கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 13,577 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது என் முதல் நாவல்

திரைப்பட நடிகையாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கெல்லாம் அறிமுகம் ஆகிய நான், என்றைக்காவது ஒரு நாள், ஒரு நாவல் ஆசிரியையாக, எழுத்தாளராக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கனவுகள் கண்டதுண்டு. ஆனால், அந்தக் கனவுகள் இவ்வளவு விரைவில் நனவாகும் என்று உண்மையாக நான் எதிர் பார்க்கவே இல்லை. 

சிறு வயதிலிருந்தே எழுத்தில் அதிக ஆர்வம் இருந்த போதிலும், அதை வெளிப்படுத்த நேரம் இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் வேளை வர வேண்டும் என்பார்கள். இதற்கு இப்பொழுது வேளை வந்து விட்டது. 

‘துக்ளக்’ ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான சோ. எஸ்.ராமசுவாமி அவர்கள் என்னிடம் “ஒரு சிறு கதை எழுதேன்.” என்றார். 

சிறு கதையாக ஆரம்பித்தது. எழுதி முடிப்பதற்குள் ஒரு முழு நீள நாவலாகவே உருவெடுத்து விட்டது. 

‘ஒருத்திக்கே சொந்தம்’ என்ற கதையின் மூலமாக நான் சொல்ல விரும்புகின்ற கருத்து மிக எளிமையானது. மனித உள்ளம் என்பது மிகவும் விசாலமானது; அதே சமயத்தில் மிக குறுகியது. 

தீங்கு செய்தவர்களை மன்னித்து அவர்களை ஆதரிக்கும் தன்மை கொண்ட ஒரு மனிதனின் உள்ளம் மிகவும் விசாலமானது. ஆனால், காதல் என்று வரும் பொழுது, அவன் உள்ளம் ஒருத்திக்கே சொந்தம். அவளுக்கென்று அவள் இதயத்தில் உள்ள ஸ்தானத்தை அவன் வேறு யாருக்கும். யாருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது, அவன் உள்ளம் குறுகியது என்றும் ஒரு பேச்சுக்குக் கூறலாம். உண்மையில் அது குறுகிய மனமே அல்ல. உலக நியதிகளுக்கும், சமூக சட்ட திட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் பயந்து, கோழைத்தனமாக ஆத்மார்த்தமான காதலை விட்டுக் கொடுக்காமல், யார் என்ன நினைத்தாலும் அதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளும் உள்ளம் திடமானது, தைரியமுடையது. அப்படிப்பட்ட பாத்திரப் படைப்புத்தான் என் கதையின் கதாநாயகன் ரவி. 

உலகம் அமைதியாக ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்பதற்காக, மனிதர்களே பல விதிமுறைகளையும், சட்டங்களையும் உருவாக்கி இருக்கின்றார்கள். சில தனிப்பட்ட பிரத்தியேகமான சூழ்நிலைகளில், இந்தச் சட்டங்களைப் பின்பற்றுவதே, ஒருவருக்கு அநீதியை இழைப்பதாக மாறிவிடும். சட்டம் எல்லாவிதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் உதவுவதில்லை.

ஏன் இப்படி நடக்க வேண்டும்? சட்டம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது தானே? உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளைச் சட்டத்துக் கேற்றபடி வரவழைத்துக் கொள்ள முடியுமா? ஒருவருடைய உணர்ச்சியைச் சட்டம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் – அதனால் அது வரை தவறு, குற்றம் என்று கூற முடியாது. இந்த அடிப்படையில்தான் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். 

ஜெயலலிதா


அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

“ரவி! வாடா கண்ணா!”

“அம்மா!” கையிலிருந்த பெட்டியை ஒரு பக்கம் எறிந்துவிட்டு, ரவி ஓடி வந்து தனது தாயாரைக் கட்டி. அணைத்துக் கொண்டான். 

ஆண்டாள் தனது இரு கரங்களையும் அவன் தோள்கள் மீது வைத்து, சற்றுப் பின்னுக்குத் தள்ளிப்போய் நின்று, அவனை ஏற இறங்கப் பார்த்தாள். ஆண்டாளின் உள்ளம் பெருமையால் பூரித்தது. இப்படி ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்கு எந்தத் தாயின் உள்ளம்தான் பெருமைப்படாது! 

ஆறடி உயரம். வாட்ட சாட்டமான தோள்கள், சுருட்டையான அடர்த்தியான கருகரு தலைமுடி, சிவந்த முகத்தின் நடுவே செதுக்கியது போல் நேரான அழகான மூக்கு. 

எங்கே தனது கண்ணே பட்டு விடுமோ என்று பயந்து. உள்ளத்தின் பூரிப்பை வெளியே தெரியப் படுத்தாதவாறு, “என்னடா கண்ணா, இப்படி இளைச்சுப் போயிட்டே?” என்றாள். 

ரவி சிரித்தான். “நானா இளைச்சுப் போயிட்டேன்? சரியாப் பார்த்துச் சொல்லும்மா,” என்றான். 

“அது சரி! அவன் எங்கேடி இளைச்சிருக்கான்? அவன்தான் படிக்கிறானே மெட்ராஸிலே, அங்கே பார்த்தசாரதி சுவாமி கோவில் யானை இருக்கு பாரு, அது மாதிரி நன்றாய்க் கொழுத்திருக்கான்!” என்று கிண்டலாகச் சொல்லிக் கொண்டே, ரவியின் தகப்பனார் ராஜகோபாலன் ஹாலுக்குள் நுழைந்தார். “டேய், ரவி, உன்னைப் பார்க்காத ஏக்கத்திலே, உங்க அம்மாதாண்டா இளைச்சுப் போயிருக்கா!” 

“என்னடா,பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே?” தாயார் விசாரித்தாள். 

“நன்றாகவே எழுதியிருக்கேன் அம்மா.” 

“ஹும்! என்ன பரீட்சையோ, என்ன படிப்போ, எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐந்து லட்ச ரூபாய் சொத்து இருக்கு. இங்கே நம்ம நிலத்தையெல்லாம் ஒழுங்காய்க் கவனித்துக் கொண்டு, கால் மேலே கால் போட்டுக் கொண்டு ஜம்முன்னு உட்காராமே, என்ன பெரிய படிப்பு வேண்டியிருக்கு!” அலுத்துக் கொண்டார் ராஜகோபாலன். 

“பையன் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து விட்டீர்களா? இப்பத்தான் நேரா ரயில்வே ஸ்டேஷன்லேயிருந்து வந்திருக்கான். குளிச்சுட்டு டிஃபன் சாப்பிட்டதுக்கு அப்புறமா நீங்க வழக்கமா ஜெபிக்கிறதை ஜெபிக்கக் கூடாதா?” என்று கடுத்துக் கொண்டாள் ஆண்டாள். 

”சரிடீ. உன் செல்லத்தை உள்ளே அழைச்சிட்டுப் போ. நானா வேண்டாங்கறேன்? என்ன இருந்தாலும் இன்னும் ஒரு வருஷம்தானே காலேஜிலே பாக்கி இருக்கு? அது முடிச்சதும் எப்படியும் அவன் இங்கேதானே வந்துடப் போறான்? நம்ம வீடு, நிலம், எல்லாமே தஞ்சாவூரிலே இருக்கும் போது, இதையெல்லாம் விட்டுட்டு எங்கே போயிடப் போறான்? அதனாலேதான் எதுக்கு காலேஜு கீலேஜுன்னு நேரத்தை வீணாக்கணும்னு கேக்கறேன். இந்த நேரத்திலே விவசாயத்தைப் பத்திக் கொஞ்சம் கத்துக்கலாமோ இல்லையோ?” 

“அப்பா, இதைப் பத்தி நான் எத்தனையோ…” என்று ரவி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். 

ஆனால் ஆண்டாள் அவனைப் பார்த்து, வேண்டாம். என்பது போல் மெளனமாக ஜாடை காட்டித் தலை அசைத்தாள். ரவி தனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.”சரிப்பா, நான் குளிக்கப் போறேன்,” என்று சொல்லிவிட்டு ரவி தன்னுடைய தனி அறைக்குள் சென்று விட்டான். 

குளித்த பிறகு சமையற் கட்டுக்குச் சென்றான். தரையில் மணையைத் தயாராகப் போட்டு வைத்து அவனுக்கு வெள்ளித் தட்டில் பலகாரத்தைப் பரிமாறிவிட்டு, ஆண்டாள் அவன் அருகே வந்து உட்கார்ந்தாள். விசிறியைக் கையில் எடுத்துக் கொண்டு விசிற ஆரம்பித்தாள். 

ரவி சாப்பிடாமல், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். 

“ரவி, என்னப்பா சாப்பிடாமே உட்கார்ந்திருக்கே?” 

“ஏம்மா, அப்பா இன்னும் அவருடைய பழைய எண்ணத்தை மாத்திக்கலை போலிருக்கே?” 

“அதைப்பத்தி அப்புறம் பேசலாண்டா. இப்போ என்ன அவசரம்? முதல்லே சாப்பிடு.”

“இல்லேம்மா, இது என் வாழ்க்கைப் பிரசினை. இந்தத் தஞ்சாவூரிலேயே காலம் பூராவும் கிடந்து விவசாயம் பண்றதுக்கு எனக்கு இஷ்டமில்லேன்னு நான் எத்தனையோவாட்டி அப்பா கிட்டே சொல்லியாச்சு. அதனாலேதானேம்மா நான் பி.காம் படிக்க மெட்ராஸுக்குப் போனேன்? இப்ப என்னடான்னா மறுபடியும் படிப்பு முடிஞ்சதும் இங்கேயே வந்துடணும்னு சொல்றாரே!” 

“ஏண்டா, உனக்குத் தஞ்சாவூர் அவ்வளவு பிடிக்காமப் போயிட்டதா?” என்று வருத்தத்தோடு கேட்டாள் ஆண்டாள். 

“நான் அப்படிச் சொல்லலேம்மா. நீ ஏன் அப்படி நினைக்கிறே? ஆனா, ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரி இருப்பார். எனக்கு விவசாயத்திலே இன்ட்ரெஸ்ட் இல்லே, அவ்வளவுதான்.” 

“அடுத்த வருஷம் பி.காம் முடிச்சதும் என்னடா பண்ணப் போறே?” 

“நான் மெட்ராஸிலேயே இருந்தா. எவ்வளவோ பண்ணலாம். பி.காம் முடிச்சுட்டு எம்.பி.ஏ. படிக்கலாம், இல்லை ஸி.ஏ. படிக்கலாம். இல்லே, ஏதாவது வேலைக்குப் போகலாம். அங்கே எத்தனையோ வாய்ப்புக்கள் இருக்கு முன்னேற. ஆனா. இங்கே என்ன இருக்கு? என்ன பிராஸ்பெக்ட்ஸ் இருக்கு?” 

“சரிடா கண்ணா, உனக்கு இந்த விவசாயத்திலே விருப்பமில்லேன்னா பரவாயில்லே. ஆனா, நீ எங்களுக்கு ஒரே பிள்ளை. உன்னை விட்டுட்டு எப்படிடா எங்களை இருக்கச் சொல்றே? வேணும்னா இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக்க முடியாதா?” என்று ஆண்டாள் கெஞ்சுகின்ற தினுசில் கேட்டாள். 

“என்னம்மா புரியாமப் பேசறே? இங்கே என்ன பிரமாத வேலை கிடைக்கும்? என்னை ஏன் நீங்க பிரிஞ்சு இருக்கணும்? மெட்ராஸிலேயே ஒரு வீடு எடுத்துக் கொண்டு நீயும், அப்பாவும் அங்கேயே வந்து என் கூட இருக்கலாமே? இங்கே இருக்கிற நிலத்தை நம்ம மேனேஜர் கவனிச்சுக்க மாட்டாரா என்ன?” 

ஆண்டாள் ஒரு பெருமூச்சு விட்டாள். “அதுக்கு உங்க அப்பா ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார். உனக்குத் தெரியாதா என்ன?” 

கொஞ்சம் சலிப்போடு ரவி ஆண்டாளைப் பார்த்தான். எப்போது ஊருக்கு வந்தாலும் இதே உபத்திரவம்தானா என்ற எரிச்சல் அவனுக்கு. 

“இப்ப என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? அப்பாவுக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கோ, அவ்வளவு பிடிவாதம் எனக்கும் இருக்கு.” 

இதை நீ சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டுமா என்பதுபோல், ”எனக்குத் தெரியாதா என்ன? நான் பெத்த புள்ளை ஆச்சே! சரி, சரி, டிஃபன் எல்லாம் ஆறிப் போயிட்டது. சாப்பிடுப்பா. அப்புறம் பேசலாம்,” என்றாள் ஆண்டாள். 

ரவி சாப்பிட ஆரம்பித்தான். முகத்தில் ஏக்கத்தோடு ஆண்டாள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னப் பையனாய் இருந்தபோது சற்று நேரம் கோவிலுக்குப் போயிட்டு வரக் கிளம்பினாகூட, என் புடவைத் தலைப்பைப் பிடிச்சிட்டு, ‘அம்மா! என்னை விட்டுட்டுப் போகாதேம்மா. என்னை விட்டுட்டுப் போயிடாதேம்மா’ன்னு என் பின்னாலேயே சுத்துவான். பெரியவன் ஆயிட்டான். ‘கண்ணா! நீ என்னை விட்டுட்டுப் போயிடாதேடா’ன்னு நான் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கு,’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டபோது அவளையும் அறியாமலேயே அவள் கண்கள் ஈரமாயின. ரவி அப்போது சட்டென்று தலையைத் தூக்கி ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான். தாயின் வேதனையை அவனால் உணர முடிந்தது. அவன் பார்வையில் கனிவு பிறந்தது. தனது இடது கையால் ஆண்டாளின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டான். 

“அம்மா, மெட்ராஸிலே எந்த ஸ்டார் ஓட்டல்லே சாப்பிட்டாத்தான் என்ன, உன் சமையலிலே இருக்கிற சுவை வேற எதிலேயும் வரவே வராதும்மா. நீ மெட்ராஸுக்கே வந்து என் கூடவே இருந்திடும்மா,” என்றான். 

ஆண்டாளின் உதடுகளில் ஒரு சிறிய புன்முறுவல் தோன்றியது. ”உனக்கு அம்மாதான் வேணுமா, இல்லை அம்மா சமையல் இருந்தா போதுமா?” என்று வேடிக்கையாகக் கேட்டுவிட்டு அத்தோடு விட்டுவிட்டாள். 


ஏழு நாட்கள் கழிந்தன. ரவியின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி மீண்டும் வீட்டில் யாரும் பேசவில்லை. அன்று காலை ரவி தன் அறையில் கட்டிலில் சாய்ந்தபடி ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆண்டாள் அங்கே வந்தாள். 

“ரவி, இன்னிக்குச் சாயங்காலம் நாம் எல்லாரும் சூரக்கோட்டைக்குப் போறோம். அஞ்சு மணிக்குப் புறப்படணும். ரெடியா இரு”. என்றாள். 

“சூரக்கோட்டைக்கா, எதுக்கு?” என்று கேட்டான் ரவி ஆச்சரியத்தோடு. 

“பெண் பார்க்கத்தான்”. 

“பெண் பார்க்கவா? யாருக்கு?” 

“என்னடா இப்படி கேக்கறே! வேறே யாருக்கு? எல்லாம் உனக்குதான்.” 

“அம்மா!” ரவி கோபத்தோடு புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு எழுந்து நின்றான். 

“என்ன இதெல்லாம்? எனக்கு இப்போ கல்யாணமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.” 

“டேய், டேய், ஏண்டா இப்படிக் கோவிச்சுக்கறே? சும்மா பெண்ணைப் – பார்க்கத்தானே சொல்றோம்? இப்பவே கல்யாணத்தையும் பண்ணிக்கோன்னா சொல்றோம்?” ஆண்டாள் அவனைச் சாந்தப்படுத்த முயன்றாள். 

“பின்னே இப்போ எதுக்குப் போய் பெண் பார்க்கணும்? அதெல்லாம் முடியாது. நான் வர மாட்டேன்.” 

“டேய் ரவி கண்ணா, முடியாதுன்னு சொன்னா எப்படி? இன்னிக்கு உன்னையும் அழைச்சுட்டுப் பெண் பார்க்க வறோம்னு அங்கே சொல்லிட்டோமேடா.” 

“யாரைக் கேட்டுச் சொன்னீங்க?” 

“டேய் கண்ணா, நீ லீவிலே இங்க வருவேன்னு தெரிஞ்சு, ரெண்டு வாரத்துக்கு முன்னாலேயே உங்கப்பா அவர்களுக்குச் சொல்லிட்டாருடா.” 

“அப்படீன்னா அப்பாவையே போய் அந்தப் பொண்ணைப் பார்க்கச் சொல்லு!” கோபத்தோடு ரவி திரும்பிக்கொண்டு ஜன்னலின் அருகே போய் முதுகைக் காட்டியபடி நின்று கொண்டான். 

ஆண்டாள் அவன் அருகில் சென்று அவன் கன்னத்தின் மீது தனது கையை வைத்து, அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டாள். “குழந்தை மாதிரி அடம் பிடிக்காதேடா. அவங்க கிட்டே இன்னிக்கு வறோம்னு சொல்லிட்டு, அங்கே போகலைன்னா நம்ம குடும்ப கௌரவமே போயிடும். நீயே உங்கப்பா மானத்தை வாங்கிட்ட மாதிரி இருக்கும். இதோ பாரு, போய்ப் பெண்ணைப் பார்க்கிறதிலே என்ன தப்பு? உனக்குப் பெண்ணைப் பிடிக்கலைன்னா. பிடிக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன். உனக்குப் பிடிக்காத பெண்ணை யாரும் உன் தலையிலே கட்டப் போறதில்லை. ஆனா வர மாட்டேன்னு மட்டும் சொல்லாதே” 

(குறிப்பு: இரண்டு பக்கங்கள் 10-11 கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)

வழி? “அப்போ, போயிட்டு வறோம். மற்றதை எல்லாம் நாம் ரெண்டு பேரும் அப்புறம் பேசிக்கலாம்,” என்று ரவியின் தகப்பனார் பத்மினியின் தகப்பனார் கிருஷ்ணசாமியிடம் கூறி விடை பெற்றுக் கொண்டார். 


தஞ்சாவூரை நோக்கிக் கார் புறப்பட்டது. 

”என்னடா, உனக்குப் பொண்ணு பிடிச்சிருக்கா?” என்று கேட்டார் ரவியின் தந்தை. 

ஆணுக்குக் கூட நாணம் வருமா? கூச்சத்துடன், “பிடிச்சிருக்குப்பா,” என்றான் ரவி. 

”உம்.’என்னமோ உனக்காகத்தான் வர ஒத்துக்கறேன். ஒரே நிமிஷம்தான் பொண்ணைப் பார்ப்பேன். அடுத்த நிமிஷமே திரும்பி வந்துடுவேன்,’னு என் மேலே சீறினியே! பெண்ணைப் பார்க்கவே மாட்டேன்னு தை தை தைன்னு குதிச்சியே! அப்புறம் என்னடான்னா, கடைசியிலே உன்னை வெளியே இழுத்துட்டு வரதுக்குள்ளே எனக்குப் பாடாப் போயிட்டதே!” என்று கேலி செய்தாள் ஆண்டாள். 

“சும்மா இரும்மா!” என்றான் ரவி அசடு வழிய.

ராஜகோபாலன் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவருக்குப் பரம திருப்தி. ‘பெண்ணைப் பார்த்ததும், பையன் இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்துட்டான்! இனிமே என்ன? தஞ்சாவூரை விட்டு விரட்டினாலும் அவன் எங்கேயும் போகமாட்டான்,’ என்று அவர் மனத்துக்குள் நம்பிக்கை பிறந்தது. 


விடுமுறை நாட்கள் பறந்தன. ரவிக்குப் பத்மினியைத் தவிர மனத்தில் வேறு எந்த எண்ணத்திற்கும் மெட்ராஸுக்குப் புறப்பட இடமில்லை. வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் மூன்று நாட்களில் கல்லூரித் திறப்பு நாள். கல்யாண விஷயம் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ளத் துடித்தான். ஆனால் பெற்றோரிடம் கேட்க வெட்கம். கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். 

அப்போது ஆண்டாள் அவனிடம் வந்து, “இந்தாடா, கண்ணை மூடிட்டு வாயைத் திற,”என்றாள். 

அப்படியே செய்தான். ஆண்டாள் அவன் வாயினுள் ஓர் உருண்டை திரட்டுப் பாலை ஊட்டி விட்டாள். 

“என்னம்மா இன்னிக்கு ஸ்பெஷல்?” ரவி கேட்டான். 

”உன் கல்யாணம் ஸெட்டில் ஆயிட்டதுடா!”

“அம்மா!” ரவி அலாக்காக ஆண்டாளைத் தூக்கிக் கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி வந்தான். 

“டேய் டேய், என்னைக் கீழே இறக்கி விடுடா, விடுடா. எனக்குத் தலை சுத்துகிறது,” என்று சிரித்துக் கொண்டே கத்தினாள் ஆண்டாள். 

இன்னும் இரண்டு சுற்றுச் சுற்றிவிட்டு ரவி தனது தாயாரைக் கீழே இறக்கி விட்டான். 

“அப்பாடா!” என்று மூச்சு வாங்க, ஆண்டாள் கட்டிலின் மீது சாய்ந்தாள். 

“ஏண்டா. போக்கிரிப் பையலே! அன்னிக்குக் கல்யாணமே வேண்டாம்னு ருத்ரதாண்டவம் ஆடினே! இன்னிக்குக் கல்யாணம் நிச்சயமாயிட்டதுன்னு சொன்னவுடனே இப்படிக் குதிக்கிறியே!” என்றாள். 

ரவிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி தாங்கவில்லை. “கல்யாணம் எப்போம்மா?” என்று கேட்டான், ஆர்வத்தை அடக்கிக் கொள்ள முடியாமல். 

“என்னடா அவ்வளவு அவசரம்?” வேண்டுமென்றே ஆண்டாள் அவனைச் சோதித்தாள். 

“சும்மா,அழ வைக்காதேம்மா, சொல்லும்மா, ப்ளீஸ்!”

“அடுத்த வருஷம் நீ பி.காம் பைனல் பரீட்சை எழுதிட்டு ஊர் திரும்பின் உடனேயே கல்யாணம். உங்க அப்பா முடிவு பண்ணிட்டாரு. பெண் வீட்டாரோடயும் எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சு, சரிதானா?” 

மனத்துக்குள் ரவிக்குத் தாள முடியாத மகிழ்ச்சி. அதே சமயத்தில் பத்மினியை அடைய இன்னும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை. 

பத்மினியை ஆசை காட்டி, எப்படியும் தங்கள் வழிக்கே அவனை இழுத்துக் கொண்டு விடலாம் என்று தனது பெற்றோர் திட்டம் போட்டிருப்பார்களோ என்ற சந்தேகமும் ரவியின் மனத்தில் இல்லாமல் இல்லை. ஆனால், முதலில் கல்யாணம் நடக்கட்டும், பிறகு மற்ற விஷயங்களைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து, அவன் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி மீண்டும் தகப்பனாரிடம் எதுவும் பேசவில்லை. இப்போது தகப்பனாருடன் ஏதாவது தகராறு செய்து கொண்டால், எங்கே அதனால் பத்மினியோடு தனது திருமணம் தடைப்பட்டு விடுமோ என்று பயந்து, ரவி எதுவுமே பேசவில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் தனது லட்சியத்தையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.எப்படியும் பி.காம் பட்டத்தைப் பெற்று அதன் பிறகு மேல் படிப்புக்குச் சென்று வாழ்க்கையில் முன்னேற வழி வகுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்னும் திடமாக இருந்தான். 

கல்லூரிக்குச் சென்ற பிறகும், பத்மினியின் நினைவு அவனை ஒவ்வொரு கணமும் வாட்டிக் கொண்டே இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தவே மிகவும் சிரமமாக இருந்தது. அவ்வப்போது தனக்குத்தானே, இன்னும் ஒரே வருஷம்தான், எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இந்த ஓர் ஆண்டைக் கழித்து விட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் பத்மினி எனக்கே சொந்தம், அதன் பிறகு அவளைப் பிரிந்து ஒரு நாள் கூட இருக்கத் தேவையில்லை என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

2 thoughts on “ஒருத்திக்கே சொந்தம்

  1. வணக்கம் நான் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளேன்…. எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரியவில்லை….. ஏதேனும் தகவல் இருந்தால் சொல்லுங்கள் பெரும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *