ஒரு பூனைக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,719 
 
 

(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூனையாருக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.

மிளகாய்த் தூள் கலந்த காரக் கறியை விரும்பி யுண்ணும் எசமானரிடம் வளர்ந்தது அந்தப் பூனை. உறைப்புக் கறிக்கும் சோற்றுக்கும் அதன் நா பழக்கப்பட்டுவிட்டது. ஆனாற் கடந்த ஒரு வாரமாக அதற்கு உறைப்புக்கறியே கிடை க்கவில்லை! காரக்கறி இல்லாமல் உள்ளே சென்ற உணவு சமிக்கவில்லை!

பூனையாருக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.

எசமானர் தன் செல்லப் பூனையின் அவஸ்தையைக் கண்டார்! அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவருக்கு.

காரணம அவருக்குத் தெரிந்தது தான்!

பூனைக்கு மட்டும் என்ன? மிளகாய் இல்லாத கறியைச் சாப்பிட்டதில் அவருக்கும் வயிற்றிலே கோளா றாகத்தான் இருந்தது.

ஏழெட்டு நாட்களுக்கு முன்னால்…… அன்று மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவர் மனைவி யிடம் கேட்டார்.

“இன்றைக்குக் குழம்புக் கறியில்லையா?”

“இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? நீங்கள் வோட்டுப் போட்ட அரசாங்கத்திடம் கேளுங்கள்” என்று எரிந்து விழுந்தாள அவர் மனைவி.

“இன்னம் மூன்று மாதங்களிற் பார். ஊரெல்லாம் நம் நாட்டு மிளகாயாகவே இருக்கும்”

“அதுவரைக்கும் வெள்ளைக் கறிதாள். அதுவும் பச்சை மிளகாயும் இல்லாமல், விருப்பமென்றாற் சாப்பிடுங்கள்” என்று மீண்டும் சீறிய மனைவி அன்றிலிருந்து குழம்புக் கறியே சமைக்கவில்லை. அதன் காரணமாகத் தான் பூனையாருக்கு, ஏன் எசமானருக்கும் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகின்றது.

பூனையாரின் சங்கடத்தை அவதானித்த எசமானர் “மித்ரா! பஞ்சதந்திர காலத்திலே உன் முன்னோன் ஒருவன், அவனுக்குப் புகலிடமளித்த கிழக் கழுகை ஏமாற்றிப் பறவைக் குஞ்சுகளைக் குதறினான். அந்தப் பாவத்தின் காரணமாகத்தான் இப்போது உனக்கு உறைப்புக் குழம்பு கிடைக்கவில்லை. ஆனால் அதை யிட்டுக் கவலைப்படாதே. சில மாதங்களுக்குப் பொறுத்துக் கொள்! பின்னர் உள்ளூரிலேயே நமக்குத்தேவையான மிளகாய் உற்பத்தியாகி விடும்.”

தற்செயலாக அடுக்களையிலிருந்து வெளியே வந்த அவரது மனைவி, தன் கணவரின் உபதேசத்தில் ஆத்திர மடைந்தவளாய் “மீனும் இறைச்சியும் என்ன விலை விக்குது. அதையும் தின்னாமத் தியாகம் பண்ணுங்கள். நாளைக்குப் பருப்புக்கறி மட்டுந்தான். அதையும் எப்ப நிப்பாட்டப் போறாங்களோ?” என்று கர்ண கடூரமாக முழக்கிவிட்டு உள்ளே செனறாள்.

தன் மனைவியின் பேச்சுக்குப் பதில் சொல்லமுடியாது தவித்த தன் எசமானரைப் பூனை ஆதுரத்தோடு பார்த்தது!

எசமானரும் பூனையை அன்போடு தடவிக் கொடுத் துக் கொண்டே “கேட்டாயா அவள் சொன்னதை? இனி உனக்கு மீனும் இறைச்சியும் கூடத் தர மாட்டாளாம். எப்படித்தான் வாழப் போகிறாயோ? எல்லாம் உன் முன்னோன் செய்த பாவத்தால் வந்த வினை” என்றார் எசமானர்.

பூனை அவரிடம் அமைதியாகக் கேட்டது. “நான் தான் என் முன்னோன் செய்த பாவத்தால் கஷ்டப்படு கிறேன். நீங்கள் யார் செய்த பாவத்திற்காகக் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கும் மீனும், இறைச்சியும் குழம்பும் கிடைக்காது தானே?”

“அதுவா? அதுவும் என் முன்னோன் செய்த பாவந் தான்! மிளகாயையே தெரியாத இந்த நாட்டிலே அதைப் பழக்கி வைத்த என் முன்னோன் செய்த பாவத்தினாற்தான் நான் கஷ்டப்படுகிறேன்” என்றார் எசமானர்.

“இல்லை. உதட்டளவிற் சோஷலிஸம் பேசுபவர் களை நம்பியதுதான் நீங்கள் செய்த பாவம்” என்று வெடுக்கென்று பதில் சொல்லிற்று பூனை!

திகைப்படைந்த எசமானர் சுதாரித்துக் கொண்டு “இதை வெளிப்படையாகச் சொல்ல நானும் உன்னைப் போலப் பூனையாகப் பிறக்கவில்லையே, அதுவும் நான் செய்த பாவந்தான்” என்று பெருமூச்செறிந்தார்.

– இளம்பிறை’72

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *