிகள் அல்லவா இந்தச் சிங்கப்பூரை வண்ணமயமாகவும், மயன் மாளிகைகளாகவும் ஆக்கும் சிற்பிகள்! “வேறு எதுவும் தேவை என்றால் என்னைக் கேளுங்க தம்பீ” என்றபோது “ரொம்ப நன்றி மேடம்” என்று சொல்லிப் போனான் சுந்தரம்.
“மீனா…எதுவும் பேச்செல்லாம் அதிகம் வச்சுக்காதே….அப்புறம் பணம் வேணும்..காசு வேணும்னு வந்து நிப்பாங்க. அனாவசிய வம்புக்கு இடம் கொடுக்கக் கூடாது. சொல்லிட்டேன் “ சிதம்பரம் சற்றுக் கறார் பேர்வழி தான். சிரிப்பு என்பதே அளவெடுத்தாற்போல்தான் இருக்கும். அத்தனை சீக்கிரம் யாரையும் பழக விட மாட்டார் என்பதை விட, நம்பமாட்டார் என்பதுதான் உண்மை….
ஆனாலும் தனது பணிவான பேச்சாலும், மரியாதையான நடத்தையாலும் சுந்தரம் மட்டும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தண்ணீர் வாங்கிப் போக வந்து போவதுண்டு. துணுக்குத் துணுக்காக அவன் வீட்டுச் சமாச்சாரங்களை என்னிடம் பரிமாறிக் கொள்ளுவான். அவனது மனைவி சவுந்திரம் முழுகாமல் இருப்பதைச் சொன்னபோது சந்தோஷத்தில் அவன் முகம் பூரித்துப் போனது. “மேடம். நான் கருத்த ஆளு மேடம். அது எங்க அத்தை பொண்ணுதான். பேருக்கு எத்த மாதிரி அழகுப்பொண்ணு மேடம். ஆனா, எம்மேல உசுரு மேடம். காசு வேணாம்…பணம் வேணாம்…நீங்க மட்டும் சீக்கிரம் வாங்கனு சொல்லிட்டே இருக்கா மேடம். புரியாத புள்ள மேடம். இப்போத்தான் வீடு கட்ட ஆரம்பிசிருக்கேன். குழந்தை பொறந்தவுடனே புது வீட்ல தங்க வச்சிட்டு ஒரு ரெண்டு மாசம் சந்தோஷமா இருந்துட்டு வாழ்க்கைல பணம் எவ்வளவு முக்கியம்னு கொஞ்சம் புத்தி சொல்லிட்டுத் திரும்ப இங்க வந்து ஒரு ரெண்டு வருஷம் வேல செஞ்சிட்டு ஊரோட போயிரலாம்னு இருக்கேன் மேடம்”….
“ஆமாம் சுந்தரம், புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாருக்கும் வரக்கூடிய எண்ணம் தாம்பா அது. போகப் போக அதுக்கு வெளங்கும். கவலைப் படாதே”.
இரண்டு மாதம் முன்பு வந்த போது…சுந்தரத்தின் கையில் பெரிய சாக்லேட் டப்பா. “மேடம். இங்க கவர்ன்மென்ட் வச்ச ஸ்கில்டு லேபர் பரீஷைய்ல தேர்வாயிட்டேன் மேடம். இப்ப ஹையர் ஸ்கில்டு லேபர் ஆயிட்டேன்…அடுத்த கிரேடுக்குப் போறதால சம்பளமும் கூடும் மேடம்” அவன் குரலில் தெரிந்த மகிழ்ச்சி என்னையும் ஆட்கொண்டது.
“தம்பீ சுந்தரம். நீ கடுமையா உழைக்கிறே. அதுக்குத் தகுந்த வெகுமானத்தை உனக்குக் கடவுள் கட்டாயம் தருவாரப்பா.”.
“ஆமாம் மேடம். எல்லாம் என் செளந்திரம் வந்த நேரம்! இப்போ குழந்தை வந்த நேரமும்னு கூடச் சொல்லலாம்….நான் செளந்திரத்துக்கிட்ட சொல்லுவேன் மேடம்…இப்படி வெள்ளை வெளேருன்னு அழகா இருக்கே…இந்தக் கருப்பனைப் போயிக் கட்டிக்கிட்டியே…எனக்கென்னமோ இது கடவுள் செஞ்ச தப்பாத்தான் தாயி படுதுனு ஒருநாளு சொல்லிப்புட்டேன்….அடேங்கம்மாடி…அழுது தீர்த்துடுச்சு மேடம். உடம்பு என்ன நிறமா இருந்தா என்ன? மனசெல்லாம் தும்பைப்பூ கணக்கா வெள்ளையா இருக்குறது போதுமே…இன்னமே இப்படிப் பேசக்கூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டுருச்சு மேடம். சுந்தரத்தின் குரல் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தது.
“என்னமோ மேடம்…எனக்கும் அவளைப் பார்க்கணும்னுதான் இருக்கு,,,,ஆனா இப்போ நான் புது வேலைக்குப் போகணும் மேடம். என்னோட கவனம் சிதறாமப் பாத்துக்கணும்…”
நானும் என் பங்கிற்கு சுந்தரத்திற்கு ஆறுதல் கூறினேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி சொன்னேன்.
ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அந்தச் சிறகுகள் தான் அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெள்ள மெள்ளக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்பிற்கு, அறிந்ததிலிருந்து ஒருபடி மேலே போய் ஞானத்துக்கு என்று மனிதனின் கண்ணுக்குத் தெரியாத சிறகுகள் அசைந்தபடிதான் இருக்கின்றன என்று என் மனதிற்குப் பட்டது. இந்த சுந்தரத்தைப் பார்த்த போது மனதுக்குள் ஒருவித ஆயாசம் ஏற்பட்டது. அன்பு வற்றாத நீரோடையாக அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.
அன்றொரு நாள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவனது தாய்ப் பாசத்தையும் உணர முடிந்தது….
“மேடம்…நாம எல்லோருமே நம்ம அம்மாவோட கையைப் புடிச்சுக்கிட்டுத் தானே நடக்கக் கத்துக்கிறோம்…இந்த உலகத்தோட வினோதமான நிலப்பரப்புல நம்மளைக் கொண்டாந்து நிறுத்துவது ஒரு அம்மாதானே? அவளோட இடுப்பு தானே நாம உட்கார்ற முதல் சிம்மாசனம்? அங்க உட்கார்ந்துக்கிட்டுத்தானே, நிலா, வீடு, தெரு, முற்றம், சிநேகம் எல்லாம் தெரிஞ்சுக்கிறோம். நாம எம்புட்டுத் தூரம் போனாலும் கூட அம்மாவோட கண்ணு நம்மளப் பார்த்துக்கிட்டே தானே மேடம் இருக்கும்? ஒவ்வொருத்தருக்கும் பிறந்த நாளு, பிறந்த வருடம், பிறந்த ஊரு, என்று வேறு வேறா இருக்கலாம் மேடம்….ஆனாக்க, எல்லாரும் உண்டாகிற இடம், ஜனிக்கிற புனிதமான இடம் அம்மாவோட கருவறை தானே மேடம்? …
எங்கம்மா ஒரு வீடு கட்டிப்பார்த்துடணும் தம்பீனு அடிக்கடி சொல்லும்…ஏனோ அது எங்கம்மா காலத்துல செய்ய முடியாமப் போச்சு…நதி வத்தினப்புறம் தெரியற கூழாங்கல்லு மாதிரி, அம்மாவோட ஆசைகளும் அப்படியே வெளிப்படாம மனசுக்குள்ளயே இருந்திருக்கும்னு நினைக்கிறேன்…வெளிப்படுத்த முடியாமலே ஒவ்வொரு இதயத்திலும் பல நூறு ஆசைகள் புதைஞ்சு கிடக்கு மேடம். அத்தனை ஆசைகளும் இப்படி ஆழ்மனசுல ஒளிந்துகொள்ள ஒரே காரணம், அந்த ஆசைகளெல்லாம் அங்கீகரிக்கப்படாமல் போவதோடு, அவமதிக்கவும் படக்கூடும் என்று நம்புவதால் தான் மேடம்! .அதுனால தான் இப்ப என் செளந்தரத்துக்கு ஒரு வசதியா வீடு கட்டிரணம்னு கங்கணம் கட்டிக்கிட்டு முனைப்பா இருக்கேன். ஏனென்றால், அவள் மிகவும் வசதியாக வளர்ந்த பொண்ணு மேடம்…
சுந்தரத்தின் பேச்சு எனக்கு அற்புதமாகப் பட்டது. விரும்பியதை உண்டாக்கிக் கொள்ளுவது தானே வாழ்வின் சாரம்? எந்த இமய மலையைக் கடப்பது என்பது நமக்கு அசாத்தியமாக இருக்கிறதோ, அந்த மலையைக் குருவிகள் அநேக முறை பறந்து கடந்து விடுகின்றனவே? முயற்சியில் முடியாதது எதுவும் இருக்கிறதா என்ன?”….
சுந்தரம் பாலஸ்டியர் சாலையில் புது வேலை ஒப்புத்துக் கொண்ட பிறகு எங்களைப் பார்க்க வருவது குறைந்து போனது. நாங்களும், எங்களது பிள்ளையோடு சிறிது காலம் இருந்து விட்டு வரும் எண்ணத்தில் கனடா செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தோம். இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும் என்று இருந்த சமயத்தில், திடும்மென்று சுந்தரம் வந்தான். இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல இந்தியா போயிட்டு வரலாம்னு இருக்கேன் மேடம். என்னமோ புள்ளத்தாச்சியா இருக்குற செளந்தரத்தைப் போய்ப் பார்க்கணும்னு மனசு பரபரக்குது..ஆனால் சவுந்திரத்துக்கிட்ட சொல்லாமப் போகப் போறேன்….ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கலாம்னு…..அதான் உங்க கிட்டயும் சொல்லிக்கலாம்னு வந்தேன்.”….
சட்டென்று உள்ளே போய் இரண்டு சிங்கப்பூர் ஜார்ஜெட் புடவைகள், பிறக்கப்போகும் குழந்தைக்கென்று பிரத்யேக உடைகள்..சாக்லேட், என்று மட்டுமல்லாமல், இருநூறு வெள்ளியையும் வைத்துக் கொடுத்த போது சுந்தரம் நெகிழ்ந்து போனான்.
“மீனா…இந்த கைக் கடிகாரத்தையும் சுந்தரத்திடம் கொடு”…என்றபடி சிதம்பரம் வெளிப்பட்டபோது, கல்லுக்குள் ஈரமாக அவரது இளகிய மனது பளபளத்தது தெரிந்தது. “ரொம்ப நன்றி ஐயா! நீங்களும் நல்லபடியா போய்ட்டு வாங்க” என்றபடி சுந்தரம் விடை பெற்றான்.
ஆயிற்று. எங்களது கனடாப் பயணம் நல்லபடி முடிந்து போன வாரம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம். இயற்கையிலேயே அனைவருக்கும் ஏற்படும் அசதியும், உடல்நலக் குறைவும் ஏற்பட்டு இப்போது இரண்டு நாட்களாகத் தான் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தோம். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சிலோன் ரோட்டில் உள்ள செண்பகவிநாயகர் கோவிலுக்குச் சென்று வந்தோம். வீட்டுக்குள் நுழைந்தவுடன் காலைப் பலகாரம் செய்வதற்கு அடுக்களைக்குள் நுழைந்த சமயம் சிதம்பரம் சற்றுப் பெருத்த குரலில் “மீனா…மீனா..கொஞ்சம் சீக்கிரம் வா” என்றார்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பதட்டமா கூப்பிடறீங்க? இந்தோ வந்துட்டேன்” என்றபடி கணவர் சிதம்பரத்தின் அறைக்குள் விரைந்தேன். சிதம்பரத்தின் கை நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் நீட்டிய ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழை வாங்கிக் கொண்டேன்.
முதல் பக்கத்தில் சுந்தரத்தின் புகைப்படம் போட்டு, முதல்நாள் வியாழனன்று பணியில் இருந்தபோது, பாலஸ்டியர் சாலையில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தைப் பிரிக்கும் பலகை வழியாகக், கீழ்த்தளம் ஒன்றின் மீது விழுந்து உயிரிழந்ததாகச் செய்தி வந்திருந்தது. எனது இதயம் துடிதுடித்து வாய் வழியாக வந்துவிடும் போல் படபடத்துப் போனேன். உடம்பு நடுங்கியது. “மேடம்..மேடம்” என்று நொடிக்கு நூறு முறை மரியாதையுடன் அழைத்து என்னிடம் தனது உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட சுந்தரம் இறந்து போனது, என்னால் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.
இது ஏன் நடந்தது? சுந்தரத்துக்கு ஏன் இப்படி ஒரு தீர்ப்பு? மனதில் வண்ணமயமான கனவுகளையும், அன்பு நிறைந்த நல்ல குணங்களையும், தனது ஆசாபாசங்களை அடக்கிக்கொண்டு, வாழ்வில் முன்னேறத் துடித்த அந்தப் பொறுப்புள்ள இளைஞன் செய்த பாபம்தான் என்ன? எத்தனை ஆசையுடன் அவன் இந்தியா சென்று வரத் திட்டமிட்டிருந்தான்? அவன் செளந்திரத்தைப் பார்க்கப் போவதைச் சொல்லாமல் போவதாகச் சொன்னானே? அது போலவே ஆகி விட்டதே? கடவுளே…இது நியாயமா என்று மனது அரற்றியது… சுந்தரத்தின் உருவமும் பேச்சும் இதயத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது….
கண்களில் கண்ணீர் அருவியாகப் பொங்கிற்று. சுந்தரம் தன் மனைவியிடம் சொல்லி அங்கலாய்த்த மாதிரி, இது உண்மையிலேயே கடவுள் செய்த குற்றம் தானோ?
மனது மிகவும் பாரமாகிப் போனது….அது சமயம் அமரகவி கண்ணதாசனின் அந்தக் காவிய வரிகளைக் கொண்ட “……இருவர் மீதும் குற்றமில்லை….இறைவன் செய்த குற்றமடி” என்ற பாடல், ஒலி 96.8—லிருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது….