கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 3,257 
 
 

கனத்த அமைதி.

இரும்புத்திரை போர்த்தியது போன்ற அமைதி. வருவோரும், போவரும் ஜே, ஜேன்னு கூட்டம். இருவராக, நால்வராகக் கும்மலாக என்று பிரித்து நின்று பேசும் கூட்டம். தங்கள் ஆதங்கம் அனைத்தையும் பேசிப் பேசியேத் தீர்க்கும் கூட்டம். இதமான முல்லை மலர் வாசம். கூடவே சந்தன ஊதுவத்தியின் மணம், நேற்று அம்மா தகதகவென்று தேய்த்து வைத்தக் குத்துவிளக்கு; அம்மாவைப் போலவே முத்துப் போல் சுடர் விட்டு எரிகிறது. மூலையில் என் வயிறு எரிகிறது.

குளு குளு பிரீசரில் அம்மா. இத்தனை நாட்கள் உள்ளுக்குள் வெந்து புழங்கிய அம்மாவுக்கு இதமான ஒத்தடமோ இந்தக் குளுமை. வாய் விட்டு அழாமல் மவுனிகிறேன். வெளியே லேசான தூறல். வானமும் அழுகிறதோ அம்மாவுக்காக?

யாரோ தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

காதைத் தீட்டிக் கொல்கிறேன். “என்னவோ ஒரேடியா நிலையா நின்னா, இப்ப பொசுக் குன்று போயிட்டா. போறச்ச என்னத்த வாரிக் கட்டிக்கிட்டுப் போனா. மணி மணியா ரெண்டு பெத்தா. அதுகளோடு இருந்து பேரன், பேத்தின்னு கொஞ்சி அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணும்…ம்ம்…முதல்ல யார் பார்த்தது?”

“நான்தான்…எதிர் வீட்டு லட்சுமி அக்கா.”

“நேத்து சாயங்காலம் நாலு மணி இருக்கும். நான் பால் கொண்டாந்தேன். பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க, எனக்குக் கூட குத்தாங்க. அந்தப் பூ அப்படியே தலையில இருக்கு அதுக்குள்ள… தொண்டையைச் செறுமிக் கொண்டு தொடர்கிறாள் அக்கா. கடைசி ஊட்டுக்குப் பால் குடுத்துட்டு அம்மாக்கிட்ட லோட்டா வாங்க வந்தேன், பூ மேலேயே படுத்துக்கிட்டு இருந்தாங்க… நான் குடுத்துட்டுப் போன பாலை பூனைக் குடிச்சிக்கிட்டு இருக்கு. நான் பதறிப் போய் அம்மா, அம்மான்னு கூப்பிட்டேன். பதிலே இல்லை. அக்கம் பக்கத்துல சொல்லி டாக்டரை கூப்பிட்டு வந்தோம். அரைமணி நேரம் ஆச்சுன்னுட்டார் என்று நாற்பது இரண்டாவது முறையாக புலம்பினாள் லட்சுமி அக்கா. அக்காவின் குரலில் அம்மாவின் இழப்பன் தாக்கத்தை விட, தான் தான் முதலில் பார்த்து என்ற பரபரப்பு…”

“சரி புருஷன் எப்ப வந்தார்?”

“ராத்திரி பத்து மணிக்கு. போன இடம் தெரிஞ்சாத் தானே சேதி சொல்லலாம் பொண்டாட்டி கிட்டயே எங்க போறேன்னு சொல்லமாட்டார். எப்ப வருவேன்னும் சொல்ல மாட்டார். அப்படி ஒரு குணம். பாவம், அது தான் வேளா வேளைக்கு ஆக்கி வைச்சுக்கிட்டுக் காத்து இருக்கும்.” பக்கத்து வீட்டு செண்பகாவின் புலம்பல்.

“புருஷன் வரும் முன்னரே தெரிஞ்ச வரைக்கும் அவுங்க உறவுக்காரங்க எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். முப்பது வருஷமாத் தாயா புள்ளையா பழக்கம், அதனால அவங்க உறவுக்காரங்க விலாசம் தெரியும். புள்ள அமெரிக்காவுல இருந்து வந்துக்கிட்டு இருக்கு. நாளைக்கு முதல் திருமண நாள். அதுக்காக கிளம்பினது நல்லதாப் போச்சு. அம்மா நெஞ்சு நல்லா வெந்துடும்.” பக்கத்து வீட்டுக்காரர் யாரிடமோ சொல்லிக் கொண்டே போனார்.

அது சரி இந்தம்மா புருஷன் யாரு?

“வாசல்ல கால் மேலக் கால் போட்டுக்கிட்டு கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்து இருக்காறே அவுரு தான்”. “சென்ட் வாசம் ஆளைத் தூக்குதே அவரா?” என்றபடி பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“இருக்கும் போதே நல்ல அமுக்குணி புருஷனப் பக்தி வாயத் திறக்கமாட்டா. உல வாய மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இவளுக்குப் புருஷனக் கையிலப் போட்டுக்குத் தெரியல…”

“ஆம்புள்ளன்னா அப்படி, இப்படி இருப்பான் தான். அதுக்காக மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கிட்டா. இப்படி உங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இல்லாமப் போச்சுதே… பேசாம என் பொண்ணையும் கட்டிக்கண்ணு சொன்னேன். கேட்டானா? இவ சம்மதிக்கமாட்டான்னு பயந்தான். போன மாசம் தான் எம்பொண்ணைக் கட்டிக்குடுத்தேன். போனது தான் போனா ரெண்டு மாசம் முன்னாடி போயிருக்கக்கூடாது…”

“போறச்சயும் அமுக்குனியா அனாதை மாதிரிப் பொசுக்குன்னு போயிட்டா. நான் தான் இனிமே தம்பியப் பாத்துக்கணும்” என்று இனிமே இங்கேயே தங்கப் போறேன் என்று மறைமுகமாய் கூறிக் கொண்டிருந்தாள் பெரிய அத்தை.

“ஆ…ன்னா ஊ…ன்னா புருஷன் கிட்டக் கோவிச்சுக்கிட்டு பையத் தூக்கிட்டு, இங்க வந்து டேரா போடும் அத்தை. போகும் போது அரிசி, பருப்பு, பணம், துணிமணி என்று தேத்திக்கிட்டுப் போகும் அத்தை, எவ்வளவு சுலபமா அம்மாவைப் பக்தி விமர்சிக்கிறா… அனாதை மாதிரி செத்துக் கிடந்தாள்ன்னு, நான் இருப்பது கண்ணு தெரியலியா?”

அடுத்து சித்தப்பா…

“ம்…என்னமோப் போய் சேந்துட்டாங்க… தான் என்னவோ நிரந்தம் மாதிரியும், எல்லாத்தையும் விடாது அனுபவிக்கப் போறது மாதிரியும் ஓடி ஓடி சேத்து வைச்சாங்க… இப்ப என்ன ஆச்சு? எல்லாம் செல்லரிச்சுப் போச்சு,”என்று பெரிய அத்தையிடம் நன்கு விசிறி விட்டு அண்ணனைப் பார்க்கப் போனார்.

“என்ன குறை வச்சேண்டா உன் அண்ணிக்கு? சம்பாரிச்ச அத்தனையும் குடும்பத்துக்கே கொட்டி அழுதேன். கடங்காரி கொஞ்ச நாளா அடிக்கடி நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தா. டாக்டர் கிட்டக் காட்டினதும், ‘ஹார்ட் அட்டாக்’ பெட்டுல சேர்க்கணும், ஓய்வா இருக்கணும், கடுமையா வேலை செய்யக்கூடாது, அதிர்ச்சி கூடாதுன்னார்…”

“காசு கறக்க டாக்டர் அப்படித்தான் சொல்வார்… அதுக்காக பெட்ல சேர்த்தா யார் பார்க்கறது. எனக்கு யார் சமைச்சுப் போடறது. அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது வேலையைப் பாருண்னேன். வேலைக்குக் கூட ஆள் வச்சேன். ஆறு மாசம் ஆனதும் வேணாம்முன்னுட்டா. அவளும் நின்னுட்டா…”

அவளாகவா நின்னாள்?

அப்பாவின் வாரிசு வேலைக்காரியின் வயிற்றில் வளர ஆரம்பிச்சதும், அக்கம் பக்கம் புகைய ஆரம்பிச்சது. அவசரமாக அவளை அசலூருக்குக் கூட்டிப் போய் சுத்தம் பண்ணி வேற  ஒருத்தனுக்குக் கட்டி வச்சது அப்பா தானே?

அதில் இருந்து தான் அம்மா ஒதுங்க ஆரம்பித்தாள். ஒடுங்கவும் ஆரம்பித்தாள். அப்பா, சித்தாப்பாவிடம் தொடர்கிறார்…

“நேத்து கூட என்னவோ உடம்பு முடியலன்னு சொல்லிக்கிட்டு, ஒரு ரசத்தை வைச்சு சாதம் போட்டா… இந்த சோத்த எவன் தின்பான்னு விசிறி அடிச்சுட்டு டவுனுக்குக் கிளம்பினேன். ராத்திரிக்காவது அடையும், அவியலும் செஞ்சுவை ஒண்ணும் ஆயிடாதுன்னு சொல்லிட்டுப் போனேன்.”

“என் குணம் அறிஞ்சு, அடைக்கு அரைச்சு வச்சுட்டு அவியலுக்கு நறுக்கி வச்சு இருக்கா… நல்ல பசியோடு வந்தேன். அடையத் திங்க விடாம செத்து வச்சு இருக்கா பழிக்காரி”. அம்மா போனதை விட அடை தின்னாதது தான் அவருக்குப் பெரிசாப்பட்டது. “திட்டம் போட்டே இப்படிப் பொசுக்குன்னு போய் என்னைப் பழி ஆளாக்கிட்டா… நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல்ல. அதைக் காப்பாத்தணும். இதுவரைக்கும் யார் வீட்டிலும் நடக்காத வகையில் காரியத்தைச் செய்யணும்…” என்று மூக்கைச் சிந்தியபடியே உறுமினார்.

தேவார கோஷ்டி, அதிர்வேட்டு, மதியத்துக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு, ஒண்ணுலயும் குறை வைக்கக் கூடாது என்று சத்தமாக உறுமியபடியே கட்டளையிட்டார். பத்தாயிரம் ரூபாய் தூக்கிப் போட்டார் சித்தாப்பாவிடம். மவுனமாக லிஸ்ட் போட ஆரம்பித்தார் சித்தப்பா.

“அக்கா, நீங்க இவ்வளவு சீக்கிரமாப் போயிட்டீங்களே… உள்ளே சிரித்து, வெளியே அழும் ஜானகி அக்கா. அப்பாவின் நண்பருடைய மனைவி. அம்மா ஊரில் இல்லாத நாட்கள் இருவருக்கும் திருநாளே. அதற்காகவே அம்மாவை அடிக்கடி ஊருக்குத் துரத்தும் அப்பா. நாள் கிழமைக்கு, ஊருக்கு போனாலும் தான் மட்டும் தங்கி விடுவார். நாலு நாள் கழிச்சு வா, உடனே வந்து நிக்காதே என்று மறைமுக மிரட்டல். மீறி வந்து விட்டால் அடி, உதை.”

“இந்தக் கூத்து எல்லாம் அண்ணனுக்குத் தெரியாது. அவன் அப்பாவி. ஜானகி அக்காவை தன் பெண்ணைப் போலவே நேசித்தாள் அம்மா. பார்த்துப் பார்த்து காஃபியும், டிபனும் கொடுப்பாள். தனக்குப் பெண் இல்லாத குறையை, அவளை அலங்கரித்து நிறைவேற்றிக் கொள்வாள். அவள் குழந்தைகளையும், தன் பேரக் குழந்தைகள் மாதிரிக் கொஞ்சி மகிழ்வாள். அவள் ஜானகி அக்காவிடம் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை.”

“தான் அழகு, அறிவு ஜீவி, கை நிறைய சம்பளம், பெரிய பதவி என்ற அகங்காரம் அப்பாவுக்கு. அம்மாவைத் தனக்கு சரியான. இணை இல்லை என்ற இறுமாப்புடனே விமர்சிப்பார். வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னே, எடுத்து எறிந்து பேசும் அலட்சியம். தன் அழகுக்கும், அறிவுக்கும், பதவிக்கும் அத்தனைப் பெண்களுமே தன் காலடியில் என்ற மமதை அவருள்.”

இந்த விஷயத்தில் அவர் ஒரு சமதர்மவாதி. சாதி, இனம், உறவு என்ற பேதமில்லாமல் அவரது லீலைகளில் ஒரு சமத்துவம். அம்மாவை தன் மனைவியாகத் தன்னில் ஒரு பாதியாக என்றுமே நினைத்தது இல்லை. கொத்தடிமை என்ற நினைப்பு. எங்கும் எப்போதும் தனக்கே முதலிடம், தனக்குப் பின் தான் பிள்ளைகள் கூட என்ற இறுமாப்பு. சுருக்காக கூறினால், மணி அடித்தால் ஓடி வரும் பியூன் நிலையே அம்மாவுக்கு. அது போல் அழைப்பு மணியும் வீட்டில் உண்டு. யாராவது வந்தால் மணியடிப்பார் காரணமே இல்லாமல். அம்மா ஓடி வந்து, ஏன்? என்று கேட்க வேண்டும். அம்மாவுக்கு வந்தவர்கள் எதிரிலேயே காரணமே இல்லாமல் அர்ச்சனை செய்து அனுப்புவார்.”

“அத்தனையும் விழுங்கிக் கொண்டாள் அம்மா. எங்களுக்கும், அப்பாவுக்கும் எந்தவித குறையும் வைக்கவில்லை. அண்ணன் ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். திருமணமும் ஆகிவிட்டது. நாளை அவனுக்கு முதல் ‘கல்யாண நாள்’ அதற்காகத் தான் இன்று வருவதாக நேற்றே போன் செய்து விட்டான்.”

போன் மணி அடிக்கிறது. அண்ணாகத் தான் இருக்க வேண்டும்.

“அம்மா, உனக்காக சமையல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, மதிய சாப்பாட்டுக்கு வந்து விடு” என்று சித்தப்பா கூறுவது காதில் விழுகிறது. எனக்குத் தொண்டை அடைக்கிறது. அண்ணன் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போறான். மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்கிறேன்.

“எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி வளைய வரும் அம்மா அதிர்ச்சியில் உறைந்த அந்த நாள்… பக்கத்துத் தெருவில் ஒரு விசேஷம் என்று சென்ற அம்மா திரும்பி வரும் போது… ஜானகி அக்காவும், அப்பாவும்… ஜானகியுமா இப்படி? அம்மா உறைந்து போனாள். அதற்காக இருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. எதுவுமே நடக்காத மாதிரி இருவரும் இருந்தனர்.”

“அதன் பிறகு ஜானகி அக்கா வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு பேரும் பக்கத்து டவுனுக்குச் சென்று தேர் திருவிழா, சினிமா என்று ஜோடியாக சுற்றுவார்கள். இது அக்கம், பக்கத்தில் கசிந்து, நக்கலாகப் பேசிப் பார்வையால் துளைக்கும் போது உடைந்து போன அம்மா உறைந்தும் போய் விட்டாள். இத்தனைக்கும் ஜானகி அக்கா தூரத்து உறவும் கூட. அவள் புருஷனும் எதுவும் கண்டு கொள்வதில்லை. காசு வந்தால் போதும் என்ற நினைப்பா? அல்லது அம்மாவைப் போல் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகக் கண்டும், காணாதது போல் இருக்கிறாரா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.”

“வர வர அம்மா மவுனியாகி விட்டாள். ஒற்றைச் சொல்லிலே பதில் கூறும் திறன் அவளுக்கு மட்டுமே எப்படிச் சாத்தியமாகிறது. அடிக்கடி என்னிடம் புலம்புவாள். உன்னுடன் வந்து விடுகிறேன் என்று அவள் அரற்றும் போது மவுனகாக வெறிப்பேன். எனக்கும் ஆசை தான். அப்புறம் அண்ணனின் நிலை. இது அம்மாவுக்கும் புரியும். உன் அண்ணனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு உன்னுடன் வந்து விடுகிறேன். இனிமேலும் உன் அப்பாவின் அட்டூழியத்தைப் பொறுக்கும் சக்தியில்லை என்று புலம்புவாள்.”

“எதிர்வீட்டு அக்கா நேற்று பால் கொடுக்க வரும் போதே அம்மாவுக்குக் கடுமையான நெஞ்சு வலி. பல்லைக் கடித்துக் கொண்டு எதுவுமே காட்டிக் கொள்ளாமல் அவளைப் போக்குக் காட்டி அனுப்பி விட்டாள் அம்மா. வலின்னு சொன்னா டாக்டரைக் கூப்பிட்டுப் பிழைக்க வச்சுட்டா என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு. நீ பார்த்துக்கிட்டு சும்மா இருந்தியான்னு கேட்கிறீங்களா?”

“அம்மா ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான். அதை யாராலும் மாற்ற முடியாது. திட்டவட்டமாகத் துல்லியமாக வியூகம் அமைப்பாள். நாளைக்கு அண்ணன் வந்ததும் அவன் கையால் போய்ச் சேரணும் என்று ஆசை. புருஷன் கையாலப் போய்ச் சேரக் கூடாது என்பது அவளுடைய இறுதி ஆசை”.

“அண்ணன் வந்ததும், அவனைக் கேட்கணும். வெளிநாடு போவாதேன்னு அம்மா சொன்னாளேக் கேட்டியாண்ணு கதறணும். நீ இருந்தா இப்படி அம்மா அம்போன்னு போவாளான்னு அவன் சட்டையப் புடிச்சு உலுக்கணும்னு நினைக்கிறேன். இதோ அண்ணன் வந்து விட்டான் அண்ணியுடன். அவனால இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை”..

இரண்டு பிள்ளையப் பெத்தும் அம்மா இப்படி அம்போன்னு போயிட்டாங்களே என்று என் மீது சாய்ந்து அழுகிறான். நான் வழக்கம் போல் மவுனிக்கிறேன்.

“பாவம் அந்தம்மா மூத்த புள்ளையும் அமெரிக்கா போயிட்டு, சின்ன புள்ளையும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விஷக் காய்ச்சலில் செத்துப் போயிட்டு, தம்பி போட்டோவைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுவதே அது தான் பெரியபுள்ள. யாரோ விளக்குகிறார்கள்.”

“ம்… அந்தம்மா சின்ன புள்ளக்கிட்டப் போயிடணும்னு அடிக்கடி புலம்பும். நேத்து நல்லா நடமாடின மவராசி இதோ புறப்பட்டு விட்டாள். குரல்கள் கிசுகிசுக்கின்றன. ஒரே கூக்குரல்”.

அம்மா புறப்பட்டு விட்டா பூவும், பொட்டுமாய், மாலையும், கழுத்துமாய். என்னிருப்பிடம் தேடி இதோ வந்து கொண்டு இருக்கிறாள். அம்மா… அம்மா… குரல் எழும்பாமல் விசிக்கிறேன்…

– அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு மரணத்தின் கதை

 1. அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை கே பாலசுந்தரி அவர்களின் ஒரு மரணத்தின் கதை மிகவும் எதார்த்தமான நடையில் எழுதப்பட்ட, வாழ்வியல் உண்மை.
  ஆற்றொழுக்கான நடை.
  சிறுகதை படிப்போர் ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்த பல மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் கதைகளைப் பற்றி யோசிக்கத் தூண்டும் சிறுகதை.
  வாழ்த்துக்கள்
  பாராட்டுக்கள்
  ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *