சாந்திக்கு இது மூன்றாவது கர்ப்பகாலம் இதற்கு முன்பாக இரண்டு பெறுமதி மிக்க ஆண் வாரிசுகள் அவளைப் பொறுத்த வரை தான் இதெல்லாம் இந்தக் குழந்தைச் செல்வங்கள் பற்றி அவர்கள் அக்கறை குறித்த எந்த விடயமுமே எடுபட முடியாமல் போன குறுகிய ஒரு தனி வட்டத்தினுள் அவள் கணவன் அடைபட்டு உயிர் வாழ்வது அவளை மிகவும் மனம் பாதித்த ஒரு நெருடலான வாழ்க்கைச் சோகம் இப்படி எத்தனையோ இழப்பு வாழ்க்கையின் குரூரமான சங்கதிகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல இது தொடங்கி இன்று வரை ஒரு யுகம் போலாகிறது.
அவளுக்குத் தெரியும் இந்தத் தொடக்கமும் முடிவும் சாசுவதமான ஒன்றல்ல அப்போது எது சாசுவதம்? உயிர் நிலையான இந்த ஆத்மா அது அழிவதில்லயென்றும் பிறப்பிறப்பு அதைப் பாதிப்பதில்லையென்றும் அவள் நிறையவே படித்திருந்த ஞாபகம் தான் இன்று வரை மனம் தளும்பாமல் தன்னைக் காப்பாற்றி ஒளிப்பீடத்தில் ஏற்றி வைத்துக் கொண்டிருப்பதாக அவள் நினைவு இந்த நினைவுகளின் ஈரச் சுவடறியாத வாழ்க்கையின் நிழல் பாதை தான் அவளுக்காகக் கடவுள் கொடுத்த வரம் இதை வரம் என்று சொல்வதா? வாழ்க்கையின் துருப்பிடித்த நிழல் சங்கதிகள் என்று வர்ணிப்பதா? எதுவாக இருந்தாலென்ன வாழ்க்கையென்ற பெருஞ்சமுத்திரத்தினுள் இறங்கத் துணிந்த பின் நீந்திக் கரை சேர வேண்டுமென்பதே நியதி சவால்களாக அவளை இரை விழுங்கத் துடிக்கும் கசப்பான அனுபவங்கள் நடுவே மூச்சுத் திணறிச் சாக வேண்டிய நிலைதான்.
எனினும் அவள் சாகவில்லை பெற்றுப் போட்ட குழந்தைகளுக்காக இந்த மேலான வாழ்க்கைத் தவம் ஒரு பெண்ணால் அப்பாடித் தான் கழுவாய் சுமந்து புண்பட்டுப் போனாலும் இருக்க முடியும்.
“சாந்தி!” யாரோ அழைத்த மாதிரிப்படவே சோர்ந்து போய்ப் படுத்துக் கிடந்தவள் திடுக்கிட்டு விழித்த போது அம்மாவின் மங்கலான முகம் பார்வையில் இடறிற்று அவள் எப்போதுமே இப்படித் தான் தேவையில்லாத கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு மாய்வாள் இப்போது அவளின் கவலையெல்லாம் சாந்தியைப் பற்றித் தான்.
அவள் நல்லபடி பெற்றுப் பிழைக்க வேண்டுமேயென்ற கவலை இது பெண்ணுக்கு மறுஜென்மம் எடுத்த மாதிரி அந்த வலி ஆண் அறியாதது.
“என்னம்மா?”
“ என்ன ஒரு மாதிரி முகமெல்லாம் வேர்க்குது?குத்துதே?”
“அம்மா! அவ்வளவு வலியிருந்தால் இப்படிப் படுக்க முடியுமே அந்தக் குத்து வந்தால் நான் பரலோகம் தான்”என்றாள் ஏதோ வேடிக்கை நினைப்பில்.
“ உனக்கு எப்பவும் விளையாட்டுத் தான் இப்ப நீ மூன்று பிள்ளகளுக்குத் தாய்”
“ மூன்றாவது இப்ப வயிற்றில் ஐயோ சரியாய் குத்துதம்மா”
“ பொறு கார் வரட்டும் அப்பாவிட்டைச் சொல்லி விடுறன்”
“ அவருக்குச் சொல்ல வேண்டாமோ?”
“நல்ல அவர். அவன் இதைத் தான் நினைச்சுக் கொண்டிருக்கப் போறான்”
“நினைக்கிறாரோ இல்லையோ சொல்லுறது கடமையில்லயா?”
அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது தேகம் புல்லரித்தது இவ்வளவு கொடுமைகளைக் கண்ட பின்பும், அவனைப் பெரிசுபடுத்திப் பேசுகிற அவளது கற்பை விட்டு விலகாத தெய்வீக குணம் குறித்து அம்மா பெருமிதம் கொண்டாலும் அதையும் மீறி அவனைப் பற்றி நினைக்கும் போது கசப்பைத் தவிர வேறொன்றும் மிஞ்சவில்லை. அவன் குணம் அப்படி அவளை இரை விழுங்கவென்றே பிறந்தவன்.
“ என்னம்மா யோசிக்கிறியள்? எனக்கு உயிர் போகுதென்று சொல்லுறன்”
“இப்ப கார் வந்திடும்”
சாந்திக்கு மூன்றாவதாக அருமை பெருமையாய் ஒரு பெண் குழந்தை அவனுக்குச் சேதி போனது. இணுவில் ஆசுபத்திரியில் சாந்திக்குப்பெண் குழந்தை பிறந்திருப்பதாக அப்பா போய்ச் சொல்லி விட்டு வந்த பின்னும், நீண்ட நேரமாக அவனைக் காணவில்லை அவனுடைய உலகம் வேறு தாய் வீடு தவிர வேறு உலகமில்லை அவனுக்கு இங்கு அவனுக்காக ஒருத்தி நெருப்புத் தின்று தவம் கிடக்கிறாள். .பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தையும் மீறி இது ஒரு தவம் அவனே எல்லாமென்றான பின் அவன் வராத வரைக்கும் மடியில் கனம் தான் குழந்தை கூட நெருப்புக் கனம் அதுவும் பெண் குழந்தை சும்மா வளர்க்க முடியுமா? அப்ப எப்படி வளர்க்கிறது ? அவளுக்குப் புரியவில்லை பெண் குழந்தையென்றால் பூந்தொட்டில் தான் போட வேண்டும் பட்டும் பொன்னுமாய் அதைக் குளிப்பாட்ட வேண்டும் அதற்கெல்லாம் ஏது வசதி அவர்களிடம் அவள் தன் நிலைமையைப் பற்றி யோசித்துக் கவலை கொண்டாள்.
“நான் எப்படியிருக்கிறேன்? ஏன் என்னிடம் ஒன்றும் மிஞ்சவில்லை? எல்லாவற்றையும் அபகரித்துப் போக ஒரு கால தூதுவன் மாதிரி இவர் வந்த பிறகு இந்தக் குழந்தை பாவம் என் வயிற்றில் வந்து பிறந்து தொலைத்ததே. அவளுக்கு அழுகை முட்டிக் கண்ணீர் நதி வழிகிறது பார்க்கப் பொறுக்காமல் அம்மா மனம் வெறுத்துப் போய்க் குரலை உயர்த்தி ஆவேசமாய்ச் சொன்னாள்.
“ நல்லாய் அழு“
இதைச் சொல்ல எப்படி அம்மாவுக்கு மனம் வந்தது? எல்லாம் நீங்கள் போட்ட பிச்சை தானே என்று சொல்லச் சாந்தியால் ஏன் முடியாமல் போனது.
இதை அவள் நினைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாய் அவன் வந்து சேர்ந்தான். அவள் இதை எதிர்பார்க்கவில்லை உச்சி குளிர்ந்து நிமிர்ந்து பார்த்த போது அவன் நின்ற இடத்தைச் சுற்றி அகோரமாய் நெருப்புத் தகிக்கிற மாதிரி ஏதோ ஒன்று அவளைச் சுட்டது. அது வேறொன்றுமில்லை அம்மா பார்த்த பார்வையின் கனம் அப்படி அவன் மீது அவளுக்கென்ன அவ்வளவு பெருங்கோபம்? சாந்திக்கே வராத கோபம் அம்மாவுக்கு ஏன் வந்தது? இதை ஒன்றால் மட்டும் தான் நிறுத்த முடியுமென்று சாந்திமிகவும் பெருந்தன்மையோடு நினைவு கூர்ந்தாள். பிறகு சடாரென்று எழும்பி அம்மாவருகே வந்தாள். கீழே குனிந்து அம்மாவுக்குக் கேட்கும்படியாக மந்திரம் ஓதுவது போல உறுதிபடச் சொன்னாள்.
“கடவுளாக இரு“
அவள் என்ன சொல்கிறாள்?அம்மாவுக்கு அவள் சொன்ன அந்த வேதம் பிடிபட மறுத்தது.எப்பேர்ப்பட்ட தீமையாய் இருந்தாலும் அதை வெல்ல ஒரே மார்க்கம் இந்தக் கடவுள் வழிதான் அது அம்மாவால் முடியாமல் போனாலும் சாந்திக்குப் புரிந்தது “நான் கடவுள் தான்”. பின் முக வெளிச்சமாக அவனை நிமிர்ந்து பார்த்து அன்பு விடுபட்டுப் போகாமல் மனம் குழைந்து சொன்னாள்.