(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் கண்களை உறக்கம் தழுவ மறுத்தது. மனத்துக்குள் சந்தோஷம் அலை அலையாய் எழும்பிப் புரண்டதால், வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல இருந்தது. “என்னங்க… என்ன தூக்கம்? எழுந்து உட்காருங்க… நம்ம பையனைப் பத்திப் பேசலாம்…” என்று உறங்கும் கணவனை உலுக்கி உட்கார வைக்க வேண்டும் போல இருந்தது. அவள் எண்ணியதற்கு ஏற்றாற்போல அவள் பக்கமாகப் புரண்டு படுத்தவர் அவள் இன்னும் கண்ணயராமல் இருப்பதைக் கண்டு “என்ன துளசி… தூக்கம் வரலையா?” எனக் கனிவோடு கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிய அவள் அவர்கள் இருவருக்கும் இடையில் படுத்த தன் மகனின் தலைமுடியை மெல்லக் கோதிவிட்டாள்.
சின்னச் சின்னப் பிஞ்சு விரல்கள். ரோஜா மொட்டுகளை ஒன்றாகக் கட்டி வைத்ததுபோன்ற சிவந்த நிறம், உருண்டை முகம், சற்றே மூடி உறங்கும் அந்தக் கண்களின் ஓரத்தில் கறுப்புக் கம்பளியை வெட்டி ஒட்ட வைத்திருப்பதைப் போன்ற இமைகள். தலை கொள்ளாமல் காடாய் நிறைந்து கிடக்கும் தலைமுடி. அவள் கணவரைப்போலவே உறங்கும் தன் மகன் கண்ணனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் “என்னங்க… இது தான் என்ன அழகு பார்த்தீர்களா? இவன் மட்டும்பெண்ணாகப் பிறந்திருந்தால் பிரமாதமான அழகு என்று சொல்லும்படி இருப்பான் இல்லை?” எனக் குரலில் பெருமை கூத்தாடக் கூறினாள். “என்ன துளசி நீ… சும்மா சும்மா தூங்குகிற குழந்தையையே பார்த்துக்கொண்டு இருக்கே? குழந்தை முழிச்சிக்கிட்டு இருக்கிறப்போ இதெல்லாம் பேசக் கூடாது? தூங்குகிற குழந்தையைப் பார்த்துப் பெருமைப்பட்டா திருஷ்டி விழும் துளசி. இது கூடவா தெரியாது?” என நீட்டி முழக்கினார் துளசியின் கணவர் மாதவன்.
“தன் குழந்தையைத் தாயார் பார்த்தால் திருஷ்டி பட்டுவிடுமாம் நல்ல வேடிக்கை” என்று எண்ணியபடி மூன்று வயது நிரம்பாத தன் மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள். “ஊஹூம்!” என்ற பெருமூச்சை விட்ட மாதவனின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள். “ஆமாம் இன்றைக்கு என்ன விஷேசம்? ரொம்ப சந்தோஷமா இருக்கிறே…” என்றவர் ஏதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள் “ஓஹோ! இன்றைக்கு நமக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் பூர்த்தியாகுதுல. அதான் உனக்குப் பழைய ஞாபகம் வந்திட்டு…” என அவரே கூறி முடித்தார். ஒருவித குறும்புடன் நோக்கிய மாதவனின் பார்வை துளசியை என்னவோ செய்தது. “சேச்சே! அதெல்லாம் ஒன்னுமில்லை. இன்றைக்கி காலையிலிருந்து நம்ம கண்ணன் எங்கிட்ட நடந்துக்கிட்ட முறையைக் கவனிச்சீங்களா?” என எதிர் கேள்வி போட்டாள். “பார்த்தேன். பார்த்தேன். அவன் உன்னை ஒரு வேலை செய்ய விடலை. அட்டை போல ஒட்டிக் கிட்டான். இருந்தாலும் நீ ரொம்ப தான் அவனுக்குச் செல்லம் கொடுத்துட்டே” எனப் பொய்க் கோபத்துடன் மாதவன் அவளைக் கடிந்து கொண்டான்.
அந்தக் கண்டிப்பு அவளுக்கு இதமாக இருந்தது. ஒருவித இன்பத்தை ஏற்படுத்தியது. “அவன் உன்னை ஒரு வேலை செய்ய விடலை அட்டை போல் ஒட்டிக்கிட்டான்” என்ற இந்த வார்த்தைகள் மட்டும் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. “அப்படியென்றால்… அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? கண்ணன் என்னை விட்டு ஒரு நிமிஷம்கூடப் பிரியவில்லை என்று தானே அர்த்தம்? ஆண்டவா! என் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி விட்டாய். உன் கருணையே கருணை” என நெஞ்சார வேண்டிய அவள் விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.
“ஏன் துளசி அழுறே? நல்ல நாளும் அதுவுமா அழக்கூடாது துளசி…” என்றவாறு கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார் மாதவன். “இல்லைங்க இது ஆனந்தக் கண்ணீர்…” என நாத் தழுதழுத்தபடி கூறிய அவளிடம் “நீ இன்னும் பழையதை மறக்கலையா துளசி? அதுதான் கண்ணன் உங்கிட்ட ஓட்டிக்கிட்டானே. இன்னும் என்ன வேணும்? பழசை
மறந்துவிட்டு நிம்மதியாகத் தூங்கு…” என மாதவன் கூறியதோடு அல்லாமல் அவள் நெற்றியில் ஓர் அன்பு முத்திரையைப் பதித்தார். “பழையதை எப்படிங்க மறக்க முடியும்” என அவளுக்குள் எழுந்த அந்த வினாவிற்கு விடை காண இயலாதவளாய் மாதவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவரோ சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன் என்ற திருப்தியில் நித்திராதேவியிடம் சரணடைந்தார். கணவரைத் தொந்தரவு செய்ய விரும்பாத அவளோ தன் பழைய நினைவுகளில் மனத்தை அலையவிட்டாள்.
துளசி இள வயதில் தந்தையை இழந்தவள். தாயார் கமலத்தம்மாள் அவளையும் அவள் தங்கை ஜெயாவையும் வளர்த்து ஆளாக்கினார். மிகுந்த சிரமத்தோடு இருவரையும் படிக்கவைத்துத் தன் கடமையைச் செவ்வனே ஆற்றினார் கமலத்தம்மாள். ஆனால் துளசிக்குப் படிப்பு ஏறாத காரணத்தினால் தன் படிப்பைப் பாதியிலேயே விட்டாள் அவள். இது கமலத்தம்மாளுக்கு மனவேதனையைத் தந்தாலும் ஜெயா நன்றாகப் படிப்பதைக் கண்டு ஆறுதலடைந்தார். துளசி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினாள். ஆனால் ஜெயாவோ பல்கலைக் கழகம் வரை படிக்கும் ஆவலில் படிப்பில் கண்ணுங் கருத்துமாய் இருந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே அரசாங்க உபகாரச் சம்பளத்தில் ஜெயா தன் படிப்பைத் தொடர்ந்தாள்.
ஆண்டுகள் மளமளவென்று மூன்றைக் கடந்தன. ஜெயா தன் படிப்பை முடித்தாள். அத்துடன் அவளுக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதால் ஜெயா தன் தாயார் வேலைக்குச் செல்வதற்குத் தடைவிதித்தாள். அவள் அன்புக் கட்டளைக்குச் செவி சாய்த்த தாயாரும் நாளடைவில் அவளுடைய இன்னொரு கட்டளைக்கும் அடிபணிந்தார். ஆம்! துளசிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் ஈடுபட்டார். நல்ல நேரம் கூடினால் எல்லாமே கை கூடிவரும் என்பதற்கொப்ப, துளசியைப் பெண் பார்க்க வந்த மாதவன் பெண் ஒகே என்றார். சந்தையில் மாடுகளைப் “பல்” பிடுங்கிப் பார்ப்பவர் போலப் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வர்க்கத்தினருக்கு விதிவிலக்காய் இவர் பாரத்த முதல் பெண்ணான துளசியையே வாழ்க்கைத் துணைவியாக ஏற்க விரும்பியதைக் கேட்டு வீட்டிலுள்ள எல்லோருக்கும் பரம திருப்தி.
தை மாதத்தில் மாதவன் துளசி இருவருக்கும் பெரியோரின் ஆசீர்வாதத்தில் இனிதே திருமணம் நடந்தேறியது. துளசி புகுந்த வீடு சென்றாள். மாதவனுக்கு யாரும் இல்லாத காரணத்தால் துளசிக்கு மாமியார், நாத்திமார் கொடுமையோ பிக்கல் பிடுங்கலோ இல்லை. வீட்டில் ‘போர்’ அடிக்கும் காரணத்தினால் துளசி பழையபடி வேலைக்குச் சென்றாள். மாதவனும் அதற்குத் தடை விதிக்கவில்லை. அவர்கள் இல்லறம் இனிதே நடந்தது.
காலச் சக்கரம் சுழன்று ஈராண்டுகளைக் கடந்தது. குழந்தைச் செல்வம் இப்போதைக்கு வேண்டாம் என எண்ணித் துளசி நாள்களைத் தள்ளிப் போட்டாளே தவிர அவளுக்கோ மாதவனுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால் கமலத்தம்மாளுக்குத்தான் இதில் ஏகப்பட்ட வருத்தம். பேரப்பிள்ளையைப் பார்க்க முடியவில்லையே என அவர் குறைபட்டுக் கொண்டார். இவ்வேளையில்தான் ஜெயா தன்னோடு வேலை பார்க்கும் பாஸ்கரை விரும்புவதாகக் கூறித் தாயாரின் கவனத்தைத் திசை திருப்பினாள்.
வீட்டிற்கு மூத்த மருமகன் என்ற முறையில் மாதவனின், முழுப் பொறுப்பில் ஜெயா திருமணம் தடபுடலாக நடந்தது. துளசியைப் போலவே ஜெயாவுக்கும் பிக்கல்பிடுங்கல் இல்லை, தனிக்குடித்தனம் என்ற பெயரில் பாஸ்கரோடு புது வாழ்வைத் தொடங்கினாள், ஜெயா.
தன் இரு மகள்களும் நிறைவான வாழ்வு வாழ்வதைக் கண்டு பூரித்தாள் கமலத்தம்மாள். ஜெயாவுக்குத் திருமணமாகி ஓராண்டு கடந்தது. அவள் வயிற்றிலோ எட்டு மாதக் குழந்தை “மூத்தவ அப்படியே நிக்குறா ? இளையவளுக்கு அதுஅது காலாகாலத்துல நடக்குது…” என அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் காதுபடப் பேசக் கேட்ட துளசிக்கு ‘குழந்தைப் பாசம்’ ஏற்படத் தொடங்கியது. அந்த எண்ணம் விஸ்வரூபம் எடுத்து நாளும் அவளை வாட்டத் தொடங்கியது. ஜெயா ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். அக்குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் “இந்த ஊர் வாயை மூடுவதற்காவது எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் ஆண்டவா!” என ஆண்டவனை மனத்துக்குள் வேண்டினாள். துளசியின் பிராத்தனை வீண் போகவில்லை. ஜெயாவின் மகளுக்கு ஒரு வயது நிறைவு நாளைக் கொண்டாடிய போது அவள் மணி வயிற்றில் கண்ணன் தவழ்ந்தான்.
மலடி என்ற பழிச் சொல்லிலிருந்து துளசியைக் காத்தான் கண்ணன். அவன் வருகை அவள் இல்லத்தில் இதுவரை குடி கொண்டிருந்த தனிமையை விலக்கியது. இருளைப் போக்கியது. அதே வேளையில் துளசிக்குப் பதவி உயர்வும் கிடைத்தது. சாதாரண தொழிற்சாலை ஊழியராக இருந்த துளசி சுப்பர்வைசர் என்ற கண்காணிப்பாளர் பதவி பெற்றாள். கண்ணன் பிறந்த வேளைதான் தனக்கு இப்படியொரு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்ற பெருமிதத்தில் அந்தப் பதவியைக் கட்டிக் காக்க வேண்டும் என உறுதி பூண்டாள். அதனால் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பு… உழைப்பு… என்ற மந்திரச் சொல்லையே எழுதினாள். இதனால் கண்ணனைப் பற்றிய நினைப்பே அவள் இதயத்தை விட்டு விலகியது.
வாரத்திற்கு ஒரு முறை தாய் வீட்டிற்குச் சென்று கண்ணனைப் பார்ப்பது என்றிருந்த அவள் பழக்கம் நாளடைவில் மாதத்திற்கு ஒரு முறை என மாறி இறுதியில் தான் இஷ்டப்பட்டால் போய்ப் பார்க்கலாம் என்ற நிலை உருவானது. இதனால் கண்ணனைக் கவனிக்கும் முழுப்பொறுப்பு கமலத்தம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணனின் விஷயத்தில் அவள் அசட்டையாக இருப்பதைக் கண்டு மாதவன் மிகவும் கடிந்து கொண்டார். எரிகிற வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றுவது போல ஜெயாவின் செயல் மாதவனின் கோபத்திற்குத் தூபம் விட்டு இருந்தது. ஆம்! வேலை முடிந்த கையோடு ஜெயாவும் அவள் கணவன் பாஸ்கரும் நாள் தவறாமல் தன் மகளைப் போய்ப் பார்ப்பதைப் பற்றியும் அவளது பொறுப்பற்ற தன்மையைப் பற்றியும் எள்ளி நகையாடினார்.
அவருக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது போல ஒரு நாள் கமலத்தம்மாளும் “இங்கே பாரும்மா துளசி, நான் அதிகம் படிக்காதவதான். இருந்தாலும் தாய்ப்பாசம்னா என்னான்னு உணர்ந்தவ. நீ இப்படியே உன் போக்கை மாத்தாம இருந்தா நாளைக்குக் கண்ணன் உன்னை யார்னு கேட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை…” என ஒத்து ஊதினார். “அம்மா உங்களால முடியலைனா சொல்லுங்க நான் வேறு ஆளைப் பார்க்க நியமிக்கிறேன்” எனக் கடுமையாகக் கூறினாள். “அதற்குச் சொல்லலையம்மா துளசி, பெத்தவங்களோட கண்காணிப்பும் அரவணைப்பும் பிள்ளைங்களுக்கு ரொம்ப அவசியம்…” என்றார். ஆனால் துளசி அதைக் காதில் வாங்கிக் கொண்டதாக இல்லை.
எப்பொழுதாவது இந்தப் பிரச்னை மறுபடியும் எழுந்தால் “உங்கள் பேச்சைக் கேட்டுக் கண்ணனை நான் வீட்டிற்கு அழைத்துப் போன மறுநிமிஷம் அவனை மறுபடியும் இங்கே கொண்டு வந்துவிட வேண்டியதாயிற்று. டாக்ஸி காசுதான் தண்டம்…” என எப்போதோ ஒரு முறை அவள் பட்ட பாட்டை எடுத்துவிடுவாள். எல்லோரும் வாயடைத்துப் போவர். இவ்வாறு வீட்டில் ஆயிரம் பிரச்னை இருந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாது கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.
தவழ்ந்து நகர்ந்தவன் இப்பொழுத தத்தித் தத்தி நடந்து வரும் அழகைக் காணும்போது அவளுக்கே அவன்பால் ஈடுபாடு வந்து அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணிய போதெல்லாம் வரமாட்டேன் எனக் கூறிப் பாட்டியின் முந்தானையில் ஒளிந்து கொள்வான். இது துளசிக்கு வருத்தமாக இருந்தாலும் நாளடைவில் சரியாகிவிடும் என வாளா இருந்துவிட்டாள். சில சமயம் அவளே வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாலும் அழுது அடம் பிடித்து அவன் காரியத்தை சாதித்துவிடுவான்.
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் ஈராண்டு பிறந்த நாளைக் கொண்டாடியபோது நடந்த சம்பவம் அவள் தாய்மைக்கே ஒரு சவாலாக அமைந்தது. முதலாண்டு நாளைக் கொண்டாட முடியாத அளவிற்கு அப்போது அவனுக்கு அம்மை வார்த்திருந்ததால் இந்தப் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டனர் துளசியும் மாதவனும் உறவுக்காரர்கள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் துளசியின் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் சிலருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. எல்லோரும் வந்திருந்தனர். பிறந்தநாள் விழாவும் ஆரம்பமானது. பிறந்தநாள் பண்பாட, கேக்கிலிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளை ஊதியணைத்து பிறந்த நாளை வரவேற்றனர். புகைப்படம் என்ற பெயரில் அவனை இப்படியும் அப்படியுமாகத் தூக்கி வைத்தப் பல படங்களுக்குப் ‘போஸ்’ கொடுத்தாள் துளசி. அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் ஓவென அழுது கமலத்தாமாளிடம் தஞ்சம் புகுந்தான் கண்ணன். அவளும் “அம்மா சின்னதுலேந்து வளர்த்தாங்களா அதான் இப்படி…” என அசடு வழியக் கூறினாள்.
பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்திருந்த உறவுக்காரர்களையும் சக ஊழியர்களையும் கவனித்தாள். மணமான எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டு, மடியில் கிடத்தியும் ஒன்றித்து இருந்தனர். ஆனால் அவள்… அப்போது தான் அவள் முதன் முதலாகச் சிந்திக்கத் தொடங்கினாள். “என்னக்கா யோசனை? உன் தோழிகள் உன் கல்யாண ஆல்பத்தைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். எடுத்துக் காட்டக்கா…” என ஜெயா அவள் சிந்தனையைக் கலைத்தாள்.
“என்னங்க ஆல்பத்தை நீங்க காட்டலையா” என மாதவனைப் பார்த்துக் கேட்டாள். “கண்ணனிடம் தந்து அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னேனே? அவன் உங்கிட்ட தரலையா?” எனத் துளசியைப் பார்த்துக் கேட்டார்.
“மாப்பிள்ளை இதோ ஆல்பம். நீங்க அம்மானு சொன்னீங்களா அவன் என்கிட்ட கொடுத்துட்டான்” எனக் கமலத்தம்மாள் ஆல்பம் மறைந்த மர்மத்தை விளக்கினார். “அடப் போக்கிரி பையா! உனக்கு அம்மாவுக்கும் பாட்டிக்கும் உள்ள வித்தியாசம் தெரியலையா?” எனக் கண்ணனைப் பார்த்துக் கேலி செய்தனர் வந்திருந்த சிலர். மற்றவர்களுக்கு அது பெரிய வேடிக்கையாகத் தெரிய கொல்லெனச் சிரித்தனர். துளசியின் வயிறோ பத்தி எரிந்தது.
பிறந்தநாள் விழா இனிதே முடிந்த போதிலும் அவளும் எதிந்த அந்தத் தீயை அணைக்க முடியவில்லை. அன்றுதான் முதன் முதலாக தன் மகனின் அன்பைப் பெறத் தவறியதை எண்ணி அழுதாள். வாய்விட்டு அழுதாள். அந்த அழுகையே பின் சபதமாக மாறி “என்னைக் கேலி செய்தவர்கள் வியக்கும் அளவுக்கு என் மகனின் இதயத்தில் ஓர் இடத்தைப்பிடித்துக் காட்டுகிறேன்…” என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டாள். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டாள்.
வழக்கம் போல் இல்லாமல் வேலை முடிந்த மறுநாளே கண்ணனைப் பார்க்கச் சென்றாள். துளசியின் வருகை கமலத்தம்மாளுக்கு வியப்பாக இருந்தது. முதல் நாள் அழுதழுது, வீங்கிய துளசியின் கண்கள் அவளுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கின. தொடர்ந்து இரு மாதங்கள் அவளுடைய அலுப்பையும் அசௌகரியத்தையும் பாராமல் கண்ணனைப் பார்க்கச் சென்றாள். போகும் போதெல்லாம் எதையாவது வாங்கிக் கொண்டு சென்றாள். அவன் அன்பைப் பெற அவள் பயன்படுத்தும் ஆயுதம் அது என்பதை உணர்ந்த கமலத்தம்மாள் “பொருளைக் காட்டி அன்பைப் பெற முடியாதம்மா…” எனச் சிரித்தபடி கூறினார்.
அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்கள் சொல்வதில் எப்போதும் உண்மை இருக்கும் என்பதைக் காலம் கடந்து உணர்ந்த துளசி “இது நாள் வரை தான் அம்மா சொன்னதைக் கேட்காமல் இருந்துட்டேன். இனிமேலாவது அவங்க சொல்றபடி நடப்பேன்” எனத்தீர்மானித்தவளாய்த் தாயின் கட்டுப்பட்டாள். இவ்வேளையில் கமலத்தம்மாள் ஒரு நாள் படுக்கையில் சாய்ந்தார். அவரைக் கவனித்துக் கொள்ள ஒரு வாரம் லீவு எடுத்துத் தாய் வீட்டோடு தங்கினாள் துளசி. இதனால் அவள் கண்ணனுடன் இன்னும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. கமலத்தம்மாள் ஊட்டினா தான் சோறு சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் கண்ணன் துளசியின் கையாலும் சாப்பிடத் தொடங்கினான். இப்படியாகத் துளசி கண்ணணோடு படிப்படியாக நெருங்கி வந்தாள் என்று சொல்வதை விட, கண்ணன் துளசியோடு ஐக்கியமானான் என்று கூறுவதே முற்றிலும் பொருந்தும்.
கண்ணனின் பிறந்த நாளுக்குப் பிறகு மறுபடியும் துளசியின் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அதுதான் அவர்களுடைய ஐந்தாண்டு மணவிழா வைபவம். வழக்கம் போல் உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடினர். அவ்விழாவில் கண்ணன் அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு “என்ன துளசி ஆறு மாதத்துக்கு முன்னால இருந்த கண்ணனா இவன்? என்ன இப்படி ‘ஒட்டிக்கிட்டான்’ என்று வியந்தனர். ஒரு சிலர் என்ன சொக்குப்பொடி போட்டியோ? பையன் உன்னை விடமாட்டேன் என்கிறானே” என மலைத்தனர்.
கேலி செய்தவர்கள் வியந்து பாராட்டும் அளவுக்குக் கண்ணனிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைவிடத் தன்னை மாற்றிக் கொண்டதில் பெருமை கொண்டாள் துளசி. கமலத்தம்மாளின் விழி ஒரங்களில் கண்ணீர்த் துளிகள் தேங்கி நின்றன. “கண்ணன் உங்கிட்டயிருந்து பிரிச்சிட்டேன்னு அழுறீங்களாம்மா?” எனக் குற்ற உணர்வுடன் கேட்டாள் துளசி. “அடப் பைத்தியம் நீ எனக்கு மகளாய் இருக்கிறதை விட உன் மகனுக்கு நல்ல தாயாய் இருக்கிறதைத் தான் நான் பெருமையா கருதுகிறேன்” எனப் பெருந்தன்மையுடன் கூறினார்.
“குழந்தைகளின் மனம் களிமண்ணைப் போன்றது. அதில் நமக்கு விருப்பமான உருவத்தை எளிதில் பதித்து விடலாம்” என என்றோ அவள் படித்த வாசகம் அவள் நினைவுக்கு வந்தது. மகனின் மனமாற்றம் அவளுள் இனம் தெரியாத இன்பத்தை ஏற்படுத்தியது.
“அம்மா என்னை விட்டுப் போகாதேம்மா…” என்றபடி கண்ணன் கத்தியதைக் கேட்டுத் தன் பழைய நினைவுக்கு வந்தாள் துளசி. “அம்மா… அம்மா…” என அவன் மெல்ல முணுமுணுத்தான். “இல்லை கண்ணா! நான் உன்னை விட்டுப் போக மாட்டேன். அது என்னால் முடியவும் முடியாது…” என்றபடி தூக்கத்தில் கண்ணன் உளறியதைப் பெரிதாக நினைத்து அவனை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டாள். மலர்ச்செண்டை மார்பில் அணைத்துக் கொண்ட சுகம்; பட்டுத் துணியை மடியில் கிடத்தின மென்மை; நிலவின் குளிர்ச்சி; தென்றலின் இதம் இதுதான். இந்தச் சுகத்திற்காகத் தான் அவள், இத்தனை நாளும் தவித்துக் கொண்டிருந்தாள். அந்த சுகம் அவளுக்குக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மகனைக் கட்டித் தழுவியபடி நிம்மதியாகக் கண்ணயர்ந்தாள்.
– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.