எலிஸபத் டவர்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 7,636 
 

அன்று வெள்ளிக்கிழமை. ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அந்த அழைப்பு வந்தது. “ராமசுப்பு ஸார்! ஒங்களுக்கு வீட்டிலிருந்து போன் வந்திருக்கு” மேனேஜரின் ஸ்டெனோ புன்சிரிப்புடன், குரலில் தேன் ஒழுகக்
கூப்பிட்டாள். தன் டேபிளிலிருந்து தாண்டிக்குதித்து வந்து “தேங்க்யூ மேடம்” என்று சொல்லி ரிஸீவரைக் கையில் எடுத்து “ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார். “அப்பா! நீ ஒடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்தச் சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக்கொண்டே இருக்கிறோம்” செல் போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் கிளாஸ் படிக்கும் ராஜூ.

ராகு காலம் என்று கூடப்பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்துவிட்டு உடனே பஸ் பிடித்துக் கிளம்பி விட்டர் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவருக்கு மனதில் ஒரே விசாரம். சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஒரு ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்புடன் கலந்த பயம்.

அவர்கள் வசிக்கும் ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்கு மாடி அப்பார்ட்மெண்டில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடிக் கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் எல்லோருமாகச் சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுசன் ஏற்கனவே நொந்து நூலாகப் போய் இருந்தார். இந்தச் சிறிய ஒரு எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத்தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றி, மனநிறைவு கொண்டு மகிழ்ந்தனர். புதிதாகக் குடிவந்த, முதல் மாடி, முதல் வீடு, முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம்.

அவர் குடும்ப உபயோகப்பொருட்கள் என்ற பெயரில், அன்று பல விதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்தனர். ஒரு வேளை இது அவர் மூலம் இந்த அடுக்குமாடி வளாகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் சரியான ஒரு சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன். பலர் சொன்ன பல விதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல, எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது, நமக்கென்ன என்பது போல, எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார் ராமசுப்பு.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டிற்குள்ளேயே நுழைந்துள்ளது. செயலற்ற செயலாளராக இருக்கும் நம் மீது உள்ள கடுப்பால், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான, நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களின் சதித்திட்டமாகத்தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது. பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு ஒரு வீராதி வீரனைப்போல தன் வீட்டிற்குள் நுழைந்தார். வீடு திறந்தே இருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச்
சாவியால் வெளிக்கதவைப் பூட்டிவிட்டு உள்ளே போனார். ஹாலில் டி.வி ஓடிக்கொண்டே இருந்தது. அதையும் தானே அணைத்துவிட்டு, கையில் துடைப்பத்துடன் மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு, உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிக்கொண்டார்.

சமயலறைப்பக்கம் எலியின் நடமாட்டத்தைப் பற்றி திகிலுடன் அவர்கள் விபரித்துக்கூறியதை விபரமாகக் கேட்டுக்கொண்டார். தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியைச் செல் போனில் அழைத்தார். (அது சமயம் பட்டாபி தன் குடும்பத்துடன் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தார்) தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கினார் ராமசுப்பு. “பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். பூனை எலியைப்பிடித்து தின்று விடும்” என்று ஒரு ஆலோசனையும், “எலி பாஷாணம் கடையில் வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிடலாம், இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கிவிட்டு, அபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகக் கூறி, தொடர்பைத் துண்டித்துக்கொண்டார் பட்டாபி.

“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல
பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்துவிடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் அன்பு மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுப்பா, மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் அவர் புத்திரசிகாமணி, ராஜூ.

மூவரும் ஒருவரை ஒருவர் பிடித்த வண்ணம் தாண்டிக்குதித்து, ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம் இந்தப் பிரச்சனையைப்பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது. பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில், வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல், தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை இரவல் வாங்கிக்கொண்டு, சூடான சுவையான ரோட்டுக்கடை மசால்வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி, அவர் கொடுத்த தைர்யத்தில் (ஆள் நடமாட்டம் இருந்தால் எலி வரவே வராது, அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது, நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்துப் பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும் என்ற நம்பிக்கையுடன்) வீட்டுக்கு விரைந்தனர்.

லிப்டில் ஏறிய போது கூடவே வந்து ஒட்டிக்கொண்ட பால் காரர் ஒருவர் “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக, ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல வைத்தால் எலி அந்தப்பக்கமே வராது, ஸார். சுத்தமாகக் கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தன் அனுபவத்தை எடுத்துரைத்தார். சரியான நேரத்தில் இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக் கூறிய அந்தப் பால் காரரை நன்றியுடன் நோக்கி, அவரைவிட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக்கொடுத்து உதவுமாறு வேண்டினார் ராமசுப்பு (பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத்திட்டத்தில்).

பால் காரர் எலிக்கூட்டினுள் உள்ளே கையைவிட்டு இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால்வடை, தூள் தூளாகி, லிப்டு பூராவும் சிந்திச் சிதறியது. “எலிக்கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டு ஊற வைத்துக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க, ஸார்” என்றார் அந்தப் பால்க்காரர். ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கியவுடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டுக் கொண்டிருக்கலாம்” என நினைத்துக்கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம். லிப்டின் தரையையும் செயலாளரின் மனைவி என்ற பொறுப்புணர்வுடன், அவளே சுத்தம் செய்ய வேண்டிய தாகிவிட்டது அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.வீட்டை நெருங்கியதும்

“வாடா, கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம்…ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள தன் உடன் பிறப்பைக் கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம். ராமசுப்புவைப் பொருத்தவரை அவர் மச்சினன் கோவிந்தனைக் கண்டாலே அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக்கொண்டு, கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி எதுவும் இல்லாமல், கோவில் மாடு போலச் சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல அவர் கண்ணுக்குத் தோன்றுபவன். மொத்தத்தில் வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து கிளம்பி அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்று வரை ஒரு பிரயோசனமும் இல்லை.ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார்.

கோவிந்தனுக்கே ஒரே ஆச்சர்யமாக இருந்தது. “கோவிந்தா! நீதான் இதற்குச் சரியான ஆளு. நம் வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னன்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மருமகனும் ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே…அது என்ன புலியா…ஏன் இந்த கிலி உங்களுக்கு” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்துவிட்டு “கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு, இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான். உள்ளே நுழைந்ததும் “சூடா ஒரு காபி போடு அக்கா; ஏதாவது பஜ்ஜியும் கெட்டி சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான்.

“நீ முதலில் எலி எங்கேயுள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப்பாரு, சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு. உடனே சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் வெளியேற்றினான். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு உயரத்தில் இருந்த லாப்ட்-களில் உள்ள அனைத்து சாக்குமூட்டைகள், அட்டைப்பெட்டிகள் என எல்லாவற்றையும் தொப் தொப்பென்று கீழே போட்டான்.

சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போட்ட டைல்ஸ் கற்கள் உடையுமோ அல்லது கீரல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்குக் கூட மாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து மாமா, நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாக பிராண்டிட்டுப் போய்விடப் போகிறது” என்று எச்சரித்தான் கோவிந்தன்.

இதைக்கேட்டதும் நிஜமாகவே அது போல நடந்துவிட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு அரண்டு மிரண்டு போய் பெட்ரூம் கதவைச் சாத்திவிட்டு, பேனைத் தட்டிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தார்.

மின் விசிறி சுழல ஆரம்பித்ததும் அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த, கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென விழுந்ததில், எலியோ என பயந்துபோய் ஒரு பரத நாட்டியமே ஆடியதில் அங்கிருந்த இருமல் மருந்து சிரப் பாட்டிலைத் தட்டி விட்டு உடைத்துக் கொட்டிவிட்டார். அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.

எல்லாச் சாமான்களையும் கீழே தள்ளிவிட்டு போர்க்களம் போலப் பரப்பிய கோவிந்தன் ஒரு குச்சியால் நெடுக லாப்ட் பூராவும் தட்டிப்பார்த்தான். எலி மட்டும் அவன் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை. வெறுத்துப்போன அவன் “அக்கா சமையல் ரூமில் அது இல்லை, வேறு எங்கேயாவது தான் இருக்கணும். நீ பஜ்ஜி, சட்னி, காபி தயார் பண்ணு, நான் படுக்கை அறையில் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி ராமசுப்பு இருந்த அறைக்குள் புகுந்தான்.

அவர் அப்போது தான் உடைந்த சிரப் பாட்டிலைப் பொறுமையாகத் திரட்டி ஒத்தி எடுத்து, அந்த இடத்தைத் துணியால் துடைத்துச் சுத்தம் செய்து விட்டு, தன் கைகளில் க்ளவுஸ் அணிந்து கொண்டு அட்டாச்ட் பாத் ரூமில், தான் இரவல் வாங்கி வந்திருந்த அழுக்கடைந்த அந்த எலிக்கூட்டை நன்றாக ஒட்டடை போகத் துடைத்து, சோப்புப் போட்டு நுரை பொங்கக் குளிப்பாட்டி, குழாய் நீருக்கு அடியில் பிடித்தவண்ணம் துணி துவைக்கும் ப்ரஷ் கட்டையால் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தார். அவருடைய துரதிஷ்டம் உளுத்துப்போன பழைய மரத்தினால் செய்யப்பட்ட, மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், பட் பட் என்று அதிரஸம் போல தனித்தனியாகப் புட்டுக்கொண்டது. கம்பிகள் தனியாகவும், கட்டைகள் தனியாகவும் உடைந்ததும் ராமசுப்புவுக்கு அழுகையே வந்து விட்டது.

“மாமா, இந்த உடைந்துபோன பாடாவதி எலிக்கூட்டைத் தலையைச் சுற்றிக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டு, பெரிய மார்க்கெட்டுக்குப் போய் நல்லதாகப் பார்த்து வேறு புது எலிக்கூடு வாங்கிட்டு வாங்க” என்று உத்தரவு போட்டான் கோவிந்தன்.

சமையல் அறையில் சிதறிக்கிடந்த சாமான்களை குனிந்து நிமிர்ந்து சரி செய்வதற்குள் இடுப்புப் பிடித்தாற்போல ஆகிவிட்டது அம்புஜத்திற்கு.

அமர்க்களப்படும் இந்த வீட்டில் இனியும் இருந்தால் நம்மையும் ஏதாவது வேலை ஏவிக்கொண்டே இருப்பார்கள் என்று யூகித்த ராஜூ ட்யூஷன் படிக்கப் போவதாகச் சொல்லி சைக்கிளில் எங்கோ கிளம்பி விட்டான். ராமசுப்புவும் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கப் பிடிக்காமல் எலிக்கூடு புதிதாக வங்கி வரும் சாக்கில் எஸ்கேப் ஆகி பெரிய மார்க்கெட்டுக்குப் போக பஸ் ஏறினார்.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க பஸ்ஸிலிருந்து இறங்கி மார்க்கெட் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துக் கடைசியில், கடையொன்றைக் கண்டுபிடித்து விட்டார் ராமசுப்பு. “நல்லதா ஒரு எலிக் கூடு கொடுப்பா” என்றார். “சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” என்றான் கடைக்காரன். “இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா?” ஆச்சர்யத்துடன், வினவினார் ராமசுப்பு. ஆமாம் சாமி! சுண்டெலி பிடிக்கப் பெரிய சைஸ் கூடாக வைத்தால், அது மசால் வடையையும் கவ்விக்கொண்டு கம்பி வழியாகத் தப்பித்துப்போய்விடும். தெருவில் சந்து பொந்துகளில் வேகமாக ஓடும் ஆட்டோ ரிக்ஷா போல சாக்கடைப் பாதைகளில் வெகு வேகமாக ஓடும் மிகபெரிய சைஸ் எலியின் பெயர் பெரிச்சாளி எனப்படும். அந்தப் பெரிச்சாளியைப் பிடிக்கச் சின்னக்கூடாக வைத்துவிட்டால் அது கூண்டுக்குள் தன் கனத்த சரீரத்தை நுழைக்க முடியாமல் வெளியில் இருந்தவாறே கம்பிகளின் இடையே தன் மூக்கை நுழைத்து காரத்தை மட்டும் அழகாகச் சாப்பிட்டு கூண்டையே தலை குப்பறக் கவிழ்த்துவிட்டோ அல்லது எங்கேயாவது தள்ளிக் கொண்டோ கூடப் போய் விடும்” என்றான். எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்கப் புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார் ராமசுப்பு. சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா? பதில் அளிக்க முடியாமல் மிகவும் குழம்பிப்போன அவர் தன் ஞானசூன்யத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் “நடுத்தர எலி பிடிக்கக் கூடு ஒன்று கொடுப்பா” என்றார். “சைவக்கூடு கொடுக்கட்டுமா? அல்லது அசைவக்கூடு கொடுக்கட்டுமா சாமீ” என்ற தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ராமசுப்புவை மேலும் ஸ்தம்பிக்க வைத்தான். இது என்னடா எழவுத்தொல்லை என்று நினைத்து அவன் என்ன கேட்கிறான் எனப்புரியாமல் அவனிடமே விளக்கம் கேட்டார், ராமசுப்பு. “சைவக்கூடு என்றால் எலியை, அதற்கும் சேதாரம் இல்லாமல் கூட்டுக்கும் சேதாரம் இல்லாமல் (கத்தியின்றி ரத்தம் இன்றி) அஹிம்சா முறையில் அழகாகப் பிடித்து, அதன் பிறகு அவரவர் விருப்பப்படி, தண்ணீர் வாளியில் அமுக்கியோ, ஒரே சுழட்டாகச் சுழட்டி அடித்துச் சதிர் தேங்காய்போல நடுரோட்டில் அடித்தோ கொன்று விடலாம். சாக்குப்பைக்குள் அனுப்பி, பையின் வாயைக் கட்டி, துணி துவைப்பது போல துவைப்பதும் உண்டு. ஜீவகாருண்யம் மிகுந்தவராக இருந்தால் அதைக் கூட்டோடு எடுத்துச் சென்று வேறு ஏதாவது நமக்கு வேண்டப்படாதவர் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு வந்தால் அது அங்கு நல்ல வேலை வாய்ப்பைத் தேடிப் பிழைத்துக்கொள்ளும். நம் நாட்டு இளைஞர்கள் வெளி நாட்டுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்வது போல. ஒரு சிலர் பூனை மேல் மட்டும் ஜீவகாருண்யம் கொண்டு அதன் பார்வை படும் படியாக இந்த எலிக்கூட்டைத் திறந்து விடுவர். அது ஒரே பாய்ச்சலில் எலியைப் பிடித்து கவ்விச் சென்று கபளீகரம் செய்துவிடும்” என்று விளக்கம் கொடுத்து சைவக் கூட்டில் ஒன்றை எடுத்து சாம்பிளாக முன்னே வைத்தார், அந்த எலிக்கூடு வியாபாரி.

தான் சைவமாக இருந்தாலும், வந்தது வந்தோம், அசைவக்கூடு எப்படியிருக்கும் என்றும் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அதையும் காட்டச் சொல்லி வேண்டினார். அதையும் எடுத்து வந்து காட்டியபடி விளக்க ஆரம்பித்தான். அந்த அசைவக் கூட்டைப் பார்த்த ராமசுப்புவுக்கு திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு எதிர்புறம் ப்ரும்மாண்டமாக உள்ள மெயின்கார்ட்கேட் ஆர்ச் வளைவு ஞாபகம் தான் வந்தது. மேலும் அந்தக்கூடு என்னவோ ஆடை ஏதும் இல்லாமல் அம்மணமாக இருப்பது போலத் தோன்றியது. இந்த வெட்ட வெளியான அமைப்பில் எப்படி ஒரு எலி சிக்க முடியும் என்று யோசித்து சிண்டைப் பிய்த்துக் கொண்டார். “இதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் சாமீ. கொஞ்சம் அசந்தாலும் ஸ்பிரிங் ஆக்ஷனில் நம் கை விரல்களை பதம் பார்த்து விடும். ஆனால் இதில் மாட்டிய எலி தப்பிக்கவே முடியாது.

ஒரே…..அடி! எலியின் கழுத்தில் சரியாக அடிக்கும். தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டு விடும். தலை தனி உடல் தனியாக தொங்க ஆரம்பித்து விடும். க்ளீன் பெளல்ட் ஆகி ரத்தம் கக்கிச் செத்துவிடும்” என எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி செய்தவன் போல ஒரு பெரிய பிரசங்கம் செய்தான், அந்தக் கடைக்காரன். முடிவாக, “நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” என்றார். பரந்தாமனிடம் இரவல் வாங்கிய எலிக்கூட்டுக் கடனை முதலில் அடைத்து விட வேண்டும். முதலில் நேராக பரந்தாமன் வீட்டுக்குப் பயணமானார்.

புதிய கூட்டை ஒப்படைத்துவிட்டு, பழைய கூட்டிற்கு நேர்ந்த கதியை சுருக்கமாக எடுத்துரைத்தார். “என்னதான் இது புதிய கூடாக இருந்தாலும், நாங்கள் உங்களிடம் கொடுத்தது மிகவும் ஆவி வாய்ந்த எலிக்கூடு, பல தலைமுறைகளாக பயன் படுத்திய ராசியான எலிக்கூடு, அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்துவிட்டீர்களே?” என மிகவும் வருத்தத்துடன் கூறினாள், திருமதி பரந்தாமன். மசால்வடையொன்றும் மறக்காமல் வாங்கிக் கொண்டு வீட்டை அடையும் போது இரவு மணி ஏழாகிவிட்டது. வழியில் ட்யூஷன் முடிந்து வருவதாகச் சொல்லி ராஜூவும் தன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான், சைக்கிளைத் தள்ளியவாறே. “வாங்க மாமா. நம்ம வீட்டிலே எலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நன்றாக அலசிப் பார்த்துவிட்டேன். கவலைப்படாமல் சாப்பிட்டுப்படுங்கோ. நாளைக்குக் காலையிலே அக்காவையும் ராஜுவையும் கூட்டிக்கொண்டு மணச்சநல்லூர் போகலாம்னு இருக்கிறேன்” என்றான் கோவிந்தன்.

மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத்தான் யாரோ கிளப்பிவிட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போலத் தோன்றியது ராமசுப்புவுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று புதிய எலிக்கூட்டை மசால்வடையுடன் தயார் நிலையில் சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விட்டனர்.

தம்பி கோவிந்தனைப் பூனைப்படைத் தளபதிபோல தன்னருகில் பாதுகாப்புக்கு நிற்கச்சொல்லி எலி பயம் ஏதுமின்றி இரவு சமையலை ஒருவாறாக முடித்திருந்தாள் அம்புஜம். அனைவரும் சாப்பிட்டுப் படுத்தனர். ராமசுப்பு மட்டும் நான்கு முறை தூக்கத்தில் எழுந்தார். ஏதேதோ சொப்பணங்கள் வேறு. முதன்முறை தன் உள்ளங்காலில் யாரோ சொரிவதுபோலத் தோன்றியது. இரண்டாவது முறை தலையணிக்கும் தலையணி உறைக்கும் இடையில் ஏதோ ஊடுருவிச் செல்வது போன்ற ஒரு உணர்வு. மூன்றாவது முறை சுவற்று ஆணியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு மாதக் காலண்டர், பேன் காற்றில் விசிறியடித்துக் கீழே விழுந்தது. நான்காம் முறை ஏதோ ஒரு விசித்திரமான சப்தம். நிச்சயமாக எலிதான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, லைட்டைப் போட்டுப்பார்த்தார். அது கோவிந்தன் விடும் குறட்டை என்பது பிறகு தான் தெரிய வந்தது. மறுநாள் சனிக்கிழமை காலை ராமசுப்பு ஆபீஸுக்குக் கிளம்பும் போதே, மற்ற மூவரும் மணச்சநல்லூருக்குக் கிளம்பினர்.

ராமசுப்புவுக்கு ஆபீஸிலும் வேலை ஓடவில்லை. வீட்டில் எலி ஓடுமோ என்ற கவலை. தன்னைத் தனியாக விட்டு விட்டு எல்லோரையும் கூட்டிக் கொண்டு கோவிந்தனும் போய்விட்டானே என்ற பயம் வேறு. பக்கத்துச் சீட்டுக்காரரிடம் செய்தித்தாள் வாங்கி ராசி பலன் பகுதியை நோட்டம் விட்டார். அவர் ராசிக்கு ‘சனி வக்ரமாகவும், உக்கிரமாகவும் இருப்பதால் எந்த ரூபத்திலாவது தொல்லை கொடுப்பார். பலருக்கு பண விரயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வகையில் அண்டை அயலாரின் பாராட்டுக் கிடைத்து மகிழக் கூடும்’ என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ போடப்பட்டிருந்தது.

ஆபீஸ் முடிந்து வீடு திரும்பப் பஸ்ஸைப் பிடித்தார். வழியில் மாம்பழச் சாலை அருகே பஸ் நின்றதும், ராமசுப்புவின் கண்களில் பட்ட அந்தக் காட்சி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரைச் செல்ல வேண்டிய அவரை அங்கேயே இறங்க வைத்தது. மச்சினன் கோவிந்தனைப் போலவே ஒருவன், பெயர் ரங்கனாம், பெரிய எலி ஒன்றைத் தலைகீழாகத் தொங்க விட்டபடி தன் கை விரல்களாலேயே அதன் வாலைப் பிடித்தபடி சிறுவர்கள் புடை சூழ, குப்பைத் தொட்டியில் போடச் செல்வதைப் பார்த்து, அப்படியே பிரமித்துப் போய், அவனைப் பின் தொடர்ந்த அவரையும் செல்ல வைத்தது. அந்த ரங்கனுடன் ஒருமுக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு அட்வான்ஸ் தொகையும் அவனுக்கு அளித்து விட்டு வீடு திரும்ப எண்ணியவருக்கு ஒரு சிறிய சபலம் ஏற்பட்டது.

இரவின் தனிமையில் இனிமை காண வேண்டி உற்சாக பானம் ஒரு குவார்ட்டர் வாங்கி அடித்துவிட்டு, ஹோட்டலில் டிபனும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார். உண்மையிலேயே உற்சாகபானம் நல்ல ஒரு நிம்மதியான உறக்கத்தைத் தந்தது ராமசுப்புவுக்கு.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு மாம்பழச் சாலை ரங்கன், கனத்த ஒரு மஞ்சள் பையுடன், மேலூர் ரோட்டு ராமசுப்புவின் அடுக்குமாடி அப்பார்ட்மெண்டில் ஏறி அவர் வீட்டு வாசலில் காலிங்பெல்லை அடித்தான். கதவைத் திறந்த அவர் “வாப்பா…ரங்கா இப்படி ஓரமாக உட்கார்” என்று சொல்லிவிட்டு, வாட்ச்மேனை அழைத்து, அனைத்து வீடுகளுக்கும் அவசரச் செய்தி ஒன்றை சொல்லிவிட்டு வரச்சொல்லி உத்தரவிட்டார். செய்தி கேட்ட அனைவரும் மிகுந்த ஆச்சர்யத்துடன், அவரவர் வீட்டிலிருந்து வெளியே வந்து, குழந்தை குட்டிகளுடன் படிக்கட்டுப் பகுதிக்கு விரைந்து வந்து கூடி நின்றனர். ரங்கன் தன் ஒப்பந்தப்படி மிகச்சரியாக 9 மணிக்கு மஞ்சள் பையினுள் கையை விட்டு வாலை கெட்டியாகப் பிடித்தவாறு, தான் கொண்டு வந்திருந்த செத்த எலியை, தலை கீழாகத் தொங்க விட்டு, ராமசுப்புவின் வீட்டிலிருந்து ஊர்வலம் போல புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாகவே மெதுவாக இறங்கிச் சென்றான். ராமசுப்புவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றவாரே ஒவ்வொரு குடுத்தனக்காரரையும் பெருமிதத்துடன் பார்த்தவாறு செல்லலானார். பலரும் எலியின் இறுதி ஊர்வலத்தில் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். தூக்கிச் செல்லும் எலியைப் பார்த்த அனைவருக்கும் அதன் தோற்றம் என் கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு தீவிரவாதி போல காட்சியளித்தது.

குப்பைத் தொட்டி ஒன்றில் அதைப் போட்டு நல்லடக்கம் செய்து விட்டு, ராமசுப்புவிடம் விடை பெற்று, புறப்படத் தயாரான ரங்கனுக்கு, தன் சட்டைப் பையிலிருந்து அலட்சியமாக ஒரு 50 ரூபாய் தாளை பலரும் பார்க்கும் வண்ணம் எடுத்து நீட்டினார், ராமசுப்பு. நம் அடுக்குமாடி குடியிருப்பில், இதுவரை அட்டகாசம் செய்து வந்த எலியை ‘எலி பிடிக்கும் எக்ஸ்பர்ட் ஒருவரை வரவழைத்து, லாவகமாகப் பிடித்து அடித்துக் கொன்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த செயலாளர் ராமசுப்புவை அனைவரும் உளமாறப் பாராட்டினர். அன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றக் காரணமாய் இருந்தவர்கள் கூட இன்று அவருக்குக் கை குலுக்கிப் பாராட்டித் தங்கள் அவசரச் செயலுக்கு மன்னிப்பும் கேட்டனர். பாராட்டு மழையில் நனைந்தவாறே வீட்டுக்குத் திரும்பினார் ராமசுப்பு. கதவைத்திறந்ததும், டைனிங் டேபிளிலிருந்து இரண்டு சுண்டெலிகள் தாவிச் சென்று பக்கத்து ஜன்னல் வழியே தப்பியோடியதைத் தன் கண்களாலேயே பார்த்த அவருக்குத் தலையைச் சுற்ற ஆரம்பித்தது. மிகவும் பயத்துடன், தாத்தா வைத்திருக்கும் தடிக்குச்சி ஒன்றின், வளைவுப் பிரம்பு பகுதியால் மிகவும் கஷ்டப்பட்டு, ஜன்னல்
கைப்பிடியில் நுழைத்து, எட்டி நின்றவாறே ஜன்னல் கதவுகளைப் பளார் என்று சாத்திவிட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு ரோட்டோரமாக வந்து நின்று யோசித்தார்.

அன்று தன் வீட்டுக்கு வந்ததாகச் சொன்ன எலி ஒரு வேலை பிரஸவித்து இந்த இரண்டு குட்டிகளைப் போட்டிருக்குமோ? என நினைத்தார். எப்படியிருப்பினும் இந்த எலிகள் நடமாடும் எலிஸபத் டவர்ஸ்ஸில் இனியும் நாம் குடியிருப்பது உச்சிதமில்லை என்ற முடிவுக்கு வந்தார். கூடிய சீக்கிரம் இந்த அடுக்குமாடி வீட்டை விற்று விட்டு, தன் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ள செயலாளர் பதவியையும் துச்சமெனக் கருதி, துறந்துவிட்டு ‘எலி வலையானாலும் தனி வலையாக’ வேறு எங்காவது தனி வீடு பார்த்துக் குடியேறுவது என்று முடிவெடுத்தார்.

அதுவரை எங்கே தங்குவது, எப்படித் தங்குவது என்று குழம்பியவாறே, தானும் தன்னையறியாமலேயே மணச்சநல்லூரில் உள்ள மாமனார் வீட்டுக்குப் பயணமானார். மச்சினன் கோவிந்தனை மீண்டும் கையோடு அழைத்து வர.

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *