கசந்த….லட்டு….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 7,761 
 
 

இன்னைக்கு என்ன அதிசயம்….? மழை கொட்டோ…..கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க…நாடகத்தை….என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் காண்பித்துச் சொன்ன பியூன் செல்வராசைத் தொடர்ந்து சுற்றியிருந்த அத்தனை பேர் அதிசயக் கண்களும் அவன் சொன்ன திசைநோக்கித் திரும்பின.

“அடடா…..எச்சில் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டானே…இந்தக் கடைஞ்செடுத்த கஞ்சன்..கணக்கன்..! இன்னைக்கு என்ன.. சிடுமூஞ்சியில் இத்தனை சிரிப்பு…! கொடைக் கர்ணன் வேஷம் போட்டு என்னைக்கும் இல்லாத திருநாளா… ஒவ்வொருவருக்கும் லட்டு தானம் பண்ணராரே….காணக் கண் கோடி வேண்டும் ! அப்படி என்ன தான் நடந்திருக்கும்…? மனதைத் துளைக்கும் கேள்விக் கணைகள்….அனைவரின் கண்களுக்கும் அக்கௌன்டன்ட் வேதநாராயணன், ஆச்சரியக் குறியாகத் தெரிந்தார்.

யாருக்கும் தெரியாமல் பிரமோஷன்..கிரமோஷன் கெடைச்சுதா..? சந்தேக மனங்கள் நடக்கும் அதிசயத்தை
வேடிக்கை பார்க்க.

அதிசயமாக, வேத நாராயணன்…முகமெல்லாம் சந்தோஷ ரேகைகள் ஓட..அவரது கை நிறைய பொன் வண்ணத்தில் லட்டுக்கள் “கண்ணா… லட்டு திங்க ஆசையா”…? என்று ஆசையைக் கிளப்ப…,அருகில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் வெள்ளை பிளாஸ்டிக் இனிப்பு டப்பாக்கள்….கண் சிமிட்டிக் கவர்ந்திட…….அப்படி என்ன தான் நடந்திருக்கும்…?

ஆஹா….ஆஹா…..அதிசயம்…ஆனால் உண்மை…! என்ன விசேஷம்….வேதா சார்..! பிரமோஷன். கெடைச்சுதா..? இல்லை…புதையல் கிடைச்சுதா….? இந்த வாங்கு வாங்கறீங்க…..”குணா” படத்தைத் தான் இத்தனை லட்டு, ஞாபகப் படுத்துது….”அபிராமி…அபிரா
மி..” என்று பவ்யமாக கை ஏந்தி வாங்கும் சாரங்கன்….கேட்க.

எனக்கா புரமோஷன் ? டிமோஷன் இல்லாம என்னை வச்சிருக்கார் அது போதுமே…இது வேற விஷயம்… அதான்…என் பையன் அருண், இன்ஜினியரிங்கில் நல்ல மார்க் எடுத்து ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டான் அதான்….நூறு லட்டு ஆர்டர் பண்ணினேன்…..என்று குதூகலமாகச் சொல்லியபடியே லட்டு டப்பாவை எடுத்து நீட்டி எடுத்துக்கோங்க..பிளீஸ் என்ஜாய்…..என்று பெருமை பொங்கும் குரலில் சொல்ல…அவரை பற்றி நன்கு அறிந்த ஆஃபீஸ் நண்பர்கள் எடுத்த லட்டைத் வாயில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் எடுத்துத் திணித்துக் கொண்டு வாயடைத்துப் போயினர்.

இவர் கருமமே கண்ணாக ஒவ்வொருத்தரிடமும் “ம்ம்…எடுத்துக்கோ….எடுத்துக்கோ….என்று சொல்லிக் கொண்டே நீட்ட…

” அடடா…! எனக்குச் சக்கரை பிராப்ளம்….இருக்கே… ..லட்டு வேண்டாமே…என்று ஒதுக்கியவர்கள் கையிலும் கூட” நீ சாப்பிடாட்டா…என்ன….வீட்டுக்கு எடுத்துண்டு போய் அங்க கொடேன்….இன்னொன்னு கூட எடுத்துக்கோ……நூறு லட்டுக்கள்… வாங்கியிருக்கேன்…!

நூறு என்பதை ரொம்ப அழுத்திச் சொல்லி. கையில் திணித்துக் கொண்டே. இஷ்டம் போல சாப்பிடுங்கள் என்று சொல்லும் அவரைத் திடீர் கர்ணனானதை…ஏற்றுக் கொள்ளாத மனோபாவத்தில் இருந்த அனைவரின்,
“ரொம்ப தேங்க்ஸ்,
” ரொம்ப சந்தோசம்”
இனிமேல் நீங்கள் தாராளமா வி.ஆர்.எஸ். வாங்கிக்கலாம்…!
“உங்கள் குடும்ப கோபுரத்தை சேர்ந்து தூக்க உங்கள் மகன் வந்துட்டான் ஸார்..?”
கொடுத்து வெச்சவர்…நீங்க..!
அருமையான பிள்ளை…..எனக்கும் இருக்கே..ஒரு தருதலை..!
ம்ம்..என்ற ஒருவரின் பெருமூச்சு….!

என்றெல்லாம் ஒவ்வொருவரின் கைக்கு மாறிய லட்டுக்கள் பேசின…!

இவரும் சந்தோஷத்தின் உச்சத்தில்…”ஆமாமாம்..”.என்று ஆமோதித்துக் கொண்டிருந்தார்…

கடைசியாக ஒருவர் சொல்லக் ..”பின்னே..இத்தனை வருடங்கள் வெளில ஒரு டீயோ…காபியோ கூட வாங்கிச் சாப்பிடாமல்…ரொம்பக் கஷ்டப் பட்டு ஓவர் டைம் எல்லாம் பார்த்து பணத்தைச் சேர்த்து மகனைப் படிக்க வெச்சுருக்கார் …அந்த கஷ்டம் அவருக்குத்தான் தெரியும்…அப்பாவோட கஷ்டத்தை சரியாப் புரிஞ்சுண்டு பிள்ளையும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிருக்கான்….உங்க மகனுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் சார்..” கேட்டபோது..வேதா சாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட…! என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

கடைசியாக மீதி இருந்த லட்டுக்கள்…அவருக்கு .வீட்டை ஞாபகப்படுத்த டப்பாவை பத்திரப் படுத்திக் கொண்டார்.

ஆபீஸ் முழுதும் திடீரென கல்யாண சத்திரத்தின் வாசனையைப் பரப்ப….மணி நேரக் கதாநாயகனாக மாறிப்
யிருந்த “வேதா சார்”…அங்குமிங்கும் நடந்தபடி தான்… ஏதோ பெரியதாக சாதித்து விட்டதைப் போல நண்பர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். இவரை நன்கு புரிந்து வைத்திருந்த பலரும்…”சோழியன் குடுமி சும்மா ஆடுமா” என்ற எண்ணத்தில் காதில் புகை விட்டுக் கொண்டிருக்க….!

அன்றைய தினம் அத்தனை பேரின் ஆச்சரியத்தில் வேலையை முடித்து ஆபீஸை விட்டு மீதமிருந்த லட்டுக்களையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புகிறார் வேத நாராயணன்.

அவர் மனசு முழுதும்.. இனி அருண் எங்கு, எப்போது வேலைக்கு போவான்….? இன்போசிஸ்,விப்ரோ,கூகிள்,ஜீயீ, என்று இவருக்குப் பிடித்த பெரிய பெரிய எம் என் சி கம்பெனியின் பெயர்களாக நினைவில் கொண்டு வந்த படியே…. இங்கெல்லாம் வேலை பார்த்தால் தான் எனக்கு மதிப்பாக இருக்கும்….கிடைக்குமா…..? எல்லாம் கிடைக்கும்…என்று எண்ணியவர் பஸ் வரக் காத்திருந்தார். அவரது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது வராத பஸ்.

அவரைப் பொறுத்தவரை டூ வீலர் கூட டாம்பீகம் தான்…..நமக்காகத் தானே எல்லா இடத்துக்கும் பஸ் விட்டிருக்கான்….அத விட்டுட்டு ஏன் தனியா ஒரு வண்டி பணத்தைப் போட்டு வாங்கி…பெட்ரோல் விக்கற விலைக்கு அதுக்கு வேற எதுக்கு பணத்தை அழணும்..? எனக்கு பஸ் ஸ்டாண்ட் வரை என் சொந்த பதினோராம் நம்பர் பஸ் சர்வீஸ்….அதான் ரெண்டு கால்கள் இருக்கும்போது எந்த டிவிஎஸ், ஹோண்டா, பஜாஜ்,னு எந்தக் கம்பெனியும் என் மனசை அசைச்சுக்க முடியாது….எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது, அது வேற விஷயம்….ஆனால் எனக்கு இதுவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் கூட நடந்ததில்லை…என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் சமர்த்தர்.

அவரின் நடை உடைகள் அவரை எல்லோருக்கும் ஒரு முப்பது வருஷத்துக்கு முந்திய ஃபாஷனை நினைவு படுத்தும்.நெற்றி நிறைய வீபூதிப் பட்டை…கழுத்தில் பாம்பு பிடிக்கிறவன் மாதிரி ஸ்படிகம்,நவரத்தினம்,ருத்ராக்ஷ சங்கிலி என்று…..பயமுறுத்த…கைவிரல் நிறைய மத்தளக் காரன் மாதிரி விரலுக்கு ஒரு வண்ணக் கல் வைத்த மோதிரங்கள்….பள பளக்க… காதில் பூ வைக்காத ஒரு குறைதான் ..! பார்க்கிற உத்தியோகம் அப்படி.. யாராயிருந்தாலும் பயந்து ஒரு பத்தடி தள்ளி நிற்கணும் என்ற தோரணையைக் கச்சிதமாகக் கடை பிடிப்பவர். கணக்கன், கணக்குப் பண்ணித் தான் பேசணும்… என்றும் தன் கொள்கையாக மார்தட்டிக் கொள்வார்.

இருந்தாலும்….அவரிடம் நெருங்கிப் பழகும் சிலர்….உங்க மூளைக்கு நீங்க தான் முண்டாசு கட்டிக்கணும்…..இவரது கஞ்சத் தனத்துக்கு இப்படி எல்லாம் வேற ஒரு காரணம் இருக்கா ? மனுஷன் ரூம் போட்டு யோசிப்பாரோ…? சரியான கஞ்சனாப் பார்த்துத் தான் கணக்கராப் போட்டிருக்காங்க…ஒரு வவுச்சரைப் பாஸ் பண்ண
எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்….அந்தாளோட குறுக்கு புத்தியும், கஞ்ச புத்தியும்….இந்த வேலையே வேண்டாம் சாமின்னு ஓடலாம் போல இருக்கு, என்று அலுத்துக் கொள்ள வைப்பார்.

எல்லாரும் குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவார்கள் ன்னு கேள்வி பட்ருக்கோம்……இவர் கொட்டாங்கச்சியில் குதிரை ஓட்டுவார்பா…..என்றெல்லாம் சிலர் சிலேடையாகச் சிரிப்பதும் உண்டு…சிக்கனம், செலவை எப்படிக் கட்டுப் படுத்தாம்னு நம்ம அக்கௌன்டன்ட் கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். மனுஷனுக்கு ஏத்த வேலை தான் ஆண்டவன் போட்டுக் கொடுத்திருக்கான்….என்றும்…பேசிக் கொள்வார்கள்.

இவனால எப்படி ஒரு குடும்பத்தை கட்டிக் காப்பாத்த முடியுது…?அப்படி ஒரு ஆசையே இல்லாத பெண்டாட்டியும் , பிள்ளையுமா ..இருப்பார்கள்…இந்த ஆச்சரியத்தை…!
அடப் போப்பா…வீட்டுக் கதவைத் திறந்தால் தான் புகையும், வாசனையும் தானே கிளம்பும்….அங்க என்ன கஷ்டமோ…யாரு கண்டா…இந்தாளெல்லாம் டைவர்ஸ் ஆனாக் கூட லட்டு தான் கொடுப்பார்….செலவெல்லாம் ஒரே தடவை தானேன்னு…என்று அவரோட நண்பர் சிதறு காய் போலப் போட்டு உடைப்பார்.
கூட நின்றவர்கள் கொல்லென்று சிரிப்பார்கள். இந்தக் கேலியும் கூத்தும் அந்த ஆபீஸில் சிரிப்பு சேனல் மாதிரி…

வேத நாராயணன்…யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டார். பேசாமல் மௌனமாய் அமர்ந்திருப்பவரின் வாயைப் பிடுங்குவதே..ரொம்பக் கஷ்டம்…அவ்வளவு அழுத்தக் காரர்….அதுக்கும் ஒரு காரணம் சொல்வார்…”நானே எனக்கு எனெர்ஜி சேவர் என்று….அப்படியே பேசினாலும் அளந்து வெட்டிப் பேசும் அவரிடம் யாரும் நெருங்கிப் பழக யோசிப்பார்கள்.இவர் இன்று நூறு லட்டு வாங்கி தானம் செய்தது அவருக்கே ஆச்சரியம் தான். மழை இன்னும் ஏன் வராமல் இருக்கிறது ? அவர் நல்லவரா… இல்லையா ?

இதற்குள் பத்தாம் நம்பர் பஸ் வந்து பதினோராம் நம்பரை ஏற்றிக் கொள்ள….. அப்பாடா என்று அமர்ந்தவருக்கு…என்றுமில்லாமல் இன்று இனிப்பு டப்பாகளோடு தான் போய் நின்றால் வீட்டில் ரேவதியும், அருணும் எப்படி சந்தோஷப் படுவார்கள்? என்று நினைத்ததும் , இத்தனை வருடங்களில் இதுபோல் ஒருநாள் கூட சென்றதில்லையே என்ற எண்ணம் அவரை மீறி அவருக்கு நியாபகப் படுத்தியது. கொடுப்பதில் இவ்வளவு சந்தோஷம் வருமா…? என்று கூட மனசு சலனப் பட்டது.

இன்று அவருக்குக் கிடைக்கப்போகும் பெரிய வரவேற்பை நினைத்துக் கொண்டே…இன்னைக்கு லட்டுவுக்கு செலவு செய்த பணக்கணக்கை மனசுக்குள் மனக்கணக்காகப் போட்டுப் பார்த்துக் கொண்டார். மீதி லட்டுக்களை அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் அருணிடம் கொடுத்து கொடுக்க சொல்லணம்…பஸ், இவரது மனசின் வேகத்தைப் புரிந்து கொள்ளாமல் இன்று மெதுவாக ஓடியது போலிருந்தது அவருக்கு. பஸ் சிக்னலில் நிற்கும் போதெல்லாம் இவர் தானாகவே… எழுந்து நிற்பார்.

இரவு டின்னருக்காக சப்பாத்தி செய்து கொண்டிருந்த ரேவதிக்கு பிரமிப்பாக இருந்தது….சப்பாத்தி இடும் பொது அவளோட கரங்களில் கண்ணாடி வளையல்கள் கிணு கிணு வென்று சிரித்தன .. ஒன்றிரண்டு வளையல்கள் உடைந்து சமையல் அறையில் காலில் குத்தின. கழுத்தில் எண்ணைப் பிசுக்கில் அழுது வடிந்து கொண்டிருந்தது தாலிச் சரடு. அருணுக்குப் பசிக்குமே…என்று வேக வேகமாக இயங்கிக் கொண்டிருந்தவளின் பின்னாலிருந்து….அருண் பாடிக் கொண்டே வர….

“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்..
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்..
பெற்றெடுத்து பேர்கொடுத்த அன்னை அல்லவோ…
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ…!”

டேய்…டேய்…போதும்டா….ரொம்ப ஐஸ் வைக்காதே என் மேலே ! இதுக்கெல்லாம் காரணம் உன் பெரியம்மாவும், மாமாவும் தான்….அங்க போயி சொல்லு உன் நன்றியை. இந்தப் பாட்டை அப்பா முன்னாடி பாடித்தொலைக்காதே. அப்பறம் அவ்ளோதான் நீ….என்றவளுக்குப் பெருமை தாங்கவில்லை.

தாங்க்ஸ்மா…..அப்பா வரட்டும் பாடி அசத்திடறேன்…..இது தான் சரியான ரிவிட்….அவருக்கு…!

நான்கு வருடங்கள்….எப்படியோ ஓடிப் போய்விட்டன….நான்கு யுகங்களைக் கடந்து வந்தது போலத் தெரிந்தது…அவளுக்கு……இன்று அருண் “இஞ்சினீயர்” ! இவனை உருவாக்க, ரேவதியின் ஆத்மீகக் கனவை நனவாக்க எத்தனை பேர் கஷ்டப் பட்டிருக்கிறார் அவன் அப்பாவைத் தவிர. அவனை …இந்தப் பட்டத்தை வாங்க..பட்ட பாடு கொஞ்சமா…நஞ்சமா..? பிளஸ் டூ முடித்து விட்டு என்ன படிக்க வைக்கலாம்னு யோசிக்கும் போது….எல்லோரது மனசும் இஞ்சினீயர், டாக்டர், வக்கீல் என்று போக…இவர் மட்டும்….!

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…ஆட்டு மந்தை மாதிரி…..கூட்டத்தோட கூட்டமா இஞ்சினீயர் தான் படிப்பேன் என்று என்ன அழிச்சாட்டியம்…லோகத்தில் லட்சக் கணக்கா .இஞ்சினீயர்கள் வேலை இல்லாமல் தான் சுத்திக்கிண்டு இருக்கா. என்னத்த படிச்சாலும் எல்லாம் ஒண்ணு தான் …என் ஆஃபீஸ் ல வந்து பாரு….என்ஜினீயரிங் படிச்சுட்டு வெறும் பத்தாயிரம் வாங்கற பயல. அதே …சமயம் பி.காம் படிச்சுட்டு வந்து இருபதாயிரம் சம்பளம், கிம்பளம் சேர்க்காமல், அது தனி வாங்கறவனும் இருக்கா. எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்.
நான் என்ன இஞ்சினியருக்கா.. படிச்சேன்?

தோ பாருடா…அருண்.!..நன்னாக் கேட்டுக்கோ….ஒரு இஞ்சினீயர் .. சீட்டுக்கு மூணு லட்சம் லஞ்சம் எல்லாம் என்னால கொடுத்து உன்னை படிக்க வைக்க முடியாது….நீ வாங்கியிருக்கற எண்பத்தாறு பெர்சன்டேஜுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் வாசல் பக்கம் கூட போய் நிக்க முடியாது….பேசாமல் பி.காம் படிச்சுட்டு ஏதாவது பிரைவேட் பாங்கில் போய் வேலைக்கு உட்காரு..அதான் சரிபட்டு வரும்…..வீணா ஆசையை வளர்த்துக்காதே…

உன் அம்மாவுக்கென்ன….அவளா சம்பாதிக்கறா….? அவ ஆயிரம் சொல்லுவா…! விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டாமா? சின்னச் செடிக்கு எத்தனை நிழல் தர முடியுமோ அவளளவு தான் முடியும். உங்கம்மா வெறும் கையால் முழம் போட நினைச்சா ….நடக்குமா ..? போ ..நீயா… எதையும் கனவு காணாமல் ….விவேகானந்தா காலேஜூல போய் அப்ளை பண்ணி இருபதோ…முப்பதோ பணத்தைக் கட்டி பி.காமில் சேர்ந்துடு.. அது தான் என்னால முடியும். அதுக்கே நான் கஷ்டப் படணம்..தெரிஞ்சுக்கோ…இஞ்சிநீரும் வேண்டாம்…சுக்குநீரும் வேண்டாம்….புரிஞ்சுதா….அவ்ளோ தான் நான் சொல்லிட்டேன் …என்று அன்றே, முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

அருண் அம்மாவிடம் …பாரும்மா …அப்பாவை …என் கிளாஸ் மேட்ஸ் எல்லாரும் எஸ் ஆர் .எம் காலேஜில் சேர்ந்தாச்சு ….நான் மட்டும் தான் இன்னும் உங்க கிட்ட கேட்டுண்டு நிக்கறேன் …..எனக்கு என்ஜினீயர் படிக்கணும்னு தான் ஆசை. …இந்தப்பா….தான் இப்படி சொல்றார் …நீயாவது வந்து ஏதாவது சொல்லி அப்பாவை சம்மதிக்க வைம்மா…ப்ளீஸ்..!

நீ இவ்வளவு தான் புரிஞ்சுண்டு இருக்கியா அவரைப்பத்தி… …..தான் பிடித்த முயலுக்கு மூணே காலுன்னு நிப்பாரே இவர்…இவரை மாத்த அந்த பிரம்மனாலும் முடியாது….இவர்..உன் நாலு வருஷ படிப்புக்கும் ஆகும் செலவை வட்டி போட்டு கணக்குப் பார்த்து ஏற்கனவே முடிவு பண்ணி வெச்சிருப்பார … நீ வட்டியோட திரும்பத் தரேன்னு சொன்னா ஒரு வேளை மனசு மாறலாம் …ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லைடா உன் அப்பா மேல. அது அவர் காரக்டர்.

நீ இவ்ளோ கெஞ்சறே…அதுக்காக வேணா… இரு எதுக்கும் கடைசியா ஒரு நடை கேட்டுப் பார்க்கறேன், என்றவள்.

இதோ பாருங்கோ ! அருணுக்கு இஞ்சினீயர் ஆகணும்னு தான் ஆசை ….நமக்குன்னு இருக்கறது ஒரே பையன்….கூட இன்னொண்ணு இருந்திருந்தா…செலவாகும்னு சொல்லலாம்…இவனைப் படிக்க வைக்க நம்மால முடியாதா என்ன….? இந்த வீட்டை வெச்சாவது…, என் நகைகளை விற்றாவது, இல்லன்னா…கடன உடன வாங்கியாவது ..என்று இழுக்க….!

ஆமாம்…..இந்த வீடு எனக்குச் சீரா நீ கொண்டு வந்தது பாரு….ஐடியா சொல்ல வந்துட்டா….எல்லாம் சாதாரணக் காலேஜ் படிச்சா போதும்டி. இந்தக் காலத்தில் பிள்ளையப் படிக்க வெச்சு…லட்சக் கணக்கில் செலவு செய்ய, அவன் உனக்கும் பெப்பே….உங்கப்பனுக்கும் பெப்பே …னு படிக்கப் போன இடத்தில் எவளையாவது இழுத்துண்டு வந்து நிப்பான்…வேண்டாம்னா…ஓடிப் போவான்…அப்படிப் போறதுக்கு , என் கைக்காசை நான் தொலைக்கணுமா …? வீட்டை வைக்கணுமாம்..நகையை விக்கணுமாம்….ஏன் ….நாளைக்கு நடுத் தெருவுல இவன் நிக்க வைக்க இன்னைக்கே நாம ஒத்திகை பார்த்துக்கணுமா? அடிபோடி…பயித்தியக் காரி.! முதல்ல சேத்து வெச்சதைக் காப்பாத்தத் துப்பிருக்கான்னு பாரு. அப்பறமா வித்துட்டு காலேஜுக் காரனுக்கு அழரதப் பத்தி யோசிக்கலாம்..

அட ராமா ..நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒன்னு சொல்றேள்…? பிள்ளையைப் பார்த்து நீங்களே இப்படிப் பேசினா எப்படி .? அவனுக்கு நாம தானே ஒரு நல்ல வழியைக் காமிக்கணும் . படிக்க போற ..எல்லாருமா வீட்டை விட்டு ஓடறா…..எப்பவுமே…நெகடிவாப் பேசி பேசி….அது தான் டாண்ணு வந்து உங்க நாக்கில் முன்னுக்கு நிக்கறது…ஆஃபீஸ் புத்தி எங்க விட்டது…? கடைசியா என்ன தான் சொல்றேள், அதைச் சொல்லுங்கோ…

முதலாவும் அதையே தான் சொல்றேன் ..என்னால இவனை இன்ஜினீயரிங் படிப்பெல்லாம் படிக்கச் வைக்க முடியாது….வெறும் பி.காம் தான் .! நான் அது கூட படிக்கலை …அதுக்காக வருத்தப் பட்டதும் இல்லை …இப்ப நாம வாழல…? .இஞ்சினியர் ஆனால் தான் வாழ முடியும்னு எவன் சொன்னான்….ஆட்டுமந்தையில் இவன் ஆயிரத்தியோராவது ஆடு… சுயமாவே…சிந்திக்க மாட்டேன்னா…எப்படி…டீ.? சொன்னவர் மேற்கொண்டு பேச விடாமல் வாயை அடைத்து விட்டார்.

“………………………..……..”

சிலை போல் நின்றாள் ரேவதி ! அருண் கண்களில் கலக்கம்… !

என்னால முடிஞ்சத… நான் சொல்லிட்டேன்….உன்னால என்ன முடியுமோ நீ பார்த்துக்கோ….ஆனா ஒண்ணு பணத்துக்கு என்கிட்டே வந்து நிக்கக் கூடாது….என் பேச்சைக் கேட்டு அவன் காலேஜுல சேர்ந்தால் எல்லாச் செலவையும் நான் பார்த்துப்பேன்….அப்படி இல்லைன்னா உங்க இஷ்டம்…எனக்கு ஆபீஸ் வேலையே ஆயிரம் இருக்கு…என்னால லீவை போட்டுட்டு ஊர் ஊரா இஞ்சினீரிங் சீட்டுப் பிச்சை கேட்க முடியாது…இனிமேல் என்கிட்டே இதப் பத்தி பேசாதே..நான் சொல்றதைச் .சொல்லிட்டேன். தீர்மானமாகச் சொன்னவர் படுக்கச் சென்றார்.

என்னம்மா அப்பா இப்படி சொல்லிட்டுப் போய்ட்டார்.தோளுக்கு மிஞ்சினால் தோழன்..ன்னு கூட நினைக்காமல்..இன்னும் தனக்குக் கீழயே…இருக்கணும்னு நினைக்கிறாரே..அதை நினைச்சாத் தான் வருத்தமா இருக்கு….எங்கம்மா பிடிச்ச இந்த மாதிரி ஒரு ஆளை….எப்டிம்மா…? இவரைப் பெத்து வளர்த்தாளா…… இல்லை இவங்க ஆஃபீசுக்கு ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா…? .

நாம என்னம்மா செய்வோம்..? .எனக்கு பி.காம் போதும்மா…..நீ கவலைப் படாதே….இந்த மாதிரி இருக்கறவங்களுக்குப் பிள்ளையாய் பிறந்தால் எதற்கும் ஆசைப் படக் கூடாது…இல்லன்னா வீட்டை விட்டுப் போயிடணும்..தனியா நின்னு ஜெயிச்சுக் காட்டணும்…காட்டறேன்…நானும் யார்ன்னு..இவருக்கு..!

எல்லாருக்கும் தான் அப்பா இருக்கா….தான் செய்யாததை தன் மகனாவது செய்யட்டும்னு யோசிக்கற அப்பா…! ஆனா..இங்கே…நானே.. படிக்கலை…உனக்கு மட்டும் எதுக்குன்னு…? கேட்கற அப்பா…! இவர் இவ்வளவு பணத்தை சம்பாதிச்சு சேர்த்து வெச்சு யாருக்கு என்ன லாபம்…? இப்பவே சொல்லிட்டேன்…என் படிப்புக்கு உதவாத உங்கள் எந்த சொத்தும் எனக்கு எந்தக் காலத்துக்கும் தேவையே இல்லை ….அருண் தன்னோட அத்தனை இயலாமையை கொட்டித் தீர்த்து விட்டு கையில் கிடைத்த நியூஸ் பேப்பரைச் சுருட்டித் தூக்கி வீசிவிட்டுப் போனான். இளமை ரத்தம் துடித்தது. கோபத்தில் கொதித்தது.

அப்பாவுக்கு கொஞ்சமும் குறைவில்லை கோபத்தில் இவன்…என்ன செய்ய…மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி….முருகா…இதில் இருந்து நீ தான் எங்களைக் காப்பாத்தணம் … மானசீகமாக வேண்டிக் கொண்டவள்….யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசிக்கலாளான்…என்ன ஆனாலும் சரி…அருண் என்ஜினீயரிங் தான் படிப்பான்….அதுக்கு என்ன விலையானாலும் நான் கொடுப்பேன்…ரேவதியின் வைராக்கியம் பூதமாய் எழுந்து நின்றது. திக்கற்றவருக்கு தெய்வம் துணை..ன்னு முருகனைத் தொழும் பொது..”யாமிருக்க பயமேன்” என்று சுவர்ப்படம் பேசியது.

அன்று இரவே தன் அக்காவுக்கும் தம்பிக்கும் ஃபோன் செய்து…வீட்டில் நடந்ததை ஆதியோட அந்தமாகச் சொல்லி அழ..பாதாளத்தில் கிடந்தவளுக்குப் பிடித்துக் கொண்டு ஏறி வரக் கயிறு விழுந்தார்ப் போல….”எல்லாம் நாங்க பாத்துக்கறோம்….நீ கவலைப் படாதே…அருண்….எங்களுக்கும் மகன் மாதிரி தான்…அவனை இஞ்சினீயர் படிப்புதான் படிக்க வைக்கணும்..அவரைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா என்ன…? இவன் படிச்சு முடிச்சதும் எல்லாம் தானே மாறிப் போவார்…நாளைக்கு இங்கு இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில் விண்ணப்பம் வாங்கி அப்ளை பண்ணலாம்….நீ கவலைப் படாதே….நிம்மதியாக இருங்கள்…சொன்னது மட்டும் அல்லாமல்…

தான் பெறாமலே…..தங்கை மகனைத் தான் பெற்ற மகனாக அவனுக்குப் படிக்க வைக்க பெரிய தொகையை உதவி செய்து… அவன் படித்து முடிக்கும் வரை பார்த்துக் கொள்கிறேன் என்று ஊக்கம் கொடுக்க.. அதற்குப் பின்பு நடந்ததெல்லாம் தான் கனவு போல மாறியது…..ரேவதிக்கு.

இதோ…இன்று…நான்கு வருஷத்தில் .அவர்கள் புண்ணியத்தில்…..சமயத்தில் ,கேட்டதால் …..கடவுள் அனுப்பிய தேவதைகளாக அக்காவும், தம்பியும் வந்து சமயம் பார்த்து உதவியதால் அருண்..இன்ஜினீயராக.சமுதாயத்தில் தலை நிமிர்ந்து ..நிற்க முடிந்தது….இல்லாவிட்டால் வெறும் இஞ்சினீயர் படிப்புக்குக் கூட .மதிப்பு இல்லாத இந்தக் காலத்தில்….அவனோட எதிர்காலம் எவ்வளவு பெரிய கேள்விக் குறியாக இருந்திருக்கும்.

திரும்ப போன அந்த நாலு வருஷங்களும் கையில் கிடைக்குமா? காலத்தே பயிர் செய்….செய்வனத் திருந்தச் செய்…உள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல், இது போன்ற காலத்தால் மாற்ற இயலாத சில விஷயங்களுக்காகத் தான் அந்தக் காலத்தில் சொல்லியிருக்கா பெரியவா.நல்ல வேளையா……அருண் பிழைச்சான்.

பார்த்தியா அருண்….மனம் எப்படித் மாறும்னு… ஜெயிக்க முடியா விட்டால் அவரோடு சேர்ந்து கொள் என்பது கூட பழமொழி.அதுமாதிரி….

அடுத்தவர் பணம் போட்டா…எல்லாருக்கும் தான் மாறும்…மனம் ! எனக்கு எவ்ளோ கோபம் இப்போ வருது தெரியுமாம்மா….?

அவருக்கு உணர்த்த வேண்டும்……வலிக்கணம்…ஒரு வார்த்தையோ.., செய்கையோ…அடுத்தவாளை எப்படி கீறிப் பார்க்கும்னு அவருக்குப் புரியணம்..ஒரே ஒரு தடவை அவரை அவருக்கு உறைக்கரா மாதிரி.. நான் தான் ..செய்து காட்டணும்…அவரோட கொட்டத்தை அடக்கணும்…அதுக்காகத் தான் அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்துண்டு இருக்கேன் …ப்ளீஸ்மா…..என்னை விடேன்….

உன் கோபம் நியாயமானது தான்…நான் தப்பு சொல்லலை…அதே சமயம்…அவரோட நிலையில் இருந்து பார்த்தால்….புரியும்…அவர் வளர்ந்த விதமும், அவரை வளர்த்த விதமும் வேற….! கிணற்றுத் தவளை மனசு….!இதெல்லாம் நோக்குப் புரியாது. அவர் உழைக்கிறவர்….அவருக்குத்தான் பணத்தின் அருமை தெரியும்.
நாளைக்கே நீ கூட இப்படி மாறலாம்…யார் கண்டா..?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை…சுயநலம்….பக்கா சுயநலம்….நீ சப்பைக் கட்டு கட்டறே…

சரி விடு…இந்தா சப்பாத்தி சாப்பிடு…..இனிமேல்..உன் கவனத்தை உனக்கு நல்ல வேலை கிடைப்பதில் செலுத்து…இந்த வீட்டு அரசியலுக்குள் நுழையாதே…! இதெல்லாம் வேலைக்காகாது…!

ஏதோ உன் நல்ல நேரம்….உனக்கு உன் பெரியம்மாவும் மாமாவும் கை கொடுத்து உதவினா…அவா இல்லைன்னா….நமது இழப்பு என்னன்னு தெரிஞ்சிருக்கும். நாம் அவாளுக்குத் தான் கடமை பட்டிருக்கோம். என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்க…

வந்துட்டார்…..கையில் ஏதோ கனமாத் தூக்கீண்டு வரார்…போய்ப் பார்த்து வாங்கிண்டு வா….மகனை விரட்ட…

இதோ….போறேன்மா…ஆனா..ஒரே ஒரு சந்தர்ப்பம்..கிடைச்சாலும் நான் .நழுவ விட மாட்டேன்…. இப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்…நீ இதில் தலையிடாதே…வலிக்கணும்….அவருக்கும் புரியணும்… ரேவதிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு வாசலுக்கு நகர்ந்தவனை…பார்த்தபடியே…

என்ன இது, இந்தப் பிள்ளை இப்படிக் கச்சை கட்டிண்டு நிக்கறதே…..இது எங்கே கொண்டு போய் நிறுத்தப் போறதோ..? பகவானே…மனசுக்குள் “பயம் ” வந்து ஒட்டிக் கொண்டது.

என்னப்பா….இதெல்லாம்….ஆச்சரியமா இருக்கே….நம்ம வீட்டுக்கு ஸ்வீட் பாக்ஸ் ஆ…!அதுவும் நீங்களா வாங்குவேள்? ஆஃபீஸில் யாராவது விட்டுட்டு போயிட்டாளா…? என்று நக்கலாகக் கேட்க…..”இவருக்கு வலிக்கணும்..” மனசு சமயம் பார்த்துக் கொண்டே இருந்தது ரேவதி “ப்ளீஸ் வேண்டாம்டா…பாவம்டா..வந்ததும் வராததுமா…? ” .என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும்..பெண் மனம்.

இல்லடா…நான் தான் இன்னைக்கு வாங்கினேன். லட்டு ! நூறு லட்டு ! .. உனக்காக வாங்கினேன் .. ! ஆஃபீஸ்ல எல்லாருக்கும் லட்டு கொடுத்தேனாக்கும்…. .எதுக்குத் தெரியுமா…? என்றபடியே…கை அலம்பிக் கொண்டு வந்தவர், துடைத்துக் கொண்டே…..எல்லாம் நீ இன்ஜினீயர் ஆயிட்டியே….அதுக்குத் தான்……

அவர் சொன்னதைக் கேட்டதும் ரேவதிக்குத் தூக்கி வாரிப் போட்டது…கடைத் தேங்காயோ…வழிப் பிள்ளையாரோ….?
ன்னு கதை இப்படிப் போறதா…? பேஷ்..பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….பட பட வென தன்னை மீறி வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள். இது தானே…இவர் கேரக்டர்….என்று நினைத்தவள்..

இந்தா….நீயும் எடுத்துக்கோ….”எங்கே ஆ…காட்டு.”…என்று ஆசையோடு அருணின் வாயில் ஒரு முழு லட்டைத் திணிக்க….

இந்தா…ரேவதி…உனக்கும்….நீயும் எடுத்துக்கோ என்று லட்டு டப்பாவுடன் அருகில் வந்தவரை…. நேராகப் பார்க்க விரும்பாது மனசு தடுக்க……தடுமாற்றத்தோடு…தீர்மானமாக அங்கிருந்து நழுவினாள் ரேவதி….”யாருக்கு வேணும் லட்டு….” அன்று செய்யத் தவறிய காரியம், இன்று லட்டு தந்தால் சரியாகி விடுமா….” மனசு இடித்துக் காண்பித்தது….நானாக்கும் பெரிய மனசு பண்ணி போனால் போகட்டும்னு விட்டுட்டேன்….என்று வைராக்கிய மனசுக்கு சமாதானம் சொல்லியது.

அடுத்த நிமிஷம்….

லட்டு தொண்டையைப் பிடிக்க……”தூ…தூ….தூ…” என்று வாஷ்பேசினை நோக்கி அருண் ஓடிச் சென்று துப்ப…
அவன் மனசு..”இத…இத…இதத்தான் நான் எதிர் பார்த்தேன்…” என்று கைதட்டியது.

என்னாச்சு…?..என்னாச்சு ? என்று பதற்றத்தோடு கேட்ட தேவ நாராயணனை…..

அமைதியாகப் பார்த்தபடியே…..

“இந்த லட்டு கசுக்குதுப்பா…..” என்ற அருணின் கண்களும்.சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த ..மனசும்….”அவருக்கு வலிக்கட்டும் .” என்று ஆவலோடு தூண்டித் துருவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

– 29 ஜூலை, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *