காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த மருமகளிடம் கேட்டார்.
வேணாம், வேணாம், நீங்க வந்தப்புறம் பாத்துக்கலாம், இப்ப வெயிலு அதிகமா இருக்கே, கொஞ்சம் தாழ்ந்தொன்ன போக கூடாதா? வேணாம், வேணாம், மூணு மணிக்குள்ள ட்ரசரி ஆபிசுக்குள்ள இருக்கணும், இல்லையின்னா நாளைக்கு வர சொல்லிடுவான்.இப்பவே நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடுவேன், வயசாச்சில்ல, சொல்லியவாறே நடக்க ஆரம்பித்தார்.
நரசிம்மன் நடக்க ஆரம்பித்தார். காலிய வெயில் நேரடியாக முகத்தை தாக்க, ஒரு கையால் தடியையும் ஊன்றிக்கொண்டு மறு கையால் சூரிய ஒளியை கண்களின் மேல் விழாமல் நடக்க மிகுந்த சிரமப்பட்டார். என்ன செய்வது? இந்த ஓய்வு ஊதியம் வந்தால்தான், இவர்கள் மூவருக்கும் இந்த மாத ஓட்டம் இருக்கும். இதுவும் இல்லை என்றால் இவர்கள் கதி ? ஏதோ பிரிட்டிஷ்காரன் இந்த சட்டம் கொண்டு வந்ததால் நமக்கு பிரயோசனமாயிருக்கிறது.
வீட்டுக்கு வந்திருக்கும் பதினேழு வயது மருமகள் என்ன செய்ய முடியும்? இவளை கட்டி வந்த மகனுக்கு ஒரு வருசம் சினிமா கம்பெனியில் வேலை இருந்தது. இப்பொழுது ஆறு மாசமா வீட்டுல இருக்கறான், வேலையும் எங்கேயும் கிடைக்க மாட்டேங்குதே. காலையில பேட்மிண்டன் விளையாட கிளம்புனானா பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்கு வர்றான். இப்ப நான் கிளம்பற வரைக்கும் வர்லையே. வயசு இருபத்தி அஞ்சுக்கு மேல ஆச்சு, ஒரு பொண்ணை கட்டிட்டு வந்திருக்கமே அவளுக்காகாவது வேலைக்கு எங்காவது முயற்சிக்கலாமில்லையா?
இவன் இப்படி இருக்கறதுக்கு நாமதான் காரணம், அவர் மனம் அடித்து சொன்னது. வரிசையாய் நாலு பெண்களை பெத்து, ஆம்பளை புள்ளை வேணும்னு அம்பது வயசுல இவனை பெத்தோம். அதனால இவனம்மா இவனுக்கு செல்லத்தை கொடுத்து கெடுத்துட்டா. இதுல சைக்கிள்ல எங்கேயோ போய் மோதி காலையும் உடைச்சு, காலை திரும்பி கொண்டுவந்ததே அந்த இங்கிலீஷ் டாக்டர் புண்ணியதுனாலதான். அதுல இருந்து இன்னும் செல்லம்.
அலுவலகத்துக்கு வந்த சேர்ந்த பொழுது அங்கே இவரைப் போலவே நான்கைந்து வயது முதிர்ந்தவர்கள் அங்கங்கு கிடந்த கற்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர் உள்ளே சென்று அங்கிருந்த சிப்பந்தியிடம் தன் பென்ஷன் புத்தகத்தை நீட்டினார். அந்த புத்தகத்தை வாங்கிய சிப்பந்தி போய் வெளியே உட்காருங்க, பேர் சொல்லி கூப்பிடுவோம், அலட்சியமாக சொன்னான்.
மெளனமாய் கைத்தடியை ஊன்றி நடந்து வெளியே வந்தார். அவர் எண்ணம் மீண்டும் பழைய கால நினைவுகளுக்கு இழுத்து சென்றது. இருபது வருசத்துக்கு முன்னாடி இவன் இப்படி என் முன்னாடி உட்கார்ந்துட்டு பதில் சொல்லி இருக்க முடியுமா? நான் வந்தா இந்த பஞ்சாயத்து ஆபிசெல்லாம் கதி கலங்குமே.
கடைசியா டெபுடி கலெக்ட்ரா இருந்துதானே ரிட்டையர்டு ஆனோம்.. அப்ப எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருந்தோம். ம்..வெள்ளைக்காரன் அப்படி நமக்கு பவர் கொடுத்து வச்சிருந்தான்.
அப்ப அவன் கலெக்ட்ரா இருந்தானா? அப்பப்பா என்ன கண்டிசன்
அவனுக்கு எல்லாமே கரெக்டா இருக்கணும். டாண்ணு ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு ஆஜர் கொடுத்துடணும். அவன் கிட்டே வேலை செய்யற வரைக்கும் நேர்மையாத்தான வேலை செஞ்சு கிட்டு இருந்தோம். ரிட்டையர்டு ஆகி போற போது கூட கையை புடுச்சு குலுக்கு குலுக்குனானே.
அப்படி நேர்மையா வாழ்ந்துதான் என்னத்த கண்டோம்? இதோ இருபது வருசத்துக்கு மேல இங்க வந்து பென்ஷன் வாங்கிட்டு போறதை தவிர!
என் பையனுக்கு கவர்ன்மெண்டல் ஒரு வேலை வாங்கி தர முடிஞ்சுதா? யார் கிட்டேயும் போய் கையேந்த மாட்டேன்னு சொல்லி அவனுடைய வாழ்க்கைய தொலைச்சதுதான் மிச்சம்.
ஊருக்கெல்லாம் உதவி பண்ணி என்ன பிரயோசன்ம்? வரிசையா நாலு பொண்ணுகளையும் அம்மை வந்து வாரி குடுத்துட்டு, அந்த ஏக்கத்துல இவளும் போய் சேர்ந்து இப்ப பையனும் நானும் அநாதையா இருக்க வேண்டியதா போச்சே.
அவனும் என்ன பண்ணுவான், காலு உடைஞ்ச பின்னால ஸ்கூலுக்கு போக வெட்கப்பட்டுகிட்டு சினிமா கம்பெனியில போய் சேர்ந்துட்டான். ஏதோ பாகவதர் கூட எல்லாம் பேசுவேன்னு சொல்லுவான். ம்..சினிமாவுல வேலை செஞ்சா படம் ஓடினாத்தானே சம்பளம். அதுக்கோசரமே வேலைய விட்டுட்டு இப்ப சிரமபடுறான்.
நல்ல வேளை என்னைய மாதிரி வரிசையா அஞ்சு பொண்ணை பெத்த வாத்தியாரு, சினிமாவுல வேலை செஞ்சா பரவாயில்லைன்னு மூத்த பொண்ணை இவனுக்கு கட்டிகொடுத்தாரு. இப்ப அந்த வேலையும் தொலைச்சுட்டு வந்து ஆறு மாசமா வீட்டுல இருக்கறான்.
நரசிம்மன், நரசிம்மன், அவரது பெயர் வாசிக்கப்பட்டு அவரது எண்ணங்களை தற்காலத்துக்கு இழுத்து வந்தது. கைத்தடியை ஊன்றி அந்த சிப்பந்தியை நோக்கி நடந்தார்.
இந்தாங்க உங்க பென்ஷன் அறுபது ரூபாயும், பன்னெண்டனாவும், அவர் கையில் வைத்து அந்த லெட்ஜரில் கையெழுத்தை பெற்றுக்கொண்டான்.
ஐம்பது வயது கணபதியப்பன் அம்மாவின் அறைக்குள் நுழைந்து சொல்லிக் கொண்டிருந்தார். நாளைக்கு அமாவாசை. சாயங்காலம் ஆபிசுல இருந்து வரும் போது அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் வேட்டி சட்டை எடுத்து வந்துடறேன்.
கட்டிலின் மேல் வயது முதிர்ந்து படுத்து கிடந்த பாக்கியத்துக்கு அவர் சொன்னது புரிந்ததோ என்னவோ அவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளின் தலைமாட்டின் மேல் மாமனார் படமும், கணவன் படமும் மாட்டியிருந்தது.