ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 7,119 
 
 

பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது. இப்படி எத்தினை தடவை பூத்தது அது. மஞ்சள், மஞ்சளாய், குமிழி குமிழியாய் இதழ்களை மலர்த்திச் சிரித்து, வசந்தகாலப் பண்ணோடு பறந்து வருகின்ற பறவைகளுக்கு,மையலும்,கிறக்கமுமாய் வாசனையூட்டி… இப்போதுதான் பூத்திருக்கிறது பூவரசு. மையலில்லை. வாசனையில்லை. எந்தப் பறவையுடையதும் கீச்சுக் கீச்சும் இல்லை. வறண்ட வேதனையைப் பூக்களாய்ப் பிரசவித்தபடி பூவரசு நின்று கொண்டிருக்கிறது.

இந்த யுத்தப் பிரளய காலத்தில் நிரந்தரமில்லாமல் இழக்கப்பட்ட எத்தனையோ சந்தோஷங்களை, மீட்டு, மீட்டுப் பெருமூச்செறிந்த வெப்பத்தில் இலைகள் சில கருகிப் போயின. பேசாமல் செத்துவிடலாம் போலிருக்கும். சாவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் போல் தோன்றும். அந்தக் கிழவியைப் பார்க்கிறபோது. கிழவி நெடுநாளைய பழக்கம். நினைவு தெரிந்த நாளிலிருந்து கிழவி அந்தப் பூவரசையே வலம் வந்ததும், முதல் பூப்பூத்ததும், அதை சந்தோஷமாய்ப் பகிர்ந்து கொண்டதும்… என்ன இனிமையாய் இருந்தன நாட்கள். அந்தப் பூவரசம் இலைகளைச் சுருட்டிக் குழலாக்கி அவள் குழந்தைகள் ஊதும்போதும், மிருதுவாய்ச் சோர்ந்து விழும் உதிரிப்பூக்களைச் சேர்த்துச் சந்தோஷ ஆர்ப்பரிப்புச் செய்யும்போதும் என்ன இனிமையாய்க் காதில் வழிந்தோடும்.

கிழவி அப்போது கிழவியாயில்லை. இளமை சொட்டும் இளம் தாயாய் இருந்தாள். காலத்தை யாராலும் நிறுத்த முடிவதில்லை. மணிக்கூட்டுக் கம்பிகளை நிறுத்தி வைத்தாற்கூட…கிழவிக்கு என்ன நடந்தது? அவள் அந்த சுவர் மணிக்கூடே கதியாய்க் கிடந்தாள். அந்த அதிர்ச்சியான நாளில் உறைந்துபோய் மணிக்கூடு நின்றே விட்டது. பத்து மணி பத்து நிமிடம். கிழவி அந்த நேரத்தை முன்னுக்குத் தள்ளப் பகீரதப் பிரயத்தனப்பட்டாள். காலம் தலைகீழாய்க் கவிழ்ந்து எதிர்த்திசை நோக்கிப் போகவைக்க முயன்றாள். முயற்சி கூடாதவரையில், அந்த மணிக்கூட்டைக் கட்டியணைத்தபடி மேலும் நகரவிடாமல் காத்தாள். எப்பவும் அந்த மணிக்கூடு பத்துப் பத்துத்தான் காட்டும். அன்று டிக், டிக்கென்று கேட்ட சத்தம் இப்போது கேட்கவேயில்லை. அதன் மூலம் காலத்தை நிறுத்தி விட்டதாய்க் கர்வம் கொண்டாள் கிழவி. ஆனால் அதனிலும் வேகமாய் ஒலிக்கத் தொடங்கிற்று இன்னொரு டிக், டிக் சத்தம் அதிபயங்கரமாகவும் விரைவாயும் இருந்தது. அது கிழவியின் இருதயச் சத்தம். அதை ஒரு போதுமே நிறுத்திவிட முடியவில்லை.

அது கிழவியின் பிள்ளைகளின் காலம். அப்போதுதான் சுருள், சுருளாய் கரும்புகை மேலெழத் தொடங்கியிருந்தது. வானில் உறுமிக் கொண்டே ஊர்திகள் பறந்தன.

இந்த நாட்டில் இருந்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று பிள்ளைகள், அடுத்த தேசங்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடிப் புறப்பட்டு விட்டார்கள். கண் காணாத தேசத்திலென்றாலும், கவனமாய் இருக்கட்டுமென்ற கரிசனை கண் துடைத்து, அவர்களை வழியனுப்ப வைத்தது. இரண்டு பேர் எஞ்சி நின்றார்கள். தாய்க்குப் பக்கபலமாக… கடைசியில் இந்தப் பூவரசு போலவாகிற்று எல்லாம்.

பூவரசு, இருளில் தனித்து வெறித்துக் கிடக்கிறது. தன் நிழலைக் கண்டே பயப்பட்டு, என்ன நேர்ந்தது இந்த ஊருக்கு…?

பூவரசு, அப்போது கப்பும், கிளையுமாய்ச் செழித்திருந்தது. இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்பிருக்குமா…?

பிள்ளைகள் பாடசாலைக்குப் போகத் தொடங்கியிருந்தார்கள். கிழவி பூவரசிற்குக் கீழமர்ந்து ஏதாவது செய்து கொண்டிருப்பாள். சுறுசுறுப்பாய் கிழிசல்களும், சட்டைகளுக்குப் பொத்தான்களுமாய் தைத்துக் கொண்டிருப்பாள்.

இடையிடையே பூவரசுக்குக் கேட்கும்படியாய் ஏதாவது முணுமுணுப்பாள். அது அனேகமாய் ஏதாவது ஒன்றிரண்டு காகங்கள் பூவரசிலேறியிருந்து தலைக்குமேல் எச்சம் போடும் போதாயிருக்கும்.

“இந்தச் சனியனுகளுக்கு நீ ஏன் இடங்குடுக்கிறாய்…?” கிழவி முணுமுணுத்தபடியே கீழிருக்கும் கல்பொறுக்கி எறிவாள். காகங்கள் போக்குக் காட்டும். போவதாய் போக்குக் காட்டிவிட்டு அடுத்த கணம் மறுகிளையில் தாவியிருந்து கண் சரித்துப் பார்த்துக் கேலியாய் உற்றுநோக்கும்.
சிறிசுகள் நிம்மதியாய் சாப்பிடுவதையோ ஒருபோதுமே அந்தக் காகங்கள் ஏற்றுக் கொண்டதில்லை. எற்றிப் பறித்து, குழந்தைகளை அழவைத்து, முகம் பிறாண்டிப் போவதில் இந்தக் காகங்கள் எந்தவிதமான குரூர திருப்தியைத்தான் கொண்டனவோ?

பூவரசுமென்ன, விரும்பியா காகங்களை ஏற்றுக் கொண்டது. பலாத்கராமாய் வந்தமரும் காகங்களைத் தன் காற்றுக் கைகளால் விசிறி, விசிறிக் கலைத்துவிட எவ்வளவுதான் முயன்றது. காகங்கள் பறப்பதும் வருவதுமாய்…

பூவரசின் வாழ்வும், கிழவியின் வாழ்வும் சமதையாகத் தான் நடந்து கொண்டிருந்தன. கிழவிக்கு மரங்களின்மேல் அபார பாசம். அதுவும் இந்தப் பூவரசில் அதீத பிரேமை. நடுமுற்றத்தில் மையம் கொண்டிருந்த அந்தமரம் யார் கண்ணைக் குத்தியதோ? ஒருநாள் இடியப்ப உரல்கள் விற்றுக் கொண்டு திரிந்தவன் முன்னால் வந்து நின்றான்.

“நல்ல தடிச்சல் மரம் அம்மா, நல்ல விலைக்குப் போகும். இடியப்ப உரலுக்குப் பூவரசு போலை அமையுமே… பாத்துத் தாங்கோவன்…”

கிழவி சீறியெழுந்து விட்டாள்.

“போ வெளிலை, உன்னை ஆர் உள்ளை விட்டது…” என்று கத்தினாள்.

“என்னம்மா, வெறும் பூவரசு… அதுக்குப்போய் இப்படி…”

“வெறும் பூவரசெண்டாலும், அது தாற நிழலை ஆர் தருவார்…?”

அதற்குப் பிறகு எவருமே அந்தப் பூவரசைத் தொடக்கூட நினைப்பதில்லை.

குழப்படிக்கும், குறும்புக்குமென்று பெயரெடுத்த ஐந்து பையன்கள் கிழவிக்கு. ஆனால் கிழவியின் கணக்கில் பிள்ளைகள் ஐந்தல்ல. அவள் தினமும் பொங்கிப் பொங்கிப் போடுவது ஐந்து பிள்ளைகளுக்கு அளவாயில்லை. உலை வைப்பதற்கென்றே ஒரு பெரிய பானை வைத்திருந்தாள் அவள். தினமும் மூன்று கொத்து அரிசி அவள் உலையில் இடுவாள். ஐந்து பையன்களும் கொத்துக் கொத்தாய்க் கூட்டிவரும் சினேகிதப் பையன்களுக்கெல்லாம் அவள்தான் அன்னமிட்டாள். பூவரசு வருகின்ற பறவைகளுக்கெல்லாம் இறகு கோதிக்கொண்டு தானித்திருந்தது.

முந்தின காலத்தில் பெரிய வேளாண்மைக்காரனாயிருந்த அவளது தகப்பன் ஏக்கர், ஏக்கராய் இருந்த வயல் பூராவையும் இவள் பேரில் எழுதிச் செத்துவிட்ட பிறகு, அவளுமென்ன அவற்றை வைத்து, நாடாளவா போகிறாள்?

பசித்தவன் வயிற்றுக்கு ஒரு வாய் போடுவதைப் போல ஒரு சந்தோஷம் எங்குதான் கிடைக்கும்…? ஆனால் கிழவியின் இளமைக்காலமும் தனித்தேதான் இருந்தது. சகல வசதிகளும் வீட்டோடே வாய்க்கப் பெற்றிருந்தும்கூட அவளால் எல்லை தாண்டி தன்னொத்த சிறுமிகளோடு விளையாட முடியாதிருந்தது. தனித்து வளர்ந்த எந்த மரத்தோடும் ஒட்டுறவாகாமல் திமிர் பிடித்தது என மற்ற மரங்கள் எண்ணும்படியாய் செழித்து நிற்கிறதே பூவரசு. ஆனால் திமிர் பூவரசுக்கு இல்லை. என்பதையும் யாராவது புரிந்து கொள்ளவேண்டுமே. யாரும் புரிந்து கொள்வதாயில்லை.

ஒரு போது…அப்போது கிழவி குமரியாய் இருந்தாள். வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்தான் என்பதற்காக ஒரு இளைஞனை, கிழவியின் தகப்பன் மரத்தில் கட்டி அடித்ததும் நடந்தது. அதுவும் இந்த முற்றத்தில்தான். கிழவி உருகி உருகி உறைந்தபோதும், எதையும் வெளிக்காட்ட முடிந்ததில்லை. வெளிக்காட்டியிருந்தாலோ அவன் எட்டிப் பார்த்ததில் இவளுக்கும் பங்கிருந்ததாய் விமர்சிக்கப்பட்டு, இவளுக்கும் முரட்டி அடி கிடைத்திருக்க கூடும். இவள் மூச்சற்று உறைந்திருந்தாள். அப்போது பூவரசும் சின்னது. விஷயம் புரியாமல் எட்டி எட்டி வேலி நோக்கி நகர்ந்து மற்ற மரங்களோடு பேசிப்பார்க்கவே முனைந்தது. இது பிடிக்காமற் போயோ என்னவோ அவள் தகப்பனின் கட்டளையால், கிளைகள் வெட்டப்பட்டு கொஞ்சநாள் மொட்டையாகவே நின்றது. பூவரசு மட்டுமில்லை. வேலியோடு நீட்டிக்கொண்டு நின்ற மற்ற மரங்களும் அப்படித்தான் வெட்டப்பட்டன.

“கொஞ்சமாவது அடக்கி வைச்சாத்தான் எல்லாமே கட்டுப்பாட்டோடை சீராய் இருக்கும்…” இதைச் சொன்னது கிழவியின் தகப்பன்தான். ஆனால் அது பூவரசுக்காகச் சொல்லப்பட்டதா? இன்று வரை பூவரசுக்குப் புரியவில்லை.

ஆனால் பிறகு கிடுகிடுவென்று அதீதமான வளர்ச்சி இருந்தது. இலைகள் பளபளத்துத் துளிர்கள், வெளிக்கிளம்பி. குவியல் குவியலான பச்சைகளுக்கிடையே பூவரசு புதுமை பெறத் தொடங்கியது. கிழவியின் முகத்திலும் இளம்பருவத்துக் கனவுகளும், கற்பனைகளும் துளிர்த்துப் புன்னகையாய் அரும்பின. இன்னொரு கரத்தில் அவளை ஒப்புவிக்கப் போவதாய், தகப்பன் ஊரூராய் சொல்லி… ம்…பூவரசுக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

ஆண்டாண்டாய், தவமிருந்து காத்ததற்குக் கிடைத்த பரிசாய், அந்த முருக்க மரம் பூவரசுக்கு சற்றுத் தள்ளி நடப்பட்டது. பூவரசுக்குப் பயமாயிருந்தது. அந்த முட்களைக் கண்டால் போதும். மேனி நடுங்குறத் தொடங்கியது.

இது ஏதோ…என்ன வில்லங்கமோ என்று… சிவப்புப் பட்டு இடையில் கட்டி முள்முருக்கு பூவரசைப் பார்த்து அட்டகாசமாய்ச் சிரித்தது.

“அடி என்னடி பயம் என்னில்…கிட்ட வாடி…” பூவரசு பயம் தெளிந்தது. தன் இலைக்கரங்களை நீட்டி நீட்டிப் பூவரசைத் தழுவிக் கொண்டது.

இவ்வளவு நாள் தனிமைக்கும் சேர்த்து பூவரசு தன்னோடு ஒட்டிக்கொண்ட முள்முருக்கிடம் பேசிக்கொண்டேயிருந்தது. இரவுகளில் நிலா வழிகிற பௌர்ணமிப் பொழுதுகளில் அவை விழி ஓயாமல் பார்த்து, வாய் ஒயாமல் பேசிக்கொண்டிருந்தன. மகிழ்வின் உச்சத்தில் பூவரசு, பூக்களை புஷ்பித்துக் கொண்டேயிருந்தது. முள்முருக்கும் இரத்தச் சொட்டாய்ப் பூத்தது. அந்தப் பூவை எட்டித் தழுவித் தன் ஆனந்தம் சொல்லி ஆர்ப்பரித்து பூவரசு. இப்போது குருவிகள், பறவைகள் வந்திருந்து சல்லாபிக்கத் தொடங்கின. பூக்களை வருடி கீச்சுக் கீச்சென்று குதூகலித்தன. குஞ்சு, குருமனாய் எத்தனை பறவைகள். கிழவியின் வீட்டுக்குள்ளும், குழந்தைச் சத்தங்கள் வருஷத்துக்கொன்றாய் அதிகரிக்கத் தொடங்கின. முள் முருக்கோடு கொண்ட உறவின் விளைவாய், பூவரசு தாய்மைப் பூரிப்போடு பூத்துக் கிடந்தது. அந்தப் பூரிப்பிலும் மண் விழுந்தது. ஒருநாள்…அந்த முள்முருக்குச் சாய்ந்தது. இதுவரையில் எந்தக் காற்றுக்கும் எதிர்த்து ஈடுகொடுத்தபடி நின்ற அந்த மரத்திற்கு என்னவாயிற்று…? உள்ளேயே அரித்து வேர் இற்றுப் போயிற்றோ…? பூவரசு இலைகளை ஆட்டி அசைத்துக் கதறியது. இல்லை, ஒரு மூச்சுப் பேச்சு இல்லை அந்த முருக்கமரத்திடம்.

முதல் நாள் அன்பாய்த் தழுவியபோது, பிரிய மனமற்றுப் பிரிந்தது, இந்தப் பிரிவு நிரந்தரம் என்று புரிந்துதானோ…? காற்றில் கைவிரித்து வானத்தில் கடவுளைத் தேடிக் குமுறி அழுதாள் கிழவி. சுற்றிவரச் சுற்றம் சூழ்ந்தது, ஆறுதலூட்ட. ஆனால் புற்றுநோய் அரித்த கணவனது உடலைப்போல், அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவளது உள்ளத்துக்கு யார்தான் ஆறுதலூட்டமுடியும்?

அப்போது நேரம் பத்துப் பத்து. கணவன் போன கிழமைதான் அதை வாங்கி வந்து மாட்டியிருந்தான். அது என்ன அதிர்ச்சியில் உறைந்ததோ? அப்படியே நின்றுவிட்டது. கிழவி அதை அப்படியே கிடக்கவிட்டாள். அந்த நேரத்தை மாற்ற வேண்டும் என்றோ, மணிக்கூட்டைத் திருத்த வேண்டும் என்றோ அவள் நினைக்கவேயில்லை. அவள் வரையில் உலகம் அன்றோடு நின்று போயிற்று. அந்த நேரம் அவள் கணவனைக் காவு கொண்ட நேரம். அது இன்னோரு தரம் வரவே கூடாது என்று அவள் விரும்பினாள். ஆனால் அது எப்படியும் வந்துதானே தீரும். தினமும் இரண்டு தடவை காலை, மாலையென எப்போதும் பத்துப் பத்து வந்துதானே தீரும்.அதை எப்படி நிறுத்த முடியும்…?

கிழவி அந்தக் கடிகாரத்தை யாரையும் தொட விட மாட்டேன் எனப் பிடிவாதமாய் நின்றாள். அந்த வீட்டுற்கு வரும் யார் கண்ணிலும், அந்தப் பத்துப் பத்துத் தானே தெரியும். பையன்கள் சின்னனாய் இருக்கும்போதே, அதைத் தொட்டுப் பார்க்கவும், ரகசியமாய்க் கழற்றிப் பார்க்கவும் ஆசையுற்றார்கள். ஆனால், எட்டாத் தொலைவிலிருந்தது கடிகாரம். அவர்கள் ஆசை அவர்களுக்குள்ளேயே அடங்கிப்போனது. நாளாக, நாளாக வீட்டுக்கு வரும் பையன்களின் தொகை கூடக் கூட அதைக் கழற்றிப் பார்க்கும் ஆவல் கூடியதே தவிரக் குறையவில்லை.

“இது ஏனடா, அடிக்காமல் கிடக்கு…” கூட வரும் பையன்களின் நச்சரிப்புத் தாங்காமல் பெரியவன் ஒருபோது கதிரைவைத்து ஏற முயல்கையில் சின்னவன் ஓடிவந்து கிழவியின் காதில் ஓதிவிட்டான். கிழவி பூவரசில்தான் கம்பு முறித்தாள். தன் மனமே, தாறுமாறாய் முறிக்கப்பட்டதாய்க் கதறிக் கதறி, அவனுக்கு முதுகுத்தோல் உரியும் வரை அடித்துக் கொண்டேயிருந்தாள். அதாவது, அடுத்த தரம் மணிக்கூட்டைத் தொடும் எண்ணமே பையனுக்கு வராதபடி…வரவில்லைத்தான். எந்தப் பையன்களுமே, அதற்குப் பிறகு மணிக்கூட்டைப் பற்றிக் கதைக்கவேயில்லை.

ஆனால், கடைசி கடைசியாய் எல்லோரும் வளர்ந்த பிறகு, கனடாவுக்கும், சுவிசுக்குமாய் மூன்று பேர் குடும்பத்தோடு, பிரஜாவுரிமை பெற்றுவிட்ட பிறகு, எஞ்சி நின்ற இரண்டு பையன்களில் ஒருவனுக்கென்று வாய்ந்த மனைவி, மெல்ல வாயைக் கிளறத் தொடங்கினாள்.

“ஏன் மாமி, ஓடாத மணிக்கூட்டைச் சுவரிலை தொங்க விட்டுக் கொண்டு… வாறா
க்கள் ஒரு மாதிரி நினைக்கப் போகினம்…”

பிள்ளைகள் இரண்டு பேரும் ஒரு பூகம்பமே உருவாகி விடப்போகிறதென்றும், அதற்குள் மருமகள் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறாள் என்றும் பயந்தார்கள். ஆனால் கிழவி, தள்ளாமையை உணரத் தொடங்கியிருந்தாள். இனி, அந்த வீட்டில் அவர்களது சொல்லுக்குக் கொஞ்சமாவது மதிப்புக் கொடுக்க வேண்டி வரும் என்றும், இல்லாவிட்டால் பிள்ளைகள் மனைவிகளின் பின்னே போய்விடுவார்கள் என்பதையும் உணரத் தலைப்பட்டிருந்தாள். எனவே இளையவனை அருகே அழைத்தாள். “எடேய், ராசன், அதை ஒருக்கா மெல்லமாக் கழட்டு பாப்பம்…” இளையவன் அதைச் சொன்னது தாய் தானோவென ஒரு கணம் ஐயுற்றான். பின்னர் கதிரை போட்டு ஏறிநின்று மெதுவாய்க் கழற்ற எத்தனித்தான். அதற்குள் எத்தனையோ தடவைகள் கிழவி, “கவனம், கவனம்…” என்று கத்தியிருந்தாள்.

“விழுத்திப் போடாதையப்பன், நேரம் கொஞ்சம்கூட மாற விடாதை…”

என்றிவ்வாறாய், எத்தனையோ பக்குவங்களுக்கு மத்தியில் கடிகாரம் கழற்றப்பட்டது. கிழவி அதை ஒரு குழந்தையை வருடுவது போலக் கையில் வாங்கி சுவரோடு சாய்ந்து சம்மணமிட்டபடி மடியிற் கிடத்தினாள்.

கண்கள் வழிய வழிய, முந்தானைச் சேலையெடுத்து முப்பது வருஷத்துத் தூசுகளையெல்லாம் ஒற்றியெடுத்துத் துடைத்தாள். அப்படியே நீண்ட நேரம் அழுதபடியேயிருந்தாள். மருமகள் கணவன் காதில் ஏதோ சொல்ல அவன் இவள் அருகுக்கு வந்தான்.

“இனி, என்னம்மா செய்யிற, தாங்கோ கடையிலை திருத்தக் குடும்பம்…

கிழவி ‘வெடுக்’ கென்று திரும்பினாள்.

“நான் தரன், நீ வேணுமெண்டா வேறை வாங்கு…”

கிழவி அழுதுகொண்டே அதைத் தூக்கிக் கொண்டு போய்த் தன் கட்டிலின் தலைமாட்டில் வைத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு அந்தக் கடிகாரத்தின் இருப்பிடம் அதுவாய்த் தான் போயிற்று. சுவர் வெறுமையாகவே கிடந்தது. அதிலே இன்னொரு கடிகாரம் இன்னும் மாட்டப்படவில்லை.

காலம் மாறத் தொடங்கியது. கரும்புகை வளையங்கள் சுருண்டு, சுருண்டு மேலெழத் தொடங்கின. அருமையான நூல்களைத் தின்று தீர்த்த நெருப்பு இன்னும் பற்றிப்படர இடம் தேடிக் கொண்டிருந்தது. ஆயுதம் ஏந்திய காக்கியுடைகள் பரவத் தொடங்கின. பூட்ஸ் கால்கள் முற்றங்களை உழக்கித் தீர்த்தன. அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்த பையன்கள் சிலர் காணாமல் போனார்கள். கிழவியின் மருமகள்களோ இரண்டும் கெட்டான் வயது பிள்ளைகளை வைத்துக் கொண்டு, எந்த நேரமும் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஊர் ஏன் இப்படிப் போயிற்று…? முன்பிருந்த இயல்பு வாழ்க்கை இனி வரவே வராதா…? என உள்ளங்கள் தேம்பிக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென்று மீண்டும் ஊரைச் சுற்றி எக்கச்சக்கமாய் கருவளையங்கள் மூடின. ஊர் போரின் கரங்களால் முற்றுகையிடப்பட்டது. பூவரசில் குடியிருந்த பறவைகளெல்லாம், பலத்த வெடிச்சத்தமொன்றில் சிதறிக் கலகலத்துப் பறந்து போயின. பூவரசு வெறிச்சோடிப் போயிற்று. வெறும் வெடிச் சத்தங்களும், பல்குழல் ஒலிகளும் ஒவ்வொரு வீடுகளையும் தரைமட்டமாக்கி கொண்டிருந்தன.

“இனி, இஞ்சை இருக்கேலாதம்மா… எல்லாச் சனமும் போட்டுது. நாங்களும் போவம்… அம்மா…” பிள்ளைகள் கொஞ்சினார்கள். மன்றாடினார்கள். கிழவி மசியவில்லை.

“நான் வரன், இந்தப் பத்துப் பத்தை விட்டிட்டு நான் வரன். அந்தப் பத்துப் பத்திலையே, நானும் அவரிட்டைப் போவன்…”

கிழவியின் பிடிவாதத்துக்கு முன் அவர்கள் தோற்றுப் போனார்கள்.

“இனியும் நிக்கேலாதப்பா. எங்கட இளம் பிள்ளைகளை வைச்சுக்கொண்டு நாங்கள் என்னெண்டு இஞ்சை இருக்கிறது…” என்று மருமக்கள் மூக்கை உறிஞ்சத் தொடங்கினார்கள்.

குண்டுச் சத்தங்களும் அதிர்ந்து கொண்டேயிருந்தன. கடைசியில் அவர்கள் கிழவியை விட்டுவிட்டுப் போயே விட்டார்கள். ஆனால் ஒருவன் வருவான். ஓவ்வொரு நாளும் சண்டை ஓய்கிற தருணங்களுக்காய்க் காத்திருந்து, பாணோ ,சோறோ பசிக்குத் தந்து விட்டுத் தம்மோடு வந்து விடும்படி கெஞ்சுவான். கிழவி அசையமாட்டாள்.

கிழவி வரவே மாட்டாள் என உணர்ந்து பின்னர், லக்ஸ்பிறே பக்கற்றுகளும், பிஸ்கட் பெட்டிகளுமாய் தினமும் கொண்டு வந்து கொண்டிருந்தான். அந்த வரவும் திடீரென்று நின்றது. பூவரசைத் தேடி வந்துகொண்டிருந்த ஒரேயொரு குருவியும் வழிமாறிப் பிரிந்தது.

ஊர் எல்லையில் பயங்கரமாய் சண்டை தொடங்கி விட்டது. அதைத் தாண்டி வரமுடியாத நிலை மகனுக்கு ஏற்பட்டிருக்கும்.

கடவுளே, அவன் இனி இஞ்சை வரக்கூடா…” கிழவி அதைத்தான் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கிழமை கிறீம் கிறேக்கர்களையும், லக்ஸ்பிறே மாவையும் தின்று காலம் கடத்தினாள். வெறுப்பாயிருந்தது. என்றாலும், பத்துப் பத்திலேயே ஒரு காலனின் வரவை எதிர்நோக்கியிருந்தாள்.

தினமும் அடுத்தடுத்துப் பாய்ந்துவரும் மல்ரிபரல் ஷெல்கள் ஒவ்வொரு வீடுகளையும் சாய்த்துச் சரித்துத் தரைமட்டமாக்குவதை அவள் ஒரு கையாலாகாத்தனத்தோடு பார்த்தபடியிருந்தாள். மரங்கள் முறிந்தன. எத்தனையோ காலமாய்ப் பாடுபட்டு வளர்த்த பசுமைச் சோலைகளெல்லாம் கண்முன்னாலேயே பொசுங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குண்டுச் சத்தங்களும், விமானங்கள் பதிந்து தாழ்கின்ற இரைச்சல்களும் கிழவியின் செவிமடல்களை முட்டி மோதி நடுக்குறச் செய்தன.

“அந்த மனிசன், புண்ணியஞ் செய்தது, இப்படியான கோரங்களைப் பார்க்காமலே போய்ச் சேர்ந்திட்டுது…”

கிழவி நடுங்கி, நடுங்கி முணுமுணுத்துக் கொண்டு அந்தச் சுவர்க் கடிகாரத்திற்குள் முகம் புதைத்தபடி கிடந்தாள். சுற்றுத்தள்ளி பிள்ளைகள் இருந்தபோது அவசரத்துக்கென்று வெட்டப்பட்ட பங்கர் விளிம்போரம் நசுங்கிச் சிதைந்து கிடந்தது.

“நல்லவேளை அதுகள் போய்த் தப்பீற்றுதுகள்…” இப்போது ஷெல்கள் கிழவியைத் தாண்டித் தாண்டிப் போகாமல் அருகருகே வெடித்துச் சிதறி வெளிச்சங்களை உற்பவித்து ஊரின் வாழ்வை இருட்டடித்துக் கொண்டிருந்தன.

பூவரசு…எத்தனையோ, தசாப்தங்களை வேதனையோடும், சந்தோஷத்தோடும் வாழ்ந்துவிட்ட பூவரசு…பறவைகளெல்லாம் பறந்து போய்விட முள்முருக்குப் பற்றிய ஞாபகங்களையெல்லாம் ஏக்கத்தோடு, தூசு தட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பூவரசு…சரிந்தது.

வேருக்கடியில் விழுந்து சிதறிய ஒரு ஷெல்லால் பாறி விழுந்து பொறியும் ஒலியில் திடுக்கிட்டாள் கிழவி. கடிகாரத்தை அணைத்தபடியே வாசலால் எட்டிப் பார்த்தவள் நடுநடுங்கிக் கதறினாள்.

“அடி நீயும் போட்டியேடி…”

அடுத்த கணம், சுவரில் மோதி வெடித்த ஷெல் துண்டுகளால் அந்தக் கடிகாரத்திடமிருந்து பிரிக்கப்பட்டு, எற்றப்பட்ட கிழவியின் தலை பூவரசின் அடிவேர் கிண்டிய பள்ளத்தில் கிடக்கிறது.

“டிக்…டிக்…” அது கிழவியின் இருதயச் சத்தமில்லை.

அந்தக் கடிகாரம் திரும்பவும் ஓடத் தொடங்கி விட்டது.

– தினகரன் வாரமஞ்சரி 12.08.2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *