ஓடிப்போனவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 6,329 
 
 

வெளியே போன ஆள் இரண்டு நாளாக வீடு திரும்பவில்லை என்ன ஆனார், எங்கே போனார் என்று தவித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது,

‘‘கேட்டியாக்கா சேதிய. நீ தேடிக்கிட்டிருக்கிற அந்த மனுசன்… அதான் உன் புருசன் டவுன்ல ஒரு சிறுக்கி வீட்டுல இருக்கார். அதை என் கண்ணால பார்த்தேன். அக்கம் பக்கம் விசாரிச்சேன். ரொம்ப நாளாத் தொடுப்பாம். இப்போ நெரந்தரமா வந்து தங்கிட்டதா சொன்னாங்க. என்ன அநியாயத்தைப் பார்த்தியாக்கா ?’’ செண்பகம் இப்போதுதான் இடியை இறக்கி விட்டுப்போனாள்.

செண்பகம் அடுத்தத் தெரு. இவளுக்கு ஆத்மார்த்த தோழி. பொய் சொல்ல மாட்டாள்.

தமிழ்ச்செல்விக்கு இது பெரிய அடி. தன் கதி ? உறைந்து அமர்ந்தாள். ஐந்து நிமிடத்திற்கு மேல் அழுத்தம் தாளமுடியவில்லை. உள்ளுக்குள் வெள்ளம் புரண்டு அது கண்கள் வழி கசிய….

‘‘போய்ட்டான். என்னையும் என் ரெண்டு புள்ளைகளையும் அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டான். !‘‘ ஓவென்று ஒப்பாரி வைத்து சத்தமிட்டாள்.

அடுத்த அறையில் இருந்த கணேஷ் தினேஷீக்கு தாயின் அழுகுரல் அதிர்ச்சி அளித்தது. வயதுக்கு வந்த பிள்ளைகள். பதறிக் கொண்டு வந்தார்கள்.

‘‘என்னம்மா ஆச்சு ?’’ எதிரில் வந்து ஆளாளுக்குக் கேட்டார்கள். தமிழ்ச்செல்விக்கு மகன்கள் வந்து கேட்டதும் துக்கம் ஆறாகப் பெருகியது.

‘‘நான் என்னனத்தைச் சொல்வேன் தம்பிகளா உங்க அப்பன் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டார்டா…’’ ராகம் வைத்து அழுதாள்.

‘‘எங்கேம்மா ?’’ – ‘ மேலேயா ?! ’ இவர்களுக்குள் கலவரம்.

‘‘டவுன்ல யாரோ ஒரு தட்டுவாணியோட குடித்தனம் நடத்துறாராம்.’’

‘அப்பா உயிரோடு இருக்கிறார் ! – என்பதில் இவர்களுக்குத் திருப்தி. அதே சமயம் அம்மாவுக்குத் துரோகம். ஆத்திரத்தை அளித்தது.

‘‘விலாசத்தைச் சொல். நாங்க போய் இழுத்து வர்றோம் ! ’’ தினேஷ் துடித்தான்.

கணேஷீக்கும் சகிக்க முடியவில்லை.

‘‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதம்மா. நாங்க போய் அப்பாவை மட்டும் இழுத்து வராம அவளையும் நாலு சாத்து சாத்தி பேயை ஓட்டி ஊரைவிட்டே துரத்திட்டு வர்ரோம்.’’ என்றான்.

‘இளங்கன்று பயமறியாது. இவர்கள் ஆத்திரம் ஆபத்தானது. அப்பன் பிள்ளைகளுக்குள் கை கலந்தால் ?’ நினைக்க சொரக்கென்றது, அந்த நிலையிலும் சுதாரித்தாள்.
‘வேணாம் !’ அவசரமாகத் தலையசைத்து மறுத்தாள்..

‘‘ஏம்மா ?’’

‘‘அவர் பார்க்கத்தான் பதிவிசு. புடிச்சா முரண்டு. கோபம் வந்தா தலைகால் தெரியாது.’’ சொன்னாள்.

‘‘அதனால என்னம்மா ?’’

‘‘வேணாம்ப்பா விபரீதம். அவர் எக்கேடாவது கெட்டுப் போறார். தலைக்கு உசந்த புள்ளைங்க நீங்க வீட்டுல இருக்கும் போது எனக்கு என்ன கவலை ?’’ என்றாள்.

அது இவர்கள் மண்டையில் நச்சென்று அடித்தது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழித்தார்கள்.

‘‘அம்மா….’’ கணேஷ் ஏதோ சொல்ல வாயெடுத்தான். தமிழ்ச்செல்வி சொல்லவிடவில்லை.

‘‘நமக்குத் தின்ன சோறில்லையா ? இருக்க இடமில்லையா ? எல்லாம் இருக்கு. அவர்தான் அனாதை.! கெட்டு முறிஞ்சு திரும்பம்போதுதான் பேசிக்கலாம்.’’ சொல்லி ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் கண்களைத் துடைத்து அவிழ்ந்திருந்த கூந்தலைக் கொண்டையிட்டாள்.

கணேஷ் தினேஷிற்கு அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றவில்லை. நகர்ந்தார்கள். ஆனாலும் அப்பாவா இப்படி ?! அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குடும்பத்தில் எவ்வளவு அன்பு பாசம். எதுக்கும் கவலைப்படாதவர். யார் தப்பு செய்தாலும் கோபப்படாமல் தவறைச் சுட்டிக்காட்டி அன்பால் திருத்துபவர். அவர் எப்படி இப்படி ? அம்மாவிடம் என்ன குறை. அவர்களுக்குள் யோசனை ஓடியது.

தமிழ்ச்செல்விக்குப் பிள்ளைகளைச் சமாதானப் படுத்திவிட்டோம் என்ற நினைப்பிருந்தாலும் பாவி மனுசன் நம்ம தலையில இப்படி ஒரு கல்லைத் தூக்கி போட்டுட்டுப் போயிட்டாரே. அழுகை ஆத்திரம் ஒரே உறுத்தலாக இருந்தது. இறுக்கமாக இருந்தாள். சோர்ந்து சோர்ந்து அமர்ந்தாள்.

கணேஷ் தினேஷீக்கு அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது, தனியே இருந்தால் துக்கம்…. தற்கொலை செய்து கோள்வாளோ என்று பயம் வந்தது.

‘‘நாங்க இருக்கோம் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா !’’ வீட்டை விட்டு அவர்கள் அநாவசியமாக வெளியே செல்லாமல் ஆளாளுக்கு ஆறுதல் சொல்லி காவலிருந்தார்கள்.

படிக்கக்கூட செய்யாமல் வீட்டில் ஒரு நிமிடம் தங்காமல் கயவாளித்தனமாய் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இப்படி இருக்கிறார்களே…. !! தமிழ்ச்செல்விக்கு நம்பவே முடியவில்லை.

பத்து நாட்களுக்குப் பின் ஒரு நாள்.

தூரத்தில் வீட்டை நோக்கி வரும் தனஞ்செயனைப் பார்க்க கணேஷ் தினேஷீக்கு ஆத்திரம் வந்தது.

‘‘அம்மா…!’’ தினேஷ் அடித்தொண்டையில் அழைத்தான்.

‘‘என்னடா ?’’ அவள் அவர்கள் அருகில் வந்தாள்.

‘‘அங்க பார்;. அந்த ஆள் உன் புருசன் வர்றார். அவர் வீட்டுக்குள்ளே நுழையக் கூடாது ஆமா..’’ கணேஷ் எச்சரித்;தான்.

கணவர் வருவதைப் பார்த்த தமிழ்ச்செல்விக்கு உள்ளுக்குள் சொரக்கென்றது. சடக்கென்று அவர் மேல் ஆத்திரம் வெறுப்பு வந்தாலும்…. ‘எப்படி தடுக்க ? வயசுக்கு வந்த பிள்ளைகள் ஆத்திரத்தில் அப்பா மேல் கை நீட்டி விட்டால்…..! ‘ நினைக்க குலை நடுங்கியது. அவளுக்குள் யோசனை வந்தது.

‘‘அவர் வீட்டுக்கு வர்றதை நாம எப்படிப்பா தடுக்க முடியும் ? ’’ சொன்னாள்.

‘‘அப்போ அவரை மன்னிக்கப் போறீயா ?’’

‘‘மன்னிச்சுட்டியா ?’’ இருவரும் மாறி மாறி கேட்டு தாயைச் சந்தேகமாகப் பார்த்தார்கள்.

‘‘கெடையாது !!’’ தமிழ்ச்செல்வி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

‘‘என்ன செய்யப் போறெ ?’’

‘‘வீட்டுக்கு வர்றவரை வான்னு கூப்பிடமாட்டேன். ஒரு வார்த்தை பேசமாட்டேன். நீங்களும் அப்படியே இருங்க. ஒருத்தன் தன் சொந்த வீட்டிலேயே யாரும் முகம் குடுத்துப் பேசாம அனாதையாய் இருக்கிறது மகா கொடுமை. நரகம் வேறெதுவும் கெடையாது. அவர் இங்கே அப்படி இருக்கனும் அதான் அவருக்கு நாம அளிக்கிற தண்டனை.’’ என்றாள்.

இவர்களுக்குத் திருப்தியாக இருந்தது. ஆனாலும் அப்பாவின் முகத்தைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்க வில்லை. எதிரெதிரில் பார்த்தால் முட்டிக்கொள்வோம் என்ற பயம் வந்தது.

‘‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் புடிக்கலை. அப்புறம் வர்றோம் ’’ தினேஷ் சொல்லி விட்டுப் புறப்பட… கணேஷீம் அவனுடன் வெளியேறினான்.

தனஞ்செயன் வீட்டில் நுழைந்தார்.

தமிழ்ச்செல்வி கணவர் முகத்தைக்கூட பார்க்க விருப்பப்படாமல் பேசாமல் அறையில் போய் அமர்ந்தாள்.

இவர் கூடத்து சோபாவில் அமர்ந்தார். மனைவியின் முதுகு தெரிந்தது. கோபம் புரிந்தது,

ரொம்ப நேர மௌனத்திற்குப் பிறகு…. ‘‘செ..ல்வி !’’ அழைத்தார்.

அவள் திரும்பிப் பார்க்கவில்லை. வாயையும் திறக்கவில்லை.

‘‘உன் கோபம் எனக்குப் புரியுது, என்னைப் பார்க்கப் புடிக்கலை பேசப் புடிக்கலைன்னாலும் நான் சொல்ற உண்மையைக் கேட்டுக்கோ. வயசுக் கோளாறு புள்ளைங்க பொண்ணுங்க பின்னால சுத்துறதா எனக்குக் கேள்வி. உனக்கும் தெரிஞ்ச விசயம். தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளைங்க. கண்டிச்சா கோபம் வரும் இல்லே மனசு உடையும். இல்லே தாண்ட சொல்லும்… தீவிரமாகும். உனக்கு எப்படியோ ஆனா எனக்கு இவனுங்களை எப்படி வலி இல்லாம திருத்தனுமன்னு ஒரே யோசனை குழப்பம் அப்போதான் எனக்கு நாமே இப்படி ஓடிப்போய் அவனுங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தாலென்னனு யோசனை வந்ததுது. அலசிப் பார்த்தேன். திருந்த வாய்ப்பு நிறைய இருந்தது. செய்ஞ்சேன்.’’

‘‘அதுக்காக தப்பு செய்ஞ்சிட்டு திரும்பி இருக்கேன் அதுக்கு சமாதானம் சொல்றேன்னு நெனைக்காதே. உண்மையைச் சொல்றேன் உன் புருசன் என்னைக்கும் யோக்கியம். பின்னே எப்படி செண்பகம் சொன்னாள்ன்னு யோசிக்கிறீயா ? அது நாடகம். அவள்கிட்ட மொத்த விசயத்தையும் சொல்லி நான் இப்படி போய்ட்டதா உன்கிட்ட போட்டு விடு நான் பத்து நாள் ஒரு லாட்ஜ்ல தங்கி தலைமறைவா இருந்து வர்றேன்னு சொன்னேன். அவள் அப்படியே போட்டு விட்டாள். நான் தங்கி வர்றேன். உனக்குச் சந்தேகமா இருந்தா அவள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. அப்படியே நாடகத்துக்கு நன்றி புள்ளைங்க திருந்திட்டாங்கன்னு சொல்லு. நான் உன்கிட்ட உண்மையைச் சொல்லி தலைமறைவாகி இருக்கலாமேன்னு நீ நெனைக்கலாம். உனக்கு நடிப்பு வராது. துடிப்பு தத்ரூபமாக இருக்காது. அதான் அப்படி செய்யலை.’’ சொன்னார்.

உண்மை தமிழ்ச்செல்வியை நெகிழ்த்தியது. ‘‘அத்தான் !’’ தழுதழுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *