ஒரு குடியின் வரலாறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 2,482 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மோட்டார் பைக்கிலிருந்து இடது பக்கமாக சரிந்து சரிந்து கீழே விழாமல் தொற்றிக் கொண்டிருப்பவர் போல் அந்த வாகனத்தைத் திருப்பாமல் தன்னைத் திருப்பிக் கொண்டிருந்த ராமசாமி தனது வீடு உள்ள தெருவில் மாடி பால்கனியில் மனைவியைப் பார்த்ததும், மேல் அதிகாரியை பார்த்தால் எப்படி நிமிருவாரோ அப்படி நிமிர்ந்தார். வழக்கம் போல் இன்று காலையில் கூட ஹாண்டில் லேசா திருப்பினா வண்டி தானா திரும்பிட்டுப் போகுது. நீங்க எதுக்காக தலைகீழா தொங்குறீங்க – லூ ஸ்சு – லூ ஸ்சு” என்று மட்டும் அந்தம்மா சொல்லவில்லை. “தென்னை மரத்தில் இருக்கிற ஓணான் காத்துல மரம் ஆடும் போது அந்த மரத்தை தான் ஆட்டுறதா நினைச்சு தலைய ஆட்டுமாம். நீங்க என்னடான்னா உடம்ப முழுசும் இல்ல ஆட்டுறீங்க’ என்று உதாரணத்தோடு அந்தம்மா , பேச்சை முடித்தாளா என்றால் அதுதான் இல்லை. “எதுக்கும் பரம் பரை பரம்பரையா சின்ன வயசிலயிருந்தே ஓட்டியிருந்தாத் தானே பழக்கம் வரும்” என்றும் சொல்லி வைத்தாள். இது வரை எந்த வாகனத்தையும் வாங்காமல், அவளையும் பின் னால் தூக்கிக்கொண்டு போகாமல், இந்த ஐம்பது வயதில் அவள் உட்கார முடியாதபடி குலுக்கி எடுக்கும் ஒரு பைக்கை வாங்கியதை விவகாரமாக்கிக் கொண்டிருக்கிறாள். ஆகை யால் இந்த ராமசாமிக்கும் பைக்கைத் திருப்பும் போதெல்லாம் மனைவியின் ஞாபகய வரும். போதாக்குறைக்கு ஒரு ஓணான் வேறு பூவரச மரத்திலிருந்து தலையை ஆட்டும்.

ராமசாமி தலையை 90 டிகிரியிலும், முதுகெலும்பை நேர்கோடாகவும், வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டே ஓடுகிறவர் போல் பைக்கை ஓடவிட்டபோது, அந்தம்மா மாடிப்படிகளில் அவசர அவசரமாய் இறங்கி கேட் டைத் திறந்து கொண்டிருந்தாள். அவர் ஆச்சரியப்ப டு – அதைக் காட்டும் வகையில், பைக்கிற்கு சடன் பிரேக் வேறு போட்டு விட்டார். மோட்டார் பைக்கை உருமவிட்டுக் கொண்டு பால்கனியில் இருக்கும் மனைவியைப் பார்த்து கொஞ்சம் கேட்டைத் திற , கேட்டைத் திற’ என்று அவர் பலதடவை சொன்னாலும், அந்தம்மா ஒரு தடவை கூட திறந்ததில்லை. ‘பேசாம திறந்துக்கிட்டு வாங்க’ என்பாள். அந்தப் பயல்களாவது கேட் டைத் திறப்பார்களா….? என்றால் அம்மாவின் பேச்சை கைகொட்டி ரசிப்பார்கள். ஆனால், இப்போ என்ன வந்தது, எதற்காக இவள் மோட்டார் பைக் வேகத்திற்கு எதிர் முனையிலிருந்து ஓடி வராள்.

ராமசாமி காலை பிரேக்கில் தேய்த்தபோது, அந்தம் மாள் ஓட்டிவந்த கால்களை தரையில் தேய்த்தபடி மூச்சு முட்ட அந்த பைக்கின் முன்னால் நின்றாள். பிறகு வாயையே மூக்காக்கி , மூக்கை வாயாக்கிப் பேசினாள்.

‘கோபப்படலைன்னா ஒரு விஷயத்தைச் சொல்லுறேன்’.

‘விஷயத்துக்கு வா’

“அந்த பேதில போவான்…. அதான் உங்க மச்சினி புருஷன், சாராயத்தை குடிச்சிட்டு வீட்டுக்கார அம்மாவ கண்டபடி திட்டிக்கிட்டு இருக்கானாம். கடைசியில் நாய குளிப்பாட்டி நடுவீட்டுல வெச்ச கதையாப்போச்சு. அமுக்கடி கள்ளன் , அற்பன், ஒரு வருஷம் வரைக்கும் சும்மாயிருந்த கொள்ளையில் – போவான், இன்னிக்கி பார்த்து குடிச்சிருக் கான் பாருங்க. அந்தத் தெருவில் இருக்குற ஒருத்தி வந்து இப்போதான்… சொல்லிட்டுப் போறாள் – கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறானாம்.’

ராமசாமி மெய்யாகவே அதிர்ந்து போனார். ஆகையால், தான் மச்சினியின் வீட்டுக்காரனை திட்டாமல் இருப்பதற் காகவே தனது வீட்டம்மாள் அவனை அதிகமாகவே திட்டு கிறாள் என்ற சூட்சமம் அவருக்குப் புரியவில்லை . அவளால் சொல்லப்பட்டவன், குடித்துவிட்டு எப்படி ஆடுவான் என் பதை கற்பனை செய்து பார்க்கப் பார்க்க அவருக்கே குடி காரன் போல் கண்கள் சிவந்தன. தலை சுற்றியது. சிறிது நேரம் பேச்சற்று மனைவியைப் பார்த்தவர், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் சாவகாசமாய்ச் சொன்னார்.

‘சரி வழிய விடு, எவனும் எக்கேடு கெடட்டும்…. இதுக்கு தான் பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு என்று பழமொழி வந் தது. வழிய விடுடி. கேட்ட பழையபடி மூடு, நானே திறந்து பைக்கத் தள்ளுறேன்.’

இப்போது அந்த அம்மாவுக்கு லேசாய் அழுகை வந்தது. அவரது கடிக்காரக் கையை வருடி விட்டபடியே பட்டும் படாமல் பேசினாள்.

‘பாலைப் பார்க்கிறதா, பால் காய்ச்ச பானையை பார்க்கிறதா……? உங்களுக்கே தெரியும்! நமக்கு கல்யாணம் ஆன – புதுசுல நம்ம பெரியவனை எடுக்குறதுக்காக பத்து வயசு லேயே படிப்ப விட்டுட்டு நம்ம கூடவே இருந்தவள் கமல சுந்தரி. அவள் முகத்துக்காகவாவது – ‘

‘அந்தப் பய எக்கேடும் கெட்டுப் போகட்டும், ஒரு வருஷமா விட்டதெ இப்போ ருசி கண்டுட்டான். இனிமே வட்டியும் முதலுமா குடிப்பான். நாளைக்கே அவன் கடையையும், டெலிபோனையும் இழுத்து மூடுறேன் பார்.’

வேறு சமயமாக இருந்தால், அந்தம்மா அவரை நாரு நாராகக் கிழித்திருப்பாள். இன்றைக்குப் பார்த்து அவர் காட்டில் மழை. ஆகையால், அவள் கண்களிலும் மழை. ஒரு கன்னத்தில் பொங்கி வந்த நீரை துடைத்துவிட்டு, மறு கன்னத்தில் அதையே அருவியாய் ஓடவிட்டபடி அவரையே பார்த்தாள். அவர் ஒரு கமென்ட் அடித்தார்.

ங்கைக்காக ஒரு கண் அழுவுது, மச்சினனுக்காக மறு கண் கொதிக்குதோ….?’

‘அப்புறம் என்னை நீங்க என்ன வேணும்னாலும் திட்டிக்க லாம், நான் (இன்னிக்கி மட்டும்) பதிலுக்கு திட்ட மாட்டேன் அந்த பேயன யாராவது போலீசுல ஒப்படைக்குறதுக்கு முன்னால சீக்கிரமா போங்க!’

ரி நீயும் வா ‘

‘நான் பம்புல தண்ணியடிக்கணும். அப்பத்தான் நீங்க முகம் கழுவ முடியும் , ஒங்களுக்குக் காப்பிப் போட முடியும். அதோட நீங்க ஒருத்தர் போதாதா….?’

ராமசாமி மபை விழைய் :த்தார்! உடம்பைப் போலவே தடித்த குரல் . மோட்டார் பைக்கின் ஹெட்லைட் போலவே ஏறிட்டுப் பார்ப்பவர்களை கூசவைக்கும் கண்கள். இவள் போனாலே , அவன் பெட்டிப் பாம்பாய் ஆயிடுவான். ஆனாலும், வர மாட்டாள்; அந்தஸ்து பார்ப்பதில் அசல் ராணி. தங்கச்சி வீடு ஒரு குடிசைப் பகுதி என்பதற்காக, ஒரே ஒரு தடவை அதுவும் அவள் குடித்தனம் போகும்போது தெருவில் நின்று வீட்டை எட்டிப் பார்த்துவிட்டு வந்தவள் அதே சமயம் அங்கிருப்பவர்கள் யார், எவர் என்று தங்கை யின் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து அவாகள் சம்பந்தமாக சில அபிப்பிராயங்களை வைத்திருப்பவள் சிறது நேரம் அவளை எடை போட்டுப் பார்த்துவிட்டு பைக கை அங்கேயே நிறுத்திவிட்டு அந்தத் தெருவையும், அடுத்த தெருவையும் இணைக்கும் ஒரு அசிங்கம் பிடித்த பள்ளத்தின் வழியாக நடந்தார். அந்தமமா, கௌரவத்தை மனதில் வைத்து அறிவுறுத்தினாள்.

‘பைக்கிலேயே போறது?”

‘எனக்கு வார கோபத்துல; இடையில் யார் மேலயாவது ஏத்திடுவேன். நடந்தே போய் தொலைக்கிறேன். பைக்கைத் தள்ளி உள்ளே கொண்டு நிறுத்து!’

ஆணையிட்ட கணவனை, அந்தம்மா அசுரத்தனமாய் பார்த்துவிட்டு, அந்த பைக்கை தன் வயிற்றால் இடித்து இடித்து தள்ளிக் கொண்டே போனாள். ராமசாமிக்கு அதை பார்க்க சந்தோஷமாய் இருந்தது. அதே சமயம் அவள் மோதி , அந்த பைக்கு சேதப்பட்டுவிடக் கூடாதே என்ற பயமும் வந்தது. அதுவும், அவளும் கீழே விழப் போவதைப் பார்க்க சகிக்காதவர் போல், மைத்துனி வாழும் தெருவில் விறுவிறுப்பாய் நடந்தார். மைத்துனியின் கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. ஆனாலும், அவன் நல்லவன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. நல்லவன் குடிக்கப்படாதா என்ன? நல்லாவே குடித்தான். கிராமத்தில் பல் தேய்ப்பதி லிருந்து, படுக்கப் போவது வரைக்கும் குடித்தான்… ஆனா லும், இந்த ராமசாமி , லீவிலோ அல்லது கேம்ப்பிலோ ஊருக் குப் போகும்போது நாலுநாளைக்கு குடியை விட்டுவிடுவான். சதா மூங்கியையே கொசவவைத்த புடவை போல் கட்டிக் கொண்டிருப்பவன், வேட்டிக்கு வந்துவிடுவான். இவருக்கு அதில் பெருமை. ஒருதடவை ஒரு லோக்கல் பஞ்சாயத்து ஆசாமி “நீங்க இருக்கும்போதெல்லாம் குடிக்க மாட்டேங் கிறான். பேசாம மெட்ராஸுக்குக் கூட்டிக்கிட்டு போய் ஒரு கடை யோ , கன்னியோ வைத்து கரையேத்தி விடுங்க.” என்று சொன்ன வாயோடு வாயாய் , ‘ஏய் …. தங்கதுரை உங்க ஆபீசரு அண்ணாச்சிய உடும்புப் பிடியா பிடிச்சுகடா’ என் றார். இவருடைய மனைவியும் ‘நம்மால கமல சுந்தரியோட படிப்பு தான் போயிட்டது. அவள் வாழ்க்கையும் போயிடக் கூடாது’ என்றாள் அதட்டலாக .

கமலசுந்தரியும், அவள் கணவனும் கூடவே வந்துவிட் டார்கள். இவரும் வேறு வழியில்லாமல் அவள் புருஷனுக்காக வேலைக்கு அலைந்தார். மைத்துனியும் தனது பிள்ளை களையே சுற்றிச் சுற்றி வந்தாள். துணி தோய்க்க வேண்டுமா……? பம்ப் அடிக்க வேண்டுமா ..? டிபன் பாக்ஸ் களை நிரப்ப வேண்டுமா……? அத்தானுக்கும் அக்காளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமா……? எல்லாம் அவளே!

ராமசாமி, தனது செல்வாக்கில், சென்னையிலேயே அவர்களுக்கு ஒரு மளிகைக்கடை ஏற்பாடு செய்து கொடுத் தார் . டெலிபோன் டிபார்ட்மென்டில் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு பொதுத் தொலைபேசியையும் வாங்கிக் கொடுத் தார். ரூபாய்க்கு நாற்பது பைசா கமிஷன் . ஆக மொத்தம், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல் மாத வருமானம். இப் போது அவர்களே இவர்களுக்கு ‘கைமாத்துக் ‘ கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனாலும், ஒரு சின்ன வருத்தம் அவளுக்கு. இந்த கமல சுந்தரி எதுக்கொடுத்தாலும் எங்க அக்காவால் இந்த நிலைக்கு வந்திருக்கோம்’ என்று அவர் கண் படும்படி முகம் காட்டி, காது கிழியும்படி முழங்குவாள். இதனால், ஒரு தடவை டெலிபோன் பில் “கால் – களுக்கு ” அதிகமாக, கைக்கு வந்தபோது, அவர் கண்டுக்கவில்லை. ஆனாலும், இன்று அவர் மனசு கேட்கவில்லை . அவரால் புத்தாக உருவாக்கப்பட்ட அந்த தங்கதுரை, இப்படி மீண்டும் குடிக்க போய் விட்டானே என்கிற ஆதங்கம் ஆத்திரமாகியது.

ராமசாமி மைத்துனியின் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தபோது, தங்கத்துரை தூள் பரப்பிக் கொண்டிருந் தான். சாராயத்தில் கலப்பதற்காக வாங்கிய சோடாவை கர்லா கட்டை மாதிரி கழற்றியபடியே , “ஏய்…. தடிச்சி , ஏய்…. கூனி , ஏய் …. குறுங்கழுத்தி – வாடி… ஒன்ன இன்னிக்கி உண்டு இல்லைன்னு பண்ணுறேன் பார்…’ என்று சொன்ன தையே சொல்லிக் கொண்டு முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தான். கமலசுந்தரி , அந்த வளாகத்திற்குள், அவளே பூமத்திய ரேகை மாதிரி ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து கொண்டு, அவன் அந்தக் கோட்டைத் தாண்டி வீட்டுக்கார அம்மாவை நெருங்கப் போகும்போது பின்னால் தள்ளிவிடுவாள். அவனும், பின்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து கார்ப்பரேஷன் குழாயின் எல்லைச் சுவரில் கால் இடறி, மீண் டும் முன்னுக்கு வருவான். மனைவியைப் போலவே அவ னுக்கும் வாட்ட சாட்டமான உடம்பு. மதம் பிடித்த யானை போல் இதுவரை ‘மாவுத்தனம்’ செய்த வீட்டுக்கார அம் மாவை விலாவாரியாக விமர்சித்துக் கொண்டிருந்தான்.

‘யேய் – ஒன்னால முடியாட்டி ஒன் டப்பா புருஷன வரச் சொல்லுடி….. நீயாச்சு , நானாச்சு – ஏண்டி , கிழவி…. தெரியாமத்தான் கேக்குறேன் — நீ கக்கூஸ் கதவ பூட்டி வைக் கணும், நாங்க வயிறு வீங்கி சாகணுமா ….? நீபைப்பு குழாய்க்கு பூட்டுப் போடணும், நாங்க தாகத்துல துடிக்கணுமா …? அந்தத் தண்ணி கிடைக்காததுனால தாண்டி இந்தத் தண்ணி போட்டேன். நாங்க ராத்திரியில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது நீ லைட்ட ஆஃப் செய்யணும், எங்க கண்ணு குருடாகணுமா-? வீட்டுக்கு வரவங்கள் நீ … நாயே , பேயேன்னு திட்டணும், நாங்க அம்மணம் ஆனது மாதிரி தலை குனியணுமா…..? சொல்லுடி…. சொல்லுமே…… கரன்ட் பில்ல விட இரண்டு மடங்கா நீ காசு வசூலிக்கணும், நாங்க கணக்குக்கூட கேட்கப்படாதா , அதான் இனிமே நடக்காது. ஏண்டி கெழவி ஒத்தைக்கு – ஒத்தையா வாறியா , நீயாச்சு, நானாச்சு…’.

கமலசுந்தரி கண்களால் கிழித்த கோட்டைத் தாண்டி அவன் எகிறியபோது அவள் அவனை மல்லாக்க விழத் தட்டி னாள். பிறகு, அவளே அவனை தூக்கிவிட்டு தூசித் தட்டி விட்டாள். மீண்டும் அவன் முன்னுக்கும், பின்னுக்கும், தள் ளாடித் தள்ளாடி நடை பயின்றான். மழலைத் தமிழும், சென்னைத் தமிழும், நெல்லைத் தமிழும் விரவிக் கலக்க சாராயச் சூட்டோடு சவுக்கடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

வீட்டுக்கார அம்மா பயந்து விட்டாள். சற்றே குள்ள மானவள் , கர்ப்பிணி பசு மாதிரி முதுகுக்கு அப்பாலும், இப் பாலும் விரிந்த வயிறு. மலைப்பாம்பு மாதிரியான பார்வை, பார்த்தாலே பயங்கொடுக்கும் தோரணைக்காரி. ஆனால், இப்போது அடங்கி ஒடுங்கி ‘மாரியாத்தா….. மாரியாத்தா’ என்று ஆகாயத்தைப் பார்த்து கும்பிட்டாள் . கமலசுந்தரியின் சகக் குடித்தனக்காரிகளான மல்லிகா , கமலா, ஜோதி ஆகிய முப்பெரும் அழகிகளும், சந்தோஷம் தாங்காமல் வாயைப் பொத்தினார்கள். வீட்டுக்காரியின் கணவன், மனைவியை அடக்கவும் ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் குத்துக்காலிட்டு சும்மாவே உட்கார்ந்து கொண்டு ஒரு டப் பாவை தரையில் தேய்த்துக் கொண்டிருந்தார். கிழவியின் இரண்டு மகள்கள் கமலசுந்தரியின் பக்கம் வந்து ‘எக்கா…. எக்கா….’ என்று தடுமாறினார்கள்.

தங்கத்துரை எகிறிக்கொண்டே இருந்தான். ராமசாமி தான் அங்கே நிற்பதை எவரும் பொருட்படுத்தாததினால், பாபப்படப் போனார். இறுதியில் ஒரு எச்சரிக்கை விடுத்தார்.

‘ஏய்…. தங்கத்துரை , ஒன்ன என் கையாலேயே போலீ சுல ஒப்படைக்கிறேனா இல்லையான்னு பாரு , என்னடா நினைச்சுக்கிட்டே…’

ராமசாமி, சொன்னதைச் செய்யப் போகிறவர் போல் நடக்கப் போனபோது, குடித்தனக்காரிகளில் ஒருத்தியான மல்லிகா சிரிக்க , வீட்டுக்கார அம்மா “வேணாம் சார், வேணாம் சார்” என்றாள். எவளோ ஒருத்தி தன்னைப் பொருட்படுத்தி விட்டாள் என்கிற மகிழ்ச்சியில், ராமசாமி நின்ற இடத்திலேயே நின்றார். கீழே இருந்த வீட்டுக்கார அம்மா , கமலசுந்தரிக்கு முன்பு வாடகைக்கு இருந்த ஒருத் தியை அரிவாள் மணையால் வெட்டி , விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஆயிரம் ரூபாய் மாமூலோடும், அரக்கி , அடங்காபிடாரி’ என்ற அர்ச்சனைகளோடும் முடிந் தது. இப்போது அங்கே போனால், வீட்டுக்கார அம்மா தெருக்காரியாக ஆக வேண்டி வரும்.

அப்போது தான், ‘அண்ணன்’ ராமசாமி அங்கே நிற் பதை பார்த்தது போல், தங்கத்துரை விக்கல்களைக் கக்கிய படியே அவரை உற்றுப் பார்த்தான். பிறகு அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். ‘ஒங்களுக்குக் கொடுத்த வாக்க மீறிட்டேனே, மீறிட்டேனே’ என்று அவர் பாதத்தில் தலையை போட்டு அங்குமிங்குமாய் ஆட்டினான். இப்படி, அவன் தன்னை ஒரு முன்னாள் அரிச்சந்திரனாக பாவித்துக் கொண்டபோது, ராமசாமி விசுவாமித்திரர் ஆனார். ‘நீ ஆயிரம் சொன்னாலும் ஒன்ன மெட்ராசுல வைக்கப் போற துல்ல, கடையையும் ஒன்ன நடத்த விடமாட்டேன்’ என்று கத்தினார்.

தங்கத்துரை தலையை நிமிர்த்தி ராமசாமியை கூச்சத் தோடு பார்த்தான். பிறகு அவர் காலிலேயே தனது தலையை வைத்து இடித்தான். ‘அய்யோ …. அய்யோ …” என்று அரற்றி னான். அவனை முன்பெல்லாம் நாயி , அதுவும் சொரி நாயி, எருமை மாடு என்று விமர்சித்த வீட்டுக்காரி “அவரு மவ ராசனா அடுத்த மாசம் காலி பண்ணட்டும், இல்லாட்டி இருக்கட்டும். நானும் அவரு சொல்லுறது மாதிரி நடந்துக்க மாட்டேன். கொஞ்சம் திட்டம் செய்துவை சாரே…..” என்று ராமசாமியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். இத னால், ராமசாமிக்கு இன்னும் கோபம் அதிகமாகியது. கடித்த பற்களைத் திறக்காமலே நின்றபோது, கமலசுந்தரி , கை களைப் பிசைந்தாள். ராமசாமி கடித்தப் பற்களை திறக் காமலே அவற்றை உதடுகளால் போர்த்திக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே இருந்தபோது, தங்கத்துரை வாந்தியெடுத் தான். அவர் அசூயை தாங்க முடியாமல் கால்களை அவன் மோவாயிலிருந்து விடுவித்துக் கொண்டே ”இப்பவே கடையை சீல் வைக்கிறேன், நாளைக்கே டெலிபோனை கட் பண்ணுறேன்’ என்று சொல்லிக் கொண்டே வெளி யேறினார்.

ராமசாமி தன்னைப் பார்த்து சிதறி ஓடிய பன்றிகளுக் கிடையே நடந்தபோது ‘எத்தான்…… எத்தான் ……’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினார். கமலசுந்தரி அவரை வழி மறிப்பது போல் முன்னால் போய் நின்றாள். அவர் சூளுரைத்தார்.

‘விபரீத காலம் வினாச புத்தியாம்’ நீ வேணும்னா இருந்து கடையை நடத்து, ஆனா , உன் புருஷன் இனிமே மெட்ராசுலயே இருக்கப்படாது…. இருக்கவிடமாட்டேன்.’

“சும்மா கிடங்கத்தான், மொதல்ல நான் சொல்லுறத கேளுங்க,… இந்த வீட்டுக்காரி அட்டூழியம் தாங்க முடியல , “இது ‘ க்கிட்ட சொல்லிச் சொல்லிப் பார்த்தேன். இது கண் டுக்கல்ல, போட்டா புலி … போடாட்ட பூனை…. இந்த பூனைய ஒரு நாளாவது புலியாக்கணும்னு நான் தான் அதப் போடச் சொன்னேன். இல்லாட்டி இதுவும் இந்த குதி குதிச் சிருக்காது, அவளும் அந்த மாதிரி அடங்கியிருக்க மாட்டா. இனிமேல் இத குடிக்க விடாமப் பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு. சரி… வீட்ல வந்து காப்பி சாப்பிட்டுட்டுப் போங்க’.

“வேண்டாம்மா, ஒன் புருஷன் மிச்சம் மீதி சரக்கு வச்சி ருப்பான் அத…. நீயே எனக்குத் தந்தாலும் தருவ…”

“எய்தவள் நான் இருக்கும்போது அம்பைப் போய் நோகறீங்களே…… “அதை” குடிக்கச் சொன்னதும் நான் தான். குடிக்க வெச்சதும் நான் தான். ஒருத்தர் குடிச்சால் குடிக்கிற அந்தக் காரியத்தை மட்டும் பார்க்கக்கூடாது – அதற்கான காரணத்தையும் கண்டு பிடிக்கனும். இதுக்கு மேலேயும் நீங்க விரட்டுறதா இருந்தால் என்னைத்தான் விரட்டனும். அந்த வீட்டுக்கார ராட்சசியைப் பற்றி உங்க ளுக்கு என்ன தெரியும்.”

ராமசாமி பதிலுக்கு கோபமாக பேசப்போனார். ஆனால், அவரையும் மீறி சிரிப்பு வந்தது. மகளாய் வளர்த்த மைத்துனியின் முதுகை தடவிக் கொடுத்தபடியே, வீட்டை நோக்கி நடந்தார்.

– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *