ஒரு நாள் ஒரு கனவு….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 9,480 
 

நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், இண்டெர்நெட்டில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மற்றும் சிரிப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது.

“அம்மா, தம்பியைப் பாருங்கம்மா, தூங்கவிடாம தொந்தரவு பண்றான்..”, என்று பெரியவன் அம்மாவிடம் சொன்னான். அதற்கு, “டேய், விளையாடாமா சீக்கிரம் தூங்கு, இல்லேனா உங்கப்பன கூப்பிட்டு அடிக்க சொல்வேண்டா…..”, என்று என் மனைவியும் சிறிய மகனை மிரட்டினாள்.

சிறிய மகன் அம்மாவுக்கு அடங்காத அஞ்சா நெஞ்சன், எனக்கும் மட்டுமே பயப்படுவது போல் நடிப்பான், ஏனென்றால், நானும் அவனை மிரட்டுவது போலல்லவா நடிக்கிறேன்.

நிறைய தடவை சொல்லிப்பார்த்து எரிச்சலடைந்த மனைவியின் கோபம் என்னை நோக்கி திரும்பியது. “என்னங்க…………, என்னங்க………. கம்புயூட்டர ஆஃப் பண்ணிட்டு இங்க வர்றீங்களா….. இல்ல நாங்க அங்க வரட்டுமா…….” என்றாள்.

“ஐயோ, ராட்சஸி வேற குட்டிச்சாத்தான்களை கூட்டிட்டு இங்க வந்தானா, நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே” என்று கணிணியை ஷட்டவுன் செய்யாமலேயே ஆஃப் செய்துவிட்டு படுக்கையறையை நோக்கி ஓடினேன்.

“ஏண்டி, காட்டுக்கத்து கத்தற, எல்லாரும் பேசாம தூங்க வேண்டியது தானே….”, என்றேன். “யோவ், இங்கபாரு பலதடவை உங்கிட்ட சொல்லிருக்கேன், பசங்க முன்னாடி வாடி, போடி சொல்லாதனு, அப்புறம் நான் பொல்லாதவ ஆயிடுவேன் ஆமா…” என்று மிரட்டலுடன் கூறினாள்.

“என் பொண்டாட்டி சொல்றத தான் செய்வா, செய்றதத்தான் சொல்வா….”, என்பது என் பத்துவருட திருமண வாழ்க்கை அனுபவம். ஒரு தடவ நான் மப்புல இருக்கும்போது என் உச்சந்தல முடிய பிடிச்சு மாவாட்டுற மாதிரி ஆட்டி, கும்மு கும்முனு கும்மியிருக்கா, இதை வெளிய சொன்னா, எனக்குத்தானே அவமானம்னு மனசுக்குள்ளேயே நொந்து நூடுல்ஸ் ஆன தினங்கள் தான் அதிகம்.

“ஸாரிடா, செல்லம்…”, என்று அவள் அருகில் அனுசரனையுடன் உட்கார்ந்தேன். மனதிற்குள், ஒரு நாளைக்கு இல்லேனா இன்னொரு நாளைக்கு வைக்கிறேன்டி வேட்டு…, என்று நினைத்துக் கொண்டே படுக்கையில் கிடந்தேன்.

பத்து நிமிடத்தில் அனைவரும் உறங்கிவிட்டனர் போலும், Centralized A/C செய்யப்பட்ட வீட்டினுள்ளேயே, ஒரு தனியறையில் A/C கம்ப்ரஸர், ப்ளோயர் இருப்பதால் அதன் இயக்கம் மட்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

எனது கண்ணை மூடியிருப்பது மட்டும் நினைவு இருந்தாலும் நான், சிறிது சிறிதாக என் சுயநினைவை இழந்து உறக்கத்திற்குள் சென்று கொண்டிருந்தேன். என் உடல் சுருங்கி, உள்ளம் அகன்ற குழந்தைப் பருவத்துக்குள் சென்றிருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். ஆம், நான் கனவு கொண்டிருக்கிறேன். அதுவும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையல்லவா கனவாய் காண்கிறேன்.

ரயில்பெட்டி போன்று வரிசையாகக் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள், அவை ஒவ்வொன்றும் மூன்று அறைகளைக் கொண்டிருந்தது. முதல் அறை 10க்கு 10 அடிகள் கொண்டது. அந்த அறை முழுவதும் நிரப்பியது போன்ற ஒரு இரும்பு கட்டில், இது தான் எங்கள் குடும்பத்தின் புரொடக்சன் மெஷின், புரியலயா அட இது தாங்க எங்க பெற்றோரின் ஜல்ஜா பண்ற குல்ஜா கட்டில். பகல் நேரங்களில் இதில் யாரும் அமரமாட்டார்கள். இக்கட்டிலின் மேலே, கிழிந்த பெட்சீட்டால் கவர் செய்யப்பட்ட ஒரு பஞ்சு மெத்தை இருக்கும். ஏழைகளின் பஞ்சு மெத்தையில் உட்கார்ந்தால், ஒரு திடமான பெஞ்சில் உட்கார்ந்தது போன்ற உணர்வையே தரும். எங்கே வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பஞ்சுமெத்தையின் தன்மை அறிந்து விடுவார்களோ என்று அஞ்சியே, அதை மடித்து ஓரத்தில் வைத்திருப்போம்.

இந்த வரவேற்பரை கம் பெட்ரூமில் தான் கிழிந்த காக்கிக்கலர் ட்ரவுசர், பட்டன்கள் போய் பின்னூசியால் குத்தப்பட்ட சட்டை சகிதம் நின்று கொண்டிருக்கிறேன். எனது பின்னால் நிற்கும் அம்மா, எனது பரட்டைத் தலைக்கு தேங்காய் எண்ணை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். “ஏண்டா, குளிச்சு எத்தன நாள் ஆச்சு, தலையில கப்பு அடிக்குது…”, என்று என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினார்கள்.

“சும்மா, எதுக்கெடுத்தாலும் கொட்டாதம்மா, சோப் தீர்ந்து ஒரு வாரம் ஆச்சு, வாங்கினீங்களா…”, என்று எதிர் கேள்வி கேட்டேன். “அத ஏண்டா, ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி சொல்ற…” என்று அதற்கும் ஒரு கொட்டு கிடைத்தது. “ஊம், ஊம், ஊம்……….”, என்று அழ ஆரம்பித்தேன்.

“சண்டாள நாயே, வீட்டுக்குள்ள அழுகுறியா… முதல்லயே வீட்டுக்குள்ள கஷ்டம், இதுல நீ வேற அழுது என் உயிர வாங்குறியா….” என்று முதுகில் ரெண்டும் வைத்தார்கள்.

“நீ அடிச்சதால் தானே அழுகுறேன், ஒண்ண வளத்துறதுக்கே துப்புல்ல இதுல பத்தாவதா என்ன வேற பெத்துட்டு அடிக்கிறயா…”, என்று கேள்வி கேட்டு கை ஓங்க, நான் என்ன 2007ன் குழந்தையா?

அம்மா அடியின் வலியைக்காட்டிலும், தனது ஏழ்மையை மறைப்பதற்காக மேலும் என்னை அடித்தது தான், என் அழுகையை கூட்டியது. சிறுவனக்கெப்படி தெரியும் ஏழ்மை மறைக்கப் படவேண்டுமென்று.

“சரி, சரி அழுகையை நிறுத்துடா……. சும்மா, நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு….” என்று அம்மாவின் அதட்டல் அதிகமாகவே, என் அழுகையைச் சத்தத்தை நிறுத்தி மனதில் மட்டுமே அழுது கொண்டிருந்தேன்.

“ஊம், ஊம், ஊம்………… அம்மா பால், ஊம்…….. தீக்கிதம் பால் குதும்மா…”, என்ற பிஞ்சு மொழியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, என் காதில் விழுகிறது. எனக்கும், மனைவிக்கும் நடுவில் உறங்கிக் கொண்டிருக்கும், மூன்று வயதான இரண்டாவது குழந்தையின் தொடைகளில் ஓங்கி ஒரு அடி வைக்கிறாள், என் மனைவி.

“சனியன் புடிச்சவனே, அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு… தூங்க வந்தா அப்பன் விடுறதில்ல, தூக்கம் வந்தா பையன் விடுறதில்ல…” என்று சலித்துக் கொண்டே பால் கலக்க கிட்சனை நோக்கி நடந்தாள் என் மனைவி.

கனவு கலைந்தது.

கருத்து : சிறுவனாக வரும் ஏழைத்தாயின் மகனும், குழந்தையாக வரும் பணக்காரத்தாயின் மகனும், அம்மாக்களால் அடிக்கப்படுகிறார்கள். விலங்குகளுக்கு கூட ஒரு புளுகிராஸ் இருக்கிற காலமிது, குழந்தைகளை அடிக்காதீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *