ஓங்கிய கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 7,824 
 

இடி இடித்தது. இடையறாது பொழிந்தது. சமையல் அறையிலிருந்துதான்.

தினசரியை முகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டிருந்தவன், கண்கள் வேலை செய்யும்போது இந்தக் காதுகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டால் என்ன என்று யோசித்தான்.

ஆயிற்று, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இந்த மாதிரி ஏதேதோ பயனற்ற யோசனைகள். ஆனால், தனது பிரச்னைக்கு உருப்படியாக ஒரு தீர்வுகாணத் தெரியவில்லை!

`பொண்ணு நம்ப கைலாசத்தைவிட பத்து வயசு பெரியவளா இருக்காளே!” என்று அம்மா முதலில் தயங்கியது இப்போது நினைவுக்கு வந்தது.

ஒரு முறை பார்த்தவுடனேயே, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்திராத நிலையில், செல்லத்திடம் ஏதோ கவர்ச்சி ஏற்பட்டிருந்தது அந்தப் பருவத்தில். அவள் ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக… அவனுக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஒரே ஒற்றுமை அவனும் ஒல்லி என்பதுதான்.

அவள் ஏழையாக இருந்தால் என்ன! அவன்தான் கைநிறைய சம்பாதிக்கிறானே!

அப்பா ஏதேனும் ஆட்சேபம் சொல்லிவிடப் போகிறாரே என்று மனம் பதைத்தது. நல்ல வேளை, `வயசு வித்தியாசம் குறைச்சலா இருந்தாத்தான் கவலைப்படணும். அந்தப் பொண்ணு முப்பத்தஞ்சு வயசிலேயே இவனுக்கு அக்கா மாதிரி, வயசானவளா ஆகிடுவா. இப்போ, இவனும் அவளைக் குழந்தைமாதிரி பாத்துப்பான்!’ என்று, அப்பாதான் அந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுத்தார்.

உலகத்திலேயே காணக் கிடைக்காத மனைவி தனக்கு வாய்த்துவிட்டதைப்போல் நடந்துகொண்டான் கைலாசம்.

செல்லத்திற்கோ, தான் சுலபமாகக் கிடைக்காத ஒரு அரிய ஜன்மம், அதுதான் இப்படி மேலே விழாத குறையாகத் தன்னை இவருக்கு மணமுடித்திருக்கிறர்கள் என்ற கர்வம்தான் வந்தது.

`கல்யாணம்தான் ஆகிவிட்டதே, இனியும் என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது!’ என்ற அலட்சியப் போக்கால், இரு பிள்ளைகளுக்குப் பிறகு, இருபது கிலோ கூடினாள்.

பார்ப்பவர்களிடமெல்லாம், `எனக்கும் அப்பா இருந்திருந்தா, என்னை இப்படி இவருக்குக் குடுத்திருப்பார்களா? கல்யாண சமயத்திலேயே இவருக்கு தலை நரைச்சிருந்தது! முன் நெத்தியில வழுக்கை வேற!’ என்று பொருமுவாள்.

கைலாசத்துக்குத் தலைகுனிவாக இருந்தது. தலை நரைத்துவிட்டதாமே! முப்பத்து இரண்டு வயதுவரைக்கும் அவனுடைய சம்பாதித்தியத்தை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு ஊரார் வாய்க்குப் பயந்து பெற்றோர் தம் மகனுக்கு ஒரு கால்கட்டு போட்டது அவனுடைய தவறா?

பத்து குழந்தைகளில் கடைசி செல்லப்பிள்ளையாக இருந்தவனுக்கு, கோபம், ஆத்திரம் இவைகளின் உபயோகம் தெரிந்திருக்கவில்லை. முதலில் மறைமுகமாக, பிறகு நேரிடையாகவே மனைவி அவனைத் தாக்க ஆரம்பித்தபோது, `ஒரு பெண்ணுடன் தான் எதிர்த்துப் போராடுவதா!’ என்று, பெரிய மனது பண்ணி, விட்டுக்கொடுத்தான்.

போகப் போக, செல்லத்தை நினைத்தாலே குழப்பம் ஏற்பட்டது. சிறிது அச்சம், அவமானம், இப்படி ஒவ்வொரு அந்நிய உணர்ச்சியும் பரிச்சயமாகிக்கொண்டு வந்த வேளையில், ஆசை மட்டும் குறைந்துகொண்டே போயிற்று. மொட்டை மாடியில் தனியாகப் படுத்து, நட்சத்திரங்களைப் பார்த்தபடி விழித்திருக்க ஆரம்பித்தான்.

அது ஏன், தான் எது செய்தாலும் அது தப்பாகவே தெரிகிறது செல்லத்துக்கு? அவன் வாங்கி வந்த புடலை, கத்தரி, வெண்டை எல்லாமே முற்றல், அல்லது அதிக விலை. இவனைப் போன்ற ஏமாளிகளுக்கென்றே கடைக்காரன் வைத்திருப்பது.

வீட்டிலேயே கிடந்து உழலுவதால், அலுப்பில் அப்படிப் பேசுகிறாளோ, என்னவோ! அவளுக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா என்று யோசித்து, என்றைக்கும் இல்லாத தைரியத்துடன் சினிமா இரவுக் காட்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் வாங்கிவந்தான் ஒரு முறை.

`வீட்டிலே இவ்வளவுபேர் இருக்கிறபோது, நான் மட்டும் ஒங்ககூட உல்லாசமா சுத்தினா, பாக்க நல்லாவா இருக்கும்? அசிங்கம்!’ என்று செல்லம் பொரிந்தபோது, ஏதோ கள்ளக்காதலியுடன் நேரத்தைக் கழிக்க நினைத்ததுபோல் குற்ற உணர்வுதான் உண்டாயிற்று கைலாசத்துக்கு. அன்று அவனுடன் சேர்ந்து படம் பார்த்தது அண்ணன் மகன்தான்.

தாய் இரக்கப்பட்டாள். `ஹூம்! பொண்டாட்டிதாசனா ஆயிட்டே! அவ எது சொன்னாலும் வாய் திறக்காம கேட்டுக்கறே!’

இப்படி உசுப்பி விட்டாலாவது அருமைபெருமையாக வளர்த்த மகனுக்கு ரோஷம் வராதா என்று எதிர்பார்த்தாள். அவனுக்கோ, `நம் கையாலாகாத்தனத்தை எல்லாரும் கவனித்துவிட்டார்களே!’ என்று அவமானமாக இருந்தது. இன்னும் மௌனியாக ஆனான்.

அவனுக்கும் ஒரு விடிவு வந்தது.

“ஆபீசிலே வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்களா ஒங்களை! அங்கேயெல்லாம் போய் எப்படித்தான் பிழைக்கப்போகிறீர்களோ!”

முதன்முறையாக, செல்லத்தின் மென்னியைப் பிடித்து நெருக்க வேண்டும்போல் கை பரபரத்தது.

தான் இல்லாவிட்டால் இந்தப் பிசாசு யாரைப் பார்த்துக் கத்தும்?

அந்த நினைவே ஒரு விடுதலை உணர்வை எழுப்ப, உதட்டைக் குவித்துக்கொண்டு விசில் அடித்தான். நடையில் ஒரு மிடுக்கு வந்தது.

வெளிநாட்டு ஹோட்டல் வாசம், அதில் கிடைத்த உல்லாசம் — தொல்லை, பிடுங்கல் எதுவுமற்ற உல்லாசம் — கைலாசத்துக்கு சொர்க்கமாக இருந்தது.

`காசை வீசி எறிந்தால், ஆயிரம் பெண்கள் வருகிறார்கள்! எவளாவது ஒருத்தி நம்மை மரியாதைக் குறைவாக, தூக்கியெறிந்து பேசுகிறாளா!’

வீடு திரும்பும் நாள் நெருங்கியது.

செல்லத்திடம் போக வேண்டும்!

நினைக்கும்போதே பயங்கரமாக இருந்தது. கூடவே, கொண்டவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டோமே என்று குத்தியது மனம். அதைச் சமாதானப்படுத்தும் வகையில், பலவிதப் பரிசுப் பொருட்களை வாங்கிச் சேர்த்தான். பாடும் பௌடர் டப்பா, உயர்தரக் கல்மாலைகள், கைப்பை எல்லாவற்றையும் பார்த்து ஆனந்தப்படும்போது, `கணவர் தனக்கு உண்மையாக இருந்திருக்கிறாரா?’ என்று அந்தப் பெண்மனம் பெரிதாகக் கவலைப்படாது என்று கணக்குப் போட்டான்.

`எனக்கு மட்டும் இப்படி இவ்வளவு சாமான்களை வாங்கி வந்திருக்கிறீர்களே, வீட்டிலே இத்தனைபேர் இருக்கிறபோது!’ என்று செல்லத்தின் குரல் — ஓயாது கத்தியதில் கரகரத்துப்போன அந்தக் குரல் — கேட்பது போலிருந்தது.

பயத்துடன் ஒரு முறை உடலைச் சிலிர்த்துக் கொண்டவன், இன்னும் கொஞ்சம் பணத்தை விரயம் செய்தான்.

வீடு திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் போர் முரசு கொட்டவில்லை. `அவ்வளவு தொலைவு போயும் நமக்காக ஆசையாய் வாங்கி வந்திருக்கிறாரே!’ என்று வருபவர்கள், போகிறவர்கள் எல்லாரிடத்திலும் கணவர் தனக்காக வாங்கி வந்தபொருட்களை காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் செல்லம்.

கைலாசத்துக்குப் பாவமாக இருந்தது. அறிவு முதிராத நிலையில், அதிக வயது வித்தியாசத்தில், இளமைக்கனவுகள் கிட்டத்தட்ட முடிந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டோமே என்ற ஏமாற்றம் அவளுக்கு. அது புரியாது, தான் மனம் போன போக்கில் நடந்துகொண்டுவிட்டோமே!

வாரம் இருமுறை விரதம் இருக்கிறாளாமே!

எல்லாம் தனக்காகத்தானே!

நினைக்க நினைக்க, தான் மிகவும் தாழ்ந்துவிட்டதைப்போல் இருந்தது கைலாசத்துக்கு. பரிமாறவோ, வேறு எதற்காகவோ செல்லம் அருகில் வரும்போதெல்லாம் அவனுடைய குற்ற உணர்வு அதிகரித்தது. எப்போதையும்விட அதிகமாகத் தனக்குள் ஒடுங்கிப்போனான்.

ஓட ஓடத் துரத்தும் இந்த உலகம் என்று அவனுக்குப் புரியவில்லை.

மீண்டும் பழையபடி செல்லத்தின் கை ஓங்க, `இது நான் செய்த பாவத்துக்குப் பரிகாரம்!’ என்று, வாய் திறவாமல் எல்லா அவமானத்தையும் ஏற்றுக்கொண்டான்.

எப்போதாவது, உலகில் எல்லா பெண்களுமே செல்லத்தைப்போல் இருப்பதில்லை என்று உரைக்கும். உண்மை அன்பு இல்லாவிட்டாலும், தங்களை நாடி வரும் ஆண்களிடம் பணத்துக்காகவாவது, அருமையாக நடந்துகொள்பவர்களைப்பற்றி நினைக்கையிலேயே சிறிது ஏக்கம் எழும்.

போதும்! கண்காணாத இடத்தின் தனிமையில், கண்டபடி நடந்துகொண்டதற்கே இந்த மனம் படுத்தும் பாட்டைத் தாங்க முடியவில்லை. சே! `மனசாட்சி’ என்ற ஒன்றை ஏன்தான் தனக்குள் வளர்த்தார்களோ!

இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என்று எல்லா கசப்பையும் ஜீரணிக்க ஆயத்தமானான் கைலாசம்.

காலம் ஓடியது. கூடவே செல்லத்தின் எடையும். அதன் வளர்ச்சிக்கு வேண்டிய ஏதோ ஒன்று கைலாசத்தின் உடலிலிருந்துதான் எடுக்கப்படுகிறதோ என்று எண்ணும்படி அவன் உடல் வற்றிப்போயிற்று. வீட்டில் இருக்கும்போது, முணுமுணுப்பே அவன் மொழியானது.

எப்போதாவது, `இந்த நரகத்திலிருந்து எப்படி வெளியேறுவது?’ என்ற யோசனை வரும்.

காது செவிடாகலாம், அல்லது கால தேவன் கருணை காட்டி, அவனையோ, செல்லத்தையோ தன்னிடம் அழைத்துக் கொள்ளலாம்.

நிகழ்காலத்தைவிட எதிர்காலத்தைப்பற்றிய யோசனை இன்னும் பயங்கரமாக இருந்தது.

செல்லம் போய்விட்டால், மரியாதைகெட்ட பிள்ளைகள் அவனை இன்னும் வாட்டி வதைக்குமே!

தான் இறப்பதை அவனால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்த உலகம் எப்படி இருக்குமோ! இங்காவது, பழகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு விவேகம் வளர்ந்திருக்கிறது.

இடி இடித்தது. இடையறாது பொழிந்தது.

“விளக்குக் காசை கட்டணும்னு நான் சொல்லி ஒரு வாரமாச்சு! இன்னிக்கு வந்து கரண்டை வெட்டிடப்போறான்! இவர்கிட்ட ஒரு விஷயம் சொல்றதை செவத்திலே முட்டிக்கலாம்!” எதிரில் யாரும் இல்லாவிட்டாலும், சுவற்றுடனாவது பேசும் வர்க்கம் செல்லம்.

அவள் சொன்ன அன்றே பணத்தைக் கட்டியும், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு அவளிடம் சொல்லாதது நினைவுக்கு வந்தது கைலாசத்துக்கு.

போகிறாள், அவளுக்கும்தான் கத்த ஏதாவது விஷயம் வேண்டாமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *