சந்திரனின் மனம் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தது. மனைவி பிள்ளைகளோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் புதிய உறவினர்களின் வருகையை. மனைவி, பிள்ளைகளுக்கு வருபவர்கள் புதிய உறவினர்கள். ஆனால் சந்திரனுக்கோ, அவர்கள் விடுபட்ட மிகப்பழைய உறவினர்கள். அவர்களின் வருகை சந்திரனுக்கு எவ்வித மகிழ்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக பழைய வடுக்களையே கிளறியவண்ணம் இருந்தது. வீட்டின் பின் மாமரத்தின் கீழ் அமர்ந்தவனின் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கி ஓடியது.
அன்று சந்திரனின் குடும்பத்தில் அவன், அவனது அம்மா அப்பா, சகோதரர்கள் இருவர் என அளவான குடும்பமாக இருந்தது. ஆனால், சந்திரனின் தாயாரது இளைய சகோதரனின் குடும்பமும் சந்திரனது குடும்பத்துள் ஒன்றாகவே காணப்பட்டது.
“சந்து, நேரம் போய்விட்டது, அம்மா தேடப் போறா… வீட்டுக்குப் போ.” மச்சாளின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சந்திரன். உண்மையிலேயே நேரம்போய்விட்டதை மாலைநேர மம்மல்ப்பொழுது அவனுக்கு உணர்த்தியது. ஆனாலும் தாய்மாமனின் குரல் அவனை மேலும் உற்சாகமாக வேலை செய்யத்தூண்டியது. வாழைகளுக்கு நீர்பாய்ச்சிக்கொண்டிருக்கும் மாமாவுக்கு உதவியாக பாத்திகளில் வரும் நீரை வாழையின் அடிகளுக்கு போகும்வண்ணம் கால்களால் தள்ளிக்கொண்டிருந்த அவனுக்கு; மச்சாள், வீட்டுக்குபோக நேரமாகிவிட்டது என்று கூறியபோது, “அவனை ஏன் கலைக்கிறாய்? இதுவும் அவன்ர வீடுதானே நேரம்போனால் சாப்பாட்டை குடு. அவன் இங்கேயே நிற்கட்டும்.” மாமாவின் உரிமையான பேச்சு சந்திரனை வானத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.
சந்திரனுக்கும் இதுவரை தனது வீட்டுக்கும் மாமாவின் வீட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. சொல்லப்போனால் தனது வீட்டில் நிற்பதைவிட மாமா வீட்டில் நிற்பதே அதிகம். எந்த விசேட நாட்களிலும் மாமாவீட்டிலேயே நின்றுகொள்வான்.
மாமா உறவுகளை எப்படி வைத்திருப்பாரோ அப்படித்தான் சொத்துப்பத்துக்களையும் வைத்திருப்பார். பெரியமாமாவுக்கும் மாமாவுக்கும் சேரவேண்டிய காணி ஒன்றினை பெரியமாமா உயிருடன் இருக்கும் காலத்திலேயே தனது பெயருக்கு மாற்றிவிட்டார். இந்தவிடயம் தெரியாத, பெரியமாமி தங்களது பராமரிப்பில் இருந்த அந்தக்காணியை ஊரில் வேறு ஒருவருக்கு விற்பதற்கு ஆயத்தமாக, அது பெரிய சண்டையானது.
சந்திரனின் அம்மாவுக்கோ தனது சின்ன அண்ணாமீது அளவுகடந்த பாசம். இதனால் மாமா வீட்டுடன் சேர்ந்து பெரியமாமியுடனும், காணி வேண்ட வந்தவர்களுடனும் சண்டைபிடித்து ஊரில் கணிசமானவர்களுடன் கதைபேச்சு நின்று நிரந்தர பகையையும் தேடிக்கொண்டது சந்திரனின் குடும்பம்.
இதனால் சந்திரனின் மற்றைய உறவினர்களின் வீட்டுபோக்குவரவும் மட்டுப்படுத்தப்ட்டது. கடைசியில் மாமா வீடே தஞ்சம் என இருந்தது. ஒரு நாள் மாமாவின் மரணச்செய்தி வீடு வந்து சேர்ந்தது. செய்தியை கேட்டவுடன் சந்திரனின் அம்மா அழுத அழுகை, மாமா மீதான பாசத்தை காட்டிநின்றது. இன்றளவும் அதனை சந்திரனால் மறக்கமுடியாதிருந்தது. இன்று எந்த மரண வீட்டிலும் அப்படி ஒரு அழுகையை அவன் கண்டதில்லை. உணர்வுகளை வெளிக்காட்டுவதில் கூட நவநாகரீகம் புகுந்துள்ளது. எழுபத்தைந்து வயது தாண்டியவர்கள் கஸ்டம் தராமல் இறந்து விடவேண்டும் என்று கூட இன்று பலர் சிந்திக்கின்றார்கள்.
மாமாவின் செத்தவீடு காரணமாக சில நாட்கள் மாமா வீட்டிலேயே நின்றான் சந்திரன். மாமா இல்லாத வீட்டில் ஏதோ ஒரு இடைவெளி இருப்பதை அந்தச் சிறுவயதிலேயே அந்தச் சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டான் சந்திரன். ஆனால் அந்தச் சிறியவயதில், மாமா இல்லாதவிடத்தில் சந்திரனின் அப்பாவோ, அம்மாவோ அவர்களது குடும்பத்தில் அதிகாரம் செய்துவிடுவார்களோ என்கின்ற பயத்தில் அதனைத்தடுக்க மச்சாள்மார் தங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள் என்ற உண்மை சந்திரனுக்கு விளங்கவில்லை. அவர்கள் நினைக்கும் அளவுக்கு சந்திரனின் அப்பா, அம்மா இல்லை என்பது மச்சாள்மாருக்கோ, சந்திரனின் அத்தைக்கோ விளங்கவில்லை. இதனால் நாளடைவில் பல குற்றச்சாட்டுக்களைக் கூறியே சந்திரன் வீட்டில் இருந்து விலகிக்கொண்டனர்.
பன்னிரண்டு வயதில் இவற்றை உணராத சந்திரனுக்கோ அவர்களது பிரிவு மோசமானதாக இருந்தது. வீதிகளில் அவர்களைக் காணும்பொழுதெல்லாம் ஏக்கத்துடன் அவர்களை அவன் மட்டுமேபார்ப்பான். அவர்கள் பார்ப்பதில்லை. காலங்கள் செல்ல வலிகள் மறந்துபோக வலிகள் தந்த வடு மட்டும் சந்திரனின் மனதில் படிந்துகொன்டது. நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சந்திரனின் சகோதரர்களும் ஒவ்வொருவராக வெளிநாடுசெல்ல சந்திரன் தனிமைக்குள் தள்ளப்பட்டான். மாமா வீட்டுக்காக சில ஊரவர்களுடன் பகைத்திருந்தமையினால் வளர வளர தனிமையை பழகிக்கொண்டவன், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களிலும் நண்பர்களை பயந்து, பயந்தே தேர்ந்தெடுத்துக்கொண்டான். அவர்களும் விட்டுப்பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில்.
அவனது தனிமை அவனது திருமணத்துடன் மறைந்தாலும், கடந்தகால ஏக்கங்களும் வலிகளும் மறையவில்லை. அதனாலேயே பலருடனும் பெரிதாக ஒட்டிக்கொள்வதில்லை. அற்ப விடயங்களுக்காக சண்டையிடும் உறவுகளும், புரிந்துகொள்ளாத உறவுகளும் அவனுக்கு ஒட்டாத உறவுகளாகவே தொடர்ந்தன. ஒட்டிக்கொள்ள அவன் நினைத்ததுமில்லை. காலஓட்டத்தில் மச்சாள் குடும்பம் சேர்ந்துகொண்டாலும்; பழைய அந்த ஏதோ ஒரு உணர்வு மட்டும் இல்லாமலேயே இருந்தது. இருந்தும் மனைவிக்காகவும் தன்னைப்போல் இப்போதிருக்கும் சின்ன பிள்ளைகளம் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்பார்ப்புக்கள் இன்றிய உறவினை ஏற்படுத்திக்கொண்டான். சகோதரர்கள் வெளிநாடு சென்றதைப்போலவே மச்சாள் ஒருவரும் திருமணம் முடித்து வெளிநாடு சென்றிருந்தார். அவரது திருமணமோ அல்லது வெளிநாடு சென்றதோ எதுவும் சந்திரனுக்கு தெரியாது. அத்துடன் அவர் போர்க்காலங்களிலம் சரி எக்காலங்களிலும் இதுவரை தொடர்பில் இல்லை. ஏன் சந்திரனின் பெற்றோரின் இறப்பில்கூட தொடர்புகொள்ளவில்லை.
தற்போது திடீரென அவர்கள் வெளிநாட்டில் இருந்து பிள்ளைகளுடன் வருவதாகவும், சந்திரனின் வீட்டுக்கும் வரப்போவதாகவும் தகவல் வர சந்திரனால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சந்திரனுக்கு தெரியும் இது நிச்சயம் அத்தையின் வேலையாகத்தான் இருக்கும். வயதுபோன நேரத்தில் சிலர் சொந்தங்களைத் தேடுவார்கள். இப்பொழுது படுக்கையில் இருக்கும் அத்தையைப் பார்க்கப்போகும் போதெல்லாம், “அவனுக்கு மோர்பிடிக்கும் ஊத்திக்கொடு” என்று சொல்லம்பொழுதெல்லாம் சந்திரன் மனம் இருபத்தைந்து வருடங்கள் முன்னோக்கிச் சென்றுவிடும். இருபத்தைந்து வருடங்கள் இந்த வார்த்தைகளை ஏன் இழந்தான் என்றும் அவனுக்கு விளங்குவதில்லை.
“அப்பா ஓட்டோ வருகிறது” என்ற மகனின் வார்த்தைகள் சந்திரனை நிகழ்காலத்துக்கு கொண்டுவர, வீட்டின் முன்பக்கம் செல்லமுன்னமே சந்திரனின் மனைவியும் பிள்ளைகளும் புதிய? பழைய? உறவினர்களை வரவேற்றிருந்தனர். சந்திரனும் ஒப்புக்காக அவர்கள் முன் சிரித்துக்கொண்டிருந்தான். பதில்கள் ஒற்றைச்சொல்லில் வந்துகொண்டிருந்தன அவனிடத்தில் இருந்து. வந்தவர்கள் அவர்களது ஸ்மார்ட் போன்களில் செல்பி எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
“உங்களுக்கு ஆட்களுடன் கதைக்கிறதென்றால் பிடிக்காது. அதுகள் எவ்வளவு பாசமாக கதைக்குதுகள் கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறீங்கள், அந்த சின்னப் பிள்ளைகள் பாவம் அதுகளோடையாவது கதைத்திருக்கலாம்.” மனைவின் வழமையான புராணம். ஆனாலும் “அந்தச்சின்னப்பிள்ளைகளோடையாவது” கொஞ்சம் குத்தியது. என்னைப்போல்தானே அவர்களும், பெரியவர்களின் சுயநலங்களால் பாதிக்கப்படுகின்றார்கள். இருந்தாலும் வேண்டாம், இப்படியே இருந்திடுவம் என்ற நினைப்புடன் இருக்க, போன் மணியடித்தது.
மனைவியின் கதையில், “ஆ…பாவங்கள், இவர் இப்படித்தான்…” என்று கதைக்கும்பொழுதே சந்திரனுக்கு விளங்கிவிட்டது. யாரோ தனக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்று, கதைத்துமுடியும்வரை மௌனமாக இருந்தான்.
“அந்தப்பிள்ளையள், அத்தையிட்ட ஏன் சித்தப்பா எங்களோடு கதைக்கவில்லை என்று சொல்லி கவலைப்பட்டதுகளாம்” என்று மனைவி கூறவும், பாசம் பொத்துக்கொண்டு வர, அவன் மனைவியையும் கூட்டிக்கொண்டு உடனே அத்தைவீட்டுக்கு கிளம்பிச் சென்றான். சந்திரனையும் மனைவியையும் கண்டதும் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சந்திரனே கதையைத் தொடங்கி கதைத்தான். பழைய கதைகளைக் கூறும்போதே அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோலவும், வீடு தேடி வந்தபோது சந்திரன்தான் வடிவாக கதைக்கவில்லைப்போலவும்; அவர்கள் கதைக்க, சந்திரன் மனைவியை ஆழமாக பார்த்தான். அவள் மௌனமாக இருந்தாள். சந்திரனுக்கோ பொத்துக்கொண்டு வந்த பாசம் பொசுக்கென்று போனது.
சில நாட்களில் அவர்கள் வெளிநாடு சென்றுவிட, மச்சாளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமட்டை அனுப்பினாள் சந்திரனின் மனைவி. அடுத்த பிறந்தநாளும் வரப்போகிறது. இதுவரை எந்தப்பதிலும் இல்லை, தொடர்பும் இல்லை. சந்திரனின் மனைவியும் இப்பொழுதெல்லாம் அவர்களைப்பற்றி கதைப்பதில்லை. சுட்டமண் ஒட்டாது என்பார்கள் சில உறவுகளும் அப்படித்தான், ஒட்டாத உறவுகளாய் ஆனால் இரத்த உறவுகளாய்?