ஒரு வாய்ச் சோறு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 10,444 
 
 

மகேந்திரன் அப்போதுதான் அந்த நாயை கவனித்தான். கடந்த நான்கு மாதங்களாக வீட்டில்தான் இருக்கிறான். அந்த நாயும் இரண்டு மாதங்களாக அவன் வீட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த நாய் அந்த ஏரியாவில் அவன் வீட்டை மட்டும் சுற்றி வரவும் காரணம் இருந்தது. அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் காலி செய்யப் பட்டிருந்தன. கொரோனா வந்ததில் இருந்து வேலை இழந்த பல குடும்பங்கள் ஏற்கனவே காலி செய்து சொந்த ஊரை நோக்கி சென்று விட்டிருந்தன.

மகேந்திரன் மட்டும் தினமும் விடாப்பிடியாக ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருந்தான். ஆனால் வேலை கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்த பிரச்சினைகளுக்கு நடுவே அவன் நாயை கவனிக்காதது பெரிய ஆச்சரியமில்லை.

வானம் பார்த்த பூமியை நம்பி வாழ்க்கையை வெறுத்து, விவசாயம் நொடித்து கடைசியில் திருப்பூருக்கு பனியன் கம்பெனி வேலைக்கு வந்த எத்தனையோ குடும்பங்களில் அவன் குடும்பமும் ஒன்று. வந்த புதிதில் கட்டிங் செக்ஷனில் கட்டிங் மாஸ்டர்களுக்கு ஹெல்பராகத்தான் வேலை பார்த்தான்.

அவனது சுறுசுறுப்பும், ஆர்வமும் சூப்பர்வைசருக்கு பிடித்துப் போக அவனை கட்டிங் மாஸ்டராக வைத்துக்கொள்ள வேண்டி முதலாளிக்கு சிபாரிசு செய்தார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பான். இந்த வேலையில் சேர்ந்ததில் இருந்து அவன் ஆஹா,ஓஹோ என்று வாழ்ந்துவிடவிலை என்றாலும் வீட்டு வாடகை முதல் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி வரை வாங்கித் தர முடிந்தது.

ஒருநாள் கொரோனா பரவுவதை காரணம் காட்டி, ஆட்குறைப்பு என்ற பெயரில் வேலைக்கு சேர்ந்தவர்களில் இளையவர்களை வேலை பார்த்த நாட்கள் வரையிலான சம்பளத்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்படித்தான் வேலையிழந்தான் மகேந்திரன். அன்றைய தினம் அவன் மனதில் எழுந்த உணர்வுகளை வார்த்தைகளில் விளக்கி விட முடியாது.

முதலில் மளிகை சாமான் தட்டுப்பாடு ஏற்பட்டது. கைச்செலவுக்கான பணம் இல்லாமல் போனது. வீட்டுக்காரரும் வாடகை கொடுக்கவில்லை என்றால் காலி செய்ய வேண்டியதுதானே என நாசூக்காக சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியில் போகவே கூசினான் மகேந்திரன்.

“ஏங்க. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இன்னும் இங்க எதுக்கு கெடக்கணும். பேசாம நம்ம ஊருக்காவது போயிடலாம்ல. பசங்களுக்கும் இப்போதைக்கு பள்ளிக்கொடம் தொறக்கற மாரி தெரியல..”என்றாள் மனைவி. அவள் சொன்னதும் சரிதான் எனத் தோன்றியது மகேந்திரனுக்கு.

அன்றைக்கு இரவு சாப்பிடும்போதுதான் அந்த நாயை முதல் முறையாகப் பார்த்தான் மகேந்திரன். நான்காம் வகுப்பு படிக்கும் அவனுடைய மகள் தன் தட்டிலிருந்து கைப்பிடி சோறை அள்ளி நாய்க்கு வைத்தாள். அது அவர்களை சந்தேகத்துடன் பார்த்துவிட்டு எச்சரிக்கையாக சாப்பிட்டது. தன் குடும்பம் நாய்க்கு சோறு வைக்கும் நிலையில் இருக்கிறதா? என நினைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து அந்த நாய் சரியாக சாப்பிடும் நேரத்துக்கு வரத் தொடங்கியது. மகேந்திரனின் மனைவியோ, மகனோ, மகளோ யாராவது ஒருவர் அந்த நாய்க்கு தவறாமல் சோறு வைத்து விடுவர். ஆனால் ஒரு கைப்பிடிதான். அவர்கள் இருக்கும் நிலையில் அவ்வளவுதான் முடியும்.

அன்று, ஊரிலிருந்து மாமனார் பைக்கில் வந்திருந்தார். அவருடன் மனைவி, குழந்தைகளை அனுப்பி வைத்தான் மகேந்திரன். போகும்போது மனைவி சொன்னாள். “ உங்க ஒருத்தருக்கு மட்டும் கைப்பிடி அரிசி போட்டு சோறு வடிச்சிருக்கேன். சாப்டுங்க. இருந்த கடைசி அரிசியும் காலி. சீக்கிரமா ஊருக்கு வந்துடுங்க”. தலையாட்டினான் மகேந்திரன்.

இனி, இரவு வரை என்ன செய்வது என அவனுக்குத் தெரியவில்லை. வேலை விஷயமாக யாரையாவது பார்த்துவிட்டு வரலாம் எனக் கிளம்பினான். அங்கே, இங்கே எனச் சுற்றியலைந்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தான்.

பசித்தது. சாப்பிடலாம் என்று சாப்பாட்டை போடும்போது கரண்ட் கட் ஆனது. “சை! இது வேற “ என சலித்துக்கொண்டான். சாப்பாட்டை தட்டில் போட்டுக் கொண்டு திண்ணைக்கு வந்தான். தெருவே காலியாக இருந்தது.
சாப்பிட ஆரம்பித்தான். அப்போதுதான் எங்கிருந்தோ வந்து சேர்ந்தது அந்தநாய். சாப்பாட்டு வாசனையை மோப்பம் பிடித்து வந்ததோ என்னவோ?

‘சூ” என அந்த நாயை விரட்டி விட்டு மீண்டும் சாப்பிடத்துவங்கினான். அது விலகி ஓடுவது போல ஓடி மீண்டும் அதே இடத்தில் வந்து நின்று தலையை தூக்கி மகேந்திரனை பரிதாபமாக பார்த்தது. மறுபடி நாயை அதட்டினான். அது விலகி ஓடி, மறுபடி வந்து நின்றது. அப்போதுதான் அதை தெளிவாக கவனித்தான் மகேந்திரன். அந்த நாய் ஓடும்போது பருத்து,உருண்டு , திரண்டிருந்த அதன் முலைகளும், காம்புகளும் கால்களுக்கிடையே இருபுறமும் வீசி இடித்தன.

சரிதான். இது குட்டி போட்ட தாய் போலிருக்கிறது. குட்டிகளை எங்கோ பத்திரமாக வைத்துவிட்டு சாப்பாட்டுக்காக இங்கே வருகிறது போலிருக்கிறது. நினைத்துக் கொண்டான் மகேந்திரன். அது பரிதாபமாக அவனை பார்த்த பார்வை அவனை ஏதோ செய்தது. மேற்கொண்டு அவனால் சாப்பிட முடியவில்லை. ஏதோ நினைத்தவன் ஒரு கைப்பிடி சோறை அள்ளி நாய்க்கு வைத்தான்.

அது உடனே சாப்பிடவில்லை. அவனை சந்தேகமாகப் பார்த்தது. வேறுவழியின்றி நெருங்கி வந்து மெதுவாகத் சாப்பிடத் துவங்கியது. அது சாப்பிடுவதை பார்த்த மகேந்திரனுக்கு இந்நேரம் மனைவியும், பிள்ளைகளும் சாப்பிட்டிருப்பார்களா? என்ற எண்ணம் தோன்றியது.

அடுத்த வாய்ச் சோறை நாய்க்கு வைப்பதற்காக தட்டில் கை வைத்தான். தட்டு காலியாகியிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு வாய்ச் சோறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *