இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு. அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள். பல சமயம் அவள் சொல்ல நினைப்பது பலருக்குப் புரியாது. சில சமயம் அவள் என்னதான் நினைக்கிறாள் என்று அவள் நைனாவிற்கே கூடத் தெரியாது. அவளது மூளை அசாதாரணமாகச் சிந்திக்கும். சிறுமி ‘சிந்தனைச் செல்வி’ மைனாவிற்கு தன் தந்தை தன்னைப் பார்த்து பெருமை பட வேண்டும், என் அன்பு மகள் போல உண்டா!!! என ஆனந்தப் பட வைக்க வேண்டும் என்ற தணியாத ஆசை நிறைந்த நல்ல மனம் உண்டு. ஆனால், அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் மட்டும் ஏனோ நேர் எதிர்மறை பலனைக் கொடுத்துவிடும்.
கோடை விடுமுறையின் போது, வருங்காலத்தில் பெப்சி இந்திரா நூயி போல ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் தலைவியாக மாற என்னென்ன தகுதி தேவையோ அவைகளை கற்று செயல் படுத்த நினைத்தாள். நைனாவிடம் தன் விருப்பத்தை சொல்லவும், நைனாவிற்கு மகிழ்ச்சித் தாங்கவில்லை. உருப்படி இல்லாத தொலைக்காட்சி பார்த்து வீணடிக்கும் தன் சமவயது பெண்கள் போல் இல்லாமல் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறாளே என் அருமை மைனா என்று நைனா மகிழ்ந்தார். அவளை ஊக்குவிப்பதற்காக தன் பையில் இருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து முதலீடாகக் கொடுத்தார். மகளே மைனா எங்கே உன் சமர்த்தைப் பார்க்கலாம், இந்த ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை பல மடங்காக்கிக் காட்டு பார்ப்போம் என்றார்.
மைனா உடனே செயலில் இறங்கினாள். தன் மிதி வண்டியில் அடுத்த தெருவில் இருக்கும் நீலாவிடம் போனாள். நீலா, இந்தா இந்த ஐந்து ரூபாய்க்கு இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடு என்று சொன்னாள். மைனாவை நன்கு அறிந்த நீலா மறு பேச்சு பேசாமல் இரு இரண்டு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு ஐந்து ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொண்டாள். மைனாவிற்கு தன் திறமையை எண்ணி மகிழ்ச்சி தாளவில்லை. என்ன சுலபமாக ஒரு நாணயத்தை இரண்டு நாணயங்களாக மாற்றிவிட்டாள்.
அடுத்து எதிர் வீட்டு பாட்டியிடம் சென்று, பாட்டி என்னிடம் இருக்கும் இரு இரண்டு ரூபாய்கள் தருகிறேன், நீ எனக்கு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்கிறீர்களா என்று பேரம் பேசினாள். பாட்டியும் அதுக்கென்னடிம்மா கொடுதிட்டாப் போச்சு என்று சொல்லி மூன்று ஒரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு இரண்டு இரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள். மற்றுமொரு வெற்றி மைனாவிற்கு.
அடுத்து தெருவில் பழவண்டி வைத்திருக்கும் வியாபாரியிடம் சென்றாள். அவரிடமும் அவள் பேரம் உடனே படிந்துவிட்டது. மூன்று ஒரு ரூபாய்களைக் கொடுத்து நான்கு ஐம்பது பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள். வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் பக்கத்துக்கு வீட்டு விவேக்கிடம் நான்கு ஐம்பது பைசாகளைத் தள்ளிவிட்டு பதிலுக்கு ஐந்து இருபத்தி ஐந்து பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள்.
இப்பொழுது வீட்டில் தன் நைனா வேலை முடிந்து வருவதற்காகக் காத்திருக்கிறாள். நைனா வந்தவுடன் எப்படி ஒரு நாணயத்தை ஐந்து நாணயமாக பெருக்கினாள் என்று தன் வியாபாரத் திறமையை விளக்கக் காத்துக் கொண்டிருக்கிறாள் மைனா.
(இது கவிஞர் “ஷெல் சில்வர்ஸ்டீன்” அவர்களின் “ஸ்மார்ட்” என்ற கவிதையை தழுவி எழுதப் பட்ட கதை)
குறிப்பு:
இக்கதை “வகுப்பறை” தளத்தில் வெளியிடப்பட்டது