“ என்னங்க!…கொஞ்சம் இங்கே வாங்க!…கிச்சன் சிங் அடைச்சிட்டது….பாத்திரம் கழுவற தண்ணி வெளியே போக மாட்டேன்கிறது!….”
“ அதற்கு நான் வந்து என்ன செய்யறது?…இரு பிளம்பருக்குப் போன் செய்யறேன்!..”
பிளம்பர்க்குப் போன் செய்தேன். அடுத்த கால் மணிநேரத்தில் அவன் ஆஜர். அடுத்த அரை மணி நேரத்தில் எதை எதையோ கழட்டி சரி செய்து விட்டு கிளம்பி விட்டான்.
“அங்கே என்ன செய்யறீங்க?…மோட்டர் அரை மணி நேரமா ஓடிட்டே இருக்கு!….ஒர் சுட்டுத் தண்ணி கூட டேங்கிற்குப் போகலே!..”
“சரி…கொஞ்சம் பொறுடி! …பிளம்பருக்குப் போன் செய்யறேன்! …”
கூப்பிட்டவுடன் கால் மணி நேரத்தில் வந்து அரை மணி நேரத்தில் மோட்டரை சரி செய்து விட்டு கிளம்பி விட்டான்.
“என்னங்க!…பாத் ரூமில் ஹீட்டர் போட்டு அரை மணி நேரமாகிறது!….தண்ணி கொஞ்சம் கூட சூடே ஆகலைங்க!…….”
“சரி இரு…பிளம்பருக்குப் போன் செய்கிறேன்!….”
போன் செய்தவுடன் பிளம்பர் பத்தே நிமிடத்தில் வந்து ஒரு மணி நேரத்தில் ஹீட்டர் சரி செய்து விட்டான்.
வீடு கட்டிய இந்த ஐந்து வருடங்களாக குமார் தான் எங்க ஆஸ்தான பிளம்பர். இருபது வயசு இளைஞன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து விடுவான். மிகவும் நல்ல பையன்.
ஒருநாள். தயங்கி தயங்கி அவன் என் முன்னால் வந்து நின்றான். “ என்ன குமாரு?…” என்றேன்.
“!…எனக்கு அவசரமா ஆயிரம் ரூபாய் தேவைப் படுது!….நீங்க கடனா கொடுங்க!…சனிக்கிழமை வாரச் சம்பளம் வாங்கியவுடன் தந்து விடுகிறேன்!”
நான் எதுவும் பேசாமல் உள்ளே போய் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து குமாரிடம் கொடுத்தேன்.
அதன் பின் மூன்று சனிக்கிழமைகள் போய் விட்டன. குமார் வீட்டுப் பக்கம் வர வில்லை!
நானே அவனை அழைத்தேன். செல் போன் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை! நானும் பல முறை தொடர்ந்து போன் செய்து பார்த்தேன். என் நெம்பரைப் பார்த்தவுடன் அவன் எடுப்பதில்லை!
நாலு நாள் விட்டு என் மனைவியின் செல்போனில் அழைத்தேன். எடுத்தான். என் குரலைக் கேட்டவுடன் ‘கட்’ பண்ணி விட்டான்! இப்பொழுது புதிய பிளம்பரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கடன் என்பது நட்பு, பாசம், அன்பு எல்லாத்தையும் ‘ஆப்’ பண்ணும் ‘ மெயின் ஸ்விட்சு’ என்பது இப்பொழுது தான் புரிந்தது!
– பாக்யா ஜூலை 10-16, 2015