கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 3,083 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறுகதை உலகில் புரட்சி ஏற்படுத்திய ஓ ஹென்றி தீட்டிய ‘கடைசி இலை’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதுகிறேன் – மு.க. 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

அந்த ஆரம்பப் பள்ளியின் மைதானத்தில் நின்றிருந்த வேப்ப மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணி ‘டாண் டாண்’ என்று அடித்து ஓய்கிறது. 

வகுப்பறைகளுக்குள் இருந்த வருங்கால மன்னர்களுக்கு அந்த ஒவ்வொரு மணியோசையும் ‘விடுதலை விடுதலை’ என்று ஒலிப்பது போல் இருக்கிறது. 

அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் சிறார்கள் ஆவலுடன் வெளியேறி மூட்டையிலிருந்த நெல்லிக்காய் சிதறுவதைப் போல நாலா திசைகளிலும் விரைகின்றனர். 

மூன்றாம் வகுப்பு அறையிலிருந்து வெளியேறிய பாபு ஏனோ வழக்கத்துக்கு மாறாக மெதுவாக நடந்தான். தன்னுடன் வரும் நண்பர்களிடம் கூட அவன் கலகலப்பாகப் பேசாமல் தரையைப் பார்த்தவாறே சோர்வாக நடந்தான்! 

தூரத்தில் வரும் தனது அன்பு மகனை வீட்டிலிருந்தே கவனித்தாள் தேவகி. வீட்டை நெருங்க நெருங்க அவனது நடையில் வேகம் அதிகரித்தது! 

வீட்டு வாசலுக்குள் அவன் நுழையும் வரை பொறுக்க முடியாத தேவகி, வெளியே தாழ்வாரத்துக்கு வந்து அவனை அன்புடன் அணைத்து வரவேற்றாள்! 

அவனது கன்னத்தில் தன் இதழ்களை பதித்து ‘இச்’ என்று ஒரு அன்பு முத்தத்தை அளித்த போது அவள் திடுக்கிட்டாள்! 

“என்ன பாபு… உடம்பு காயுது?” என்றபடி அவனது சட்டைக்குள் கையைவிட்டு நெஞ்சையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தாள். 

பாபுவுக்கு காய்ச்சல் அடிக்கிறது என்பதை உணர்ந்த அவள் பர பரவென்று அவனை அழைத்துச் சென்று காபி கொடுத்துவிட்டு, கட்டிலில் படுக்க வைத்தாள். 

“படுத்திரு கண்ணா… இதோ வர்றேன்!” என்று கூறியபடி, அவனது பதிலுக்குக் காத்திராமல் விர்ரென்று வெளியேறினாள் டாக்டரின் வீட்டை நோக்கி! 


இருபத்தாறு வயதான தேவகி ஒரு இளம் விதவை!

கல்லூரியில் படிக்கும்போது, அங்கிருந்த இலக்கிய விரும்பிகள் கூட்டத்தில் அவள் ஒரு தலைவி. அதே கூட்டத்தில் இருந்தவன் திவாகர். அவனது இலக்கியச் சொற் பொழிவுகளினால் கவரப்பட்ட தேவகி – நாளடைவில் அவனது காதலியானாள்! 

சாதிவேற்றுமை எனும் தடைச்சுவர், தனது தரப்பில் கிளம்பியபோது அதைத் தகர்த்தெறிந்து திவாகரைத் திருமணம் செய்து கொண்டாள்! இதன் காரணமாக தனது சொந்தங்களையும், பந்தங்களையும் அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது! அப்போதுகூட அவள் கவலைப்படவில்லை. 

அரசாங்கத்தில் உயர் அதிகாரி அந்தஸ்தில் உத்தியோகம் பார்த்த அவளது கணவன் திவாகர், ஒரு நாள் கார் விபத்தில் பலியானான். நான்கு வயதில் பாபுவையும், அவளையும் அனாதையாக்கி விட்டு அவன் மறைந்த போது எல்லா மகிழ்ச்சியுமே அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன். கணவன் கட்டிவைத்த இந்த வீடும், அவன் சேர்த்து வைத்திருந்த சில ஆயிரங்கள் பணமும், அவன் இறந்த போது அரசாங்கம் தந்த சில ஆயிரங்களும், மகன் பாபுவும் தான் அவளுக்கு மிச்சம். 

வீட்டின் கீழ்ப்பகுதியை இரண்டாகப் பிரித்து. ஒரு பகுதியை ஓவியக் கூடத்துக்கும், மறு பகுதியை ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கும் வாடகைக்கு விட்டிருந்தாள். அந்த வாடகைப் பணத்தைக் கொண்டும், வங்கியில் போடப் பட்ட பணத்திற்கு வரும் வட்டியைக் கொண்டும் வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக்கொண்டிருந்தாள். 

பிரிந்துவிட்ட கணவனின் நினைவு வரும்போதெல் லாம். பிள்ளையின் முகத்தைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்வாள். சளி பிடித்து பாபுவுக்கு மூக்கில் நீர் வந்தால். இவளுக்குக் கண்ணில் நீர் கொட்டிவிடும். அவனுக்கு காலில் வலி எடுத்தால், இவளுக்கு இதயமே வலிக்கும்! அந்த அளவுக்கு ஆசையையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த தனது குலக்கொழுந்துவுக்குக் காய்ச்சல் என்றால்.. 


சென்ற வேகத்திலேயே திரும்பி வந்த தேவகி, கையிலிருந்த மாத்திரையை பாபுவின் வாயில் போட்டு இதமான வெந்நீரை ஊற்றினாள். பிறகு அவனைக் கட்டிலில் படுக்கவைத்து போர்வையால் உடம்பை மூடினாள். கட்டிலையொட்டித் தரையில் அவள் படுத்துக் கொண்டாள்! 

பாபு படுத்திருந்த கட்டிலுக்கு எதிரே ஒரு ஜன்னல்! அந்த ஜன்னலுக்கு அப்பால் ஒரு பன்னீர் மரம் ஓங்கி வளர்ந்து நின்றது. அந்த மரத்தின் ஒரு கிளை அந்த ஜன்னலை ஒட்டியிருந்தது. அந்த ஜன்னல் வழியாக, பன்னீர்ப் பூக்களின் மணத்தை ஏந்தியபடி தென்றல் தவழ்ந்தது! 

பாபுவும் தேவகியும் தூங்கிப்போய் விட்டார்கள்! 

‘அம்மா…!’- என்ற அலறல் கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் தேவகி! ஓடிச்சென்று டியூப் லைட்டைப் போட்டுவிட்டு, பாபு படுத்திருந்த கட்டிலை நோக்கிப் பாய்ந்தாள். அவன், அந்தப்பக்கம், இந்தப் பக்கம் விழித்தபடி கட்டிலில் உட்கார்ந்திருந்தான். 

ஓடிச்சென்று அவனை அணைத்த தேவகி, “என்ன கண்ணா…என்னடா?” என்றாள் பதறியவளாக!

தாயை பயத்துடன் பார்த்த பாபு, “அவங்க எங்கம்மா?” என்றான்! 

“யாருடா?” 

“அவங்கதான்… வெள்ளை ட்ரெஸ்ல… தோளிலே இறக்கை இருக்கும்… ஆங்! நீ கதையிலே சொல்வியே தேவதை… அவங்கதான்!” 

பையன் ஏதோ கனவு கண்டிருக்கிறான் என்று அறிந்துகொண்ட தேவகி, “என்ன பாபு… கனவு கண்டியா?” என்றாள் அவன் தலையை வருடியபடி! 

“இல்லேம்மா.. ஆமாம்மா… கனவுதான். அவங்க வந்தாங்களா…” என்று இழுத்தவன் சட்டென்று நிறுத்தி, ஜன்னல் பக்கம் சற்று பயத்துடன் பார்த்தான்.

அவன் பயத்தைப் போக்க எண்ணிய தேவகி, “வந்து என்னடா சொன்னாங்க?” என்றாள் சிரிப்புடன். 

“இதோ.. இந்தக் கிளையைப் பாரும்மா…!” என்று ஜன்னலை ஒட்டி வெளிப்புறம் இருந்த பன்னீர் மரக் கிளையைக் காட்டினான் பாபு. அவள் பார்த்தாள், அவன் கேட்டான். 

“அந்தக் கிளையிலே எட்டுப் பூக்கள் இருக்குதில்லே?” 

தேவகி பூக்களை எண்ணினாள். 

“ஆமாண்டா பூவும், அரும்புமா எட்டுப் பூ இருக்கு!” 

“அதுலே, ஒரு நாளைக்கு ஒரு பூ உதிருமாம்!'”

“ம்…..!” 

“அதுலே இருக்கிற கடைசிப்பூ விழறப்போ…” 

“விழறப்போ?”

“நான்… நான் செத்திடுவேனாம்!”

இதைக் கேட்டது தான் தாமதம், “பாபூ!” அந்தப் பகுதியே எதிரொலிக்கும்படி அலறிய தேவகி, அவனை அப்படியே சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள். 

“அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா…நீ ஏதோ கனவு கண்டிருக்கே… அவ்வளவு தான்… பேசாம தூங்கு ராஜா!” என்று இதமாகக் கூறி அவனைப்படுக்க வைத்தாள். ஜன்னலையும் சாத்தி விட்டாள். 


விடிந்தது. 

படுக்கையிலிருந்து எழுந்த பாபு வேகமாகச் சென்று ஜன்னலைத் திறந்து, அந்தப் பக்கமிருந்த கிளையில் மலர்களை எண்ணினான். ஒன்று உதிர்ந்து, மீதி ஏழு இருந்தது! அப்போது காபியுடன் உள்ளே வந்தாள் தேவகி! 

“அம்மா…இங்கே வாயேன்!” ஜன்னலருகே நின்ற பாபு அழைத்தான்! 

“என்னப்பா?” என்றவாறு அவனருகே சென்றாள் தேவகி! 

“இனி ஏழுநாள் தாம்மா!”

“என்னதுடா… ஏழுநாள்?”

“இதோ பாரும்மா… நேற்று ராத்திரி எட்டு பூ இருந்ததுல்லே… அதுலே ஒண்ணு விழுந்திடுச்சி… இன்னும் ஏழுதான் இருக்கு.. நானும் ஏழுநாள்தான் இருப்பேன்!” 

அவன் பேசப் பேச அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. ஏதோ ஒரு சஞ்சலம் அவளது மனதை ஆட்டிப் படைத்தது. பாபுவின் பயத்தைப் போக்க என்ன வழி என்று தெரியாமல் தவித்தவள் அவனுக்குக் காபி கொடுத்து படுக்கையில் உட்காரவைத்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். 

வீட்டின் கீழே கிழக்குப் பகுதியிலிருந்த ஓவியக் கூடத்தின் கதவு சாத்தப்பட்டிருந்தது. ஓவியன் இன்னும் எழுந்திருக்கவில்லை. மேற்குப் பகுதியிலிருந்த போட்டோ ஸ்டுடியோ திறந்திருந்தது. போட்டோகிராபர் ராதா வாசலில் நின்றிருந்தான். 

சோகத்துடன் தேவகி நின்றிருப்பதைப் பார்த்த ராதா, “தேவகி!” என்று அழைத்தான். 

அவள் அவனருகில் வந்தாள். 

“ஏம்மா ஒரு மாதிரியா இருக்கே?” பரிவோடு கேட்டான் ராதா! 

அவன் அப்படிக் கேட்டதும் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினாள் தேவகி. 

“அழாதேம்மா… வா… உள்ளே வந்து உட் கார்… என்ன நடந்தது?” என்று கேட்டபடியே ஸ்டுடியோவுக்குள் சென்றான் ராதா. அவனைத் தொடர்ந்து தேவகியும் சென்றாள். இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர். 

பாபுவுக்கு காய்ச்சல் அடிப்பதையும், இரவு அவன் கனவு கண்டதையும், அதிலிருந்து அவன் பயத்துடனும், பீதியுடனும் இருப்பதையும் ஒன்று விடாமல் சொல்லி அழுதாள் தேவகி. கண்களில் நீர் சொட்டியது! 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதா “அடப் பைத்தியமே… இதுக்குபோயா அழுவுறே?” என்று கூறினான். 

“இல்லே… எனக்கு ஏதோ சஞ்சலமா இருக்கு…!” – மேலும் அழுதாள் தேவகி. 

“பயப்படாதேம்மா… நானிருக்கேன்!” என்று கூறிய ராதா, தனது கையால் அவளது கண்ணீரை துடைத்தான்! 

சகோதர உணர்வோடு அவன் சாதாரணமாக அப்படி செய்ததாகத்தான் முதலில் தேவகி நினைத்தாள். 

ஆனால் அடுத்த சில வினாடிகளில் “அழாதேம்மா” என்று கூறியபடி கண்ணீரைத் துடைப்பதுபோல அவளது கன்னத்தை அவன் வருடியபோது- 

“அண்ணா!” என்று கூறி எழுந்தாள் அவள்!

“கண்ணா என்று சொல்லக் கூடாதா…? தேவகி, ப்ளீஸ்!” –  பல்லைக் காட்டினான் ராதா. 

“கல்யாணமான உங்களுக்கு இப்படியெல்லாம் புத்தி போகக்கூடாது!” என்றபடி அங்கிருந்து வெளியேற முனைந்தாள் தேவகி! 

“நீயும் கல்யாணமானவதானே… அதனாலே அதுவும் ஒரு பொருத்தம்தான்!” – அவளது கைகளைப் பிடித்துக்கொண்டான் அவன். 

“இப்போ என்னை விடுறீங்களா? இல்லே சத்தம் போடட்டுமா?”

“சத்தம் போட்டா… உனக்குத்தானே மானக்கேடு? எனக்கென்ன நான் ஆம்பளே!” – இப்படிக் கூறியபடியே அவளை அவன் அணைக்க முயன்றபோது, “பாபு” என்று கத்தினாள் தேவகி. 

அவளது சத்தத்தைக் கேட்டு ஓவியக் கூடத்தில் படுத்திருந்த ரகு விழுந்தடித்துக் கொண்டு வந்தான். 

ராதாவின் கையில் சிக்கி தேவகி தவிப்பதைப் பார்த்ததும் ஒரே பாய்ச்சலில் ராதாவின்மீது பாய்ந்தான். பாய்ந்த வேகத்திலேயே ராதாவை நையப்புடைத்து சோபாவில் தள்ளினான்! 

“நீ மாடிக்குப் போம்மா!” என்று தேவகியிடம் கூற, அவள் நன்றியுணர்வோடு அவனைப் பார்த்துவிட்டு, கண்கலங்க வெளியேறினாள். 

“போட்டோ புடிக்கிறேன. போட்டோ புடிக்கிறேன்னு சொல்லிட்டு பொம்பிளையைப்புடிக்க ஆரம்பிச்சிட்டியா?” என்று ராதாவைப் பார்த்து உறுமி விட்டுத் தன் ஓவியக்கூடத்துக்கு வந்தான் ரகு. 

“சுவர்ல படம்வரையத் தெரியலேன்னாலும்…என் ஒடம்புலே நல்லா வரைஞ்சிருக்கான்; ராஸ்கல்!” என்றபடி தன் உடம்பை தானே பிடித்து விட்டுக் கொண்டான் ராதா! 

ஓவியக் கூடத்துக்குள் வந்த ரகுவின் மனம் அலைபாய்ந்தது. 

‘அழகே. ஆபத்தானது! அழகும் பணமும் இருந்து, தேவகிபோல ஆதரவும் இல்லாமல் இருந்தால்.. இந்த உலகில் சுத்தமாக வாழமுடியுமா?’ 

ரகுவின் மனம் எங்கோ அலைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தது. 

‘ஆழகும். வசதியும் உள்ள தேவகியை நான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்! 

எதிரே சுவரில், அவன் வரைந்திருந்த ஒரு அழகிய பெண்ணின் படம்! அந்தப் படத்தைப் பார்த்தான் ரகு! இத்தனை நாளும் சாதாரணமாகத் தெரிந்த அந்தப் படம் இப்போது எவ்வளவோ அர்த்தங்களை தரக்கூடியதாக. அவனுக்குத் தெரிந்தது. 

அந்தப் படத்திலுள்ள பெண்ணைத் தேவகியாகவும். அவள் தன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக மாடிக்கு தேவகியின் வீட்டுக்கு விரைந்தான் ரகு. 


கட்டிலில் பாபு படுத்திருந்தான். அவன் அருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் தேவகி. அப்படியும் இப்படியுமாகத் தலையை அசைத்தான் பாபு. ஆனால் கண்களை மட்டும் திறக்கவில்லை. 

“நாளைக்கு ஒரு பூ விழுந்திடும், மிச்சம் ஆறு நாள்தான் பாக்கி!” என்று முணுமுணுத்தான் பாபு! அப்போதும் கண்களைத் திறக்கவில்லை. இதைக்கேட்ட தேவகிக்கு மேலும் அழுகை அதிகமாகியது. தூக்கத்தில் தான் அவன் புலம்புகிறான் என்றாலும், ஏதோ ஒரு துயரச் செய்தியைக் கேள்விப்பட்டுவிட்ட உணர்வில் துடித்தாள் அவள்! 

அப்போது, அந்த அறைக்குள் நுழைந்த ரகு. கட்டிலருகே வந்து பாபுவின் உடலைத் தொட்டுப் பார்த் தான்! அவன் வந்ததும், மரியாதைக்காக எழுந்து நின்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் தேவகி. 

“சாதாரண காய்ச்சல்தான் இதுக்குப் போயி ஏன் கவலைப்படறீங்க?” தேவகியைப் பார்த்து சாதாரணமாகக் கேட்டான் ரகு 

“இல்லீங்க… எனக்கென்னமோ பயமாயிருக்கு!'” என்ற தேவகி, பாபு கனவு கண்ட விவகாரத்தை ஆதியோடு அந்தமாகக் கூறினாள். 

அதைக் கேட்ட ரகு சிரித்தான். 

“இதெல்லாம் மூட நம்பிக்கை! இதுக்குப்போயி இந்தக் காலத்துலே பயப்படறது பைத்தியக்காரத்தனம்” என்றான். 

பெருமூச்சுவிட்ட தேவகி, “இருங்க, காபி கொண்டுவர்றேன்!” என்று சொல்லி சமையல் கட்டுக்குப் போனாள். அவளது நடை நளினத்தையும், பின்னழகையும் ரசித்துப் பெருமூச்சுவிட்டான் ரகு. 

காபியைக் குடித்து முடித்ததும். நான் ஒரு முக்கியமானவிஷயத்தை உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்…!” மெதுவாக ஆரம்பித்தான். 

‘என்ன?’ என்பது போல ஏறிட்டுப் பார்த்தாள் தேவகி. அவன் தொடர்ந்தான். 

“நீங்களும் இளம் வயது. ஏதோ கொஞ்சம் வசதி இருக்கு. இந்தப் பையனை வேற வளர்த்து நல்லபடியா ஆளாக்க வேண்டியிருக்கு….!” நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தான். 

‘ஆமாம்’ என்பது போலத் தலையை மேலும், கீழும் அசைத்தாள் தேவகி. ரகுவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. 

“இந்த நெலமையிலே நீங்க தனியா இருக்கறது அவ்வளவு உசிதமா எனக்குப் படலே!” 

“நீங்க என்ன சொல்றீங்க?”

“இளமையையும், அழகையும், வசதியையும் வச்சுக்கிட்டு இந்த உலகத்திலே மானத்தோடு வாழணும்னா… ஒரு ஆண் துணை அவசியம்னு சொல்றேன்!” 

‘டக்’ என்று நிறுத்திய ரகு, மீண்டும் தேவகியின் முகத்தைப் பார்த்தான். 

விரக்தியோடு சிரித்தாள் தேவகி. 

“இந்த விஷயத்தைப் பலபேர் என்கிட்ட சொல்லி, அதுக்கெல்லாம் நான் முற்றுப்புள்ளி வைத்து ரொம்ப நாளாச்சு!” அலட்சியமாகக் கூறினாள் அவள். 

“சூழ்நிலைக்குத் தக்கபடி உங்க முடிவை மாத்திக்கிறதிலே தப்பு கிடையாது… நீங்க விரும்பினா அந்த ஆண் துணை நானாகவே இருக்கேன்!” 

-இதைக் கேட்ட தேவகி திடுக்கிட்டாள். ரகுவிடம் நெருங்கி வந்து நிதானமாகக் கூறினாள்: 

“ராதா என் கற்பைப் பறிக்க வந்தப்போ, நீங்க வந்து அவன் கன்னத்திலே அடிச்சீங்க… பெருமைப் பட்டேன்! ஆனா.. அதுக்குப் பிரதியுபகாரமா என் கற்பையே கேட்டு என் இதயத்திலே அடிக்கிறீங்க. இப்போ வெட்கப்படறேன், வேதனைப்படறேன்…!” 

“இல்லே..நான் ஒண்ணும் தவறான திட்டத்தோட சொல்லலே… என் மனசில பட்டதைச் சொன்னேன். அவ்வளவுதான்!” 

“ஊஹும்! எல்லா ஆண்களுமே இந்த விஷயத்திலே ஒரே மாதிரிதான்னு நிரூபிக்கிறீங்க!” 

“நான் அப்படியில்லே.. உங்களுடைய பாதுகாப்பான நல்வாழ்வை விரும்பித்தான் அப்படிச் சொன்னேன்!” 

“கிடையாது! எல்லோரும் என் உடலைத்தான் விரும்புறீங்க… இது என்ன உலகம்?” – வெறுப்பு ஒரு புறமும், சலிப்பு ஒருபுறமுமாகக் கூறினாள் தேவகி. 

வெட்கித் தலைகுனிந்தபடி, “நான் வர்றேன்!” என்று கூறி வெளியேறினான் ரகு! தேவகி தடுக்கவில்லை. அவள் அழைத்தா, அவன் வந்தான்? தானாக வந்தான். தானாகவே போகிறான்! 


விடிந்தும், விடியாததுமாகத் தனது ஸ்டுடியோவுக்குள் நுழைந்த அந்த மனிதரை ஆச்சர்யத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் பார்த்தான் ராதா! 

நீண்டு வளர்ந்த சடை சடையான தலைமுடி. தலை உச்சியில் செங்குத்தாக ஒரு சிறு கொண்டை. நெற்றி முழுவதும் வெள்ளையடித்தாற்போன்று திருநீறு. அதன் நடுவே ஒரு ரூபாய் அகலத்துக்குச் சிவப்புக் குங்குமம். அந்தக் குங்குமத்துக்குக் கீழே ஒரு விரல் கனத்தில் பட்டையாக சந்தனம். ‘தலைமுடிக்குத் தாழ்ந்தவர்கள் அல்ல நாங்கள்’ என்று சொல்லும்வகையில் நீண்ட தாடி, மீசை. கழுத்திலே ஒரு பெரிய உருத்திராட்சமாலை உட்பட ஏழெட்டு மாலைகள். அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்! உருத்திராட்ச மாலையுடன் இணைந்து தொங்கிக் கொண்டிருந்தது, வெள்ளி நிற சிறு டப்பி ஒன்று. பச்சை நிறத்தில் நீண்ட ஜிப்பா, அதே கலரில் வேட்டி, காலுக்கு செருப்பு இல்லை! வலது கை சூலாயுதத்தை ஏந்தி இருந்தது, இடது கை ஒரு எலுமிச்சம் பழத்தை உருட்டிக் கொண்டிருந்தது. 

சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்தார் அந்த மனிதர். 

“என்ன வேணும்?” என்று கொஞ்சம் அருவருப்போடும், பயத்தோடும் கேட்டான் ராதா. 

“அடியேனுக்கு போட்டோ வேணும்” மிடுக்காகக் கூறினார் அவர். 

“போட்டோ? வடக்கே ஜீனத் அமன், ஹேமமாலினி, ரேகா, தெற்கே ஜெயசுதா, ஸ்ரீப்ரியா, ஜெயமாலினி, ஷோபா, ரதி, ராதிகா…” 

“நிறுத்து!அந்த ரசனைக் கெல்லாம் அப்பாற்பட்டவன் நான்…!”

“அப்படியா… அப்போ நீங்க தமிழ்நாடு இல்லியா?” 

“ஏன்?” 

“சினிமா மோகமே இல்லாதவரா இருக்கீங்களே?”  

கட கட வென்று சிரித்தார் அந்த மனிதர். 

“அப்பனே, அடியேனை ஒரு போட்டோ எடு. இந்தா… பிடி!” – பத்து ரூபாய் நோட்டை நீட்டினார் அவர்.

பரவசமடைந்த ராதா, பணத்தை வாங்கிக் கொண்டு அந்த மனிதரை இரண்டு மூன்று ‘போஸ்’களில் படம் பிடித்தான். 

“சுவாமி, துபாய்க்குப் போகுதா? பாஸ்போர்ட் கேஸா?” பவ்யமாகக் கேட்டான் ராதா!

“இது சொர்க்கத்துக்குப் போகிற கட்டை அப்பனே, துபாய்க்கும் போகாது. பம்பாய்க்கும் போகாது”! 

“எலக்ஷன்லே நிக்கிறீங்களா? வால்போஸ்டர் விவகாரமா?”

“எலெக்ஷனுமில்லே, இனிமே நீ கேள்வி கேட்கிறதுக்கு எக்ஸ்டென்ஷனும் இல்லே…!” 

“சுவாமி கோவிச்சுக்கக் கூடாது! பார்த்தா ரொம்பப் படிச்சவர் போல தெரியுது. அடியேனுக்கு கொஞ்சம் விவரமா சொன்னா தேவலே!” பணிவாகக் கூறிய ராதா, அந்த மனிதரின் எதிரில் கைகட்டிப் பணிந்து நின்றான். 

தொண்டையை ஒருமுறை கனைத்துக்கொண்டு அவர் சொன்னார்: 

“யாம் சாமியாருக்கு, சாமியார்! மந்திரவாதிக்கு மந்திரவாதி! மகாலிங்க மலையில் ஏழாண்டுக் காலம் அலைந்து திரிந்து ஆண்டவனின் அனுக்கிரகம் பெற்றுவந்துள்ளோம். பேய், பிசாசு, சைத்தான் ஆட்டத்தை நிறுத்துவோம். பில்லி சூன்யத்தை அகற்றுவோம். தீராத நோயைத் தீர்ப்போம். சாகப்போகிறவனைப் பிழைக்க வைப்போம்!” 

அந்த மந்திரவாதி கூறியதைக் கேட்கக்கேட்க ராதாவுக்கு நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு சொன்னான்: 

“சுவாமி… மாடியிலே ஒரு பையன், கடுமையான காய்ச்சல்லே கெடக்கிறான்… ஏதோ கனவு கண்டு பயந்து போய் தூக்கத்தில் புலம்பிட்டு பீதியா இருக்கிறான். அவனைக் குணமாக்க முடியுமா?” 

ராதா இப்படிக் கேட்டானேயொழிய, இந்த மந்திரவாதியின் உருவத்தைப் பார்த்து பாபு பயந்து போய் அவனுக்கு காய்ச்சல் அதிகமாகிவிடுமோ என்றும் பயந்தான். 

“எம்மிடம் முடியாததே இல்லை அப்பனே! நீ சொல்வது பில்லி சூன்ய வேலைதான்.ஒரு நாள் ரவு முழுவதும் ஜெபம் செய்தால் விடிவதற்குள் சரியாகிவிடும்” 

-இதைக் கேட்ட ராதாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. “தயவு செஞ்சி வாங்கோ” என்றபடி முன்னே நடக்க அவனைப் பின்தொடர்ந்தார் மந்திரவாதி! 


அப்போதுதான் விழித்தெழுந்த பாபு ஓடிச் சென்று ஜன்னலைத் திறந்து பன்னீர் மரக்கிளையைச் சிறிது நேரம் பார்த்தான். பிறகு, திரும்பவும் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, ‘ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு’ என்று வாய்விட்டு எண்ணினான். 

அப்போது அங்கு வந்த தேவகி, “என்ன எண்ணுகிறாய் பாபு?” என்றாள் கொஞ்சும் குரலில்! 

“எனது நாட்களையம்மா!” – பளிச்சென்று பதில் சொன்னான் பாபு. 

“அதெல்லாம் ஒண்ணுமில்லேடா பாபு…நீ நூறு வருஷம் இருப்பே பாரேன்!” 

-அவனுக்கு ஆறுதலாக தேவகி கூறினாலும், ஏனோ அவளது கண்கள் நீரைக் கொட்டின. அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்த பாபு, 

“நீ ஏம்மா அழறே? நான்தான் இன்னும் ஆறு நாள் இருக்கப் போறேனே?” – என்றான்; அவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு கேவிக்கேவி அழுதாள் தேவகி. 


அந்தச் சமயம் அங்கு வந்த ராதாவையும், மந்திரவாதியையும் பார்த்த தேவகி திடுக்கிட்டாள்! பாபுவும் தான்! 

வந்ததும், வராததுமாக ராதா கூறினான். 

“இவரு யாரு தெரியுமா? பெரிய மகான், மந்திரவாதி! இவர் பூஜை செய்தார்ன்னா பாபுவோட காய்ச்சல் பறந்து போயிடும்… பெரிய பெரிய இடங்களிலெல்லாம் இவர் இப்படி மந்திரிச்சிருக்கார்… இன்னியோட ஒன் கவலை உட்டுது!” 

திக்பிரமை பிடித்தவள் போல நின்ற தேவகி, மெள்ள கையெடுத்து அந்த மந்திரவாதியை வணங்கினாள். அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக  மேலும், கீழும் தலையை நிதானமாக அசைத்தார் மந்திரவாதி. 

ராதா தொடர்ந்தான். 

“பெரிய காடுகளிலே பயங்கர மிருகங்களோட ஏழு வருஷம் இருந்திருக்கார்ன்னா பாரேன்!” 

தேவகி இடை மறித்தாள். 

“இப்போ நாட்லே இருக்கறதுக்குத் தாங்க பயமாயிருக்கு… காட்ல கூட இருந்திடலாம்!” – ஏதோ ஒன்றைக் குத்திக்காட்டுவது போல தேவகியின் பேச்சு இருந்ததாகப்பட்டது ராதாவுக்கு. 

“தேவகி! அன்னிக்கு ஏதோ எம்புத்தி பிசகிடுச்சி. மன்னிச்சிடும்மா… அதெல்லாம் மனசிலே வச்சிக்காதே! பாபுவைக் காப்பாத்தப் பாரு.. இவரு ஒரு இரவு ஜெபம் செய்தார்ன்னா போதும்… என்னம்மா சொல்றே?”.

உருக்கமாகக் கேட்டான் ராதா. 

அவனது நிலையைப் பார்த்த தேவகியும் கொஞ்சம் நெகிழ்ந்தாள். கட்டிலில் படுத்திருந்த பாபுவைப் பார்த்தாள். அவனுக்கிருக்கும் காய்ச்சலையும், பயத்தையும் நினைத்தாள். அவன் இறந்துவிட்டால்…? என்று நினைக்கும் போது அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. 

எல்லா விவரங்களையும் ராதா மூலம் கேட்டுத் தெரிந்திருந்த மந்திரவாதி, “இது ஒரு பில்லிசூன்ய வேலை தான்; இன்று இரவு முழுவதும் ஜெபம் செய்தால் இந்தப் பன்னீர் மரக்கிளையிலிருந்து பூக்கள் உதிராது!” என்றார். 

இதைக் கேட்ட தேவகிக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. ஜெபம் செய்ய சம்மதித்தாள். அன்று மாலை ஆறு மணி முதல் ஜெபத்தை ஆரம்பிக்கலாம் என்று மந்திரவாதி சொன்னார். 

மந்திரவாதியை மாடியில் விட்டுவிட்டு மகிழ்ச்சி பொங்கக் கீழே வந்த ராதாவின் கண்களில் ரகு தென்பட்டான்.  ராதாவே ரகுவிடம் சென்றான். 

“ரகு, அன்னிக்கு நடந்த தப்புக்கு மன்னிச்சிடுப்பா… என்னமோ சபல புத்தி அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமா பாபுவைக் குணப்படுத்த ஒரு மந்திரவாதியை அழைச்சிட்டு வந்திருக்கேன்… அவர் மேலே இருக்கார்!” என்று கூறிவிட்டு, தன் ஸ்டுடியோவையும் பூட்டி விட்டு, திரும்பவும் வந்து, “வர்றேன் நைனா” என்று கூறி ரகுவின் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டுத் தனது வீட்டுக்குப் புறப்பட்டான் ராதா. 

“மேலே இருப்பவன் மந்திரவாதியா – அல்லது அவனை அழைத்து வந்த இவன் தந்திரவாதியா?” என்று நினைத்த ரகு, ராதா போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். 

– தொடரும்…

– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *