ஒதுக்குப்புறமாய் ஒரு சில நாட்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 3,616 
 

அந்த அதிகாலை நேரத்தில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினான் ஸ்ரீதர். வாசலில் அவனை வரவேற்று அழைத்துப் போவதற்காக அவனது மாமா காத்திருந்தார்.

“வா ஸ்ரீதர்” மகிழ்ச்சியாக வரவேற்றார் மாமா.

“எப்படி இருக்க”

“நல்லா இருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க, அக்கா, அத்தை, பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க USல சுதா, ஐஷுலாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா” என்றபடியே நான் காரில் ஏற மாமா

வீட்டை நோக்கி காரை செலுத்தினார்.

அக்காவின் புகுந்த‌ வீடு நல்ல வசதி தான். மாமா வீட்டிற்கு ஒரே பிள்ளை, அதுவும் அத்தைக்கு கல்யாணமாகி வெகு நாட்கள் கழித்து பிறந்ததால், செல்லப் பிள்ளையும் கூட. மாமாவிற்கும், அவரது அம்மா மேல் பாசம் அதிகம். அத்தையும் அனைவரின் மேலும் மிகுந்த பாசம் கொண்டவர் தான் ஆனால் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம்.

அக்காவை திருச்சியில் திருமணம் செய்து கொடுத்த பின்னர் பள்ளி விடுமுறை நாட்களில் அக்கா வீட்டிற்கு வந்து போன பசுமையான நினைவுகள் மனதில் வந்து போயின. மலைக்கோட்டை, காவிரி ஆறு என நினைத்தாலே மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அந்த பள்ளிப் பருவத்து ஞாபகங்கள் காரணமாகவே, USல் இருந்து விமானம் மூலம் வந்தாலும், திருச்சிக்கு ரயிலில் வந்தது.

சென்னையில் அப்பார்ட்மெண்டில் இருந்ததால் திருச்சியில் கொல்லைப்புற‌த்தோடு கூடிய வீட்டை பார்க்க மிகவும் ஆசையாக இருக்கும். கடைசியாக என் திருமணம் முடிந்து என் மனைவி சுதாவோடு விருந்திற்காக வந்தது. அதன் பிறகு இரண்டரை வருடம் கழித்து USல்லிருந்து இப்போதுதான் வருகிறேன்.

இப்படி பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. அக்கா உள்ளே இருந்து ஓடி வந்து என்னை வரவேற்றாள்

“எப்படிடா இருக்க, சுதா குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா, எங்க சுகன்யாவும் சுரேஷும் தூங்குறாங்களா?”

“ஆமாடா”, சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றாள் அக்கா.

“அப்புறம் அவங்க ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது?”

“சுரேஷ் 10த் சுகன்யா 8த், ரெண்டு பேருமே நல்லா படிக்கிறாங்க” என்றார் மாமா

அதற்குள் அக்கா ஒரு அருமையான பில்டர் காபியுடன் வெளியே வர அதை அருந்திவிட்டு எனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தூங்க ஆயத்தமானேன்.

அக்கா திருமணம் முடிந்து வந்த அதே வீடு. இப்போது இன்னும் சில மாற்றங்களுடன் அழகாயிருந்தது. கண் விழித்து பார்க்கையில் மணி பதினொன்றை தொட்டிருந்தது. காலைக்கடன்களை முடித்து வெளியே வந்த போது அக்காவும் அவளது மாமியாரும் அடுக்களையில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்னை பார்த்த உடனே அக்கா வந்து காப்பியை நீட்டினாள். அத்தை விசாரித்தாள்.

“ஸ்ரீதர் எப்படி இருக்க ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க, அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்” என்றாள் அத்தை

இப்படியே சில பல விசாரிப்புகள் உடன் பேச்சு சிறிதே நீண்டது. அப்படியே வீட்டை சுற்றி பார்த்தபடியே பின்னால் இருக்கும் தோட்டத்தை அடைந்தேன். முன்புற வாயில் தொடங்கும் தோட்டம் அப்படியே பின்னால் தொடர்ந்து அடுக்களையை ஒட்டியே இருக்கும். இன்னும் அதே பசுமை. தோட்டத்தில் சமையலறையை ஒட்டி மற்றுமொரு சிறிய அறை ஒன்று இருந்தது. அனைத்தையும் நோட்டமிட்டபடியே உள்ளே சென்றேன்.

“அக்கா சுகன்யாவும், சுரேஷும் எப்போ ஸ்கூல்ல இருந்து வருவாங்க?”

“3 லிருந்து 4 மணி ஆயிடும் ஸ்ரீதர், நீ குளிச்சிட்டு வா சாப்பிடலாம்”

“சரிக்கா” என்று சொல்லிவிட்டு, குளித்து தயாராகி வந்தேன்

மதிய உணவை முடித்து, சிறிது நேரம் உறங்கிப் போனேன் எழுந்திருக்கும்போது மணி ஐந்தைத் தாண்டியிருந்தது.

எழுந்து வரும்போது அக்காவின் மகன் சுரேஷ் ஆசையாக ஓடி வந்து கட்டிக்கொண்டான்

“டேய் சுரேஷ் எப்படி இருக்க ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது?”

“நல்லா போகுது மாமா, ஊர்ல மாமி பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க சுரேஷ்” என்றபடி அக்காவை பார்த்து

“சுகன்யா எங்க அக்கா?”

அக்கா சற்றே தயங்கியபடி தோட்டத்தை நோக்கி கையை காட்டினாள் ஒன்றும் புரியாதவனாய் அக்காவின் அருகில் சென்று என்ன என்று விசாரித்தேன்.

“சுகன்யா வீட்டுல‌ இல்லடா மூணு நாளைக்கு வீட்டுக்கு வரக்கூடாது தோட்டத்துல ஒரு ரூம் இருக்கு இல்ல அவ அங்க தான் இருப்பா” என்றாள் மெதுவாக.

“என்னக்கா இன்னுமா இதெல்லாம் பார்த்துகிட்டு” என்று நான் கேட்கும் போதே அத்தை உள்ளே வந்தாள்.

“ஸ்ரீதர் இதெல்லாம் காலம் காலமா நாங்க பாக்குறது பா அத மாத்திக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்” என்றபடியே கஷ்டப்பட்டு ஒரு பேனை தூக்கி கொண்டு போய் அடுக்களையை ஒட்டி ஒதுக்குப்புறமாக உள்ள அந்த அறையில் வைத்தாள்.

அவளிடம் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அக்கா சைகை காட்டினாள்

“சரி அந்த பேனை சுரேஷ் கிட்டயாவது இல்ல என்கிட்ட யாவது கொடுத்திருக்கலாமே நாங்க கொண்டுபோய் வச்சிருப்போமே” என்றேன்.

அத்தை எதுவும் பதில் பேசவில்லை.

“அவங்க ஆம்பளைங்க யாரையும் அங்க போக விடமாட்டார்கள்” என்றாள் அக்கா மறுபடியும் மெதுவாக.

சுகன்யா வெளியில் நின்றே விசாரித்துவிட்டு அந்த ஒதுக்குப்புறமான அறைக்கே சென்றுவிட்டாள். எனக்கு எரிச்சலாக இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை.

மறுநாள் விடிந்தது. அன்று சனிக்கிழமை விடுமுறை நாள் இருந்தும் சுகன்யா வீட்டிற்குள் வரவே இல்லை. அவளுக்குத் தேவையான அனைத்தையும் அக்காவும் அத்தையும் எடுத்துக்கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென அக்கா வெளியே கிளம்பினாள்.

“என்ன அக்கா இவ்வளவு அவசரமா எங்க போற?”

“இல்லடா சுகன்யாவுக்கு கொஞ்சம் பெயினா இருக்கு அதான் மருந்து வாங்க போறேன்” என்றாள்.

“என்னக்கா இதுக்கு ஏன் நீ போகணும் ஆன்லைன்ல போட்டா வரப்போகுது அப்படியே அவசரம்னா சுரேஷ் கிட்டயோ இல்ல என் கிட்டயோ இல்ல மாமா கிட்டயோ சொன்னா நாங்க வாங்கிட்டு வர போறோம்”

அத்தை உடனே இடைமறித்தாள்.

“இந்த மாதிரி வேலை எல்லாம் நாங்க வீட்டுல இருக்கற ஆம்பளைங்க கிட்ட வாங்க மாட்டோம்”.

என்னால் தாங்க முடியவில்லை.

“ஏன் அத்தை இதுல என்ன தப்பு. இதைப்பத்தி ஆண் பிள்ளைங்க கிட்ட சொல்லி புரிய வைக்கணும். முதல்ல இந்த மாதிரி சமயத்துல பெண் பிள்ளைகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆதிகாலத்தில மனுஷங்க காட்டில் வாழ்ந்தப்போ பெண்கள் உடம்பில் இருந்து இந்த மாதிரி சமயத்துல வெளியேற்ற உதிரத்தோட‌ வாடை விலங்குகளை ஈர்க்குமாம், அதனால ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ அப்படின்னு முன்னெச்சரிக்கையா குகைக்குள்ளயோ இல்லனா ஏதாவது மறைவிடத்திலயோ பெண்களை ஒளிச்சு வச்சாங்க. ஆனா அவங்களை ஒதுக்கி வைக்கல. முன்னோர்கள் செய்த பல காரியங்களுக்கு நாம அர்த்தம் சரியாக புரிஞ்சுக்காம அதை குருட்டுத்தனமா ஃபாலோ பண்றோம். அது ரொம்ப தப்பு. ஆண் பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி விஷயம் எல்லாம் நாம ஒழுங்கா சொல்லி புரிய வச்சு வளர்க்கணும், அப்போதான் அவங்க தன் அம்மாவுக்கும், கூடப்பிறந்தவர்களுக்கும், பிற்காலத்தில் தன்னுடைய மனைவிக்கும் உறுதுணையாய் இருப்பாங்க.”

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுரேஷ் உடனே வந்து,

“அம்மா குடுமா! நான் போய் சுகன்யாவுக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன், மாமா இனிமேல் வீட்டிலே இருக்கும் லேடிஸ்க்கு எல்லா விதத்திலும் பக்க பலமா இருப்பேன். பாட்டிக்கு மெதுவா சொல்லி புரியவைப்பேன். அவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. நீங்க வருத்தப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு மருந்து வாங்கக் கிளம்பினான்.

அவனது ஆணித்தரமான பேச்சிலிருந்தும், செய்கையிலிருந்தும், அடுத்தத் தலைமுறையின் வாயிலில் விடியல் காத்திருப்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *