கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 7,136 
 
 

சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. பாவப்பட்ட ஜென்மம்.. அவள் புருஷன் ஒரு மொடாக்குடியன். தினந்தினம் அவர்களுக்குள் ஓயாமல் சண்டை நடக்கும். உச்சக் கட்டத்தில் தம்திம் என்று அடி விழும். கொடுப்பது யாராகவும் இருக்கலாம்.. இவள் கை ஓங்கியிருந்தால் அப்புறம் மூன்று நாட்களுக்கு அவன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். அறுத்துக் கொண்டு ஓடிய மாடு எப்போது பட்டி திரும்பும்? என்ற கணக்கு அவளுக்குத் தெரியும்.. நாலாம் நாள் பொழுது சாய அலங்கரித்துக் கொண்டு தயாராகி விடுவாள்.மீன் குழம்பு கொதித்து வாசனைத் தூக்கும் நேரம் ஆள் வந்து நிற்பான். அல்வாவும் மல்லிகைப் பூவும் அமர்க்களப் படும்.

அவன் கை உயர்ந்து நிற்கும் நாட்களில். ஓவென்று அழுதுக் கொண்டே என்னிடம் வந்து நிற்பாள். அப்புறம் அவளைத் தேற்றி மஞ்சள் பத்து போட்டு விட்றது நான். இவர்கள் கூட இல்லையென்றால் வெறுமையில் என்றைக்கோ தற்கொலை வரை போய்விட்டிருப்பேன். சண்டை போடவாவது நமக்கு ஒரு உறவு வேண்டும் தானே?. வெற்றிகரமான எழுத்தாளர் ஜெகதாம்பாள் என்கிற இந்த முகத்துக்குள்ளே வாழ்க்கையைத் தொலைத்து விட்ட ஜெகதா இருப்பது எவருக்கும் தெரியாது, தேவகிக்குத் தெரியும். எல்லாக் கட்டங்களிலும் உடன் இருந்திருக்கிறாள். காதல்..!அதுதான் சொந்தங்களைத் தூக்கியெறியச் சொன்னது, பெற்றவர்களை எதிரிகளாய் எண்ண வைத்தது. அவர்களை துச்சமென ஒதுக்கி விட்டு, ஓடிவந்து நான்கு சுவற்றுக்குள் சேர்ந்து வாழும் போதுதான் அத்திப் பழத்தின் உள்விவகாரங்கள் புரிகின்றன. அன்பழகன்..என் காதல் கணவன்…? ஆபீஸில் உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு, சின்ன வீடாய் குடித்தன்ம் நடக்கிறது.ச்சீய் !.. உடைந்துப் போய் அழுதழுது, பின்பு ஒரு கட்டத்தில் அவனை விட்டு விலகிவிட்டேன். தனிமை…தனிமை… அதுவே என் எண்ணங்களின் கூர்மைக்கு வித்தாகியது.எழுத ஆரம்பித்தேன். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், தொடர்கதைகள், இன்று வெற்றிகரமான் எழுத்தாளர் ஜெகதாம்பாள்.ஒரு முறை எடிட்டர் சதாசிவம் கூட நாங்கள் பழகுவதைப் பார்த்து கேட்டார். ஒரு எழுத்தாளருக்கும் சித்தாளுக்கும் என்னமாதிரி காம்பினேஷன் இது?.பால்பாயாசத்தில கடலை பருப்பு போட்டமாதிரி.என்றார்.

“அப்படியில்லே இது மனுஷிக்கு மனுஷிக்குமுள்ள சோக பரிவர்த்தனை.”– என்றேன் நான்

இன்றைக்கு மாலை நாலு மணிக்கே ஆரம்பிச்சிட்டாங்களா? ஓவென்று அழுதபடி தேவகி வந்து நிற்கிறாள்.

“நானு செத்துப் புட்றேன் எக்கா! எங்கொயந்தைங்களை எங்கியாவது அனாதை பள்ளிக்கூடத்தில வுட்ரு. போதும் எக்கா.இந்த பாடாலப்பன் கிட்டே..”

“ஏய்! இன்னாத்துக்கோசரம் அட்ச்சேன்னு சொல்லும்மே ஹக்காங்.முனுசாமி மேஸ்திரி கதையை நான் எடுத்து வுடட்டா?.”

“அதென்னடீ புதுக்கதை?.”

”முனுசாமி மேஸ்திரி கைல வேலைக்குப் போவாதடீன்றேன்.. கேக்கமாட்டன்றா. எங்க செஞ்சா இன்னா?நேத்து அல்லாத்தியும் பார்த்துட்டேன். ரெண்டு பேரும் இன்னா குஜாலுன்ற?”

அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். எனக்குப் பீறிட்டக் கோபத்தை அடக்கிக் கொண்டேன். இந்த ஆண்களுக்கே இது கைவந்தக் கலை. அதிலும் இவனைப் போன்ற உதவாக்கரை ஆண்களுக்கு இப்படி பழி போடுவதென்பது பெண்களை அடக்கிவைக்க ஒரு உத்தி.

“ உக்கும் ! காமாலைக் கண்ணுக்கு அல்லாம் மஞ்சாவாத்தான் தெரியும். “

“சரிப்பா! தேவகி அப்படிப் பட்டப் பொண்ணு இல்லே. எனக்கேத் தெரியுது உனக்குத் தெரியலையே. போவட்டும் மொதல்ல நீஒழுங்காயிரு. சம்பாரிக்கிற பணத்தை இவ கிட்ட கொடு. இப்படிக் குடிச்சி சாவாதே.”

”அத்தச் சொல்லுக்கா! கஸ்மாலம்! வர்ற துட்டு முச்சூடையும் சாராயக் கடையில் தாரவாத்துட்டு, பொட்டச்சி கஷ்டத்துல வேளாவேளைக்கு வந்து கொட்டிக்கத் தெரியுதா? பொறம்போக்கு. நாதாரு .டேய்! என்னையா அடிக்கிற? மவனே! இன்னொரு வாட்டி மேல கைய வையி சொல்றேன்.”

“தேவகீ! இன்னாடீ ரேங்கற? வுடும்மே! ஒரு இருவது முப்பதுக்குக் குடிப்பனா? மிச்சத்த நீதானே ராத்திர்ல தூக்கி வெச்சிக்கிற. அப்றம் இன்னா வேசங்காட்றடீ உங்க அக்காக் கிட்ட?. கோச்சிக்காதம்மே!”.

அவன் சுரம் இறங்கி அவளைத் தொடப் போனான்.

“ச்சீ! கஸ்மாலம் தூரப்போ.—இப்போது அவன் வெட்கமில்லாமல் சிரிக்க, இவளும் லேசாய் பொய்க் கோபம் காட்டி புன்முறுவல் காட்டினாள். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இவர்கள் சண்டை என்ன ரகத்தில் சேர்த்தியோ? ஐந்து நிமிடங்களுக்குள் அரங்கேறிவிடும் போரும் அமைதியும்.

“சரிம்மே! இனிமேங்காட்டி நானு திட்டமா அடிச்சிக்கிறேன் நீ கரப்பன் ஜதையில சேர்ந்துக்கோ.”

“அத்த நீ சொல்லாதே. எங்க செஞ்சா இன்னா?.”

எனக்கு அது விகல்பமாகப் பட்டது. அந்த மேஸ்திரிக்காக ஏன் இப்படித் தொங்குகிறாள்?. தேவகி அப்படிப் பட்டப் பொண்ணு இல்லை. அதற்கெல்லாம் அவளுக்கு நேரமுமில்லை உடம்பில் தெம்புமில்லை. ஒவ்வொரு நாளும் அவள்பொழுது விடியற்காலை நாலு மணிக்கே விடிந்துவிடுகிறது. அதிலிருந்து காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்ட பதற்றந்தான். அடுப்பில் உலையேற்றிவிட்டு, துணி துவைப்பதில் ஆரம்பித்து, எல்லா வேலையையும் முடித்துவிட்டு பிள்ளைகளைக் குளீப்பாட்டி,சோறு ஊட்டி, யூனிஃபார்ம் மாட்டி,அததுங்களுக்கும் டபராவில சப்பாடு பேக் பண்ணி, ரிக்‌ஷாவில ஏற்றிவிட்டு விட்டு ஊற்றும் வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு, அப்பாடா என்று வெளித்திட்டில் உட்காருவாள்.. எட்டு மணி சங்கு பிடிக்கும். ஐயோ! எட்டரை மணிக்குமேல மேஸ்திரி வேலைக்கு சேர்க்கமாட்டானே. தலைதலையென்று அடித்துக் கொண்டு ஓடுவாள். பேருக்குத் தலையில் இரண்டு சொம்புத் த்ண்ணீரை ஊற்றிக் கொண்டு, வெந்ததும் வேகாததுவுமாய் கொஞ்சம் தட்டில் போட்டுக் கொண்டு, புருஷனுக்கும் கொஞ்சம் போட்டுத் தின்று விட்டு, அவசரமாய் அவனை வெளியேத் தள்ளி படலையைச் சாத்தும் போது மணி எட்டரையைத் தாண்டியிருக்கும். ஓடுவாள். இதற்கு மேல் இருக்கிறது போகிற இடத்துப் போராட்டம்..

இத்தனைக்கும் இவள் புருஷன் வெளித்திட்டில் உட்கார்ந்துக் கொண்டு, ஏழெட்டு பீடிகளை குடித்துக் கருக்கியிருப்பானேயொழிய ,ஒரு சின்ன ஒத்தாசை.. தேவகி! நீ அடுப்பு வேலையைப் பாரு, நான் குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறேன்., ஊஹும்! மாட்டான். எஜமானனாம். காலங்காலமாய் இந்த மனங்களில்,ரத்தத்தில் ,ஊறிக் கிடக்கும் ஆண் வர்கத் திமிர். கண்டதிற்கெல்லாம் தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் தேவகி போன்ற ஏமாளங்கள் தான் ஆண் எத்தர்களை உருவாக்குகின்றனர்.. பவித்திரம் இரண்டு பக்கங்களிலும் இருக்க வேண்டும்,அது இல்லாத மனிதப் பதரை ஒதுக்கு. எஸ்! நான் ஒதுக்கினேன். இன்று சமூகத்தில் வெற்றிகரமானப் பிரஜை, சகல அந்தஸ்துகளுடனும்.

அன்றைக்கு பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப இருட்டிவிட்டது. வீட்டின் வெளியே தேவகி புருஷன் குழந்தைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்..

“ஆன்னா ஊன்னா உன் தங்கச்சிக்கோசரம் சப்போர்ட்டுக்கு வர்றியே, இப்ப இன்னா டைமு? ஏழரை ஆச்சி.. அஞ்சி மணிக்கு மேல எந்த மேஸ்திரி வேல செய்றான்? சொல்லேன் .எனக்குத் தெரியும் அவன் கூடத்தான் சுத்தறதுக்குப் பூட்டா. வரட்டும்…வரட்டும். இன்னிக்கி குடுக்கிற அடி என்னிக்கும் மறக்கக் கூடாது. அப்ப நீஅவளுக்கோசரம் சப்போர்ட்டுக்கு வரக்கூடாது ஆமா.,”

கருவியபடி கண்களைத் துடைத்துக் கொண்டான் குழந்தைகள் மூன்றும் போட்ட

யூனிஃபார்மைக் கூட கழட்டாமல் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தன பாவம் பசி மயக்கம். பெரியவன் சங்கரைக் கூப்பிட்டு க்ரீம் பிஸ்கட் பாக்கெட் ஒன்றைக் கொடுத்த்னுப்பினேன். உள்ளே நெருடியது.ஒரு வேளை இவன் சொல்றாப்பல…? சீச்சீ! இவனுடையது தாழ்வு மனப்பான்மையினால் அல்லது அதீத பொஸ்ஸிவ்னெஸ்ஸினால் ஏற்பட்ட சந்தேகம். அதோ தேவகி வந்து விட்டாள். இவன் வரிந்துக் கட்டிக் கொண்டு தயாராய் நிற்க, அவள் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். அவன் வாயைத் திறக்கவே வ்ழியில்லை

“தே1 கஸ்மாலம்! இன்னாத் தெரியும் உனக்கு? ஆங்1. ரூப்பு ஜல்லி அம்பது சதுர பில்டிங்.. எந்த மேஸ்திரியாவது காங்க்ரீட் வேலைய பாதியில நிறுத்துவானா? வேலைக்கு நூறு பாண்ட்லு. வோணும். நூறையும் நாயுடுகிட்ட நாந்தான் வாடகைக்குப் புடிச்சிம் போயி போட்டேன். அதல பாண்ட்லுக்கு ஒரு ரூபா ஆப்படாதான்னுதான்.. அத்த சுத்தமா கயுவி ஒப்படைக்கத் தேவல? நானு இப்படி பைசாவுக்கு பைசா கணக்குப் பார்த்து ஓட்றேன், நீ திருட்டு பொலி எருதாட்டம் ஊரை சுத்திக்கிணு வேளாவேளைக்கு கொட்டிக்க வந்துடு..”

அவள் இடித்த இடியில் இவன் வாய் எப்போதோ மூடிக் கொண்டது.

சாயங்காலமாய் கடைக்குப் போய் காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பினேன். கடைக்காரனிடம் பேசும் போது ஒரு நல்ல சிறுகதைக்கான கரு கிடைத்துவிட்டது. அதை அசைபோட்டபடி நடந்தேன். அண்ணாசிலை ரவுண்டானாவைத் தாண்டும் போது தற்செயலாகத்தான் பார்த்தேன்.சாலையை விட்டுச் சற்று உள்ளடங்கியிருந்த மைதானத்தில் புத்தாக எழும்பிக் கொண்டிருக்கும் அப்பார்ட்மெண்ட்டின் முன் புறத்தில் தேவகி யாரோ ஒருத்தனுடன் சிரித்துசிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்..கட்டடவேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கலவை இயந்திரம் சிமெண்ட்,ஜல்லி கலவையைக் கலந்து பெருத்த ஓசையுடன் கொட்டிக் கொண்டு இருக்கிறது. ஆட்கள் அதை வாரி மேலே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கலவையானகூக்குரல் சத்தங்கள். இது எதுவும் அவர்களை பாதித்ததாகத் தெரியவில்லை. அவனைக் கவனித்தேன். எப்படியும் ஐம்பதைத் தொட்டிருப்பான். ஆனாலும் கட்டுமஸ்த்தாகத்தான் இருந்தான். தலையில் முண்டாசு வேற.ஓ! இவந்தான் அந்த முனுசாமி மேஸ்திரியா?.

வேண்டாம் நீஅப்படி செய்யக் கூடாது, அசிங்கம், உன் தகுதிக்கு இது தரக் குறைவான செயல், அதற்கு உனக்கு எந்த விதத்திலும் அதிகாரமுமில்லை. இப்படி மனசு இடித்துக் கொண்டேயிருந்தாலும் ஒரு க்யூரியாஸிட்டி என்னை இழுத்துச் செல்ல,ஓசைப் படாமல் நகர்ந்து,அவர்கள் பார்வையில் படாமல் அருகில் போய் மறைந்து நின்றுக் கொண்டேன். இப்போது அந்த மேஸ்திரி அவள் காதில் எதையோச் சொல்லிச் சிரிக்க,அவள் தலையை ஒரு பக்கமாய் சாய்த்து பளீரென்று சிரித்தாள்.

“ அய்யே! ஆனாலும் உனக்கு கொயுப்பேறிப் போச்சிய்யா.!.”-என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே, அய்யோ!அடப்பாவி! தேவகியின் பின்புறத்தைத் தட்டுகிறானே..தட்டினான் தானா?இல்லை கிள்ளினானா?. அவளின் ஆக்ரோஷமான பாய்ச்சலை எதிர்பார்த்திருந்த எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவன் தட்டிய அல்லது கிள்ளிய இடத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டு சிணுங்கிச் சிரிக்கிறாள்.

“ ஏய்! இன்னாய்யா? அய்யே! அடீங்! மப்பு ஏறிப்போச்சா?. இரு உன் வூட்ல அக்காக் கிட்ட சொல்லி அயப்பைய குறுக்கால புடிக்கச் சொல்றேன்.”

சுற்றுப்புற சிந்தனையே இருவரிடமும் இல்லை. அடிப்பாவி! தேவகி நீயா இப்படி? எப்படி உன்னை தொட அனுமதித்தாய்?.விவஸ்தையில்லாத இந்தக் கிழவனை விட உன் புருஷன் எந்த விதத்தில் குறைவாகப் போய்விட்டான்.? ச்சீ ! விடுவிடுவென வந்து விட்டேன். மனசு ஆறவில்லை.அன்றைக்கெல்லாம் கோபமும், வருத்தமும் என்னை அலைக்கழித்தன.. என் நம்பிக்கையில் தான் எத்தனை சரிவு?எதற்கு இந்த வேண்டாத வம்புகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு, கீழ்த்தட்டு மக்களிடம் இப்படி சில மீறல்கள் இருக்கத்தான் செய்யும்.

ராத்திரியும் எதிர் வீட்டிலிருந்து அடிதடி சத்தம் கேட்கிறது.. தேவகி ஓவென அழுகிறாள். நான் விளக்குகளை அணைத்துவிட்டு கதவு ஜன்னல்களை இறுக சாத்தித் தாள் போட்டேன். அடுத்த நாலைந்து நாட்களும் நான் தேவகியைப் பார்க்கவில்லை, பார்க்க வேண்டியத் தருணங்களிலும் லாவகமாய் தவிர்த்துவிட்டேன். இனிமேல் அவள் சங்காத்தமே வேண்டாம். ஆனால் ஐந்தாம் நாள் விடிந்ததுமே தேவகி நேராக உள்ளே வந்து விட்டாள். பார்த்துவிட்டுச் சிரித்தாள். திரும்பிக் கொண்டேன்

“இன்னாக்கா! நாலுநாளா பாக்கறேன் ஒதுங்கி ஒதுங்கிப் போற? அய்யே! இன்னா. மூஞ்ச தூக்கி வெச்சிங்கீற?..”

திரும்பி அவளை முறைத்தேன். உண்மையில்லாத மனிதர்களை நான் மதிப்பதில்லை. சே! கொஞ்சம்கூட உறுத்தலில்லாமல் எப்படி இவளால் இருக்கமுடிகிறது?

“அய்யே! என்னைப் பார்த்துப் பேசுக்கா.”

“என்னடீ பேசச் சொல்ற? ரவுண்டானாப் பக்கம் நீயும் முனுசாமி மேஸ்திரியும் குலாவின கதையைப் பேசட்டுமா? நேத்துதான்டீ உன் ஈன புத்தி எனக்குத் தெரிஞ்சிது உன் புருஷன் உன்னைத் திட்டினப்ப எல்லாம் பொண்டாட்டிய நம்பாத மனோவியாதிக்காரன்னுதான்டீ அவனைத் திட்டினேன்.,உன் பவிசு தெரியாம.. “

என் ஆக்ரோஷத்தை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்.,ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள். கண்டதற்கெல்லாம் அழுபவர்களையும், அடிக்கடி சிரிப்பவர்களையும் நம்பக்கூடாது என்பார்கள். எவ்வளவு நிஜம்?. எந்த உணர்வுகளையும் அதீதமாய் வெளிப் படுத்துவது என்பது எதையோ மறைப்பதற்கான உத்தி போலும்.

“எக்கா! என் ஒடம்பொறப்பாட்டம் நெனச்சிக்கிணு கீறேன், நீயே என்னை கண்டவனுக்கு முந்தானை விரிக்கிற தட்டுவாணின்னு நெனச்சிட்ட இல்ல ?.”

“பின்னே? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல, நாலு பேர் இருக்காங்க என்ற நெனப்புக் கூட இல்லாம ரெண்டு பேரும் தொட்டுத் தொட்டு பேசறதும், அவன் உன் பின் புறத்தில் தட்றதும், நீயும் துளி கூட வெட்கமில்லாம் சிரிக்கிறதும், அண்ணன் தங்கச்சி விளையாட்டுன்னு எடுத்துக்கட்டுமா? சொல்றீ ! பொம்பளைன்னா தன் உணர்வு இருக்கணும்.. மூணு புள்ள பெத்தவதானே நீ? எதுவுமில்லாமயா அவனுக்கு இவ்வளவு தூரம் இடம் குடுக்கிற?.”

தேவகி இப்போது என்னைப் பார்த்தப் பார்வையில் அலட்சியம் தெரிந்தது. என்ன இவ?.

”அடத்தூ! இதுக்குத்தான் நாலு நாளா வெடைச்சிக்கிணு கீறியா?. இந்த தேவகி என்னிக்கும் கண்டவனுக்கு முந்தானி விரிக்கிறவ இல்ல. அத்த தெரிஞ்சிக்க மொதல்ல. எட்டு வருசமா ஒண்ணுக்கு ஒண்ணா பயகி இன்னாதான் தெரிஞ்சிக்கிணியோ என்னப் பத்தி.. முனுசாமி மேஸ்திரி என்னை பின்னால தட்னான்றீயே., அப்படி தட்னதே என் புத்தியில இல்ல.. சரி அப்பிடி தட்னதாவே இருக்கட்டும். அதல இன்னா பூட்ச்சின்ற? நாங்க கூட அவனுங்களைத் திருப்பித் தட்றதுதான். அதல இன்னா பூட்சி?. அதனால நானு அவன வெச்சிங்கீறனா? அப்பிடிப் பார்த்தா சித்தாளுங்க ஒவ்வொருத்தியும் வர்ற மேஸ்திரிய எல்லாம் வெச்சிக்கினு இருக்கணும்…”—அவள்சிரித்தாள்.

”எங்களுக்குக் குடும்பம் இல்ல?, கொழந்தகுட்டி இல்ல?. இதோ பாருக்கா! நீ எங்கியோ ஒசரத்தில கீற.,அதான் எங்க பொயப்புப் பத்தி உனக்குத் தெரியல .. தொட்றது, தட்றது,,வண்டைவண்டையாப் பேசிச் சிரிக்கிறது, இதெல்லாம் எங்காளுங்களுக்கு வேல மேல சகஜம்.. நாங்களும் பதிலுக்கு பதிலு வாயாட்றதுதான், தட்றதுதான், இதுக்கெல்லாம் சிலுத்துக்கிணு பஜாரி வேசம் போட்டோம்னு வையேன், பொயப்பு நடக்காது. ஒருத்தனும் வேலைக்கு வெச்சிக்கமாட்டான்..தெர்தா? மேஸ்திரி. ஜொள்ளுன்னா, மூச்சிக்கு மூச்சி அண்ணாத்தே1..அண்ணாத்தே!.ன்னு எயைவோம்.. அப்பவே பாதி பேரு கயண்டுக்குவான்க .அத்தியும் தொடச்சிக்கிணு கிட்ட வந்தான்னா எல்லா பொட்டச்சிங்களும் சேர்ந்துக்கிணு அட நாய் பொறப்பே வாடான்னு அப்ப வெச்சிக்குவோம் கச்சேரி,. மூஞ்சிக்கு முன்னால ஒண்ணு, பின்னால ஒண்ணுன்னு உன்னாட்டம் பெரீமன்சங்க டெய்லி எத்தினி வேசங்கட்றீங்க?.அதுமாறிதான் நாங்களும். பொயப்புக்கு வேசம் கட்றோம்?. அப்பிடிப் போனாத்தாங்க்கா பொயப்பு நடக்கும்.தெர்தா?. அததும் பொயப்புக்கே ஆயிரம் கொடைச்சலு கீது. அத்த வுட்டுப்புட்டு தொட்டதுக்கெல்லாம் அது பூட்ச்சி இது பூட்ச்சின்னு மேனாமினுக்கிமாரி கூவறியே.

எங்க வூட்டுக்காரன் கீதே, அது மண்ணுக்கா.. ரெண்டு நாளு கோச்சிக்கிணு பூட்டேன்னு வையேன், எங்கியிருந்தாலும் தேடிக்கிணு வந்துடும். வாடி தேவகின்னு பொட்டச்சியாட்டம் எரவானத்த கட்டிக்கிணு அயுவும்..அக்காங்!. அட! நீதான் அன்னாடிக்கும் பார்த்துக்குணு கீறியே எங்க பொயப்ப. என்னை வுட்டா அதுக்கு யாருக்கா?.”-முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.

நான் குன்றிப் போனேன்.வாழ்க்கையை என்ன மாதிரி கோணத்தில் பார்க்கிறாள். பேச வார்த்தை வரவில்லை .சே! என்ன நிதர்ஸனம்?. வாழ்க்கை இதோ..இதோ.. என் கைகளில் என்று கொட்டி முழங்கும் மேலாண்மை. அவள் கன்னத்தை வழித்து நெட்டி முறிக்க வேண்டும் போலிருந்தது. அடிக் கண்ணே! இந்த இருபத்திஐந்து வயசுக்குள்ளேயே இத்தனை வித்தைகளையும் யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தா?.கற்பு என்றால் அது மனசில இருக்கிறதுதான்னு சொல்லாம சொல்லிட்டீயடி.

ஆண் வர்க்கங்கள் ஆளும் இந்த சாகரத்தில் குதித்து, அவர்கள் வழியிலேயேப் போய், தனக்கும் பங்கம் வராமல், அவர்களையும் ஜெயித்து, புருஷனையும் முந்தானையில் இறுக்கி வைத்துக் கொண்டு,…, புருஷனை இறுக்கிப் பிடித்து வைத்துக் கொள்ளும் அந்த ஒரு வித்தையைக் கூட நான் ஒழுங்காய் கத்துக்கலியே. சுய இரக்கத்தில் அழுகை வந்தது. அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்..

“ழேய்! தேவகி..ழேய்!..தேவகீ!..”

“ என்வூட்டு தொர வந்துட்டான் எக்கா! . வர்ட்டா? அதுக்கு தண்ணி போட்டாத்தான் எம் மேல கை வெக்கவே தெகிரியம் வரும்.”—

களுக் கென்று சிரித்து விட்டு நகர்ந்தாள். நீயா நானா? என்று சண்டைக் கோழியாய் சிலிர்த்துக் கொண்டு நின்று என்னைப் போல் வாழ்க்கையை தொலைத்து விடாமல், தோற்பது போல் ஜெயிப்பது, அடங்குவது போல் அடக்குவது இந்த நிமிஷம் என் மனசுக்குத் தோன்றுவது வெகுஜன அபிப்பிராயங்களுக்கு எதிரானதுதான்.என்றாலும் சொல்லித்தான் தீரவேண்டும்.. பெண் விடுதலை கோஷங்கள் என்பதெல்லாம் என்னைப் போல் ஆண்களை ஜெயிக்கும் மார்க்கம் தெரியாத பெண்களுக்காகத்தானோ?.’.

Print Friendly, PDF & Email
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *