கடவுள்களும் இவர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 2,376 
 

1

செந்தில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டான்.

“இவன் எக்கேடாவது போவட்டும். என்னம்மோ இவன நம்பித்தான் நான் இன்சூரன்ஸையே செய்ய ஆரம்பிச்ச மாதிரி. வேணாம்னா வேணாம்னு சொல்லித் தொலைய வேண்டியதுதான! ஒவ்வொரு தடவையும் அலைய வெச்சிக்கிட்டு இருக்கான் மடப்பய!” தங்கவேலு கரித்துகொட்டியபடி நடையைக் கட்டினார். அவருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள்.

தங்கவேலுவின் தலை மறைந்து விட்டதை உறுதி செய்தபின் தான் வழக்க நிலைக்குத் திரும்பினான் செந்தில். தங்கவேலுவுக்கும் செந்திலுக்கும் ரொம்ப நாளைய தூரத்துப் பழக்கம். ஆனாலும் கொஞ்ச காலமாகத்தான் தங்கவேலு செந்திலை காப்புறுதிக்காக துரத்திக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே இரண்டு முறை காப்புறுதி எடுத்து தவணைக் கட்டணம் செலுத்தத் தவறி பாதியிலேயே விட்ட வெறுப்பு செந்திலைப் பொருத்தவரை தங்கவேலுவாக உருவெடுத்துத் துரத்திக் கொண்டிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருந்தான். முடியாது, பிடிக்கவில்லை என்று அவர் முகத்தைப் பார்த்துச் சொல்ல பயந்துகொண்டுதான் இப்படிச் சில ‘எஸ்கேப்புகள்’.

செந்திலுக்குத் தான் செய்தது எந்த அளவுக்குத் தங்கவேலு தன்மீது வைத்திருந்த மதிப்பைத் தேய்த்திருக்கும் என்பது புரியாமல் இல்லை. அது மனதை அரித்துக்கொண்டே இருந்தது. இன்று காலை எழும்போது திடீரென ஒரு மின்னல் வெட்டாய் தங்கவேலுவின் முகம் சிந்தையில் வந்து போனது.

காரணம் புரியாத செந்தில் படுக்கையை விட்டு எழுந்தான். மளமளவென காலை எனும் கடங்காரனுக்குக் கொடுக்க வேண்டுயக் கடனை காலைக் கடன் எனும் பெயரில் கொடுத்துத் திருப்தியுடன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.

வண்டி நிறுத்துமிடத்தில் கஷ்டப்பட்டுத் தேடி காலியிடத்தைக் கண்டுபிடித்து நிறுத்தினான். கைக்கடிகாரம் மணியாகிவிட்டது என்று சொல்லி கடித்துக்கொண்டிருந்தது.

வண்டி நிறுத்துமிடத்தைத் தாண்டி வெளியே வந்தால் சாலை ஒன்று இருக்கும். கோலாலம்பூர் ஓட்டுனர்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்காத சாதாரண சாலைதான் அது. அதைத் தாண்டினால் அக்கரையில் செந்திலின் அலுவலகம்.

சாலையைத் தாண்டுவதற்காகச் சாலை ஓரத்தில் வந்து நிற்கும்போது எப்போதும் பார்க்கும் அதே காட்சி. குருட்டுப் பெண் ஒருத்தி தெருநாய் ஒன்றுக்கு ஏற்கனவே கறியில் பிழிந்துவைத்த இட்லியைக் கொட்டிக்கொண்டிருந்தாள். சாலையைக் கடக்க சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு சாலையைக் கடக்காமல் அங்கேயே நாயுடன் அவள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து “இவங்க வேலைக்குப் போன மாதிரிதான்,” என்று நினைத்துக்கொண்டான்.

அதை தூரத்தில் இருந்து பார்த்தபடி சாலையைக் கடந்தபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்த வாடகை வண்டி செந்திலின் இடுப்பைப் பார்த்து மோதி சில எலும்புகளை நொருக்கியிருந்தது. அதிக ரத்தம் வெளியேறி சுயநினைவை இழக்க சில நொடிகள் இருக்கும்போது மீண்டும் மின்னல் வெட்டு போல் வந்துபோனது தங்கவேலு என்கிற கடவுளின் உரு.

2

காலை நேரம் எல்லாருக்கும் அவசரம்தான். பணம் சம்பாதிக்கும் மனித இயந்திரங்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடும் நேரம் அது. திருமாறனுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் போயிருந்தது. தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த வெறுமை சுற்றியிருக்கும் அனைத்தின் மீதும் வெறுப்பைக் கிளப்பியிருந்தது.

இன்று காலை எழும்போதே நேற்றைய மிச்சமீதி அசதியையும் உடலோடும் உள்ளத்தோடும் சேர்த்துக் கட்டிக்கொண்டுதான் எழுந்தான். தனது மேனேஜர் செந்திலைக் கரித்துக்கொட்ட நிறைய காரணங்கள் இருந்தன அவனிடம். பல்லைத் துலக்கும்போதும் செந்தில்தான்; குளிக்கும் போதும் செந்தில்தான்; கழிப்பறையில் முக்கும் போதும் செந்தில்தான். செந்திலிடம் பாட்டு வாங்காமல் ஒருநாளும் நகர்ந்ததில்லை வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து.

“ரோடுல எத்தனையோ பேரு அடிபட்டுச் சாவறானுங்க. இவனுக்கு மட்டும் அப்படி ஒரு சாவு வரமாட்டேங்குதே!” என்று சில காலமாக சபித்துக்கொண்டிருந்தான்.

திருமாறனுக்கு ஒரு பிரச்சினை உண்டு. பரபரப்பாய் காலையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது காலைக் கடனில் முக்கியமான ஒரு கடத்தை அவனால் அடைக்கமுடியால் போய்விடும். கழிப்பறையில் என்னத்தை முக்கினாலும் அவசரத்துக்கு வந்து தொலையாது பழைய ‘சரக்குகள்’. அது அவனுடைய அன்றைய இயக்கத்துக்கு சங்கடம் தரும் இடையூறாக மாறிவிடும். இன்றும் அந்த கனமான சங்கடத்தை ஏற்கவேண்டியிருந்தது செந்திலை சபித்துக்கொண்டிருந்த அழுத்தமான அந்த நேரத்தில்.

அந்தப் பழைய ‘சரக்குகள்’ அலுவலகத்தை அடைந்து விட்டப் பின்னர் முட்டினால் சமாளிக்க மூன்று கழிப்பறைகள் உண்டு. ஆனால், போகிற வழியில் வயிற்றை முட்டினால்தான் அதிகமான சங்கடமும் அழுத்தமும். அந்தச் சங்கடமும் அழுத்தமும்தான் அப்போதைக்கு.

பேருந்து இன்னும் வந்து சேராமல் இருந்தது. திருமாறனுக்கு பொறுமை அதிகமில்லை; குதித்துக்கொண்டிருந்தான். பேருந்து நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. வாடகை வண்டி ஒன்று வந்தால் தேவலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயம், “பஸ்ஸு வந்துருச்சா தம்பி?” என்று பின்னால் இருந்து வயசான ஒருவரின் கேள்வி வந்தது. திருமாறன் திரும்பிப் பார்த்தான்.

திருமாறனிடமிருந்து பதிலை வாங்காமல் அவன் மீது செலுத்திய கூர்மையான பார்வையை எடுப்பதாய் இல்லை என்று உத்தேசித்திருந்தார் கிழவர். “இன்னும் இல்ல,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தான் சாலையை. “பஸ்ஸு வந்திருந்தா நான் இங்க நின்னுகிட்டு இருப்பனா? கொஞ்சமாச்சும் யோசிக்குதா இந்த கெழவன்?” மனம் கிழவரையும் கரித்துக்கொண்டிருந்தது.

திருமாறனின் அவசரம் புரிந்த வாடகை வண்டி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அதைக் கைகாட்டி நிறுத்தினான். அவந்து கட்டளைக்கு அடிபணிந்து வண்டி நின்றது சாலை ஓரத்தில். கதவைத் திறந்து உள்ளே முக்கால்வாசி நுழைந்துவிட்டிருப்பான் அவன். “ஆ ஆ ஆ” என்ற அலறல்.

உள்ளே முழுமையாகத் தன்னை நுழைத்தப்பின் கண்ணாடியிலிருந்து வெளியே பார்த்தான் திருமாறன். அந்தக் கிழவன் பேருந்து நிறுத்துமிடத்தின் முன்னே இருந்த சாக்கடையில் விழுந்து காலை மாட்டிக்கொண்டார். வலி பொருக்கமுடியாமல் “தம்பி வாங்க தம்பி,” என்று கூப்பிட்டது காதில் விழாததுபோல் திரும்பிக்கொண்டு போகவேண்டிய இடத்தின் பெயரைச் சொன்னான் வண்டிக்காரனிடம். வண்டி திருமாறனின் அவசரத்தை உண்மையிலேயே புரிந்துதான் வைத்திருந்தது. அவனது அவசரத்திற்கு ஏற்றார்போல் வேகமாகப் பாய்ந்துகொண்டிருந்தது.

வண்டி அந்த அதிக பரபரப்பில்லாத சாலையைத் தொட்டிருந்தது. “அங்க பாருங்க தம்பி. சிவப்பு லைட்டத் தட்டிவிட்டுருக்கானுங்க. ஆனா, யாருமே ரோட்டத் தாண்டல!” என்று திருமாறன் கேட்கிறானா இல்லையா எனும் அக்கறை கொள்ளாமல் வண்டியை நிறுத்த முற்படாமல் வேகமாய் போய்க்கொண்டிருந்தார் வண்டிக்காரர்.

சிவப்பு விளக்கைத் தாண்டி சிறிது தூரத்தில் பராக்குப் பார்த்துகொண்டு ஒருவன் குறுக்கே நுழைய வண்டி அவனை ஒரே இடி இடித்துத் தள்ளியது. திடீர் அதிர்ச்சியில் வண்டியின் முன் இருக்கையில் சீட் பெல்ட் போடாமல் உட்கார்ந்திருந்த திருமாறன் எகிறிப் போய் வண்டியின் முன் கண்ணாடியை முட்டி மண்டையை உடைத்துக்கொண்டான். நினைவு தப்பும் நேரத்தில் கிழவன் என்கிற கடவுளின் “வாங்க தம்பி” எனும் அழைப்போசை கேட்டது.

3

அம்மா இட்லியைச் சுட்டுத்தர வானதி கறியைச் சுடச்சுட ஊற்றிப் பிசைந்துகொண்டிருந்தாள். வாயில் அள்ளி வைத்துத் திணித்துக்கொண்டு பசியாறல் எனும் கடனை முடித்துக்கொண்டிருந்தாள். எல்லாருக்கும் காலை வேலைக்குப் போக ஒருமணி நேரம் ஆகும் என்றால் வானதிக்கு மட்டும் கூடுதல் அறைமணி நேரம் பிடிக்கும். மங்களான அவளது கண் பார்வை அவளது அன்றாட இயக்கம் ஒவ்வொன்றையும் மிக கவனமாய் நேரமெடுத்துச் செய்யவைத்துக்கொண்டிருந்தது.

வானதியின் இடது கண் முழுமையாக பார்வையற்றது. வலது கண் மட்டும்தான் வெளியுலகத்தை ஏதோ கொஞ்சமாவது காட்டிக்கொண்டிருந்து. கைத்தடி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று பிழைக்கமுடியாது அவளால்.

அம்மா இரண்டு இட்லியை கறி ஊற்றிப் பிசைந்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்துப் பையில் போட்டார். அதே பையில் இன்னொரு டப்பாவில் மூன்று இட்லியை எடுத்து வைத்து கறியை ஊற்றி பிசையாமல் அப்படியே மூடி வைத்தார். “சாப்பாடு இந்தா,” என்று உணவை எடுத்து வைத்த பையை எடுத்து வீட்டு வாசலுக்குப் பக்கத்திலுள்ள மேசையில் எடுத்து வைத்தார். வானதி காலில் செருப்பை மாட்டியவுடன் கையில் எடுத்துச் செல்ல வசதிக்காக அந்த மேசை மீது வைப்பதுதான் வழக்கம்.

“மணி இப்பவே எட்டாகுது. இன்னைக்கு வேலைக்குப் போக வேணாம்னு சொன்னாலும் கேக்கமாட்டேன்ற…” அம்மா வாசலுக்கு வந்தார். வானதி செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டிருந்தாள். “இப்படி அவசர அவசரமா ஓடுறதுக்குப் பேசாம லீவு எடுத்துக்கோ வானதி,” கடைசியாக இன்னொரு முறை அம்மாவின் முயற்சி.

“அம்மா, இன்னும் நேரம் ஆயிடல. நான் கெளம்பறேன்.” என்று நடக்க ஆரம்பித்தாள். மடக்கும் வசதி கொண்ட விசேஷ கைத்தடி அவளுக்கு வழிகாட்டிக்கொண்டே போனது.

வானதி வேலை செய்யும் இடத்துக்கும் வீட்டுக்கும் இருவது நிமிட நடக்கும் தூரம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மாதான் கொண்டுபோய் வேலைக்கு விட்டுவந்துகொண்டிந்தார். சாலை விபத்து ஒன்றில் கால் முட்டி நொருங்கியபின் வீட்டை விட்டு அவர் வெளியே வருவதில்லை. வானதியே சொந்தமாக வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள்.

இன்று வானதி கொஞ்சம் தாமதமாகி இருந்தாள். நேரத்தைத் துரத்திக்கொண்டு ஓடினாள். அந்த அதிக சலனமில்லாத சாலையைத் தாண்டி அடுத்த சில கட்டடங்களைத் தாண்டினால் வானதி வேலை செய்யும் தொழிற்சாலை! இந்நேரம் வேலை ஆரம்பித்திருக்கும். சாலையோரம் வந்து நின்றுகொண்டாள். பாதசாரிகள் சாலையைக் கடக்க பிரத்தியேக சமிக்ஞை விளக்கு அங்கே கட்டப்பட்டிருப்பதால் வானதி அங்கேதான் வந்து சாலையைக் கடப்பாள். சாலை ஓரத்தில் இருந்த கம்பத்தில் சிவப்பு பட்டனை அழுத்தினால் சில நொடிகள் கழித்து சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்துக்கு மாறி ‘பீப்’ ஒலியெலுப்பும். வண்டிகள் நின்று பாதசாரிகளுக்கு வழிவிடும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு விரைந்து கடந்துவிடுவாள் வானதி.

வானதி அந்த பட்டனை அழுத்திவிட்டாள். சிவப்பு விளக்கு வந்திருந்ததற்கான அறிகுறியாய் பீப் ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. அதை விட்டால் மறுபடியும் ஐந்து நிமிடம் விட்டுத்தான் சிவப்பு விளக்கை வரவழிக்க முடியும்.

எதற்காகவோ அவள் அவசரமாகக் காத்துக்கொண்டிருந்தாள். நேரமோ கடந்துகொண்டிருந்தது. பரவாயில்லை, முதலில் வேலைக்குப் போய்ச் சேருவோம் என்று எத்தனித்தபோதுதான் அந்த நாய் குரைக்கும் ஓசை கேட்டு அப்படியே நின்றாள்.

அந்த நாய்க்கு எப்போதுமே வீட்டிலிருந்து ஏதாவது சாப்பாட்டைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவாள் வானதி. அதற்குத் தகுந்தாற்போல் நாயும் சரியான நேரத்துக்கு வந்து அவளுக்காகக் காத்திருக்கும். வானதி வந்ததுமே சாப்பாட்டைக் கொட்டிவிட்டு சாலையைக் கடந்து போய்விடுவாள். ஆனால், இன்று மட்டும் நாய் ஒரு நிமிடம் தாமதமாக வந்திருந்தது.

கறி ஊற்றி பிசைந்து வைத்திருந்த இட்லி தட்டைத் திறந்து கீழே கொட்டிக்கொண்டிருக்கும்போது மடீர் என பயங்கர சத்தம் கேட்டு வானதி அதிர்ந்து போனாள். சிவப்பு நிற வண்டி ஒன்று யாரையோ இடித்துத் தள்ளியிருந்தது அவளது மங்கலான விழியில் தெரிந்தது.

கடவுள் என்கிற நாய் மீண்டும் குரைத்தது.

(தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *