கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 6,141 
 

“மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு.

“ஒண்ணுமில்லை வேலு நம்ம சுரேஷ் பொஞ்சாதி ரெண்டாயிரம் ரூவா கடனா வாங்கினா சம்பளம் வந்ததும் கொடுத்துக்கிறேன்ன்னு சொன்னா.” என்றான் மருது.

“சரி மருதண்ணே, இப்படி யோசிக்கிற அளவுக்கு இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு?”

“அதில்லை வேலு, அவ வாங்கிட்டு போய் மூணு மாசம் ஆச்சு. அதுக்குப் பிறகு அவ வரவே இல்லை. நானும் அவளைப் பார்க்கலை. அதான் எப்படிக் கேட்கன்னு யோசிச்சேன்.” என்றான் மருது.

“அட, என்ன? அண்ணே நீங்க பகல்ல வீட்டில் சித்தப்பு சித்தி ரெண்டு பேருதான் இருப்பாங்க. சாயங்காலாம் வேலைக்குப் போன எல்லோரும் வந்திருவாங்க. வீட்டில் போய்க் கேட்க வேண்டியதுதான.” என்றான் வேலு

“வேலு, வீட்டில் போய்க் கேட்டா அவங்களைக் கஷ்டப்படுத்தற மாதிரி இருக்கும். அதான் யோசிக்கேன்.” என்று மருது சொல்ல.

“அண்ணே, கடன் வாங்கினவளுக்கே அதைத் திருப்பிக் கொடுக்கனும்னு நினைக்கலை. கடன் கொடுத்த நீ ஏன் கேட்கக் கவலைப் படற?” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் மகன் பாலு சென்றான்.

“ஏலே! பாலு கொஞ்சம் இங்க வா. உன்கிட்ட ஒண்ணு கேட்கனும். வேலைக்குப் போய்ட்டு வரீயா?” என்றான் வேலு

“வேலு மாமா, இதைக் கேட்கவா கூப்பிட்டீங்க. ஆமா வேலைக்குதான் போய்ட்டு வரேன்.” என்றான் சலித்துக் கொண்டே.

“மருதண்ணன்கிட்ட உன் அம்மா ரெண்டாயிரம் ரூவா வாங்கினாளாம் மூணு மாசம் ஆச்சு. இன்னும் கொடுக்கலை போல அண்ணனுக்கு ஏதோ அவசரம் பணம் தேவைப்படுது நீ அதை அண்ணனுக்குக் கொடு.” என்றான் வேலு.

“மருது மாமா, அம்மா வாங்கிய கடன் எல்லாத்தையும் அம்மாகிட்டயே கேட்டுக்கோங்க. என்கிட்ட வராதீங்க ஒரு பைசா கூடத் தரமாட்டேன்.” பாலு கறாராகச் சொன்னான்.

“என்ன? மருதண்ணே மாசம் இருபதாயிரம் சம்பளம் வாங்குறான். தன் அம்மாக்காக ரெரண்டாயிரம் கொடுக்கமாட்டானா? இவன் எல்லாம் என்ன பிள்ளை? அண்ணே செல்வி போறா இவகிட்ட கேட்போம். இவ கொடுத்திருவா. செல்வி எங்கே போய்ட்டு வர இங்க வாயேன்.” என்று செல்வியைக் கூப்பிட்டான் வேலு.

“ஒண்ணுமில்லே செல்வி, மருதண்ணே…” என்று பாலுவிடம் சொன்னதை அப்படியே சொன்னான் வேலு.

“இங்கபாருங்க மருது மாமா, நீங்க அம்மாக்குதானே கொடுத்தீங்க எனக்கா கொடுத்தீங்க. என்கிட்ட ஏன் கேட்கீங்க? அம்மாகிட்டயே வாங்கிக்கோங்க.” என்று முறைப்பாகவே சொல்லிவிட்டுச் சென்றாள்.

“அய்யோ! மருதண்ணே, இவளும் இப்படிச் சொல்லிட்டுப் போறா. ரெண்டும் என்ன பிள்ளைங்க தாய்க்காக இதைக் கூடக் கொடுக்க மாட்டாங்காளா? சுரேஷ் அண்ணணே வந்துட்டார் அவர்கிட்டயே கேட்கலாம்.” என்று இருவரும் சுரேஷ் அருகில் வரும் வரை காத்திருந்தனர்.

“ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? என் பேர் அடிபடுது.” என்றான் சுரேஷ்.

“அது ஒண்ணுமில்லை சுரேஷ் அண்ணே.” என்று பாலு, செல்வியிடம் சொன்னதைச் சொன்னான்.

“மருது, அன்னைக்கே உன்கிட்டச் சொல்லிட்டேன். நீ என்கிட்ட கேட்டா கொடுத்த, இல்லைதானே. அப்ப அவகிட்ட கேட்டு வாங்கிக்கோ. என்கிட்ட ஏன் கேட்க?” என்று சொல்லிவிட்டு சுரேஷும் சென்றான்.

“நல்ல குடும்பம் மருதண்ணே. பொஞ்சாதிக்காகக் கணவனும் கொடுக்க மாட்டேங்கிறான். தாய்க்காகப் பிள்ளைகளும் கொடுக்க மாட்டேங்குது. கடன் வாங்கினவ என்ன ஆனான்னு தெரியலை.” என்று வேலு சலித்துக் கொண்டான்.

மருது கலகலவெனச் சிரித்துக் கொண்டே, “வேலு, நான் ஏற்கனவே இவங்ககிட்ட கேட்டுட்டேன். அதான், என்ன பண்ணன்னு? ரொம்ப யோசனையில் இருந்தேன்.” என்றான் மருது சாகவாசமாக.

“மருதண்ணே, என்ன விளையாடறீங்களா? இதை முதல்லயே சொல்லியிருக்கலாமில்ல.” என்றான் வேலு முறைப்பாக.

“நீ எங்க? என்னைச் சொல்லவிட்ட. நீயே அவங்களைக் கூப்பிட்டு பேசின.” என்று மீண்டும் சிரித்தான்.

“சரி மருதண்ணே, இப்ப என்ன பண்ண போறே? பணத்தை எப்படி வாங்குவே? அண்ணே சித்தப்பும் சித்தியும் போறாங்க. அவங்ககிட்ட கேட்போம். ஓய்வுதியம் வாங்கறாங்க மருமகளுக்காகக் கொடுக்கமாட்டாங்களா என்ன?” என்று சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கூப்பிட்டான்.

“வேண்டாம் வேலு, சம்பாதிக்குறவங்களே கொடுக்கலை. வயசானவங்க அவங்ககிட்ட எப்படிக் கேட்க முடியும்? அவங்க என்ன பண்ணுவாங்க?” என்றான் மருது.

“அண்ணே கேட்டுதான் பார்ப்போம். என்ன சொல்றாங்கனு.” என்று அவர்களைக் கூப்பிட்டான் வேலு.

“சித்தப்பு, வயசான காலத்தில் வீட்டில் இருக்காம ரெண்டு பேரும் வெளியில் சுற்றிகிட்டு இருக்கீங்க.” என்று வேலு கேட்க.

“வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கோம். அதான், வெளியில் வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கு. ஆமா, நீ எதுக்குக் கூப்பிட்ட.” என்றார்.

“உங்க மருமக மருதண்ணன்கிட்ட ரெண்டாயிரம் ரூவா வாங்கினாளாம். மூணு மாசம் ஆச்சு இன்னும் கொடுக்கலை. அண்ணனுக்கு ஏதோ அவசரம் பணம் தேவைப்படுது. அதான், அவளும் ஆளையே காணும்…” என்று இழுத்தான் வேலு.

“மருமக வேலைக்கும் போறா வீட்டுக்கு வந்து எல்லா வேலையும் பார்க்கா. அதான், மறந்து போயிருப்பா. நீ என்கிட்ட கேட்டா என்ன?” என்று உடனே தன் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
மருதுவும் வேலுவும் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்து நின்றனர். “என்ன? ரெண்டு பேரும் அப்படிப் பார்க்கிங்க?” என்று கேட்க.

“சித்தப்பு, அதுவந்து…” என்று நடந்தது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “ஏன் இப்படி இருக்காங்க?” என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே, “காலையில் வெளியில் போறாங்க. சாயங்காலம்தான் வராங்க. அவங்க வர வரை நாங்க ரெண்டு பேரும் தனியாதான் இருக்கோம். அவங்க வந்ததும் மகன் நம்ம கூட உட்கார்ந்து பேசமாட்டானா? பேரப்பிள்ளைங்க கூட விளையாடுவாங்களா? பேசுவாங்களான்னு அவங்களைப் பார்த்துட்டு இருப்போம். ஆனால், அவங்கத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. அவங்க பார்வை முழுசும் கையில் இருக்கிற கைபேசியிலதான் இருக்கும்.

மருமக வந்ததும் காபி கொடுப்பா. அதோடு அவளும் வீட்டு வேலைன்னு தொடங்கிருவா. அவ வேலை முடிஞ்சு வர மணி ஒன்பதாகும். எல்லாம் சாப்பிட்டுத் தூங்கறதுதான் வேலை. சாப்பிடுறப்ப கூட அவங்க கையில் கைபேசிதான் இருக்கும். சாப்பாட்டு ருசி கூடத் தெரியுமான்னு தெரியலை.

அப்பெல்லாம் சொந்தங்கள் ஒவ்வொருத்தரும் பேசிக்குவோம். யாருக்கு என்ன தேவைன்னு ஒவ்வொருத்தருக்கும் தெரியும். ஏதாவது உதவின்னா உடனே வந்து செய்வாங்க. இப்ப ஒவ்வொருத்தரும் முகம் பார்ப்பதே அதிசயமா இருக்கு.

ஒரே வீட்டில் இருந்தும் பார்ப்பதும் பேசுறதும் கஷ்டமா இருக்கு. மற்ற சொந்தங்களைப் பற்றி எப்படித் தெரியும். ஏன் இப்படி இருக்கீங்கன்னு? கேட்டா நவீன காலம் நாங்க அப்படிதான் இருப்போம்.
அதை எல்லாம் கேட்க கூடாதுனு சொல்வாங்க. இதையெல்லாம் பார்க்க பிடிக்காம வெளியில் கொஞ்ச நேரம் வந்தா ஆறுதலா இருக்கு.” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

மருதுவும் வேலுவும் அவர் சொல்வதைக் கேட்டு என்ன பேசுவது என்று புரியாமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *