ஓட்டைக் காலணாக்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 10,051 
 
 

நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை கொஞ்சமும் விலகாமல் எப்படியோ சுவற்றில் மெல்ல ஏறும். அப்படிப் பாதங்களை ஓட்டிக் கொண்டே கதைகள் நிறையச் சொல்லுவாள்.

அவள் தங்கியிருந்த வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் நிறைய நம்பிக்கனி அத்தைக் கதைகளைத் திரட்டியிருந்தன. எல்லாம் அதே கதைகள்தான். எதையும் குணப்படுத்தும் சக்தியுள்ள இஞ்சி மரப்பானை அவள் செய்யும் விதம். செத்துப் போன சொந்தக்காரர்களுக்கு அவள் எழுதச் சொல்லும் கடிதங்கள். திடாரென்று தாளத்துடன் பீறிடும் பாடல்கள். விசித்திரமான குட்டிக் கதைகள். புளியம்பழம் ஓட்டுக்குள் விளைவது, குன்றிமுத்து கறுப்பும் சிவப்புமானது என்பது மாதிரி புதுப் புதுத் தகவல்கள்.

காலப்போக்கில், நம்பிக்கனி அத்தைக்குத் தெரிந்த எல்லாரும் செத்துப் போனார்கள். அதனால் அவள் நிறையக் கடிதங்கள் எழுத வேண்டி வந்தது. பிள்ளைகளுக்கு நம்பிக்கனி அத்தையைப் பார்த்துக் கொஞ்சம் பயம்தான். ஆனாலும் அவள் சொல்வதைக் கவனமாய்க் கேட்டுக் கடிதங்களை எழுதினார்கள்: ‘மகாகனம் பொருந்திய திருமதி ——— அவர்களுக்கு, தாங்கள் இறந்து இருபது வருடங்கள் ஆகின்றன. தங்கள் மீதுள்ள ஆதங்கம் எனக்கு இம்மியளவும் குறையவில்லை…. ‘ என்ற ரீதியிலான கடிதங்கள்.

கையில் வைத்திருக்கும் சின்னத் தோல் ‘பர்ஸை ‘க் குலுக்கிக் கொண்டே பேசுவாள். என்றோ ஒரு காலத்தில் சிவப்பாக இருந்து இப்போது பழுப்பாகத் தேய்ந்து கொண்டிருக்கும் ‘பர்ஸ் ‘. அதற்குள் இரண்டு மூன்று ஓட்டைக் காலணாக்கள் இருப்பதாய்ச் சொல்வாள் நம்பிக்கனி அத்தை.

பிள்ளைகளுக்குக் காலணா, அதிலும் ஓட்டைக் காலணா என்றால் என்னவென்றே புரியாது. பார்க்க ஆசைப்படும். நம்பிக்கனி அத்தை காலணாக்களைக் காட்ட மறுத்து விடுவாள். ‘அறுபத்தைஞ்சு வருஷமாப் பொத்தி வைச்சிருக்கேன். சாகும் போது எங்கூடவே இதுங்களும்…..ஓடுங்க…ம்ம்ம். ‘ பிள்ளைகளை விரட்டி விடுவாள்.

நம்பிக்கனி அத்தைக்குத் தன் சாவைப் பற்றிச் சில கனவுகள் இருந்தன. தான் மதிக்கும் எல்லாரும் இறந்து போனதால், சாவும் ஒரு மதிப்பிற்குரிய குறிக்கோளாய் மாறி விட்டிருந்தது.

‘என்னைத் தெரியுதா, உங்க நம்பிக்கனி அத்தை….. ‘

இப்படித்தான் அவளது ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் தொடங்கும். மறுமுனையில் யாராக இருந்தாலும் சரி. அவளை அவர்களுக்கு ஞாபகமிருப்பது அவசியம் என்ற தொனியில் அவள் பேசுவாள்.

அவர்கள் அவளை நேரில் சந்தித்திராததால், அவர்களுக்கு நினைவிருக்காது. ‘ஓ, ஆமா, நம்ம நம்பிக்கனி அத்தை, ‘ என்பார்கள்…. ‘எப்படி இருக்கீங்க, அத்தை ? ‘

‘அப்படியொண்ணும் நல்ல நிலைமைலே இல்ல, ‘ என்பாள் நம்பிக்கனி அத்தை. ‘நான் இப்போ —– ஊர்லே இருக்கேன். அடுத்து நான் போறதா இருந்த வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை…… ‘

யாருமே வராதே என்று சொன்னதில்லை. இது வரை. பேருந்து நிலையத்திலோ ரயிலடியிலோ வந்து அவளைக் கூட்டிப் போவார்கள்.

இந்தத் தடவை அவள் விமானத்தில் வந்து இறங்கினாள். ராஜுவையும் சந்திராவையும் உடனேயே அடையாளம் தெரிந்தது. ராஜுவின் அக்காவோடு சில வருடங்களுக்கு முன் நம்பிக்கனி அத்தை தங்கியிருந்தாள். ராஜுவின் முகவரி அப்போதே கிடைத்தது. ஆனாலும், உடனே வரவில்லை.

நம்பிக்கனி அத்தை நேராக அவர்களை நோக்கி நடந்தாள். ‘ராஜு, சந்திரா ‘, என்றாள். இருவரின் முகத்திலும் சிறு அதிர்ச்சி. நம்பிக்கனி அத்தைக்குப் பழகிப் போன அதிர்ச்சிதான். அந்த அதிர்ச்சிக் கணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்: ஒரு புதிய வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து, அட, இந்த வார்த்தைக்கு இத்தனை வித்தியாசமான அர்த்தங்கள் உண்டா என்று வியப்பது மாதிரி. இவ்வளவு உயரமான, அகலமான அத்தையை யாருமே எதிர்பார்ப்பதில்லை.

ராஜு அவள் பெட்டியை வாங்கிக் கொண்டான். இருவருமே அவளை ஓரக்கண்ணால் அளவெடுப்பது அவளுக்குத் தெரியும். பிரயாணத்தில் கசங்கிப் போகாத, சரிகையில்லாத அடர்நீலப் பாலியெஸ்டர் பட்டு. நெற்றியில் சின்னக் கறுப்புச் சாந்துப் பொட்டு. எந்த இடத்துக்கும் பொருத்தமான, தன் வயதுக்கேற்ற தோற்றம். அதுவும் நம்பிக்கனி அத்தைக்குத் தெரியும்.

காரின் பின்னிருக்கையில் சாய்ந்து கொண்டாள். பழங்காலத்திய காராய் இருந்தது. ‘இந்த ஊரில் வருஷா வருஷம் கார் மாத்துவாங்கன்னு நினைச்சேனே…. ‘ நம்பிக்கனி அத்தை ஆச்சரியப்பட்டாள்.

‘தாடி வச்சிருக்கே, ராஜு. ‘ நம்பிக்கனி அத்தை சொன்னாள்.

ராஜு காரை ஓட்டிக் கொண்டே மெல்லச் சிரித்தான்.

‘பெங்களூர்லே நம்ம ராணிச் சித்தி பையன் கூட இப்படித்தான். எதையோ மறைக்கத்தான் தாடி வச்சிருக்காங்கன்னு முந்தி நினைப்பேன். அப்படி இல்லேன்னு இப்ப தெரியும்…….. ‘

‘இவராலே எதையும் மறைக்க முடியாது, நம்பிக்கனி அத்தை, ‘ சிரித்தபடி சந்திரா வக்காலத்து வாங்கினாள்.

நம்பிக்கனி அத்தை ராஜுவின் பக்கவாட்டுத் தோற்றத்தைக் கவனித்துப் பார்த்தாள். தாடிக்கு மேலே கன்னத்தில் பருக்கள் வந்து போன தடங்கள். இவன் எதையோ மறைத்து வைத்திருக்கிறான். சந்திராவும் கூடத்தான். பல வருடங்களுக்கு முன்னால் இரண்டு பேருமே பெரிய பதவிகளில் இருந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இப்போது, இந்தச் சின்னக் கடற்கரை ஊரில், உல்லாசப் பயணிகளுக்குச் சங்குமாலை, பாசிமணி இத்யாதி விற்கும் சிறுதொழில் செய்கிறார்கள். காரணம் என்னமோ ஏதோ. தோண்டுவதற்கு விருப்பமில்லை.

வீட்டின் முன் ராஜு காரை நிறுத்தவும் ஒரு சின்னப் பையன் மூச்சிரைக்க ஓடி வந்தான். அவன் தலைமுடியின் தங்கநிறமும் பச்சைக் கண்களும், கடற்கரை வெயிலில் கறுத்திருந்த உடலில் அந்நியமாய்த் தெரிந்தன. முதலில் சந்திரா இறங்கி நம்பிக்கனி அத்தை பக்கக் கதவைத் திறந்து விட்டாள். அந்தப் பையன் சந்திராவின் கைத்தறிக் குர்தாவைப் பிடித்து இழுத்துக் கேட்டான்: ‘இவங்க யாரு, ஆண்ட்டி ? ‘

‘நீ யாருன்னு முதல்லே சொல்லு. ‘ காரிலிருந்து இறங்கிய நம்பிக்கனி அத்தை பதில் சொன்னாள். ‘ஆமா, நீ பையனா பொண்ணா ? ‘ எல்லாரும் ஒன்று போலவே உடை அணிந்து குழப்புகிறார்கள் இந்தக் காலத்தில். என்ன நாகரீகமோ.

‘நான் பொண்ணு. ‘ குரலில் பெருமை தெரிந்தது.

‘உன் தலைமுடியைப் பார்த்தா அப்படித் தெரியலியே, ‘ என்றாள் நம்பிக்கனி அத்தை.

‘எனக்கு என் தலைமுடியைப் பிடிக்கும். நீங்க யாரு ? ‘

‘நம்பிக்கனி அத்தை. ‘

கடலைப் பார்த்திருந்த அகன்ற வெராண்டாவைக் கடந்து விசாலமான வரவேற்பறை. உள்ளே நிறைய செடிகள். செடிகளை நம்பிக்கனி அத்தை நோட்டம் விட்டாள். இவை சந்தேகத்திற்குரிய செடிகள். நம் தலைமுடியைக் கலைத்துச் சிரிக்க அலைவது மாதிரி வம்புத் தோற்றமுள்ள செடிகள். சந்திராவிடம் இவை பற்றிப் பேச வேண்டும் என்று அத்தை நினைத்துக் கொண்டாள்.

பையன் மாதிரித் தெரிந்த அந்தச் சிறுபெண்ணும் வரவேற்பறைக்குள் மிகச் சுதந்திரமாய் நுழைந்திருந்தது. தொப்பென்று ‘சோஃபா ‘வில் விழுந்து, சரிந்து கொண்டது. தன் சொந்த வீடு போல் சகஜமான பாவனை. நம்பிக்கனி அத்தையைப் பார்த்தவாறு, ‘நம்பிக்கனி அத்தை, பக்கத்து வீட்லேதான் இருக்கேன். எம் பேர் டெய்ஸி, ‘ என்றது. கண்களின் பச்சையில் கொஞ்சம் தங்கம் மினுங்கியது.

‘அட, நீயென்ன பூவா ? ‘

டெய்ஸி தன் அம்மாவைப் போலவே முகத்தையும் குரலையும் மாற்றிக் கொண்டு சொன்னாள்: ‘நம்ம பிள்ளைங்களுக்கு நாம என்ன பேர் வேணும்னாலும் வைக்கலாம். ‘

‘டெய்ஸி….எங்கே போனே…… ‘ அவள் அம்மா வாசலில் நின்றாள். வண்ணமயமாகப் பாதம் வரை நீளும் பருத்திப் பாவாடை. ஒரு கரண்டையில் தண்டையும் கொலுசும். காது மடல்களில் வரிசையாக நிறையும் வளையங்கள். மூக்கில் ஒற்றைக்கல். தொப்புளைக் குத்திப் போட்டிருந்த வெள்ளி வளையம் நம்பிக்கனி அத்தையை நெளிய வைத்தது — வலித்திருக்குமே. வலது கரத்தில் வங்கி போலப் பச்சை குத்திய மலர்வளையம். இடுப்பில் ஒரு நாலு வயதுக் குழந்தை. பின்னால் கடல் விரிய, நிலைப்படியில் அவள் நின்ற காட்சியை எந்தக் காலத்து ஓவியர் வரைந்திருப்பார் என்று சொல்லத் தெரியவில்லை.

ராஜூ அறிமுகப்படுத்தினான். டெய்ஸியின் அம்மா பெயர் ‘கையா ‘–பூமித்தேவதையாம். பூமித்தேவதையின் பெண்கள் டெய்ஸி, ஜாஸ்மின் என்று பூக்களாக இருப்பது நம்பிக்கனி அத்தைக்கு இயல்பாய்த் தெரிந்தது.

‘ஜாஸ்மின் பிறந்தப்புறம் கல்யாணம் முறிஞ்சு போச்சு. அவன் யாரோடவோ போய்ட்டான். ஜீவனாம்சம் கூட அனுப்புறதில்ல. மஸாஜ் பார்லர்லே வேலை பார்க்கிறா. ‘ ‘கையா ‘வும் பிள்ளைகளும் போன பிறகு சந்திரா சொல்கிறாள்.

நம்பிக்கனி அத்தைக்கு இந்தத் தலைமுறை முழுதாய்ப் புரியப் போவதில்லை. ‘அடப் பாவமே! சந்தோஷமா இருக்காளா ? ‘

‘தைரியமா இருக்க வேண்டிய அவசியம், அத்தை. ‘

பக்கத்து வீட்டுப் பூமித்தேவதை தன் மலர்களைக் குளிக்கச் சொல்லி விரட்டுவது கடற்கரைக் காற்றில் மிதந்து கேட்டது.

* * * * *

‘பம்பாய்தான் உங்க ஊரா ? அக்கா ஏதோ சொன்ன ஞாபகம். ‘ சாப்பிடும்போது ராஜு சொன்னான்.

‘மும்பை ‘. நம்பிக்கனி அத்தை திருத்தினாள். ‘அந்த ஊர் நமக்குத் தாங்குமாப்பா ? அங்கேயும் சொந்தக்காரங்க இருக்காங்க. ஊர் ஊராச் சுத்திப் பாத்திருக்கேன். வரிசையா அடுக்கிக்கிட்டே போகலாம். எல்லாத்துக்கும் முன்னாலே குற்றாலம். என் தூரத்துச் சொந்தக்காரி — இப்போ செத்துப் போயிட்டா — தனபாக்கியம் இருந்தது அங்கேதான். ‘

‘சின்ன வயசிலே குற்றாலம் போன ஞாபகம் இருக்கு…. ‘ சந்திரா சொன்னாள். ஓங்கி உயர்ந்து அடிவயிற்றுள் பயம் கவ்வ வைக்கும் நீலப்பச்சை மலைகள். எண்ணெய்த் தலை மேல் இரைச்சலுடன் நுரைக்கும் அருவிக்கும் கரிய மலைச்சுவருக்கும் இடையே தேங்கிக் கிடக்கும் அமைதி. செண்பகப்பூ வாசம். இன்னொரு காலம், இன்னோர் இடம். சந்திரா பெருமூச்சு விட்டாள்.

‘குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா…. ‘ ராக இலக்கணங்கள் எல்லாவற்றையும் உடைத்துப் பாடிய பிறகு, ராஜூ கேட்டான்: ‘குற்றலத்துத் தனபாக்கியம்னு சொன்னீங்களே, நம்பிக்கனி அத்தை….. ‘

‘ஏன் இப்படிக் குடைகிறீர்கள் ‘ என்று ராஜுவை முறைத்தது சந்திராவின் பார்வை. ‘ஏதாவது பேச வேண்டாமா ‘ என்றது அவன் பதில் பார்வை.

‘ஆமா. தனபாக்கியம்தான் எனக்கு நெருக்கமான சினேகிதி. அவளுக்குன்னு இருந்தது எல்லாத்தையும் கடைசிலே எனக்கே குடுத்துட்டு போய்ட்டா…. ‘

‘சின்ன வயசுச் சினேகமா ? ‘

‘இல்லை. வயசானப்புறம்தான் அவளை முதமுதலாப் பார்த்தது. அவ புருஷக்காரன் போய்ட்டதா பேப்பர்லே விளம்பரம் போட்டிருந்தாங்க. விசாரிக்கன்னு அவ வீட்டுக்குப் போனேன். அப்புறம் நிறைய தடவை போய்த் தங்கியிருக்கேன். ‘

‘சொந்தம்னு நீங்க சொல்ற ஊர் எது, நம்பிக்கனி அத்தை ? ‘

நம்பிக்கனி அத்தை மேசையிலிருந்து எழுந்தாள். சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டு போய்ப் பளிங்கு அங்கணத்தில் போட்டாள். எல்லாவற்றையும் கழுவ ஆரம்பித்தாள்.

சாப்பாட்டு மேசையைத் துடைத்துக் கொண்டிருந்த ராஜு, அதன் மேல் கிடந்த சிவப்பிலிருந்து பழுப்புக்குத் தேய்ந்து கொண்டிருக்கும் சிறு தோல் ‘பர்ஸை ‘ எடுத்துக் குலுக்கினான். காசுகள் சிலம்பின. ‘இதைப் பத்தியும் ஏதாவது கதையிருக்கா, அத்தை ? ‘

‘எங்க அப்பா வாங்கிட்டு வந்த ‘பர்ஸ் ‘. ‘ நம்பிக்கனி அத்தை கையைத் துடைத்துக் கொண்டே அவள் அறைக்குப் போனாள். சில நிமிடங்கள் கழித்து மேசையருகே வந்து உட்கார்ந்து கொண்டாள். கையில் சட்டமிட்ட புகைப்படம் ஒன்று. ராஜுவும் சந்திராவும் அவளுக்கு இரு பக்கங்களிலும் உட்கார்ந்து கொண்டார்கள். முகத்தில் கதை கேட்கும் ஆர்வம்.

கறுப்பு-வெள்ளைப் புகைப்படம் காலத்தின் பழுப்பேறித் தங்கமாகியிருந்தது. ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அந்தக் காலத்து இளைஞர். சரிகைக்கரை போட்ட வேட்டி. நீளச் சட்டை. தோளில் மடித்துப் போட்ட அங்கவஸ்திரம். காதில் கடுக்கன்கள். நாற்காலியின் முதுகைப் பிடித்துக் கொண்டு நிற்கும் இளம் மனைவி. கோணல் வகிடும், காதுகளில் லோலக்கும், ‘பஃப் ‘ கை வைத்த ரவிக்கையும், தற்கால முறையில் கட்டிய புடவையுமாக நின்ற அந்தப் பெண்ணின் நாகரீக மேல்பூச்சுக்கும் அவள் கண்களில், உடல்மொழியில் தெரிந்த ஒடுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை.

‘அந்தக் காலத்துலே சேலை கட்டுற விதம் வேறதானே, அத்தை ? எங்க பாட்டியெல்லாம் இப்படி ‘ஸ்டைலா ‘ இருக்கலே. ‘

‘எங்கப்பா வியாபாரத்துக்காகக் ரங்கூன், கொழும்பு, சிங்கப்பூர்னு போய்ட்டு, நிறையச் சாமான் வாங்கிட்டு வருவாங்களாம். வீட்டிலே எல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு சொல்லுவாங்களாம். ஹார்மோனியப் பெட்டியத் திறந்து வச்சு அப்பா பாட ஆரம்பிச்சாங்கன்னா அப்படியே பாகவதர் கணக்கா இருக்குமாம்….பங்கா போடுறவன் கூட அப்படியே பாட்டிலே லயிச்சுப் போய், பங்காவை இழுக்க மறந்து போவானாம்….. ‘

‘பங்கான்னா என்னது ? ‘

நம்பிக்கனி அத்தை சிரித்தாள். ‘விட்டத்திலே தொங்குற விசிறி. கயிறாலே இழுத்துக் காத்து வர…. ‘

‘என்னது….. விசிறிக் கயிறு இழுக்கன்னு ஒருத்தனா ? ‘ மனிதச் சமத்துவம் பற்றிச் சந்திரா ஒரு பேருரை ஆற்றப் போவது நம்பிக்கனி அத்தைக்கும் புரிந்தது. இவளை மாதிரி ஒன்றிரண்டு பேர் எந்தக் காலத்திலும் இருப்பார்கள். இவர்களால்தான் உலகம் சுழல்வது தொடர்கிறது என்று அத்தை நினைத்துக் கொண்டாள்.

‘வதனமே சந்த்ரபிம்பமோ…. ‘ தனக்குத் தெரிந்த ஒரே பாகவதர் பாட்டைக் காரணத்துடன் பாடிக் கொலை செய்து, வாஞ்சையுடன் புன்னகைத்தான் ராஜு. எதிர்பார்த்தது போலவே, சந்திரா தன் மனிதச் சமத்துவ உரையை மறந்து போனாள்.

‘என்னோட முழுப்பேரு சந்திரவதனா, தெரியுமா அத்தை ? ‘

நம்பிக்கனி அத்தை ஆச்சரியப்பட்டாள். வேறு பாகவதர் பாட்டுகள் தெரியுமா என்று கேட்டாள். ராஜு தெரியாது என்றான்.

‘என் ஜீவப்ரியே ஷ்யாமளா…. ‘ என்று ஆரம்பித்துப் பல பாகவதர் பாட்டுகளைப் பாடினாள் அத்தை.

‘கூடில குந்தளம் குவலயதள நீலம்…..இப்படியெல்லாம் பாடியிருக்காரே பாகவதர் ? இது தமிழா ? எத்தனை பேருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும், நம்பிக்கனி அத்தை ? ‘

‘இரகசியம் சொல்லட்டுமா ? எனக்குமே புரியாது. ஆனா, அந்த ராகத்திலே, அந்தக் குரலிலே ஒரு மயக்கம். வார்த்தைகள் ஞாபகமிருக்கு……. ‘

தொடர்ந்து பல பழைய பாடல்களைப் பாடினாள் நம்பிக்கனி அத்தை. மறைந்து போன ஒரு யுகமே பாடல்களாய்ப் புரண்டது.

பாடல்கள் நின்றதும் கடலலைகளின் வெறுமை மட்டும் கேட்டது.

‘ஐயோ, உங்கப்பா வெளிநாட்டிலேர்ந்து வாங்கிட்டு வந்த ‘பர்ஸ்னு ‘ கதையை ஆரம்பிச்சீங்க. நாங்க எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போய்ட்டோம். ‘

‘பெரிய கதையில்லே, சந்திரா. அடுத்த வருஷமே, அப்பா போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்பா கதைகளைச் சொல்லிச் சொல்லி அம்மா எங்களை வளர்த்தாங்க….அவங்களுக்கும் ஒரு ஆறுதல். அப்பா நினைவா இந்தப் ‘பர்ஸை ‘ எங்கிட்டே குடுத்தது அம்மாதான். காலியா இருந்தா நல்லதில்லேன்னு, சில செல்லாத ஓட்டைக் காலணாக்களையும் போட்டு…. ‘

நம்பிக்கனி அத்தை காலணாக்களை வெளியே எடுத்தாள். கறுத்து, பச்சை பிடித்து, நடுவில் ஓட்டை உள்ள தட்டைக் காலணாக்களைப் பார்த்து ராஜுவும் சந்திராவும் அதிசயப் பட்டார்கள். நம்பிக்கனி அத்தை மீண்டும் அவற்றைப் ‘பர்ஸில் ‘ போட்டு அடைத்தாள்.

‘சின்ன வயசிலே மோதிரம் மாதிரி விரல்லே மாட்டி விளையாடுவேன். கொஞ்சம் வளர்ந்தப்புறம் தொலைஞ்சிருமேன்னு பயம் வந்துது. காலணாக்களைப் பர்ஸை விட்டு வெளியே எடுக்கிறதையே நிறுத்திட்டேன். நம்ம எல்லாருக்கும் இறுகப் பிடிச்சிக்கிட ஏதாவது ஒண்ணு தேவையாயிருக்கு, என்ன ? செல்லாக்காசா இருந்தாக் கூட…… ‘

சந்திரா, ராஜு இருவரின் முகங்களிலும் ஏதோ நிழல். சந்திராவின் வாய் அழுவது போல் கோணிப் போகிறதோ. தன் கற்பனைதான் அதிவேகமாய் வேலை செய்கிறது என்று நினைத்துக் கொண்டாள் நம்பிக்கனி அத்தை.

* * * * *

நம்பிக்கனி அத்தை தங்கும் வீட்டவர்கள் அவள் இன்னும் கொஞ்சம் தங்க வேண்டும் என்று நினைக்கும்படி வேலை செய்வது அவளுக்குப் பழகிப் போயிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து சூடாக ஏதாவது செய்து வைப்பாள். சாப்பிட்டவுடன் பாத்திரபண்டங்களைக் கழுவி வைத்து விடுவாள். அலமாரியில் அடுக்கியிருக்கும் புத்தகங்களைப் படித்து அவற்றைப் பற்றி அறிவுடன் பேசுவாள்.

இந்த வீட்டை அவளுக்கு ஏனோ அதிகமாகப் பிடித்திருந்தது. பாறைகளும் முள் புதர்களும் அடர்ந்து, வீட்டுக்கு முன்னால் பரந்து கிடக்கும் கடற்கரைக்காக மட்டுமில்லை. வீட்டுக்குள்ளிருக்கும் வெளிச்சத்துக்காக, அமைதிக்காக. எளிமையான அலங்காரம். நாலு இடங்களுக்குப் போய் வருவதால் நம்பிக்கனி அத்தைக்கு இன்றைய உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். இந்தப் பகட்டுக் காலத்தில் கூட இப்படி ஓர் எளிமையா. அதுவும் இந்த ஊரில்…..

நம்பிக்கனி அத்தைக்குச் சந்திராவைப் பிடித்திருந்தது. கடைக்குப் போகாத நாட்களில், மணிகள் அல்லது சங்குகளைக் கோர்த்து கழுத்துமாலை, கை வளையல், கரண்டை வளையம் என்று பொறுமையாகச் செய்வாள். பருத்தித் துணிகள் மேல் வண்ணம் தீட்டி, சுருக்கெடுத்து இறுக்கிக் கட்டி, நீரில் தோய்த்து ‘பாட்டாக் பெயிண்ட்டிங் ‘ செய்வாள். சில சமயங்களில், ராஜுவும் உதவி செய்ய முயற்சிப்பான். சந்திராவின் கைவண்ணத்தில் இருக்கும் நுணுக்கம் அவனுக்கு வராது.

சந்திராவுடன் பேசிக் கொண்டே கடற்கரையில் நடப்பது நம்பிக்கனி அத்தைக்குப் பிடிக்கும். உலக விஷயங்கள் பற்றி உணர்ச்சியுடன் உண்மையுடன் பேசுவாள் சந்திரா. ஒரு நாள், பேச்சைத் திடாரென்று நிறுத்தி விட்டு மணலில் குனிந்து பார்த்தாள். காய்ந்த வைக்கோல் மாதிரிப் பரந்து கிடந்த தட்டை முள்புதர்கள் நடுவே ஒரு சிறு நீலப் பூ. ‘கடலோட நிறம் ஏதோ பட்டு நூல் வழியா இந்தப் பூவுக்கு வந்து சேர்ந்திருக்கு, அத்தை. ‘ தனக்கும் அவளுக்குமிடையே ஏதோ ஒற்றுமை இருப்பதாய் நம்பிக்கனி அத்தையின் உள்ளுணர்வு சொல்லியது.

ராஜுவுக்கும் சந்திராவுக்கும் அவள் அங்கே தங்கியிருப்பது பிடித்திருந்தது போலத்தான் தெரிந்தது. இதுவரை நம்பிக்கனி அத்தை தங்கி வந்த வீட்டவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். தான் கொஞ்ச நேரம் பேசி விட்டு, ராஜூ அல்லது சந்திராவிடம் கொடுத்து விடுவாள்.

ராஜுவும் சந்திராவும் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். எத்தனை உறவுகள். இதுவரை இருந்ததாகவே தெரியாத உறவுகள். தொலைபேசி முடித்ததும் கூப்பிட்டவர்களைப் பற்றிப் பேசுவதில் பொழுது கழியும். பாட்டுகள். கதைகள். சொந்த ஊர் ஞாபகங்கள். நிழலாய் இருந்த எல்லாவற்றுக்கும் நம்பிக்கனி அத்தை உயிரும் வடிவமும் கொடுப்பது போலிருந்தது.

கோடை விடுமுறையிலிருக்கும் டெய்ஸியும் வந்து சேர்ந்து கொள்வாள். வீட்டில் இன்னும் கொஞ்சம் கலகலப்பு கூடும். நிறைய நாட்கள் டெய்ஸி இந்த வீட்டில்தான் இருந்து சாப்பிடுவது போல் நம்பிக்கனி அத்தைக்குத் தெரிகிறது. இந்த வீட்டுப் பிள்ளை போல் உரிமையுடன்.

சில வாரங்கள் கழிந்ததும், நம்பிக்கனி அத்தை யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பேசுவது சந்திராவுக்குக் கேட்டது. ‘உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன், ‘ என்று தொலைபேசி முனையிடம் சொன்னாள் அத்தை. ‘ஓ, ரொம்ப நெருக்கடி நேரமா ? நான் ஏதாவது உதவி பண்ண முடியுமா ?……………சரி, இன்னொரு தரம் பார்க்கலாம். ‘

நம்பிக்கனி அத்தை தொலைபேசியைக் கீழே வைத்தாள். சுவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘நம்பிக்கனி அத்தை, ‘ என்றாள் சந்திரா, ‘உங்களுக்குப் போக இடமில்லை. அப்படித்தானே ? ‘

‘ஏதாவது இடம் கிடைக்கும், சந்திரா……. ‘

‘இங்கே இருங்களேன்… ‘

‘ஆயுசு பூரா இங்கேயே இருக்க முடியாதே….. ‘

‘ஏன் கூடாது ? ‘

‘காலப்போக்கிலே ஏதாவது காரணம் தெரியும், ‘ என்றாள் நம்பிக்கனி அத்தை.

‘இருங்க ‘ என்ற கெஞ்சல் பார்வையை வீசி விட்டு, சந்திரா ராஜுவுடன் கடைக்குப் போய்விட்டாள். புதுத் தயாரிப்புகளை நேர்த்தியாகக் கடையில் அடுக்கி வைக்கும் நாள்.

இஞ்சி மரப்பான் செய்து கொண்டிருக்கும் போது டெய்ஸி வந்து சேர்ந்தாள். ‘இந்தா ருசி பாரு. ‘ என்ன ஏதென்று கேட்காமல் பாகுக் கரண்டியை வாய்க்குள் வைத்துச் சப்பினாள் டெய்ஸி. ‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… ‘

‘பிடிச்சிருக்கா ? உறைக்கலியா ? ‘

‘பிடிச்சிருக்கு.. ‘

இஞ்சி மரப்பான் பாகைத் தாம்பாளத்தில் கொட்டினாள் நம்பிக்கனி அத்தை. வில்லைகளாக வெட்டும் அளவுக்குக் கெட்டியாகக் கொஞ்ச நேரமாகும். நம்பிக்கனி அத்தை தன் பெட்டியிலிருந்த பல்லாங்குழிப் பலகையையும் புளியமுத்துச் சுருக்குப்பையையும் எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு நடந்தாள். டெய்ஸி வழக்கம் போல் பேசிக் கொண்டே தொடர்ந்தாள்.

‘இது ‘மன்கேலா ‘ன்னு ஆஃப்ரிக்க விளையாட்டு, தெரியுமா நம்பிக்கனி அத்தை ? ‘

‘இது ‘பல்லாங்குழி ‘ன்னு எங்க ஊர் விளையாட்டு, சரியா டெய்ஸி ? ‘

‘நீங்க எப்பவும் இப்படித்தான், அத்தை. அன்னிக்குப் ‘பார்ச்சீஸி ‘யையும் உங்க ஊர் ஆட்டம்னு சொன்னீங்க…. ‘

‘அது தாயக்கட்டை. எங்க ஊர் ராஜா, ராணிகள் ஆடின ஆட்டம், டெய்ஸி. நம்பு. ‘

‘ஒரு வேளை, எல்லா ஊர்லேயும் ஒரே விளையாட்டு, பேர்தான் வேறயோ, நம்பிக்கனி அத்தை ? ‘

பல்லாங்குழி விளையாடும் போதும் வழக்கமான டெய்ஸி கேள்விகள். புளியமுத்து வைத்திருக்கும் சுருக்குப் பை பற்றி. புளி பற்றி. இளம் புளிய இலையைத் தின்னலாமா, விஷம் இல்லையா. புளியங்காயை ஓட்டோடு சேர்த்து, கல் உப்புத் தொட்டுத் தின்னலாமா, அது எப்படி. புளியமுத்து எங்கேயிருந்து வரும்.

ஓட்டை நொறுக்கி, புளியம்பழத்தை வெளியிலிழுத்து, கூரான நீண்ட ஊசியால் குத்திப் புளியமுத்தைப் வெளியே பிதுக்கி…… புளிக் குத்துவது பற்றி நம்பிக்கனி அத்தை சொல்லி முடித்திருக்கவில்லை. அதற்குள், ஒரு வெற்றுக் குழியைத் தடவி அடுத்த குழி முத்துக்களையும், அதற்கடுத்த வெற்றுக்குழியையும் தடவி அடுத்த குழியின் முத்துக்களையும் எடுத்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தாள் டெய்ஸி.

பல்லாங்குழியை ஒதுக்கினாள் நம்பிக்கனி அத்தை. ‘உன் வயசென்ன, டெய்ஸி ? ‘

‘எட்டு. ‘

‘எழுதத் தெரியுமா ? ‘

‘ம்ம். ‘

நம்பிக்கனி அத்தை ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பென்சிலையும் எடுத்து வந்தாள். ‘நான் சொல்றதை எழுது. ‘

சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். ‘அன்புள்ள அமராவதிக்கு, நாம் பேசி ரொம்ப நாளாகிறது……என்ன எழுதுறியா, டெய்ஸி ? ‘

தரையில் மண்டி போட்டு உட்கார்ந்து நாக்கைத் துருத்தியபடி எழுதிக்கொண்டிருந்த டெய்ஸி நிமிர்ந்து பார்த்தாள். ‘ஆமா. ‘

நம்பிக்கனி அத்தை கடிதத்தைத் தொடர்ந்தாள்: ‘ஆனால் உன்னிடம் நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். நாம் கடைசியாகச் சந்தித்த போது, நீ என்னிடம் சொல்லியது பற்றி எனக்கு ரொம்பக் கோபம். நான் எதைப் பற்றிச் சொல்கிறேன் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். ‘

‘உங்க கையிலே என்ன இருக்கு, நம்பிக்கனி அத்தை ? ‘

‘சின்ன பர்ஸ். எங்கப்பா குடுத்தது. ‘

‘உள்ளே பணம் இருக்கா ? ‘

‘செல்லாத காசு மூணு இருக்கு, ‘ என்றாள் நம்பிக்கனி அத்தை. ‘சரி, எழுதலாமா ? ‘

‘நீங்க எழுதுற அமராவதி எங்கே இருக்காங்க ? ‘

‘எனக்குத் தெரியாது. அவ செத்துப் போய் ரொம்ப வருஷம் ஆகுது, டெய்ஸி. ‘

‘செத்தவங்களுக்கு எழுத முடியாது, நம்பிக்கனி அத்தை. ‘ டெய்ஸி பென்சிலைக் கீழே வைத்தாள்.

‘செத்தவங்களாலே வாசிக்கத்தான் முடியாது. எழுதுறத எம்பாட்டிலே நான் எழுதலாம். அந்தத் தாளை இப்படிக் கொண்டா, பார்ப்போம். ‘

ஓரத்தில் வரைந்த ஒரு டெய்ஸிப் பூவுடன், பென்சில் அழுந்தப் பதியாதக் குழந்தைக் கையெழுத்தில் ‘டெய்ஸி டெய்ஸி டெய்ஸி ‘ என்றிருந்தது கடிதம்.

‘இஞ்சி மரப்பான் இறுகியிருக்கும். வில்லையா வெட்டுவோம், வர்றியா டெய்ஸி ? ‘ என்று எழுந்தாள் நம்பிக்கனி அத்தை.

* * * * *

அடுத்த நாள் காலையில் பர்ஸைக் காணவில்லை. நம்பிக்கனி அத்தை வீடெங்கும் தேடிப் பார்த்தாள். மனதுள் பதற்றம். ‘ஐயோ, அப்பா ஞாபகமா அம்மா குடுத்த பர்ஸ்… ‘

ராஜுவும் சந்திராவும் சேர்ந்து தேடினார்கள். ‘இங்கேதான் எங்கேயாவது இருக்கும், நம்பிக்கனி அத்தை. ‘

மூன்று பேரும் சோஃபாவுக்கும் மேசைகளுக்கும் அடியே துழாவித் தேடிக் கொண்டிருக்கும் போது டெய்ஸி வந்து சேர்ந்தாள். பெரியவர்கள் எல்லாரும் தரையில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்தாள்.

ராஜு தலையை நிமிர்த்திக் கேட்டான்: ‘அத்தை பர்ஸைப் பார்த்தியா, டெய்ஸி ? ‘

‘இல்லை. ‘

டெய்ஸியின் பதில் வந்த வேகமும் தொனியும் சரியில்லை என்று நினைக்கிறாள் நம்பிக்கனி அத்தை. மனதுக்குள் ஒரு மெல்லிய ஏமாற்றம்–டெய்ஸி அன்புடன் ஒட்டிக் கொண்டதாய் நினைத்தது தப்புதானா. ‘டெய்ஸி….. ‘ என்று மென்மையாய்த் தொடங்குகிறாள்.

‘பர்ஸ் எங்கிட்டே இல்லேன்னு சொன்னேனா இல்லையா ? இல்லே, இல்லே, இல்லே… ‘ கத்திக் கொண்டே டெய்ஸி ஓடும் போது நம்பிக்கனி அத்தை நெஞ்சு அடித்துக் கொண்டது. தலை சுற்றுவது போலிருந்தது. அருகிலிருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

அவளுக்கென்று சொந்தமான சுவர்கள் அந்தப் பர்ஸின் சுவர்கள் மட்டும்தான். அதுவும் இல்லாமல் வாழ்வைத் தொடர்வதை நினைத்தால் பயமாக இருந்தது. இங்கிருந்து ஓடி விட வேண்டும் போலிருந்தது. ஆனால், பர்ஸை விட்டு விட்டு எப்படிப் போவது.

‘நம்பிக்கனி அத்தை…. ‘ சந்திரா அவளை அணைத்து உட்கார வைக்கிறாள்.

‘டெய்ஸி நல்ல பொண்ணு…….எங்க மக மாதிரி……ஏதோ விளையாட்டாப் பண்ணியிருப்பா….. ‘ ராஜுவின் குரல் ஏன் உடைகிறது என்று நம்பிக்கனி அத்தைக்குப் புரியவில்லை.

சந்திரா எழுந்து அறைக்குப் போய் மீண்டும் வந்து ராஜுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். கையில் ஒரு சின்ன புகைப்பட ஆல்பம். நம்பிக்கனி அத்தையிடம் காண்பிக்கிறாள். அவர்கள் மகனின் வெவ்வேறு பருவங்களில் எடுத்த படங்கள். ஆறு வயதிற்குள் எத்தனை பருவங்கள் இருக்க முடியுமோ அத்தனை பருவங்களிலும் எடுத்த படங்கள். சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்தது மூளைக்குப் பரவி இரண்டே நாட்களில் அவன் இறந்து போவதற்கு முன்பு.

நம்பிக்கனி அத்தை விக்கித்துப் போனாள். எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. சிரிப்பும் பாட்டும் வெறும் வெளிப்பூச்சுதானா. உள்ளே மருகி மருகித் தேய்ந்து ஓட்டை விழுந்த மனங்கள்தானா, தன்னை மாதிரியே.

நம்பிக்கனி அத்தைக்கு அவர்களிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டும் போலிருந்தது. ‘என் பிள்ளைகளும் கூட இப்போது என் மனதில் வெறும் வடிவமற்ற ஓட்டைகள்தான். தெரியாதவர்களை உறவினர்களென்று சொல்லி எப்படியோ காலம் தள்ளுகிறேன். தனபாக்கியம் உள்பட எல்லாரின் சொந்தங்களையும் நானும் சொந்தமாக வரித்துக் கொள்கிறேன். அவர்கள் கதைகளே என் கதைகள். அவர்களின் அடையாளங்களே என் அடையாளங்கள். அவர்கள் தொலைபேசிப் புத்தகத்தில் பதிவான எண்களே என் வழிகாட்டிகள். ‘

‘சந்திரா, ராஜு, உங்ககிட்டே நான் ஒண்ணு சொல்லணும்…. ‘ நம்பிக்கனி அத்தை ஆரம்பிக்கிறாள்.

‘எங்களுக்குத் தெரியும் அத்தை, ‘ கண்ணீர்க் கறை இன்னும் உலராத குரலில் சந்திரா சொன்னாள், ‘எங்களோடவே இருக்கச் சொன்னோமே…. அப்பவே…… நீங்க எங்களுக்குச் சொந்தம் இல்லைன்னு. டெய்ஸியை மாதிரியே. ‘

டெய்ஸி உள்ளே வந்தாள். முகம் வீங்கியிருந்தது. நம்பிக்கனி அத்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அத்தை கையை இழுத்து உள்ளங்கையில் பர்ஸை வைத்தாள். ‘நீங்க போறதா ஃபோன்லே பேசிக்கிட்டிருந்தீங்களே அன்னிக்கு….. உங்க ஞாபகமா இருக்கட்டும்னு….. ‘

Print Friendly, PDF & Email

1 thought on “ஓட்டைக் காலணாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *