ஒரு ஜூஸ் பாட்டிலும் ஏழு வாய்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 8,413 
 
 

ஆகாஷ், தூக்க மாத்திரை நான்கு போட்டுக்கொண்டான். தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்தான். கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். சொறி நாய் போல சிரித்துப் பார்த்தான். பாதியில் நிறுத்தி, அழ முயற்சித் தான். விளக்கை அணைத்துவிட்டு, பறக்கிற கொசுக்கள் எத்தனை என்று எண்ணினான். என்ன கோணங்கித்தனம் செய்தாலும், அவனுக்குத் தூக்கம் வரவில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்று அவனைப் பாடாய்ப்படுத்தியது. ‘குடும்பம் என்பதற்கு அர்த்தம் என்ன?’ இந்தக் கேள்விக்கு அவனால் அதிகபட்சமாக டி.வி. ரிமோட்டைச் சுவரில் அடித்து உடைக்கத்தான் முடிந்தது.

குடும்பம் என்றால் என்னவென்று மண்புழுவுக்குக்கூட இந்தக் காலத்தில் தெரிந்திருக்கும். ஜீன்ஸ் பேன்ட்டின் ஜிப்பை ரிப்பேராக்காமல் போட்டுக்கொள்கிற அளவுக்கு நாகரிகம் பெற்ற ஆகாஷூக்கு இது தெரியாமல் போய்விடுமா? அவனுக்குத் தெரியும். தும்மல் வராமல் மூக்குப்பொடி போடுவதில் வல்லவரான வரலாற்று வாத்தியார், சின்ன வயதில் அவனுக்குக் குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்திருக் கிறார். ‘எங்கே சொல்லு… மனித நாகரிகத்தின்… உச்சபட்ச… ம் சொல்லு… உச்சா போச்சா இல்லடா… உச்சபட்ச… ம் அதேதான்! கண்டுபிடிப்புதான்… குடும்பம் என்கிற அமைப்பு. ம்… வெரி குட். நீ உட்கார். அடுத்தவன் சொல்லு… மனிதன் கண்டுபிடித்த…’

அன்றைக்குக் கற்றுக்கொண்ட அந்தக் கல்விக்கு 18 வருடங்கள் கழித்து ஆட்சேபம் வரும் என்று ஆகாஷ் எதிர்பார்க்கவில்லை. ”மூக்குப்பொடி போடுகிற அந்த வரலாற்று வாத்தியாரைத் தூக்கி மைக்ரோ ஓவனில் வையுங்கள். குடும்பமாம் குடும்பம்! என்னைக் கேளுங்கள்… நான் சொல் கிறேன். குடும்பம் என்பது குகை மனிதர்களின் உபத்திரவமான கண்டுபிடிப்பு. பருப்புக் குழம்புக்குள் குலோப் ஜாமூன் போட்டு குழப்பித் தின்பதைப் போன்ற கூமுட்டைத்தனம்தான் குடும்பம். குணத்தால் ஒன்றுபடாத மனிதர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துவைத்துக் குடும்பம் என்று உலகம் சொன்னால், அதைப் பைத்தியக்காரத்தனம் என்று ஊரே சொல்லித் தனித்தனியாக வாழ வேண்டும். வாழ்க பாரதம். நன்றி! வணக்கம்!” பள்ளிக்கூடத்துச் சிறுமி வாய்ப்பாடு சொல்வது போல சரசரவென்று சொல்லிவிட்டு முறைத்துப் பார்த்தாள் கீதா பிரியதர்ஷினி.

கீதா பிரியதர்ஷினி என்பவள், ஆகாஷின் அழகான மனைவி. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். ஒரு ஜோடிக் குழந்தைகள் பெற்றவள். அழகான மட்டுமில்லை… அன்பான மனைவியும்கூட. ஏழு வருடங்கள் குற்றமில்லாமல் அவனுடன் குடும்பம் நடத்தியவள். சின்னச் சண்டைகூட வந்தது கிடையாது. கண்ணீரோ ஒப்பாரியோ ஒருநாளும் இல்லை. கலர் சாயம் பூசிக்கொண்டு நன்றாக ஆடிப் பாடித்தான் சிரித்தது வாழ்க்கை. ஆனால், சமீபகாலமாக கீதா சொல்கிற ஒரே வாசகம் இதுதான்… ‘இனிமே என்னால் கூட்டுக் குடித்தனம் பண்ண முடியாது மிஸ்டர் ஆகாஷ். தனிக் குடித்தனம் போயிடுவோம்!’ அவள் அதை ஆங்கிலத்தில் சொன்னதும் அதிர்ந்துபோனான் ஆகாஷ்.

கீதா பட்டிக்காடு. பத்தாவது படித்தவள். கல்யாணமான புதிதில், ”ரெண்டு பேர் மட்டும் தனியா படுக்கப் பயமா இருக்குங்க. அத்தை – மாமா இருக்கிற இடத்தில் தூங்கலாம்” என்று அம்மாஞ்சியாகச் சொன்னவள். வீட்டில் தனி யாக டி.வி. பார்க்கவே அச்சப்பட்டவள். டியூப் லைட் வெளிச்சத்தில் பேய் வரும், கரன்ட் கம் பத்து உச்சியில் கடவுள் இருக்கும் என்று நம்பிய வள். நடுராத்திரியில் எழுந்து, ”ஐயோ! பாட்டி, தாத்தா, அத்தே, சித்தப்பா, சித்தி… எனக்குப் பயமா இருக்கு!” என்று கத்தியபடி புருஷனைக் கட்டிக்கொண்டவள். குழந்தை பிறக்க வேண்டி மண் சோறும், சொந்தபந்தம் தழைக்க வேண்டி பிரார்த்தனைகளும் செய்தவள். தலை நரைத்த மனுஷர்கள் முதல், மூப்படைந்த மூஞ்சூறு எலி வரை எல்லோர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள். அந்தக் கிராமத்துச் சிறுமியின் அறியாமைக்காக வருத்தப்பட்டு இருக்கிறான் ஆகாஷ். கற்காலத்துக் கிறுக்குப் பெண்ணோடு குடும்பம் நடத்துவது போன்ற குழப்பத்தில் அவஸ்தை அனுபவித்திருக்கிறான். அவளுக்குக் கொஞ்சம் அறிவு வரட்டுமே என்று அவன்தான் ஆங்கிலப் பத்திரிகை வாங்கிப் படிக்கத் தந்தான். அவன்தான் எம்.ஏ., வரலாறு படி என்று தபால் வழியில் சேர்த்துவிட்டான். அவன்தான் நூலகத் துக்குப் போய் புத்தியாய்ப் படி என்றான். அங்கேதான் வந்தது வினை.

இரண்டு குழந்தை பிறப்பதற்குள் கீதா பெற்றஞானங் கள் ஏராளம். அவள் இன்னவிதமான புத்தகங்கள்தான் படிக்கிறாள் என்று புத்தகம் தின்கிற புழுவுக்கே தெரி யாது. தத்துவமும், தர்க்கமும், சரித்திரமும், அறிவியலும் புனைவுகளும், கவிதைகளும் அவளிடம் மண்டியிட்டன. ஆங்கிலம் பேசுவதில் ஆகாஷைப் பிச்சைக்காரனாக் கினாள். எந்த நூற்றாண்டு பூதம், கிளை நூலகத்தின் எந்தப் புத்தகத்திலிருந்து எழுந்து வந்து அவளை கெட் டியாகப் பிடித்துக்கொண்டதோ தெரியாது. அவள் முற்றிலும் அந்நியப் பெண் போன்ற பாவனையோடு பேச ஆரம்பித்தாள். ”பாருங்க மிஸ்டர் ஆகாஷ்! இந்த வுமன் கம்யூனிட்டி விவரமே இல்லாம வீடு, புருசன், குழந்தை, அழுக்குத் துணி, பழைய சாப்பாடு, கோலம், குத்துவிளக்குன்னு இருந்துடுச்சு. அந்தப் பொண்ணுங் களுக்கு வேணா கூட்டுக் குடும்பம் சரிப்பட்டு இருக்க லாம். ஆனா, இது நவீன காலம். பொண்ணுங்க சுதந்தி ரம் ரொம்ப முக்கியம். அதை நீங்க தடுத்தா, மனித உரிமையை மீறினதா ஆயிடும்” என்கிறாள். ஆகாஷ் எந்த மனிதனை உரிமை மீறினான்?

அவனுக்குக் கீதா மீது கோபம் வரவில்லை. தப்பான புத்தகம் படித்துவிட்டுத் தப்பாகப் பேசுகிறாள்; சமாளிக்கலாம் என்று சுமாராக ஆரம்பித்தான். ”கீத்து… நீ செயற்கையான பிரச்னையை உருவாக்கிட்டு, அதோடு சண்டை போடறே. தனிக் குடித்தனம் போறது முட்டாள்தனம். அதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன்!” – ஆகாஷூக்குத் தெரிந்த மிகப் பெரிய அறிவுரையும் மிரட்டலும் இதுதான்.

”வேணாம் ஆகாஷ்! கூட்டுக் குடும்பத்தில் நாம பட்ட நஷ்டம் ஏராளம். இனியும் சமைச்சி, தொவைச்சி, வீடு பெருக்கி பெரிசாக் கோலம் போட்டு என்னால சாக முடியாது. எனக்கு இப்ப அவசரத் தேவை சுதந்திரம். நான் விரும்பறபோது சிரிக்கணும்; தோணறபோது ஆடணும்; விரும்பினா சமைக்கவும், இல்லாட்டிப் பட்டினியாப் படுக்கவும் சுதந்திரம் வேணும்.”

”குடும்பம்னு வந்தா சிலதைப் பண்ணித்தான் ஆகணும் கீத்தூ… புருஷனுக்காகப் பொண்டாட்டியும், பொண்டாட்டிக்காகப் புருஷனும் விட்டுத் தரலேன்னா கல்யாணமே உலகத்துல நடக்காது. கல்யாணம்னு ஒரு விஷயம் இல்லேன்னா, ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல இருக்கிற சில அந்தரங்கச் சடங்கு நடக்காமயே போயிடும்!”

”இப்ப எதுக்கு ஆகாஷ் அசிங்கமாப் பேசறீங்க. சரி, நீங்க சொல்ற மாதிரியே வெச்சுப்போம். கல்யாணம் ஒரு நிர்பந்தம். குறிப்பா உடல் சார்ந்த நிர்பந்தம். ஆணுக்கும் பெண்ணுக்கும் அது அவசியம். அதுல சந்தோசமும், சமூகக் கடமையும் இருக்கு. அதை நான் ஒப்புக்கறேன். ஆனா, குழந்தை பொறந்ததும் கடமை முடிஞ்சு போயிடுதே ஆகாஷ். அதுக்குப் பிறகும் குகை மனுசன் மாதிரியே மந்தையா, கூட்டம் கூட்டமா ஒண்ணா இருக்கணும்னு நெனைச்சா, என்னை மன்னிச்சிடு ஆகாஷ். நாம டைவர்ஸ் பண்ணிக்கிடலாம்.”

ஆகாஷூக்கு பளிச்சென்று புரிந்தது. இது நொறுங்கிய கண்ணாடி. ஒட்டவைத்து அதில் முகம் பார்த்தால் பயங்கரமான உருவம்தான் தெரியும். கீதாவை தாக்கத்தால் வெல்வது கடினம். ஒரு கிழட்டு நூலகத்தின் அத் தனை அபத்தங்களையும் அவள் படித்திருக்கிறாள். பிரபஞ்ச உற்பத்தி முதல், குவான்டம் தியரி வரை படித்த பெண்ணுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றம் அது. இனி அவளை எப்படிச் சரிசெய்வது? ஜீரணிக்கச் சிரமமாக இருந்தாலும், தனிக் குடித்தன முடிவுக்குத் தயாரானான் ஆகாஷ்.

”சரி கீதா! உன்னோட முடிவை நான் ஏத்துக்கிறேன். உனக்கு எப்படியோ தெரியாது… ஆனா, எனக்கு ஊர் உலகம், குடும்பம், மனுசங்க இதெல்லாம் தேவை. எங்க சின்னத் தாத்தாவோட கடைசிப் பேத்திக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதுவரையில் ஒண்ணா இருக்க எனக்காக நீ சம்மதிக்கணும்.”

கீதா சந்தோஷத்தில் குதித்தாள். அவளுடைய பல மாதப் போராட்டம் இது. கடைசியில் ஜெயித்தவள் அவள்தான். ”ஓ… மிஸ்டர் ஆகாஷ். எனக்கும் அது பிடிக்கும். சின்னத் தாத்தாவோட செலிப்ரேஷனுக்கு நாம போவோம். ஆனா, ஒரு கண்டிஷன்… ஒம்பதாயிரம் பேரை ஒரே குடும்பம்னு நீ திரும்பவும் சொல்லக் கூடாது. ‘தனி மனுசன்… தனி வயிறு!’ இந்தத் தத்துவத்தை ஒப்புக்கணும் நீ!”

ஆகாஷ் சின்னதாகச் சிரித்து அதை ஆமோதித்தான். பூதக் கண்ணாடி வழியே பார்த்திருந்தால், அவன் கண்ணில் நீர் சுரந்ததைக் கண்டிருக்கலாம். அத்தனை அந்தரங்கமான அழுகை!

சின்னத் தாத்தாவின் பேத்தி கல்யாணத்தில் உலகச் சந்தையைப் போல ஒரே கூட்டமாக இருந்தது. ஆசியாவின் பெரிய குடும்பம் சின்னத் தாத்தாவின் குடும்பம். கரும்பு வயலுக்கு நடுவே இருந்த பெரிய களத்துமேட்டில் கல்யாணம் வைத்திருந்தார். ஆடு வெட்டி அமர்க்களமாக கல்யாணம் முடிந்த திருப்தியில், சின்ன தாத்தா ஒய்யாரமாக இருந்தார். அவரின் தோளிலும், இடுப்பி லும், உச்சந்தலையிலும் ஏராளமான குழந்தைகள் ஏறி மிதித்து விளையாடியபடி அவரோடு வந்தன.

வயிற்று வலி ஆசாமிகள் போல ஒதுங்கி நின்ற ஆகாஷ் – கீதாவைப் பார்த்துக் கத்தினார் தாத்தா. ”டேய் பேரா! சோறு தின்னுட்டியா? அங்க ஏன் நிக்கிறே… இங்க வா! ஆமா, கல்யாணம் எப்படி? ஒசத்திதானே!” தோளில் உட்கார்ந்து காது கடுக்கனைக் கழட்டிய பேத்தியின் கையை மிருதுவாக முறுக்கியபடி கேட்டார்.

ஆகாஷ் பதில் சொல்லாமல், வாழை மரத்தில் சாய்ந்து தோரணத்தைப் பிய்த்தபடி நின்றான். கீதா கொஞ்ச நேரம் திருதிருவென்று விழித்தாள். பிறகு, நிலைமையைச் சமாளிப்பதற்காக, சம்பந்தமே இல்லாமல் பேசினாள். ”மிஸ்டர் சின்னத் தாத்தா… இதெல்லாம் உங்களோட குழந்தைங்களா?” தாத்தாவுக்கு வயது 87.

தோளில் இருந்த பெரிய குழந்தைக்கு வயது மூன்று. சின்னத் தாத்தா சிரித்ததில் வாழை மரம் பேயாட்டம் ஆடியது. ”ஆமா! இதெல்லாம் என்னோட புள்ளைங்கதான். என் மூத்த மகனோட பேரனுங்க ரெண்டு… இளையவனது நாலு… மகளோட பேத்தி ஒண்ணு. இதோ, கடைசிப் பேத்திக்குக் கல்யாணம். அதுவும் ரெண்டு என் தோள் மேல பெத்துப் போடும்.”

தாத்தா சொன்னதைக் கேட்டு கீதா, ஆகாஷை முறைத்துப் பார்த்தாள். அவளுக்குக் காட்சி புரிந்துவிட்டது. அவள் எரிச்சலாகி எரிந்து விழுந்தாள். ”மிஸ்டர் ஆகாஷ்! இந்த ஷோ காட்டத்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா? என்னை சினிமா காண்பிச்சு, வசனம் பேசி, மாத்திட முடியாது. புரிஞ்சுக்கங்க.”

”மருமக என்ன சொல்லுது ஆகாசு? குடும்பத்தில் என்னமோ வில்லங்கமாட்டும் இருக்கு!”

”என் சம்சாரம் தனிக் குடித்தனம் போகணும்னு சொல்றா!” – சட்டென்று போட்டு உடைத்தான் ஆகாஷ்.

தன் தலை மீது கொண்டாட்டம் போட்ட பிள்ளைகளைத் துரத்திவிட்டு, ஆகாஷை அனுசரணையாகப் பார்த்தார் தாத்தா. பிறகு, கீதாவை பார்த்துச் சிரித்தபடி பெரிய மனுஷத் தோரணையில் பேச வாயெடுத்தார். தாத்தாவைக் கை காட்டி நிறுத்தினாள் கீதா. ”பாருங்க மிஸ்டர் தாத்தா… நீங்க பட்டிக்காட்டு ஆசாமிங்க. யூரியா பையிலேயே ஒன்பது பேர் குடும்பம் நடத்துவீங்க. எங்க நகரத்தோட நாகரிகம் அந்த வாழ்க்கை முறை உங்களுக்குத் தெரியாது. நாட்டாமையாட்டம் தீர்ப்பு சொல்ல வராதீங்க.

”அடேங்கப்பா!” – வாய் பிளந்தார் தாத்தா. பிறகு, பெரிதாகச் சத்தம் வராமல் சிரித்தபடி பேசினார்… ”அவசரப்படாத தாயி! நான் உனக்கு சப்போர்ட்டாதான் பேசப் போறேன். நான் பட்டிக்காட்டு ஆளுதான்.ஆனாலும் இந்தக் காலத்துப் புத்தியும் எனக்கு உண்டு. நீ சொல்றதுதான் சரி. யூரியா பையில ஒன்பது பேரு குடும்பம் நடத்தக் கூடாது. பிடிக் கலேன்னு ஆயிட்டா, மனுசன் தனித்தனியாப் போயிடணும். புண்ணை மூடி மூடிவெச்சா, அது சீழ் பிடிச்சு நாறிடும். உனக்கு மாமியார் மாமனார் பிடிக்கலேன்னா, வெட்டிவிட வேண்டியதுதான். குடும்பத்தில் சிக்கல் கூடாது. அதான் முக்கியம். இப்பவே உன் மாமனார்,மாமியார் ரெண்டு பேரையும் இங்க ஊருக்கு அனுப்பிவெச்சிடு.” சின்னத் தாத்தா பொறுப்பான ஆளாகத் தீர்ப்பு சொன்னார்.

வாழை மரத்தில் சாய்ந்து நின்ற ஆகாஷ் அடித்துக்கொண்டான்… ”அவங்க முதியோர் இல்லத்துக்குப் போயி நாலு வருஷம் ஆச்சு!” – வானம் பார்த்தபடி யாரிடமோ பேசினான்.

பறக்கிற தும்பியைப் பார்க்கிறவர் போல மாறி மாறி, கீதாவையும் ஆகாஷையும் பார்த்துக் குழம்பி நின்றார் தாத்தா. ”அவங்க உங்களோட இல்லையா? அப்புறம் எதைக் கூட்டுக் குடும்பம்னு சொல்லுது இந்தப் பொண்ணு?” – ஆகாஷிடம் புரியாமல் கேட்டார்.

”அந்தக் கெரகத்தை அவளே சொல்லுவா… கேட்டுக்கங்க” – ஆகாஷ் திரும்பி நின்றபடி வயலில் நின்ற கொக்குகளை எண்ண ஆரம்பித்தான்.

”நான் சொல்றேன் மிஸ்டர் சின்னத் தாத்தா. நான், புருசன், ரெண்டு குழந்தைங்க எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கோம். அது கூட்டுக் குடும் பம்தானே?” வயதான தாத்தாவுக்கு விளங்கும்படி உரக்கவே சொன்னாள் கீதா.

தாத்தா தன் முடி எல்லாம் உதிர்ந்துவிடுவது போலத் தலையைச் சொறிந்துகொண்டார்… ”அடக் கடவுளே! இப்பல்லாம் புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருக்கிறதையே கூட்டுக் குடும்பம்னு சொல்லிக்கிறீங்களா? நீ சொன்னது நெசந்தான் தாயீ. இந்தக் கிழவனுக்கு அவ்ளோ வெவரம் பத்தாது.” நம்பவே முடியாமல் ஆகாஷைப்பார்த் தார். ”ஏன் ஆகாசு! புருசன் பொண் டாட்டி சேர்ந்திருந்தாவே அது கூட்டுக் குடும்பமாப்பா?”

”ஏன், நான்தான் சட்டம் எழுதறவனா?”ஆகாஷ் பறக்கிற கொக்கைப் பார்த்துக்கொண்டே கேட்டான். தாத்தாவுக்கு இது சிறு பிள்ளைகள் விளையாட்டு என்றுதான் நினைப்பு ஓடியது. ”ஏந்தாயி… புள்ளைங்க ஒரு பக்கம், புருசன் ஒரு பக்கம், நீ ஒரு பக்கம்னு தனித்தனியா இருக்கணும். அதான் தனிக் குடித்தனம்னு நீ சொல்றே! அப்படிப் பண்ணா புள்ளைங்க வீதியில் பிச்சை எடுப்பாங்களே தாயி? அது சரிப்பட்டு வருமா?” – தாத்தா சிரிப்பாகத்தான் இதைக் கேட்டார்.

”பாருங்க மிஸ்டர் தாத்தா! பட்டிக்காட்டு ஆசாமிக்குப் புரியாத உலகம் ஒண்ணு இருக்கு. நவீன காலத்துல முதியோர் இல்லம் உண்டு, குழந்தைங்க காப்பகம் உண்டு, ஆஸ்பிட்டல் உண்டு. ஹோட்டல் உண்டு. இன் ஷூரன்ஸ் உண்டு. தனித்தனி வீடுகள் உண்டு. எல்லாத்துக்கும் நவீன ஏற் பாடு உண்டு. அப்பாவும் அம்மாவும் இல்லாமையே குழந்தை பிறக்கிறதுக்கு ஏற்பாடும் உண்டு. அந்தக் குழந்தைகளும் வளரத்தான் போகுது. அதுக்கு ஏது கூட்டும், பொரியலும், குடும்பமும்?” கீதா பொரிந்துதள்ளினாள்.

”குடும்பத்தில் ஒரு சந்தோஷம் இருக்கு தாயீ. அதை வேணாம்னு சொல்லலாமா?”

”அது பித்தலாட்டம் மிஸ்டர் தாத்தா! ஒரே ஜூஸ் பாட்டில்ல ஏழு வாய் வெச்சுக் குடிக்கிறது, ஒரே ஆப்பிளை எட்டா வெட்டித் திங்கறது, அலுமினியத் தட்டுல பத்து பேர் சாப்பிடறது இதெல்லாம் சுத்த அரா ஜகம். இது எப்படி இருக்குன்னா…” – கீதா பேச ஆரம்பித்துவிட்டாள். தாத்தா செத்தார். ஏராளமானவிவகா ரங்களை அவள் அள்ளி விட்டுக் கொண்டே இருந்தாள்.

இத்தனை நாள் கூட்டுக் குடும்பம் நடத்தினதே தப்புதான் என்று ஒப்புக் கொண்டு, சாமியாராக ஓடிப் போய் விடுவாரோ என்று பயப்படுகிறபடி தாத்தாவின் முகம் பீதியில் விகாரமானது. ஒருகட்டத்தில் இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு, ”போதும் தாயீ, போதும்! நான் அம்பேல் உட்டுர்றேன். என்னால முடியல!” என்று கத்தினார். ஆகாஷ் இதெல்லாம் சகஜம் என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு கொக்கை வேடிக்கை பார்த்தான்.

”டேய் பேரா… அங்க என்னடா வேடிக்கை? இந்தப் பொண்ணு எம்மாம் பெரிசாப் பேசுது பாத்தியா? இந்தப் பொண்ணு கடவுளுக்குச் சமமான அறி வாளி ஆயிட்டா பேரா! இனி அதைத் துன்பம் பண்ணக் கூடாது. அது போக்குல விடணும். அதான் சரி. அதைத் தனியா அனுப்பிடுஉன்னைப் பெத்தவங்களை ஆசிரமத்துல இருந்து கூட்டியாந்து, உன் பிள்ளைங்களை வளத்துக்கோ, சரியா?”

ஆகாஷ் கொக்கு பார்த்துக்கொண்டே நின்றான்.

”நீ இப்படித் தென்னை மரமாட்டம் நின்னா, எவதான்டா உன்கூட குடும்பம் நடத்துவா? நீ இங்கேயே நில்லு. உனக்குத் தெரியாம உன் சம்சாரத்துக்கிட்ட நான் தனியா நாலு வார்த்தை பேசணும். நீ வா தாயீ… நாம அங்க போயிப் பேசுவோம்!” – தாத்தா கூப்பிட்டதும், சந்தோஷமாகப் போனாள் கீதா. தாத்தா தன் கட்சி என்று தெரிந்ததும் அவரை மதிப்பாகப் பார்த்தாள். படிக்காத ஆள் என்றாலும் எத்தனை அறிவு!

தள்ளி நின்று பேசிய தாத்தாவையும் கீதாவையும் புரியாமல் பார்த்தான் ஆகாஷ். அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. தாத்தா, கீதாவிடம் என்னவோ கேட்க, அதற்கு சரிக்குச் சரியாக அவள் பதில் சொல்வது ஊமைக் காட்சியாய்த் தெரிந்தது. அதன் பிறகு காட்சி மாறியது. பேய் கண்டவள் போல கீதாவின் முகம் மாற, அவள் வியர்த்து நிற்பது தெரிந்தது. பிறகு, தாத்தா பேச்சோ பேச்சென்று பேசிக்கொண்டு இருக்க, கீதா மண்டையை மட்டும் ஆட்டுவது தெரிந்தது. பிறகு, தலை தொங்க கீதாவும், பெரிய சிரிப்போடு தாத் தாவும் வந்தார்கள்.

”டேய் பேரா, இனிமே புருசனை விட்டுப் பிரியவே மாட்டேன்னு உஞ் சம்சாரம் சொல்லுது… நெசமான்னு கேட்டுக்க!” ஆகாஷால் நம்பவே முடியவில்லை. இதுவரை எண்ணிய கொக்குகளின் எண்ணிக்கை மறந்துபோய் குழப்பத்தில் நின்றான். ”என்ன தாத்தா சொல்றீங்க?”

”ஒண்ணுமில்லடா பேரா! எம்மாம் பெரிய ஆளா இருந்தாலும், ஒருநா செத்துதான் ஆகணும். உன்னோட பொணத்தை நீயே தூக்கிட்டு சுடுகாட்டுக்குப் போவியான்னு கேட்டேன். அவ்ளோதான்!” தாத்தா சொன்னதைக் கேட்டதும் ஆகாஷூக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இந்த சின்ன கேள்விக்கேவா நொறுங்கிப் போனாள் கீதா?

”நம்பவே முடியலையே தாத்தா! நவீன காலத்தில் முனிசிபாலிட்டி இருக்கு, கரன்ட் சுடுகாடு இருக்கு, காசு கொடுத்தா ரொம்ப ஜோரா எரிப்பாங்கன்னு சொல்லியிருப்பாளே! ஏன் கீத்தூ… முனிசிபாலிட்டி மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?” ஆகாஷ் கேட்டதும் எகிறிக் குதித்துச் சண்டைக்கு வந்தாள் கீதா.

”என்னை முனிசிபாலிட்டிக்காரன்தான் எரிக்கணுமா..? நான் என்ன லாரியில அடிபட்ட நாயா? பொண்டாட்டி, பொண்டாட்டின்னு நீ கொஞ்சினது பொய்யா, நீ புருசன்தானா? மனுஷன்தானா? உருப்படுவியா நீ?” அவள் அவனைப் புரட்டி எடுக்க, அந்த ஆக்ரோஷச் சண்டையின் நடுவில் விழுந்து சமாதானம் செய்தார் தாத்தா.

”அடங்கு தாயீ… அடங்கு! நீ நூறு வருசம் சுமங்கலியா வாழப் போறவ. இப்ப எதுக்கு சாவு பத்தின பேச்சு. போய்ச் சந்தோஷமா வாழுங்க. டவுனுக்கு வந்தா உங்க வீட்டுக்கு வருவேன். ஒரு வாய் காபித் தண்ணி தா! சுடுகாட்டப் பத்தி பேசி மெரட்டிட்டானேன்னு கிழவனத் தப்பா நெனைக்காதே. காபித் தண்ணி தருவதானே தாயீ?”

”வந்துடாதீங்க மிஸ்டர் தாத்தா! வீட்டுல கொசு பேட் வெச்சி ருக்கோம். அடிச்சே கொன்னுடுவோம்!”

”ஹ்ஹா… ஹா… ஹா! நோக்காட்டுக்கு ஊசி போடற வைத்தியனப் பாத்தாவே புள்ளைங்களுக்கு ஏகமாப் பயம்தான்”- சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தார் தாத்தா.

– 01-04-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *