கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 5,388 
 
 

வானிலை இதமாக இருந்தது. சூரியன் இன்னும் முழுதாக வரவில்லை. ஆனால் குளிராகவும் இல்லை.

குளிரும்போது வெளியில் வந்தால் எனக்கு மூச்சுத் திணறல் வந்து விடும். அதனால் விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டாலும் ஏழு மணி வரை வெளியில் வர மாட்டேன். குளிர் குறைந்த பின் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கேட்டைத் தாண்டி இந்திரா பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பிப்பேன்.

சிறு வயதில் பார்க்கில் அதிக நேரம் விளையாடினால் என் தந்தை கோபிப்பார். ஆனால் இப்போதோ, “எப்போ பாரத்தாலும் வீட்டிலேயே உட்கார்ந்திருக்காதீங்க! காலை நேரத்தில் கட்டாயம் நான்கு கிலோ மீட்டர் நடங்க. மத்தியானமும் இரவும் கூட சாப்பிட்ட பின் உடனே படுக்காமல் சிறிது நேரம் நடந்தால் நல்லது” என்று டாக்டர்கள் கூறி வருவதால் காலையும் இரவும் நடைப் பயிற்சியை பழக்கிக் கொண்டுள்ளேன்.

இந்திரா பார்க்கில் சில நாட்களுக்குள்ளாகவே எங்களுக்கு ஒரு குரூப் உருவானது. அனைவரும் பதவி ஓய்வு பெற்றவர்களே! அவர்கள் எல்லோரையும் சந்திப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டே நடப்போம். காலை வேளையில் இந்திரா பார்க் மிகவும் கலகலப்பாக இருக்கும். ஏதோ திருமணத்திற்கோ கோவில் திருவிழாவிற்கோ வந்தாற்போல் ஆயிரக்கணக்கான பேர் சந்தடியாக நடந்து கொண்டிருப்பார்கள்.

இந்திரா பார்க் காலை நேரத்தில் ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட் போலிருக்கும். பழங்கள், காய்கறிகள், பல வித ஜூஸ்கள், உடைகள் போன்றவை விற்கும் அனைத்துக் கடைகளும் அங்கு தென்படும். ஆனால் காலை பத்து மணிக்கெல்லாம் மனிதர்களின்றி வெறிச்சோடிப் போய்விடும்.

எங்கள் குழுவில் என்னோடு சேர்ந்து ரெட்டி, ராஜாராவு, பத்மநாபம், சேஷகிரி, ராம்மூர்த்தி மெம்பர்களாக உள்ளார்கள். ஓரொரு நாள் எங்கள் குரூப்பில் இருக்கும் நண்பர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் கூட வந்து எங்களை சந்திப்பார்கள்.

நாங்கள் இறுதியாக பார்க் நடுவில் இருக்கும் விநாயகர் கோவிலில் வணங்கி விட்டு நடையை முடித்துக் கொண்டு வாசல் அருகில் உள்ள படி மீதோ பென்ச் மீதோ உட்கார்ந்து உலக விஷயங்களை பேசி செய்திகளை பரிமாறிக் கொள்வோம்.

எங்கள் பேச்சில் அதிகமாக அரசியலும் நாங்கள் செய்த வேலை தொடர்பான விஷயங்களும் இருக்கும். எப்போதாவது ஆரோக்கியம் பற்றி பேச்சு வந்தால் அனைவர் மனமும் பாரமாகி விடும்.

எங்கள் குழுவில் எழுபதைத் தாண்டிய இருவர் உள்ளனர். ஆரோக்கியம் பற்றி பேச்சை எடுத்த உடனே அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே விழும். அவர்கள் கொஞ்சம் அசௌகர்யமாக உணர்வார்கள். அந்த வயதில் எப்போது என்ன நடக்குமோ சொல்ல முடியாது. அந்த பயம் எங்கள் அனைவரிலும் உள்ளூடாக இருந்து கொண்டே இருக்கும்.

ஓரொருநாள் நடையை முடித்து கிளம்பிச் செல்கையில் எங்கள் ஆறேழு பேரில் மறு நாள் யாராவது மிஸ் ஆவார்களோ? மறு நாள் பேப்பரில் மறைவு காலத்தில் போட்டோ வருமோ? அல்லது அடுத்த வாரத்தில் பத்தாவது நாள் கர்மா பற்றி கார்டு அவர்களின் மரணச் செய்தியை சுமந்து வருமோ, என்ற கண்ணில் தென்படாத சந்தேகத்தின் முளை எங்கள் மனதின் இடுக்குகளில் பிரதி தினமும் உயிர் பெற்றெழுந்து கொண்டே இருக்கும்.

எங்களிடையே குடும்ப நட்பு இல்லாததால் எங்கள் பரிச்சயம் நடைப் பயிற்சி வரை மட்டுமே இருந்தது. யார் வாழ்க்கை பற்றியும் யாருக்கும் தெரியாதாகையால் ஒவ்வொரு முறை மரணச் செய்தி கூட தெரிய வராது.

ஒரு நாள் ரமணா என்ற நண்பர் எங்கள் குரூப்பில் வந்து சேர்ந்தார். ஒரு தேசிய வங்கியில் உதவி பொது மேலாளராகப் பணி புரிந்து அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

ரமணாவின் வரவால் எங்கள் குழுவின் வடிவமே மாறிப் போனது. ரமணா பேச்சுத் திறன் மிகுந்தவர். எந்த விஷயமானாலும் அட்டகாசாமாகப் பேசக் கூடியவர். அதுவரை மேலோட்டமாக மெல்லியதாக இருந்த எங்கள் நட்பு அவருடைய வரவால் அடர்த்தியாகி இறுக்கமான நட்பாக மாறியது.

அவராகவே சொன்னால் தவிர அவர் ரிடையரானவர் என்பது தெரியாது. ஸ்லிம்மாக லேட்டஸ்ட் மாடல் ரீபாக் ஷூ, கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி, உடல் மீதிருந்து மிதந்து வரும் சுகந்தமான சென்ட் வாசனையோடு குஷியாக இருப்பார். தினமும் அவருடைய இன்னோவா க்ளிஸ்டா காரை ஓட்டிக்கொண்டு பார்க்குக்கு வருவார்.

நடை முடிந்தவுடன் ரமணா எங்களை அவருடைய காரில் ஏற்றிக் கொண்டு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காபி டிபன் வாங்கித் தருவார்.

பரிச்சயமான முதல் நாள் மாலையே ரமணா, பழக் கூடையோடு எங்கள் வீட்டிற்கு வந்தார். என் மனைவியை அக்கா என்றழைத்து, உறவு கலந்து நெருங்கிப் பழகினார். என் மருமகளோடு நகைச்சுவையோடு உரையாடினர். ஆறு மாதம் நிரம்பிய என் பேரனைத் தூக்கிக் கொஞ்சி அவன் கையில் ஐநூறு ரூபாய் நோட்டைத் திணித்தார்.

“வெளியில் போகலாம் வா!” என்று என்னை பலவந்தமாக காரில் ஏற்றி கிறிஸ்டல் பார் முன்னால் நிறுத்தினார். ரமணாவைப் பார்த்ததும், வாயிலில் இருந்த ‘வாலே பார்கிங்’ பையன் முதற்கொண்டு உள்ளே ஸ்டீவார்ட் வரை அன்போடு விஷ் செய்வதைப் பார்த்து வியந்து போனேன்.

நான் சங்கோஜப்படுவதைப் பார்த்து, “பரவாயில்லை, சார்! ரெண்டு பெக் விஸ்கி எடுத்துக் கொள்வது ஆரோக்யத்திற்கு நல்லது. ஹெச்டியெல் கொலஸ்ட்ரால் அதிகமாகும். இதயம் திடப்படும்” என்று வற்புறுத்தி மது ஊற்றிக் கொடுத்தார். இரண்டு பெக் ஆனவுடன் முடித்துக் கொண்டார். அனைவருக்கும் தாராளமாக டிப்ஸ் கொடுத்தார்.

ரமணா காரை விட்டிறங்கியவுடனே தினமும் ‘வாலே பையன்’ ரமணாவின் டிரைவருக்கு போன் செய்து விடுவானாம். அதனால் மது அருந்தி வெளியே வந்தவுடன், காரின் அருகில் நின்றிருந்த டிரைவருக்கு ரமணா எங்கள் வீட்டின் அட்ரெஸ் கூறினார். என்னை வீட்டில் இறக்கி விட்டு ‘குட் நைட்’ கூறிச் சென்று விட்டார்.

பல நாட்களுக்குப் பிறகு எனக்கு அன்றைய மாலை மகிழ்ச்சியாக கழிந்தாற்போலிருந்தது. ஹாய்யாக உறங்கினேன். கனவில் ரமணா முகமே தெரிந்தது.

மறுநாள் அனைவரும் சந்தித்துக் கொண்டோம். ரமணாவோடு கழித்த மாலை பற்றி பேசிக் கொண்டோம். ரமணா எங்கள் வாக்கர்ஸ் குரூப்பில் அனைவரின் வீடுகளுக்கும் சென்றார். என்னையும் உடன் வரச் சொன்னதால் நானும் சென்றேன். யார் வீட்டுக்குப் போனாலும் அங்கு நகைச்சுவையால் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துவது ரமணாவின் வழக்கமாக இருந்தது.

அவ்வாறு ஒரு மாத காலம் ரமணா எங்கள் அனைவரின் வீடுகளுக்கும் வந்தார். எங்கள் அனைவரையும் அழைத்து அவருடைய பண்ணை வீட்டில் வன போஜனம் ஏற்பாடு செய்தார்.

டிசம்பர் மாதத்தில் அவருடைய காரிலேயே கோவா ட்ரிப் ப்ளான் செய்தார். நாங்கள் செல்வதற்குத் தயாராக இருந்தாலும் அத்தனை செலவையும் அவர் மீதே போடுவது நன்றாக இருக்காது என்பதால் ஆளுக்கு கொஞ்சம் கன்ட்ரிபியூட் செய்வதாகச் சொன்னோம்.

“பரவாயில்லை, சார்! பண விஷயம் எல்லாம் கோவாவிலிருந்து வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி அனைத்து செலவையும் அவரே ஏற்றார். கோவாவில் எங்களுக்காக ஒரு பெரிய பங்களா ரிசர்வ் செய்திருந்தார். டிசம்பர் மாதத்தில் கோவாவில் பண்டிகை போலிருந்தது சூழல். இளம் ஜோடிகளின் விளையாட்டுகளால், ஜோடிக் கிளிகளின் வனம் போல் காட்சியளித்தது கோவா.

நாங்களெல்லாம் சங்கோஜப்பட்டபோது ரமணாதான், “சார்! நாம் வேலையிலிருந்து மட்டுமே ரிடையர் ஆகியிருக்கோம். வாழ்க்கையிலிருந்து அல்ல. அனைவரும் ‘சேஷ ஜீவிதம்’ என்றும் ஓய்வு வாழ்க்கை என்றும் நமக்கு விடை கொடுத்து விடுவார்கள். ஆனால் உண்மையில் நம்முடையது சேஷ ஜீவிதம் அல்ல. பாரங்களோ பொறுப்புகளோ இல்லாத சின்ன குழந்தை போன்ற ‘விசேஷ ஜிவிதம்’ நம்முடையது. நம் முன்னால் இன்னும் நிறைய வாழ்க்கை பாக்கி உள்ளது. அதனால் நாம் மரணமடையும் வரை ஜீவிக்க வேண்டும். ஹாய்யாக வாழ வேண்டும்!” என்று எங்களை உற்சாகப்படுத்தினார்.

அதோடு அங்கிருந்த இளமையான சூழலைப் பார்த்த போது எங்களுக்கும் உற்சாகம் பீறிட்டது. நாங்கள் ரிடையரான முதியவர்கள் என்ற விஷயத்தையே மறந்து போனேம். ஒரே கூச்சலும் கும்மாளமுமாக பீச்சில் பொழுதை மகிழ்ச்சியாகக் கழித்தோம்.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஹைதராபாதுக்கு திரும்பினோம். எனக்கு இந்த கோவா ட்ரிப் மிகவும் பிடித்திருந்தது. உடலும் மனமும் புத்துணர்வு பெற்று புதுவாழ்வு பெற்றாற்போலிருந்தது. அதற்கு முன்பிருந்தது போல் ஜீவனற்று சாரமற்று இன்றி வாழ்க்கை புது அழகுகளோடு தென்பட்டது.

இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டபின் இந்திரா பார்க்குக்குச் சென்றேன். அன்று ரமணா வரவில்லை. ஒருவேளை சோர்வு அதிகமாக உள்ளதோ என்றெண்ணி போன் செய்தேன்.

போனை எடுத்துப் பேசிய அவர் மகன் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

அனைவரும் சேர்ந்து ரமணா இருந்த மருத்துவமனைக்கு அவசரமாகச் சென்றோம்.

“கோவாவிலிருந்து வந்த அன்று விடியற்காலை திடீரென்று பயங்கரமாக நெஞ்சை வலித்தது. உடனே மருத்துமனைக்கு வந்தோம். இரண்டு ஸ்டண்டுகள் வைத்துள்ளார்கள். இப்போ நல்லா இருக்கேன்” என்றார்.

நாங்களனைவரும் தாங்க முடியாத துயரத்தோடு வெளியில் வந்தோம். நான் தினமும் மருத்துவமனைக்குச் சென்று ரமணாவைப் பார்த்து வந்தேன். கொஞ்சம் உடல் தேறியவுடன் ரமணாவிடம் மீண்டும் பழைய கலகலப்பு ஆரம்பமானது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரமணா இந்திரா பார்க்கு வந்தார். நடை முடிந்தபின் பார்க்கின் வெளியே தேநீர் அருந்தினோம்.

“எல்லாம் ஏற்பாடு செய்துட்டேன், பாஸ்!” என்றார் ரமணா சிரித்துக்கொண்டே! எங்களுக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் ஏதாவது சுற்றுலாவுக்கு திட்டம் போடுகிறாரோ என்னவோ என்று நினைத்தோம்.

“இந்த முறை ட்ரிப் எங்கே?” என்று கேட்டேன் ஆர்வத்தோடு.

ரமணா மென்மையாக புன்னகைத்தார். “பாஸ்! இந்த முறை டூர் என்று ஏதாவது இருந்தால் இனி அது மேலேதான்! அதனால் எல்லாம் எற்பாடு செய்துவிட்டேன். எல்லா பாக்கியையும் தீர்த்து விட்டேன். இந்த வாழ்க்கை அளித்த அழகான இனிய நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி மனப் பெட்டகத்தில் பாதுகாத்துக் கொண்டு மீதுயுள்ளவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டேன். உள்ளன்போடு என்னை விரும்பியவர்களை எல்லாம் சந்தித்து என் வாழ்க்கையை இத்தனை அழகாக மாற்றியதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன். என்னால் கஷ்டத்திற்கு உள்ளானவர்களையும் தெரிந்தோ தெரியாமலோ வேலை விஷயமாக வேறுவழியின்றி என்னால் நஷ்டம் அடைந்தவர்கள் அனைவரையும் சந்தித்து சாரி சொல்லிவிட்டேன். மனப்பூர்வமாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டேன். எனக்கு நஷ்டம் எற்படுத்தியவர்களையும் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்வதவர்களையும் சந்தித்து அவர்களைக் கூட மன்னித்து விட்டேன். இன்னும் ஓரிருவரை சந்திக்கும் முயற்சியில் உள்ளேன்.

இப்போது கூட உங்கள் எல்லோருக்கும் தாங்க்ஸ் சொல்வதற்காகத்தான் வந்தேன். சென்ற சில மாதங்களாக நீங்கள் எல்லோரும் எனக்கு மகிழ்ச்சியைப் பகிர்ந்தளித்தீர்கள். தாங்க்யூ ஒன்ஸ் எகைன்! இப்போது என் மனம் அமைதியாக உள்ளது. எந்த கோரிக்கையும் இல்லை. எந்த அதிருப்தியும், நிராசையும் பெருமூச்சும் பாக்கி இல்லை. ஒரு வித சொல்லமுடியாத ஆனந்தத்தில் மூழ்கியுள்ளேன்.

ஐயாம் ரெடி ஃபர் ஹிஸ் கால். லெஸ் லக்கேஜ் மோர் கம்ஃபர்ட். எனவே வாழ்க்கை முழுவதும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருட்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் உலக வாழ்க்கையை பண்படுத்திக் கொண்டு விட்டேன். துவேஷம், கோபம், அதிருப்தி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆத்மாவை பரிசுத்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இதனையே ‘டெத் க்ளீனிங்’ என்பார்கள் என்று அண்மையில் ஒரு வாட்சப் மெசேஜில் படித்தேன். நான் டெத் க்ளீனிங் செய்து கொண்டு தயாராக உள்ளேன். அதற்காக நான் இன்றோ நாளையோ இறந்து விடுவேன் என்று அல்ல. ஆனால் இந்த இதயம் இருக்கிறது பார்த்தீர்களா? அது எப்போது என்ன செய்யுமோ சொல்ல முடியாது” என்று கூறி விடைபெற்றுச் சென்று விட்டார்.


அதுதான் இறுதியாக நாங்கள் ரமணாவைப் பார்த்தது. கோவா ட்ரிப் செலவு பாக்கியைத் தீர்ப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது எங்களுக்கு. மற்றொரு பிறவி என்று ஒன்று இருந்தால் எங்களை மீண்டும் சந்திப்பதற்கு கடன் பாக்கி இருப்பது போல் தோன்றியது.

இப்போது நான் இந்திரா பார்க்குக்கு அதிகம் போவதில்லை. நான் கூட டெத் க்ளீனிங் பணியில் இறங்கினேன்.


தீபாவளி பண்டிகையன்று கோவிலுக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தாள் என் மருமகள்.

“அத்தை! எல்லா ஏற்பாடும் செய்துட்டீங்களா?” என்று அவள் கேட்பது காதில் விழுந்தது.

அதைக் கேட்டவுடனே என் மனைவி தன் புடவைத் தலைப்பில் கண்ணைத் துடைத்துக் கொள்வதை நான் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அன்றைக்கு காலையிலிருந்தே அவள் அதே போல் ஒரே திகிலாக முகத்தை மேகம் மூடி மறைத்தாற்போலிருந்தாள். அதற்கு காரணம் கூட எனக்குத் தெரியும்.

அந்த மேக மூட்டத்திலிருந்து முளைக்கும் வானவில் அவள் முகத்தில் தோன்றும் நாள் தூரத்தில் இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால்….


அன்று நான் எப்போதையும் விட கொஞ்சம் முன்பாகவே என் மனைவியிடம் இந்திரா பார்க்குக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினேன். என் கையில் எப்போதும் போல் சிறிய பேக் தவிர வேறெதுவும் இல்லை. வெளியில் வந்தவுடனே நான் புக் செய்திருந்த வாடகைக் கார் நின்றிருந்தது. நம்பர் சரி பார்த்துக் கொண்டு அதில் ஏறி அமர்ந்தேன்.

இந்திரா பார்க்குக்கு என்று என் மனைவியிடம் கூறிய நான் பத்து மணிக்கெல்லாம் டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிவந்தேன். கார் புக் செய்து அது வருவதற்குள் ரெஸ்ட் ரூமிற்குச் சென்று முகம் சுத்தம் செய்து கொண்டு கோட்டையும் டையையும் கைப்பையிலிருந்து எடுத்து அணிந்து கொண்டேன். டிரைவர் போன் செய்தவுடன் போய் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன்.

நான் மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு என் மகளைப் பார்க்கச் செல்கிறேன். இன்று திங்கட் கிழமை. மாப்பிளைக்கு அலுவலகம் இருக்கும். மகள் மட்டும் வீட்டிலிருந்தே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்கிறாள். அவள் பெண்ணுக்கு எட்டு வயது. பெயர் ‘மைத்ரேயிகான்’. நான்கு வயது பேரன் ‘சலீம்சாஸ்த்ரி’. இருவரும் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்.

என் மகள் சந்தனா எங்கள் விருப்பத்திற்கு விரோதாமாக ஒரு முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். எங்களை அனுமதி கேட்டபோது நாங்கள் சம்மதிக்கக் வில்லை. அவளும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. ஒரு நாள் ஆபீசுக்குச் சென்ற சந்தனா திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

அன்று இரவு பதினோரு மணிக்கு என் மகள் தன் அம்மாவுக்கு போன் செய்து தானும் சலீம்கானும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தாள். என் மனைவி விக்கித்துப்

போனாள். முதலில் அழுதாள். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். அப்பா கூப்பிட்டால் வருவதாகக் கூறினாள் என் மகள். என் மனைவி என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். நான் சம்மதிக்கவில்லை. அவளும் வரவில்லை. பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவனுக்கு டில்லி செக்ரடேரியட்டில் பெரிய உத்தியோகம் கிடைத்துள்ளதாகவும் விவரங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.

நான் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். ஆனால் எங்கேனும் ஒரு அழகான ஜோடி இரு குழந்தைகளோடு சேர்ந்து நடந்து செல்லும் காட்சி கண்ணில் பட்டால் உடனே இதயம் துடிதுடிக்கிறது. அன்று நான் சந்தனாவை மன்னித்து வீட்டிற்கு ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி என்னைச் சித்திரவதை செய்கிறது

இத்தனை நாட்களாக இந்த வேதனையை, என் இதய பாரத்தை, விஷம் விழுங்கினாற்போல் சகித்துக் கொண்டு வாழ்கிறேன். என் மனைவி என் தோள் மீது சாய்ந்து வருத்தம் தீர அழுது தன் பாரத்தை இறக்கிக் கொண்டாள். ஆணாகப் பிறந்த எனக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்லை.

ஆனால் ரமணா இறுதியாகச் சந்தித்து “ஏற்பாடு செய்துட்டேன், பாஸ்!” என்று கூறிய சிறிது நாட்களுக்கெல்லாம் இறந்து போனபோது, எனக்குள்ளும் பயம் ஆரம்பித்து விட்டது. நானும் அனைத்தும் ஏற்பாடு செய்துவிட வேண்டிய நேரம் நெருங்கி விட்டதென்று உணர்ந்து கொண்டேன்.

நான் ஏற்பாடு செய்ய வேண்டிய பொருள் டில்லியில் உள்ளதென்று எனக்குப் புரிந்தது. உடனே நெருங்கியவர்களிடம் யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்று சத்தியம் செய்து கொண்டு என் மகனின் மூலம் சந்தனாவின் வீட்டு அட்ரஸ், போன் நம்பர், மீதி விவரங்களைச் சேகரித்தேன். என் மகன் எனக்கு டில்லிக்கு டிக்கெட் புக் செய்தான். அவன் தன் அக்காவோடு தொடர்பில்தான் இருந்து வருகிறான்.

சந்தனாவை சர்ப்ரைஸ் செய்ய வேண்டுமென்று செல்கிறேனே தவிர அங்கு எபப்டிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோவென்று கொஞ்சம் உதறலாகவே இருந்தது. ஒருவேளை மாப்பிள்ளை ஆபீசுக்கு போகாமல் வீட்டில் இருப்பாரோ? ஒருவேளை அவர்கள் வீடு மாறி இருப்பார்களோ? இல்லாவிட்டால் ஏதாவது வெளியூர் போயிருப்பார்களோ? சந்தேகக் கணைகள் என்னைக் குடைந்தாலும், ஆனது ஆகட்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு டெல்லி சாலைகளை பார்த்தபடி காரில் சென்று கொண்டிருந்தேன்.

முக்கால் மணி நேரம் கழித்து நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. மாப்பிள்ளை பெரிய ஆபீஸராகையால் பெரிய குவாட்டர்ஸ் முன்பாக காரை நிறுத்தினான் டிரைவர். கேட்டை திறந்து உள்ளே சென்று காலிங் பெல்லை அழுத்தினேன். அது என் இதயத்தில் அடிப்பது போல் ஒலித்தது.

கதவைத் திறந்த என் மகள் என்னைப் பார்த்து ஒரு கணம் அடையாளம் காண முடியாமல், “கௌன்?” என்று கேட்கப் போகையில் என்னை ஏற இறங்க பார்த்து, “அப்பா…! அப்பா….! நீங்களா?” என்று மேலே பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். என் ரத்தம் பகிர்ந்து பிறந்த என் குழந்தையை பத்தாண்டுகளாக பார்க்கக் கூட இயலாத துரதிருஷ்டத்தை எண்ணி துக்கம் என் தொண்டையை அடைத்தது. வெலவெலத்துப் போய் நின்றிருந்தேன்.

அழுகின்ற என்னைப் பார்த்து என் சந்தனா பதற்றமடைந்தாள். “அப்பா…! என்னாச்சுப்பா?” என்று முன்னால் வந்து என்னை அணைத்துக் கொண்டாள். நான் ஒரு அபூர்வமான ஆத்மார்ப்பணமான அரவணைப்பில் வார்த்தை வெளிவராமல் நின்று விட்டேன்.

அந்த சந்தடி கேட்டு உள்ளே இருந்து யாரோ வந்தார்கள். “மேரா பாபுஜி! காபி பனாவோ!” என்று கூறிவிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டே உள்ளே நடந்தாள் சந்தனா.

ஒரு கணம் நின்று என் மகளை ஆசை தீரப் பார்த்தேன். இருபது வயதில் எங்களைப் பிரிந்து சென்ற சந்தனா இந்த பத்தாண்டுகளில் முழுமையான பெண்மணியாக மாறியிருந்தாள். கொஞ்சம் பெரிய மனுஷி போல் தோன்றினாலும் இன்னும் அழகாக வடிவெடுத்திருந்தாள்.

நம் பிள்ளைகள் நமக்கு எப்போதுமே அழகாகவும் அபூர்வமாகவும்தான் தோன்றுவார்கள் இல்லையா?

“என்னப்பா…? அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டாள்.

“பத்து வருஷம் ஆயிடுச்சு இல்லையாம்மா? அதான் ஆசை தீரப் பார்க்கிறேன்” என்று பதில் கூறும் போதே என் கண்கள் நிறைந்தன.

“எப்படி இருக்கீங்க அப்பா? வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா? அம்மா நல்லாருக்காங்களா?” என்று ஆர்வத்தோடு வினவினாள்.

“சந்தனா! என்னை மன்னிப்பாயாம்மா?” என்றேன். என் குரல் தழுதழுத்தது.

“ஐயோ…! இதென்னப்பா? உங்களை நான் மன்னிப்பதாவது? நீங்கதாம்ப்பா என்னை மன்னிக்கணும்!” என்று என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

பரஸ்பரம் மன்னித்து கொண்டோம். பின்னர் சம்பவங்கள் பரபரவென்று நடந்தேறின. நான் வந்துள்ளதாக சந்தனா தெரிவித்தவுடன் மாப்பிள்ளை மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதாகக் கூறினார். கார் டிரைவரை அனுப்பி பேரனையும் பேத்தியையும் பள்ளியிலிருந்து வரவழைத்தாள்.

அவர்களைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. அவர்கள் வாழ்க்கையில் பத்தாண்டு காலம் தாத்தா பாட்டியின் அன்பில்லாமல் செய்த பாவி நான் என்று நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடித்து மாப்பிள்ளை ஆபீஸுக்கு கிளம்புகையில், “வீட்டுக்கு வாங்க மாப்ள!” என்றேன்.

“நீங்க எப்போ கூப்பிடுவீங்கன்னு சந்தனா காத்துகிட்டிருக்கா!” என்றான்.

மாலையில் ஹைதராபாதுக்குக் கிளம்பினேன். மகள் பேரன் பேத்தி எல்லோரும் டாடா காண்பித்தார்கள். திருப்தியாக ஏர்போர்ட்டில் நுழைந்தேன்.

பத்து மணிக்கு வீட்டை வந்தடைந்த என்னைப் பார்த்து, “எங்க போயிருந்தீங்க? காலையிலேர்ந்து போன் கூட எடுக்கல…! எத்தனை கவலையாப் போச்சு தெரியுமா?” என்று என் மனைவி திட்டியபோது இனிப்பாக இருந்தது.

தீபாவளியன்று எங்கள் பெண் சந்தனா பிறந்த நாள். அனைவரும் மகாலட்சுமி பிறந்துள்ளாள் என்றார்கள். அந்த மகாலட்சுமி பத்தாண்டுகள் கழித்து மீண்டும் இன்று எங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறாள்.

ஷம்ஷாபாத் ஏர்போர்ட்டில் இறங்கியவுடனே சந்தனா போன் செய்தாள். இப்போதோ…. இன்னும் சில கணங்களிளோ அவள் வந்து இறங்கி விடுவாள்.

அதற்குள், “அம்மா…!” என்று சந்தனாவின் குரல் கேட்டது. என் மனைவி முகத்தில் ஏழு நிற வானவில் விந்தையாக ஒளிர்ந்தது.

– தெலுங்கில்: டாக்டர் பிரபாகர் ஜைனி, தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Print Friendly, PDF & Email

1 thought on “ஏற்பாடு செய்துட்டீங்களா?

  1. எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *