கசக்கும் சர்க்கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 9,603 
 

சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால் திருவையாறு பக்கம் வராமலா போய்விடுவான், அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று திட்டம் ஏதாவது தோன்றினால் அதை சுத்தமாக மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.

ஏனென்றால், சிதம்பரநாதனுக்கு சபாக்களில் கச்சேரி கேட்பதை விட, கேண்டீனில் என்னென்ன சுவையான ஐட்டம் கிடைக்கும் என்பதில்தான் நாட்டமதிகம். இப்பொழுது புரிந்திருக்கும் … எதற்கவன் ரசிகனென்று.

நளபாகம் அம்பி என்றால் நெய் சொட்டச் சொட்ட முந்திரிப்பருப்பு மணத்துடன் கிடைக்கும் பொங்கல் பற்றி நாவில் எச்சில் ஊறும்படி அவன் சொல்லும் அழகே கேட்பவருக்கு பசியைத் தூண்டிவிடும். சீனிவாசனின் தவளைவடைக்கு தலையையே தரலாமென்பான். தேசிகனின் இட்லி, கொத்சு சாப்பிடாதவன் மனிதனா என்பான். அதுமட்டுமல்ல. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் ஸ்பெஷல் அயிட்டம் எது; அதற்கு எந்த ஹோட்டல் பெயர்பெற்றது என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி.

சரவணபவன் மினி இட்லி சாம்பார், கும்பகோணம் கெளரி ஹோட்டல் தயிர்வடை, சிதம்பரம் நடராஜர் கோயில் மடப்பள்ளி சர்க்கரைப் பொங்கல், பெங்களூர் கையேந்திபவன்களின் இட்லி, காரசட்னி, மைசூர் ஹோட்டல்களில் மசாலா தோசை, கடலூர் மஞ்சகுப்பம் கையேந்தி பவன் நூடுல்ஸ், கொடைக்கானல் எக்ஸ்பிரஸ்ஸோ காபி, பாண்டிச்சேரி சப்போட்டா ஜீஸ் என்று எழுத எழுத பேப்பரும் பேனாவும் தீருமே தவிர அவன் பட்டியல் முடிவுற்றிருக்காது.

எப்பொழுதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாயிருப்பது ஒன்றே, தான் பிறவியெடுத்ததன் நோக்கம் என்பது போல அன்றைய பொழுதை ஓட்டுவதில் குறியாகயிருப்பான். வயது நாற்பத்தியேழு என்பது வெறும் புள்ளிவிபரக் கணக்கேயன்றி, வாழ்க்கைப் பயணத்தில் அதற்கு வேறொன்றும் முக்கியத்துவமில்லை என்று அதனைப் புறந்தள்ளிவிட்டு நாட்களை செலவழிப்பவன்.

அப்படிப்பட்ட பிரகஸ்பதிக்கு வாயின் உள் கன்னப்பகுதியில் ஒரு வாரமாய் படுத்திக்கொண்டிருக்கும் வாய்ப் புண்தான் இப்போதைய தலையாய பிரச்சினை. வருகிற புண்ணுக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?! சதா பேசிக் கொண்டிருக்கவும், சளைக்காமல் சாப்பிடுவதற்கும் படைக்கப்பட்ட அந்த அற்புதமான புலன் இப்படி அவதிப்படுவது தான் சிதம்பரநாதனால் சகிக்க முடியாத கவலையாகிவிட்டது. கணிசமான சொத்து சேர்த்து வைத்திருந்த அப்பா; டீச்சர் வேலை பார்க்கும் மனைவி; அளவாய் ஒரு பெண், ஒரு ஆண் என சந்தோஷத்திற்கு குறைவில்லாத குடும்பம் அவனுடையது. கடைத்தெருவில் அவன் வைத்திருக்கிற பட்டாணிக் கடை, ஜீவனத்துக்காக அல்ல; இடைவிடாமல் அவன் கொறிப்பதற்கும், அவ்வழியே செல்லும் நடமாடும் தீனி ஸ்டால்களில் வரும் பதார்த்தங்களை நிறுத்தி ஒரு கை பார்ப்பதற்கும் தான்.

பக்தனையும் கடவுள் சோதிப்பாரென்று பத்து நாட்களுக்கு முன் யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். வாய் திறப்பதே இமாலய சாதனை என்கிற மாதிரியான ‘இறுக்கமான’ சூழலில், பக்கத்து தெருவில் குடியிருக்கும் தங்கை சாவித்ரி மிளகாய் பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் எடுத்து வந்த போதுதான், கடவுள் சோதனை இரட்டிப்பாகியது அவனுக்கு.

சாப்பாட்டு ராமனாகிய அவன், வாய்ப்புண் உபயத்தால் அந்த பஜ்ஜிகளைக் கண்ணீரோடு வீட்டிலுள்ளோர்க்கு ‘விட்டுத் தந்த தியாக வரலாற்றை’ யாராவது எழுதியிருந்தால் தமிழில் ஆறாவது பெருங்காப்பியம் கிடைத்திருக்கும். அப்படியும் ஆசை அடங்காமல் சுண்டுவிரலத்தனை பஜ்ஜியை விண்டு தின்றுவிட்டு வலியும் எரிச்சலும் தாங்கமாட்டாமல் வடித்த கண்ணீர் ஒரு குடம் தேறும்.

மருத்துவமனையென்றால் பின்னங்கால் பிடறியில் பட ஓடக்கூடியவன், கடந்த ஒரு வாரமாக குடும்ப நண்பராகவும் மருத்துவராகவும் இருந்து தொலைக்கும் டாக்டர் வெங்கடாஜலத்திடம் உள்வாயில் தடவ களிம்பு, இடுப்பில் தினமொரு இன்ஜக்ஷன் தாக்குதல், திறக்க முடியும் இத்துணூண்டு வாய்க்குள் மாத்திரைகளின் சரமாரியான ஊர்வலமென கடுமையான சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. ஏதோ ஓரளவுக்கு வாய் திறந்து பேச முடிகிறதென்பதுதான் சற்று ஆறுதல். இப்படியானதே தன் குடும்பசாகரமென்ற சுயபச்சாதாபத்தில் நொந்து நூடுல்ஸாகிப்(!) போயிருந்தான்.

“சார், பன்னெண்டாம் நம்பர் டோக்கன் நீங்கதானே… உள்ள போங்க” என்ற அட்டண்டரின் குரலில் தன் நினைவுக் குளத்திலிருந்து மேலெழும்பிக் கரையேறி, டாக்டர் ரூம் நோக்கி சென்றான்.

“வாய்யா… சிதம்பரம். என்னாச்சு வாய்ப்புண்? சரியாச்சா?” சிரித்தபடி சகஜமாகக் கேட்டார் டாக்டர்.

“நீங்க வேற… துக்கம் தொண்டைய அடைக்குது. ஒண்ணும் சாப்பிடமுடியாம மனுஷன் படற அவஸ்தை சொல்லி மாளாது”

“அப்பவும் சாப்பிட முடியலைங்கறது தான் பெரிய கவலை உமக்கு! ஏன்யா முன்ன ஒரு முறை செரிக்கப் பத்தலைன்னு இங்க வந்தப்ப, கன்னாபின்னான்னு திங்கப்படாது; உடம்பை மெஷின் கணக்கா வச்சிக்கணும்னு சொன்னேனே… அதை தப்பா புரிஞ்சுகிட்டு ரைஸ் மில் மெஷினாட்டம் வெச்சிருந்தியா? வாயால மட்டுமில்ல… மனுஷன் காது, மூக்கு, கண்ணாலும் சாப்பிடலாம்னு…”

“கண்டுபிடிச்சிருக்காங்களா அப்படி?!” ஆர்வக் கோளாறில் குறுக்கிட்டான் சிதம்பரநாதன்.
“அப்படின்னு மட்டும் எவனாச்சும் கண்டு பிடிச்சான்னு வச்சிக்க… நானே அவனை தேடிக் கண்டுபிடிச்சு கொன்னேபுடுவேன். அந்த மாதிரி வசதி மட்டும் இருந்ததுன்னு வச்சிக்க, இப்படி நான் உட்கார்ந்து உன்கிட்ட பேசிகிட்டிருக்க முடியுமா? என்னையும் வறுத்து தின்னுட மாட்டே…!” வாக்கியத்துக்கொரு ‘வச்சிக்க’ சொல்லும் வழக்கமுடைய டாக்டர்.

“சேச்சே… அந்தளவுக்கு நான் மட்டமான ரசனையுள்ள ஆளுன்னா நினைச்சீங்க? அப்படி வந்தாலும் வாட்டசாட்டமா ஒரு ஆளைப் பார்ப்பேனே ஒழிய காத்தடிச்சா பறக்கிறாப்புல இருக்கற உங்களைப் போயா….” சிரித்தான்.

“வா வா மாட்டுக்குப் போடற ஊசி ரெண்டு போட்டு விடறேன்… காலைல என்ன சாப்பிட்ட?”

“அட என்னங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிகிட்டு… கால் டம்ளர் காப்பி குடிக்க நான் பட்ட பாடு… நேத்து ராத்திரி மல்லுகட்டி கொஞ்சமே கொஞ்சம் ரவா உப்புமா சாப்பிட்டதோட கெடக்கேன்”.

“பீரங்கிய சாப்பிடற ஆளுக்கு ரவைன்னு வச்சிக்க… கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் நல்லதாப் போச்சு…”

“நாசமாப் போச்சு!”

“அவசரப்பட்டு குறுக்க குறுக்க பேசாதேய்யா… சொல்றதை முழுசாக் கேட்டன்னு வச்சிக்க… சரியா வைத்தியம் பண்ண முடியும். இந்தா… இதுல ஜி.டி.டி. டெஸ்ட் எழுதியிருக்கேன். நீயே வச்சிக்காதே… கொண்டு லேப்ல கொடு. சுகரிருக்கான்னு பார்த்துடுவோம். இருந்துச்சுன்னு வச்சிக்க… அப்ப இருக்குது உனக்கு.”

‘விதிகொடுமைடா… இந்த ஆளுகிட்ட மாட்டினது’ என தனக்குத் தானே நொந்தபடி வெளியேறினான்.

லேப்காரன் கொடுத்த குளுக்கோஸ் கரைசலைக் குடித்துவிட்டு அவன் கூப்பிடும்போதெல்லாம் யூரினும், ரத்தமும் எடுத்து தந்து சோர்ந்து போனவன், சொல்லொண்ணா துயரம் அப்பியவனாய் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

இந்நேரம் கடையிலிருந்திருந்தால் இரண்டு படி அரிசிப் பொரி, அரைப்படி பொட்டுக்கடலை, முக்கால் படி வறுத்த பட்டாணி, நடுநடுவே கைப்பிடியள்ளலாய் கணக்கின்றி கெட்டி அவல் என எத்தனை எத்தனை ரசித்து ருசித்திருக்கலாம். பாழாய்ப் போன வாய்ப்புண் வந்ததிலிருந்து திரவ ஆகாரமே ‘ததிங்கிணதோம்’ ஆகிவிட்டது. இன்று அதற்கும் கேடு வந்தது. வாய்ப் புண் பற்றிய கவலை வயிற்றுக்கு உண்டா? அதுபாட்டுக்கு பசிக்கான ஆவர்த்தனத்தை இழுத்து இழுத்து பாட, தலை வேறு வலி பிளக்கிறது. பச்சைத் தண்ணி பல்லில் படாமல் இன்னும் எத்தனை தடவை ரத்தமெடுப்பானோ லேப்காரன். மாட்டுறவனை சாகடிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பான்கள் போல.

அந்த நேரத்தில்தான் தன் கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க வருகிறான் இவனது பள்ளிக் கூடத் தோழமை ஆத்மாநாதன். இவனை நெருங்கியதும், “டேய் சிதம்பரம்… எப்படிடா இருக்கே… எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து… என்ன இந்த பக்கம்… சம்சாரம் ஏதாச்சும் சமாச்சாரமா? டெஸ்ட் பண்ண வந்தியா?” மூச்சிறைக்க கேட்டான்.

படித்துப் பெரியாளாகி, நாதன்&நாதன் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ், நாதன் & நாதன் கார்மெண்ட்ஸ் என்றெல்லாம் கூட்டாக வியாபாரம் செய்து, ஊரில் பாதி இடத்தை சொந்தமாக்கி, ஆளுக்கொரு விலையுயர்ந்த காரில் வலம் வருவதெல்லாம் அவர்களின் சின்னவயசு காஸ்ட்லி கனவு. கல்லூரிக்குப் போகும் வழியில் பி.யு.சி. என்ற ஸ்பீட் பிரேக்கர் தடுக்கி விழுந்து திசைமாறிய சிதம்பர நாதன் பிற்பாடு பட்டாணிக்கடையில் தான் பள்ளிகொள்ள முடிந்தது.

ஆத்மா ஏக் தம்மில் அப்படியே பி.எஸ்.சி. அக்ரி பாஸ் செய்துவிட்டு கவர்மெண்டி அக்ரிகல்சுரல் டிபார்ட்மெண்டில் இருபத்துநாலு வருட உத்தியோகம். சிறுவயதிலிருந்தே அனாயாசமாகப் படிப்பவன். சதா கூத்தும் கும்மாளமுமாக இருப்பதோடு இயல்பில் ரொம்ப குசும்பு பிடித்தவன்.

“புள்ள பெக்கற வயசாடா இது? எனக்கு தான் ஜி.டி.டி.க்கு கொடுத்துட்டு நிக்கறேன் ரிசல்ட்டுக்கு. நீ எங்கே இந்தப் பக்கம்?”

“எனக்கும் சர்க்கரைதான். ரெண்டு வருஷமா மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். ரொட்டீன் செக்கப் இன்னிக்கு. எனக்கு மந்த்லி டெஸ்ட்… உனக்கு எண்ட்ரன்ஸ் டெஸ்ட்! இரு… பத்து மணியானா டீ குடிக்கப் போயிடுவான். பிளட்டைக் கொடுத்துட்டு வந்துடறேன்.” வழக்கமான சிரிப்போடு ஓடினான்.

ஆத்மா எவ்வளவு ஹாஸ்யமாகப் பேசக் கூடியவனோ அவ்வளவுக்கு ஜலதரங்கம் போல் சிரிக்கக் கூடியவன். கையில் பஞ்சை வைத்து முட்டியை மடக்கியபடியே வந்தமர்ந்தான்.

“ஆமா… சர்க்கரைன்னு எப்படி சந்தேகம் வந்துச்சு…? அடிக்கடி ராத்திரியில எழுந்து ஒண்ணுக்குப் போக வேண்டியிருந்துச்சா?”

“அட ஆமாண்டா. உனக்கும் அப்படித்தானிருந்துச்சா?”

“ஆமாமா… பசிக்கும் ஆனா ருசியிருக்காது; அடிக்கடி தாகமெடுக்கும். நாக்கு வறண்டு வறண்டு போகும். உடம்பெல்லாம் அரிப்பெடுக்கும்; நல்லா அங்கங்க அடிச்சிப் போட்டாப்புல வலிக்கும். புண் வந்தா சாமானியமா ஆறாது… சனி! இன்னும் ஒவ்வொருத்தருக்கு ஒருவிதமாயிருக்கும்”.

“சாப்பாட்டுல வேற ஆயிரத்தெட்டு கட்டுப்பாடாயிருக்கணும்ங்கறாங்க..?”

“ஆமா… சாப்பிடற அளவைக் குறைக்கணும். வழக்கத்தைவிட அதிகமா வேலையோ உடற்பயிற்சியோ அட… வாக்கிங்காவது போகணும்ப்பா. கூடவே தவறாம மாத்திரைங்க, மாதாந்திர டெஸ்ட், வெங்காயம் வெள்ளைப்பூண்டு… கர்பிணிப் பொம்பளைக்காவது பத்துமாசத்துல விமோசனம் இதுங்கள்லயிருந்து. ஆயுள் சந்தா, ஆயுள் காப்பீடு மாதிரி வந்தா ஆயுசுக்கும் வைத்தியமும் கையுமாயிருக்க வேண்டியதுதான் நாம.”

லேப் டெக்னீஷியன் ரிசல்ட்டுடன் வெளியே வர, பரபரப்புடன் எழுந்தனர்.

சிதம்பரத்துக்கு ஃபாஸ்டிங் சுகர் அளவு 180ம், தொடர்ந்த மணியளவுகளில் கணிசமான ஏறுமுகத்தில் இறுதி முடிவு 290ம் இருந்தது. வாங்கிப் பார்த்த ஆத்மா, “அடடே… எண்ட்ரன்ஸிலேயே என்னை விடக் கம்மிதான். படிக்கிறப்போ அதிகம் வாங்கினா பாஸ். இங்க ரிசல்ட் குறைவாயிருந்தாத்தான் பாஸ். அங்க குறைச்சு வாங்கி எனக்கடுத்து வந்த நீ, இங்கயும் குறைச்சு வாங்கி என்னையே முந்திட்டே. நம்ம தடியன் தண்டபாணியில்ல… ஞாபகமிருக்கா உனக்கு?மூணு வருஷத்துக்கொரு தடவை அடுத்த வகுப்பு போவானே…”

“ஆமா… இப்ப தரகு தண்டபாணியாயிருக்கானே… அவன் தானே…”

“அவனேதான். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தான். அவனுடம்புல சுகர் இருப்பு எவ்வளவு தெரியுமா? எப்பவும் 400க்கு மேலதானாம். இன்சுலின் போடாட்டி கையக் காலை இழுத்துடும்னு டாக்டர் மிரட்டியிருக்காரு. கொஞ்சம் கூட அலட்டாம எங்க வீட்டுல வெச்ச ஸ்வீட் காரத்தை ஒரு வெட்டு வெட்டிட்டு, சர்க்கரை தூக்கலா காபி கேட்டான்னா பார்த்துக்கோயேன். மனுஷன் பாயோட படுக்குறதுக்குள்ள என் பொண்ணுக்கு நல்லதொரு வரனைக் கொண்டான்னு சொல்லி அனுப்பினேன்.

போனவாட்டி டாக்டர் கிட்ட போனப்போ அவன் சாப்பாட்டுப் பழக்கத்தையெல்லாம் கேட்டுட்டு, இனி அதுல பாதியளவு… அதையும் அஞ்சு பங்காப் பிரிச்சு அஞ்சு வேளை சாப்பிடச் சொல்லியிருக்காரு. சர்க்கரைன்னு எழுதின எழுத்தக் கூடப் பார்க்கக் கூடாதுன்னும் சொல்லியனுப்பியிருக்காரு. இவன் என்னடான்னா…” பேசிக் கொண்டே இருந்தவன் தக்க எதிர்வினை இல்லாததால் சிதம்பரநாதனைத் திரும்பிப் பார்க்கிறான். பேயறைந்தாற் போலிருக்கும் அவனது மனவோட்டத்தை ஒருவாறாய் யூகித்தவனாய்,

“நீ என்ன மிரண்டுட்டியா…? இதெல்லாம் இந்த காலத்துல ஜீஜீபி… சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லேன்னா டி.பி, கேன்சர் இப்படி ஏதாச்சும் வியாதியில்லேன்னா சமூகத்துல மதிப்பேயில்ல தெரியுமா…?! அசையா சொத்து, அசையும் சொத்தோட இதையும் சேர்த்தாச்சுப்பா… ஒண்ணா ரெண்டா அப்படீன்னா நம்ம சின்ன வயசில வேற அர்த்தம். இப்ப வேற. சுகரும் பி.பி.யும் தான் அது…”ஏதேதோ சொன்னான் ஆத்மா.

“ஏதோ இருக்கறதை வெச்சுகிட்டு பொண்டாட்டி பிள்ளைகுட்டின்னு உல்லாசமா காலத்தை கழிச்சிட்டிருந்த எனக்கு இதுவொரு கேடு காலமா தோணுதுடா. ஏதேதோ பயம் வருது. வீணாக் கழிச்ச பொழுதெல்லாம் பூதாகரமா எழும்பி முன்ன நின்னு கெக்கேலி கொட்டுதுடா. என்ன சோதனைடா இது ஆண்டவனே…”அரற்றினான் சிதம்பரம்.

“ஏண்டா டேய்… ஏதாவது கல்யாணத்துக்கோ ஊருக்கோ போக காலங்கார்த்தால அலாரம் வெச்சு எழுந்துக்கறதில்லையா…? மனுஷ வாழ்க்கையில நரையும் வியாதியும் அலாரம் போலத் தாண்டா. இது கடவுளோட வேக்-அப் கால். எதைப் பத்தியும் கவலைப்படாம லெளகீக வாழ்க்கையில மூழ்கிக் கிடக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

நானும் இத கண்டுபிடிக்கிற வரை, வேலை, வீடு, சீட்டாட்டம், கிளப்ன்னு திரிஞ்சவன் தான். பையனும் உதவாத ஒரு படிப்பை படிச்சதா பேர்பண்ணிட்டு வேலை தேடுற போர்வையில சுத்திட்டிருந்தான். ‘போதும்டா நீ வேலை தேடுற லட்சணம்’ன்னு, சேவிங்ஸ்லேயிருந்து ஒருலட்சமெடுத்து பேன்சி ஸ்டோர் ஒண்ணு வெச்சி உட்கார வெச்சேன். ரெண்டே வருஷத்தில இப்ப நல்ல பிக்-அப். வந்த லாபத்தில ஒரு கவரிங் கடையொண்ணு வெக்கலாமான்னு பார்க்கிறான் இப்ப. இந்த வருஷம் படிப்பை முடிக்கிற மகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி விட்டுட்டா நாம படுக்கையில விழுந்தாலும் பாதியில போனாலும் கவலையில்ல இல்லையா… அதுக்கு தான் தண்டபாணியை கூப்பிட்டு விட்டேன்.

இதெல்லாம் இந்த வியாதி வராட்டி நாம துரிதமா செய்வோமா…? என்னமோ இந்த உலகமே நம்ம கையிலன்னு மிதப்பா இல்ல திரிஞ்சிட்டிருப்போம்…?! “

“நியாயம்தான் நீ சொல்றதும். தண்டபாணியை பார்த்தா என் வீட்டுக்கொரு தடவை வரச்சொல்லு. எம்மக ஜாதகத்தை கொடுத்து கல்யாண திசை வந்தாச்சான்னு பார்க்கச் சொல்லலாம்”.

– 26 ஜூன், 2011
( ஜூன் 27 உலக நீரிழிவு நாள் )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *