ஒரு வீடு பெயரிடப்படுகிறது..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 11,186 
 
 

“சுத்தம் சோறு போடும்..” வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள்.

“சும்மா சொல்லக்கூடாது. வீட்டை நல்லா பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர்.

“ஏன் பெரியத்தான் பிரிச்சுப்பேசறீங்க?.. எனக்கு மருமவன்னா ஒங்களுக்கு மவன் முறை வருது இல்லையா?.. தம்பி மகன் தன் மகனைப் போலன்னு சொல்லுவாங்க. ஆனாலும் உங்களுக்கு இந்த எடக்குத்தானே வேணாம்கறது” என்று சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார் இன்னொருவர்.

அந்தச் சின்னத்தெருவில் பாதியை அடைத்துக்கொண்டு போடப்பட்டிருந்த பந்தலில் நாற்காலிகள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். பந்தல் வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள், கடைசியில் அலுத்துப்போய் அதனுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கூந்தல் பனையின் சாட்டைகளை அறுத்து எடுத்து, அதில் விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்றாம் பந்தியும் முடிந்து, சாப்பிட்டு விட்ட திருப்தியில் நான்கைந்து நாற்காலிகளை ஆங்காங்கே வட்டமாகச் சேர்த்துப் போட்டுக் கொண்டு வெகு நாட்கள் கழித்துச் சந்தித்த உறவினர்கள் பல கதைகளையும் வெற்றிலை பாக்குடன் சேர்த்து மென்று கொண்டிருந்தனர்.

“ஆமா,.. அதென்ன?. புது வீட்டுக்கு ஒண்ணு அப்பா, அம்மா பேரை வைக்கணும். இல்லைன்னா குலதெய்வம் பேரை வைக்கணும். புள்ளைங்க விருப்பப்பட்டா அதுங்க பேரையும் வைப்பாங்க சில பேர். அதெல்லாம் விட்டுட்டு “சுத்தம் சோறு போடும்”ன்னு அதென்ன அப்படியொரு பேரை வெச்சிருக்கான். புத்தி கித்தி கொழம்பிப்போச்சா அந்தப்பயலுக்கு?” என்று வம்பை ஆரம்பித்தார் ஒருவர்.

“எங்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்?. இன்னா அவனே வாரான். அவங்கிட்டயே கேட்டுக்கிடுங்க” என்ற இன்னொருவர், “மக்கா விசுவநாதா,.. கொஞ்சம் இங்கே வந்துட்டுப்போப்பா. ஒங்க பெரியப்பாவுக்கு ஒனக்க கிட்ட என்னவோ கேக்கணுமாம்” எனவும்,

‘கேளுங்க..’ என்று சொல்வது போல் தன் பெரியப்பாவைப்பார்த்தான் விசுவநாதன்.

“அது ஒண்ணுமில்லேடே.. ஒன் வீட்டுக்குப் பேரு வெச்சிருக்கேல்லா, அதப்பத்தித்தான் கேட்டுட்டிருந்தேன். ஒங்க அப்பாவுக்க பேரோ இல்லைன்னா தாத்தாவுக்க பேரோ வெச்சிருக்கப்டாதா மக்கா. காலாகாலத்துக்கும் அவங்க பேரு தொலங்கியிருக்குமே” என்றார் பெரியவர்.

“பெரியப்பா,.. நாஞ்சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்ன்னு இல்லே. குடும்பத்தைக் கவனிக்காம குடிச்சுக்குடிச்சே கொடல் வெந்து எங்கப்பா செத்தப்புறம் நாங்க நடு ரோட்டுக்கு வந்துட்டோம். வீட்ல உள்ளவங்க விருப்பத்துக்கு மாறா எங்கம்மாவை எங்கப்பா கல்யாணம் முடிச்சுக்கிட்டதால ‘அவனே போயிட்டான்.. அவன் குடும்பம் என்ன ஆனா எனக்கென்னா’ன்னு எங்களை நம்ம குடும்பத்துல இருக்கற யாரும் திரும்பிக்கூட பார்க்கலை. பொழைப்பு தேடி எங்களைக்கூட்டிக்கிட்டு சென்னைக்கே போயிருச்சு எங்கம்மா. அங்க நாலு வீட்டுல தூத்து, தொளிச்சு, பத்துப்பாத்திரம் தேய்ச்சு, துணி துவைச்சுன்னு எல்லா வீட்டு வேலையும் பார்த்துத்தான் எங்களை வளர்த்து ஆளாக்கிச்சு.”

“என்னிக்காவது ஒரு நாள் நாங்களும் நல்ல நிலைமைக்கு வருவோம். அப்படி வரப்ப நம்ம ஊருக்குத்தான் போயி செட்டிலாவணும்ன்னு சொல்லிச்சொல்லியே வளர்த்தாங்க எங்கம்மா. வனத்துல மேய்ஞ்சாலும் இனத்துல அடையணும்ன்னு சொல்லுவாங்களாமே. நாங்க, வெரட்டப்பட்ட எடத்துலயே நாலு பேரு முன்னாடி தலை நிமிர்ந்து வேரூணி நிக்கணும்ன்னுதான் இந்த ஊருலயே ஒரு வீட்டையும் கட்டி குடி வந்திருக்கோம். காலம் முழுக்க ஒரு வேலைக்காரியாவே காலத்தைக் கழிச்ச எங்கம்மாவை இன்னிக்கு ஒரு வீட்டுக்கு எஜமானியாக்கி அழகு பார்த்துட்டோம். இன்னிக்கு நாங்களும் ஆளாகி, நாலு பேர் மெச்சற மாதிரி இருக்கோம்ன்னா அது அன்னிக்கு அடுத்தவங்க வீட்டு அழுக்கைச் சுத்தப்படுத்தி எங்கம்மா சம்பாதிச்ச காசாலதான். எங்களுக்குச் சோறு போட்டது அந்தச் சுத்தப்படுத்துற வேலைதான். அந்த வாழ்க்கையை என்னிக்கும் மறக்கக் கூடாதுன்னுதான் வீட்டுக்கு இப்படிப் பேரு வெச்சிருக்கேன். நாஞ்செஞ்சது சரிதானே?..”

பெயருக்கான விளக்கத்துடன், தங்களுக்கும் சேர்த்து ஊசி செருகிய விசுவநாதனின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்றனர் வயதால் மட்டுமே பெரியவர்களான அவர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *