கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,190 
 

நேற்றுடன் கணேசனுக்கு அறுபது வயது முடிந்து விட்டது. அவர் சர்வீஸ¤ம் நேற்றுடன் முற்றுப் பெற்று அவர் ஓய்வு பெற வேண்டிய நேரமும் வந்து விட்டது கிட்டத்தட்ட முப்பத்தேழு வருஷமாய் அந்தப் பிரபலத் தனியார் கம்பெனியில் விசுவாசத்துடன் உழைத்திருக்கிறார். செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதிய மனிதர் அவர்.. ஆபீஸில் தனிக் கெளரவமும் மரியதையும் அவருக்கு உண்டு.

நேற்று அவருக்குப் பிரிவுபசார விழா; மிகத் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சாளர்கள் சம்பிராதயப்படி அவரை பலவிதமாகப் புகழ்ந்து தள்ளினார்கள். அவர் கடமை உணர்ச்சியையும், அப்பழுக்கற்ற சேவையையும் பாராட்டிப் பேசினார்கள். ரோஜா மாலை அணிவித்தார்கள். டீ-பார்ட்டி முடிந்தவுடன், ஒரு அழகிய ஹாண்ட் பேக்கில் அவருடைய ரிடையர்மென்ட் செக்குகளை வைத்துத் தந்தார்கள். கெளரவமாகக் கம்பனி காரில் அவரை வீட்டில் கொண்டு விட்டார்கள். ‘கைகூப்பல்கள், கை குலுக்கல்கள், “விஷ் யூ எ ஹாப்பி ரிடயர்ட் லைப்’ வாழ்த்துகள்; விடை பெறுதல்கள்….அவ்வளவுதான்! அந்த நீண்ட காலத் தொடர்கதை முற்றுப் பெற்றது. இனிமேல் அவர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.

அன்று இரவெல்லாம் கணேசனுக்கு தூக்கமே வரவில்லை. துக்கம்தான் பீரிட்டுக்கொண்டு வந்தது. தான் திடீரென்று ஒரு செல்லாக்காசாகிவிட்டதைப் போல் உணர்ந்தார். மனதில் ஏதோஇனம் புரியாத கலக்கம். குழப்பமான எண்ணங்கள் அவர் அமைதியை பாதித்தன. ஆண்டாண்டு காலமாய் பிரியத்துடனும் பாசத்துடனும் நேசித்துப் பழகிவந்த ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து துரத்தித் தனிமைப்பட்டது போல ஒரு ஏக்கம். ‘இனி என்ன செய்யப்போகிறோம்’ என்ற கேள்விதான் அவர் முன் பூதாகாரமாய் தலை தூக்கி நின்றது. இதைப் பற்றித் தீவிர யோசனையிலேயே அவர் கவனம் சென்றது.

அவர் ஒரே மகன் ரவி. திருமணமானவன், மருமகள் காஞ்சனாவுக்கு பிரபல தனியார் கம்பனி ஒன்றில் நல்ல வேலை. குழந்தைகள் ஆஸ்திக்கொரு ஆண் ஆசைக்கொரு பெண். கணேசனின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கான்ஸரால் காலமாகிவிட்டாள்.

அடுத்த நாளே ரவி அப்பாவின் வாட்டமான முகத்திலிருந்து அவர் மனநிலையைப் புரிந்து கொண்டான்.

“அப்பா, நீங்க இத்தனை வருஷமும் எங்களுக்காகக் கஷ்டப்பட்டு உழைச்சுப் பாடுபாட்டது போதும். இப்பொ நாங்க ரெண்டு பேரும் நல்லா சாம்பாதிக்கறோம். உங்களை இனிமேல் சந்தோஷமா வச்சுக் காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு. பணக்கவலைங்கறது நமக்கு இல்லை. அதனாலே நீ£ங்க ஏதாவது வேலைக்குப் போகலாம்னு மட்டும் தயவு செய்து நினைக்காதீங்க.”

“சரிடாப்பா, எனக்கும் பொழுது போக ஏதாவது வேண்டாமா? நாள் பூரா வெட்டிப் பொழுதைப் போக்கறது எனக்குப் பிடிக்காத விஷயமாச்சே”

“அந்தக் கவலையே வேண்டாமப்பா. நிறைய பத்திரிகைகள் வாங்கிப்போட்டிருக்கேனே. படியுங்க. உங்களுக்குப் பிடித்தமான் க்ராஸ்வேர்டும் சுடொகுவும் போடுங்க. வேலை பார்த்தப்போ ‘எழுதவே முடியல்லை’ன்னு தவிப்பீங்களே, இப்போ நிறைய எழுதித்தள்ளுங்க. டிவிலே உங்களுக்குப் பிடித்தமான ப்ரொகிராம்களைப் பாருங்க. எந்த விதக் கவலையும் இல்லாமே, உங்க இஷ்டப்படி இருங்க. வேளா வேளைக்குச் சாப்பிட்டுட்டுத் தூங்குங்க. உங்களுக்கு எந்த அசெளகரியம் இருந்தாலும் சொல்லுங்க. கவனிச்சு சரிப்படுத்திடறேன். எது தேவைன்னாலும் கேளுங்க..மொத்ததிலே நீங்க எந்தக்கவலையும் இல்லாமே நிம்மதியா இருக்கணும்கறது தான் என் ஆசை, என்ன நான் சொல்றது சரிதானே?”

கணேசனுக்கு ஒரே ஆச்சரியம்! மகன் தன் மீது இவ்வளவு அக்க¨றையும் பாசமும் காட்டுவதை நினைத்து அவர் மனம் உள்ளூர ஆனந்தத்தால் துள்ளியது.

ஆனால் அதே சமயத்தில் காஞ்சனாவுக்கோ அப்பாவிடம் கணவன் அளவுக்கு மீறிக்காட்டிய பரிவும் பாசமும் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை அவள் முக பாவங்களே எடுத்துக்காட்டின.

அடுத்த ஒரு மாதம் ஓடியது.

கணேசன் தனக்கென்று ஒரு கால அட்டவணையை ஏற்படுத்திக்கொண்டார். அதன்படி தினசரி நடப்பதும் அவருக்குப் பழகிவிட்டது.

காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பார். காலைக்கடன்களை முடித்து காபி ஆனவுடன் கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் சுறுசுறுப்பாக வாக்கிங் போவார். வந்து குளியல், பூஜைகளை முடித்த பின் காலை உணவு. பிறகு செய்திதாள்கள் படித்தல், டிவி, ஒரு மணிக்குச் சாப்பாடு. மூன்று மணி வரை நிம்மதியான் தூக்கம். பிறகு ஐந்து மணிவரை பத்திரிகைகள் படிப்பது, கம்ப்யூட்டரில் பிரெளசிங் செய்வது. அதற்குமேல் ஒரு நீண்ட வாக்கிங். தி.நகரில் ஜன நெருக்கடியுள்ள ரங்கனாதன் தெரு, உஸ்மான் ரோட். வெங்கடநாராயணா ரோட் இவைகளியெல்லாம் ஒருமுறை சாவதானமாக வேடிக்கை பார்த்தபடி நடப்பது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. வாரம் இரண்டு முறை வேதம் கற்றுத் தரும் வகுப்புகளுக்குச் செல்வார் விசேஷ நாட்களில் சிவ விஷ்ணு, அகஸ்தியர், முப்பாத்தம்மா கோவில்களில் ஏதாவது ஒன்றிற்குப் போவது தவறாது. அப்படிப் போகாத நாட்களில் பனகல்பார்க்கிலோ நடேசன் பார்க்கிலோ நேரத்தைச் செலவிடுவது என்று ஒரு விதமாக அவர் பொழுது கழிந்தது.

ஒருமாதம் அமைதியாகச் சென்றது.

அன்று காலை. காபி வழக்கமான நேரத்திற்கு வராததால் கணேசன் சமையலறையை எட்டிப் பார்த்தார்.

“என்ன மாமா, காபி டயத்துக்கு வரலையேன்னு தவியாத் தவிக்கறீங்களா? பால் பாக்கெட் போடற பாக்கியம் அம்பது அறுவது வீடுகளுக்கு பால் வாங்கித் தர்றா. அதனாலே இஷ்டப்படி நினச்ச நேரத்துக்கு வர்றா. காபிக்கு லேட்டாயிடுது. உங்களுக்குச் சீக்கிறம் காபி வேணும்னா, ஒரு உபகாரம் பண்ணுங்க. நாளையிலேயிருந்து நீங்களே சீக்கிரம் எழுந்து பால் பாக்கெட் வாங்கிகிட்டு வந்திடுங்க. எனக்கும் மத்த வேலைகளைப் பாத்துட்டு டயத்துக்கு ஆபீஸ் போக முடியும்”..

வேண்டுகோளின் போர்வைய்¢ல் ஒரு ஆணையே இடப்பட்டது புரிந்து, அவர் அதிர்ந்து போனார். அவள் சொன்னபடி செய்ய வேண்டியதாயிற்று.

பத்தே நாட்களில் மீண்டும் காஞ்சனா ரவியிடம் புலம்புவது அவர் காதில் விழுந்தது. அவருக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே உரக்கப் பேசியதாகத் தோன்றியது.

“இதோ பாருங்க, இனமே குழந்தைகளை என்னால் ஸ்கூலுக்குக் கொண்டு போய் விட முடியாது. தினமும் எனக்கு ஆபீஸ் லேட்டாயிடுது. மானேஜர்கிட்டே கண்டபடி வசவு வாங்க வேண்டியிருக்கு. உங்க அருமை அப்பா சும்மாத்தானே வீட்டிலே சாப்பிட்டுட்டுத் தூங்கறாரு. மருமக கஷ்டப்படறாளேன்னு அவருக்குக் கொஞ்சமாவது இருக்கா? இருந்தா அவரா முன்வந்து பேரக்குழந்தைகளை ஸ்கூலுக்கு விட்டுட்டு திரும்பி வீட்டுக்கு அழைச்சிண்டு வரமாட்டாரா? ”

இந்தத் திடீர் மறைமுகத் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த நாளிலிருந்து அந்த வேலையையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

சில நாட்கள் கழித்து..

“மாமா. டென்ஷனான காலை வேளையிலே காய்கறிக்கடையிலே போய், சமைலுக்குக் காய்கறி வாங்கிண்டு வந்து சமையலை முடிக்கிறது பெரியா தலை வேதனையா இருக்கு. நீங்கதான் தினம் தவறாமல் ரங்க நாதன் தெரு பக்கம் போறீ£ங்களே, கொஞ்சம் காய்கறி வாங்கி வந்தால் எனக்கு ஒத்தாசையா இருக்கும். ராத்திரியே நறுக்கி வச்சுப்பேன் அங்கே விலையும் மலிவு, வெரைட்டியும் கிடைக்கும். முடியுமா உங்களால்?

முடியாது என்று சொல்ல முடியுமா? அதற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று.

அடுத்த வாரமே காஞ்சனாவின் அடுத்த அஸ்திரம் அவர் மேல் பாய்ந்தது. “அப்பா தான் நிறையப் படிச்சிருக்கிறதா அடிக்கடிப் பீத்திப்பீங்களே என்ன பிரயோசனம்? இந்தப் பசங்களுக்கு ஹோம் ஒர்க் பண்ண கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா என்ன? அத்தனை வேலையையும் கவனிச்சிட்டு இதையும் நான் தான் பண்ணனுமா? ” என்று கணவனிடம் எரிந்து விழுந்தது அவரை வேதனைப் படுத்தியது.

அன்றிலிருந்து இரண்டு குழந்தைகளுக்கும் பாடம் சொல்லித் தருவதும் அவர் பொறுப்பாயிற்று.

அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொன்றாக சில்லறை வேலைகள் சாமர்த்தியமாக அவர் மீது சுமத்தப்பட்டன. இரண்டு பேருடைய பாங்க் விவகாரங்கள், பால் கார்டு வாங்குவது, டெலிபோன்,மின்சார பில் கட்டுவது, காஸ¤க்கு ‘புக்’ செய்து அது வரும்போது வாங்கி வைப்பது, வீட்டு உபகரணங்கள் பழுதானால் அவற்றைப் ரிப்பேர் பார்க்க ஆவன செய்வது- இத்தியாதி வேலைகள் அவை தலை மேல் விழுந்தன. சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்தை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் அவர் கைகளுக்கு மாறியது.

எப்போதோ பத்திரிகைகளில் படித்தது கணேசனுக்கு நினைவுக்கு வந்தது. ஒட்டகத்தின் மேல் அதன் முதுகு வலி தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் சுமையை ஏற்றுவார்களாம் பாலைவன நாடுகளிலே. போன ஜென்மத்தில் காஞ்சனா அந்த வேலை பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் அவருக்கு.

நாள் முழுக்க அவருக்கு மாறிமாறி ஏதேனும் வேலை இருந்து கொண்டே இருந்தது. பகலில் ஒரு மணி அவகாசம் கூடத் ஓய்வு எடுக்க முடியாமல் ஆகி விட்டது. அப்படித் தப்பித் தவறிக் கிடைத்தாலும். ‘கிரெடிட் கார்டு வேண்டுமா, லோன் வேண்டுமா’ என்று தூக்கத்தில் எழுப்பி விசாரிக்கும் பாங்க் டெலிபோன் கால்களும், ராங் கால்களும், கூரியர்களின் வரவும் கிடைக்கிற சொற்ப அவகாசத்தையும் அனுபவிக்க முடியாமல் பறித்துக் கொண்டன.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்

கணேசனுடைய ஆபீஸ் நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். ‘லொடலொட” ராமசாமி (வாய் மூடாமல் தொடந்து பெசுவதால் சூட்டப்பட்ட பெயர்) என்று கணேசன் அவரைக் குறிப்பிடுவார். அவர் கணேசனுக்கு இரண்டு வருஷங்கள் முன்னாடியே ரிடையர் ஆனவர். இருவரும் ஏதேதோ விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசிக்கொண்டார்கள்.

“எப்படி இருக்கு லைப்” கனேசன் கேட்டார் அவரிடம்.

“எனக்கென்னப்பா கவலை? பையனும் மருமகளும் ‘தாங்கு தாங்கு’ன்னு தாங்கறாங்க. ஒரு வேலை கூட செய்ய விடமாட்டேங்கறாங்க. வேளாவேளைக்கு தின்னுட்டுத் தூங்கறது தான் வேலையாப் போச்சு. சொல்லப் போனா உடம்பிலே சோம்பேறித்தனம்தான் ஜாஸ்தியாயிட்டுது. .அது சரி, என்னைக் கேட்டியே, நீ£ எப்படி இருக்கே? ‘ என்று விசாரித்தார் ஆவலுடன்.

கணேசன் பதில் கூறுவதற்குள் தற்செயலாக அங்கே வந்த காஞ்சனா குறுக்கிட்டுச் விஷமச்சிரிப்புடன் சொன்னாள்.

“அவருக்கு மட்டும் என்ன குறைச்சல் அங்கிள்? நாங்க ரெண்டு பேருமே அவரை எந்த வேலைக்கும் விடறதில்லை. சாப்பாடு, தூக்கம், டி.வி, கம்ப்யூட்டர், ஊர் சுத்தறதுன்னு அவர் டயம் ஜாலியா ஓடிடறது. ஒரு கவலையுமில்லாம, உடம்பை அலட்டிக்காமே ராஜா மாதிரி ரிடையர்ட் லைபை முழுசா ரசிச்சு அனுபவிக்கிறார்”

“அப்படியா, பரவாயில்லையே, இது மாதிரி நாம இருக்கறதுக்கு ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும். என்ன சொல்றே?” ராமசசாமி கேட்டார் கணேசனிடம்.

“ஆமாம், வாஸ்தவம்தான்” என்று தலையாட்டினார் கணேசன் சுரத்தில்லாத ஈன ஸ்வரத்தில் !

– ஜனவரி 12 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *