ஓடிப்போயிடலாமா..? !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 4,413 
 

அந்த கோவிலின் ஓரம் உள்ள இருட்டு பிரகாரத்தில் அருகருகே அமர்ந்திருந்த அந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இருவருக்குள்ளும் பயம் பந்தாக சுருண்டு , மனதில் உருண்டு தொண்டை வரை வந்து வலியை ஏற்படுத்தியது.

அதிகம் பயந்து போன முகத்துடன் தன்னோடு ஒட்டிக்கிடந்த காயத்திரியைப் பார்க்கப் பாவமாக இருந்தது வாசுவிற்கு.

” காயத்திரி..! இந்நேரம் நம்ம விசயம் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்கும் ! ” – முணுமுணுத்தான்.

‘ ஆமாம் ! ‘ என்பதற்கு அடையாளமாய் கிலியுடன் தலையாட்டினாள் அவள்.

அவள் பதிலில் சிறிது நேரம் மெளனமாக இருந்த வாசு திடுதிப்பென்று…

” காயத்திரி ! நாம ரெண்டு பேரும் ஓடிப்போயிடலாமா..? ” – கேட்டான்.

அவன் சொன்னதை ஜீரணிக்க முடியாதவள் போல் அவனை மிரட்சியுடன் பார்த்தாள் காயத்ரி.

” காயத்ரி ! எப்படியும் உன்னோட அம்மாவும் அப்பாவும் நம்மைத் தேடுவாங்க. மாட்டிக்கிட்டா நாம க்ளோஸ். இதிலேர்ந்து தப்பிக்கனும்ன்னா கண்டிப்பா நாம ஓடிப்போறதைத் தவிர வேற வழியே இல்லே..” நிலமையைப் புரியும்படி சொன்னான் வாசு.

காயத்ரிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது.

” ஆமாம் வாசு. நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க நம்மை ரொம்ப எதிர்பார்ப்போட வளர்க்கிறாங்க. அவுங்க எதிர்பார்ப்பு நம்மிடம் கிடைக்கலை என்கிறபோது எவ்வளவு வேதனை, ஆத்திரப்படுவாங்க. வேணாம் வாசு. நாம இந்த ஊரிலேயே இருக்க வேணாம். நீ சொல்ற மாதிரி கண்காணாத இடத்துக்கு ஓடிப்போயிடலாம். ஆனாலும்… எனக்கென்னமோ பயமா இருக்கு வாசு. நம்ம எதிர்வீட்டு வாண்டு இருக்கானே… அவன் நம்மை அங்கேயேப் பார்த்துட்டான் வாசு. இந்நேரம் அவன் என் அம்மா அப்பாகிட்ட கண்டிப்பா வத்தி வைச்சிருப்பான். அவுங்க நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இந்த இடத்தை விட்டு ஓடிப்போயிடலாம். அதான் நல்லது. ” என்றாள் தீர்மானமாக.

இருவருக்கும் பனி விலகுவது போல பயம் களைய… எழுந்து தூசி தட்டி.. கைகளைக் கோர்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் .

அதேநேரம்….வீட்டில்

காயத்திரியின் அம்மாவிற்குக் கன்னத்தில் பளீரென்று அறை விழுந்தது. அறைந்தவர் அவளின் அப்பா சிவராமன்.

ஆள் முகம் முழுதும் கோபம் கொப்பளிக்க , கண்கள் சிவக்க…… ருத்ரதாண்டவ மூர்த்தியாய் மாறி இருந்தார்.

கலவரமடைந்த முகத்தில் பலத்த அறை ஏற்படுத்திய வலியினால் பொறிகலங்கிப் போன ஜானகி கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள் .

” நீ பொண்ணு வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்த்தியா..? ஓடிப் போயிட்டாளாம்.. ! அவமானமா இல்லே…?! பொட்டப்புள்ளையாச்சே… அம்மா பொறுப்புல வளரட்டுமேன்னு விட்டா வளர்த்த லட்சணத்தைப் பாரு. இப்போ எங்கேடிப் போய் தேடுறது..? அவளை சொல்லிக் குத்தமில்லேடி. எல்லாம் அவன் குடுத்த தைரியம்தான் அவளை இப்படியெல்லாம் நடக்கச் சொல்லுது….”

” நான் ஆரம்பத்துலேயே சொன்னேன். உன் அண்ணன் பையனை நம்ம வீட்டில தங்கி படிக்க வைக்க வேணாம் , வேண்டாத தொந்தரவு வரும்ன்னு சொன்னேன். கேட்டியா நீ..? அண்ணன் வாழற கிராமத்துல படிக்க வசதி இல்லே. அதனாலே நம்ம கூடவே இருந்து படிக்கட்டும் சொன்னே. இப்போ என்னாச்சுப் பார்த்தியா..? ”

ஜானகி மௌனம் சாதிக்க… சிவராமன் விடுவதாய் இல்லை.

” நான் காலையில எட்டு முப்பதுக்கு அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்னா வீடு வந்து சேர மணி ராத்ரி எட்டு. இவுங்களைக் கவனிக்க எனக்கு எங்கே நேரம் இருந்துது. நான் இவுங்களைக் கண்காணிச்சிருந்தேன்னா இப்படி நடக்க விட்டிருப்பேனா..? எல்லாம் என் தலையெழுத்து. அனுபவிக்கணும்ன்னு இருக்கு.” விசனப்பட்டார்.

ஜானகியால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை.

” ஐயோ..! நான் செய்த தப்புக்கு என்னை அடிங்க, உதைங்க. ஆனா… சீக்கிரம் அவுங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டு அப்புறம் என்னை என்ன வேணும்ன்னாலும் செய்ங்க. போங்க…. அவுங்க ரெண்டு பேரும் இந்த ஊரை வீட்டுப் போறதுக்குள்ள தேடி கண்டு பிடிங்க….” கதறினாள்.

சிவராமனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

‘ கொஞ்சம் தாமத்தித்தாலும் அவர்கள் இந்த ஊரைவிட்டே போய் விடலாம் ! ‘ என்கிற எண்ணம் வர… சுறுசுறுப்பானார்.

வெளியே பறந்தார்.

” கொஞ்சம் இருங்க..” ஜானகி நிறுத்தினாள் .

நின்றார்.

” நான் பேருந்து நிலையம் போறேன். நீங்க ரயில்வே நிலையம் போங்க. ஒன்னு அவுங்க பேருந்துல போகணும் இல்ல ரயில்ல போகணும். இது ரெண்டை விட்டா வேற வழி இல்லே. இதனால அவுங்க எப்படியும் நம்ம கையில சிக்கிடுவாங்க. அப்புறம்…. அவுங்களை நீங்க கண்டுபிடிச்சிட்டா உடனே உங்க ஆத்திரம், கோபத்தையெல்லாம் அங்கேயே கொட்டித் தீர்க்க வேணாம். நல்லத்தனமாய்ப் பேசி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வாங்க ” என்று படபடவென்று பொரிந்து விட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் பேருந்து நிலையம் நோக்கி ஓடினாள்.

சிவராமன் மனைவியின் சமயோஜித புத்தியை நினைத்து மனசுக்குள் பாராட்டியவாறே ரயில் நிலையம் நோக்கி தன் இரு சக்கர வாகனத்தை விட்டார்.

அந்த ரயில்நிலையம் ஹாவென்று கிடந்தது.

இன்னும் ஒன்பது மணி கடைசி ரயில் வந்த பாடில்லை என்பதால் பயணிகள் அன்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்தனர்.

சிவராமன் தேடிக்கொண்டே சென்றார்.

கடைக்கோடி ரயில்வே பெஞ்சில் ஒண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த அவர்களைப் பார்த்ததும் இவருக்கு நெஞ்சில் பால் வார்த்தது.

‘ ரயில் வருகின்றதா..? ‘ என்று கிழக்கு திசையையேப் பார்த்துக் கொண்டிருந்த வாசுவும் காயத்திரியும் இவர் வருவதைக் கவனிக்கவில்லை.

எதிர்பாராத விதமாக பின்னால் திரும்பிப் பார்த்த வாசு….. சிவராமன் அருகில் வருவதைக் கண்டதும் காயத்திரியை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்க… இவர் இருவரையும் சட்டென்று தாவிப் பிடித்துக்கொண்டார்.

அப்பாவைப் பார்த்துவிட்ட பயத்தில் காயத்ரி அழ ஆரம்பித்தாள்.

வாசுவிற்கும் பயத்தில் கை கால்கள் வெடவெடத்தது.

‘ நல்லவேளை கிடைத்து விட்டார்கள் ! ‘ என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட சிவராமன் …

” ஏன் அழறே..? நீ அஞ்சாம் வகுப்புலேயும் வாசு எட்டாம் வகுப்புலேயும் பெயிலாகிட்டதால் வீட்டுல சொன்னா அடி கிடைக்கும்ன்னு பயந்துக்கிட்டு எங்காவது ஓடிப்போயிடலாம்ன்னு பேசிக்கிட்டிருந்ததை எதிர் வீட்டு பையன் பாண்டியன் சொன்னான். படிப்புல பெயிலாவுறது சகஜம். இந்த வருசம் பெயிலானால் அடுத்த வருசம் பாஸாகிடலாம். இதுக்குப் போய் யாராவது இப்படி ஓடிப்போவாங்களா..? நான் உன் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன் கவலைப் படாதே. வா. ” என்றவாறு இருவரையும் வாஞ்சையுடன் அணைத்துக்கொள்ள…

பயம் நீங்கிய வாசுவும் காயத்திரியும் கோழிக்குஞ்சுகளாய் அவரது கைக்குள் அடைக்கலம் ஆனார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *