ஒட்டிக் கொண்டது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 7,983 
 
 

அது அவளோடு எப்பொதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம் அவளுக்கு ஞாபகமே இல்லை. இத்தனை நாட்கள் அது ஒட்டியிருந்ததை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போதுதான் அது அவளோடு ஒட்டியிருக்கிறது என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. வெளியில் வந்த பிறகு எங்கு ஒட்டியிருக்கிறது என்று தேடிப் பார்த்தாள். எதுவும் பிடி கிடைக்கவில்லை.

ஆளுயரக் கண்ணாடி முன் பிறந்த மேனியாக நின்று தேடிப் பார்த்தாள். வயதும், அலட்சியமும் அவள் உடலமைப்பில் செய்திருந்த மாற்றங்கள் தெரிந்தனவே தவிர எங்கு என்ன ஒட்டியிருக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு வேளை தனக்குத்தான் பிரமையோ என்று கணவனிடமும், இரு மகன்களிடமும் சென்று கேட்டுப் பார்த்தாள். அவர்கள் உடலிலும், ஆன்மாவிலும் எதுவும் ஒட்டியிருக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டாள். இது குறித்து கணவனிடம் பேசிய போது பெண்களுக்குஅப்படி ஒட்டியிருப்பதே இயல்பு என்பது போல் பேசினான்.

அவளுக்கு அசூயையாக இருந்தது. சதா ஏதோ ஒன்று, இன்னதென்று சொல்ல முடியாத ஒன்று கூடவே ஒட்டியிருந்தால்? அது உறுத்தலாக மற்றியது.அவள் கோபம் துக்கமாக பரிணமித்தது. மற்ற பெண்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். அவர்கள் எல்லோரும் அதை இனம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. வழக்கம் போல் அதிகாலை எழுந்தனர், பாத்திரம் துலக்கினர், டீ போட்டனர், குழந்தைகளைக் கவனித்தனர், கணவனுக்கும், தனக்குமாக உணவு கட்டிக் கொண்டனர், பேருந்துகளில் இடிபட்டுப் பயணம் செய்து அலுவலகம் சென்றனர், மீண்டும் மாலை வந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, உணவிட்டுத் தூங்கச் செய்து, கணவனின் வன்கலவிக்கு ஆளாயினர். சிந்தனைகள் ஏதுமற்ற நிம்மதியான ஆட்டு வாழ்க்கை.

ஒட்டிக் கொண்டிருந்த அது அவர்களை எந்த வகையிலும் உறுத்தியதாகவோ பாதித்ததாகவோ தெரியவில்லை. இல்லை அதை அவர்கள் பொருட்படுத்தவில்லையோ? நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கு மூச்சு முட்டியது. அது என்ன என்பதைக் கண்டு பிடிக்காவிட்டால் இனி வாழவே முடியாது என்று தோன்றியது. எப்போதாவது பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும் போது அதைப் பற்றிய நினைவு இருந்திருக்குமோவென்ற சந்தேகத்தில் பழைய குப்பைகளைக் கிளறினாள்.

அவள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டப் பட்டு பரணையில் தூக்கிப் போடப் பட்டிருந்தது அவள் நினைவுகளைப் போலவே. எத்தனையோ முறை அம்மா வந்து அவற்றை எடுத்துத் தரச் சொன்ன போது கூட அவளுக்கு அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஆனால் இன்று? ஒரு நாற்காலி அதன் மேல் ஒரு ஸ்டூல் என்று அடுக்கி தன்னுடைய நினைவு மூட்டையைக் கீழே இறக்கினாள்.

நல்லவேளை கணவன் வெளியூர் சென்றிருக்கிறான். மகன்கள் இருவரும் கல்லூரி விட்டு வர சாயுங்காலம் ஆகிவிடும். அதனால் தைரியமாகப் பார்க்கலாம். இல்லையென்றால் அனாவசிய கேலிக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். கல்லூரியில் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியதற்கான கேடயம் ஒன்று, மாநில அளவில் நடந்த மாணவர் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதற்கான சான்றிதழ், பட்டிமன்றகளில் அவள் பேசிய பேச்சுக்களின் சுருக்கம், இப்படிக் கதம்பமாக இருந்தன.

பட்டி மன்றத்தில் எப்போதேனும் அதைப் பற்றிப் பேசியிருக்கலாமோ என்ற நம்பிக்கையில் அவற்றைப் பிரித்துப் பார்த்தாள். “பாரதியின் பெண்ணியப் பார்வை”, “தாய்மை என்பது சுயநலத்தின் உருவகம்”, “கற்பு என்பது உடலில் இல்லை”, என்பது போன்ற தலைப்புகள் அவளை பயமுறுத்தின. அந்தத் தலைப்புகளின் கீழ் அவள் பேசியதாக எழுதியிருந்த கருத்துக்களை அவளால் இப்போது கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு கணம் அதை மறந்து எழுத்துக்களில் ஒன்றினாள். அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அவளுடையவை என்பதை அவள் கணவன் அறிந்தால் அவளை ஒரு வேசி போலத்தான் பார்ப்பான் என்பதில் ஐயமில்லை என்று நினைத்துக் கொண்டாள்.

நல்லவேளை யாருக்கும் தெரியாமல் மூட்டை கட்டி விட்டோம் என்று சந்தோஷப்பட்டாள். மீண்டு அது நினைவுக்கு வந்தது. அட! நாம் தேட வந்த விஷயத்தையே மறந்து விட்டோமே என்று சிந்தித்தவள் கண்களில் டைரி ஒன்று பட்டது. கல்லூரி முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது மட்டும் டைரி எழுதியது நினைவில் ஆடியது. ஒருவேளை இதில் அதைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

தன்னுடைய டைரியையே ஒரு வேற்று மனுஷி படிப்பது போலப் படித்தாள். அதில் காணப்பட்ட கனவுக்கும் இன்றைய நிலைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் அவள் ஒரு இடத்தில் தன் திருமணத்தைப் பற்றி எழுதும் போது கலவி என்பது இயற்கையாக இருவரும் தூண்டப்பட்டு நடைபெற வேண்டுமென்று எழுதியிருந்ததைப் படித்ததும் கண்களில் நீருடன் சிரித்தாள். மேலும் மண வாழ்க்கையை விவரித்துச் செல்லும் பக்கங்களில் முதல் குழந்தையை ஏதாவது ஆசிரமத்திலிருந்து தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்றும் அடுத்த குழந்தை அவர்களுடைய சொந்தக் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தது.

அதைப் படிக்கப் படிக்க ஒட்டியிருந்த அது மேலும் அதிகமாக உறுத்த ஆரம்பித்து. தான் எவ்வளவு பெரிய பைத்தியக்காரியாயிருந்திருக்கிறோம் என்று தோன்றியது. நல்லவேளை கணவனின் முகம் பார்த்ததும் தன் ஆசைகளையெல்லாம் சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று நினைத்துக் கொண்டாள். பிறந்தது இரண்டும் ஆணாகப் போனதில் கணவனுக்கு இருந்த அதே பெருமை இவளுக்கும் இருந்தது. பின்னே ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று எத்தனை பேர் தவமிருக்கிறார்கள். கருவை அழிக்கக் கூட முன்வருகிறார்கள். அது போல எல்லாம் இல்லாமல் இயற்கையாக ஆண் குழந்தை பிறப்பது என்பது சாமானியமா? சமூகத்தில் அவள் அந்தஸ்து எவ்வளவு உயரும்?

நினைவு மூட்டைகளில் தேட இனி ஒன்றுமேயில்லை. அவள் எதிர்பார்த்த எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. பின் யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். இவள் கூறியதைக் கேட்டு அம்மா பதறி விட்டாள். இந்த வயதில் ஏன் அவள் புத்தி இப்படிப் போகிறது? என்று அங்கலாய்த்தாள். இது போன்ற சிந்தனைகளுக்கு இடம் தருவதே அவளைப் போன்ற இல்லத்தரசிகளுக்குக் கூடாது என்றும் , அதனால் அவள் வாழ்க்கைக்கே ஆபத்து என்றும் பிதற்றினாள். ஒட்டிக் கொண்டிருப்பதை என்ன வேதனையாக இருந்தாலும் அறுத்து எறிந்து விடச் சொன்னாள். அப்படிச் செய்தால் தான் அவள் இல்லறம் நல்லறமாகுமென்று கூறினாள்.

எதுவும் புரியாமல் சரி சரியென்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டாள். என்ன ஒட்டியிருக்கிறது என்பதே தெரியாமல் அதை பிய்த்து எறிவது எப்படி என்று அவளுக்குத் தெரியவில்லை. வேறு யாரை கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அவளுடைய தோழி வந்தாள். அவள் கணவனுக்கு இந்தத் தோழியைக் கண்டாலே பிடிக்காது. ஏனென்றால் ஒரு பன்னாட்டு விளம்பர ஏஜென்ஸி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தத் தோழிக்கு இருமுறை விவாகரத்து ஆகியிருந்தது. அதனால் இப்போது திருமணம் என்ற பந்தத்தில் அடை படாமல் தன் நண்பன் ஒருவனோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறாள்.

இதெல்லாம் தெரிந்துதான் அவளை இந்தத் தோழியோடு பேசவே கூடாதென்று கண்டித்துச் சொல்லியிருந்தான் கணவன். ஆனால் வீடு தேடி வந்தவளை எப்படிப் “போ” என்று சொல்ல முடியும்? கொஞ்ச நேரம் தன்னுடைய அலுவலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தோழி நல்ல காபி போட்டுத் தரும்படி சொன்னாள். எந்த ஹோட்டலில் எங்கு சென்று காபி குடித்தாலும் அவள் போடும் காபி போல இல்லை என்று சிலாகித்தாள். அதைப் பற்றிக் கேட்கும் நேரம் இதுதான் என்று தெளிந்து அவள் தோழியிடம் அதைப்பற்றி விவரமாகச் சொன்னாள்.

கேட்டுக் கொண்டிருந்த தோழிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. உனக்கு ஆகத் தாமதமாகத்தான் தோன்றியிருக்கிறது. எல்லாவற்றையும் கழற்றி எறி என்னைப் போல. அது உன்னை உறுத்தாது என்றாள். அவளுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவள் தன் ஆன்மாவைக் கேட்டாள். ஒட்டியிருக்கும் அந்த உறுத்தலிலிருந்து தப்ப எல்லாவற்றையும் கழற்றி எறிவதுதான் தீர்வா? என்று. அவள் ஆன்மா ஏனோ மௌனம் சாதித்தது. அவளால் அந்த மௌனத்தை சம்மதம் என்று எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அதைத் தன் தோழியிடமும் சொன்னாள். நீங்களெல்லாம் இப்படி உறுத்தல் பட்டே சாகப் பிறந்தவர்கள். உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. கணவனின் நிழலிலும் பின்னர் மகனின் நிழலிலும் வாழும் இருட்டைப் போன்றவர்கள் நீங்கள். வெளிச்சத்தில் கரைந்து காணாமல் போய்விடுவீர்கள் என்று கோபமாகப் பேசிவிட்டுப் போய்விட்டாள்.

தோழி பேசிக் கொண்டிருந்த அந்த நொடியில் தன்னை ஒட்டிக் கொண்டு உறுத்தியது எது? என்று அவளுக்குப் படீரென்றுத் தெரிந்தது. இருந்தாலும் அதை எறிய மனம் வரவில்லை அவளுக்கு. எது ஒட்டிக் கொண்டிருக்கிறது எங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து விட்டால் எளிதாகத் தூக்கி எறிந்து விடலாம் என்று நினைத்த தன் பேதமையை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டாள் அவள். யுகயுகங்களாக இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் இருந்திருக்கிறது. பல்வேறு தலைமுறைகளால் பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று இன்று இந்தக் கேள்வி உறுத்தலில் வந்து நிற்கிறது. முந்தைய தலைமுறைகளில் எத்தனை பேருடைய உயிரைக் குடித்ததோ அந்தக் கேள்வி? நிச்சயம் யாரேனும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவார்கள் அப்போது அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம் தன் அனுபவத்தை அதைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்து போனது அவளுக்கு தன்னைப் போன்றவர்களால் நிச்சயம் அந்த உறுத்தலை மறக்கவும் முடியாது, தூக்கியெறியவும் முடியாது. அந்த உறுத்தலோடு சமரசம் செய்து கொண்டு வாழ்வதே அவர்கள் தலையெழுத்து என்றும் புரிந்தது. அவளுக்கு மகள் இல்லை. அதனால் அவளுக்கு அதைப் பற்றிச் சொல்லும் அவலம் நேராது. அதைப் பற்றி அவளிடம் கேட்கப் போவது அவளுடைய மருமகள்களாகவே கூட இருக்கலாம். பேத்தியாகவுமிருக்கலாம். யார் கண்டார்கள்?

– மே 2011

இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்.படிப்பு : M.A ஆங்கில இலக்கியம்.சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில்.கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்:1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *