ஓர் அக்கினிக்குஞ்சு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,640 
 
 

நான் 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளராக ஹொறணைக் கல்விக் கோட்டத்துக்குச் சென்றேன். அக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகள் தோட்டப் பாடசாலைகள். அப்பாடசாலைகளின் அபிவிருத்தியைக் கவனிக்குமாறு எமது கல்விப் பணிப்பாளர் எனக்குக் கூறியிருந்தார்.

அங்குள்ள பாடசாலைகளுக்கு இறப்பர் தோட்டங்களுக்கூடாக நான்கு அல்லது ஐந்து மைல்கள் நடந்தே செல்ல வேண்டும். நான் கொழும்பில் இருந்தேன். கொழும்பிலிருந்து ஹொறணைக்கு வந்து அங்கிருந்து புளத்சிங்களவுக்குப் போகவேணும். மூன்றரை மணித்தியாலங்கள். பஸ் பிரயாணஞ் செய்து புளத் சிங்களவில் இறங்கி தோட்டப் பாடசாலைகள் உள்ள இடங்களுக்கு மீண்டும் பஸ் எடுத்துச் செல்ல வேண்டும்.

பஸ் போக்குவரத்து ஒழுங்காயில்லை. அதிக நேரம் நான் பஸ்ஸிலும் தெருவிலும் நேரத்தை வீணடிக்க வேண்டியநிலை. கொழும்பிலிருந்து தினமும் பிரயாணம் செய்வது பெருஞ் சிரமமாக இருந்ததால் புளத்சிங்களவில் உள்ள மில்லக்கந்த தமிழ் வித்தியாலய அதிபரின் விடுதியில் மூன்று அல்லது நான்கு நாள்கள் தங்குவேன்.

அல்பிரட் என்னும் அந்த அதிபர் சின்ன உருவம்; பெரும் மனசு. நான் தங்குவதற்கு எல்லா வசதிகளும் செய்து தருவார். விடிய எழும்பியதும் “ஐயா கோப்பி” என்று சூடான கோப்பியுடன் என் முன் நிற்பார்.

அந்த அதிபரின் விடுதிக்கு அடுத்தாற் போல் அப்பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியை மரியாவின் விடுதி உண்டு. அவளது கணவர் ஒரு ரெய்லர். இராஜசேகரன் பெயர். என் உணவுத் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்.ஓர் அருமையான பிறவி. கறுவல் என்றாலும் மனம் வெள்ளை .

அவர்களுக்கு ஒரே ஒரு மகன் குணா. நான் அங்கு சென்ற சில கிழமைகளில் அவன் என்னோடு ஒட்டிக் கொண்டான். நான் அங்கு போகும் போதெல்லாம் அவனுக்கு அப்பிள், முந்திரிகைப்பழம், சொக்லேட் எல்லாம் வாங்கிக் கொண்டு போவேன்.

அவன் என் மீது இனம்புரியாத பற்று வைத்திருந்தான். அவனுக்கு ஐந்து வயது முடியவில்லை. அவன் தன்னை என் தோளில் தூக்கி வைக்கச் சொல்வான். கைகளில் பிடித்து வட்டமாகச் சுழற்றி வரச் சொல்வான். அவனை நான் உயரத்தில் எறிந்து தூக்கிப் பிடிப்பேன் “ நான் வீட்டுக்கு போகப் போறேன்” என்றால் இன்னும் இரண்டு நாளைக்கு நின்று போங்களேன் என்பான். நான் அவனுக்கு பல பொய்கள் சொல்லி வீட்டுக்கு வந்து விடுவேன்.

குணா என்று நான் அழைக்கின்ற குரல் கேட்டால் பாடசாலைக் கேற்றுக்கு ஓடிவந்து எனது பாக்கைத் தூக்கிக் கொண்டு எனக்கு முன்னால் வீட்டுக்கு ஓடி வந்து நான் வந்திருப்பதை தகப்பனுக்குச் சொல்வான்.

நான் அதிபர் விடுதியில் பாயில் நீட்டி நிமிர்ந்து கிடப்பேன். அவன் ஓடிவந்து என் மார்பிலே ஏறிப் படுத்துக்கொண்டு காதைத் திருகிக் கொண்டிருப்பான். சில நாள்கள் என் மார்பிலேயே தூங்கிவிடுவான். –

அவன் கதைகளிலிருந்து அவன் ஒரு மீத்திறன் உள்ள மாணவன் என்று அறிந்து கொண்டேன். ஐந்து வயதில் அந்தப் பாடசாலையில் சேரவேண்டும். அவனுக்கு நான் ஒரு அழகான புத்தகப்பை வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் எல்லோருக்கும் பெருமையாகச் சொல்லிக்கொண்டு திரிந்தான்.

நான் அவனுக்குப் படிப்பிக்க ஆசைப்பட்டேன். முதலில் ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகிய நூல்களை வாங்கிக் கொண்டு போய், அவன் என்னோடு படுத்திருக்கையில் ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொடுத்தேன். அவன் எல்லாவற்றையும் பாடமாக்கிக் கேட்கும் போதெல்லாம் தடங்கலின்றிக் கூறுவான்.

பின்னர், தமிழ் பழமொழிகளைச் சொல்லிக் கொடுத்தேன். அத்தனையும் பாடமாக்கி விட்டான். ஆனால் அவைகளுக்குக் கருத்துக்களைக் கேட்டு அறிந்து கொள்வான். என்னைப் பிச்சுப் பிடுங்கிக் கருத்துக்களை அறிந்து கொள்வான்.

குணா சிறு உருவம். தோடம் பழம் போன்ற உருண்டைத் தலை. அவனுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை. ஆனால் துடிதுடிப்பானவன். என்னோடு வந்து படுத்திருக்கையில் தலைகீழாக நின்று காட்டுவான். குத்தக்கரணம் அடிப்பான். கட்டிலில் ஏறிநின்று பாய்வான், “டிஸ்கோ ” நடனம் ஆடுவான்.

அவனது தகப்பன் ஒருநாள் அதிபரின் விடுதிக்கு வந்து “சேர் ஏப்ரல் ஐந்தாம் திகதி மகனுக்குப் பிறந்த நாள் சிறு கொண்டாட்டம் வைக்கிறன். சேர் கட்டாயம் வந்தே ஆகணும்” என்றான். அவனோடு வந்த குணா சேர் வராட்டி நான் “கேக்” வெட்டமாட்டன்” என்றான்.

நான் கட்டாயம் வருவன் என்று கூறி அவனை இழுத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.

பிறந்த நாளன்று குணா என்னுடன் சேர்ந்து நின்று படம் எடுக்கச் சொன்னான். நான் அவனுக்கு கேக் வாயில் வைக்கும் போது ஒரு படம் எடுக்கச் சொன்னான். நான் அவனுக்கு பிறந்த நாள் பரிசாக கிரிக்கட் பட்டும் பந்தும் கொடுத்தேன். அவனுக்குப் பெரிய புழுகம். அவனுடைய பிறந்த நாளன்று நான் அவனுடனும் தந்தை தாயுடனும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சேருக்கு நல்லாப் போட்டுக் கொடுங்கப்பா” என்றான்.

தன் சாப்பாட்டுப் பீங்கானிலிருந்து கோழி இறைச்சித் துண்டொன்றை எனது பீங்கானுக்குள் போட்டு “சாப்பிடுங்க சேர்” என்றான். நான் அவனது உருண்டைத் தலையைத் தடவி விட்டேன்.

பிறந்த நாள் முடிந்து இரவு எட்டு மணி போல் அதிபரின் விடுதிக்கு வந்து பாயில் படுத்துக் கொண்டு ஒரு சுருட்டைப் பற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு அவன் நினைவே அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அவனது பற்றும், பாசமும் அவனது மீத்திறனும் என்னை மிகவும் ஆட்கொண்டன.

நான் எதிர்பாராத வகையில் குணா ஓடிவந்து என் வயிற்றில் அமர்ந்து கொண்டு என் மார்பைத் தடவினான்.

“டேய் வயிறு முட்டாக்கிடக்கடா”

“நீங்க எந்தப் பெரிய ஆள். நான் சின்ன உருவம் தானே?”

நான் சிரித்தேன்.

“சேர் நல்லாச் சாப்பிட்டீங்களா?”

“ஓ! வயிறுாதச் சாப்பிட்டன்!”

“அவன் குனிந்து என் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கன்னங்களில் முத்தமிட்டான். நான் பரவசமானேன்.

“நல்லசேர் நீங்க”

“ஏன் அப்படிச் சொல்றாய்?”

“நீங்க என்னிலை நல்ல அன்புதானே சேர்” சேர் எப்போ வீட்டுக்குப் போறீங்க?”

“நாளைக்கி”

“நாளைக்கி போக வேணுமா சேர்?”

“நான் போகவேணும். எனக்கு முக்கியமான வேலை இருக்கு.”

“நாளண்ணைக்கு வந்துடுவீங்களா?”

“ஓம் ஓம்” என்று பொய் சொன்னேன். நான் அவன் முதுகைச் சிறிதுநேரம் தடவிக் கொண்டிருந்தேன். அவன் என் வயிற்றிலிருந்து இறங்கிப் பக்கத்தில் படுத்து காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு சுவரில் பூச்சி பிடிக்கத் தவழு கின்ற பல்லியைப் பார்த்தவாறு சிறிது நேரம் மௌனமாகக் கிடந்தான். பிறகு கேட்டான்.

“சேர் ஆறிலும் சாவு நூறிலும் சாவு எண்டால் என்ன சேர்?”

“இவன் இதையேன் இப்போது கேட்கிறான்?” எனக்கு யோசனை.

“சொல்லுங்க சேர், நீங்க நல்லாப் படிச்சவங்களாம்” டிறக்றர் சேர் தானே?”

“மனிதனுக்கு ஆறு வயசிலும் சாவு வரும். நூறு வயசிலும் சாவு வரும், இடையிலும் சாவுவரும். சாவை எம்மால் தடுக்க முடியாது.

“எனக்கு இப்ப ஐஞ்சு வயசு, ஐந்து வயசிலும் சாவு தானே சேர்? நான் ஆறு வயசிலை செத்துப் போயிடுவனா சேர்?”

“நான் திரும்பி அவனை இருகைகளாலும் அணைத்துக் கொண்டு இல்லை இல்லை நீ சாகமாட்டாய். எந்த மடையன் சொன்னது?” என்றேன்.

“சேர் எங்களை எல்லாம் படைச்சது கடவுள் தானே?”

“ஓம்”

“நாங்க வாழ்த்தானே படைச்சவர் கடவுள்?”

“ஓம்”

“அப்ப ஏன் சேர் இரண்டு வயசில. ஐந்து வயசில, ஆறு வயசிலை எல்லாம் சாகடிக்கிறாரு?”

இவனுக்கு எப்படிப்பதில் சொல்லுவது?

“என்ன சேர் யோசிக்கிறீங்க?”

“கடவுள் எல்லாம் வல்லவர். அவர் எதோ காரணத்தோடு தான் அப்படிச் செய்கிறார்?”

“கடவுள் எல்லாம் வல்லவர் தானே சேர்? அவர் எங்களைப் படைக்காமல் விட்டிருக்கலாம் தானே சேர். அங்க பாருங்க சேர் அந்தப்பல்லி அந்தப் பூச்சியைப் புடிச்சு விழுங்கிப் போட்டுது சேர். அது பாவந்தானே சேர்? அழகான பூச்சி சேர் கடவுளின் படைப்புத்தானே சேர்?”

“அதுவும் கடவுளின்ட விளையாட்டுத்தான்”

“ஏன் சேர் அப்படி விளையாடுறார் கடவுள்? நான் ஆறு வயசிலை செத்துப் போனா நம்ப அப்பா, அம்மா கவலைப்பட்டு அழுதுகொண்டே இருப்பாங்க சேர். கடவுளும் விளையாடுவாரா சேர்?”

“நீ செத்தாத்தானே? நீ சாகமாட்டாய் நீ சாகமாட்டாய்! கடவுள் உன்ரை உயிரோடு விளையாட மாட்டார்.

“அதை எப்படி சேர் நம்பிக்கையாச் சொல்லுவீங்க?” பிறந்தவங்களெல்லாம் சாகத்தானே வேணும்.”

”ஆறிலும் சாவு. நூறிலும் சாவு ஒரு பழமொழி தானே. அதிலை எல்லாம் உண்மை என்பதில்லை” என்று கூறிவிட்டு மௌனித்தேன்.

“அவங்க பெரியவங்க அறிஞ்சுதானே சொல்லியிருக்காங்க?” என்றான் அந்தக் குட்டிப்பயல்.

“எல்லாருக்கும் அப்படிச் சாவு வராது. ஒன்றிரண்டு பேருக்கு நடக்கலாம். உனக்கு நடக்குமென்று ஏன் கவலைப்படுகிறாய்?” அவன் எழுந்திருந்தான்.

“என்ன சேர் எனக்குத் தெரியுஞ் சேர் அடுத்த லயத்திலே எத்தனை சின்னப் புள்ளைகளெல்லாம் செத்துப் போயிடுச்சு”

“அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்?”

“சேர் நானும் சின்னப் பையன்தானே? நான் என்னிட சாவைப் பத்தித்தான் – கவலைப்படுறன் சேர். அப்பா, அம்மா பாவம் எனக்கு நாய்கடிச்சு, பாம்பு கடிச்சுச் செத்துப்போனா? சேர் உங்களுக்குத் தெரியுமா? எங்கடை அம்மாடை அப்பா இருக்கிற லயத்தில ஐஞ்சு வயசுப் பையனுக்குப் பாம்பு கடிச்சுச் செத்துப் போனான் சேர்; பாவம் நல்லவன் சேர்; ஐந்து வயதுதான் இருக்கும் சேர்” எனக்கு நோய் வந்து சாகமாட்டனா சேர்?”

“அப்பபடியா?”

“என்ன சேர் அப்படியா எங்கிறீங்க. அந்த பாம்பை அவனைக் கடிக்காமல் தடுத்திருக்கலாம் தானே சேர் கடவுள்?”

“எல்லாம் வல்ல கடவுள்தானே சேர்?”

“ஓம்”

அவனைச் சுடலைக்குக் கொண்டு போற நேரத்தில் அவனுட்டு அம்மாவும், அப்பாவும் அழுது குழறியதை நீங்க பாத்திருக்க வேணும் சேர். நீங்களே அழுதிருப்பீங்க. ஏன் இந்தக் கொடுமை நடக்கணும்?”

“அது அந்தப் புள்ளயின் தலைவிதி குணா?”

“அது என்ன சேர் தலைவிதி. எதற்கும் இதைத்தான் சொல்றாங்க!

“அதுதான் உனக்கு என்னாலை விளங்கப்படுத்த முடியல்ல”

“நீங்க பெரிய படிப்புப்படிச்சவங்க தானே?”

நான் அறிவு குளம்பி மௌனமாகக் கிடந்தேன்.

“சேர் கடவுள் அளவில்லாத அன்புடையவர் என்று தானே சொல்றாங்க?”

“ஓம்”

“அளவில்லாத அன்புடைய கடவுள் அப்படிச் செய்வாரா? ஒரு வேளை சேர். கடவுள் இல்லையோ? வேறு மாதிரி இருக்குமோ?” –

இவனை நான் இப்போது எப்படிச் சமாளிப்பது?

“கடவுள் அளவு கடந்த அன்புள்ளவர்தான். அவர் காரணத்தோடு தான் எல்லாஞ் செய்வார்.”

அவன் சொற்ப நேரம் பேசவில்லை. நெற்றியில் ஒரு கை வைத்துக் கிடந்தான். என் பக்கத்தில் கிடந்த அவன் துள்ளி எழுந்து தரையில் குதித்து வலது காலால் தரையைத் தேய்த்தான்.

“என்ன செய்கிறாய் குணா?”

“என் காலுக்குள்ள எத்தனை எறுப்புகள் செத்துப்போச்சு தெரியுமா சேர்?”

“அப்படியா?” நான் விளங்காதவன் போல் கேட்டேன்.

“அதுகளையெல்லாம் ஏன் கடவுள் படைச்சார்? நாங்கள் எலியைக் கொல்றோம். மூட்டைப் பூச்சியைக் கொல்றோம், நுளம்பை அடிச்சுக் கொல்றோம். இவைகளையும் கடவுள்தானே படைச்சார் சேர்.?

இல்லை என்று அவனுக்கு எப்படிச் சொல்வது? “அவர் தான் படைச்சார் ஆனால் கடவுளின் உன்னத படைப்பு மனிதன் தானே?”

“உயிர் எண்டா எல்லாம் உயிர்தானே சேர்” என்று கூறிக்கொண்டு அவன் மீண்டும் என் அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

“அப்ப சேர் மனுதனுக்கு துன்பம் குடுக்கிற பூச்சி புழுக்களையும் அவர் தானே படைச்சிருக்க வேணும்?”

“ஓம். ஆனால் மனிதன் கடவுள் கொடுத்த புத்தியால் எல்லாத்தையும் வெல்ல வேணும்!”

“சேர்” என்றவன் என் மூக்கைப்பிடித்து நசுக்கிவிட்டு, “அந்த உயிர்களையும் வாழ வைக்கிற மாதிரி ஏதாவது செய்ய முடியாதா சேர்?” என்றான்.

“முடியும் முடியும்”

“சேர் யார் செய்யிறது கடவுள் தானே? டெலிவிசனில கிருமி நாசினி கொல்லிகள் விளம்பரம் கேட்டிருப்பீங்க தானே? சேர் ?”

“ஓம்”

“அதுகளைக் கொல்றது உயிர்க் கொலை தானே சேர்?”

“எனக்கு நித்திரைத்தூக்கம், நாளைக்குப் பேசுவமா?” அவன் கேள்விகள் என்னைத் திணறடித்ததால் அப்படிச் சொன்னேன்.

“நான் சின்னப்பையன் எனக்கே தூக்கம் வரல்ல. உங்களுக்கு எப்படித்தூக்கம் வரும்? உங்களுக்கு எத்தனை வயசு சேர். உங்களுக்குத்தூக்கம் வரயில்லை. பொய் சொல்றீங்க என்னைத் துரத்திட இல்லையா சேர்?”

“ஐம்பத்தாறு வயசு”

“நீங்க நூறு வருஷத்துக்கு மேல் வாழணும் சேர்”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” நான் அவன் தலைமயிரைக் கோதிவிட்டேன்.

“நீங்க நல்லவர் சேர். நீங்க சாகக் கூடாது எல்லாரும் உங்களை நல்லவ ரென்று சொல்லுவாங்க சேர்” நான் மௌனமாய்க் கிடந்தேன்.

“ஏன் சேர் பேசவேயில்லை ?”

“நீதான் நூறு வருஷத்துக்கு மேல் வாழவேணும் எண்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.”

“நீங்க சொல்வது பலிக்குமா சேர்”

“நிச்சயமா, நிச்சயமா!”

அவன் என் மார்பைக் கட்டிப்பிடித்தபடி கிடந்து தூங்கிவிட்டான். அவனது தகப்பன் இராஜசேகரன் வந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய்ப்படுக்க வைத்தான்.

அடுத்த நாள் காலை என்னை வந்து குணா எழுப்பினான். – நான் அன்று காலை கொழும்புக்குப் போக வேண்டும். நான் காலைக்கடனை முடித்துக்கொண்டு போகத் தயாரானேன்.

“சேர் நாளைக்கு வந்திடுங்கோ” என்று கூறிய குணா தகப்பனுடன் வந்து என்னைப் பஸ்ஸில் ஏற்றிக் கைகாட்டி விட்டான். வழியெல்லாம் என் “பாக்”கைத் தூக்கி வந்தான்.

நான் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகப்பட்டுக் கால் நடக்க முடியாமல் கொழும்பிலுள்ள வீட்டில் இருந்தேன். ஒரு நாள் இராஜசேகரனும் குணாவும் என்னைப் பார்க்க வந்தார்கள்.

“நான் உங்களை பார்க்கப் போகிறன் எண்டு சொன்னதும் தானும் வருவதாக அடாப்பிடியாய் நின்னு என்னோடை வந்து விட்டான் சேர். சேருக்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு போக வேணுமெண்டு பெரிய பைக்கற் ஒண்டு வாங்கச் சொன்னான்” என்றான் இராஜசேகரன்.

குணா கட்டிலில் ஏறி எனக்கு முத்தம் கொடுத்தான்.

“சேர் சுகமாகிவிடுவீங்க” என்றான். எங்கள் மூவருக்கும் என் மனைவி சாப்பாடு தயாரித்துப் பரிமாறினாள்.

அதன் பின்னர் ஆறுமாதங்கள் புளத் சிங்களவுக்கு என்னால் போக முடியவில்லை. ஒரு நாள் இராஜசேகரன் என்னுடன் தொலைபேசியில் பேசினான்.

“சேர் குணாவை மகரகமை கான்சர் ஆஸ்பத்திரியில் வச்சிருக்கிறன்” என்று கூறிய அழுகைக் குரல்தான் கேட்டது. தொலைபேசியை அவன் வைத்துவிட்டான். அவனால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. நான் மனைவியிடம் கூறி கார் பிடித்து மகரகமை கான்சர் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

என்னால் தனிய நடக்க முடியாததால் மனைவி என்னைத் தாங்கிக் கொண்டு வர குணாவின் கட்டிலுக்குச் சென்றேன்.

“குணா” என்று அவன் தலையை கைவிரல்களால் வாரினேன். விரல்கள் நடுங்கின.

“சேர் வந்துவிட்டீங்களா? உங்களை நினைத்துக் கொண்டேயிருந்தேன். உங்களைப் பார்க்கமாட்டேனா என்று நினைச்சன். நீங்கள் சொன்னீங்க எனக்குச் சாவு வராதென்னு. எனக்கு “பிளட் கான்சர் சேர்” என்னைப் போல சிறு பிள்ளைகளெல்லாம் ஒவ்வொரு நாளும் இங்கை செத்துப் போயிடுறாங்க சேர். நானும் செத்துப் போயிடுவேனா? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தானே சேர்”

என் நெஞ்சு உள்ளுருகிக் கொண்டிருந்தது.

என் கண்களில் கண்ணீர் முட்டிப் போயிற்று என் அருகில் அவனது தாய் மரியாவும் தந்தை இராஜசேகரனும் அழுதவாறே நின்றனர்.

அவர்கள் சரியாகச் சாப்பிட்டு அநேக நாள்கள் இருக்கும். இராஜசேகரன் ஏன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவன் குணா மீது வைத்திருந்த பாசத்தை நான் அறிவேன். அவன் குணா “என் தெய்வம்” என்று அடிக்கடி சொல்வான். எனக்கு குணாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயம் பொய்யான பதிலே சொல்ல வேண்டும்.

“இராசா நீ சாகமாட்டாய், நீ சாகமாட்டாய்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டேன். என் மனைவியும் கண்களில் கண்ணீர் நிறைந்தபடி நின்றாள்.

“எனக்குத் தெரியும் சேர் நான் சாகப் போறேன் புறக்கிறவங்க ஒரு நாளைக்குச் சாகத்தானே வேணும் சேர்.

“குணா ”

“ஓம் சேர் இது உண்மை சேர்”

“இதை உனக்கு யார் சொன்னது?”

“இங்குள்ளவங்க கதைப்பதைக் கேட்டிருக்கிறன் சேர்” பிளட்கான்சர் வந்தா தப்பமாட்டாங்களாம்” எனக்கும் அந்த முடிவு தெரியும். என் உள்ளம் அவனை சுமந்து கொண்டிருந்தது. நான் வேண்டாத கடவுளையெல்லாம் வேண்டினேன் என் மனதுக்குள். வார்ட் பார்க்க வந்த டாக்டரிடம் பேசிப்பார்க்குமாறு என் மனைவியிடம் சொன்னேன். அவர் நம்பிக்கையான வார்த்தை எதுவும் கூறவில்லை.

“இன்னும் இரண்டு மாதம் பார்ப்போம்” என்று கூறிவிட்டார். பொய் அமைதி யாக இருக்கச் சொல்லும் பொய். எனக்கோ நம்பிக்கை இருக்கிறது குணா சாகமாட்டான் என்று. மரியாவும் இராஜசேகரனும் மனைவியிடம் ஓடிவந்து டாக்டர் கூறியதை அறியத் துடித்தனர். அவர்கள் கண்கள் நிறைந்த கண்ணீர்.

“அவன் சாகமாட்டான், பிழைத்துக் கொள்வான்” என்று கூறிய எனது மனைவியின் கண்களில் மீண்டும் சூடாகக் கண்ணீர் வெள்ளம். நான் தூங்கிப் போன குணாவின் கன்னத்தில் முத்தமிட்டேன். கண்ணீர்த்துளிகள் அவன் மார்பில் விழுந்தன. என் மனைவியும் அவனைக் கைகளால் ஏந்தி அணைத்து முத்த மிட்டாள். அவளது கண்ணீரும் அவனது நெஞ்சில் விழுந்து உருண்டன. எங்கள் கண்ணீர் கடவுளைத் தேடிச் சென்று கொண்டிருந்தன.

நானும் மனைவியும் அவர்களை விட்டுப் பிரிய முடியாமல் பிரிந்து வந்தோம்.

நான் வீட்டில் வந்து கட்டிலில் விழுந்தேன். என்னால் சாப்பிட முடியவில்லை. மனைவியும் அன்று சாப்பிடவில்லை.

நிமிர்ந்து நிடந்த என் நெஞ்சுக்குள் குணா விழித்துக் கிடந்தான்.

என் மனதில் துக்கத்தின் வண்டில் சுமை.

டாக்டர் கூறியது போல் இரண்டு மாதங்கள் முடியு முன் ஒரு நாள் சனிக்கிழமை இரவு இராஜசேகரன் என்னுடன் தொலைபேசியில் பேசினான்.

“சேர், சேர் என் மகன் குணா நேத்தைக்கு இரவு போய் விட்டான். என் தெய்வம் “குணாக்குட்டி” போயிட்டுது” அழுதவாறு கூறினான்.

என் உள்ளம் அவனைத்தேடி வானமெல்லாம் அலைந்து கொண்டிருந்தது. அவனை மீண்டும் தகப்பனிடம் ஒப்படைப்பதற்காக.

– வீரகேசரி 1995 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *