ஒரு சாதம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 10,135 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் ‘ஒரு சாதம்’ என்று போட்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான்.

வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் ‘ஸ்ரிப் ரீஸ்’ போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஓவர் கோர்ட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது.

சிவலிங்கத்தின் மனைவி பூர்ணிமா வந்தாள். அவளுடைய அழகு அழிவில்லாத அழகுதான். சிவலிங்கமும் பூர்ணிமாவும் பரிமாறிய காதல் கடிதங்களை எல்லாம் அந்தக் காலத்தில் எடிட் செய்ததே பரமனாதன்தான். பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்களை பரமனாதன் முதன் முறையாக கனடாவில் பார்க்கிறான். சிவலிங்கத்துக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்; மூத்தவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம்; அடுத்தவளுக்கு நாலு.

பரமனாதன் கேட்டான்: “இது என்ன புது விதமான வீட்டுப் பேர்? ‘ஒரு சாதம்’ என்று வைத்திருக்கிறாய்?”

“அதுவா? இந்தப் பனிக் குளிரில் வீடு தேடி வாறவைக்கும் ஒரு பிடி சாதமாவது போட வேணும் என்ற பிடிவாதத்தில் வைத்த பேர்,” என்றான் சிவலிங்கம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய மூத்த மகள் ‘களுக்’ என்று சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான்.

‘சாதம்’ என்ற வார்த்தையைக் கேட்ட பரமனாதனுக்கு கதையை மாற்றப் பிடிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக ஹோட்டலில்தான் அவன் வாசம். ரொட்டியும், வெண்ணெயும், பழங்களுமாகச் சாப்பிட்டு, சாப்பிட்டு அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கனடாவின் படுபயங்கரக் குளிருக்கு அவனுடைய வயிறு ‘கொண்டா, கொண்டா’ என்று கேட்டுக் கொண்டிருந்தது. சாதத்தை அவன் அங்கே கண்ணால் கூட காணவில்லை. “என்ன? சோறு கறி வகைகள் எல்லாம் இங்கே தாராளமாகக் கிடைக்குமா?” என்றான் பரமனாதன். அவன் மனமானது சம்பா அரிசிச் சோற்றையும், மீன் குழம்பு கறியையும் நினைத்துப் பறந்தது.

இதற்கு பூர்ணிமா, “இதென்ன இப்பிடிக் கேக்கிறியள்? இது ஒரு சின்ன யாழ்ப்பாணம்தான்; யாழ்ப்பாணத்தில் கிடைக்காததுகூட இங்கே கிடைக்கும். அப்ப பாருங்கோ” என்றாள். பதமனாதனுடைய வாய் அப்பவே ஊறத் தொடங்கி விட்டது.

அப்போதெல்லாம் சிலோனில் பரமனாதனும் சிவலிங்கமும் அடிக்கடி ‘கிரின்லாண்ட்ஸ’ல்’ சாப்பிடுவார்கள். சிவலிங்கத்தின் காதல் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. இருவரும் சார்டர்ட் அக்கவுண்டண்ட் சோதனைக்கு படித்துக் கொண்டிருந்தார்கள். சிவலிங்கம் படிக்கவே மாட்டான்; பெட்டையின் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான்.

படிப்பைத் தவிர மற்ற எல்லாம் செய்து வந்தான்; படிக்காத புத்தகங்கள் இல்லை; எல்லாம் அறிவு சார்ந்த புத்தகங்கள். அந்தக் காலத்திலேயே அறிவு ஜ“வி. ஒரு விஷயத்தை ஒருக்கால் சொன்னால் பிடித்துக் கொண்டு விடுவான். அபாரமான ஞாபக சக்தி. அவனோடு வாதம் செய்து வெல்வது என்பது நடக்காத காரியம்.

எல்லோரும் அதிசயிக்கும் படி ஒரே முறையில் சோதனை பாஸ் பண்ணிவிட்டான். அவன் முழு மூச்சாகப் படித்தது என்னவோ இரண்டு வாரங்களே! மிகப் பெரிய தனியார் கம்பெனி ஒன்றில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலுக்கு வந்து விட்டான். பூர்ணிமாவை, பெற்றோரை எதிர்த்து மணமுடித்தான். அவனுடைய வாழ்க்கையானது இப்படி அந்தரலோக சுகபோகத்தில் சென்று கொண்டிருந்த போதுதான் 1977 கலவரம் வந்தது. இவனுக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு கம்பெனி கொடுத்திருந்தது; அத்துடன் நாலு வேலைக்காரர்கள், தோட்டக்காரன், டிரைவர், காவல்காரன் என்று பலபேர்.

அந்தக் கம்பணியிலே பத்தாயிரத்துக்கு மேலான பேர் வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்த தமிழர்களை விரல்விட்டு எண்ணலாம். எல்லாம் சிங்களவர்கள். இவனுடைய பதவியோ மிகமிக உயர்ந்தது. கலவரம் வந்தபோது எல்லாவற்றையும் துறந்து விட்டு ‘உயிர் தப்பினால் போதும்’ என்று இந்தியாவுக்கு பூர்ணிமாவுடன் ஓடி வந்து விட்டான்.

அங்கே சிவலிங்கம் பட்ட இன்னல்களை இங்கே விவரிக்க இயலாது. ஒரு உயர்ந்த பதவியில் சகல சௌகரியங்களுடனும் வாழ்க்கை நடத்திவிட்டு அகதியாக வந்து இம்சைப் படுகிற அவதி சொல்லி விளங்காது. கடைசியில், எவ்வளவோ கஷ்டப்பட்டு, அவனும் பூர்ணிமாவும் கனடாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு பரமனாதன் முதன் முறையாக அவர்களைப் பார்க்கிறான்.

பசி பிடுங்கியது பரமனாதனுக்கு. ஆனால் பூர்ணிமா அவர்களுடன் இருந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தாள். சாப்பாடு அடுக்குகள் ஒன்றையும் காணவில்லை. முதலில் பரமனாதனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது; பிறகு திகில் பிடித்துவிட்டது. ‘சாப்பாட்டே ஒரு வேளை கிடைக்காதோ? என்று நெஞ்சு அடிக்கத் தொடங்கி விட்டது.

பூர்ணிமா சடுதியாகச் சொன்னாள்: “இஞ்சருங்கோ! டூ போர் ஒன்ளை (241) டெலிபோனில் கூப்பிடுவமா?” பரமனாதன் பாவம், ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். சிவலிங்கம் விளங்கப்படுத்தினான்: “டூ போர் வன் நம்பரை டயல் பண்ணி ஒரு பெரிய பீஸா ரொட்டி ஓடர் பண்ணினால், ஒரு காசுக்கு இரண்டு ரொட்டி கொண்டு வந்து கொடுப்பார்கள்; ஒன்று பெரிசு, மற்றது சிறிசு. சிறிய ரொட்டி இலவசம். டூ போர் வன் (ஒரு காசுக்கு இரண்டு). பதினைந்து நிமிடங்களுக்கிடையில் வீட்டிற்கே கொண்டு வந்து தருவார்கள். அது பிந்தினால் ரொட்டி இலவசம். அதைத் தான் பூர்ணிமா கேட்கிறா? ஓடர் பண்ணுவமா?”

பரமனாதனுக்கு இடி விழுந்தது. “என்னடா! வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு பிடி சாதம் என்றெல்லாம் கதைத்தாய். இப்ப மெல்ல ரொட்டிக்கு தாவப் பார்க்கிறாயே!” என்றான்.

“ஓ, ஓ மறந்து விட்டேன். சாதம்தான், சாதம் தான்” என்று கூறிவிட்டு மனைவியைப் பார்த்தான், சிவலிங்கம், பூர்ணிமாவும் புன்சிரிப்புடன் மறுபடியும் டயல் பண்ணத் தொடங்கினாள்.

சிவலிங்கம் விஸ்தாரமாக கனடாக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போதே சாப்பாடு வந்த விட்டது பரமனாதனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘ஆஹா! என்ன சாப்பாடு. சம்பா அரிசிச் சோறு, மீன்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், மாசுச் சம்பல், முருங்கைக்காய் கூட்டு, இது என்ன கனடாவா, அல்லது யாழ்ப்பாணமா? ருசி, மணம் எல்லாம் தூக்கி அடித்தது. இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டார்களே?”

எல்லோருமாக மேசையில் சுற்றி வர இருந்து சுடச்சுட சாப்பிட்டார்கள். பரமனாதனுக்கும் உலகமே மறந்து விட்டது. அவன் பசிக்காகச் சாப்பிடுகிறவன் அல்ல;ராக்குக்காகச் சாப்பிடும் பேர்வழி! விட்டு வைப்பானா?

பூர்ணிமா சொன்னாள்: “இங்கே புருசன் பெண் சாதி இரண்டு பேருமே அநேகமாக வேலைக்குப் போகினம். அதனாலே இஞ்ச கன குடும்பங்களில் இப்பிடித்தான் ஓடர் பண்ணிச் சாப்பிடுகினம். நல்ல சாப்பாடு, விலையும் பரவாயில்லை.”

“நாங்கள் இங்கு வந்த மூட்டம் அகதிகள் உதவிப் பணத்தில்தான் மிகவும் சிக்கனமாக சீவித்தனாங்கள்; பிள்ளைகள் கனடா உணவு பழகி விட்டார்கள். இப்படி நாங்கள் ஓடர் பண்ணிச் சாப்பிடுவது இப்ப கொஞ்ச நாளாய்த்தான்” என்றான் சிவலிங்கம்.

சாப்பாடு முடியுந் தறுவாயில் பூர்ணிமா, “உங்கடை ப்ரண்டு வீட்டுப் பேரைப் பற்றி கேட்டார். நீங்கள் ஏதோ சொல்லி சமாளித்து போட்டியள். இவருக்கு நாங்கள் இஞ்ச வந்து பட்ட பாட்டைக் கட்டாயம் சொல்ல வேணும்” என்றாள சிவலிங்கத்திற்கு விஸ்தாரமாக கதை சொல்லுவது என்றால் அளவற்ற பிரியம், விடுவானா?

“இஞ்ச எல்லோருக்கும் நடக்கிறது போலத்தான் எங்களுக்கும் நடந்தது. ஆனால் எங்கடை கஷ்டம் கொஞ்சம் வித்தியாசமானது; அனுபவித்தால்தான் தெரியும்.

“இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிலோனில் நடந்த சம்பவம் இது. அப்ப ஒரு கம்பனிக்கு கணக்காய்வு (Audit) செய்யப் போயிருந்தேன். அங்கே பொன்னுச்சாமி என்றொரு கிழவர் நாற்பது வருடமாகவே வேலை பார்த்து வந்தார். பேரேடுகளைத் தயாரித்து ரயல் பாலன்ஸ் எடுத்து கணக்காய்வாளரிடம் (Auditor) கொடுப்பது அவர் பொறுப்பு. கணக்கு எழுதுவதில் அவர் புலி. எந்தக் கஷ்டமான சிக்கல் என்றாலும் அவிழ்த்து விடுவார்.

“நாற்பது வருட காலமாக வராத ஒரு கஷ்டம் அவருக்க அப்போது வந்தது. அவருடைய ரயல் பாலன்ஸ் அந்த வருடம் பொருந்தவில்லை; ஒரு சதம் வித்தியாசத்தில் நொட்டிக் கொண்டு நின்றது.

“பொன்னுசாமிக்கு இது ஒரு பெரிய சவால். இதை எப்படி அவர் ஏற்பார்? இரவு பகலாகக் கண் விழித்து முழுக கணக்குகளையும் இன்னொரு முறை சரி பார்த்தார். அந்த ஒரு சதத்தை அவரால் கண்டு முடியவில்லை. பெரிய மானப் பிரச்சனையாக இது உருவெடுத்து விட்டது. கணக்காய்வு தள்ளிப்போய்க் கொண்டே வந்தது. ரயல் பாலன்ஸ் சரி வராமல் கணக்குகளை முடிக்க முடியாதே?

“ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஒரு கதை படித்திருப்பாய். ஒரு கிழவன் தன் சிறு வள்ளத்தில் மீன் பிடிக்கப் போனான். தூண்டில் போட்டு மீனைப் பிடித்து விட்டான். ஆனால் அகப்பட்டதோ ஒரு ராட்சச மீன். பலத்த போட்டி. கிழவன் மீனை விடுவதாக இல்லை; மீனும் பிடி கொடுப்பதாக இல்லை. இந்தச் சண்டை நாள் கணக்காக நீடிக்கிறது. ஒன்றில் மீன் சாக வேண்டும் அல்லது கிழவன் சாக வேண்டும். அப்படியான ஒரு நிலை.

“அது போலத்தான் பொன்னுச்சாமிக்கும் பேரேட்டுக்கும் நடந்த போராட்டம் முடிவில்லாமலே நீண்டு கொண்டு போனது. ஒரு திங்கள் காலை நான் போகிறேன். பொன்னுச்சாமி தலைவிரி கோலமாய் என் முன்னே வந்து நிற்கிறார். அவர் கண்கள் எல்லாம் சிவந்து காணப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு அவர் வீட்டுக்கே போகவில்லை. இரவு பகலாக பேரேடுகளை மீண்டும் மீண்டும் சரி பார்த்திருக்கிறார்.

“அவருடைய கண்கள் கீழே பார்த்தபடி இருந்தன. தன் பைக்குள் கையை விட்டு ஒரு சதக் காசை எடுத்து என் மேசை மேல் வைத்தார். ‘தம்பி, இந்த ஒரு சதத்தை வைத்துக் கொள்ளுங்கள். என்னால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி. என்னை விட்டு விடுங்கள்’ என்றார். பொன்னுச்சாமியுடைய கஷ்டம் எனக்கு அப்பொழுது முற்றாக விளங்கவில்லை. ஆனால் அதே போன்ற ஒரு சங்கடம் எனக்கம் இங்கே கனடாவில் ஏற்பட்டது.

“நாங்கள் அகதிகளாக வந்து சீரழிந்த கதை நீண்டு கொண்டே போகும். அதை விட்டுவிடுவோம். என்னுடைய விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு கம்பனி கம்பனியாக ஏறி இறங்கினேன். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களைத் தபாலிலும் அனுப்பினேன். அகதிகள் உதவிப் பணத்தில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தினோம்.

“இங்கே பெண்களுக்கு வேலை கிடைப்பது வெகு சுலபம். பூர்ணிமாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் அவள் அப்போது கர்ப்பம். அதனால் வேலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“சில பேர் எனக்கு குறுக்கு மூளை சொல்லித் தந்தார்கள். கனடா அரசாங்கத்தை ஏமாற்றி உதவித்தொகை அதிகரிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன; அதில் ஒன்று மனைவியை தற்காலிகமாக நீக்கிவைப்பது. என் மனம் உடன்படவில்லை. சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்த நாட்டை இப்படி ஏமாற்றுவதா?

“கனடாவில் மீண்டும் ஒருமுறை படித்து கணக்காளர் தேர்வு எழுதி முடித்தேன். வேலை கிடைப்பது இப்போது இன்னும் கஷ்டமாகி விட்டது. விஷயம் இதுதான். என்னுடைய படிப்புக்கும், அனுபவத்துக்கும் ஏற்ற வேலை எடுத்த வீச்சே தரமாட்டார்களாம். கீழ் மட்டத்தில் சேர்ந்து படிப்படியாகத் தான் உயரவேணும். அப்படிக் கீழ்மட்டத்தில் எடுப்பதற்கும் கம்பனிகள் பயப்பட்டன.

“நீ சொன்னால் நம்ப மாட்டாய், கடைசியில் எனக்குக் கிடைத்த வேலை வாட்ச்மேன் உத்தியோகம்தான். அதற்கும்கூட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். தெரியுமா? ஒரு இந்தியக்காரர், சுந்தரம் என்று பேர், அவர்தான் எனக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுத்தார். அதற்கென்று பிரத்தியேகமான பயிற்சிகள் எல்லாம் தந்தார்கள். எங்கள் ஊரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்களும், பேப்பர் போட்ட பெடியன்களும் BMW காரில் இங்கே உலா வந்து கொண்டிருந்தார்கள். நான் இவ்வளவு படித்துவிட்டு இப்படியாக காவல்கார வேலை செய்து வேண்டி வந்து விட்டதே! விதியே என்று நொந்து கொண்டேன்.

“எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்ட் போகும். போதும் வரும் போதும் நான் அவருக்கு தவறாமல் சலாம் செய்வேன். அவருடைய கவனத்தை எப்படியும் ஈர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல்பட்டேன். அவருடைய கடைக்கண் பார்வைபட்டால் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே!

“என் வேலையோ மிகவும் கடுமையானது. முன் பின் எனக்கு அப்படி வேலை செய்து பழக்கவில்லை. இரவு முழுவதும் ரோந்து வந்து மெஷ’னைப் பஞ்ச் பண்ணிய படியே இருக்க வேண்டும். பனியென்றால் ஓவர் கோட்டையும், பூட்சையும் மேலாடைகளையும் மீறி குளிர் உள்ளே போய் உயிரைத் தொடும்.

“ஒருநாள் என் வீட்டுக்கு போய் காலுறையைக் சுழற்றியபோது காலுறையெல்லாம் இரத்தம். பூர்ணிமா அழுது விட்டாள். அன்று இரவு வெகு நேரமாக ஒரு விண்ணப்பம் தயாரித்தேன் எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்டுக்கு. எப்படியும் ஒரு சின்ன வேலையாவது போட்டுத் தருமாறு என் தகுதிகளை எல்லாம் காட்டி விளக்கினேன். தருணம் பார்த்திருந்து ஒருநாள் அதை அவர் கையிலும் சேர்த்து விட்டேன்.

“அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அவர் போகும் போதும் வரும் போதும், அவருடைய முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஏதாவது ஒருநாள் அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வருமா என்று பார்த்துப் பார்த்து ஏமாந்தேன்.

“அந்தச் சமயத்தில்தான் James Gleick எழுதிய Chaos என்ற புத்தகம் வெளியாகி எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அறிவு ஜ“விகளுக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகம் அது என்று உனக்குத் தெரியும்.

“நான் சிலோனில் இருந்தபோது புத்தகங்களை வாங்கி வாங்கி குவிப்பேன். வாங்கின புத்தகங்களை இரவு பகலாக வாசித்து முடித்து விடுவேன். இங்கே புத்தகங்களின் விலையோ எக்கச்சக்கம். ஒரு புத்தகம் கூட வாங்க முடிவதில்லை. புத்தக கடைகளைப் பார்த்துப் ஏங்குவேன்.

“ஒருநாள் பிரெஸ’டெண்ட் கையில் அந்த Chaos புத்தகத்தைப் பார்த்தேன். அடுத்த நாளே புத்தகக் கடையில் போய் நானும் ஒன்று வாங்கி விட்டேன். விலையோ 12 டொலர். பூர்ணிமா என்னுடன் சண்டை போட்டாள், எங்கள் வரும்படிக்கு அது ஒரு அநாவதியமான செலவு என்று. புத்தகத்தை முதலில் இருந்து கடைசிவரை மூன்று தடவை படித்தேன்; சில பகுதிகளைக் கரைத்தும் குடித்து விட்டேன்.

“அதற்குப் பிறகு அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உலாவத் தொடங்கினேன். பிரஸ’டெண்ட் வரும் சமயம் பார்த்து புத்தக அட்டை தெரியக்கூடியதாக பிடித்த பிடியே அங்குமிங்கும் அலைந்தேன்.

“என்னுடைய யுக்தி ஒருநாள் பலித்தது. அவரசமாய் போன பிரெஸ’டெண்ட் நின்று உற்றுப் பார்த்துவிட்டு ‘ஆஹா! James Gleick?’ என்றார். அவர் வாய் மூடு முன் நான் அந்த எழுத்தாளர் கூறிய தத்துவங்கள் பற்றி என் கருத்தை எடுத்து விட்டேன். குளத்தின் நடுவே ஏற்படும் சிறு சலனம் எப்படி விரிந்து விரிந்து கரையை அடைகிறதோ அதே போன்று வளிமண்டலத்தில் ஏற்படும் அணுப்பிரமாணமான சிறு மாற்றம்கூட வானிலையை ஏன் பூதாகரமாகப் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக்கினேன். அதனால்தான் கிரகணம். நீர்மட்ட ஏற்ற இறக்கம் பற்றியெல்லாம் கச்சிதமாக முன்கூட்டியே கூறிவிடும் விஞ்ஞானம், பருவ நிலையை மாத்திரம் முன்னறிவித்தல் செய்வதற்கு திக்குமுக்காடுகிறது என்பது பற்றி கூறினேன்.

“‘எங்கள் நாட்டில் ஓளவையார் என்று ஒரு மிகப் படித்த பெண் புலவர் இருந்தார். அவர் ஒரு அரசனை வாழ்த்தப் போய் ‘வரப்புயர’ என்று மட்டும் கூறி பேசாமல் இருந்து விட்டார். அதன் தாற்பரியத்தை பின்பு அவரே விளக்கினார்.’

‘வரப்புயர, நீர் யாரும் நீர் உயர, நெல் உயரும் நெல் உயர, குடி உயரும் குடி உயர, கோல் உயரும் கோல் உயர, கோன் உயர்வான்?

“‘ஒரு துளி காரியம் எப்படிப் பிரம்மாண்டமான ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று. இது எனக்கு மிகவும் பிடித்தமானது ஒரு கருத்து’ என்று மூச்சுவிடாமல் சொல்லி நிறுத்தினேன். பிரெஸ’டெண்ட் ஆடி விட்டார். ‘அட! மிக நல்ல வியாக்கியானமாய் இருக்கிறதே! குட், குட்’ என்று சொல்லிவிட்டு வேகமாய் போய் விட்டார்.

“அடுத்த நாள் எனக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. கணக்காளர் பிரிவில் ஒரு அடிமட்ட வேலை எனக்கு கிடைத்து விட்டது. எனக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலை என்பது பத்தாம் வகுப்பு படித்தவனை பாலர் வகுப்பில் போட்டதுபோலத்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை இரண்டு நாள் வேலையை இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுவேன். ஒய்வு நேரங்களில் மற்றவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். இரண்டு மாதத்தில் அந்தப் பிரிவு வேலையெல்லாம் எனக்கு தண்ணிபட்ட பாடு.

“என்னுடைய செக்ஷனில் எல்லோரிடமும் கம்ப்யூட்டர் இருந்தது; எனக்கு மட்டும் இல்லை. செக்ஷன் தலைவரிடம் வழவழவென்று ஒரு கம்ப்யூட்டர். அந்த வழியால் போகும்போதெல்லாம் அதைத் தொட்டுத் தடவி விட்டுத்தான் போவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுடைய கம்ப்யூட்டரில் வரும் சிறிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பேன்.

“இதற்கிடையில், ஐம்பது டொலருக்கு நான் ஒரு ஓட்டை கம்ப்யூட்டர் வாங்கி விட்டேன். மற்ற கம்ப்யூட்டர்கள் பென்ஸ் கார் என்றால் இதை ‘திருக்கல்வண்டி’ என்று சொல்லலாம். அவ்வளவு மெதுவாகப் போகும். கம்பெனியில் சிக்கலான சில வேலைகளை வீட்டில் கொண்டு வந்து இதில் தட்டி சரி செய்து விடுவேன்.

“அப்போது ஒரு நாள் எங்கள் செக்ஷன் தலைவர் சில நாள் லீவு போட்டார். அந்தப் பகுதி வேலைகள் எல்லாத்தையும் நான் பார்க்கும்படி வந்தது. விடுவேனா? அதிலும் அந்த கம்புயூட்டரில் வேலை செய்யக் கொடுத்து வைக்க வேணுமே? அப்படி வேலை செய்யும்போதுதான் ஒரு நாள் கவனித்தேன்; கம்புயூட்டர் பிரிண்ட் பண்ணும்போது ஒரு சதம் தவறியிருந்தது.

“இது பெரிய விஷயமில்லை. ஆனால் இது திருப்பித் திருப்பி நடந்தது. என்ன செய்தும் போகவில்லை. குத்துக்கரணம் அடித்து வித்தை காட்டினாலும் அந்த ஒரு சத வித்தியாசம் போவதாகத் தெரியவில்லை.

“கம்புயூட்டர் என்பது கணக்குகளைச் சரியாகவும், வேகமாகவும் போடுவதற்கென்றே பிறவியெடுத்தது. இப்படி பிழை நடக்கலாமா? ‘விடேன், தொடேன்’ என்று நான் இந்த ரகஸ்யத்தை உடைக்க முற்பட்டேன்.

“ஒரு நாள் பிரெஸ’டெண்ட் தனியாக இருக்கும் சமயம் பார்த்து அவர் முன்பு போய் நின்றேன். அந்த ஆதிமூலத்துக்குள் என் போன்ற சாதாரண மனிதப் பதர்கள் காலடி எடுத்து வைக்க முடியாது என்றாலும் நான் துணிந்து போய்விட்டேன்.

“முதலிலேயே மன்னிப்பு கோரி, இப்படி அடிக்கடி வரும் ஒரு சத வித்தியாசத்தைப் பற்றி அவரிடம் விஸ்தரித்தேன். அவர் அதைப் பொறுமையாக கேட்டுவிட்டு, புன்சிரிப்புடன் ‘அதை பார்த்து விட்டாயா? உண்மைதான். நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக முயன்றும் அந்த ஒரு சதம் உரைப்பதை நீக்க முடியவில்லை. சில வெளி இடத்து நிபுணர்கள்கூட வந்து பிழையைத் திருத்துவதற்காக எண்பதாயிரம் டாலர்வரை செலவு செய்துவிட்டோம். இது தவிர, இது என்ன, ஒரு சதம் தானே! இதை ஆர் நுணுக்கமாகப் பார்க்கப் போகிறார்கள். இது வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டோம். இதில் கவனத்தைத் திருப்பாதே’ என்றார்.”

அந்த நேரம் பார்த்து சிவலிங்கத்தின் மூத்த மகள் வந்து கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள். சிவலிங்கம் பொறுமையாக அவளுக்கு அந்தக் கணக்கை விளக்கப்படுத்தினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:

“மகாத்மாகாந்தி இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் பயணமானார். எப்போதும்போல சாதாரண இந்தியக் குடிமகன் போல நாலு முழத்துண்டும், மேற்போர்வையும், செருப்புடனும் வெளிக்கிட்டார். அவருடைய உணவுப் பழக்கமோ உலகம் அறிந்தது. பேரிச்சம் பழம், ஆட்டுப் பால், வெண்ணெய் இப்படி வெகு எளிமையானது. இங்கிலாந்து அரசாங்கம் அவருடைய சாப்பாட்டில் அக்கறை கொண்டு ஒரு ஆட்டையும் கப்பலில் அவருடன் லண்டன் வரவழைத்திருந்தது. அப்போது லண்டன் பேப்பர்களில் இப்படி ஒருசெய்தி வந்ததாம்: ‘மகாத்மா காந்தியை அவர் ஏற்றுக்கொண்ட ஏழ்மை நிலையில் வைத்திருப்பதற்கு இங்கிலாந்து அரசு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பவுண் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.’

“அது போலத்தான் இந்தக் கதையும் இருந்தது. நான் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக்கொண்டு. ‘ஐயா, எனக்கு ஒரு முறை இதைப் பார்க்க அனுமதி கொடுப்பீர்களா?’ என்று கேட்டேன்.

“அவர் சிறிது யோசித்தபடி இருந்தார். அந்த ஒரு நிமிடத்தில் என் மூச்சு ஓடாமல் நின்றது. கடைசியில் என்ன நினைத்தாரோ ‘சரி’ என்று கூறிவிட்டார்.

“அன்றிரவு என் போராட்டம் ஆரம்பித்தது. கிழவனுக்கும் மீனுக்கும் நடந்தது போன்ற போராட்டம்; பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் நடந்த துவந்தயுத்தம் போன்று முடிவில்லாத ஒரு யுத்தம்.

“170 பக்கங்கள் கொண்ட ப்ரோகிராம் அது. நுணுக்கமாக, வரிவரியாக அதைச் சோதித்தபடியே வரவேண்டும். மூலை முடிக்கெல்லாம் தடவித் தடவி தேடிக் கொண்டே வருகிறேன். எங்கோ ஒரு மூலையில் அந்த தவறு ஒளித்திருந்துகொண்டு என்னைப் பார்த்தபடியே இருக்கிறது.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை கரதலத்தில் கவர்ந்த காதல் உள்ளிருக்கம் என நினைந்து உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!

என்ற கம்பனுடைய பாடல் ஒன்று இருக்கிறது. ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்க்கிறோம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன். என் கண்ணுக்கு அது தென்படவே இல்லை.

“என் நண்பர்கள் என்னைப் பார்த்து பரிகசிப்பதுண்டு; கம்புயூட்டரை இயக்க முன் நான் வழக்கம்போல சொல்லும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி துதிக்கிறேன்:

மனிதனை உய்விப்பதற்காக அவதரித்த கம்புயூட்டரே! உனக்கு அநேக கோடி வணக்கங்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின் முன் நான் சிறுதுளி. உன் பரிபூரண கடாட்சம், என் மீது பாயட்டும்! சகல கதவுகளையும் திறந்து உன் ரகஸ்யங்களை என் வசமாக்குவாயாக! உன் வாசலிலே புக அநுமதி கேட்டு நிற்கிறேன். நமஸ்காரம்! நமஸ்காரம்!

இப்படியாக அதை வணங்கி இயக்குகிறேன். அது கிர்ரென்ற சத்தத்துடன் உயிர் பெறுகிறது. தன் பரந்த உலகத்தை என் முன்னே விரிக்கிறது. ஒவ்வொரு கதவாகத்தட்டி விடையைத் தேடிக்கொண்டே வருகிறேன். விடையும் என் கைக்குள் சிக்காமல்தப்பிக் கொண்டே போகிறது.

“ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. பல நாட்கள் இப்படியாக பயனின்றி ஓடி விட்டன. கந்தோரிலிருந்து வந்ததும் நேராகப் போய் கம்புயூட்டரின் முன் இருந்து விடுவேன். இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை வேலை செய்வேன். களைத்துப் போய் அப்படியே படுத்து தூங்கியும் இருக்கிறேன். மறு நாளும் இது போலவே போய் விடும். ஆனால் அந்த ஒரு சதம் என் கைக்குள் அகப்படாமல் தப்பிக்கொண்டு வந்தது.

“நான் உண்பதில்லை; வடிவாக உறங்குவதில்லை. வேறு ஒன்றிலும் கவனமில்லை. என் புத்தியெல்லாம் இதிலேயே செலவழிந்தது. உன்மத்தம் என்று சொல்வார்களே, அப்படியான ஒருநிலைதான். கம்புயூட்டர் தேவதை என்னை உதாசீனப்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்.”

இந்த இடத்தில் சிவலிங்கம் கதையை நிற்பாட்டிவிட்டு மனைவி கொண்டு வந்து வைத்த காபியை சிறிது பருகினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:

“நாங்கள் கலாசலையில் படித்தபோது வேதியியல் பேராசிரியர் கூறியது உனக்கு ஞாபகமிருக்கிறதா? பென்சீனுடைய (Benzene) அணு அடுக்கு முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பட்டபாடு. அதிலும் பிரடெரிக் கேகுலே என்ற விஞ்ஞானி ஒன்றல்ல. இரண்டல்ல ஏழு வருடங்கள் இதற்காகப் போராடினார். எப்படித்தான் படம் போட்டாலும் ஆறு கார்பன் அணுக்களையும், அறு ஹைட்ரஜன் அணுக்களையும் விகிதமுறை தவறாமல் அவரால் அடுக்க முடியவில்லை.

“கடைசியிலே ஒரு நாள் மாலை அவர் களைப்புடன் குதிரை வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது சிறிது அயர்ந்துவிட்டார். அப்போ அந்த விஞ்ஞானியின் கனவிலே பாம்புகள் தோன்றினவாம். அதிலே ஒரு பாம்பு தன் வாலைப் பிடித்துத் தானே விழுங்கத் தொடங்கியது. அந்தச் சமயம் பார்த்து இவருக்கு விழிப்பு வந்து திடீரென்று எழுந்துவிட்டார். அந்தக் கனவைத் தொடர்ந்து அணுக்களை வட்டமாக வரிசைப் படுத்தும் எண்ணம் உதித்தது. அப்படியே செய்து பார்த்தபோது அந்த அணு அமைப்பு சரியாக வந்து விட்டது.

“இது மாதிரியான சம்பவம்தான் எனக்கும் இங்கே ஏற்பட்டது. ஆறு மாத காலம் இப்படியே விரயமாகக் கழிந்தது. போராட்டத்திற்கு முடிவே இல்லை. என் மனைவிக்கும் வெறுத்து விட்டது. ஒருநாள் கம்புயூட்டரைத் தூக்கி எறிவதற்கு கூடத்துணிந்து விட்டாள். ஒரு சரஸ்வதி பூசை நாள். மனைவி மும்முரமாக பூசை அடுக்குகள் செய்கிறாள். கம்புயூட்டரில் மூழ்கி இருந்த என்னிடம் வந்து சொல்கிறாள்:

“இண்டைக்காவது இதை விடுங்கோ! மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட்’ கொடுத்துப் பாருங்கோ. ஒரு நாள் போனால் என்ன; நாளைக்கு வேலை செய்யலாம் தானே” என்று என்னை இழுத்துக் கொண்டு போய்விட்டாள். நானும் கம்ப்யூட்டரை தொடுவதில்லை என்று சத்தியம் செய்து மூடிவிட்டேன். ஆனாலும் என்ன பயன்?

“சாமி கும்பிடும் போதும் சரி, மனைவியுடன் பேசும்போதும் சரி, குழந்தையுடன் விளையாடும் போதும் சரி என் மனமானது கம்புயூட்டருடனேயே ரகஸ்யமாகச் சல்லாபித்துக் கொண்டு இருந்தது.

“அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக பத்து மணிக்கே படுக்கப் போய் விட்டேன். நித்திரையிலே எனக்கு ஒரு கனவு வந்தது. அப்போது பளீர் என்று என் மூளையிலே ஒரு மின்னலடித்தது. அந்த தப்புக்கான விடை அங்கே என் முன்னே குதித்துக் கொண்டு நின்றது. எழும்ப விட்டேன். நேரம் மூன்று மணி காட்டியது. ப்ரோகிராமை எடுத்துப் பார்த்தேன். பதினேழாவது பக்கம், நாலாவது வரியில் நான் நினைத்த மாதிரியே இருந்தது. என் கண்களை நம்பவே முடியவில்லை.

“ஸ்ரீரங்கநாதர் நீண்டு சயனிப்பதுபோல் அந்தப் பிழையானது நீளவாட்டில் படுத்துக் கொண்டிருந்தது. இதே பாதையால் முன்னூறு தடவையாவது போயிருப்பேனே! நான் பார்க்கவில்லையே! இன்று என்ன இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது. இவ்வளவு காலமும் ஏன் என் கண்கள் இதைக் கவனிக்கவில்லை?

“என் நெஞ்சு படக்படக்கென்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. வெளியிலேயோ பனி கொட்டுகிறது. மனைவி, குழந்தைபோல அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மெதுவாக ஓவர் கோட்டையும், பூட்ஸையும் எடுத்துக் கொண்டு பூர்ணிமாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதி வைத்துவிட்டு ஓசைப்படாமல் நழுவுகிறேன்.

“அப்போது என்னிடம் காரில்லை. டாக்ஸ’ ஒன்றை டெலிபோனில் கூப்பிட்டு என்னுடைய கந்தோருக்கு போய் இறங்கினேன். சுந்தரம்தான் காவல் காக்கிறான். செக்கியூரிட்டி கார்ட்டை கதவிடுக்கில் சொருகி கதவைத் திறந்துகொண்டு உள்ளே போகிறேன். ‘கம்ப்யூட்டர் தேவதையே! இன்று எனக்கு நீ இணங்கி விடு’ என்று வேண்டிக்கொண்டே அதை இயங்குகிறேன்.

“கம்ப்யூட்டர் கிர்ரென்று உயிர்பெற்று தன் வாசல்களை எனக்குத் திறக்கிறது. ஒவ்வொரு வாசலாகத் தட்டிக்கொண்டே செல்கிறேன். அங்கே கஷ்டப்பட்ட என் அணங்கு கைகளைப் பரப்பிக்கொண்டு எனக்காகக் காத்திருந்தாள். பதினேழாவது பக்கத்திலே அந்தப் பிழையானது வியாபித்து நிற்கிறது. நிமிடத்தில் அதைச் சரி செய்துவிட்டு ஓட்டிப் பார்க்கிறேன். ஒரு சதம் போய் விட்டது; விளம்பரங்களில் சொல்வதுபோல் ‘போயே போய்’ விட்டது.

“என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. இன்னும் ஒரு இருபது தடவை திருப்பித் திருப்பி ஓட்டிப் பார்த்தேன். ஒரு சத வித்தியாசம் மறைந்துவிட்டது. யாரிடமாவது சொல்லிக் கதற வேண்டும் போல இருந்தது. ‘சுந்தரம் சுந்தரம்’ என்று ஓடினேன். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உளறினேன். ‘என்ன தம்பி, என்ன ஆச்சு? கம்ப்யூட்டரை உடைச்சுப்பிட்டியா?’ என்றான். ‘இல்லை, சுந்தரம் ஒரு சதம் ஒன்று இவ்வளவு நாளும் காணாமல் போச்சு. இன்று கிடைத்துவிட்டது’ என்று கூறினேன். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“நான் அந்த ப்ரோகிராமை திருப்பித் திருப்பி ஓட வைத்து அதன் லாவண்யத்தை ரசித்தபடியே இருந்தேன். அந்த அழகு கொள்ளை அழகு; அதை எத்தனை தரம் பார்த்தாலும் ஆசை தீராது.

“அந்தச் சமயம் பார்த்து இன்னொரு அதிசயம் நடந்தது. பனி சறுக்கு விளையாட்டுக்கு எங்கள் பிரெஸ’டெண்ட் அடிக்கடி போவதுண்டு. அன்று சனிக்கிழமை. அதிகாலையிலேயே அவர் கந்தோருக்கு வந்திருந்தார், தன்னுடைய உபகரணங்களை எடுப்பதற்காக. என்னைக் கண்டதும் திகைத்து விட்டார்; என்னுடைய குழம்பிய தலையையும், சிவந்த கண்களையும் பார்த்து உண்மையாகவே அவர் அதிர்ந்துவிட்டார். ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்.

“‘அந்த ஒரு சதம், அதைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்றேன். அதைச் சொன்னபோது எனக்கு நாக்கு குழறியது; கண்களிலே பொலபொல வென்று கண்­ர். ‘எங்கே பார்ப்போம்?’ என்றார். ஒட்டிக் காட்டினேன். ‘இன்னொரு முறை’ என்றார். கம்ப்யூட்டர் மறுபடியும் ஓடி ஓய்ந்தது. ‘ஆஹா!, போய்விட்டதே. ஆறு வருடமாக எங்களை அலைக்கழித்தது இன்றோடு ஒழிந்தது; எக்சலண்ட் வேர்க்; காங்கிரஜுலேசன்ஸ்’ என்றார்.

“என் மனதில் ஏதோ ஒன்று நெருடியது. ‘ஐயா, இதன் உண்மையான தாத்பரியம் தங்களுக்கு தெரிகிறதா?’ என்றேன். ‘என்ன’ என்று இன்னொருமுறை கேட்டார். ‘இந்தப் பிழை நீக்கத்தால் இந்த வருடம் மட்டும் 384,000 டொலர் லாபம் அதிகமாகிறது; போன வருடம் இந்தத் தவறினால் 292,000 டொலர் இழந்து விட்டோம். அது போனதுதான். அடுத்த வருட பட்ஜட்டின்படி 483,000 டொலர் லாபம் மிகையாக வரும் என்றேன்.

“தொடர்ந்து அதற்கான கணக்குகளையும் படபடவென்று போட்டுக் காட்டினேன். ஆறுதலாக அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார். அவர் முகத்தில் அவமானம், அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஓடியது. போய்விட்டார்.

“அடுத்த நாளே எனக்கு ஒரு ப்ரமோஷன் காத்துக் கொண்டிருந்தது. எங்கள் கம்பனியில் இருந்த எட்டு பினான்ஸ’யல் கொண்ட்ரோலர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டேன். இதுதான் என் சரித்திரம்” என்றான்.

“மிச்சத்தையும் சொல்லுங்கோ” என்றாள் மனைவி.

“இது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம். புது வேலையில் உயர்த்தப்பட்ட உடனேயே என் வழக்கப்படி எல்ல வேலைகளையும் இழுத்துப் போட்டு கற்று விட்டேன். கம்ப்யூட்டர் மூலம் வேலைகளை எளிமையாக்கினேன்; நஷ்டத்தை குறைத்து லாபத்தை விரிவடையச் செய்தேன்.

“ஒருமுறை ஒரு சோதனையான காலம். கம்ப்யூட்டர் பிரிவு தலைமை அதிகாரி லீவிலே போய்விட்டார். சில அந்தரங்க அறிக்கைகள் தயாராக வேண்டி இருந்தது. கம்ப்யூட்டரில் ஒரு சிக்கல். ஆலோசகர்களைத் தருவிக்க நேரமில்லை. அவர்கள் ஒட்டாவாவில் இருந்து வரவேண்டும். இரண்டு நாட்களாக கம்பனி இயக்குணர்கள் ஓடிஓடி தாங்களாகவே அதை நிவர்த்தி செய்யப் பார்த்தார்கள். முடியவில்லை. கெடு நாளும் நெருங்கிக்கொண்டே வந்தது.

“பிரெஸ’டெண்ட் என்னைத் தனிமையில் அழைத்து ‘இதை பார்க்க முடியுமா? இதில் ஏதோ பெரிய சிக்கல், நாளைக்கே ரிப்போர்ட் தயாராக வேண்டும், உங்கள் உதவி மிகவும் அவசியம்’ என்றார்.

“அந்தரங்கமான அறிக்கைகள் அவை. என் போன்றவர்கள் அவற்றைப் பார்க்க அருகதை இல்லை. ‘ஆபத்துக்கு பாவம் இல்லை’ என்று என் கையில் அது வந்துவிட்டது. கடவுளாக அனுப்பிய பிரசாதம்.

“பெரும் காப்பியங்களை எழுதும்போது ‘காப்பு’ என்று கடவுள் வாழ்த்துப் பாடி பின்பே காப்பியத்தை தொடங்குவார்கள். அது போல இந்தக் ப்ரோகிராமிலும் காப்பு போல ஒன்று இருந்தது. அதற்கு பிறகே மு€றான ப்ரோகிராம் தொடங்கும்.

“நான் ப்ரோகிராமைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. காப்பிலேயே பிழை. கனதூரம் போகத் தேவையில்லை. ‘ஆஹா!, இதோ’ என்று சொல்ல வாய் திறந்துவிட்டு சடாரென்று மூடிக் கொண்டேன். ‘இது கொஞ்சம் சிக்கலாக இருக்கும்போலத் தெரிகிறது. நாளைவரை ரைம் கொடுங்கள்’ என்று சொல்லி ப்ரோகிராமை பெற்றுக் கொண்டேன்.

“முதல் ஒரு நிமிடத்திலேயே பிழையைத் திருத்திவிட்டேன், மீதி இரவெல்லாம் ப்ரோக்கிராமை அணு அணுவாக ஆராய்ந்து மனதில் பதித்து வைத்துக் கொண்டேன். இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதல்லவா?

“அந்த சம்பவத்திற்கு பின்புதான் எனக்கு Deputy Finance Director பதவி கிடைத்தது. அதற்கு முன்பு அந்த வேலையில் இருந்தவரை நீங்கி விட்டார்கள். அவர் நல்ல மனிதர். அன்பான சுபாவம். என்னைப் போல அகதியாக வந்து உயர்ந்தவர். அவரை நீக்கி எனக்கு அந்த வேலையைக் கொடுத்தபோது மிகவும் சங்கடமாகி விட்டது.”

“இப்பவும் அதே வேலைதானா? இனி எப்ப அடுத்த ப்ரோமஷன்? என்று பரமனாதன் கேட்டான்.

“சூரபத்மன் ஒரு வரம் வாங்கினான். சாகாத வரம், தெரியுமல்லவா? அவன் செய்த கொடுமைகள் பொறுக்கமுடியாமல் தேவர்கள் முறையிட்டார்கள். முருகப் பெருமானும் மனமிரங்கி வேலாயுதத்தை எறிந்து சூரனை இரு கூறாக்கினார். அவன் ஒரு பாதி சேவலும், மறு பாதி மயிலுமாக மாறினான். இறக்கவில்லை; உருவம்தான் மாறினான். முருகப்பெருமான் சேவலை கொடியாக தன் தலை மேலும், மயிலை வாகனமாக காலில் கீழும் வைத்துக் கொண்டார். சூரனுடைய தலையும் (சேவல் வாலும் (மயில்) என்றைக்கும் ஆடாமல் தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் அசந்தால் சூரன் தன் பழைய குணத்தைக் காட்டத் தொடங்கிவிடுவான் என்பது முருகனுக்குத்தான் தெரியும்.

“என் நிலையும் அதுதான். என்னை நிமிரவிடாமல் ஒரு முருகப்பெருமான் எனக்கு மேலே, அதுதான் Finance Director. என்மேல் அவருக்கு எப்பவும் ஒரு பயம். என்னால் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நித்தமும் கலங்கியபடி இருக்கிறார். நான் இதற்கு என்ன செய்யலாம்” என்றான்.

“எனக்கு உன்னைத் தெரியாதா? நான் உன்னை அடுத்த முறை பார்க்கும்போது நீ உன் மேலதிகாரியின் வேலைக்கு வெடி வைத்துவிட்டு பிரெஸ’டெண்டின் வேலையில் கண் வைத்திருப்பாய்” என்றான் பரமனாதன்.

அப்படிச் சொல்லிவிட்டு பரமனாதன் தன் நண்பனைப் பார்த்து புன்னகை செய்தான். சிவலிங்கத்தின்மேல் அவனுக்கு ஒரு அளவில்லாத மரியாதையும், அன்பும் சுரந்தது.

“வெறும் கையோடு அகதியாக ஓடி வந்த எங்களை கனடா அரவணைத்து வாழ இடம் கொடுத்தது. இந்த வீட்டை நான் அடிமட்ட வேலையில் சேர்ந்தபோது கடனுக்கு வாங்கினேன். என்னுடைய சம்பளம் பத்து மடங்கு பெருகிவிட்டது. இது என் சொந்த வீடு. நான் மிக்க சந்தோஷமாக இருக்கிறேன்” என்று சிவலிங்கம் கண்கலங்கியபடியே கூறினான்.

அப்போது அவனுடைய இளைய மகள், நாலு வயது இருக்கும்; ஒரு கரடி பொம்மையை தலைகீழாக இழுத்தபடி அரை நித்திரையில்வந்து, தகப்பனுடைய மடியில் தாவி ஏறினாள். சிவலிங்கம் அவளைத் தூக்கி அணைத்து வைத்துக் கொண்டு, “என் ஆசை மகளே, உனக்குத்தான் இந்த வீடு” என்றான்.

அப்போது அவனுடைய மூத்த மகள், மேசையில் படித்துக் கொண்டிருந்தவர், ஓடோடி வந்து தகப்பனின் மற்ற மடியில் துள்ளி ஏறி இருந்து கொண்டு “அப்ப எனக்கு, அப்ப எனக்கு” என்றாள்.

சிவலிங்கம் சொன்னான்: “உனக்கு இல்லாமலா என்ரை மகளே! புத்தம் புது வீடு ஒன்று உனக்குத் தானே வாங்கப் போறேன்.”

“அப்ப என்ரை வீட்டுக்கு என்ன பேர் வைக்க போறீங்க? என்றாள் அவள்.

” ‘பத்து சதம்’ என்று வைச்சால் போச்சு’ என்றான் சிவலிங்கம்

பரமனாதனின் மூளையில் பளீரென்று ஒரு மின்னல் அடித்தது. சிவலிங்கத்தினுடைய வீட்டின் பெயர் `ஒரு சதம்’ (ORU SATHAM). பரமனாதன்தான் எப்போதும் போல முட்டாள்தனமாக அவசரப்பட்டு ‘ஒரு சாதம்’ என்று நினைத்து விட்டான்.

பரமனாதன் நண்பனைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்தான். சிவலிங்கமும் பதிலுக்கு புன்முறுவல் பூத்தான்.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு சாதம்

  1. நான் இதுவரை இந்த கதையை பலமுறை படித்து விட்டேன் என்னை மிகவும் கவர்ந்த கதை காரணம் சொல்ல தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *