கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 13,216 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள்.

மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள்.

அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து முதுகிலே சென்று மறைந்தது. அவள் தலை மயிரைப் பற்றி அறியும் ஆவலையும் அது தூண்டிவிட்டது.

அவள் முதுகிலே வெறுமையான தண்­ர் குடம் ஒன்று தொங்கியது. காட்டுப் புல்லினாலும் நாரினாலும் இறுக்கிப் பின்னிச் செய்தது. பள்ளிப் பிள்ளைகளைப் போல அவள் அதை முதுகிலே கட்டிக்கொண்டிருந்தாள். அது முதுகோடு ஒட்டிக்கொண்டு அவளுக்கு வழித்துணையாக வந்து கொண்டிருந்தது.

அவள் எட்டு மைல் தூரம் போய் தண்­ர் பிடித்து வரவேண்டும். போக வர பதினாறு மைல்கள். ஏதோ மேய்ச்சலுக்குப் போவதுபோல நித்திய நியமமாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். இன்று அவள் வேண்டுமென்றே கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாள். அவள் சிநேகிதிகள் முன்போ போய்விட்டார்கள்.

வழிநெடுக அகாஸ’யா முள் மரங்கள். ஆள் உயர கத்தாளைகள்; உயரமற்ற புதர் மரங்கள். பயந்த சுபாவம் கொண்ட பற்றைகள். மைமுன் தன் பாதையை அந்த வழியில்லாத காட்டில் இலகுவாகக் கண்டுபிடித்து நடந்து கொண்டிருந்தாள்.

வழக்கம்போல் அதிகாலையில் ஹைனாவின் கூவல் அவளை எழுப்பிவிட்டது.

களிமண்ணினாலும், மெல்லிய மரத்தடிகளினாலும் கட்டிய வீடு அது. புல்லினால் வேய்ந்த கூரை. குளிரைத்தடுக்கும் வல்லமை இல்லாதது. அந்த காலைக் குளிரில் ஒட்டகத்தின் ரோமத்தில் செய்த சௌகரியக் குறைவான பாயில் கண்களை விழிக்காமல் சுருண்டு படுப்பதற்கு அவளுக்கு மிகுந்த ஆசையாக இருக்கும்.

ஆனால் ஹைனா முதலாவது எதிரி என்றால் அவளுடைய தாயார் இரண்டாபது எதிரி. மைமுன் எழும்பும்வரை அவள் தாயார் காயம் பட்ட விலங்குபோல கத்தியபடியே இருப்பாள். இந்த காலை நேரத்து சுகத்தை தினமும் இப்படி கெடுப்பது மைமுனுக்கு மகா கொடூரமாகப் பட்டது. தண்­ருக்காக இந்த அலைச்சல் படவேண்டி இருந்தது. அவள் தாயாருக்குகூட அவள் படும் இம்சை புரியவில்லை. இதில் மைமுனுக்கு நிறைய வருத்தம்.

அவள் தகப்பனர் நூர் அந்த ஊர் குடித்தலைவர், நபதூன். அவரிடம் ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் என்று எல்லாம் இருந்தன. பொதி சுமப்பதற்கு கழுதைகள் கூட நிறைய இருந்தன. பலபலவென்று விடியுமுன்பாகவே அவையெல்லாம் மேய்ச்சலுக்குப் போய்விடும். ஒரு கழுதையை அனுப்பி தண்­ர் பானைகளை நிரப்பி வந்தால் அவளுக்கு வேலை மிச்சம். அப்படித்தான் சால்மா வீட்டில் செய்கிறார்கள். கழுதைகளை அனுப்பி வைக்கும்படி அவள் தாயார் அடிக்கடி கேட்டுக் கொள்வாள். ஆனால் மைமுனின் தகப்பனார் மிகக் கவனமாக அதை மறந்து விடுவார்.

அவருக்கு இரண்டு மனைவிகள் அவருடைய மேச்சல் வட்டம் ஐம்பது மைல் தூரம் இருக்கும். அந்த எல்லைக்கு மந்தை மேய்ச்சலுக்கு போகும்போது அவர் அங்கேயே இரண்டாவது மன€வியோடு தங்கிவிடுவார். இப்படி வருடத்துக்கு இரண்டு மாதங்களாவது காணாமல் போய்விடுவார்.

மதியம் இரண்டும் மணி ஆகிவிட்டதென்றால் நூர் அகாஸ’யா மரத்தை தேடி வந்துவிடுவார். அங்கே அவருடைய கூட்டாளிகள் காத்திருப்பார்கள். ச்சாட் என்று சொல்லப்படும் போதை இலையை கொடுப்பிலே எல்லோரும் இடுக்கிக் கொள்வார்கள். அந்தச் சாறு தொண்டையிலே இறங்க இறங்க அவர்கள் மேலே மேலே போய் மிதப்பார்கள்.

இந்த நேரத்தில் சோமாலியாவில் எல்ல ஆண்களும் அப்படித்தான் இருப்பார்கள். பின் மதியத்தில் தொடங்கி இரவு படுக்கப்போகும் வரைக்கும் இது தொடரும். உள் சுவாசம், வெளி சுவாசம் என்று விட்டபடி கைகால்களைப் பரப்பி அவர்கள் இந்த போதை சாம்ராஜ்யத்தில் தங்களை மறந்து சஞ்சரிப்பார்கள்.

ஐ.நா.சிறகம் இப்படித்தான் ஒரு சாயங்கால வேளையில் அவர்களிடம் வந்தது. நூரும் ஊர் மூப்பர்களும் அப்போது ச்சாட் போதையில் இருந்தார்கள். ஐ.நா. ஊழியர்கள் ஒவ்வொரு கிராமமாக வந்து அவர்கள் தேவைகளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆழ்கிணறு தோண்டித் தரும்படி வேண்டினர். சிலர் வாய்க்கால் கேட்டனர். சிலர் பம்புசெட் என்றார்கள். இவர்களுடைய முறை வந்தது. பெண்கள் ஆழ்கிணறு வேண்டுமென்று கெஞ்சினர். ஆனால் ஊர்ப்பெரியவர்கள் கூடி மசூதி ஒன்று கட்டித் தரும்படி கேட்டார்கள். அவ்வளவு பணவசதி இந்தக் கிராமத்து கக ஒதுக்கப்படவில்லை. ‘நீ மசூதியை கட்டித்தா, மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்’ என்று ஊர் மக்கள் சார்பாக நூர் அடித்துச் சொல்லிவிட்டார். வாழ்க்கையில் அவர் செய்த மிகச் சிறந்த பிழை இதுதான்.

அந்த ஊழியர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இவர்கள் சொல்வதை ஏற்பார்கள் என்று நினைத்தார். அவர்கள் என்றால் பக்கத்து கிராமத்துக்கு போய்விட்டார்கள். அங்கே தூர்ந்து கிடந்த கிணற்றை பழுதுபார்த்து இன்னும் ஆழமாக்கினார்கள். வருடம் முழுவதும் நீர் சுரக்கிறது. தினம் தினம் எட்டு மைல் தூரம் அவள் தண்­ருக்காக அங்கேதான் போகிறாள்.

சூரியன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான். மைமுன் தனக்குத் தெரிந்த ஒரு குறுக்குப் பாதையில் இறங்கினார்கள். அங்கே பார்த்த இடமெல்லாம் ச்சாட் பயிரிட்டிருந்தார்கள். வேப்பம் செடிகள் போல அவை கூர்மையாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருந்தன. ஆடுகள் மேயாமலிருக்க முள்வேலி போட்டிருந்தார்கள். ஆடுகள் மேய்ந்தால் அவைவேறு போதையில் துள்ளித் திரிந்து கலகம் விளைவிக்கும்.

வழியிலே ஒட்டகம் ஒன்று முன்னம் கால்கள் இரண்டையும் மடித்து, தொழுகையில் இருப்பதுபோல படுத்திருந்தது உணவும், உடையும், உறைவிடமும் தருவது. அதனுடைய கழுத்து ஆடாமல் அசையாமல் மிதந்துகொண்டு நின்றது. அண்ணாந்து பார்த்தாள். நதி நகர்வதுபோல கண்ணுக்குத் தெரியாமல் ஒரு உருண்டை அதனுடைய கழுத்தில் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பெண் ஒட்டகம். இடது செவியின் நுனி வெட்டப்பட்டு இருந்தது. அதற்கு முன் நின்று மரியாதை செய்ய வேண்டும் போல தோன்றியது. அப்படியே நின்று செய்தாள்.

அந்த மரத்தை கடக்கும்போது அவளுடைய இதயம் கொஞ்சம் வேகமாக அடித்துக்கொள்ளும். அது ஒரு குர்ராமரம். பெரிய நிழல் தரும் மரம். ஒட்டகத்தின் தடித்த உதடுகளக்கு எட்டாத உயரத்தில் அது படர்ந்திருந்தது. கனகாலமாக இந்த இடத்தில் ஒரு தாயின் எலும்புக் கூடும், ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் கிடந்தன. தாயின் எலும்புக்கூட்டை இப்பொழுதெல்லாம் காணவில்லை. பிள்ளையின் எலும்புக்கூடு மாத்திரம் எஞ்சிக் கிடந்தது.

இந்த எலும்புக் கூடுகளின் கதை ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. நாலு வருடத்திற்கு முன்பு மழை இல்லை; பயங்கரமான வறட்சி. தண்­ர் நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. இந்தத் தாயும் கைக்குழந்தையும் குடிக்கத் தண்­ர் தேடி அலைந்தார்கள். பத்து மைலுக்கப்பால் ஒரு ஆழ் கிணறு இருந்தது. அதிலே தண்­ர் கிடைக்கலாம் என்று அவ்வளவு தூரம் நடந்து வந்தார்கள். அங்கே வந்து பார்த்தால் அதிலேயும் தண்­ர் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வந்த வழியே திரும்பினார்கள். மேலிட்டு இந்த குர்ரா மரத்தின் நிழலில் தங்கினார்கள்.

யார் முதலில் இறந்தது என்று தெரியவில்லை. முதலில் குழந்தை போயிருக்கலாம். அழுது அழுது தாய் பிறகு உயிரைவிட்டிருப்பாள். ஒருவேளை தாய் முதலில் இறந்து பிறகு பிள்ளை செத்திருக்கலாம். அந்தக் குழந்தை தாயைப் பிடித்து இழுத்து, இழுத்து அழுது களைத்துப்போய் இறந்திருக்கலாம்.

மைமுன் கிட்டவந்து அந்தக் குழந்தையின் எலும்புக் கூட்டைப் பார்த்தாள். பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்று தெரியவில்லை. உள்ளங்கையில் அடங்கும் அந்தச் சிறிய மண்டை ஓட்டில் ஒரு சிறிய துணி ஒட்டிக்கொண்டு இருந்தது. அது பூப்போட்ட துணிபோல தெரிந்தது. அது பெண்குழந்தையாக இருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டாள்.

இப்ப சில நாட்களாக அவளுக்கு தனிமை தேவைப்பட்டது. அதுதான் அமீனாவை முன்னாலே போகவிட்டு இவள் பின்னாலே வந்துகொண்டிருந்தாள். தனிமையில் சிந்திப்பதற்கு அவளிடம் நிறைய சங்கதிகள் இருந்தன. இந்த யோசனையில் பெரும் இடத்தை அலிசாலா பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகம் அவளுக்கு அடிக்கடி தோன்றியது. பதினைந்து வயதுப் பிராயத்தவளுக்கு இது புதுமையாக இருந்தது.

மைமுன் என்றால் வசப்படுத்தியவள் என்று அர்த்தம். இப்படி அவள் தன் எதிர்காலத்தை வசப்படுத்தும் எண்ணத்தில் தனிமையில் நடந்து கொண்டிருந்தாள். அதேநேரத்தில் மைமுனின் தகப்பனார் அவளுடைய த€லைவிதியை நிர்ணயிக்கும் ஒரு காரியத்தில் இறங்கியிருநதார். அது அவளுக்கு தெரியாது.

பளபளவென்று மின்னும் நாள் அது. தூரத்திலே ஒரு ஒட்டகக் கூட்டம். அவன் வந்து கொண்டிருந்தான். வெள்ளையாக ஈமாத் துணியில் ஒரு தலைப்பா. கையிலே ஒட்டகக்குச்சி. ஒட்டகக் கயிற்றை முன் எடுத்து தோள்பட்டையில் மாட்டிக் கொண்டிருந்தான். ஒட்டகத்துக்கு முன்பு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஒட்டகத்தின் நீண்ட கழுத்தும் அந்தத் தலையும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது.

சோமாலியாவில் மனிதர்களைப் பார்க்கிலும் ஒட்டக எண்ணிக்கை அதிகம். பொதி சுமப்பதற்குதான் ஒட்டகம். அதன் பின்னே செல்வார்கள்; அல்லது முன்னே போவார்கள். பயணம் செய்வது என்பது கிடையாது. அலிசாலாவும் அப்படித்தான் அதன் முன்னே மிக்க மரியாதையுடன் நடந்து வந்துகொண்டிருந்தான்.

அவனுடைய முகம் தெரிந்தது. தயக்கமான கண்கள்; இன்னும் தயக்கமான தாடியும், மீசையும் முளைப்பதா, வேண்டாமா என்ற தயக்கம். எதையோ சொல்ல விரும்புவது போன்ற முகம். ஒல்லியாக இருந்தாள். அவன் அருகில் வந்ததும் இவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இருதயம் ஓர் அலகு வேகம் கூடியது.

அது விவகாரமான ஒட்டகம். அவர்கள் சம்பாஷனையில் குறுக்கிடாமல் நின்றது. ஒரு நூறு வருடங்கள் அப்படியே நிற்கப்போவது போன்ற ஆயத்தங்களுடன் கால்களை அகட்டி வைத்து கழுத்தை உயர்த்தி நின்றது.

‘அஸ்ஸலாம் அலைக்கும்.’

‘அலைக்கும் ஸலாம்.’

‘சமாதானம் உண்டாகட்டும்’

‘சமாதானம் உண்டாகட்டும்.’

‘நான் உன்னைப் பார்க்கிறேன்’

‘நான் உன்னைப் பார்க்கிறேன்’

‘புதினங்கள் உண்டா?’

‘புதினங்கள் அநேகம்’

‘இன்று தாமதமாக வந்துவிட்டாயே!’

‘அதற்கு நான் என்ன செய்ய; சூரியன் தாமதமாக அல்லவோ இன்று எழுந்திருந்தான், கவனிக்கவில்லையா?’

‘உண்மைதான், சூரியனும் சோம்பலாகிக்கொண்டு வருகிறான் உன்னைப்போல’

நான் ஒன்றும் சோம்பலில்லை பார், எவ்வளவு தூரம் போய் வருகிறேன். ஒரு ஹான் தண்­ர் சுமக்கிறேன். உன்னைப்போல ஒட்டகத்துக்கு முன்னே கைவீசிக்கொண்டு நடக்கிறேனா?’

முகம் பார்த்து பதில் சொன்னாள். வலது கையை இடது இடுப்பில் வைத்து ஒரு காலில் சரிந்து நின்றாள். மற்றக்கை மொட்டாக்கு துணியை நளினமாக பிடித்தபடி இருந்தது.

அப்பொழுது அவள் மந்தையில் எதையோ பார்த்து அருண்டாள். அவள் கண்களில் ஒரு புதுவிதமான இரக்கம் தெரிந்தது.

‘மறுபடியும் அந்த ஒட்டகக் குட்டியை கட்டிப்போட்டு விட்டாயே!’

அந்த மந்தையிலே ஒரு சின்ன ஒட்டகம். அடிக்கடி மந்தையை விட்டு ஓடிவிடும். அதன் முன்னங்கால்களை இணைத்து இடைவெளி விட்டு ஒரு கட்டு. அந்தக்குட்டி கால்களை தடக் தடக் என்று சிரமத்துடன் எடுத்து வைத்து மந்தையுடன் சேர்ந்து கொண்டிருந்தது.

‘நான் என்ன செய்ய. அது பொல்லாத குட்டி எப்பவும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு எனக்கு நேரம் போதாது. இன்னொரு ஆள் தேவை நீ வந்துவிடு.’

‘அதைப் பிறகு பார்க்கலாம். இப்ப அவிழ்த்து விடு.’

அவள் குரல் சிணுங்கலாகவும் இருந்தது; அதிகாரமாகவும் இருந்தது. அலிசாலாவின் மனது இளகிவிட்டது. உனக்காக செய்கிறேன் என்று சைகையால் காட்டியபடி அதன் கால்களை அவிழ்த்து விட்டான். அந்தக் குட்டி கால்களை உதறி துள்ளி தன் சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டது.

அவள் அறியாச் சிறுமியாய் இருந்த காலத்தில் ஒட்டகக் கூட்டத்தோடு திரிவாள். பொதி ஏற்றும்போது அவர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு பொதிக்கும் ஒவ்வொரு பாட்டு. ஒட்டகத்தை ஏமாற்றும் பாட்டு சிறுமிகளின் பாட்டு.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
இந்த விறகுகட்டை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு நிறைய புல்லுக்கட்டு தருவேன்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் படுக்கைகளை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு முதுக தேய்த்து விடுவேன்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்த வருவாயா
உனக்கு கட்டி முத்தம் கொடுப்பேன்.

இந்தக் காட்சி வரிகள் அவளாகவே சேர்த்துக் கொண்டது. அடிக்கடி அவள் இந்தப் பாடலை பாடுவாள். தனிமையில் இருக்கம்போது கடைசி வரிகளை உரத்து சொல்லுவாள். அது அவள் காதுகளுக்கு கேட்க இனிமையாக இருக்கும்.

அலிசாலா வேறு பிரிவைச் சேர்ந்தவன். அவன் வந்து பெண் கேட்டால் அவள் தகப்பனார் நிச்சயமாக சம்மதிப்பார். வேறு பிரிவில் பெண் எடுப்பது அவர்கள் வழக்கம். அந்த இனம் பகமையை விடுத்து சிநேகமாகிவிடும் என்ற நம்பிக்கை. இவனுடைய பெயர் வீட்டிலே அடிக்கடி பேசப்படுகிறது. இவர்கள் ‘பறவை தின்னிகள்’ என்ற ஒரு குறை மாத்திரம் இருந்தது. இருபது ஒட்டகங்கள் சீர்கொண்டு அலிசாலா வருவதில் சிரமம் இருக்காது என்று எதிர்பார்த்தார்கள்.

கிணற்றடியில் ஒரே பெண்கள் கூட்டம். பச்சைப் பசேல் என்று மரங்கள். பார்ப்பதற்கு கவனப் பூங்கா போன்று குளுமையாக இருந்தது. கிணற்று கட்டிலே அமீனா சாய்ந்தபடி காணப்பட்டாள். தொடையிலே ஒரு கை தொட்டுக்கொண்டு இருந்தது. மற்றக்காலை ஒய்யாரமாக விசிறியபடி இருந்தாள்.

மைமுன் முக்காட்டை எடுத்து விட்டாள். அவளுடைய சிகை வசீகரத் தண்மையுடன் இருந்தது. கைகளை விட்டு அவற்றைக் கலைத்து காற்றை வெளியே விட்டாள். தண்­ரை முகத்தில் அடித்து ஆசை தீர பருகிக்கொண்டாள். அவள் கண்கள் பிரகாசமாகின.

இரு சிநேகிதிகளும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ஒன்றுமே பேசவில்லை. தண்­ர் குடத்தை எடுத்து முதுகிலே மாட்டுவதற்கு மட்டும் அமீனா உதவி செய்தாள். இருவரும் புறப்பட்டார்கள். குடத்திலிருந்து தண்­ர் கொஞ்சமும் கசிவது போல மைமுனுக்கு பட்டது. அடுத்த நாள் மறக்காமல் பானைக்கு அலஸ” மரத்து பிசின் தடவவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

வறுமையில் வாடிய இரண்டு தங்க நரிகள் நிலத்தை மணந்தபடி அவர்களைத் தாண்டி ஓடின. ஒரு மஞ்சள் குருவி ‘உய்க், உய்க்’ என்று சத்தம் செய்தது. மைமுனுக்கு திடீரென்று சிறுநீர் கழிப்பதற்கு பேரவா பிறந்தது. நெளிந்தபடி அமீனாவை ஒரு அரைக்கண் பார்வை பார்த்தாள். அவளும் மைமுனின் உடல் மொழியை புரிந்துகொண்டு தலையை அசைத்தாள்.

தண்­ர் பானையை மெதுவாக இறக்கி வைத்தார்கள். இரண்டு கற்களை எடுத்து உரசி சத்தம் செய்தபடியே பற்றை மறைவில் ஒதுங்கினார்கள். மைமுன் காலை அகட்டி குந்திய சிறிது நேரத்திலே ஒருவித உற்சாகத்துடன் நீர் பிரிந்தது. பாம்பு சீறுவது போன்ற சத்தத்துடன் அது நிலத்தை அடைந்தது. மைமுனுக்கு பெரும் சுமை ஒன்று இறங்கிய சுகம். அந்த நேரத்தில் அலிசாலாவின் நிச்சயமற்ற கண்கள் நினைவுக்கு வந்தன அவனைத் தீவிரமாக காதலிக்கலாமா என்ற எண்ணம் அவளுக்கு மறுபடியும் தோன்றி மறைந்தது.

‘உன்னுடைய ஆள் அங்கே சுற்றிக்கொண்டு இருந்தானே’, இப்படிச் சொல்லி அமீனா அவர்களுக்கிடையே இறுகிப் போன காற்றை மெல்ல உடைத்தாள். பிறகு சிநேகிதிகள் இருவரும் கலகலவென்று பேசத்தொடங்கினார்கள். அவர்கள் அந்நியோன்யம் தானாகவே பற்றிக்கொண்டது. அமீனா அவளுடைய வழக்கமான புலம்பலைத் தொடங்கினாள்.

‘இவனை நம்பி இராதே. இவன் உனக்கு மஹர் கொண்டு வரப்போவதில்லை. வேறு ஆளைப் பார். இவன் பெண்கேட்டு வரும்போது உனக்கு நாற்பது வயது தாண்டி விடும். அதற்குப் பிறகு உனக்கு எப்படி பிள்ளை பிறக்கப் போகிறது.’

‘பிள்ளை கிடக்கட்டும். ஒரு நாளைப்போல் ஒட்டகம் செய்யாத வேலையெல்லாம் செய்கிறேன். என்னைப்போய் சோம்பல் என்று சொல்கிறானே.

மைமுனுடைய தாயார் இருபது வருடங்களில் பதினொரு பிள்ளைகளை பெற்றவள். ஒட்டகங்களில் கூட பத்து பத்து குட்டிகள் ஈன்றதும் அவற்றின் இடது காது நுனியை அடையாளமாக வெட்டி விடுவார்கள். அந்த ஒட்டகம் அதற்குப் பிறகு இளைப்பாற அனுமதிக்கப்படும். அந்தச் சலுகை கூட பெண்களுக்கு இல்லை. அவர்கள் சாகுமட்டும் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.

மைமுன் உதடுகளை விரிக்காமல் கறுப்பு புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

‘அமீனா, என் இனிய சிநேகிதியே! நான் என்ன செய்யப்போகிறேன் என்று உனக்கத் தெரியுமா? என்னை அவ்வளவு சுலபத்தில் அடிமைப்படுத்த முடியாது’, இப்படிச் சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து அமீனாவின் காதுகளில் ஏதோ ரகஸ்யம் சொன்னாள். இருவரும் ஒரு சதியாலோசனையை முடித்த திருப்தியோடு விழுந்து விழுந்து சிரித்தார்கள். கண்ணில் நீர் பொங்க சிரித்தார்கள். தண்­ர் குடம் குலுங்கச் சிரித்தார்கள். வீடு வரும்வரை இப்படிச் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

வீட்டிலே இன்னும் நிறைய வேலைகள். தண்­ர் குடத்தை இறக்கி வைத்தாள். அவளுடைய தாயார் வழக்கம் போல சந்தைக்கு போய்விட்டாள். காட்டிலே போய் விறகு பொறுக்கி இரவுச் சமையல் செய்யவேண்டும். பிறகு மீதமிருக்கும் ஒட்டகப் பாலை சந்தைக்கு எடுத்துப்போகவேண்டும்.

இரவுச் சமையலை விரைவாக முடித்தாள். பாலிலே உதிர்ந்த சோளத்தைப் போட்டு காய்ச்சினாள். நம்பிக்கை ஊட்டும் நறுமணத்துடன் அது பொங்கியது.

சுரைக்குடுவையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். ஒட்டகம் அவளுக்காக பொறுமையுடன் நின்று கொண்டிருந்தது. இடது காலில் நின்று வலது காலை மடித்து முழங்காலில் ஊன்றிக்கொண்டாள். உறுதியான வடிவம் கொண்ட வலது தொடைக்கும் மெலிந்த வயிற்றுக்கும் இடையில் குடுவையை வைத்தாள். அது அங்கே கச்சிதமாகப் பொருந்தி நின்றது. பாலைக் கறக்கத் தொடங்கினாள். சரி கணக்காக அது குடுவையை போய் ஒரு வித கதகதப்புடன் நிறைத்தது. முழங்கையை நக்கியபடி குடுவையை எடுத்துக் கொண்டு சந்தைக்கு விரைந்தாள்.

ஊரடங்கி நிசப்தமானபோது அவள் படுக்கச் சென்றாள். அடுத்தநாள் அதிகாலையை நினைக்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது. இந்த ஹைனாவும் அவளுடைய அம்மாவும் அவளுக்கு விரோதம் செய்கிறார்கள். விடியுமுன்பாகவே அவளை எழுப்பிவிடுவார்கள். ஆசை தீர நித்திரை கொள்ளும் சுகம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியாது. அந்த அதிகாலை நித்திரைக்காக அவள் எதுவும் செய்யத் தயாராயிருந்தாள். இந்த சிந்தனைகளுக்கிடையில் அவள் இமைகள் ஒன்றையொன்று தீண்டின.

அடுத்த நாள் அவளுடைய விடியற்கால அவலங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

ஹைனாவின் தொந்திரவு இல்லை. அம்மாவும் மௌனமாகி விட்டாள். தூரத்தில் மேய்ப்பர்களின் மேய்ச்சல் ஓசைகள் மாத்திரம் கேட்டன. இவ்வளவு அழகான விடியலை அவள் கண்டதில்லை.

பக்கத்து ஊரில் இருந்து பெருங்கூட்டம் ஒன்று வந்திருந்தது. பலபலவென்று விடியும்போதே வந்துவிட்டது. நூரும் ஊர்ப் பெரியவர்களும் கிராமத்து எல்லையிலே நின்று அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் வழக்கப்படி வேரோடு பிடுங்கிய சோளப் பயிர்களை கைகளிலே தூக்கி அசைத்து அசைத்து அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஒரு சைன்யம் திரண்டு வருவதுபோல அது இருந்தது.

மைமுனைப் பெண்கேட்டு வந்திருந்தது. அந்தக் கூட்டம் ஒருநாள் பயணத் தொலைவில் இருந்து வந்திருந்தார்கள். அந்த ஊர் நபதூன் அவர். ஐம்பது வயதுக்காரர். மூன்றாம் தாரமான மைமுனை மணக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். ஐம்பது ஒட்டகங்களை சீர் கொடுப்பதாக பேசிக் கொண்டார்கள். ஊர் முழுக்க இந்த அதிசயத்தை பார்க்க திரண்டு வந்திருந்தது.

மைமுனின் தாயார் தட்டையாக மறுத்துவிட்டாள். இவ்வளவு தூரத்தில் மகளைக் கட்டிக்கொடுத்தால் பின்பு அவளைப் பார்ப்பது என்பது நடக்காத காரியம். அலிசாலா பெண்கேட்டு வருவான் என்று எதிர்பார்த்தாள். மைமுன் அவனிலே எத்தனை ஆசை வைத்திருந்தாள் என்பது அவளுக்கு தெரியும்.

நூர் அப்போது ச்சாட் போதையில் இல்லை. இறையச்சம் உடையவர். ஆதலால் மறு வாசிப்பில் ஐம்பது ஒட்டகங்களுக்காக மகளை விற்பதா என்று தயங்கினார். தாயும் தகப்பனுமாக மகளிடம் வந்தார்கள். சிக்கல் இல்லாத சொற்களை தெரிவு செய்து அவளிடம் யோசனை கேட்டார்கள். எப்பவும் மைமுனிடம் அதிசயிக்க வைக்கும் சில நிமிடங்கள் கைவசம் இருக்கும். அவள் தயங்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டாள். பிடிவாதமாகக் கூட இருந்தாள். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

நிக்காஸ் முடிந்த கையோடு மைமுன் தன் கணவன் வீட்டுக்க புறப்பாட்டாள். அவர்கள் கொண்டு வந்திருந்த ஒட்டகங்களும், கழுதைகளும் பயணத்திற்கு தயாராக இருந்தன.

அந்தச் சமயம் பார்த்து அவளுடைய பிராண சிநேகிதி அமீனா வந்து சேர்ந்தாள். அவள் காதுகளில் மைமுன் ரகஸ்யம் பேசிவிட்டு வீடு வந்து சேரும் வரை சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது. ‘இவள் உண்மையாக அல்லவோ சொல்லியிருக்கிறாள்., பாவி’ என்று அமீனா நினைத்துக் கொண்டாள்.

‘நான் ஒரு ஐம்பது வயதுக் கிழவனை மணக்கப் போகிறேன். அவனுக்கு மூன்றாவது மனைவியாக அவன் ச்சாட் சாப்பிடுபவனாக இருக்கவேண்டும். அந்த மயக்கத்தில் அவன் என்னை அதிகம் அணுகமாட்டான். மிஞ்சிப் போனால் இரண்டு குழந்தைகளுடன் தப்பி விடுவேன்.’ இப்படிச் சொல்லிவிட்டு அவள் ஓவென்று சிரித்தாள். பரிகாசம் என்றுதான் முதலில் அமீனா நினைத்திருந்தாள். அப்படியில்லை. இவள் உண்மையாகத்தான் கூறியிருக்கிறாள்.

அமீனாவுக்கு சொல்லாத இன்னொரு காரணமும் இருந்தது. அதுவும் சீக்கிரத்திலேயே அவளுக்கு தெரியவரும்.

புறப்படும் சமயம். திடீரென்று மைமுன் அழத் தொடங்கினாள். காரணம் தெரியவில்லை. ‘ஹுயா, ‘ஹுயா’ என்று அழைத்து தாயாரைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

‘அடி, பாவிப்பெண்ணே! எதற்காக இப்படி அழுகிறாய். சொல்லித் தொலை. உன் விருப்பப்படித்தானே ஒது முழு நாள் பிரயாண தூரத்தில் இருக்கும் இந்தச் சின்ன ஊரில் உன்னக் கட்டிக்கொடுக்கச் சம்மதித்தோம். நீ இங்கே ராசாத்தி மாதிரி இருந்திருக்கலாமே! பாதகத்தி, இப்ப போய் அழுகிறாயே!’

மைமுனால் அப்பவும் அழுகையை அடக்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்­ர் வழிந்தது. விம்மியபடியே சொன்னாள்.

‘உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா, ஹூயா’.

‘கூறுகெட்டவளே, சொல்லடி, இப்பிடி குயை கெடுத்துவிட்டாயே!’

‘ஹுயா, அந்த ஊரில் தண்­ர் கொட்டி கொட்டி வருமாம். வருடம் முழுக்க வற்றாதாம். தினம் தினம் பதினாறு மைல் தூரம் நடக்கத் தேவையில்லை.’

இதைச் சொல்லிவிட்டு மைமுன் தன் தாயின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். பார்த்துவிட்டு இன்னொருமுறை அழத்தொடங்கினாள்.

(இந்தக் காட்சி இங்கே முடிந்துவிட்டது)

* * *

மைமுனின் தகப்பனாருக்கு முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் தேற்றிக்கொண்டார். ஒரு நாள் பயணம்தானே, மகளை அடிக்கடி பார்க்கலம் என்று நினைத்தார். ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை. அதுதான் அவளைப் பார்ப்பது கடைசித் தடவை என்று.

விரைவில் அவரது மனைவி இறந்துபோவாள். ச்சாட் போதையில் உடல்நிலை கெட்டு மனம் குலைந்து எஞ்சியிருக்கம் நாட்களை அவர் மற்றவர்கள் தயவில் கழிக்க நேரிடும். அந்த நேரங்களில் எல்லாம் அவர் மைமுனின் சிந்தனையாகவே இருப்பார்.

ஒருவரும் பார்க்கவில்லை என்ற அந்தரங்கமான சமயத்தில் அவள் அகாஸ’யா மரத்தின் கீழ் கல்லிலே குந்தியிருந்தது ஞாபகத்துக்கு வரும். ஓர் உடைந்துபோன கண்ணாடித் துண்டில் முகத்தைப் பார்த்து தலையை வாரியதையும், அவளாகவே இட்டுக்கட்டிய குழந்தைகள் பாட்டை அவள் குரல் மெல்லியதாக முணுமுணுத்ததும் நினைவுக்கு வரும்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்து வருவாயா
உனககு கட்டி முத்தம் கொடுப்பேன்.

அலிசாலாவில் அவள் எவ்வளவு காதல் வைத்திருந்திருப்பாள். அவ்வளவையும் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டாளே. அதிகாலையில் தண்­ருக்கு போய் வருவதை அவள் எவ்வளவு தூரம் வெறுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை ஐ.நா. சிறகம் கேட்டபோது கிணறு வேண்டும் என்று கூறியிருந்தால் மைமுன் அலிசாலாவை மணமுடித்து அவருடைய ஊரிலேயே தங்கி இருந்திருக்கக் கூடும் வெகுகாலத்திற்கு பிறகு அவர் மனதில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் திருப்பி திருப்பி ஓடும்.

ஆனால் அப்போது அவருக்கு அது தெரியவில்லை.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *